சனி, மார்ச் 28, 2009

பேய் ஹோ !

(அருந்ததீ பார்த்த எஃபக்ட்டில் ஒரு சிறுகதை)

எங்கள் பாப்பம்மாவுக்குத் திடீரெனப் பேய் பிடித்துக் கொண்டது.
அதுவும் எங்கள் ஊருக்குத் தேர்தல் வந்த நேரத்தில்.

பாப்பம்மாவை நீங்கள் பார்த்ததில்லை என்றால் விளக்குவது மிகவும் சுலபம்.ஷில்பா ஷெட்டியை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

அந்த ஃபிகருக்கு அப்படியே நேர் எதிர்மறையாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள் அதுதான் எங்கள் பாப்பம்மா.ஷில்பா கிட்டத் தட்ட என்ன உயரமோ அதில் பாதி உயரந்தான் பாப்பு.ஷி வெள்ளை என்றால் பா நிலக்கரிச் சுரங்கத்திலிருந்து தோண்டி எடுத்ததைப் போல இருக்கும்.ஷி யின் ஐ.க்யூ என்ன என்று எனக்குத் தெரியாது.ஆனால் பாப்புவின் ஐ.க்யூ. பத்துக்கும் கீழேதான் இருக்கும். பிறந்த குழந்தை கூடப் பாப்புவை லூசு என்றுதான் கூப்பிடும்.அதற்கு வயது என்னவென்று அதற்கே தெரியாத போது வேறு யாருக்குத் தெரியப் போகிறது.

பாப்பு பக்கத்து ஊரில் இருந்த அனாதை.இருபத்து இரண்டு வருடங்களுக்கு முன் எனது அப்பாவை (அப்பா பார்க்கப் பிரகாஷ்ராஜைப் போல இருப்பார்) யாரோ ஒரு வேண்டாத கல்யாண புரோக்கர் தனது வஞ்சத்தைத் தீர்க்க பாப்புவைப் பெண்பார்க்க அப்பாவிடம் ஏதோ பொய்களைச் சொல்லிக் கூட்டிக் கொண்டு போய் விட்டான்.ஏதோ ஒரு குடிசையில் சாணி தட்டிக் கொண்டிருந்த பாப்பம்மாவுக்கு அப்போது பதினைந்தோ,பதினாறோ வயதிருக்கும் என்று நினைக்கிறேன்.பாப்புவிடமும் அவளைக் கட்டிக் கொள்ள மாமா வரப் போகிறார் என்று அந்த புரோக்கர் புளுகி வைத்து விட்டான் போல இருக்கிறது.அப்பாவைப் பார்த்ததும் அது இளித்த இளிப்பு இருக்கிறது பாருங்கள், அதை ஞாபகப் படுத்தினால் இன்னும் அப்பாவுக்கு ப்ரஷர் எகிறிவிடும்.

பாப்புவின் சிரிப்பு 3டி ,டி.டி.எஸ். எல்லாம் கண்டுபிடிக்காத காலத்திலேயே அந்த எஃபக்டில் எதிரொலிக்கும்.

பாப்புவின் சிரிப்பைப் பார்த்த பயத்தில் அப்பா, தான் சென்ற பைக்கையெல்லாம் ஸ்டார்ட் பண்ணக் கூட நேரமில்லாமல் ஓடியே எங்கள் ஊருக்கு வந்து விட்டார்.அந்த பைக்கை யே ஒரு வாரம் கழித்துப் பாதி விலைக்குத் தள்ளி விட்டார்.

ஆனால் பாப்பு,அப்பா மேல் தான் கொண்ட காதலை இதுவரை மறக்கவில்லை.என்னதான் இருந்தாலும் தன்னைக் கட்டிக் கொள்ள வந்த முதல் மாமனாயிற்றே. யாரோ பில்லி சூனியம் வைத்து அப்பாவின் மனதை மாற்றி விட்டார்கள் என்று இன்றைக்கும் பாப்பு சொல்லிக் கொண்டிருக்கிறது.

அப்பா,அம்மாவைத் திருமணம் செய்த போது பாப்பு நேரடியாகக் கல்யாண மண்டபத்துக்கே வந்து விட்டது.ஏதாவது கலாட்டா செய்யுமோ என்று எல்லோரும் அதிர்ச்சியுடன் பார்த்திருக்க அது நேராகப் பந்தியில் போய் உட்கார்ந்து மூச்சு முட்டச் சாப்பிட ஆரம்பித்து விட்டது.

'ஏய்,இங்கே எதுக்கு வந்திருக்கே?' என்று என் சித்தப்பா போய் மிரட்டியதற்கு அது சாப்பிட்டபடியே கோபமாகச் சித்தப்பாவைப் பார்த்தது.

'ம்..என் மாமன் வீட்டுக் கல்யாணத்துக்கு நான் வராமே யாரு வருவாங்களாம்!.நீ போய் இன்னும் ரெண்டு வடை எடுத்துட்டு வா போ' என்று அவரை ஏவி விட்டு மீண்டும் இலையில் பாய்ந்தது.

கல்யாணம் முடிந்து மண்டபத்தைக் காலி செய்து விட்டு எல்லோரும் கிளம்பிய போது, புதுப் பெண்ணும் மாப்பிள்ளையுமாக அப்பாவும், அம்மாவும் உட்கார்ந்திருந்திருந்த காருக்குப் பின்னாலேயே ஓடி வந்த பாப்பம்மா எங்கள் வீடு வரைக்குமே மூச்சு வாங்க வந்து நின்றது.
யாராரோ அதைத் துரத்தியடிக்கப் பார்த்தார்கள்.ஊஹூம். ரத்தம் வர அடித்ததுதான் மிச்சம்.'அது மாமனை விட்டு நான் போக மாட்டேன்' என்று சொல்லிப் பிடிவாதமாக நடுராத்திரி ஆகியும் போகவே இல்லை.

இரவெல்லாம் 'அன்னக்கிளி உன்னைத் தேடுதே' என்று சத்தம் போட்டுப் பாட்டு வேறு பாடிக் கொண்டு,வீட்டுக்கு வெளியேவே நின்றிருந்தது..

அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அம்மாதான் பரிதாபப் பட்டுப் பாவம்,பாப்பம்மா அதுவாகப் போகும் வரை நம் வீட்டிலேயே இருக்கட்டும் என்று சொல்லி விட்டாள்.

அன்று வந்ததுதான்,அதற்குப் பிறகு, இந்த இருபத்திரண்டு வருடங்களாகப் பாப்பம்மா எங்கள் வீட்டுக்குப் பின்புறத்தில் இருக்கும் தோட்டத்துக் குடிசையில்தான் வாழ்ந்து வருகிறது.அப்பா இத்தனை வருடங்களில் ஒருநாள் கூடப் பாப்புவிடம் பேசியதில்லை.அதுவும் அப்பாவைப் பார்த்தால் இன்னும் வெட்கப் பட்டுக் கொண்டு வேறுபுறம் ஓடிவிடும்.

நானும்,தங்கைகள் இருவரும் பிறந்து, வளர்ந்த பிறகு, கால ஓட்டத்தில் இப்போது பாப்பு எங்கள் வீட்டில் ஒருவராகவே ஆகி விட்டது.

மாங்கு,மாங்கு என்று அம்மாவுக்கு உதவியாக அது நாள் பூராவும் வீட்டு வேலைகள் செய்யும்.அதற்கு ஈடு கட்டிப்,பழையது,புதியது,புளித்தது,புளிக்காதது என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் நன்றாகச் சாப்பிடும்.

வாரத்துக்கு ஒரு நாள் ஊர்க் கொட்டகையில் படம் மாற்றியதும் தவறாமல் படம் பார்த்து விட்டு வந்து விடும் அது .படம் பார்த்து விட்டு வந்த இரவில் அந்தப் படத்தின் பாட்டை ராத்திரி வெகு நேரம் வரை அதனுடைய குடிசையில் படுத்துக் கொண்டு சத்தம் போட்டுப் பாடிக் கொண்டிருக்கும் பாப்பு .ஆனால் எல்லாமே லவ் டூயட்ஸ்தான்.!

இந்த வாரம் முழுக்க ஓடிக் கொண்டிருந்த 'பாப்புவின் நைட் ஹிட்ஸ்'

'கன்கல் ரென்டால்.. .கன்கல் ரென்டால்..என்னைக் கட்டி இலுத்தாய்ய்ய்..ஆ ஆ '

இந்த நேரத்தில்தான் எங்கள் ஊருக்கு இடைத்தேர்தல் வந்தது. எஙகள் ஊர் எம்.எல்.ஏ.பரமசிவத்துக்கு மாரடைப்பு வந்து, பிழைத்து வந்ததே பெரும் பாடாய்ப் போக அவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அதனால்தான் எங்கள் ஊருக்கு இந்த இடைத்தேர்தல் வந்ததே. .

பதவி விலகிய எம்.எல்.ஏ பரமசிவம் தற்போதைய அரசியல் சம்பிரதாயப்படி, தனது பழைய ஊழல்களை மறைக்கவும் ,புதிய ஊழல்களைத் தொடரவும் தனது வாரிசான ஒரே மகன் இளவரசனை இப்போது இடைத்தேர்தலில் கட்சியில் சீட் வாங்கி நிறுத்தி இருக்கிறார்.இளவரசனுக்கு எதிராக நிறைய அரசியல் பெரும் புள்ளிகள் அவரவர் கட்சிகளில் வேட்பு மனுக்கள் தாக்கள் செய்ய ஊரில் தேர்தல் சூடு பிடித்து விட்டது.

வேட்பு மனு தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் இருக்கும் போதுதான் பாப்பம்மாவுக்குப் பேய் பிடித்தது.

அன்று இரவில் வழக்கம் போல 'கன்கல் ரென்டால்..கன்கல் ரென்டால்..' என்று பாடிக் கொண்டிருந்த பாப்பம்மாவின் குரல் திடீரென மாறிப் 'பேய் ஹோ' என்று கத்தியது.
முதன் முதலாக லவ் டூயட்டிலிருந்து விலகிப் பாப்பு சமூகப் பார்வையோடு பாடிய முதல் பாடல் இந்தப் 'பேய் ஹோதான்'

'பேய் ஹோ ', 'பேய் ஹோ' என்று பாப்பம்மா போட்ட சத்தத்தில் அப்பாவே மிரண்டு போய் எழுந்து விட்டார்.
வழக்கமாகத் தன் குடிசையை விட்டு வெளியே வராத பாப்பு இன்று வீட்டுப் பின் கதவை டமடமவெனத் தட்டியது.அப்பாவுடன் நாங்கள் எல்லோரும் பயந்தபடியே கதவருகில் சென்று நின்றோம்.

பாப்புவின் கத்தல்கள் மேலும் மேலும் உயர்ந்தன.

'பேய் ஹோ ''பேய் ஹோ'

அப்பாதான் கதவைத் திறந்தார்.
தலைவிரி கோலமாக நின்றிருந்த பாப்பு அப்பாவைப் பார்த்து இளித்தது.இருபத்திரண்டு வருடங்களுக்கு முன்னால் அப்பாவை முதன் முதலாகப் பார்த்த போது பாப்பு இளித்த அதே இளிப்பு.

அம்மா,நான்,தங்கைகள் எல்லோரும் பயந்து நடுங்கியபடியே அப்பாவின் பின்னால் நின்றோம்.

'ஏய், பாப்பம்மா,என்ன ரகளை நடுராத்திரியிலே போ உன் குடிசைக்கு!'
அப்பா இத்தனை வருடங்களில் இன்றுதான் பாப்புவிடம் பேசினார்..
ஆனால் அப்பாவின் அதட்டலைக் கேட்டு பாப்பு துளியும் சட்டை செய்யவில்லை.வழக்கமாக அப்பாவைக் கண்டாலே வெட்கப் பட்டு ஓடி ஒளியும் பாப்பு அவரை நேருக்கு நேராக எந்தப் பயமுமின்றிப் பார்த்தது.

பிறகு 'டேய் மாமா' என்றது பாப்பு அப்பாவைப் பார்த்து.

அம்மா,நாங்கள் எல்லோரும் ஆடிப் போய் விட்டோம்.

'டேய் மாமா,உங்கிட்டே ஒரு முக்கியமான விஷயம் பேசணும்! உள்ளே வாடா' என்ற பாப்பம்மா மளமளவென்று அவரைத் தள்ளிக்கொண்டு உள்ளே போனது.

நாங்கள் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அதனைத் தொடர்ந்து போனோம்.
உள்ளே ஹாலுக்குச் சென்ற அது ,நடு ஹாலில் அப்பா வழக்கமாக் உட்காரும் சேரை இழுத்துப் போட்டுக் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டது.

'டேய்,திருவாசகம்,நாளைக்கு நான் இடைத்தேர்தலுக்கு வேட்பு மனுத் தாக்கல் பண்ணனும்!' என்றது பாப்பு.
'நீயா?' என்றார் அப்பாவே,பயத்தையும் மீறி ஆச்சர்யப் பட்டு.
'ஆமாண்டா நானேதான்.பாப்பரா இருந்தாலும் இந்தப் பாப்பம்மா சூப்பரா ஜெயிப்பாடா.பயப்படாமே டெபாசிட் கட்டறதுக்குப் பணம் எல்லாம் ரெடி பண்ணிக்க.ம்..'என்றது அது மிரட்டலாக.

அதற்குப் பிறகு, அம்மாவைப் பார்த்து அது பேசிய போதுதான் நாங்கள் எல்லோரும் பீதியின் உச்சத்துக்கே போனோம்.

'அம்மணி,சிவகாமி,உன் கையாலே காய்ச்சின மோரு குடுப்பியே,அது ஒரு டம்ளர் குடும்மா' என்றது பாப்பு,எங்களுக்கு எல்லாம் நன்கு பரிச்சயம்மான குரலில்.

அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் அம்மாவின் ஒன்று விட்ட சித்தப்பா
எங்கள் ஊரின் முன்னால் எம்.எல்.ஏ.தியாகராஜ சித்தப்பா.
இப்போது ராஜினாமா செய்திருக்கும் ஊழல் பரமசிவத்தின் தில்லுமுல்லு அரசியலுக்கு முன்னால் தாக்குப் பிடிக்கமுடியாமல் தோற்றுப் போன தூய்மையான,உண்மையான தேச பக்தர்.

டெபாசிட் கூட வாங்க முடியாமல் ஒரு அயோக்கியனிடம் தோற்றுபோன அவமானத்தில் ஓட்டுச் சாவடிக்கு அந்த இரவே போய்,ஓட்டுப் போடும் அடையாள மையையே வயிறு முட்டக் குடித்து உயிரை விட்டவர் தியாகராஜ சித்தப்பா !

அவரது ஆவியா இப்போது பாப்பம்மாவைப் பிடித்திருக்கிறது?

'டேய் மடையா! பதிவை நிறுத்திட்டு வாடா.எலக்ஷன் வேலை நிறைய இருக்கு !' என்று பாப்பு என்னைப் பார்த்துத் திடீரென உறும...

(நடுங்கிய படியே தொடரும்)

வெள்ளி, மார்ச் 27, 2009

கன்னிகா(நான்காம் பாகம்)மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்

5.
'தியாகங்கள்- செய்யும் தருணங்களில் மட்டுமே அழகாக இருக்கின்றன,சபதங்களைப் போல.'
- திவ்யா.


அரவிந்தனின் விவாக ரத்து வழக்கு மூன்று வாரங்களுக்குப் பிறகு விசாரணைக்கு வந்த போது,முதல் நாளை விடப் பல மடங்குக் கூட்டம் நீதிமன்றத்தில் கூடியிருந்தது.
வாய்மொழியாக படத்தைப் பற்றிய செய்தி பரவியவுடன் திரை அரங்குகளில் கூட்டம் குவிவதைப் போல,அரவிந்தன் கன்னிகா விவாக ரத்து வழக்கு பிரபலமாகத் தொடங்கி இருந்தது.கூட்டத்தில் நிறைய இளைஞர்களும் இளம் பெண்களுமே இருந்தார்கள்

நீதிபதி வகுளாபரணன் வந்து அமர்ந்ததும்,வழக்கமான நீதி மன்றச் சடங்குகளுக்குப் பிறகு வழக்கு ஆரம்பித்தது.

'இன்னிக்கும் உங்க சம்சாரம் கன்னிகா வரலையா?'என்று வகுள் கேட்டதும் கூட்டத்தில் நிறைய இளைஞர்கள் 'வரலே சார்' என்று கத்தினார்கள்.அவர்களை நீதிமன்றப் பணியாளர்கள் எச்சரித்ததும் கூட்டம் அமைதியானது.

'வரலீங்க அய்யா'என்று நீதிபதிக்கு அமைதியாகப் பதில் சொன்னான் அரவிந்தன்.இரண்டு மூன்று நாட்கள் மழிக்கப் படாத முகத்துடன் அவன் 'சக்தே இந்தியா' ஷாரூக்கானைப் போல இருந்தான்.அவனது வாக்குமூல ஃபைல் நீதிபதியிடம் தரப் பட்டது.

அதன் முதல் சில வரிகளைப் படித்த வகுளாபரணின் முகத்தில் மெல்லிய புன்னகை பரவக், கூட்டத்தின் ஆர்வம் இன்னும் பெருகியது. படிப்பதற்குப் போன முறை போல் நடுத்தர வயதினரான முத்துசாமியைக் கூப்பிடாமல்,அவரை விட இளைஞனான மதிவணனைக் கூப்பிட்டார் நீதிபதி.

மதிவாணன் இளைஞன்.ஆனால் 'பேரழகன்' சூர்யாவைப் போல சகல விதங்களிலும் உடலால் பாதிக்கப் பட்டவன்.முதுகில் கூனும்,இளம் பிள்ளை வாததால் பாதிக்கப்பட்ட வலது காலும், இடது கையுமாகக் கறுப்பாகக் குள்ளமாக இருந்தான் மதிவாணன்.ஆனால் அருமையான கவிஞன்.

மிகவும் முயற்சி எடுத்து,ஆறு மாதங்களுக்கு முன்னால் ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்டு,அதன் கடன் சுமையிலிருந்து இன்னும் மீள முடியாமல் கஷ்டப் படுகிறான் மதிவாணன்.தினமும் நீதிமன்றத்துக்கு ஒரு துணிப் பையில் அவனது விற்காத கவிதைத் தொகுப்பின் ஆறேழு பிரதிகளைக் கொண்டு வந்து கெஞ்சிக் கெஞ்சி விற்கப் பார்ப்பான்.மற்றவர்களின் கிண்டல் கேலிகளையும் தாண்டிக் கவிதைகளை விற்றால்தான் அவனுக்கு மதியம் சாப்பாடு.

ஆனால் இத்தனையும் தாண்டிக் கணீரென்ற கவியரங்கக் குரல் அவனுக்கு.'ஒரு மௌனத்தின் அலறல்' என்ற அவன் கவிதை தொகுப்பிலிருந்து ஆண்மை மிளிரும் அவனது உணர்ச்சிகரமான குரலில் அவன் படித்துக் கேட்க வேண்டும்.அசத்தி விடுவான். ஆனல் கேட்கத்தான் ஆளில்லை.இருந்தாலும் உற்சாகம் குறையாத இளைஞன் மதிவாணன்.

'மதி,வாப்பா.இன்னிக்கு வாக்குமூலத்தை நீ படி'என்று அவர் பணித்ததும் மதிவாணன் புல்லரித்துப் போய் விந்தி விந்தி நடந்து வந்து ஃபைலை வாங்கிக் கொண்டான்.
அரவிந்தனின் அருகில் வந்து நின்றவன் அவனைப் பார்த்துப் புன்னகைத்து 'நான் உங்க ரசிகனாயிட்டேன் சார்'என்றான் கிசுகிசுத்த குரலில். அரவிந்தன் அவனைப் பார்த்து வெறுமனே முறுவலித்தான்.

அரவிந்தனின் வாக்குமூலம் மதிவாணனின் கணீர்க் குரலில் இப்படித் தொடங்கியது.

'அழகுணர்ச்சி உள்ள மனிதர்களுக்கே இருபதிலிருந்து,இருபத்தைந்து வயது வர வேண்டும்.மற்றவர்கள் எல்லாம் இருபது வயதிலிருந்து நேரடியாக நாற்பது வயதுக்குப் போய் விடலாம் என்று பரிணாம விதிகளை யாராவது மாற்றினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.'

இதனைத் தனது கவிஅரங்கக் குரலில் மதிவாணன் படித்ததுமே எச்சரிக்கையையும் மீறி இளைஞர்கள் கைதட்டினார்கள்.இதனைப் படித்ததினால்தான் வகுள் இளைஞனான மதியைப் படிக்கச் சொல்லி இருக்கிறார் என்பது அனைவருக்கும் புரிந்த போது அவர்கள் நீதிபதியை புதிய மரியாதையுடன் பார்த்தார்கள்.அரவிந்தன் மட்டும் நிச்சலனமாக இருந்தான்.நீதிமன்றம் அமைதியானதும் மீதி அரவிந்தனைப் படிக்க ஆரம்பித்தான் மதி.

'இதனை அனுபவபூர்வமாகப் பெங்களூரில் நான் திவ்யாவுடன் கழிக்க நேர்ந்த பதினைந்து நாட்களில் உணர்ந்தேன்.நான் தங்கி இருந்த ஸ்டார் ஹோட்டலின் ரெஸ்டாரென்டில் திவ்யாவைச் சந்தித்த மறுநாள் மாலை.

அந்த மாதிரி ஹோட்டல்களில் குளிப்பதற்கே தங்கலாம்.ஷவரில்தான் எத்தனை விதமான வசதிகள்.கொதிக்கக் கொதிக்கக்,குளிரக் குளிர முழுமையாகக் குளித்து விட்டு வெளியே வரும் போது மனிதன் முதன் முதலாகக் கண்டு பிடித்த யோகக் கலையே குளியல்தான் என்று தோன்றியது.

ஜன்னலுக்கு வெளியே காளிதாசனின் மேக சந்தேசத்தை இன்னும் நினைத்தபடியே பெங்களூரின் அந்தி மேகங்கள் காதலர்களைச் சேர்த்து வைக்க அலைந்து கொண்டிருந்தன. குளியல், உடலிலும் மனதிலும் இளமையை இன்னும் தீவிரமாக்குகிறது. என்று நான் நினைக்க நினைக்கவே எனது செல் ஃபோனில் இளையராஜா 'ஒருநாள் ஒரு கனவு' என்று மென்மையிலும் மென்மையாகக் கூப்பிட்டார்.ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரிங் டோன் ஆனதால் எனது செல்ஃபோன் ஒரு இடைவிடாத சங்கீதச் சங்கமம்.அனுராதா ஸ்ரீராமின் குரலில் ஏ.சி இன்னும் இரண்டு பாயிண்டுகள் தானாகவே கூடின.ஜேசுதாசின் பஞ்சுக் குரலின் மேலேயே அமர்ந்தாற்போல கட்டிய டவலுடன் படுக்கையில் சாய்ந்த படியே சாவகாசமாகக் கூப்பிடுவது வாடிக்கையாளர்களில் யாரென்று ஃபோனைப் பார்த்தேன்.

பெயரைப் பார்த்ததும்

எனது நெஞ்சக் கூடடைந்திருந்த உலகத்து அந்திப் பறவைகள் எல்லாம் ஜிவ்வென்று ஒரே நேரத்தில் சிறகடித்துப் பறந்தன. '

'சூப்பர் சார்' என்றான் மதி தன்னை மறந்து. வகுள் உட்பட நீதிமன்றத்தில் எல்லோருமே சிரித்து விட்டனர். முதன் முதலாக கோர்ட் பணியாளர் சிரித்தபடியே சைலன்ஸ் சொன்னது அன்றுதான்.

வெட்கப் பட்ட மதி மீண்டும் அரவிந்தனைத் தொடர்ந்தான்.

'திவ்யா'

அவள் பெயரைக் கண்ட பதற்றத்தில் இடுப்புத் துண்டெல்லாம் அவிழ்ந்து போக எழுந்து நின்றேன் நான்.இன்று மாலை அவள்கூப்பிடுவாள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

'ஹலோ' என்று அவள்சொன்னதும் எனக்கு ஏதோ நிலாவில் நடப்பதைப் போல உடம்பு எடை ஆறில் ஒரு பங்காகக் குறைந்தது.
'திவ்யா' என்ற போது என் குரலிலேயே அட்ரினலின் வழிந்தது.
'எங்கே இருக்கிறீர்கள் அரவிந்த்?' என்றாள் திவ்யா ஆங்கிலத்தில்.

இந்த ஆங்கிலத்தில் 'யூ' என்பதை விட ஒரு மொன்னையான வார்த்தை கிடையாது. குழந்தையைக் கொஞ்சுவதற்கும் 'யூ'தான்.கடவுளைக் கும்பிடுவதற்கும் 'யூ'தான்.கொடூரமான குற்றவாளியைத் தண்டிப்பதற்கும் 'யூ'தான்.

நீங்கள்,நீர்,நீ என்ற, உறவுகள் படிப்படியாக நெருங்கிவரும் பரிணாம வளர்ச்சியெல்லாம் வெள்ளைக்காரர்களுக்குக் கிடையாது போல.அதனால் எங்களுக்குள் நடந்த ஆங்கில உரையாடல்களை எல்லாம் எனது வசதிக்கேற்ப தமிழிலேயே சொல்கிறேன்.

'எங்கே இருக்கிறாய் அரவிந்த்?' என்றாள் திவ்யா எனது தமிழில்.

'எப்போதும் உன்னை விட ஒரு லெவல் கீழே!' என்றேன் நான்,எங்கள் அறைகள் இருக்கும் தளங்களைக் குறிப்பிட்டு.
அவள் சிரித்தாள்.

'அறை லெவலில் வேண்டுமானால் நீ கீழே இருக்கலாம்,ஆனால் பிடித்த விஷயங்களை மற்றவர்களுக்காக விட்டுக் கொடுக்கும் மனித லெவலில் நீ எப்போதும் எனக்கும் மேலேதான்.' என்றாள் அவளும் எனக்கு இணையாக.

'உன்னுடன் பேசுவதற்கே நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்..நீ புகழ்வதைக் கேட்க எனது மூதாதையர்களும் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!' என்றேன் நான்.

இளம் பெண்கள்தான் சிரிப்பைக் கண்டு பிடித்தார்கள் என நினைக்கிறேன். அவ்வளவு அழகாகச் சிரித்தாள் திவ்யா.

'உனது அறைக்கு வரலாம் என்று இருக்கிறேன்.நீ எனக்கு என்ன தருவாய்?'
'என்னையே' என்றேன் பழைய தமிழ்ப் பாடல்களின் நினைவில்.
'அவ்வளவு இடவசதி இப்போது என்னிடம் இல்லை.குடிப்பதற்கு என்ன தருவாய்?'
'ஒயின்?ஜின்?ஷேம்பேன்?பீர்?வோட்கா? எனது ரத்தம்?'
'நான் சைவம் சாப்பிடும் ஒரு இந்தியப் பெண். எனக்குக் குடிக்க என்ன தருவாய்?'
'நீயே சொல்லி விடு.'
'ஐஸ்கோல்ட் லெமன் ஜுஸ்' என்றாள் அவள்.
'யெஸ் மை ஹைனஸ்' என்றேன் நான் உற்சாகமாக.
'பதினைந்து நிமிடங்களில் அங்கே இருக்கிறேன்.'என்று சொல்லி விட்டு ஃபோனைக் கட் செய்தாள் திவ்யா.

மெல்லிய என்யாவின் இசை,இனம் புரியாத, ஆனால் எப்படியோ மனதுக்குப் புரிந்த பாடி ஸ்ப்ரே, லேவண்டர் ரூம் ஸ்ப்ரே என்று ஏற்கனவே அழகாக இருந்த அந்த ஹோட்டல் அறையையும், சுமாரான என்னையும் இசையாலும்,நறுமணங்களாலும் மேலும் மெருகேற்றிக் கொண்டு நான் அறை வாசலுக்குச் சென்றபோது அவள் கதவைத் தட்டினாள்.

நான் கதவைத் திறந்து அவளைப் பார்த்ததும், இருவருமே ஒரே சமயத்தில் 'வாவ்' என்று ஆச்சர்யத்தில் கத்தி விட்டோம்.
நான் யோசித்து,யோசித்து அணிந்திருந்த அதே நைகி கறுப்பு ட்ரேக் ஷூட்டையும்,காலர் இல்லாத வெள்ளைக் காட்டன் டி ஷர்ட்டையையுமே அவளும் அணிந்திருந்தாள்

'டேக் கேர்'.என்று இருவரது நெஞ்சிலுமே எழுதி இருந்தது.
'எப்படி ..அரவிந்த் ...எப்படி இந்த மார்வலஸ் கோ இன்ஸிடன்ஸ்?' என்று திகைப்பும் மகிழ்ச்சியுமாகக் கேட்டாள் திவ்யா.
'கோ இன்ஸிடன்ஸ் என்று வெள்ளைக்காரர்கள்தான் சொல்லுவார்கள்.இந்தியாவில் நாம் இதை விதி என்று சொல்லுவோம்.' என்றேன் நான்.

திருப்பித் திருப்பித் தனது ஆடையையும்,எனது ஆடையையும் அவள் ஒப்பிட்டுக் கொண்டிருந்த போது நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
தோலுக்கடியில் ஏதோ கண்ணுக்குத் தெரியாத நியான் விளக்குகள் எரிவதைப் போல அப்படித் தகதகத்தாள்திவ்யா.
'நீயும் மாலையில் குளித்தாயா?'
'ஆமாம். வழக்கம் போல ஐஸ் கோல்ட் ஷவர் பாத்' என்றாள் அவள்.

'குளிர்ந்த நீர் பட்டதுமே இவ்வளவு சிவந்து போகிறாயே,நீ குழந்தையாக இருக்கும் போது உன்னை எப்படிக் கொஞ்சி இருப்பார்கள்?'
அவள் வெட்கப்பட்ட போது அந்த அழகை வருணிக்க வார்த்தைகள் இல்லையே என்று தமிழன்னையும் கூடச் சேர்ந்து வெட்கப் பட்டாள்.
'வழி விடுகிறாயா,உள்ளே போவோம்'

நான் நகர்ந்தவுடன் அவள் உள்ளே வந்து குஷன் வைத்த சுழல் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்து கொண்டாள்.
'எங்கே என்னுடைய கூல் டிரிங்க்?.' என்று அவள் கேட்டதும் நான் வாங்கி வைத்திருந்த ஐஸ்க்ரீமைக் கொண்டு வந்து தந்தேன்.அவள் கேள்விக் குறியுடன் என்ன இது ?என்று ஜாடை செய்தாள்.
'நீ எனது கஸ்ட் ஆஃப் ஹானர்.உன்னை வெறும் எலுமிச்சைச் சாற்றுடன் வரவேற்க நான் தயாராக இல்லை.' என்றேன் நான்
.'தேங்க்ஸ்' என்றவள் அதைச் சாப்பிடும் முன் என்னைக் கேட்டாள்.
'உனக்கு ,அரவிந்த்?'
'உண்பதை விட எனக்கு ஐஸ்க்ரீமைப், பார்ப்பதுதான் பிடிக்கும்.' என்றேன் நான்.
'மற்றவர்கள் பார்க்கப், பார்க்க உண்ணும் வழக்கம் எனக்கு இல்லை'என்ற திவ்யா சுழல் நாற்காலியைச் சுற்றி விட்டுத் திரும்பிக் கொண்டாள்.
நான் அமைதியாகவே இருக்க 'என்ன சத்தத்தையே காணோம்?' என்றாள்,முன்புறம் திரும்பாமல்.

'பின்னாலில் இருந்து பார்த்தாலும் ஐஸ்க்ரீமுக்கு அதே ருசிதான்' என்று நான் சொன்னதும்தான் அவள் புரிந்து கொண்டு சரேலேன முன்புறமாகத் திரும்பினாள்.
செல்லக் கோபத்துடன் 'யூ டர்டி ராஸ்கல் 'என்றவள் பின்னர் தனக்குள் சிரித்தபடி ஐஸ்க்ரீமைச் சாப்பிடும் பாவனையில் தலை குனிந்து கொண்டாள்.

சீர்,தளை சிறிதும் தட்டாமல்,யாப்பிலக்கணம் சற்றும் வழுவாமல் கட்டிய இரண்டு வெண்பாக்களைப் போல இருந்தன அவளது இளம் மார்புகள்.ஐஸ்க்ரீமைச் சுவைத்த அவளது நாக்கின் பிங்க் நிறத்துக்கு இணையான நிறத்தை இயற்கை இன்னும் எங்கும் படைக்கவில்லை என்பது சத்தியம்.

'நீ எப்போதும் இந்த ஹோட்டலில்தான் தங்குவாயா?' என்று அவள் பேச்சை மாற்றினாள்.உடனே நான் அந்த ஹோட்டலின் கட்டுமானச் சிறப்புக்களைப் பற்றிய எனது சிவில் எஞ்சினியரிங் ரசனைகளை அவளிடம் உணர்ச்சிகரமாக விளக்க ஆரம்பித்து விட்டேன்.

'இது வெறுமனே காசுக்காக யாரோ கட்டிய ஹோட்டல் கட்டிடம் அல்ல,திவ்யா.மனம் ஒன்றிக் கலாபூர்வமாகப் படைத்திருக்கா விட்டால் வறண்ட காங்க்ரீட்டிலும்,சிமென்ட்டிலும் இத்தனை பூக்களும், சில்க்கும் விரிந்திருக்காது.' என்றேன் உண்மையில் சிலிர்த்து.

'அப்படியா?' என்றாள் அவள்,எனது ரசனையை உள்வாங்கிக் கண்கள் விரிய.

'ஏதோ கண்ணுக்குத் தெரியாத ஒரு வெள்ளை மலையைச் செதுக்கிச் செதுக்கிப் பிரம்மாண்டமான இந்தச் சிற்பத்தைப் படைத்திருக்கிறார்கள்.சிற்பத்தையாவது நீ வெளியே இருந்துதான் பார்த்து ரசிக்க முடியும்.ஆனால் இந்தச் சிற்பத்தை நீ உட்புறத்திலும் தங்கி,அணுஅணுவாக அதன் அழகுகளை ரசிக்க முடியும்.' என்ற போது உண்மையில் அவள் என் ஈடுபாட்டை 'மிக மிக நன்றாகச் சொன்னாய்,அரவிந்த்'என்று மனதாரப் பாராட்டினாள்.

'நான் இன்று ஒர்க் அவுட் செய்யவில்லை.கீழே தோட்டத்தில் சற்றே நடந்து வரலாமா?' என்று அவள் கேட்டதும் நான் உடனே ஒத்துக் கொண்டேன்.

ஹோட்டல் தோட்டம் ஒரு குட்டி மைசூர் பிருந்தாவனம் போலிருந்தது.முன்னிரவின் குளிர்ந்த காற்று.சுற்றிலும் நிறங்களையும், மணங்களையும் வரங்களாக அருளிக் கொண்டிருக்கும் மலர்கள்,அருகில் மனம் ஒன்றிய ரசனைகளுடன் கூடிய ஒரு அழகிய இளம் பெண்.
இந்த மாதிரி பரிபூரண அமைதி வரும் சந்தர்ப்பங்களில் எல்லோருடைய அந்தரங்கத்தின் ஆழத்திலும் தெரியும் அந்த மானசரோவர் ஏரியை நானும் கண்டேன்.

'இன்று ஏன் நீ உனது அபிமானப் புத்தகத்தை எடுத்து வரவில்லை?' என்றேன் நான்,இருவரும் ஒரு பளிங்கு பெஞ்சில் அமர்ந்தவுடன்.

'நம்மைப் பற்றிப் பேசத்தான் ' என்றாள் திவ்யா.

'நம்மைப் பற்றியா?'
'நான் உன்னைப் பார்க்க வந்ததே, நாம் யார் என்று இன்னும் விரிவாக ஆழமாகத் தெரிந்து கொள்ளலாம்,என்று நினைத்துத்தான்' என்றாள் அவள்.

'சந்தித்த இரண்டாம் நாள் சாயந்திரமேவா என்று நீ கூட ஆச்சர்யப் படலாம்.ஆனால் இதற்கெல்லம் லாஜிக் இல்லையென்று நாம் இன்று அணிந்திருக்கும் ஒரே மாதிரி உடைகளில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.' என்றாள் திவ்யா கனத்த குரலில்.

பிறகு அவள் தன்னைப் பற்றிச் சொன்னாள்.

திவ்யா ஒரு சிந்திப் பெண்.தந்தையைச் சிறு வயதிலேயே இழந்து விட்டவள்.ஒரே அக்கா இருக்கிறாள்.அவள் பெயர் தன்யா.விமானப் பணிபெண்ணாக இருந்து போன வருடம்தான் ஒரு தொழிலதிபரைக் காதலித்து மணந்து கொண்டிருக்கிறாள் அக்கா.அவளுக்கு ஒரே குழந்தை வருண்.திவ்யா இப்போது தனது விதவைத் தாயுடன் மும்பையில் சொந்த ஃப்ளாட்டில் வசிக்கிறாள்.

'சிந்திக்கள் என்றால்..இந்துக்கள்தானா?' என்று நான் எனது சந்தேகத்தைக் கேட்டவுடன் அவள் தங்கள் வரலாற்றையே சுருக்கமாகச் சொன்னாள்.

'பஞ்சாப,சிந்து மராட்டா என்று தேசிய கீதத்தில் தாகூர் எழுதியதே எங்கள் சிந்து நதிக் கரை மாகாணத்தைப் பற்றித்தான்.ஆனால் பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்தியாவுக்குத் துரத்தப் பட்டு, அனைத்தையும் இழந்து அகதிகளாக வந்த இந்துக்களே நாங்கள்..எதனை இழந்தாலும் தன்மானத்தை மட்டும் இழக்கக் கூடாது என்ற எங்கள் முன்னோரின் உறுதியாலும், உழைப்பாலும்,அறிவாலுமே இன்று இந்தியாவின் பணக்கார இனங்களில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம்.ஒரு சிந்திப் பிச்சைக்காரனைக் கூட நீ உலகில் பார்க்க முடியாது.' என்றாள் திவ்யா தீர்க்கமான குரலில்.

'சரி உன்னைப் பற்றிச் சொல்' என்றாள் பிறகு.

'நீ சிந்து நதிக்கரை.நான் காவேரிநதிக் கரை.நீங்கள் சிந்து நதியை முழுக்க இழந்து விட்டீர்கள்.நாங்கள் காவேரியைப் படிபடியாக இழந்து கொண்டிருக்கிறோம்.ஈரோடு அருகே காவேரி நதிக்கரையில் இருக்கும் ஓடக்கரை என்னும் குக்கிராமத்திலிருந்து வந்தவன் நான். அப்பா அம்மாவுக்கு ஒரே பிள்ளை.படித்தது கோவை ஜி.சி.டியில்.கோல்ட் மெடல்லிஸ்ட் இன் சிவில் எஞ்சினியரிங்.' என்றேன் நான் சுருக்கமாக.

'இவ்வளவு திறமையும் ரசனையும் இருப்பவன் ஏன் கிரானைட் விற்கும் விற்பனைப் பரதிநிதியாக இருக்கிறாய்?' என்ரு கேட்டாள் அவள்.

'நான் ஒரு கட்டிடப் பிரியன்.நாடு முழுதும் சுற்றி இந்த ஹோட்டலைப் போல ரசனையுடன் கட்டப் படும் பிரம்மாணடமான பல காங்க்ரீட் கவிதைகளைப் பார்ப்பதற்கு எனது இந்தத் தொழில் எனக்கு உதவியாக இருக்கிறது.' என்றேன் நான்.

'ஹல்ல்லோ திவ்யா ' என்ற வேறோரு உற்சாகக் குரல் கேட்டதும் இருவருமே திரும்பிப் பார்தோம்.
எனக்குப் பரிச்சயமில்லாத ஆனால் திவ்யாவை நன்கு அறிந்த அந்த ஹோட்டலின் எம்.டி கம் சேரமேன்.அந்த அறுபது வயதிருக்கும் பாஸ்கர் ரெட்டியை திவ்யா எனக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

'ஹலோ அரவிந்த்,நைஸ் டு மீட் யூ,'என்ற பாஸ்கர் ரெட்டி 'உனக்குத் திவ்யா யாரென்று தெரியுமா?'என்று கேட்டார் திடுமென.

'தெரியும் .ஒரு ஆர்கிடெக்ட். என்றேன் புரியாமல்.

'ஓ,நோ மை பாய்.இந்த பிரம்மாண்டமான ஹோட்டல் கட்டிடத்தை முழுக்க முழுக்க டிசைன் செய்த ஆர்கிடெக்டே இந்தக் குட்டித் தேவதைதான்' என்று அவர் சொல்லி முடித்தபின், அவர் பேசிய எந்த வார்த்தைகளுமே எனது காதில் விழவில்லை.

அவர் சென்ற பிறகு திவ்யாவையே அமைதியாகப் பார்த்தேன்.

'இன்று சாயந்திரம் முழுக்க,இந்தக் கட்டிடதின் அழகுகளைப் பற்றி மாய்ந்து மாய்ந்து நான் புகழ்ந்த போதெல்லாம் இதை டிசைன் செய்தது நீதான் என்று ஏன் என்னிடம் சொல்லவில்லை திவ்யா?'

அவள் நிமிர்ந்து என்னை ஆழமாகப் பார்த்தாள்.

'நான்தான் அது என்று சொல்வதைக் காட்டிலும், இவர்தான் அது என்று சொல்வதைக் கேட்கும் போதுதான் அழுத்தம் அதிகம் இருக்கும் என்று எங்கள் சிந்தி பிஸினஸ்மேக்னட்கள் சொல்வார்கள்.அதனால்தான் உன்னிடம் என்னைப் பற்றிச் சொல்லவில்லை.'

நான் ஒன்றும் சொல்லாமல் அவளையே பார்த்திருந்தேன்.
'
கோபமா அரவிந்த்?'

அவளும், அவளுக்குப் பின்னால் இரவில் பிரம்மாண்டமான ஒரு வெள்ளைக் கனவைப் போல நின்றிருக்கும் அந்த ஹோட்டல் கட்டிடமும்.

'இப்போது உன் கையையாவது குலுக்கலாமா?'என்றேன் நான்.
'ஓ,ஷ்யூர்' என்று சிரித்தபடியே கையை நீட்டிநாள் திவ்யா.

அப்போதுதான் முதன் முறையாக அவளது கையைத் தொட்டேன்.

'தொட முடியாத எவ்வளவு உயரத்தில் நீ இருக்கிறாய் என்று உன்னைத் தொடும் போதுதான்,புரிந்து கொண்டேன், திவ்யா' என்றேன் குரல் உடைய.

'எப்படி இவ்வளவு அழகாகாப் பேசுகிறாய் அரவிந்த்?' என்றாள் அவள் சிரித்து.

மீண்டும் பழைய நிலைக்கு வந்து சிரித்தேன்.

'வெரி சிம்பிள்,திவ்யா.உன்னை மாதிரி அழகான பெண்கள் அருகில் இருக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு அருள் வந்து விடும்.அப்புறம் உலகத்துக் கவிஞர்கள் எல்லோரும் எனக்குள் வந்து எனக்குப் பதிலாகப் பேச ஆரம்பித்து விடுவார்கள்.கம்பனில் இருந்து தொடங்கி தாகூர்,பாரதி,வாலி,வைரமுத்து என்று அந்த லிஸ்ட் போய்க் கொண்டே இருக்கும் ..அவ்வளவு .ஏன் ஆறு மாதத்துக்கு முன்னால் முதல் கவிதைப் புத்தகம் வெளியிட்ட மதிவாணன்--என்ற இளங்கவிஞன்'

மதிவாணன் மட்டுமல்ல ,அவன் பெயர் அரவிந்தனின் வாக்குமூலத்தில் வருமென்று யாருமே எதிர்பார்க்காததினால் கோர்ட்டே ஸ்தம்பித்தது.

மதிவாணன் திணறிப் போய் ஒரு தடவைக்கு இரண்டு தடவை படித்துப் பார்க்க அவன் பெயரைத்தான் அரவிந்தன் எழுதி இருந்தான்.

'சார்..அய்யா..சார் என்னோட பேரைத்தான் எழுதியிருக்கார்.'என்று மதிவாணன் திக்கித் திணறி நீதிபதியிடம் சொல்ல,வகுள்'அவரது வாக்கு மூலத்தைத்தானே படிக்கிறாய்.படி'என்றதும் மதி தொடர்ந்தான்.

'ஆறுமாதத்துக்கு முன்னால்தான் முதல் கவிதைப் புத்தகத்தை வெளியிட்ட மதிவாணன் என்ற இளங்கவிஞன் கூடத் தனது அற்புத வரிகளால் எனக்காக உன்னிடம் பேசுவான்.'

இதை மதிவாணன் தன் மெய்சிலிர்க்கப் படித்த போது கோர்ட்டே ஆரவாரத்தாலும் கரகோஷத்தாலும் சிலை வாங்கியது.

மதிவாணன் தனது ஊனமுற்ற உடல் முற்றிலும் குலுங்கக்,குலுங்க விந்தி,விந்தி ஓடி வந்து கதறியபடியே போய் அரவிந்தனின் கைகளைப் பற்றிக் கொண்டான்.அவன் உரக்க அழுதபோது கோர்ட்டில் நிறையப்பேர் அவனது கவிதைகளைப் புரியாவிட்டாலும் அவனது உணர்வுகளைப் புரிந்து கொண்டு அவனுடன் அழுதார்கள்.

'நீ மட்டுமல்ல மதிவாணன்,நானுந்தான் உனது ரசிகன்.என்ன,இன்றுதான் உன்னைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது.' என்றான் அரவிந்தன் அவனது மாறாத அமைதியுடன்.

அழுகை என்பதைத் தவிர அந்த 'மௌனத்தின் அலறலுக்கு 'யாருக்கும் வேறு பொருள் சொல்லத் தெரியவில்லை.

அந்த இளம் கவிஞனின் அழுகையும்,பரவசமும் முடிவதற்காக வகுள் பத்து நிமிடம் கோர்ட்டுக்கு இடைவேளை விட்டார்.

(இடைவேளை)

திங்கள், மார்ச் 23, 2009

'அருந்ததீ'பட அனுபவம்

கண் இமைத்துக் கொண்டிருந்தால்,மனம் இயங்கிக் கொண்டிருக்கிறது என்று அர்த்தம்.அதனால்தான் ஒன்றில் மனம் லயித்துப் போய் நின்று விட்டால் அதனைக் கண் கொட்டாமல் பார்க்கிறோம் என்று ஓஷோ ஓரிடத்தில் சொன்னது நேற்று அருந்ததி படம் பார்க்கும்போது நடந்தது.

டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் இருட்டில், உக்கிரமான ஒரு ரோல்லர் கோஸ்டரில் உட்கார வைத்து ,ஒரு அமானுஷ்ய உலகத்துக்குக் கூட்டிச் சென்று விட்டுப் படம் முடிந்தவுடன்தான் இறக்கி விடுகிறார்கள்.

தொழில் நுட்பத்தின் சாத்தியங்களும்,திரைக்கதையின் சாமர்த்தியங்களும் கைகோர்த்துக் கொண்டால்,நச்சரிக்கும் உங்கள்பகுத்தறிவுக் கேள்விகளை எல்லாம், அவை எழ,எழவே அடித்து நொறுக்கி விட்டு அழும் குழந்தையை மிரட்டி வாய் மேல் கை பொத்தி அறை மூலையில் உட்கார வைப்பதைப் போல் மக்களை உட்கார வைக்க முடியும் என்பதை நிரூபித்து விட்டார் இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா.

நமது அடிப்படை உணர்ச்சிகளான கோபம்,வன்மம்,காமம்.சபதம் ,வெறி மரணம் என்பதைத் தவிர வேறு எந்த மெல்லுணர்வுகளையும் ஒரு நொடி கூட வராமல் பார்த்துக் கொண்ட திரைக்கதையால் எந்நேரமும் இருந்து கொண்டு இருக்கும் பரபரப்பு,அதனை மேலும் தீவிரமாக்கும் உடுக்கை,டிரம்ஸ்களின் டி..டி.எஸ். உறுமல்கள்,அதீதமான சம்பவங்களால் கட்டவிழ்ந்த குழந்தைத் தனத்தின் விளையாட்டு உற்சாகம் இப்படி ஒரு டிஸ்னிலேண்ட் சுற்றுலாவைப் போல் பயணிக்கிறது படம்.

யாரந்தக் கேமராமேன் செந்திகுமார்?தரதரவென்று நம்மை இழுத்துக் கொண்டு போய் அவரது கேமரா வியூஃபைண்டரில் நம் கண்களைப் பதியச் செய்து விடுகிறார் அவர்.அதற்குப் பிறகு நம் கண் லென்ஸ்களின் செயல் இழந்து அவரது காமிரா லென்ஸ்களின் வழியாகத்தான் அவர் காட்டும் உலகத்தை நம்மால் பார்க்க முடிகிறது.கண்களே மாறிக்,காட்சிகளும் மாறும் போது நம் கருத்துக்களுக்கு அங்கே என்ன வேலை?

நடிகர்களும் இதற்கேற்ப மனித மீறல்களின் முக பாவங்களை செவ்வனே வழங்கி இருக்கிறார்கள்.

தர்க்கஅறிவைத் துப்புரவாகத் துடைத்தபடியே ஓடும் இந்தத் தொழில் நுட்ப அட்டகாசங்களால்,நாம் பேய்களையும்,பிரேதங்களையும்,பிசாசுகளையும் ஏதோ தினமும் நாம் சந்திக்கும் தபால் காரர்களையும்,குரியர்களையும்,கான்ஸ்டபிள்களையும் பார்ப்பதைப் போல் சர்வ சாதரணமாய்ப் பார்க்கத் தொடங்கி விடுகிறோம்.ரத்தத்தைப் பார்ப்பது,பாக்கெட் பாலைப் பார்ப்பதைப் போல் ஆகி விடுகிறது.திரைப்படம், எவ்வளவு பெரிய உளவியல் மாற்றங்களுக்கான் சாத்தியம் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

அருந்ததி-ஹாலிவுட் திரைப்படத் தொழில் நுட்பங்களை எல்லாம் மென்று தின்று ஜீரணித்து விட்டு,விஸ்வரூபமாய் எழுந்து நிற்கும் தெலுங்குவுட் மாயாஜாலம்.

ஒரு இரண்டு மணி நேரப் புது ஜென்மம் எடுக்க விரும்புபவர்கள் பார்க்க வேண்டிய படம்.

சனி, மார்ச் 21, 2009

கன்னிகா(மூன்றாம் பாகம்)மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்

4.

விமான ஓடுதளம்,விமானத்தைத் தரையிலேயே வேறு ஊருக்கு ஓட்டிச் செல்லும் நெடு வழிச் சாலை அல்ல.அது,வானத்தில் பறப்பதற்கு.அது போலத்தான் காமமும்.

Sex is a run way to fly into higher dimensions,and not a high way to travel in the same direction forever.

சிறகுகளை வைத்துக் கொண்டு வானில் பறக்காமல், சேற்றிலேயே தத்திக் கொண்டிருக்கும் பறவைகளைப் போல இன்பங்களில் இருந்து மேல் எழும்பாமல் அதிலேயே உழன்று கொண்டிருக்கிறாய்.

மேலே மேலே பறக்க,உனக்குக் கற்றுக் கொடுக்கவே நான் வந்திருக்கிறேன். .

Each occasion is for a take off.

-கன்னிகா.
கன்னிகா மலையாள முறைப்படி வெள்ளை நிறத்தில் புடவையும், மேலே சோளியும்,மேல் துண்டும் அணிந்திருந்தாள்.கேசவன் 'ஞான் காலையிலே வரட்டே' என்று என்னிடம் விடை பெற்றுச் சென்று விட்டான்.நான் கன்னிகாவைப் பார்த்தேன்.அறையின் ஒரு மூலையைப் பார்த்தபடி அமைதியாக நின்றிருந்தாள் அவள்.


குளித்து முடித்த ஈரக் கூந்தலுடன் அவள் அறை வாசலில் நின்றிருந்த பிரசன்னம் ஒரு நல்ல பாட்டின் முன்னால் வரும் தம்பூர் நாதத்தைப் போல அறை எங்கும் பரவி இருந்தது.எல்லாவற்றையும் விட அவளிடம் இருந்து வந்த மெல்லிய சந்தன வாசனை சுகமோ சுகமாகக் குளிர்ந்தது..இதற்கும் நெற்றியில் கேரளப் பெண்கள் வைப்பதைப் போல ஒரே ஒரு சந்தனக் கீற்றுத்தான் இட்டிருந்தாள்.வாத்சாயனர் சொல்வதைப் போல உயர் ஜாதிப் பெண்களின் உடம்புக்கே ஒரு வாசம் உண்டு என்பது உண்மையா?மெல்ல அவள் கையைப் பற்றினேன்.விலை உயர்ந்த ஷேம்பேன் நுரையைப் போல மூச்சுக் காற்றுப் பட்டாலே கரைந்து விடுவாளோ என்பதைப் போல மெல்லிய சதை அவளுக்கு.


நான் தொட்டதும்தான் அவள் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.அருகருகே இரண்டு ராமேஸ்வரம் கடல்களைக் கண்டாற் போல் இருந்தது அவளது கண்கள்.உணர்வுகளின் சலசலப்புக் கொஞ்சம் கூட இல்லாத விழிகள்.'கண்கள் ஆத்மாவின் ஜன்னல்கள்' என்று எங்கோ படித்தது உண்மையானால் இவ்வளவு பரிசுத்தமான ஆத்மாவை நான் இது வரை எங்குமே பார்த்ததில்லை.அந்தத் தூய ஆத்மா என்னிடம் விலைக்கு வந்திருக்கிறது என்பதை இன்னும் என்னால் நம்பவே முடியவில்லை.



சந்தனமும் மஞ்சளும் கலந்த நிறத்தில், நிறுத்தி வைக்கப் பட்ட வீணையைப் போல நின்றிருந்த அவளை நான் மெல்ல அறையில் இருந்த தேக்குக் கட்டிலுக்கு அழைத்துச் சென்றேன்.என்னருகில் அமர்த்திக் கொண்டு இன்னும் நெருக்கத்தில் அவளைப் பார்த்தேன்.
உலகத்தில் இருக்கும் ஒப்புயர்வற்ற அத்தனை ஒப்பனைக்காரர்களும் அவளது எந்த மேக்கப்பும் இல்லாத கன்னங்களின் பளபளப்பைப் பார்த்து மாய்ந்து போவார்கள்.பிறந்த குழந்தையின் உள்ளங்கையைப் போல அவ்வளவு மென்மையான கன்னங்கள்.



இன்னும் பிறக்காத ஆண்கள் கூட அவளது உதட்டுச் சிவப்பின் முத்தத்துக்கு ஆசைப் படுவார்கள்.அவளுடைய வெண்கழுத்தில் தொங்கிய ஒரே ஒரு கறுப்பு மணிமாலை,பார்வையைக் கீழே இழுக்க,மார்புகள்.




போதை மருந்துத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட வேண்டிய அவளது மார்புகள்.எந்த சன்யாசியையும் தள்ளாடச் செய்து விடும். மீண்டும் ஒரு வாய் பீர் குடித்தவுடன்தான் நான் இந்த உலகத்து போதைக்கு வந்து நார்மலானேன்.


'உன்னோட பேரு?'என்றேன்.

அவள் என்னை நிமிர்ந்து பார்த்து 'இது ரொம்ப முக்கியமா?'என்பதைப்போல வெறுமனே முறுவலித்தாள்.

அவளது புன்னகை எதனினும் மேலாய் என்னைக் கிளர்ச்சி அடையச் செய்ய,அவளை மோக வெறியுடன் அணைத்துக் கொண்டேன்.அப்போதுதான் அந்த விசித்திரமான உணர்வை நான் முதன் முதலாக அனுபவித்தேன்.


ஒரு கணம் ஆண்மையின் உச்சக் கட்டக் கொந்தளிப்பும்,மறுகணம் உடலுறவின் நிறைவில் வரும் திருப்தியும் என்னை மாறி மாறி ஆட்கொண்டன.அவளை அணைத்தவுடனேயே எனது அடங்காத காமம் தணிந்து,தாயின் மடியில் ஆதரவு தேடித் தலைசாய்க்கும் குழந்தை போல ஆனேன்.மதர்த்த பெண்ணிடம் வரும் தீராத ஆசையும்,பெற்ற தாயிடம் வரும் கனிந்த பாசமும் என்னுள் ஒன்று மாற்றி ஒன்றாய்ப் பிரவிகித்தன.

நானே நெருப்பும் நானே பனியுமாய் உணர்ந்த விந்தை என்னுள் நிகழ்ந்தது.
பல முயற்சிகளுக்குப் பின், அவளைத் தொடத்தான் முடியுமே தவிர துய்க்க முடியாது என்பதைத் தெரிந்து கொண்ட நான் அவளது முகத்தை நிமிர்ந்து பார்த்தேன்.கன்னிகா வெறுமனே புன்னகை செய்தாள்.



இந்த விந்தையான உணர்வைப் பற்றி பின்வந்த நாட்களில் அவள் ஒருநாள் சொன்னதே இது:


'விமான ஓடுதளம்,விமானத்தைத் தரையிலேயே வேறு ஊருக்கு ஓட்டிச் செல்லும் நெடு வழிச் சாலை அல்ல.அது வானத்தில் பறப்பதற்கு.அது போலத்தான் காமமும்.

Sex is a run way to fly into higher dimensions,and not a high way to travel in the same direction forever.

சிறகுகளை வைத்துக் கொண்டு வானில் பறக்காமல், சேற்றிலேயே தத்திக் கொண்டிருக்கும் பறவைகளைப் போல இன்பங்களில் இருந்து மேல் எழும்பாமல் அதிலேயே உழன்று கொண்டிருக்கிறாய்.மேலே மேலே பறக்க,உனக்குக் கற்றுக் கொடுக்கவே நான் வந்திருக்கிறேன். Each occasion is for a take off.


எப்போது உறங்கினேன் என்றே எனக்குத் தெரியாது.நான் விழித்த போது விடிந்து கொண்டிருந்தது. வானம் முழுதும் பிங்க் சூரியனின் குதூகலம்.கன்னிகா ஜன்னலோரமாய் நின்று கீழே பாள்ளத்தாக்கில் தெரிந்த கன்னிகா பரமேஸ்வரி ஆலயத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.பறவைகள் ஆலய உச்சியைச் சுற்றி அவற்றின் மொழியில் அம்மனிடம் ஏதேதோ முறையிட்டுக் கொண்டிருந்தன.


நான் எழுந்து அவள் அருகில் சென்று கன்னிகாவைப் பார்த்த போது அவள் இரவு இருந்த அதே புத்துணர்ச்சியுடனேயே இருந்தாள்.அவள்முகத்தில் இரவின் களைப்பு சிறிதும் தெரியவில்லை.எந்த நேரமும் மலர்ந்து கொண்டே இருக்கும் மலரைப் போல இருந்தது அவளது முகம்.அவளது கரத்தை நான் தொட்டபோது எந்தச் சலனமுமின்றி என்னைப் பார்த்தாள் கன்னிகா.


அதற்குள் கேசவன் கதவைத் தட்டி விட்டு உள்ளே வந்தான்.


'கன்னிகா,வரூ' என்று அவன் கூப்பிட்ட போதுதான் அவளுடைய பெயரே எனக்குத் தெரிந்தது.மவுனமாக அவனைப் பின் தொடர்ந்தாள் கன்னிகா.
கேசவனிடம் பணம் என்று ஜாடையில் நான் கேட்டேன்.வெறுமனே சிரித்து விட்டு அப்புறம் என்று அவனும் ஜாடையிலேயே சொல்லி விட்டுப் போனான்.


ஆலயத்துக்கு அருகிலேயே ஒரு ஓடை ஓடியது.பொன்மீன் தீர்த்தம் என்று அதைச் சொன்னார்கள். படிக்கட்டில் நின்று பாதங்களைத் தண்ணீரில் வைத்தால் போதும்,சில்லென்ற காலில் பட்ட மலைத் தண்ணீர் உச்சந்தலை வரை குளிரும்.அது மட்டுமல்ல,எங்கிருந்தோ வரும் சிறுசிறு பொன்வண்ண மீன்கள் குறுகுறுவென்று உங்கள் கால்களை மேய்ந்து அழுக்குகள் அனைத்தையும் தின்று விடும்.பாதங்களைநீங்கள் வெளியே எடுத்துப் பார்த்தால் பளிங்கு போல் ஆகிவிடும்.அதற்குப் பிறகுதான் நீங்கள் ஆலயத்துக்குள் செல்ல வேண்டும்.ஆலயத்தின் தூய்மையை இதற்கு மேல் பராமரிக்க முடியாது என்று நான் நினைத்துக் கொண்டேன்.


கோவில் நம்பூதிரி என்னிடம் இரவு நிகழ்ச்சியைப் பற்றி எதுவும் கேட்கவில்லை.நானும் சொல்லவில்லை.முன்மாலைப் பொழுது வரையில் எனக்குக் கோவில் வேலைகளே சரியாக இருந்ததால் கன்னிகாவின் நினைவே வரவில்லை.வேலைகளை முடித்துக் கொண்டு அந்திக் கால பூஜையைப் பார்த்த போதுதான் கன்னிகாவின் ஞாபகம் விண்ணென்று தெறித்தது.அதுவும் அம்மன் முகத்தைப் பார்த்தபோதுதான்.


கன்னிகாவின் முகச் சாயலில்தான் அம்மனுடைய முகமே இருப்பதாக எனக்குத் தோன்றியது.நம்பூதிரி ஆரத்தி காட்டிய மஞ்சள் விளக்கொளியில் தெரிந்த அம்மனது முகம்,அதிகாலைச் சூரியனின் மெத்தென்ற வெளிச்சத்தில் ஜன்னலருகே நின்ற கன்னிகாவின் முகத்தை ஃபோட்டோகிராஃபிக் நினைவாக ஞாபகப் படுத்திய பிறகு பாம்பு விஷத்தைப் போல ஒரு மோஹம் தலைக்கேறிச் சுட்டது.
கன்னிகா,கன்னிகா என்று உறும ஆரம்பித்து விட்டன உடலின் அத்தனை ஹார்மோன்களும்.


கோவிலில் பாரதி பாடிய கேரள நன்னாட்டிளம் பெண்கள் நிறையப் பேர் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.ஆனால் ஒரு ஆச்சர்யம்,இந்த மாதிரி காமத் தீ பற்றி எரியும் போது,பார்க்கும் எல்லாப் பெணகள் மீதும் ஒரு ஈர்ப்பு வருமே அது சுத்தமாக அந்த அழகிய இளம் பெண்களைப் பார்க்கும் போது எனக்கு வரவில்லை அவர்கள் எல்லோருமே ஏதோ மனித இனமே இல்லை என்பதைப் போல் ஓர் அந்நியம் உள்ளமெங்கும் உருவாகி இருந்தது.



கன்னிகாவைத் தவிர என்னுடைய தாபத்தைத் தீர்க்கும் பெண் இந்தப் பூமிக் கிரஹத்திலேயே இல்லை என்ற இனம் புரியாத உணர்வு எனக்குள் வேரூன்றி இருந்தது.வெளியே அந்தி மலர்களின் வாசனை என்னை அந்த மலை முகட்டு வீட்டுக்குப் போ போ என்று துரத்தியது.



கேசவன் கடைசியில் வந்தே வந்து விட்டான்.அவனைப் பார்க்க எனக்கு வானுலகில் இருந்து வந்திறங்கிய கந்தர்வன் போலத் தோன்றினான்.'சாரே' என்று சிரித்தவனைக் காருக்கு இழுத்துக் கொண்டு ஓடினேன். அன்று மாலை நம்பூதிரியிடம் கூட நான் விடை பெறவில்லை.


கார் மலைப் பாதையில் திரும்பியதும்,'கேசவா' என்றேன்.அவன் மட்டும் ஏதாவது காரணம் சொல்லி கன்னிகா இன்று கிடைக்க மாட்டாள் என்று சொல்லி விட்டால்?



மனம் பரபரத்தது.'இன்னிக்கு எப்படியாவது நான் கன்னிகாவைப் பார்க்கனும் கேசவன்.அர்ரேஞ்ச் பண்ண முடியுமா?' என்று அவனிடம் கெஞ்சாத குறையாகக் கேட்டேன்.எனது தவிப்பை அவன் உணராமல் பாதையைப் பார்த்தே பதில் சொன்னான்.


'பார்க்கலாம் சாரே'


'கேசவா! ப்ளீஸ்..இன்னிக்கு ஒரே நாள்..'என்ற நான் அவனது கையைப் பற்றிக் கொண்டேன்.



அவன் பேசாமல் மலைப் பாதையையே பார்த்தபடி வந்தான்.வீடு வந்ததும் கன்னிகாவின் நினைவு இன்னும் தீவிரமாகிக் காய்ச்சல் வந்தது போல் ஆனது எனக்கு.

அவனை அங்கிருந்தே கன்னிகாவைக் கூட்டி வரும்படி அனுப்பி விட்டு நான் மட்டும் வீட்டைத் திறந்து கொண்டு உள்ளே சென்றேன்.


உள்ளே கதவைத் திறந்ததும் நேற்று இரவு அவளிடம் இருந்து வீசிய அதே சந்தன மணம்! குப்பென்று வேர்த்தது எனக்கு.நாள் முழுக்க அறைக் கதவுகளைத் திறக்காததால் அவள் வாசனை அப்படியே தேங்கிப் போனதா, இல்லை என் நெஞ்சிலேயே கனன்று கொண்டிருக்கும் அவளது நினைவுகளே சந்தன வாசனையாக வெளியே வருகிறதா என்று எனக்குப் புரியவில்லை.




படுக்கையில் அவள் அமர்ந்திருந்த இடத்தைத் தொட்டுப் பார்த்தபோது எனக்குள் நான் தேம்பும் சப்தம் எனக்கு மட்டும் கேட்டது.என்ன இது?ஒரே இரவு பார்த்த பெண்.அதுவும் நான் தொடக் கூட இல்லாத பெண்.இப்போது என் உயிரின் மையத்தையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறாளே?



என் செல்ஃபோன் ரிங்டோன் மெத்தென்ற வயலின்களாய் என்னைத் தழுவ,நான் ஃபோனை எடுத்தேன்.


திவ்யா.


அவள் பெயரை ஃபோனில் பார்த்ததுமே எனக்கு உற்சாகமாக இருந்தது.

'திவ்யா ! '



நானும்,திவ்யாவும் இரண்டு வருடங்களாகப் பழகுகிறோம். அவள் பார்ப்பதற்கு கஜினி அசின் போல இருப்பாள்.மும்பைப் பெண்.ஆர்கிடெக்ட்.மும்பையிலும்,டில்லியிலும் அவள் டிசைன் செய்த கட்டிடங்கள் கட்டிடக்கலை வல்லுநர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றவை.நானே அவளது கட்டிடங்களின் விசிறி.மாதம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் இன்றைய தலைமுறை இளஞி.


முதன் முதலில் அசினை,மன்னிக்கவும் திவ்யாவை நான் சந்தித்ததே பெங்களூரில் ஒரு புத்தக சாலையில். இருவரும் ஐயன் ரேன்ட் எழுதிய 'ஊற்றுக்கண்' (ஃபௌன்டன்ஹெட்,மொழிபெயர்ப்பு சரியா என்று பார்த்துக் கொள்ளுங்கள்)புத்தகத்தை வாங்குவதற்காக அங்கே சென்றிருந்தோம். அந்தப் புத்தகத்தைத் தேடும் போதுதான் அது ஒரே பிரதி மட்டும் இருக்கிறது எனத் தெரிந்தது.
சமயங்களில் வாழ்க்கையை விடப் பெரிய திரைக்கதை ஆசிரியர் யாருமே இருக்க முடியாது என்பதற்கு இந்த மாதிரி இனிமையான சம்பவங்களே உதாரணம்.அதுவும் காதல்களை உருவாக்குவதில் அதனுடைய கற்பனை வளத்துக்கு எல்லையே இல்லை.

ஊற்றுக்கண் புத்தகப் பிரதி முதலில் என் கையில்தான் கிடைத்தது.அப்போதுதான் திவ்யா என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.


'ஹலோ' என்றாள் என்னைப் பார்த்து.



நான் திரும்பி அவளைப் பார்த்தவுடன் எனக்கு மனதில் முதலில் தோன்றிய இமேஜ் எனது பூஜாடியில் நான் வைத்திருக்கும் ஒரு ஒற்றை ரோஜா மொட்டுத்தான்.இதழ் பிரிந்தும் பிரியாமலும் இருக்கும் பனித் துளிகளுடன் கூடிய ரோஜா மொட்டு.முழுதாக மலர்த்தி உலகத்துக்கு இதைப் பரிசளிக்கலாமா,வேண்டாமா என்று வைகறை இயற்கை இன்னும் தயக்கத்துடனேயே யோசித்துக் கொண்டிருக்கும் அழகிய ரோஜா மொட்டு.திவ்யாவும் அதே போல் இருந்தாள்.


'ஹலோ' என்றேன் நானும், அழகிய பெண்களைக் கண்டால் மனது ஜீரணம் பண்ணி முடிக்கும் யுகங்களின் இடைவெளிக்குப் பிறகு.


'நானும் இதே புத்தகத்தைதான் வாங்க வந்தேன்'என்றாள் திவ்யா.அவளது குரலுக்கு அமிர்தவர்ஷினி என்ற ராகத்தின் பெயரையே வைக்கலாம் என்று தோன்றியது எனக்கு.


'வாங்குங்களேன்' என்றேன் புரியாமல்.


'அன்ஃபார்ச்சுனேட்லி, ஒரே காபிதான் இருக்குன்னு சொல்றாங்க கடையிலே'


'ஓ' என்றேன் விஷயம் புரிந்து.


'சரி.நீங்களே இதை வாங்கிக் கொள்ளுங்கள்' என்று புத்தகத்தை அவளிடம் நீட்டினேன். புத்தகத்தை வாங்கும் முன் என்னை ஒரு குட்டிப் பாராட்டுடன் பார்த்தாள் திவ்யா.


'அப்போ உங்களுக்கு?'


'நான் வேறெங்காவது கிடைச்சா வாங்கிக்கிறேன்.பரவாயில்லே.வெச்சுக்குங்க 'என்றதும் புத்தகத்தை வாங்கிக் கொண்டு 'தேங்க்ஸ்' என்றாள் திவ்யா.



தொடங்குவதற்குப் பெரிய இமாலய தியாகங்களை எல்லாம் கேட்காத ஒரே உணர்வு காதல்தான்.மூச்சுக் காற்றுப் பட்டாலே பற்றிக் கொள்ளும் அந்த சிகப்பு ஃபாஸ்பரஸ் எங்களுக்குள்ளும் பற்றிக் கொண்டது எங்களுக்கே பின்னாளில்தான் தெரிந்தது.



பில் கௌண்டர் வரை பேசிக் கொண்டே போனதில் இருவரது பெயர், தொழில்களை எல்லாம் பரிமாறிக் கொண்டோம்.திவ்யாவைப் போலவே, ஊற்றுக்கண் நாவலில் வரும் கதாநாயகனும் ஒரு ஆர்க்கிடெக்ட். கட்டிடக் கலை வல்லுனர்களுக்கு அந்த நாவல் ஒரு பைபிளைப் போல.அதனால்தான் திவ்யா அந்த நாவலை அவ்வளவு ஆர்வமாகத் தேடி வந்ததாகக் கூறினாள்.


'ஆல் த பெஸ்ட்' என்று கூறி விடை பெற்றோம்.


அன்று முன்னிரவில் நான் தங்கி இருந்த ஐந்து நட்சத்திர ஹோட்டலின் பார் கம் ரெஸ்டாரெண்டில் நான் பீர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, அங்கே திவ்யாவைப் பார்த்தவுடன் எனக்குப் புரை ஏறியது.அவளும் என்னை அங்கே எதிர்பார்க்கவில்லை.
'ஹாய்' என்று உண்மையிலேயே மகிழ்ச்சியுடன் என்னை நோக்கி வந்தாள்.


'வாட் எ ப்ளசன்ட் சர்ப்ரைஸ்!'


'யெஸ்.சம் டைம்ஸ்,கனவுகள் பலிக்கின்றன !' என்றேன் பீர் தந்த கவிதையில்.



சிரித்தபடி திவ்யா என் எதிரிலேயே அமர்ந்தாள்
.பிறகுதான் வாழ்க்கை என்ற அந்தப் பொல்லாத திரைக்கதை ஆசிரியன் எழுதிய அடுத்த திருப்பம் எங்களுக்குத் தெரிந்தது.அவளும் அதே ஹோட்டலில்தான் தங்கி இருந்தாள்.எனது அறை கீழ்த் தளம் என்றால் அவள் அதற்கு நேரே மேல் தளத்தில் இருந்தாள்.இன்னும் அவளது கையில் ஊற்றுக்கண் புத்தகம் இருந்தது.


'இதை விடவே மாட்டீர்கள் போலிருக்கிறது' என்றேன் நான்.


'என்ன அருமையான புத்தகம்.உங்களுக்குத்தான் நன்றி'என்றவள் புத்தகத்தை ஆசையாக அணைத்துக் கொண்டாள்.அது என்னையே அணைத்துக் கொண்டாபோல் இருந்தது.புத்தகத்தை நானும் வாங்கிப் புரட்டினேன்.


'ஃபேஸினேஷன்?' என்று நான் கேட்டதற்கு.


'யெஸ்,யெஸ் ரியல்லி ஐ யாம் ஃபேஸினேட்டெட் வித் திஸ் புக்'என்றாள்.


'நான் கேட்டது,நீங்க யுஸ் பண்ற பெர்ஃப்யூமை!' என்றதும் வாய் விட்டுச் சிரித்தாள் திவ்யா.அவளது பல்வரிசையைப் பார்த்ததும் பாரதி சொன்னதுதான் ஞாபகத்திற்கு வந்தது..

'தின்பதற்கு மட்டுமல்லாமல்,தின்னப் படுவதற்குமான பற்கள்'


இருவரும் உணவு ஆர்டர் செய்தோம்.அவள் சுத்தமான சைவம்.பிறகு அந்த நாவலின் கதையைச் சொன்னாள். மிக மிக உணர்வு மயமாக அவள் அந்தக் கதையைச் சொன்ன நேர்த்தியில் அவளது அழகையும் மீறி அவளது அறிவிலும் மயங்கிப் போனேன்.பதினைந்து நாட்கள் நாங்கள் இருவருமே அவரவர் ப்ராஜெக்ட் விஷயமாக பெங்களூரில் இருந்தோம்.
எங்கள் காதலின் ஊற்றுக்கண் முற்றிலுமாய்த் திறந்து கொண்ட அந்தப் பதினைந்து நாட்கள்தான் எவ்வளவு இனிமையான காலம்.


கோர்ட்டில் மதிய இடைவேளை வர, நீதிமன்றப் பணியாளர் முத்துசாமி அரவிந்தனின் வாக்குமூலத்தைப் படிப்பதை நிறுத்தினார்.இடைவேளைக்குப் பிறகு அடுத்த வாய்தாவை அறிவிப்பதாகக் கூறி நீதிபதி வகுளாபரணன் எழுந்தார்.

சாப்பிட்டு முடித்து ஓய்வில் இருந்த வகுளாபரணனைக் காண நீதிமன்றப் பணியாளர்களும், பார்வையாளர்களும் என ஒரு கூட்டமே அனுமதி வாங்கிக் கொண்டு வந்த போது அவருக்கு ஏன் என்று புரியவில்லை.

அவர்கள் அரவிந்தனின் வாய்தாவைத் தள்ளிப் போடாமல் சீக்கிரமே வைக்கும்படி விண்ணப்பித்த போது அவர் சிரித்தார்.


'கதை அவ்வளவு சுவாரஸ்யமா இருக்கா?' என்று அவர் கேட்டார்.

'இல்லே சார். அந்தக் கன்னிகாவை அடுத்த தடவையாவது நேர்லே பார்க்கனும் சார்!' என்றார்கள் ஒரு சேர.

(கன்னிகா வருவாளா ?)

வெள்ளி, மார்ச் 20, 2009

திறனாய்வுகளைப் பற்றி ஒரு திறனாய்வு

கலைகளை விமர்சனம் பண்ணுவதே ஒரு தனிக் கலை.ஆனால் மற்ற மூலக் கலைகளுக்கும்,விமர்சனக் கலைக்கும் ஒரே ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது.

எடுத்துக் காட்டாக,வீணை வாசிக்கும் கலையில் ஒருவன் கைதேர்ந்த கலைஞனாக வேண்டுமென்றால் அதற்கென்று குறைந்த பட்சம் மூன்று,நான்கு வருடங்களாவது பயிற்சி,இடைவிடாத ஈடுபாடு,மற்ற அனைத்து சுகங்களையும் தியாகம் செய்து வீணை ஒன்றே வாழ்க்கை என்ற தியானம்,இத்தனையும் தாண்டி இனம்புரியாத ஏதோ ஒன்றின் அனுகிரகம் இதெல்லாம் கைகூட வேண்டும். ஆனால் இதே இந்த வீணைக் கலைஞனின் இசையை விமர்சிக்க வேண்டுமெனில், உங்களுக்கு மேற்சொன்ன எந்த வலியும்,வேதனையும் வேண்டாம்.சுமாராகக் கேட்கும் காதுகள் மட்டும் உங்களுக்கு இருக்கின்றன என்று மற்றவர்கள் நம்பினால் போதும்.நீங்கள் அவனது இசையைப் பற்றிக் கிழித்து நார்நாராக்கும் அல்லது எதுவும் புரியாமல் பாராட்டும் உரிமை பெற்றவர்கள் ஆவீர்கள்.

நாற்பதுவருடங்களாக இசையையே தவமாகப் போற்றும் இளையராஜவின்,ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலகளைப் பாதி கேட்ட மறுகணமே வயலினையே பார்த்திராத எனது நண்பன் ஆறுச்சாமி குப்பை என்றோ சூப்பர் என்றோ மூன்றாவது பெக்கிலேயே ஐ.எஸ்.ஓ முத்திரை குத்தி விடுகிறான்.என்ன கொடுமை சார் இது?

டாகடர் பட்டம் பெறுவதற்கு நீங்கள் பெரிய செல்வாக்குப் பெற்ற அரசியல் தலவராகவோ,பிரமுகராகவோ இருக்க வேண்டாம்.விமர்சகரானால் போதும் ,அந்தத் துறையில் நீங்கள் டாகடர்தான்.நீங்களே உங்களுக்குப் பி.ஹெச்.டி பட்டம் கொடுத்துக் கொள்ளக் கூடிய ஒரே துறை விமர்சனத் துறைதான்.இப்போது நான் கூடப் பி.ஹெச்.டி தான்.

சரி,புதிதாக எது வெளி வந்தாலும் விமர்சனங்கள் வருகின்றனவா?புதிதாக வந்திருக்கும்குழந்தைகள்பால்பௌடர்,பிஸ்கட்கள்,புதியஎல்.ஐ.சி.திட்டங்கள்,கொலஸ்ட்ராலைக் குறைக்கும்மாத்திரைகள்,புதியபி.பி.மெஷின்,இதயநோய்ச்சிகிச்சைகள்,கார்கள்,பைக்குகள்,புதிய வகை சமையல் குறிப்புக்கள்,அழகு சாதனங்கள் உயரிய புத்தகங்கள்,நாவல்கள்,இப்படி எத்தனை விஷயங்கள் தினமும் வெளியே வருகின்றன,ஆனால் அவற்றைப் பற்றி விமர்சனங்கள் வருகின்றனவா?கிடையாது.ஆனால் ஒரு புதிய திரைப் படம் ரிலீசானால் மட்டும் வருகின்றன பாருங்கள் விமர்சனங்கள்,டிஸ்கவரி சேனலில் ஒரு தனி மான் தென்பட்டால் கூட்டமாகத் துரத்தித் துரத்தி வேட்டையாடி அந்த மானை ரத்தம் வரக் கடித்துக் குதறி தின்று தீர்த்துக் களைப்பாறும் சிறுத்தைகளைப் போல அந்தப் படத்தைப் புகழ்ந்தும் இகழ்ந்தும்... பத்திரகைகளுக்கும்,இணையங்களுக்கும்,தொலைக் காட்சி ஊடகங்களுக்கும் இரண்டு மூன்று வாரங்களுக்கு எங்கு பார்த்தாலும் இந்த விமர்சன மேனியாதான்.

விமர்சனங்கள் வருவதற்குள் ஓடிப் போய்ப் படத்தைப் பார்த்தால் தப்பித்தோம்.இல்லாவிட்டால் இத்தனாயிரம் திறனாய்வுச் சுமைகளும் நம் மண்டையில் ஏறிச்,சுயமாக நாம் அந்தப் படத்தைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதே மறந்து,மறைந்து போய் விடுகிறது.ஒரே இரண்டு மணி நேரப்படத்துக்கு இரண்டாயிர மணிநேரத்துக்கு 200,300 கோணங்களில் படத்தின் கதையையும் இதர டெக்னிகல் அம்சங்களையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடும் விமர்சனங்கள்.

நாம் அதற்குப் பின்னால் படம் பார்க்கப் போகும் போது,ஏற்கனவே நிர்வாணமாகப் பார்த்து விட்ட பெண்ணை, முறைப்படிப் பெண் பார்க்கச் செல்பவனைப் போல் ஆகிறோம்
ஏன் திரைப்படங்களுக்கு மட்டும் இந்தத் தனி மரியாதை?அல்லது அவமரியாதை?வாழ்க்கையையே திருப்பிப் போடும் அளவுக்கு அவ்வளவு முக்கியமான அம்சமா என்ன அது?இல்லை.எல்லாருக்கும் தெரிந்த,புரிந்த எல்லாரையும் கவர்ந்தது சினிமா என்பதனால் தான் அதன் மீது மட்டும் இந்தப் பாய்ச்சல்.

திரைப் படங்களைப் பார்க்கிறார்களோ இல்லையோ ,அவற்றைத் திறனாய்வு செய்வதன் மூலம் நம்மைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற தனி மனித அடையாளங்களைத் தேடித் தீர்த்தாக வேண்டிய நவீன சமூகத்தின் ஏக்கம் இது. கிராமத்தில் இருந்தால் நீங்கள் யாரென்று எல்லோருக்கும் உங்கள் அடையாளம் தெரியும்.நகரத்தின் மனிதக்கடலில் மூழ்கிக் கிடக்கும் நாம் தலையைத் தூக்கித் தூக்கி 'நானும் இருக்கிறேன் ,நானும் இருக்கிறேன் 'என்று கூப்பாடு போட இத்தனை சாடிலைட்டுக்கள் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறது.

சரி,இனித் திரைப் பட விமர்சனங்களைப் பற்றி...

ஷேக்ஸ்பியர் இறந்து இருநூறு ஆண்டுகள் கழித்து அவரது நாடகங்களைப் பற்றி ஏ.சி. பிராட்லி என்னும் பேராசிரியர் திறனாய்வு செய்தார். ஏ.சி பிராட்லியைப் படித்து விட்டுத்தான் ஷேக்ஸ்பியரையே படிக்க வேண்டுமெனச் சொல்லுமளவுக்கு மிகவும் பிரபலமான விமர்சனங்கள் அவை.அவரைப் பற்றி கிண்டலாகப் பின்னாளில் ஒருவர் சொன்னதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது
'பேசாமல் ஷேக்ஸ்பியர் ஏ.சி. பிராட்லியைப் படித்து விட்டுத் தனது நாடகங்களை எழுதி இருக்கலாம்.இருநூறு வருடங்கள் முன்னால் பிறந்து தொலைத்து அந்த வாய்ப்பை இழந்து விட்டார்.'
எனக்கும் அது நல்ல யோசனையாகத் தோன்றுகிறது.பேசாமல் நமது புது இயக்குநர்கள் முதலில் தங்கள் கதைகளை இந்தத் திறனாய்வாளர்களிடம் ஒப்படைத்து விட்டு அவர்களது விமர்சனங்களைப் படித்த பின்னர் படங்களை எடுத்தால் ,படம் ரிலீசான பிறகு இந்த விமர்சன மழையில் நனையாமல் குடை பிடித்துக் கொண்டே போய்ப் படம் பார்க்கும் அவதியிலிருந்து மீளலாம்.
பெரும்பாலான விமர்சனங்களில் தென்படும் வார்த்தை 'லாஜிகல் ஓட்டைகள்'
இதற்கும் நான் ஷேக்ஸ்பியரையே வம்புக்கு இழுக்க வேண்டி இருக்கிறது. பாவம் அவர், காலை நேரத்தில் என்னிடம் மாட்டிக் கொண்ட அவரது ஆத்மா சாந்தி அடைவதாக.
அவர் லாஜிகலாகவே பல நாடகங்கள் எழுதிச் சலித்துப் போய் 'ஏஸ் யு லைக் இட்' என்று ஜாலிக்கு ஒரு டிராமா எழுதினார்.எந்த சீரியஸ்னசும் இல்லாத ஏழை பணக்கரக் காதல் கதை அது .தர்க்கங்களை எல்லாம் இளைப்பாற விட்டு விட்டு அவர் ஹாயாக எழுதிய நாடகம் அது. வெறும் லாஜிகல் ஓட்டை மட்டும் அல்ல ,லாஜிகல் பள்ளத்தாக்குகளே அந்த நாடகத்தில் இருக்கும்.அதிர்ச்சி என்னவென்றால் அந்த நாடகமும் பெரிய ஹிட்டானதுதான்.'மேரா நாம் ஜோக்கர்' தோல்விக்குப் பிறகு ராஜ்கபூர் கோபத்தில் 'பாபி' எடுக்க அது ஹிட்டானதைப் போல.

இங்கு நமக்குத் தேவை எப்படி அந்த நாடகமும் ஹிட்டானது என்பதற்கு வில்லியம் ஹேஸ்லிட் என்ற புகழ் பெற்ற விமர்சகர் சொன்ன வாசகங்கள்தான்.கேளிக்கைக்காக நாடகமோ படமோ பார்க்க வரும் ஜனங்களுக்கு முக்கியமான ஒரு குணாதிசயம் இருப்பதாகச் சொன்னார் அவர்.அதுதான்-
'WILLING SUSPENSION OF DISBELEIF'

'நம்பிக்கையின்மையை நாமே விரும்பிக் கொஞ்ச நேரம் விலக்கி வைப்பது.' உலகம் பூராவும் தியேட்டர்களில் படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதற்கு ஜனங்களின் இந்த உளவியல் அம்சமே காரணம்.
வில்லன் பதினாலாவது ரீலில் செத்தால் போதும் என்று நாம்தான் படத்தின் இயக்குநருக்கும்,கதாசிரியருக்கும் லைசன்ஸ் கொடுத்து விட்டு உட்காருகிறோம்,நமது நம்பிக்கை இன்மைகளை தள்ளி வைத்துவிட்டு.
தேவை இல்லாத இடங்களில் இஷ்டப் படி விஜய்யும்,அஜீத்தும்,விக்ரமும்,சூர்யாவும் திரிஷாவுடனும்,அசினுடனும் குத்துப் பாட்டுப் பாட நாம்தான் நம் லாஜிக்கை விரும்பி விட்டுக் கொடுக்கிறோம்.
இப்படி எல்லாம் நடக்காது என்று விமர்சகர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தெரியும்.தெரிந்தே அனுமதிக்கும் விளையாட்டு அது.
ஏன் ?
வாழ்க்கையில் நாம் பார்க்கும் லாஜிக் ஓட்டைகளைக் கண்டு உள்ளே கனலும் வெறுப்பும் கோபமும் திரைப் படங்களிலும் அவற்றை அங்கீகரிக்கச் சொல்லுகிறது..

எனக்குச் சமமாக மதிப்பெண்களை எடுத்த எனது வகுப்புத் தோழன் அமெரிக்காவில் டாலர்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் போது நான் மட்டும் ஒரு அரசுத் துறையில் மக்கிப் போன ஃபைல்களுக்கு மத்தியில் மக்கிக் கொண்டிருப்பது என்ன லாஜிக்?

அழகான எனக்குத் திருமணம் நடக்காமல்,அழகுக்குச் சம்பந்தமே இல்லாத என் தோழிக்கு அவள் விரும்பிய ஆடவனே கணவனாகக் கிடைத்திருப்பது என்ன லாஜிக்?

எங்கள் ஊர்க் கல்யாண முருகன் கோவிலில் அவருக்கு மாலை வாங்கிப் போடவே வழி இல்லாத போது ,பழனிமலைக் கோவணான்டி முருகனுக்கு மட்டும் வைரக் கிரீடங்களும்,தங்கத் தேர் பவனியும் என்ன லாஜிக்?

பொதுவாக உற்சாகத்தோடு இருக்கும் போது நமக்கு லாஜிக் தேவைப் படுவதில்லை.நான் விரும்பிய பெண் என்னைப் பார்த்துக் கடைசி கடைசியாகப் புன்னகைத்தே விட்டால் 12பி பஸ்ஸின் நெரிசலும் கூட எனக்கு சுகமே.நான் கோபமாகப் போய்க் கொண்டிருக்கும் போது என் காரின் ஏ.சி.சத்தம் கூட எனக்கு இரைச்சலே.
பார்ப்பவனின் உற்சாகத்தையும்,கோபத்தையும் பொறுத்து படத்தின் லாஜிக் ஓட்டைகள் பெரிதாகவும் சின்னதாகவும் ஆகின்றன. ஒரே படம் ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவத்தைத் தருமாதலால் அடுத்தவர் விமர்சனத்தைச் சுமந்து கொண்டு படம் பார்க்கச் செல்லாதீர்கள்.

சரி, இந்த விமர்சனங்களால் படவருவாய் பாதிக்கப் படுகிறதா?
சத்தியமாக இல்லை.படம் விட்டு வெளியே வரும் பெரும் பாலான ரசிகர்களின் ஒற்றைச் சொல் மதிப்பீடுகள்தான் படத்தின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கின்றன.'பரவாயில்லே சார்' ,'குப்பை சார்' சூப்பர் சார்' என்று கூறிவிட்டு அவர்கள் பஸ்ஸையும் ஆட்டோவையும் பிடிக்க ஓடி விடுகிறார்கள்.விலாவாரியாக டைட்டிலில் இருந்து தொடங்கி அவர்கள் மூச்சு முட்டப் படங்களை விமர்சிப்பதில்லை. விநியோகஸ்தர்கள் அவர்கள் வாக்கைத்தான் தேவ வாக்காகக் கருதுகிறார்கள்.

புது இயக்குனர்களின் படங்களை விமர்சிக்கும் போது மட்டும் இப்படிச் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பாராட்டுக்களைப் பக்கங்களாகவும்,வசவுகளை வரிகளாகவும் ...

ஆம் உண்மையாகத்தான் கேட்கிறேன்.
ஒருவரை பாராட்டும் போது கிடைக்கும் மன நிறைவும்,நெகிழ்வும் வையும் போது கிடைக்கிறதா என்ன?

செவ்வாய், மார்ச் 17, 2009

யாவரும் நலம்

நான் ரசித்துப் பார்த்த படம்.இதற்கு மேல் எழுதினால் படம் இன்னும் பார்க்காத மற்ற ரசிகர்களின் ரசனையைப் பாதித்தவனாவேன்.
படத்தில் பங்காற்றிய அனைத்துக் கலைநர்கலுக்கும் எனது பாராட்டுக்கள்.
குறிப்பாக இயக்குனருக்கு எனது மனமுவந்த மரியாதைகள்.

புதன், மார்ச் 11, 2009

கன்னிகா பாகம் இரண்டு (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்)

முன் எச்சரிக்கை: நீங்கள் ஒரு முழுமையான பெண்ணைத் தரிசித்திருக்கிறீர்களா?அது ஒரு அபூர்வமான அனுபவம்.இதுவரை நீங்கள் வாழ்க்கையில் கொண்டிருக்கும் அத்தனை கருத்துக்களையும்,எண்ணங்களையும் வேரோடு பிடுங்கி எறிந்து விட்டு உங்களை உணர்வு பூர்வமான வேறொரு தளத்தில் ஊன்றிவிடும் அந்த அனுபவம்.அந்த அனுபவத்துக்குத் தயாராகுங்கள். இனிக் கதை...
3.
மூன்று முறை நீதிமன்றத்திலிருந்து நோட்டீஸ் போயும் கன்னிகா நீதிமன்றத்துக்கு வரவில்லை.எனவே வகுளாபரணன் அந்த விவாகரத்து வழக்கில் அரவிந்தன் தன்னுடைய நிலைப்பாட்டை அவள் இன்றியே எடுத்துரைக்கலாம் என்று அனுமதி அளித்தார். அப்போதுதான் நீதிபதி முன் அரவிந்தன் இந்த விண்ணப்பத்தை வைத்தான்.

'அய்யா, சாதாரணமா எல்லோருடைய வாழ்க்கையிலும் நடக்கற மாதிரி, சம்பவங்கள் என்னுடைய வாழ்க்கையில் நடக்கலே.. ஒரு ஆணா எனக்கு வெளியே எவ்வளவு புதுசு புதுசா நிகழ்ச்சிகள் நடந்துச்சோ, அதே அளவு என் மனசுக்குள்ளியும் நடந்திருக்கு...I am affected in all the dimensions of a man_physical,mental and spiritual.அதையெல்லாம் உங்களுக்குப் புரியற மாதிரி சொல்லணும்ன்னா, நான் சாதாரணமாப் பேசற என்னொட பேச்சு மொழி பத்தாது.. அதனாலே..'
'அதனாலே?'
அவன் தான் கொண்டு வந்திருந்த ஒரு ஃபைலை நீதிபதியிடம் காட்டினான்.
'பலநாளா உக்கார்ந்து எனக்கு நடந்ததையெல்லாம் இந்தப் பேப்பர்ஸ்லே தெளிவா எழுதியிருக்கேன் அய்யா..கோர்ட்லே யாரையாவது சத்தமாப் படிக்கச் சொல்லி நீங்க கேட்டீங்கன்னாத்தான் என்னோட கேஸைப் புரிஞ்சுக்க முடியும்..'

வகுள் சற்றே யோசித்தார்.பிறகு நீதி மன்றத் தட்டச்சு எழுத்தராக இருக்கும் முத்துசாமியை 'நீங்கள் படிக்க முடியுமா?' என்று கேட்டார்.
'சரிங்கய்யா' என்ற முத்துசாமி,வகுள் தலையாட்டி உத்திரவு கொடுத்ததும் அரவிந்தனிடம் ஃபைலை வாங்கிக் கொண்டு போய், வகுளிடம் அதை முறைப் படி காண்பித்தார்.
இது போன்ற வழக்குகளில் இல்லாதபடிக்கு, முதன் முறையாக,ஒருவன் வாய் மொழியாகச் சொல்ல முடியாத அளவுக்கு அவனுக்கு என்னதான் நடந்திருக்க முடியும் என்று நீதி மன்றமே ஆவலுடன் காத்திருக்க முத்துசாமி தொண்டையைச் செருமி விட்டுப் படிக்க ஆரம்பித்தார்.
கன்னிகா.
'என் வாழ்க்கையில் நான் சந்தித்த யாரையும் விட என்னைப் பிரம்மிக்கச் செய்தவள்,இந்தக் கணம் வரை எனது மனைவியாக இருக்கும் கன்னிகாதான்.அவள் மேல் எனக்கிருக்கும் மனப்பூர்வமான மரியாதையுடனும்,அபரிமிதமான காதலுடனும்,ஆழ்ந்த நேசத்துடனும் இந்த விவாகரத்துக்கான கோரிக்கை மனுவை அவளது பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.'என்று தொடங்கியது அரவிந்தனின் வாக்குமூலம்.
அதனைப் படிக்க ஆரம்பித்த முத்துசாமி மட்டுமல்ல,நீதிமன்றமே அரவிந்தனைப் புதிராகப் பார்த்தது.அவன் நிச்சலனமாக நின்றிருந்தான்.
மூலாதாரம்.
'யோக சாஸ்திரத்தில் மனிதப் பிறவியை ஏழு சக்ரங்களாகப் பிரிக்கிறார்கள் என்று படித்திருக்கிறேன்.நான் புரிந்து கொண்ட அளவில்,மனிதனின் உயிர் மையம் ஏழு நிலைகளில் நின்று செயல் புரிகிறது.மூலாதாரம் ,ஸ்வாதிஷ்டானம்,மணிபூரகம்,அனாஹதம், விசுத்தி,ஆக்ஞை,சஹஸ்ராரம் என்பவையே அவை.ஒவ்வொரு சக்ரத்துக்கும் தனித்தனியே பண்புகள்,ஆற்றல்கள் உண்டு என்பதை அந்த ஞானிகள் உணர்ந்து பகுத்துக் கூறியிருக்கின்றனர். மனிதனின் உயிர் மையம் (அவர்களது மொழியில் குண்டலினி சக்தி) எந்தச் சக்ரத்தில் நின்று செயல் புரிகிறதோ அதற்கேற்றாற் போல்தான் அவனது குண நலன்கள்,வேட்கைகள்,ஆற்றல்கள் வெளிப்படும் என்பதே அவர்கள் கண்ட முடிவு.
முதல் சக்ரமான மூலாதாரம் தான் உயிர் வாழ்வதற்கும் ,தன் இனம் அழியாமல் தழைத்திருப்பதற்குமான அடிப்படைத் தேவைகளான உணவு,காமம் என்ற முக்கியமான விஷயங்களைக் குறிக்கும்.உயிர் மையம் அங்கே நின்று செயல் புரியும் போது அந்த மனிதனின் மனம் முழுதும் அந்த அடிப்படைத் தேவைகளைச் சுற்றியே உழலும்.பின் ஒவ்வொரு சக்ரமாக உயிர் மையம் மேலேறுகையில் வாழ்க்கையின் வெவ்வேறு பரிமாணங்களைத் தொடுகிறான் மனிதன்.
வெறும் புத்தகங்களில் மட்டுமே படித்து விட்டு நான் நம்பியும் நம்பாமல் இருந்த இந்தத் தகவல்களை, உண்மைதான் என்று அனுபவ ரீதியாக எனக்கு உணர்த்தியவள் கன்னிகாதான்.
கன்னிகா என்னை ஆட்கொண்டு இதுவரை ஏழு மாதங்கள் ஆகின்றன.அவள் முதன் முதலாக எனது மூலாதாரத்தில்தான் பிரவேசித்தாள்.
இந்த ஏழு மாதங்களில் என்னுடைய ஏழு சக்ரங்களிலும் ஊடுருவி என்னுடைய வாழ்க்கையின் பரிமாணங்களையே முற்றிலுமாய் அவள் மாற்றியமைத்த, அந்த விந்தையான அனுபவங்களை இனி உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
'என் வயது 27. ஐதராபாத்தில் இருக்கும் கிரானைட் கற்கள் தயாரித்து விற்கும் ஒரு பெரிய நிறுவனம் ஒன்றின், சென்னைக் கிளையில் விற்பனைப் பொறியாளனாகப் பணி புரிகிறேன். பெரிய,பெரிய நட்சத்திர ஹோட்டல்கள்,பணக்காரர்களின் ஆடம்பரப் பங்களாக்கள்,உயரிய அரசு அலுவலகங்கள், வாழும் போது மறந்துவிட்டுச் செத்த பின்பு நாம் கொண்டாடும் உயரிய மனிதர்களின் மணி மண்டபங்கள்,கோவில்கள் எல்லாவற்றுக்கும் அந்த விலை உயர்ந்த அந்தக் கிரானைட் கற்கள் ஒரு கம்பீரத்தையும்,மரியாதையையும் வழங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் பல இடங்களில் பார்த்திருக்கலாம்.
அது போன்ற கட்டிடங்கள் கட்டப் படும் இடங்களுக்கே நான் சென்று எங்கள் கிரானைட் கற்களை எப்படிப் பதிப்பது,பளபளப்பாக்குவது,பராமரிப்பது போன்ற தொழில் நுட்பங்களைக் கற்றுக் கொடுத்து, ஆலோசனைகள் வழங்கி விட்டு வாடிக்கையாளர்களைத் திருப்திப் படுத்தி, எங்கள் நிறுவனத்துக்குச் சேர வேண்டிய பில் தொகையை வசூல் செய்து கொண்டு வருவதே என் வேலை.இந்த மூன்று வருடங்களில் இந்தியா முழுதும் தொழில் நிமித்தம் பல ஊர்களுக்குச் சென்று வந்திருக்கிறேன்.
வசதியான சம்பளம்,இன்னும் பீரைத் தாண்டிப் போகாத மிதமான குடிப் பழக்கம்,நட்புடன் பழகிப் பின் இயல்பாக செக்ஸுக்கு இணங்கும் அழகிய இளம் பெண்களுடன் அவ்வப்போது கவித்துவமான பாலின்பம்,தேர்ந்தெடுத்த தரமான இன்னிசை,மனதைப் பாதிக்கும் புத்தகங்கள் என்ற இன்றைய நவீன இளைஞனின் அத்தனை அனுபவங்களும் எனக்குமுண்டு.
மதுரையில் ஒரு வாடிக்கையாளரைப் பார்த்து விட்டுச் சென்னை திரும்பும் நேரத்தில் ஐதராபாத்தில் இருந்து என் மடிக் கணிணியில் ஒரு மின்கடிதம் வந்தது.குற்றாலம், செங்கோட்டை தாண்டிக் கொல்லம் செல்லும் வழியில் கேரள மாநிலத்தில் இருக்கும் இன்னொரு வடிக்கையாளரையும் பார்த்து, ஏதாவது பணி இருந்தால் முடித்து விட்டு, அங்கு வர வேண்டிய ஏழு லடசம் ரூபாயை நான் வாங்கி வர வேண்டும் என ஜி.எம்.அதில் கூறியிருந்தார். மதுரையில் ஓட்டல் அறையைக் காலி செய்து விட்டு எனது வெள்ளை நிறக் க்வாலிஸ் காரில் அன்று காலை பத்து மணிவாக்கில் குற்றாலம் கிளம்பினேன்.
பகல் ஒரு மணிக்கெல்லாம் குற்றாலம் சென்றுவிட்ட நான் மெயின் அருவியில் குளிரக் குளிர நீராடினேன். தண்ணீரை நான் மிகவும் நேசிப்பது குற்றாலத்தில்தான்.உடம்புக்குள் மட்டுமல்லாமல் மனதுக்குள்ளும் புகுந்து உற்சாகம் பரப்பும் ஆற்றல் அந்தக் குற்றாலத் தண்ணீருக்கே இருக்கிறது என அடிக்கடி நினைப்பேன்.
உடலுடம் மனதும் குளிர செங்கோட்டை செல்லும் பாதையில் வண்டியைத் திருப்பினேன்.எனது காரில் எப்போதும் ஒரு நூறு சி டி.களுக்கும் மேலே நான் வைத்திருப்பேன்.யானி,என்யா,எனிக்மா,ஏ.ஆர்.ரஹ்மான்,ரிச்சர்ட் க்ளேடர்மேன்,பால் மாரி(யட்),கென்னி.ஜி,ஹார்ரிஸ் ஜெயராஜ், சாம்ஃபிர் ,விச்வநாதன்-ராமமூர்த்தி,செலின் டியான்,புத்தா பார் இப்படி ஏராளமான இசைக் கலெக்ஷன் என்னிடம் எப்போதும் இருக்கும்.
தனிமையான நெடுந்தொலைவுக் கார்ப் பயணங்களுக்கு நல்ல இசையை விட வேறு நல்ல கம்பனி கிடையாது என்பது எனது தீர்க்கமான எண்ணம்.
செங்கோட்டை தாண்டி மலைப் பாதையில் கொல்லம் செல்ல வேண்டும்.மலைப் பாதையில் சிறிது தொலைவு சென்றதும் மீண்டும் மலை மேல் சம தளம் ஆரம்பிக்கும்.
கேரளா செக் போஸ்ட் தாண்டியதும் இயற்கை படுகுஷியாக உங்களை வரவேற்கும்.சாலையின் இரண்டு பக்கங்களிலும், விண்ணை எட்டித் தொட்டு விட வேண்டும் எனக் கங்கணம் கட்டிக் கொண்டு நெடிதுயர்ந்து வளர்ந்த காட்டு மரங்கள்..மலைக் காடுகளுக்கே உரிய கரும் பச்சை உங்கள் கண்களில் வந்து அப்பிக் கொள்ளும்.அவ்வப்போது சாலையை அணைத்த படியே ஓடும் சிற்றோடைகள் உங்களைக் கொஞ்சியபடியே,ஆனால் உங்களிடம் எந்தப் பிரதிபலனையும் பாராமல் ஓடிக் கொண்டிருக்கும்..ஆரியங் காவு தாண்டி அச்சன் கோவில் செல்லும் வழியில் மழை தூற ஆரம்பித்து விட்டது.
சிலு சிலுவென்ற மழை.காரின் ஏ.சிக் குளிர்.யானியின் குழையும் பியானோ.குற்றாலக் குளியல் வேறு.
'GOD'S OWN COUNTRY'என்று கேரளா சுற்றுலாத் துறை தங்கள் மாநிலத்தை வருணிப்பது நூற்றுக்கு நூறு சரியே என்று ரசித்தபடியே நான் வரவேண்டிய கன்னிகா புரத்தை அடைந்தேன்.மெயின் ரோட்டிலிருந்து இடது புறம் மண் பாதையில் ஒரு கி.மீ.சென்றதும் வந்தது, எனது வாடிக்கையாளரின் முகவரியான கன்னிகா பரமேஸ்வரி ஆலயம்.
நன்கு செதுக்கிக், கெட்டி தட்டிச், சீர் செய்து பராமரிக்கப் பட்ட ஒரு செம்மண் சதுக்கத்தில் இருந்தது அந்தக் கோவில்.கோவிலைச் சுற்றி வித விதமான மலர்ச் செடிகளும் கொடிகளும் வசந்தத்தின் போதையேறிப் பூத்துத் தள்ளியிருந்தன.எல்லா இடங்களிலும் நிறங்களின் இரைச்சல்.
நான் அங்கு சென்ற போது மாலை மூன்று மணி இருக்கும்.யாரோ ஒரு தனி நபர் கோவிலைப் புதிதாகக் கட்டி முடித்திருக்கிறார் போலிருக்கிறது. எங்கள்கம்பெனியிலிருந்து அவர்தான் கிரானைட் கற்கள் வாங்கி இருந்தார்.புதிதான கையோடுகளும்,விலை உயர்ந்த தேக்கு மர வேலைப் பாடுகளும், சுத்தமான பராமரிப்பும் கோவிலக் கலைநயம் மிக்க ஒரு படைப்பாக்கி இருந்தது.அந்த மழை தூறும் மாலைப் பொழுதில் பத்துப் பதினைந்து பக்தகோடிகளே கோவிலில் இருந்தனர்.அமைதியான ஆலயச் சூழலில் அவ்வப்போது கேட்கும் கோவில் மணி ஓசை ஸென் தியானத்தை நினைவூட்டியது.
கோவில் பராமரிப்பை ஏற்றிருந்த ஒரு நம்பூதிரி காரை நிறுத்தி விட்டு நான் அருகில் சென்றதும் நமஸ்கரித்தார்.முகத்தில் அப்படி ஒரு சாந்தம்.கிரானைட் கற்கள் பதித்த உள்பிரகாரத்தைச் சுற்றிக்காட்டினார் நம்பூதிரி.
கிரானைட் கற்களின் பளபளக்கும் கட்டங் கறுப்பில், கோவில் விளக்குகளின் ஒளி,மஞ்சள் பாதரசத்தைச் சிந்தி விட்டாற் போலச் சிதறிக் கிடந்தது. சிற்பியோ,யாரோ ,கோவிலுக்குள் நுழைந்ததும் முதன் முதலில் செதுக்கி வைத்திருந்தது ஒரு விநாயகர் சிலையை.
விநாயகர் என்றால் அப்படி ஒரு அழகு.கரும் பளிங்கில்,நான் பார்த்த எல்லா விநாயகரையும் விட இவர் சூப்பர்.உண்மையான யானையே அழகு.அதனினும் அழகு, அதன் தலை மட்டும் கொலுக் முலுக்கென்று இருக்கும் ஒரு மனிதக் குழந்தையின் உடலுடன் ஒட்டி இருக்கும் கணபதியின் ரூபம்.எனக்குக் கணபதியின் கவிதையைச் சொன்னவன் காவிகட்டி மொட்டை அடித்திருந்த ஒரு அமெரிக்கச் சுற்றுலாப் பயணி.நேபாளத்தின் பார் ஒன்றில்.
யானையின் அபரிமிதமான ஆற்றல்.ஆனால் அந்த ஆற்றல் தேங்கி இருக்கும் இடமோ ஒரு குழந்தையினிடம்.இதுதான் விநாயகப் பெருமானின் வடிவம் நமக்கு வழங்கும் குறியீடு
'நீயும் கணபதியைக் கும்பிடும் போது உனக்கு யானைத் தலை இருப்பதாகக் கற்பனை செய்து கொள்.உனது சக்தி யானை பலமாகப் பெருகிச், செய்யும் காரியத்தை முடிக்க உதவும்' என்று அங்கேதான் அருளிச் செய்தான் அவன்.
எனது விநாயக நினைவுகளைப் பாதியிலேயே இடைமறித்து கோவிலுக்குள்ளே கூட்டிச் சென்றார், நம்பூதிரி.
கேரளக் கோவில்களுக்கே உரிய சின்னஞ்சிறு கர்ப்பகிரஹம்.சிறிய தேக்கு நிலைப் படியுடன் கூடிய கருவறை வாசல்.அர்ச்சகர் உட்கார்ந்தபடிதான் தீபாராதனையே காட்ட முடியும்.நான் சென்ற போது தீபாராதனை நடந்து கொண்டிருந்தது.அர்ச்சகரின் கரங்களில் இருந்த அடுக்கடுக்கான விளக்கின் ஒளியில் கன்னிகா பரமேஸ்வரி கறுப்புத் தேவதையாக மிளிர்ந்தாள்.
இரண்டடி உயரம்தான் இருக்கும் தேவியின் கரும்பளிங்குச் சிலை.ஆனால் அழகின் கடல்.மனிதப் பெண் வடிவை ரசித்த உச்ச கட்டக் கிறுகிறுப்பில் சிற்பி அந்தச் சிலையைச் செதுக்கியிருந்தான்.தேவியின் முகம் போல் யாருக்காவது உண்மைப் பெண்ணுக்கு இருக்குமானால் உலகமே அவளது அழகில் மயங்கி அவளது பாதங்களில் விழுந்து விடும்.கண்களை மூடி கும்பிட்ட போதுதான் அந்தச் சிலையின் எழிலை இன்னும் ஆழமாக என்னுள் தரிசித்தேன்.
நிறையச் சமயங்களில் கண்கள் மூடியிருக்கும் போதுதான் நமது பார்வைகள் தீட்சண்யமாகின்றன.
மேலும் இரண்டு நாட்கள் எனக்குக் கோவிலில் வேலை இருப்பதாகச் சொல்லிக் குற்றலத்தில் அறை எடுத்துத் தங்கிக் கொள்வதாக நம்பூதிரியிடம் நான் சொன்ன போது அவர் விடவே இல்லை.கோவில் ட்ரஸ்டி கலகத்தாவில் இருந்து வந்தால் தங்குவதற்கான தனிப்பட்ட விருந்தினர் இல்லம் இரண்டு கி.மீ. தள்ளி இருப்பதாகக் கூறி நான் தாராளமாக அங்கேயே தங்கலாம் என்றார் அவர்.இரண்டு கி.மீ.க்கு அப்பால் மலை முகட்டில் அமைந்திருக்கும் அந்த விருந்தினர் இல்லம் உண்மையில் உங்களைப் பரவசப் படுத்தும் என்று உறுதி அளித்து 'டேய் கேசவா, இவ்விட வரூ' என்று யாரையோ கூப்பிட ஒரு முப்பது வயது ஆள் ஓடி வந்தான்.இடுப்பில் ஒரு நாலு முழ வேட்டி.மேலே சட்டை எதுவும் அணியாமல் ஒரு துண்டை மட்டும் தோளில் போட்டிருந்தான்.என்னைப் பார்த்ததும் அவன் பணிவாகச் சிரித்தபடி கும்பிட்டான்.அவனைத் தள்ளிக் கூப்பிட்டுப் போய் ஏதேதோ கட்டளைகள் இட்டவர் என்னை அவனுடன் அனுப்பி வைத்தார்.
நம்பூதிரி அந்த விருந்தினர் இல்லத்தைப் பற்றி சொன்னது எவ்வளவு உண்மை என்பது அந்த மலைமுகட்டு வீட்டைப் பார்த்தவுடன்தான் எனக்குப் புரிந்தது.
அந்தி இருள் இன்னும் பழுக்கத் தொடங்க வில்லை.அந்த அறைகுறை வெளிச்சத்திலேயே மலைப் பாதை மனதை அள்ளிக் கொண்டு போனது.எவ்வளவு நலிவுற்ற ஜீவனும் அந்த மலைப் பாதையின் வழியே ஒரு முறை சென்றால் உயிர் வாழ்க்கை எவ்வளவு கிடைத்தற்கரிய பேறு என்பதை உணர்ந்து இயற்கை அழகின் , களிப்பில் கரைந்தே விடுவாN.
சுற்றிலும் மலைத் தொடர்கள் நடுவே அந்த வீடு எளிமையின் கவிதை. அடிஆழம் வரை பனியாய் இறங்கும் அமைதி.சத்தம் போடாத மழைக் காற்றின் கிசுகிசுப்பு..துப்புரவான சுகம்..
நான் களைப்பு நீங்கிக் குளிக்கக் கேசவன் வெந்நீர் போட்டுக் கொடுத்தான்.குளித்து முடித்து விட்டு வந்ததும் தலையைத் துவட்டி விட்டு,ஸாம்ஃபிரின் பேன் புல்லாங் குழலின் இன்னிசையை மடிக்கணிணி மூலம் மிதக்க விட்டேன்.அந்த ஐரிஷ் புல்லாங் குழல் மழை இருட்டைச் சுற்றிச் சுற்றி வந்து முத்தமிட்டுக் கொண்டே இருந்தது.
இன்னொரு சுகமான, பீர் பாட்டிலைத் திறந்து ஒரு வாய் குடித்ததும் கேசவன் வறுத்த முந்திரிப் பருப்புக்களை ஒரு அழகிய பீங்கான் தட்டில் கொண்டு வந்து வைத்து விட்டு முறுவலித்தான்.இரவு உணவு புட்டும் பயறும் பப்படமும் என்றான்.
நான் இரண்டு மடக்கு பீர் குடிக்கும் வரை காத்திருந்தவன்,அடிக் குரலில் 'சாரே' என்றான். மெல்லிய போதைக்கே கிளம்பும் நெருக்கத்துடன் 'என்ன கேசவா?'என்றேன்.
'கம்பெனி வேணுங்கிலும் இவ்விடே உண்டு?'என்று அவன் சொன்னவுடன் எனக்குப் புரியவில்லை.
'என்ன?'
'சாருக்குப் பெண் கம்பெனி வேணுங்கிலும் ஞான் அர்ரேஞ்ச் பண்ணும் 'என்றான் கேசவன்.
'இங்கியா?'என்ரேன் நான் திகைப்புடன்.
'படு சுந்தரமான குட்டி.அழைச்சுட்டு வரட்டே?'என்று அவன் கேட்டவுடன் பாதி பீர் பாட்டிலை ஒரே மூச்சில் காலி செய்தேன். புல்லாங் குழலும்,பீரும்,மீதி இருக்கும் ஒரே போதையான பெண்ணுக்கும் அனுமதி தர நான் தலையாட்டினேன்.கேசவன் வெளியே சென்றான்.ஸாம்ஃபிர், டைட்டானிக் பாட்டைப் புல்லாங் குழலில் கரைத்துக் கரைத்து ஊற்றிக் கொடுக்க ஆரம்பித்தார்.
பத்தே நிமிடங்களில் கேசவன் வந்து விட்டான்.கண்கள் மூடி இசையில் சொக்கிக் கிடந்தவனை அவனது கிசு கிசு குரல்தான் எழுப்பி விட்டது.'குட்டி வந்நு' என்றவன் வெளியே நிற்கும் யாரையோ பார்த்து 'உள்ளே வர்ரூ குட்டி' என்றான்.
நான் கதவையே பார்த்திருக்க உள்ளே வந்து நின்றாள் அவள்.
கன்னிகா.
ஒரு மென்மையான சுனாமி என் ஆத்மாவையே அடித்துக் கொண்டு போனது அந்த இரவில்தான்.
(அழகின் அலைகள் தொடர்ந்து வீசும்)

திங்கள், மார்ச் 02, 2009

கன்னிகா (மனது/வயது வந்தவர்களுக்கு மட்டும்)

முன் எச்சரிக்கை: ஒரு முழுமையான பெண்ணைச் சந்தித்திருக்கிறீர்களா?
அது ஒரு அபூர்வமான அனுபவம்.
இதுவரை நீங்கள் கொண்டிருக்கும் கருத்துக்கள்,எண்ணங்களில் இருந்து உங்களை வேரோடு பிடுங்கிக் கொண்டு போய் உங்களை உணர்வுகளின் வேறு தளத்தில் ஊன்றி விடும் வல்லமை வாய்ந்தது அந்த அனுபவம்
அந்த அனுபவத்துக்குத் தயாராகுங்கள்.
இனிக் கதை..
1.
குடும்ப நீதிமன்ற நீதிபதி வகுளாபரணன் எத்தனையோ விவாக ரத்து வழக்குகளுக்குத் தீர்ப்புச் சொல்லி இருக்கிறார்.ஆனால் அவர் சந்தித்த வழக்குகளிலேயே மிகவும் வினோதமான,விசித்திரமான வழக்கு அரவிந்தனுடையதுதான்.தனது நீண்ட நீதித் துறை அனுபவத்தில் அவர் அதுவரையில் கேள்விப் பட்டிராத அந்தச் சம்பவங்களும், வழக்கின் முக்கியப் புள்ளியான அந்தப் பெண்ணும் அவரைப் பின்னாளில் பல மாதங்களுக்குத் தூங்க விடவில்லை.
பல பின்னிரவுகளில் அவர் 'கன்னிகாஆஆஆ' என்று கத்திக் கொண்டு விருட் விருட்டென்று எழுந்தபோது அவர் மனைவி ஆண்டாளே பதறிக் கொண்டு எழுந்து விடுவாள்.அவரது பதற்றதைப் பார்த்துப் படபடக்கும் அவளுக்கு.
'என்னாச்சுன்னா ..உங்களுக்கு என்னாச்சு?'

கணவர் வேர்த்துக் கொட்டிய முகத்தோடு மிரள,மிரள விழித்துக் கொண்டு அமர்ந்திருப்பதைப் பார்த்து ஆண்டாளுக்கு நெஞ்சுக் குலையெல்லாம் நடுங்கி விடும்.குற்றவியல் நீதிபதியாகப் பல ஆண்டுகள் கொடூரமான கொலைக் குற்றவாளிகளுக்கெல்லாம் தண்டணை வழங்கிய போது கூடத் தனது கணவர் இந்த மாதிரிப் பின்னிரவுகளில் அரண்டதில்லை.இப்போது ஒரு சாதாரண விவாக ரத்து வழக்கில் அடிபடும்,யாரோ ஒரு பெண்ணின் பெயர் இந்த அளவுக்குத் தனது கணவனைப் பீதியில் ஆழ்த்துமா?

கொஞ்ச நேரம் அமைதியாக அறையின் மேல் சுவரையே பார்த்திருந்து விட்டுப் பின் எதற்கோ,யாரையோ கையெடுத்து சேவித்துக் கொள்ளும் வகுளாபரணன் மிரட்சியாகத் தன்னயே பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்டாளிடம் 'கொஞ்சம் குங்குமம் எடுத்தாந்து இட்டுடறயாடி?'என்னும் போது அவளது பயம் இன்னும் தீவிரமாகி விடும்.

ஒரு மாதத்திலேயே இரண்டு முறை இதே போல அவர் அலறிக் கொண்டு நடு ஜாமத்தில் எழுந்தவுடன் அவளால் அதற்கு மேல் இதை விட்டு விட முடியவில்லை.நீதி மன்ற விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக் கிழமை கணவரைத் தனது மாமனார் சௌம்ய நாராயண ஐயங்காரிடம் வற்புறுத்தி அழைத்துச் சென்று விட்டாள் ஆண்டாள்.

ஐயங்கார் சாஸ்திர,சம்பிரதாயங்களில் கரை கண்ட வேத வித்து.ஆயிரக் கணக்கில் எத்தனையோ பேருக்கு விவாஹங்களைச் செவ்வனே நடத்தி வைத்துப் பேரும் புகழும் பெற்ற பிராம்மணோத்தமர்.தனது மகன் குடும்ப நீதிமன்ற நீதிபதி ஆனதில், அவருக்குக் கொஞ்சம் கூட மனம் ஒப்பவே இல்லை.

'ஆயிரமாயிரம் பேருக்குத் தான் மந்த்ரங்கள் ஓதி சுப விவாஹங்கள் பண்ணிச் சேர்த்து வைத்த புண்ணியத்தை எல்லாம்,வேதங்களுக்கு எதிராகச் சட்டம் என்ற பெயரில் தம்பதிகளுக்கு விவாகரத்துப் பண்ணி வைத்துத் தனது மகன் பாவங்களை சம்பாதித்துக் கொள்கிறான்' என்பது அவரது வருத்தம்.
நடு ஜாமத்தில் 'கன்னிகா என்று யாரோ ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லி அலறியடித்துக் கொண்டு,அவரது மகன் பயந்து நடுங்கியபடியே எழுகிறார் என்று மாட்டுபெண் ஆண்டாள் வந்து அழுத படியே சொன்ன போது எதிரில் தலைகுனிந்து நின்ற நீதிபதியை அமைதியாகப் பார்த்தார் அந்தத் தொன்னூறு வயதுக் கிழவர்.

'வேதத்துக்கு எதிராப் பண்ற பாவம் படுத்தறதா?' என்று கேட்டார் கிழவர்.

வகுளாபரணன் ஒன்றும் சொல்லாமல் நின்றார்.
'யாருடா வகுள், அந்தக் கன்னிகா?'

நிமிர்ந்து தந்தையைப் பார்த்த வகுளாபரணின் கண்கள் கலங்கின.

'இத்தனை வருஷமா நான் பூஜை ரூம்லே பார்க்காதவளைக்,கோர்ட் ரூம்லே பார்க்கறேம்பா!' என்றார் ஓய்வு பெறுவதற்கு இன்னும் நான்கே மாதங்கள் இருக்கும் அந்தப் பழுத்த நீதிபதி.
ஐயங்காருக்குப் புரை கண்டது. இருமினார்.
2.
ஒரு மாதத்திற்கு முன்னாள்தான் அரவிந்தனின் விவாகரத்து வழக்கு அவரிடம் விசாரணைக்கு வந்தது.
தனது மனைவியைத் தான் விவகரத்துச் செய்ய விரும்புவதாக அரவிந்தன் வழக்குத் தொடுத்திருந்தான்.வழக்கறிஞர் யாரையும் வைத்துக் கொள்ளாமல் தானே தன் வழக்குக்காக வாதாடப் போவதாகக் கூறிய அரவிந்தனை அதற்கு அனுமதித்தார் வகுள்.
'உங்கள் மனைவியின் பெயர்?'
'கன்னிகா' என்றான் அரவிந்தன்.
'உங்கள் மனைவியிடம் இருந்து நீங்கள் விவாக ரத்துக் கோரும் காரணம்?'
'அவள் ஒரு முழுமையான பெண் என்பதால்!'

அரவிந்தனின் இந்த சலனமில்லாத வாக்கு மூலந்தான் நீதி மன்றத்தைச் சற்றே நிமிர்ந்து உட்காரச் செய்தது.வகுள் அப்போதுதான் அரவிந்தனை நன்கு உற்றுப் பார்த்தார்.
அரவிந்தன் நல்ல நிறம் ஆறடி உயரம் இருப்பான். மெல்லிய மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தான்.மென்மையான படிப்பாளியாக இருப்பான் என்று நினைத்தார் அவர்.இது போன்ற சராசரிக்கும் அதிகமான அழகும், படிப்பும் இருந்தாலே,அது ஆணாக இருந்தாலும் சரி,பெண்ணாக இருந்தாலும் அவ்ர்களது திருமண வாழ்க்கை அடிக்கடி விவாக ரத்தில்தான் முடிகிறது என்பதை அவர் அனுபவத்தில் கண்டிருந்தார்.
'உங்கள் மனைவி இப்போது இங்கே வரவில்லையா?' என்று கேட்டார் வகுள்.
'இல்லை'

விசாரணையை இருவரையும் வைத்துக் கொண்டு நடத்துவதுதான் முறை என்ற நீதிமன்ற நடைமுறையைச் சொன்ன வகுள், வழக்கம் போல மனைவிக்கும் தனது வாதங்களைக் கூறும் உரிமையை அளிக்க வேண்டும் என்ற சட்டத்தின் அடிப்படையில் அவளுக்கு நோட்டீஸ் அனுப்பும் படி உத்தரவிட்டார்
சாதாரணமாக அவர் நினைத்திருந்த அந்த விவாகரத்து வழக்கு நடந்தபோதுதான்,அந்த பழுத்த நீதிபதி அது வரை வாழ்க்கையைப் பற்றி வைத்திருந்த அத்தனை கோட்பாடுகளையும்,சமூக, ஆன்மீகக் கலாச்சாரக் கருத்துக்கள் அனைத்தையும் ஒன்று விடாமல் உடைத்து நொறுக்கி எறிந்து விட்டாள் அந்தப் பதினெட்டு வயதுப் பெண்.
கன்னிகா.
(வழக்கு தொடர்கிறது)

ஞாயிறு, மார்ச் 01, 2009

எங்கள் ஊரில் சாவு ஒரு பிரச்சினையே இல்லை.

1.
எங்கள் ஊரில் சாவு ஒரு பிரச்சினையே இல்லை.சாவை விட மாபெரும் பிரச்சினையே செத்தவர்களை அடக்கம் பண்ணுவதுதான்.ஏனெனில் எங்கள் ஊருக்கென்று தனிச் சுடு காடு இல்லை.
ஊரிலிருந்து பத்துக் கிலோ மீட்டர் தள்ளி,வெள்ளாங் கோவில் கிட்டே இருக்கிறது சுடுகாடு.வெயில் காலமானலும் சரி மழைக் காலமானாலும் சரி சடலத்தைப் பத்துக் கிலோ மீட்டர் எடுத்துச் சென்று அடக்கம் பண்ணுவதற்குள்,செத்தவர்களை விட உயிரோடு இருப்பவர்கள் செத்துச் சுண்ணாம்பாகி விடுகிறோம்.அதுவும் இளைஞர்கள் ஆன எங்கள்தலையில்தான் பிணம் சுமக்கும் வேலை சுமத்தப் படும்.
இடுகாட்டுக்குச் செல்லும் பத்துக் கிலோ மீட்டர் சாலையும் பாதி தூரம் ஒரே கல்லும் சரளையும் முள்ளும்தான்.மூன்று சாவுக்கொரு முறை நாங்கள் புதுச் செருப்பு வாங்கியே தீர வேண்டும்.ஊரில் யார் வீட்டில் சாவு என்றாலும் நாங்கள் அன்று தறிப் பட்டறை வேலைக்கும் போக முடியாது.
ஊரில் இருபதிலிருந்து இருபத்தைந்து வரை நாங்கள்மொத்தம் பத்துப் பதினைந்து பேர்தான் இருப்போம்.அதனால் சுடுகாட்டு முறை என்று வைத்துக் கொண்டாலும்,சமயங்களில் அடுத்தடுத்து நாங்கள் காதலிக்கும் பெண்களின் வீடுகளாகப் பார்த்து சாவு விழுந்து விடும்.அவர்கள்அழும் போது சம்பந்தப் பட்ட விடலைப் பையன்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா?
எங்கள் ஊரில் நிறையக் கல்யாணங்கள் ஊர்க் காரர்கள் செத்துப் போய்ச் சேர்ந்த சொர்க்கத்திலதான் நிச்சயிக்கப் படுகிறது.

அது மட்டுமல்ல,வெள்ளாங் கோவில் போகும் வரையில் வழி நெடுக ஏகப் பட்ட தடைகள்.இடைஞ்சல்கள்.தொந்திரவுகள்.சண்டை சச்சரவுகள்.பிணம் போகும் வழியில் வேறு ஏதாவது ஊரில் கல்யாணம் காட்சி என்றால்,மாப்பிள்ளை ஊர்வலம் முடியும் வரை நாங்கள் பிணத்தோடு காத்திருக்க வேண்டும்.வெளியே எங்கும் சாப்பிடவும் கூடாது.வெறும் டீயோடு சரி.கல்யாண ஊர்வலம் போகிறவர்கள் சும்மாவும் போக மாட்டார்கள்.கிண்டலடித்துக்கொண்டே போவார்கள்.
'ஏண்டா உங்க ஊர்லே யாரும் நல்லப் பொளைக்கவே மாட்டீங்களா?எப்போ எது ஒரு நல்ல காரியம் நடக்கும் போதும், குறுக்காலே ஒரு பொணத்தைத் தூக்கிட்டு வந்திடறீங்க?' என்பான் யாராவது ஒரு கல்யாண வீட்டுக்காரன் 'மப்'பில்.கல்யாண வீட்டுப் பெண்களும் அதைக் கேட்டு ஏதோ பெரிய காமெடி போலச் சிரிப்பார்கள் அப்போதுதான் எங்களுக்குப் பொத்துக் கொண்டு வரும்.
'ஆமாய்யா.நாங்க பெருமா நல்லூர்ச் சந்தையிலே இருந்து ரூபாய்க்கு மூணுன்னு பொணத்தை வாங்கிட்டு வர்ரோம்!' என்போம் நாங்கள்.
'எங்க ஊர்லே எல்லாம் நீயெல்லாம் உயிரோட இருக்கேன்னு சொன்னாலும் நம்ப மாட்டாங்கய்யா.ஊருக்கும் ஒலகத்துக்கும் பாரமா இருக்கிற இதையெல்லாம் கொண்டு போய்ப் பொதைச்சுட்டு வந்து மறுகாரியம் பாருங்கடா, தம்பிகளான்னு சொல்லிடுவாங்க'

'டேய்' என்று சண்டை ஆரம்பித்து விடும்.கல்யாண வீடென்றால் பிரச்சினை சீக்கிரம் முடிந்து விடும்.ஆனால் வழியில் ஏதாவது கோவில் உற்சவம்,என்றால்,எங்கள் பிணம் தாண்ட விடிந்து விடும்.ஏனென்றால் தெய்வத்தோடு எங்களால் சண்டை போட முடியாதென,எல்லா மனிதர்களுக்கும் தெரியும்.

தெய்வங்களுக்கு மனிதர்களின் பிணங்கள் மட்டும் ஆகாதென்று யார்தான் வகுத்து வைத்தார்களோ,அவர்களுக்குச் சாவு உடனடியாக வர வேண்டும் என நாங்கள் எல்லோருமே வேண்டிக் கொள்வோம்.வழியில் இருக்கும் கோவில் பண்டிகைகளின் போது,நாங்கள் நெடு நேரம் பிணத்தோடு உட்கார்ந்திருக்க வேண்டும்.அப்போதுதான் கோவில்களில் நடக்கும்,கதை,நாடகம்,கூத்து,ஏதோ உபன்யாசம் என்று கூறுகிறார்களே அது,எல்லாமே யார் யாரோ பிரபலமான பெரிய மனிதர்கள் மூன்று,நான்கு மணி நேரம் திருப்பித் திருப்பிச் சொல்வதைக் கேட்க வேண்டியிருக்கும்.மரணத்தைப் பற்றிச் சுலபமாக அத்தனை நேரம் பேசி விட்டு அவர்கள் காரில்,சென்ற பின்,நாங்கள் பிணமாகக் கிடக்கும் அதே மரணத்தைத் தூக்கிக் கொண்டு பத்துக் கிலோ மீட்டர் நடக்க வேண்டும்.

இந்தக் கொடுமையை நாங்கள் சீக்கிரமே முடித்து விட வேண்டுமென எண்ணியே நாங்கள் அரசாங்கத்தைப் பல வழிகளில் அணுகினோம்.தேர்தல் புறக்கணிப்பு, சாலை மறியல்,ரேஷன் கார்டுகளைக் கலெக்டரிடம் ஒப்படைத்தல் எனப் பல வழிகளில் போராடிய பின்னரே எங்கள்சுடுகாட்டுப் பிரச்சினைக்கு ஒரு முடிவு வந்தது மாதிரி தெரிந்தது.அரசுத் தரப்பில் ஹெல்த் ஆஃபிசரே, சுடுகாடு ஒதுக்கீடு தொடர்பாக முடிவெடுக்க முடியும் என்று கடைசி,கடைசியாக எங்களுக்குச் சொல்லப் பட்டது.
ஒரு குழந்தை புதிதாகப் பிறந்தால் என்ன கொண்டாட்டமோ, அதை விட மீறின மகிழ்ச்சியாக எங்களுக்கென்று ஒரு சுடுகாடு என்று கேள்விப் பட்ட போது கிராமமே அதனைக் கொண்டாடியது.
'மச்சான்,மாமா,பெரிசு, இனி நீ அக்கடான்னு மண்டையைப் போடலாம்பா' என்று வயதான கிழங்கட்டைகளெல்லாம் பிறந்த நாளைக் கொண்டாடுவதைப் போல வரப் போகும் மரண நாளைக் கொண்டாடினார்கள்.

ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் இருந்த புறம் போக்கு நிலத்தை,அரசாங்க ஜீப்பில் வந்து மக்கள் நல அலுவலர் (அந்தப் பதவியின் பேரெல்லாம், எங்களுக்குத் தெளிவாக விளங்கவில்லை) 'இதுதான் உங்கள் சுடு காடு ' எனக் கைகாட்டி விட்டுப் போனார்.

போகும் முன்னால் ஒரு குண்டையும் தூக்கிப் போட்டு விட்டுப் போனார்.'நடந்து முடிஞ்ச தேர்தல் ரிசல்ட் தெரியறதுக்குள்ளே, நீங்க இந்த இடத்தை சுடுகாடுன்னு ஆக்கிரமிச்சுடணும்.இல்லாங் காட்டி புதுக் கட்சிக்காரனுவ வந்தா,இந்தப் பொறம்போக்கு நிலத்தை அவனுக கட்சிக் கட்டிடம் அது இதுன்னு வளச்சுப் போட்டுட்டு,ப்ளாட்டுப் போட்டு வித்துடலாம்னு பேசிட்டிருக்கானுவ,அதையும் உங்க கிட்டே சொல்லிப்புட்டேன்.' என்று அந்த அரசு அலுவலர் கிசுகிசுத்ததும் நாங்கள் ஆடிப் போய் விட்டோம்.

இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாகப் போகின்றன.அதற்குள்நாங்கள் எப்படி...புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பது அதுவும் சுடு காடென்று?அதற்கும் அந்த நல்ல மனம் கொண்ட ஆஃபிசரே வழி சொன்னார்.
'இன்னும் ஒரு வாரம் இருக்குள்ளே..அதுக்குள்ளே இங்கே ஒரு உங்க கிராமத்தைச் சேர்ந்தவங்க யாராச்சும் இறந்தா,அவஙக பொணத்தை இங்கே பொதைச்சிடுங்க! அரசாங்கத்துனாலே ஒதுக்கப் பட்ட இடத்துலே ஒரு தடவை பொணத்தைப் பொதைச்சுட்டோம்னா,அதுக்கப்புறம் எந்தக் கொம்பனாலேயும் அந்த இடத்தை வேறொரு காரியத்துக்குக் கேக்க முடியாது.அது பரம்பரைக்கும் சுடு காடுதான்!இதுதான் சட்டம். இந்தாங்க புடிங்க சர்டிஃபிகேட்டை!' என்று ஒரு மக்கிப் பேப்பரைக் கொடுத்து விட்டு அவர் ஜீப்பில் பறந்து விட்டார்.
இப்போது எங்கள் கிராமத்துக்குத் தேவை ஒரு வாரத்துக்குள் ஒரு சாவு!.ஒரு பிணம்.!!
2.

இளம் வட்டங்களாகிய நாங்கள் அதற்குப் பிறகு எங்கள் ஊரில் அலைந்ததைப் போலப் பிணந்திண்ணிக் கழுகுகள் கூட மனிதப் பிணத்துக்காக அலைந்திருக்க முடியாது.
முதலில் எங்களுக்கு இந்த விஷயத்தில் உதவப் போகும், 'ஆண்டவன் எப்போ என்னைக் கொண்டு போகப் போறானோ?' என்று தினமும் பத்துத் தடவையாவது பார்க்கிறவர்கள் அனைவரிடமும் சொல்லிப் புலம்பிக் கொண்டிருக்கும் கிழங், கட்டைகள் பட்டியலைப் போட்டோம்.

ஆஸ்த்மாவில் விடிய,விடிய இருமிக் கொண்டு மூச்சே அடைத்தாற் போல இருமிக் கொண்டிருக்கும் எண்பது வயதுப் பெரிசான கலியமூர்த்தி தாத்தா,முதுகெலும்பு தேய்ந்து போன வட்டி கந்தசாமி,வண்டிக்கார ஆறுமுகம்,எழுபத்தேழு வயசான நாகரத்ன அம்மாள்,பம்ப்செட் ராமசாமி,வாதம் செல்லமாள்,அப்பத்தா,அப்பிச்சி, இப்படி பதினாறு, பதினேழு டிக்கெட்டுக்கள் மேலுலகச் சுற்றுலாவுக்காகக் காத்திருந்தார்கள்.அவர்களை எல்லாம் ஒரு ரவுண்டு பார்த்து விட்டு வந்தோம்.
'என்ன தாத்தா, என்ன பாட்டி எப்படி இருக்கீங்க,சும்மா பார்த்துட்டுப் போலாம்ன்னுதான் வந்தோம்!' என்று நாங்கள் அசடு வழிய எங்கள்திடீர் 'விசிட்'டுக்கான காரணத்தைச் சொன்ன போது, அதுகள் எல்லாமே புரிந்து கொண்டன.எழுபது,எண்பது வருஷங்களாக எமனுக்கே டிமிக்கி கொடுத்துக் கொண்டு வாழும் அதுகளுக்கு எங்கள் உள்எண்ணம் புரியாதா என்ன?
'ஏண்டா உங்க கரிசனத்தைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா?வயசுப் புள்ளைகளை உட்டுட்டு எங்களைப் பார்க்க வருவீங்களாடா,திடீர்ன்னு?எப்படா மண்டையைப் போடுவோம்,கொண்டு போய்ப் பொதைச்சுட்டு சுடுகாட்டை அமுக்கிடலாம்ன்னுதானே பார்க்க வந்திருக்கீங்க! போங்க,போங்க நாங்க பார்க்காத சாவா?சங்குச் சத்தம் என்ன நீங்க கேக்கற சினிமாப் பாட்டா நினைச்சப்ப எல்லாம் கேக்கறதுக்கு?ஆண்டவன் எப்பக் கூப்பிடறார்ன்னு யாருக்குத் தெரியும்? அப்ப வாங்க போங்கடா!' என்று கோபமும் சிரிப்புமாக எங்களைப் பெரிசுகள் அனுப்பி விட்டன.

இரண்டு நாட்கள் ஓடி விட்டன.எங்களுக்குப் பதற்றம் கூடிக் கொண்டே போனது.மூன்றம் நாள் கதிரேசன் ஓடி வந்தான்,சாவடிக்கு.'டேய் அப்பத்தா வீட்டுக்குக் கம்பௌண்டர் பெரியப்பா வந்திருக்காரு.'
கம்பௌண்டர் பெரியப்பா பக்கத்து ஸ்பின்னிங் மில்லில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.எங்கள் கிராமத்தின் அங்கீகரிக்கப் பட்ட ஒரே மருத்துவர் அவர்தான்.சீரியஸ் என்றால் அவரைத்தான் எல்லார் வீட்டிலும் கூப்பிடுவார்கள்.அப்பத்தா வீட்டில் கூப்பிட்டிருக்கிறார்கள் என்றால்,ஆத்தா நிலைமை மோசமாய் இருந்திருக்க வேண்டும்.எல்லோரும் அப்பத்தா வீட்டுக்கு ஓடினோம்.ஊர்க் காரர்கள் நிறையப் பேர் அப்பத்தா வீட்டு வேப்ப மரத்தடியில் கூடியிருந்தார்கள்.கதையின் முடிவு தெரிந்த பின்னும் இழுத்துக் கொண்டு கிடக்கும் சினிமாப் படத்தின் கிளைமேக்ஸைப் பார்ப்பதைப் போல எல்லோர் முகத்திலும் ஒரு அசுவராஸ்யம்.
'ஆத்தாவுக்கு என்னடா வயசிருக்கும்?' என்று கேட்டான் காளி.
நான் ஆத்தா வீட்டு வேப்ப மரத்தைப் பார்த்தேன் ஒருநாள் அப்பத்தா என்னிடம் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது.
'வெங்கடேசு,நான் பெரிய மனுஷியாகி உக்கார்ந்தபோ இந்த வேப்ப மரம் என் இடுப்பொசரக் கன்னா இருந்துச்சுன்னாப் பார்த்துக்குவேன்! அப்படீன்னா, இப்ப என்னோட வயசு என்னவா இருக்கும்? கணக்குப் போட்டுச் சொல்லேன்!'
நான் நிமிர்ந்து அந்தப் பெரிய வேப்ப மரத்தைப் பார்த்தேன்.

ஒரு கல்யாணக் கூட்டத்துக்கே தாராளாமாகப் பந்தி பறிமாறும் அளவுக்கு அது பிரம்மாண்டமான மரம்!
நண்பர்களிடம் அப்பத்தா சொன்ன இந்தக் கணக்கைச் சொல்லி ஆத்தாவின் வயது என்னவாக இருக்கும் என்று கண்டு பிடிக்கச் சொன்னேன்.
அவர்களும் வேப்ப மரத்தைப் பார்த்தார்கள்.
'என்ன,ஆத்தா ஏசுநாதரை விட ரெண்டு வயசு மூத்ததாக இருக்கும்னு நினைக்கிறேன்!' என்று அப்புக் குண்டன் அமைதியாகச் சொன்ன போது எங்களுக்குச் சிரிப்புத் தாங்க வில்லை.வாயைப் பொத்திக் கொண்டு சிரித்த போது பெரியவர்கள் முறைத்தார்கள்.
கம்பவுண்டர் பெரியப்பா வெளியே வந்த போது எங்கள் கூட்டமே தேர்தல் முடிவைக் கேட்கும் ஆர்வத்துடன் அவரையே பார்த்தோம்.
'நிலைமை ரொம்ப மோசமாத்தான் இருக்கு.கை,காலு எல்லாம் வீங்கிடுச்சு.சாயந்திரம் வரைக்கும் தாங்கினாலே பெரிசு 'என்று அவர் அப்பத்தாவின் சாவை உறுதி படுத்திச் சொன்னதும் எங்களுக்கெல்லாம் தலைச்சன் குழந்தை ஆண் குழந்தை என்று அவர் சொன்னதைப் போல சந்தோஷம் தாங்க வில்லை.உடனே எல்லோரும் ஊர்க் கிணற்றடிக்கு ஓடினோம்.
3.
எங்கள் ஊர்க் கிண்ற்றடிதான் எங்களுக்கு ஆற்றங்கரை.கடற்கரை எல்லாமே.
இளவட்டங்களான ஆண்களும்,பெண்களும் சந்தித்துக் கொள்ள ஊர்ப் பெரிசுகளெல்லாமே அரசல் புரசலாகத் தெரிந்தே அனுமதித்திருக்கும் ஒரு 'குடி'இல்லாத 'பப்' அது.

காலை நேரத்தில் வீட்டில் இருக்கும் சம்சாரிப் பெண்களுக்கு நிறைய வேலைகள் இருக்குமாதலால் தங்கள் வீட்டில் இருக்கும் வயதுப் பெண்களை துணிமணிகள் துவைப்பதற்கும்,பாத்திர பண்டங்கள் கழுவுவதற்கும் அனுப்பி வைப்பார்கள்.அவர்களுக்குத் தண்ணீர் சேந்தித் தரும் பொறுப்பு எங்களுடையது.எல்லாப் பெரிசுகளும் இந்த இனிமையான வயதைக் கடந்து வந்திருப்பதனால் பஞ்சும்,நெருப்புமான நாங்கள் ஊர்க் கிண்ற்றின் ஈரத்தில் பாதுகாப்பாக நனைவதற்குக் கண்டும் காணாமல் ஆதரவு தந்தார்கள்.
அங்கே ஏற்கனவேஅம்பிகா,கமலா,ராணி,வைதேகி,மேகலா,கண்ணம்மா,சுந்தரி,ராசக்கா,தமிழரசி,மலர் எல்லோருமே வந்திருந்தார்கள்.எல்லோருக்குமே வயது பதினாறிலிருந்து பத்தொன்பதுக்குள்தான் இருக்கும் யாரும் இன்னும் இருபதைத் தொடவில்லை என்று ஊறுதியாகச் சொல்ல முடியும்.
'எப்படி இருக்கு அப்பத்தாவுக்கு?'என்று என்னிடம் கேட்டாள் அம்பிகா.
கிணற்றுமேட்டில் இருக்கும் நாலைந்து உருளைகளில் ஒன்றில் கயிற்றை மாட்டிக் கிண்ற்றுக்குள் பக்கெட்டை விட்டவன் 'சாயந்திரம் வரைக்கும் தாங்கரதே பெரிசு' என்றேன்.
'பரவாயில்லே ஊருக்கு ஒரு நல்லது பண்ணிட்டுச் சாகணுங்கறதுக்காகத்தான் அப்பத்தா இத்தனை நாள் உயிரோட இருந்துச்சு போலிருக்கு 'என்றாள் கமலா ஆதங்கமாக.
'ம் இனி இவனுகளுக்கு ஜாலிதான்.பத்துக் கிலோ மீட்டர் பொணம் தூக்கற வேலை இல்லே'என்று சொல்லிக் கண்ணடித்தாள் மேகலா.
'ஆமா,இவனுக உருப்படியாச் செஞ்ச ஒரே நல்ல காரியம் அதுதான்.அதுவும் இல்லேன்னு ஆயிடுச்சா இப்போ!' என்று கிண்டல் செய்தாள் கண்ணம்மா.
'ஏய் யாரை பார்த்து வேறே நல்ல காரியம் பண்ணலேன்னு சொல்றே?சொல்றா,வெங்கடேசு,இந்த மூணு நாளா ராவெல்லாம் தூக்கம் முளிச்சு,இவளுகளுக்காக நாம என்ன பண்ணுனோங்கறதை!'
ஊர்ப் பொங்கல் விழாவிலிருந்து மற்ற எல்லாக் கோவில், கல்யாணம்,சடங்கு நிகழ்ச்சிகளின் போதெல்லாம் நான்தான் ஒரே வர்ணனையாளன்,அறிவிப்பாளன் எல்லாமே. தொண்டையச் செருமிக் கொண்டவன் 'இதனால் நம் கிராமத்தின் இளம் தேவதைகளான உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொள்வது என்னவென்றால், மாபெரும் நகரங்களில் மட்டுமே நடக்கும் அழகிப் போட்டி என்னும் அற்புதமான போட்டியை நமது ஊரிலும் நாங்கள் நடத்தி முடித்திருக்கிறோம்.' என்றேன்.
பெண்கள் எல்லோரும் திகைத்துப் போனார்கள்.
'அழகிப் போட்டி நடத்துனீங்களா? எப்படி? யாரை வெச்சு?' என்று வியப்பின் உச்சிக்கே போய்க் கேட்டாள் ராசக்கா.
'ஏன்? உங்களை எல்லாம் வெச்சுத்தான்!'என்றேன் நான்.
'எங்களை வெச்சா?'அதிர்ந்தாள் அம்பிகா.
'ஏன், உங்களுக்கும் அழகுக்கும் சம்பந்தமே இல்லையா?இப்படி அதிர்ரீங்க!' என்றான் கணேசு.எல்லோரும் அவனை முறைத்தார்கள்.
'நீ சொல்லுடா வெங்கடேசு என்ன கூத்துப் பண்ணி வெச்சிருக்கீங்க?' என்று சீரியஸாகக் கேட்டாள் அம்பிகா.
'ஒண்ணுமில்லே அம்பிகா.நாங்க ரெண்டு பிரிவாப் பிரிஞ்சுட்டோம். உங்களை முன்னாலே இருந்து பார்க்கற மாதிரி மாரியம்மன் கோவில் தூணிலிருந்து மறைஞ்சு நின்னுகிட்டுக்,கிணத்தடிக்கு நீஙக காலையிலே வர்ரப்போப் பாதிப் பேரு பார்ப்போம் மீதிப் பேரு தேர் முட்டிகிட்டே மறைஞ்சுகிட்டு,உங்களைப் பின்னாடி இருந்து பார்ப்போம்.பார்த்திட்டிருக்கும் போதே மார்க் போட்டுடுவோம்.இதே மாதிரி நீங்க குளிச்சு முடிச்சுட்டுப் போகும் போதும் .பார்த்தோம் .ஒருநாள் மாதிரி ஒருநாள் இருக்காதில்லையா? அதுதான் மூணு நாளா இந்தக் கணக்கை எடுத்திருக்கோம் அவனவன் தனித் தனியா மார்க்குப் போட்டு எங்கிட்டே கொடுத்துட்டான்.எல்லா மார்க்கையும் ராத்திரி முளுக்க உக்காந்து கூட்டிப் பார்த்துட்டு இப்ப அழகிப் போட்டி ரிசல்ட்டோட வந்திருக்கோம்.!'

பிரம்மித்துப் போனார்கள் அந்தக் கிராமத்து தேவதைகள்.
'என்ன ஒரு திமிரு பார்த்தியாடி இவனுகளுக்கு?' என்றாள் சுந்தரி.
'எல்லாம் நாம குடுக்கிற இடம்!'என்றாள் மலர்.
'இப்போ ரிசல்ட்டைத் தெரிஞ்சுக்கப் போறீங்களா,இல்லியா?' என்றேன் நான். எனக்குத் தெரியும்.எந்தப் பெண்ணுமே தன் அழகைப் பற்றி ஒரு ஆண் என்ன நினைக்கிறான் என்று தெரிந்து கொள்ளாமல் தூங்கவே மாட்டாள் என்று.'
கர்மம், கர்மம்!'என்று தலையில் அடித்துக் கொண்டார்கள் அவர்கள் சிரிப்பும்,வெட்கமும்,பூரிப்புமாய்.
'சரி,சரி சொல்லித் தொலைங்கடா!'என்றாள் வைதேகி.நான் ரிசல்ட் பேப்பரைக் கையில் எடுத்ததும்,என் முகத்தையே ஆவலுடன் பார்த்தார்கள் தேவதைகள்.
'எங்கள் கனவுகளில் அன்றாடம் வந்து எங்கள் தூக்கத்தின் பெரும் பகுதியைக் கெடுக்கும் கனவுலகக் கன்னிகளே! இந்தத் தீர்ப்புக்களைநாங்கள் எழுதுவதற்குள் நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே,அதனை வார்த்தைகளால் சொல்லி மாளாது. சரி இந்த மாபெரும் அழகிப் போட்டியில் மூன்றாவது இடதைப் பிடித்த தாமிர மயில்...'
சஸ்பென்ஸ் தாங்க முடியவில்லை அவர்களுக்கு.'சீக்கிரம் சொல்லித் தொலையேண்டா,வெங்கடேசு!' என்று கத்தியே விட்டாள் தமிழரசி.
'மூன்றாவது இடத்தைப் பிடித்த தாமிர மயில் --ராணி!' என்று நான் அறிவித்ததும் பயல்களின் விசில் கரவொளிகளுக்கு மத்தியில் அந்தப் பெண்கள் வெட்கத்தில் சிரித்தது, மழைத் துளிகளுக்கு மத்தியில் ஏழெட்டு வான வில்கள் ஒரே நேரத்தில் உதயமானதைப் போலிருந்தது.
'ஏண்டா, இதை முதல்லேயே சொல்லித் தொலைச்சிருந்தா நாங்க கொஞ்சம் தலையவாவது வாரிட்டுப் பவுடர் கிவுடராவது அடிச்சுட்டு வந்திருப்போம்லே 'என்று சிணுங்கினார்கள் சில பேர்.
'அதுதான் கிராமத்தானுக மூளைங்கறது ! படிச்ச பட்டணத்துக் காரனுக நடத்துற மாதிரி இல்லாமே, பொண்ணுகளை எந்த எச்சரிக்கையும் பண்ணாமே அவங்களைப் பார்க்கணும்.அப்போத்தான் அவங்களோட ஒரிஜினல் அழகு தெரியும்.முதல்லேயே அவங்களை உஷார்ப் படுத்திட்டா, அவங்களோட மேக்கப்பும்,சொல்லிக் குடுத்த பயிற்சியுந்தான் தெரியும்.'
'பரவாயில்லே.நம்ம ஆளுகளும் அப்பபோ விவரமாத்தான் பேசறானுகடி!' என்று பாராட்டினாள் அம்பிகா.
'சரி,அடுத்தது யாருன்னு சொல்லு.'
'இரண்டாம் இடத்தைப் பிடித்த வெள்ளி மயில்--ராசக்கா!'
மீண்டும் கரவொலிகள்.விசில்கள்.சில பெரிசுகள் கிணற்றடியைக் கடந்த போது,நடப்பது என்ன என்று தெரியாமல் ஏதோ விடலைகள் சிரித்து அலம்பல் பண்ணிக் கொண்டிருக்கின்றன என நினைத்துத் தங்கள் இளமையின் ஞாபகத்தில் உள்ளேயே சிரித்துக் கொண்டு போனார்கள்.
'பின்னாடி இருந்து பார்த்த பசங்கதான், ராசக்காவுக்கு மார்க்கை அள்ளி வழங்கி இருக்காங்கன்னு அழகிப் போட்டி நிர்வாகம் இந்த இடத்தில் சொல்லிக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறது!' என்று நான் அறிவித்ததும் 'ச்சீய்' என்று என் முகத்தில் தண்ணீரை அடித்துக் கலாட்டாப் பண்ணினாள் அவள்.
'அடுத்து நீங்கள் ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் முதல் இடமான தங்க மயில் பரிசு--அம்பிகா!' என்று நான் கத்தியதும் அம்பிகா முகம் சிவந்து நாணியதிற்கு இணையான அழகை இந்த உலகம் பூராவும் நீங்கள் எங்கு தேடினாலும் பார்க்க முடியாது.
எனக்கே நெஞ்சில் கும்மென்றது.பிறகுதான் எனக்கே தெரிந்தது,அது கதிரேசன் விட்ட குத்தென்று.
'ஏண்டா,உன் ஆளுதான் ஃபர்ஸ்ட்டுன்னு ,ரிசல்ட்டை மாத்திப் படிக்கிறீயாடா?' என்று அவன் கத்தியதும்தான் எனது பித்தலாட்டம் சபைக்கு அம்பலமானது. அதைப் பற்றி நான் கவலைப் படவில்லை.
'உன் ஆளுன்னு' என்று அவன் அம்பிகாவைச் சொன்னதும் அவள் அதைப் பரவசத்துடன் ஏற்றுக் கொண்டு என்னைப் பார்த்தை விட எனக்கு வேறென்ன பரிசு இருக்க முடியும்?
அந்தக் கிராமத்துக் கிணற்றடியில் நான் வாங்கிய ஆஸ்கார் விருது அது.!அதற்குப் பிறகு அவன் பேப்பரை வாங்கி 'முதல் பரிசு வாங்கிய தங்க மயில் வேறு யாருமல்ல-' என்று அவன் முடிவை அறிவிக்கும் முன் 'டேய் அங்கே பாருங்கடா!' என்று அதிர்ச்சியின் உச்சக் கட்டத்தில் கத்தினான் வேலு.எல்லோரும் பதறிப் போய்த் திரும்பிப் பார்த்தால்-அப்பத்தா!
சாயந்திரம் வரைக்குமே தாங்காது என்று கெடு வைத்திருந்த அப்பத்தா ஒரு மோளி துணியுடன் வேகுவேகு என்று கிணற்றடியை நோக்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தது.
'அப்பத்தா' என்றோம் எல்லோருமே அதிர்ச்சியுடன்.
'பேராண்டிகளா, உங்களுக்குப் புண்ணியமாப் போகட்டும்.ஒரு நாலு பக்கெட் தண்ணி சேந்திக் கொடுங்கடா.அஞ்சு நாளுப் புடவைகளைத் துவைக்கனும்'என்றாள் அப்பத்தா.
'உங்களுக்கு உடம்பு முடியலேன்னு ..கம்பவுண்டர் பெரியப்பா..'அது எங்களை முடிக்க விடவில்லை.
'அந்தக் கட்டிதின்னிக்கு என் உடம்பைப் பத்தி என்ன தெரியும்.நானும் எங்க வீட்டு வேப்ப மரமும் ஒண்ணு..அது என்னிக்குச் சாயுதோ அன்னிகுத்தான் இந்தக் கட்டையும் சாகும்!' என்றாள் அப்பத்தா உறுதியாக.
நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.
'அப்ப அந்த வேப்ப மரத்தை வெட்டிச் சாய்ச்சுடலாண்டா!' என்றான் அப்புக் குண்டன் வழக்கம் போல அமைதியாக.பெண்களுட்பட எல்லோருமே சிரித்தார்கள்.
'என்ன தமாஸ் பண்றான் பேராண்டி?'என்று அப்பத்தா கேட்டாள்.'இது தமாஸ் இல்ல்லே பாட்டி.ரொம்ப சீரியசான மேட்டர்!'.என்றான் அவன்.
4.
நாளை தேர்தல் முடிவுகளை அறிவிக்கிறார்கள்.எங்கள் ஊரில் இன்னும் யார் சாவதாகவும் தெரியவில்லை.
எம்.எல் ஏ வாக நிச்சயம் பக்கத்து ஊர்ப் பெரும்புள்ளியான கருப்பையாதான் வருவார் என்று எங்களுக்கு நன்றாகவே தெரியும்.அவர் வந்து விட்டால் எங்கள் ஊர்ச் சுடுகாட்டுப் பிரச்சினையைப் பற்றி அவர் கவலையே பட மாட்டார் என்றும் நாங்கள் அறிவோம்.அது மட்டுமல்ல, எங்களுக்குச் சுடுகாட்டுக்கு என்று ஒதுக்கப் பட்டிருக்கும் புறம் போக்கு நிலத்தின் மீது அவருக்கு நீண்ட நாட்களாகவே ஒரு கண் ஏனென்றால் அதற்குப் பக்கத்தில்தான் அவருடைய நிலம் இருக்கிறது.இங்கு சுடுகாடு வந்து விட்டால் அவரது நிலத்தின் மதிப்பு வெகுவாகக் குறைந்து விடும்.இந்தப் புறம் போக்கு நிலத்தையும் தனது நிலத்துடன் சேர்த்து விட்டால் அது அவருக்கு மிகப் பெரிய லாபமாக இருக்கும்.
ஹெல்த் ஆஃபிசர் மனம் பொறுக்க முடியாமல், அவர் சொன்ன கெடு முடியும் நாளான இன்று எங்களுக்கு போன் செய்தார்.
'சாயந்திரம் நாலு மணிக்கு உங்க தொகுதிக்குப் புது எம்.எல்.ஏ வந்துடுவாரு. அப்புறம் உங்களோட சுடுகாட்டுக் கோரிக்கை என்னாகும்ன்னு தெரியுமில்லே?'
'தெரியும் சார்! என்ன பண்றதுன்னே தெரியலே.!'
'நிறையப் பெரிசுக இப்பவோ அப்ப்வோன்னு இருக்குதுன்னு சொன்னீங்களேம்பா?ஒண்ணும்---'
'இல்லே சார்!' என்றோம் பரிதாபமாக.
'சரி பார்ப்போம். இன்னும் மூணு மணி நேரம் இருக்குதில்லே.' என்றவர் அனுதாபத்துடன் விடை பெற்றார்.
கோவில் வழியாக வந்த போது பெரிசுகள் ஏதோ தீவிரமாகப் பேசிக் கொண்டிருக்கக் கடைசி நேர நம்பிக்கையுடன் அருகில் சென்று என்ன என்று கேட்டோம்.எங்கள் பட்டியலில் இருந்த வயதானவர்கள் கிட்டத் தட்ட எல்லோருமே இருந்தார்கள்.
'இல்லேப்பா.பொங்கல் விழா வருதில்லே..அதுலே வயசானவங்களுக்கு வெக்கிற ஓட்டப் பந்தயம் வேண்டாம்ன்னு முடிவு பண்ணியிருக்கோம்' என்றார் ஆஸ்த்மா தாத்தா.
'ஆமா தாத்தா வயசான காலத்துலே எதுக்கு ஓட்டப் பந்தயமெல்லாம் ஓடி, உடம்பைக் கெடுத்துட்டு..'என்றேன் நான் வெறுப்புடன்.
'அட இவன் யார்ரா புரியாமே பேசிட்டு..ஓட்டப் பந்தயத்துக்குப் பதிலா சடுகுடுப் போட்டி வெச்சுக்கலாம்ன்னு முடிவு பண்ணிட்டோம்!'
5.
இன்னும் ஒரு மணி நேரத்தில் புது எம்.எல்.ஏ அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டு விடுவார்.சோர்வுடன் சாவடியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். 'குடு குடு வயசுலே,சடு குடு ஆடறேன்னு சொல்லுதுகளே பெரிசுக! இந்த லிஸ்ட் இனிமே பிரயோசனப் படும்ன்னு நினைக்கறே?' என்று எங்களுடைய மரணப் பட்டியலைக் காட்டிக் கேட்டேன்.
'இனி நம்ம ஊர்லே கிழவிக எல்லாம் ரெண்டாவது தடவையாச் சடங்காகி உக்காரப் போறாங்கன்னு நினைக்கிறேண்டா!' என்ற அப்புக் குண்டன் லிஸ்ட்டைக் கிழித்தெறிந்தான்.
அப்போது வேலு பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தான்.
'எந்தப் பெரிசுக்கோ நம்ம கஷ்டம் தெரிஞ்சு மண்டையைப் போட்டுடுச்சுடா' என்றேன் நான் உற்சாகமாக.
அழுதபடியே வந்த வேலு சொன்னான்.
'டேய்..நம்ம எலிமென்டரி ஸ்கூல் கட்டிடம் இடிஞ்சு விழுந்துடுச்சுடா' என்றான் அவன் கதறிய படியே.
'என்னடா சொலறே?' எங்களுக்கு ஒரு நொடி பேச்சே வரவில்லை.'நிறையக் குழந்தைக..கட்டிட இடிபாட்டுக்குள்ளே சிக்கி..'அவன் தேம்பினான்.
6.

அந்த மூன்று பள்ளிக்கூடக் குழந்தைகளைப் புதைத்ததிலிருந்து எங்களுக்கென்று ஒரு தனிச் சுடுகாடு கிடைத்தது.
சுடுகாடு மட்டும் பிரச்சினை இல்லை,சாவும் ஒரு மாபெரும் பிரச்சினை என்ற பாடத்தை ஒன்றாம் வகுப்பே படித்த அந்தக் குழந்தைகள் எங்களுக்கு நடத்தி விட்டுப் போயிருந்தார்கள்.
அந்தப் பிஞ்சுகளை பத்துக் கிலோ மீட்டர் நடக்காமல் இந்த முறை சுலபமாக அடக்கம் பண்ணினோம்.ஆனால் ஊருக்குள் அழுகைச் சத்தம் அடங்கத்தான் நீண்ட நாட்கள் ஆயின.