500 DAYS OF SUMMERசமயங்களில் ஒன்றைப் பற்றித் திட்டமிடலோ,முன்னறிவோ இல்லாமல் சில நல்ல படங்களைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் நேர்ந்து விடும்.
அப்படி நேர்ந்ததுதான், நான் நேற்றுப் பார்த்த இந்தப் படம்.
ஒரு நல்ல எழுத்தோ,நல்ல இசையோ,நல்ல படமோ உங்களை முழுக்க முழுக்க மாற்றிப் புரட்டிப் போடாது.ஆனால் ஏற்கனவே உங்களுக்குள் இருக்கும் கவிதையை,ரசனையை,மனிதத்துவத்தை இன்னும் கூராக்கும்.தீவிரமாக்கும்.செழுமைப் படுத்தும்.
அதற்குப் பிறகு நீங்கள் நேசிக்கும் பெண் இன்னும் அழகாக தெரிவாள் .நீங்கள் சாப்பிடும் உணவு இன்னும் ருசிக்கும்.நீங்கள் கேட்கும் பாடலின் ராகம் புரியும்.நிலவுகள் புதிதாகும்.புத்தக வரிகளுக்கு நடுவில் விளங்கும் மௌனங்கள் விளங்கும.
உங்களை, உங்களுக்கே புதிதாக அறிமுகப் படுத்தும்,சில படைப்புகள்.
அந்த வகைப் படம் இது என நான் கருதுகிறேன்.
பையன்,பெண்ணைச் சந்திக்கும் கதைதான்.ஆனால் இது காதல் கதை அல்ல! என்ற முன்னுரையுடன் துவங்கும் படம்.
ஆம்.இது காதல் கதை அல்ல.காதலைப் பற்றிய கதை.க்ரீட்டிங் கார்ட் கம்பெனியில் வேலை பார்க்கும் டாம் என்ற இளைஞன்,மேலதிகாரிக்கு உதவியாளராக வரும் சம்மர் என்னும் இளம் பெண்ணைப் பார்த்ததுமே இவள்தான், தான் தேடிக் கொண்டிக்கும் அந்த ஒற்றைப் பெண் என உணர்கிறான்.
பார்த்தவுடன் காதல் வயப் படும் டாம்.
காதலைப் பற்றி மட்டுமல்ல,நவீன வாழ்க்கையின் எந்த உறவின் நிரந்தரத்தின் மீதும் நம்பிக்கை இல்லாத பெண் சம்மர்.
இந்த இரண்டு பேரின் 500 நாள் வாழ்க்கைதான் படம்.
கடலியல் படித்து,நீர்முழ்கிக் கப்பலை எடுத்துக் கொண்டு, கடலின் ஆழத்துக்குப் போகும் விஞ்ஞானிகளுக்குக் கூடக் கிடைக்காத முத்துக்கள்,எந்தப் படிப்பறிவும் இல்லாமல் முத்துக் குளிக்கப் போகும் ஒரு மீனவனுக்குக் கிடைத்து விடுவதைப் போல, பெரிய தத்துவங்கள் மூலம் கூட விளங்காத வாழ்க்கையின் மெல்லிய அர்த்தங்கள், எளிய வார்த்தைகள் மூலம் விளங்கி விடும் என்பதற்கு இந்தப் படத்தின் வசனங்கள் எடுத்துக்காட்டு.
சம்மரை அறிமுகப் படுத்தும் வரிகள்.
'சம்மருக்கு மிகப் பிடித்த விஷயங்கள் இரண்டு.ஒன்று, அவளது நீளமான கூந்தல்.இரண்டு,அதை எந்த நேரத்திலும் அவள் வெட்டி விடுவது !'
இயக்குநர் கதை சொல்லி இருக்கும் முறை அற்புதம்.
வழக்கமாக,நாம் சொல்வதைப் போல 'ஒரு ஊரில்' என்று கதையை ஆரம்பித்துப் பால பாடம் நடத்துவதைப் போல இல்லாமல் நாயகன்,நாயகி பழகும் 500 நாட்களில் 300 வது நாள்,167 வது நாள், 410 வது நாள் என்று எங்கெங்கோ கதை நகருகிறது.
காதலர்களை எந்தத் தருணத்தில் பார்த்தாலும் சுவாரஸ்யந்தான் என்று சொல்லும் திரைக் கதை உத்தியின் பிரமிப்பு இன்னும் என்னைத் திகைக்க வைக்கிறது.
பிரம்மாண்டங்களைக் காட்டி, நமது வல்லுணர்வுகளை மிரள வைக்கும் படம் அல்ல இது.ஒற்றைப் புல்லாங்குழலை வைத்துக் கொண்டு, உங்கள் உள்மனதின் மெல்லுணர்வுகளை வருடிக் கொடுக்கும் வகை இந்தத் திரைப்படம்.
ஹாலிவுட் பாலாவோ அல்லது அவரது குருநாதர் கேபிள் ஷங்கரோ அல்லது திரை ரசனையில் வல்ல மற்ற சக பதிவர்களோ இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தால்,அதன் சுட்டிகளைத் தரும் படி கேட்டுக் கொள்கிறேன்.
படத்தைப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்,நண்பர்களே.
http://www.youtube.com/watch?v=PsD0NpFSADM