புதன், ஜூன் 17, 2009

97 வயது மகிழ்ச்சி!


நமது அருமை நண்பர் 'அது ஒரு கனாக்காலம் ' சுந்தர ராமன் அவர்கள் எனக்கு மிகவும் உத்வேகம் தரும் ஒரு மின்னஞ்சல் அனுப்பி இருந்தார்.
ஆங்கிலத்தில் இருந்த அந்த வாழ்க்கைச் செய்தியை உடனடியாக எல்லோருடனும் பகிர்ந்து கொண்டால் அனைவருக்குமே பயனளிக்கும் என்ற எண்ணத்தில் அதனுடைய தமிழ் வடிவத்தை இங்கே தருகிறேன்.

97 வயது நான்கு மாதங்கள் ஆகிறது மேலே நீங்கள் படத்தில் பார்க்கும்
ஜப்பானிய டாக்டருக்கு.
உலகிலேயே நீண்ட வருடங்கள் மருத்துவப் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர்களில் அவரும் ஒருவர்.மருத்துவக் கல்வி பயில்விக்கும் கல்வியாளராகவும் இருப்பவர்.
அவரது பெயர் Dr.Shigeagi Hinohara. தமிழில் அதை நான் அச்சிட்டால் இப்படி வருகிறது .டாக்டர்.ஷிகியேகி ஹிநொஹர.(அந்த அரும் பெரும் முதியவர் என்னை மன்னிப்பாராக)
டோக்கியோவில் இருக்கும் St.Luke அகில உலக மருத்துவமனையில் 1941 ம வருடத்தில் இருந்து அவரது மாயக் கரங்கள் பட்டுக் குணமானோர் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
இரண்டாம் உலகப் போரில் சிதிலமடைந்த டோக்கியோ நகரில் உலகத் தரம் வாய்ந்த ஒரு மருத்துவ மனையையும் ,மருத்துவக் கல்லூரியையும் நிறுவ வேண்டும் என்ற தனது கனவை கடின உழைப்பினால் அவரே நிறைவேற்றினார்.
இன்று அந்த இரண்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் டாகடர் 150 புத்தகங்களுக்கும் மேலே எழுதி மற்றவர்களுக்கு ஒளிகாட்டி இருக்கிறார்.

பல லட்சம் பிரதிகள் விற்றிருக்கும் ''Living Long,Living Good'' என்ற டாக்டரின் புத்தகத்தில் இருந்து நாம் பயன் பெறச் சில வழிகாட்டல்கள்...

'நன்றாக இருக்கிறோம்' என்ற உணர்வுதான் நமக்கு ஆற்றலைத் தருகிறதே அன்றி வெறுமனே நல்ல உணவுகளைச் சாப்பிடுவதாலோ இல்லை நீண்ட நேரம் தூங்கி ஓய்வெடுப்பதாலோ அல்ல.இந்த உண்மையைத் தெரிந்து கொள்ள வேறெங்கும் போக வேண்டாம்,நமது குழந்தைப் பருவத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்.
குதித்துக் களித்து விளையாடிய போது எத்தனை முறை உண்ணாமலேயே இருந்திருப்போம்.தூக்கத்தையே மறந்து ஆடித் திளைத்திருப்போம்.ஆனால் அப்போது குழந்தைகளாக இருந்த பொழுது பொங்கிய சக்தி இப்போது வேளா வேளைக்கு உண்டு,உறங்கும் நம்மிடம் இருக்கிறதா?நிச்சயம் இல்லை.
எனவே பெரியவர்களான பின்னும் ஆற்றலைப் பெருக்கும் அந்தக் குழந்தை மனோபாவத்தை இழந்து விடாதீர்கள்.
நேரத்துக்கு மதிய உணவு,நேரத்துக்குத் தூக்கம் என்ற வெற்றுக் கட்டுப் பாடுகளால்தான் உடல் களைப்படைகிறது.உடல் நலம் என்பது வெறும் விதிகளால் பேணப் படுவதல்ல.

மதம்,மொழி,நாடு,இனம் எல்லாவற்றையும் கடந்த ஒரு உண்மை என்னவென்றால் அதிக நாள் உயிர் வாழ்பவர்கள் எல்லாம் அதிக உடல் எடை இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே.
எனது காலை உணவு காஃபி,ஒரு டம்ளர் பால், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் கலந்து ஆரஞ்சுச் சாறு
ஆலிவ் ஆயில் ரத்தக் குழாய்களின் நலத்துக்காகவும்,தோலின் பொலிவுக்காகவும்.
மதியம் பாலும்,கொஞ்சம் பிஸ்கட்டுகள் மட்டுமே.அதுவும் வேலை மிகுதியாக இருந்தால் மதியச் சாப்பாடே நான் உண்ணுவதில்லை.வேலையில் முழுக் கவனமும் செலுத்தும் போது எனக்குப் பசியே எடுப்பதில்லை.
இரவு காய்கறிகள்,ஒரு துண்டு மீன், சாதம்.
வாரத்துக்கு இரண்டு முறை கொழுப்பற்ற நூறு கிராம் இறைச்சி.

அடுத்து,எதையுமே முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
2014 வரை எனது பணிகள் என்னவென்று என்னால் திட்டமிடப் பட்டு விட்டன.அதில் எனது கேளிக்கையும் அடங்கும்,2016ல் டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக்ஸ்தான் அது!

பணி ஓய்வு என்பதற்கு அவசியமே இல்லை.அப்படிக் கண்டிப்பாகத் தேவை என்றால் 65வயது தாண்டிய பிறகு யோசிக்கலாம்.

உங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.நான் வருடத்துக்கு 150 விரிவுரைகள் ஆற்றுகிறேன்.60 முதல் 90 நிமிடங்கள் வரை உரையாற்றுகிறேன்,உடல் பலத்தைப் பெருக்குவதற்காக நின்று கொண்டு!

உங்கள் மருத்துவர் உங்களுக்கு ஒரு பரிசோதனையையோ,அறுவைச் சிகிச்சையையோ பரிந்துரைத்தால் அவரிடம் நீங்கள் முதலில் கேட்க வேண்டிய கேள்வி இதுதான்.
'உங்கள் கணவருக்கோ,மனைவிக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கோ இதே சிகிச்சையைப் பரிந்துரைப்பீர்களா?' என்பதே அது.
பொதுவாக மக்கள் நம்பிக் கொண்டிருப்பதைப் போல எல்லோரையுமே டாக்டர்கள் குணப் படுத்தி விட முடியாது.
தேவை இல்லாமல் அறுவைச் சிகிச்சைகளுக்கும்,அவற்றின் வலிகளின் கொடுமைகளுக்கும் ஏன் ஆளாகிறீர்கள்? எனக்குத் தெரிந்து இசைக்கு நிறைய நோய்களைக் குணப் படுத்தும் ஆற்றல் இருக்கிறது,அதுவும் மற்ற மருத்துவர்கள் கற்பனையே செய்யாத அளவுக்கு.

உடல் நலத்துடன் இருக்க படிக்கட்டுக்களில் ஏறிச் செல்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.அத்துடன் உங்கள் பொருட்களையும் நீங்களே சுமந்து செல்லுங்கள்.நான் என் தசைகள் வலுப் பெற எப்பொழுதும் இரண்டிரண்டு படிகளாகத்தான் ஏறிச் செல்கிறேன்.

எனக்கு உத்வேகம் அளிப்பது ராபர்ட் ப்ரௌனிங்கின் 'அப்ட் வொக்லர்' என்ற கவிதைதான்.எனது சிறுமைப் பிராயத்தில் எனது தந்தை எனக்கு வாசித்துக் காட்டியது.
சிறிய கிறுக்கல்களை விடப் பெரிய ஓவியங்களையே வரைய முயல வேண்டும் என்று அந்தக் கவிதை தூண்டுகிறது.
நாம் உயிரோடு இருக்கும் வரையிலும் போட்டு கொண்டே இருந்தாலும் முடிக்க முடியாத ஒரு மாபெரும் வட்டத்தை வரைய வேண்டும் என்கிறது அந்தக் கவிதை.நாம் பார்க்கப் போவதெல்லாம் அந்த வட்டத்தினுடைய ஒரு சிறிய வளைவையே.மீதி எல்லாம் நம் பார்வைக்கு அப்பாற்பட்டு இருந்தாலும் தூரத்தில் அந்த வட்டம் பூர்த்தியாகத்தான் இருக்கிறது.

வலி என்பது ஒரு புரியாத புதிர்.வலியை மறப்பதற்கு ஒரே வழி நம் மனதை வேறு கேளிக்கைகளில் ஈடுபடச் செய்வதுதான்.பல்வலியால் வேதனைப் படும் குழந்தையிடம் விளையாடிப் பாருங்கள்.அது வலியை மறந்து விட்டு உங்களுடன் விளையாட ஆரம்பித்து விடும்.எல்லா மருத்துவ மனைகளிலும் கேளிக்கை சாதனங்கள் இடம் பெற வேண்டும்.எங்கள் செயின்ட்.லியூக் மருத்துவ மனையில் இசை நிகழ்ச்சிகள்,விலங்குகள் மூலம் சிகிச்சை,ஓவிய வகுப்புக்கள் அனைத்தும் உண்டு.

பொருட்களைக் குவித்துக் கொண்டே போக வேண்டும் என்ற வெறியில் பைத்தியம் பிடித்து அலையாதீர்கள்.உங்கள் கணக்கு முடிந்து நீங்கள் போகப் போகும் அந்த இடத்திற்கு நீங்கள் எதையுமே எடுத்துச் செல்ல முடியாது.

மருத்துவ மனைகளின் அனைத்துப் பகுதிகளிலும் சிகிச்சை கொடுக்கும் வசதிகள் இருக்கும் படி அவை கட்டப் பட வேண்டும்.எங்கள் மருத்துவ மனையில் காரிடார்கள்,பேஸ்மென்ட்கள், சர்ச் ஹால் இப்படி எங்கு வேண்டுமானாலும் நோயாளிகள் சிகிச்சை பெற முடியும்.அதனால்தான் தீவிர வாதிகளின் விஷ வாயுத் தாக்குதலில் பாதிக்கப் பட்டு ஒரே நேரத்தில் இங்கே அனுமதிக்கப் பட்ட 740 பேரில் 739 பேரை எங்களால் காப்பாற்ற முடிந்தது.

விஞ்ஞானத்தால் மக்கள் அனைவரையும் குணப்படுத்தவோ,மக்கள் அனைவருக்கும் உதவி புரியவோ முடியாது.அது மக்கள் அனைவரையும் ஒட்டு மொத்தமாகத்தான் பார்க்கும்,ஆனால் வியாதிகளோ தனித் தன்மைகள் கொண்டவை.ஒவ்வொரு மனிதனும் பிரத்தியேகமானவன்.அவனது நோய்கள் அவனது இதயத்தோடு தொடர்பு கொண்டவை.அதனால் ஒரு மனிதனின் நோய்களை அறிந்து கொள்ளவும்,அவற்றைக் குணப் படுத்தவும் வெறும் மருத்துவக் கலை மட்டும் போதாது.ஓவியம்,இசை போன்ற மற்ற கலைகளின் பங்களிப்பும் வேண்டும்.

வாழ்க்கை சம்பவங்களால் நிறைந்தது.நான் ஒரு முறை விமானத்தில் சென்ற போது அது தீவிர வாதிகளால் கடத்தப் பட்டு நான்கு நாட்கள் 40 டிகிரி வெப்பத்தில் கைகளில் விலங்குகள் மாட்டப் பட்டுப் பிணைக் கைதியாக இருக்க நேர்ந்தது.அந்தச் சூழ்நிலையிலும் ஒரு டாக்டராக எனது உடலில் நடைபெற்ற மாற்றங்களையே ஒரு பரிசோதனை போலக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தேன்.
அப்போதுதான் நெருக்கடியான சந்தர்ப்பங்களில் எப்படி உடல் தனது இயக்கங்களையே மெதுவாக மாற்றிக் கொள்கிறது என்பதை உணர்ந்து வியந்து போனேன்.

நமக்கென்று ஒரு ரோல் மாடலை உருவாக்கிக் கொள்ள வேண்டும். பிறகு அவர்களை விடச் சிறப்பாக நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதே நமது குறிக் கோளாக இருக்க வேண்டும்.பிரச்சினைகளைச் சந்திக்கும் போது அவற்றையே நமது ரோல் மாடல்கள் எப்படி அணுகுவார்கள் என்பதைச் சிந்தித்துச் செயலாற்றினால் எந்தப் பிரச்சினையுமே கையாள்வதற்கு எளிதாக இருக்கும்.

60 வயது வரை உங்கள் குடும்பத்துக்காக உழையுங்கள். அதற்குப் பிறகு நீங்கள் வாழும் சமூகத்திற்கு உங்களது பங்களிப்பைச் செய்யுங்கள்.இதுவே நீங்கள் சேவைகள் புரியத் தொடங்கும் தருணம்.

நீண்ட நாட்கள் வாழ்வது ஒரு இனிமையான அனுபவம்.
இன்றும் ஒருநாளைக்கு 18 மணி நேரம் நான் உழைக்கிறேன்,அதன் ஒவ்வொரு நிமிடத்தையும் நேசித்தபடியே.

- Dr.Shigeagi Hinohara

ஞாயிறு, ஜூன் 14, 2009

ஒரு உண்மைச் சம்பவம்,ஆனால் எத்தனை திருப்பங்கள்

நண்பர் விஜய் ஷங்கரின் இடுகையில் நான் ஆங்கிலத்தில் படித்த ஒரு உண்மைச் சம்பவத்தைத் தமிழில் தர முயன்றிருக்கிறேன்.
ஒரு திரைப் படத்தில் கூட இவ்வளவு சுவாரசியமான திருப்பங்கள் நிகழ நாம் பார்த்திருக்க முடியாது.
ஆங்கில மூலத்தைப் படிக்க விரும்போவோர் பார்க்க வேண்டிய சுட்டி:
http://www.vijayashankar.in/2009/06/interesting-story-from-ab-seniors-blog.html

இனித் தமிழில்:

1994 இல் அமெரிக்கக் குற்றவியல் துறையின் பிரசிடென்ட் ஆன டாக்டர்.டான் ஹார்பர் மில்ஸ் தனது வருடாந்திர விருந்தொன்றில், கூட்டத்தினரை வியப்பில் ஆழ்த்திய இந்த உண்மைச் சம்பவத்தினைக் கூறுகிறார்.

எவ்வளவு சட்டச் சிக்கல்கள் நிறைந்த குழப்பமான மரணம் அது!

1994,மார்ச் மாதம் 23ம நாள்.
ரொனால்ட் ஓபஸ் என்பவன் தனது பத்தாவது மாடிக் கட்டிடத்தில் இருந்து குதித்துத் தற்கொலை செய்து கொள்கிறான்.
வாழ்க்கையில் தனக்கு ஏற்பட்ட விரக்தியே தனது தற்கொலைக்குக் காரணம் என்று கடிதமும் எழுதி வைத்திருக்கிறான் ஓபஸ்.
ஆனால் அவனது உடலைப் பரிசோதித்த மருத்துவ நிபுணரோ, ஓபஸ் தலையில் குண்டடி பட்ட காயத்தினால்தான் இறந்திருக்கிறான் என்று கூறினார் .

ஓபஸ் பத்தாவது மாடியில் இருந்து விழுந்து கொண்டிருக்கும் போது,இடையில் இருக்கும் ஏதோ ஜன்னலில் இருந்து பாய்ந்து வந்த துப்பாக்கிக் குண்டுகள்தான் அவன் தலையில் வெடித்து அவன் இறந்திருக்கிறான் என்று பின்னர் தெரிய வருகிறது.

ஆனால்,ஓபஸ்,துப்பாகியால் சுட்டவன் இருவருக்குமே ஒரு விஷயம் தெரியாது.

கீழே எட்டாவது மாடியில், அங்கு வேலை செய்யும் கட்டிடத் தொழிலாளிகளின் பாதுகாப்பிற்காக வலை கட்டி வைத்து இருக்கிறார்கள் என்பதே அது.
அந்தக் கட்டிடத்தில் யாரும் பத்தாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலையே செய்து கொள்ள முடியாது!

எனவே ஓபஸ் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருந்தாலும் அது சாத்தியப் பட்டிருக்க முடியாது. ஆதலால் அவனது சாவுக்குக் காரணம்,தலையில் அடிபட்டிருக்கும் குண்டடியே, இது யாரோ ஒருவனின் கொலை முயற்சியே என்று குற்றம் சாட்டுகிறார் குற்றவியல் துறை மருத்துவர்.

விசாரணையில் சுட்டவர் யாரென்று தெரிந்து விடுகிறது.

ஒரு வயதான கிழவர்!

தனது மனைவியுடன் வாய்ச் சண்டை முற்றிக் கிழவியைச் சுட்டு விடுவேன் என்று துப்பாக்கியைக் காட்டி மிரட்டி இருக்கிறார் அவர்.கிழவி அதற்கும் அடங்காமல் பேசிய போது துப்பாக்கியின் விசையை ஆத்திரத்தில் அழுத்தி விட்டார் முதியவர்.
துப்பாக்கியில் இருந்து பாய்ந்து வந்த குண்டுகள்,கிழ்வியிடம் இருந்து குறி தப்பித் தற்கொலைக்காக் கீழே குதித்து விழுந்து கொண்டிருந்த ஓபசின் தலையைத் துளைத்து விட்டன!

ஒருவன்'ஏ 'வைக கொள்ளும் முயற்சியில் 'பி' சாவதற்குக் காரணமானாலும் அது 'பி'யைக் கொன்ற கொலைக் குற்றமே என்பதே சட்டம்.எனவே ஓபசைக் கொன்ற கொலைக் குற்றவாளியாகத்தான் கிழவர் கருதப் பட வேண்டும் என்று சட்ட ரீதியாகச் சொல்லப் பட்டது .
ஆனால் கிழவரின் வாதமோ வேறு.

வயதான தனது மனைவியை அடக்குவதற்குத், தான் அடிக்கடி துப்பாக்கியைக் காட்டிச் 'சுட்டு விடுவேன்' என்று மிரட்டுவது தனது வழக்கந்தான் என்றாலும் ஒருபோதும் துப்பாக்கியில் குண்டுகள் இருந்ததில்லை ,அது எப்போதும் காலித் துப்பாக்கியே என்று அவர் சாதித்தார்.
கிழவியும் அதனை உண்மைதான் என்று ஒப்புக் கொண்டாள்.
எனவே தனது மனைவியையே தான் கொல்லும் எண்ணத்தில் இல்லாத போது தான் எப்படி இன்னொருவர் சாவுக்குக் காரணமாக இருக்க முடியும் என்று கிழவர் வாதாடினார்.
துப்பாக்கியில் இருந்த குண்டுகள் தற்செயலாக நிரப்பப் பட்டிருக்கலாமே ஒழிய ஒருவரைக் கொல்லும் நோக்கத்தில் அல்ல,எனவே இது திட்டமிடப் பட்ட கொலை அல்ல,ஒரு விபத்தே என்று முதியவரும் ,அவரது மனைவியும் மன்றாடுகிறார்கள்.
இப்போது துப்பாக்கியில் குண்டுகளை யார் நிரப்பி இருப்பார்கள் என்று தீர விசாரிக்கையில் இன்னொரு சாட்சி வருகிறார்.
ஆறு வாரங்களுக்கு முன் அந்த முதிய தம்பதியரின் மகன், துப்பாக்கியில் குண்டுகளைப் போட்டுக் கொண்டிருந்ததைத் தான் நேரடியாகப் பார்த்ததாக அந்த சாட்சியம் சொல்லிற்று!
அவர்களது மகனுக்குக் கொடுத்து வந்த பண உதவியை நிறுத்தச் சொல்லி விட்டாள்,கிழவி.எப்போதும் தனது தாயைக் காலித் துப்பாக்கியைக் காட்டி மிரட்டும் அப்பாவைப் பற்றித் தெரிந்து வைத்திருந்த மகன்,பணம் வர முட்டுக் கட்டையாக இருந்த அம்மாவைப் பழி வாங்க இதனைப் பயன் படுத்திக் கொண்டான்.
அப்பாவுக்குத் தெரியாமல் துப்பாக்கியில் தோட்டாக்களைப் போட்டு வைத்து விட்டான்!
எனவே ஓபசின் கொலை வழக்கில் வயதானவர்களின் மகனே கொலையாளி என்று தீர்ப்பளிக்கப் பட்டது.

இப்போது வருவதுதான் எல்லாவற்றையும் விட மிகப் பெரிய திருப்பம். திருப்பங்களின் ராஜா!

அந்த மகன் வேறு யாருமல்ல ,ரொனால்ட் ஒபஸ்தான்!!

ஆறு வாரங்கள் ஆகியும் தன் தாயைத் தான் திட்டமிட்டபடி கொல்ல முடியவில்லையே என்ற விரக்தியில் பத்தாவது மாடியில் இருந்து குதித்துத் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறான் ஓபஸ்.
அப்பாவின் துப்பாக்கியில் அவன் நிரப்பிய தோட்டாக்களே அவன் உயிரைக் குடித்து விட்டன.
எனவே ஓபஸ் செய்து கொண்டது தற்கொலையே என்று சட்டம் தீர்ப்புச் சொல்லியது!

வியாழன், ஜூன் 11, 2009

சாணக்கியனின் சிறுகதை.(ரசனை உரை)

சாணக்கியனின் 'உரத்த சிந்தனை ' வலைப் பூவில் நேற்று ஒரு சிறுகதை படித்தேன்.

'சாக்லேட் சாப்பிடாத சிறுவன்'

அதற்கு இப்படிப் பின்னூட்டம் இடாமல் என்னால் இருக்க முடியவில்லை.

''மனம் விட்டுச் சொல்கிறேன்,அருமை.அருமையினும் அருமை.
எல்லா விதத்திலும் சிறப்பான சிறுகதை.
உங்கள் பாத்திரப் படைப்பின் திறம் கண்டு நானே கூசிப் போனேன்.
வாழ்க.வளர்க.''

ஒரே பக்கத்தில் இவ்வளவு செறிவான பாத்திரப் படைப்பினைப் படித்து எவ்வளவு நாட்கள் ஆயிற்று.

படித்து விட்டுச் சொல்லுங்கள்,சாணக்கியனுக்கு வாழ்த்துக்களை.

அவரது இடுகை முகவரி:http://vurathasindanai.blogspot.com/2009/06/blog-post_10.html

திங்கள், ஜூன் 08, 2009

ஆவி நாய் (திரைப் பட ரசனை)

ஆவி நாய்.
(THE GHOST DOG)
LIVE BY THE CODE.DIE BY THE CODE.

எழுத்து,இயக்கம் : ஜிம் ஜார்முஷ்
நடிப்பு :ஃபாரஸ்ட் விட்டேகர்
சாமுராயின் நெறி அவனது மரணத்தில் தெரியும்.
-ஹக குரே (இலைகளின் நிழலில்),சாமுராயின் புத்தகம்.

கொலைகளைப் பிறந்த நாள் கேக் ஊட்டி விடுவதைப் போல உங்களுக்குள் ஒரு திரைப் படம் ஊட்டி விட முடியுமா,பாருங்கள் 'கோஸ்ட் டாக்'.
இவ்வளவு முறையாக வன்முறையைச் சித்தரிக்கும் படத்தை நான் அண்மையில் பார்க்கவில்லை.
இதனைக் கதை என்பதனை விட ஒரு நவீன சாமுராயின் வாழ்க்கையின் ஒரு பகுதி எனலாம்.
இனிப் படம்...
வெளிர் நீல வானில் தன்னந்தனியே பறக்கும் ஒரு சாம்பல் புறா.அதனுடைய பறவைப் பார்வையாக காமிரா அந்த அமெரிக்கச் சிறு நகரத்தைக் காண்பித்துக் கொண்டே வருகிறது.ஆகாயத்தில் இருந்து பார்த்தால் நமது கணக்கில் ஆம்பூர்,வாணியம்பாடி போல ஒரு தொழில் நகரம் அது.
பின்னணியில் ஒரு ஜப்பானிய இசை,மனதை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் கொண்டு செல்கிறது.
கடைசியாக காமிரா ஒரு மொட்டை மாடியில் பலகைகளால் வேய்ந்த ஒரு மர வீட்டில் போய்த் தேங்கி நிற்கிறது.
இரவு.
ஓரிரண்டு மஞ்சள் விளக்குகளின் மெல்லொளியில் அந்த மொட்டை மாடி மர வீடு எளிமையாகத், தனிமையாக நிற்கிறது.அதன் வாசல் முழுக்க வித விதமான புறாக்கள்.ஒரு பக்கம் ஒரு பெரிய புறாக் கூண்டு.
வீட்டின் உள்ளே அமர்ந்து அமைதியாக ஒருவன் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறான்.அதுதான் 'சாமுராயின் நெறி முறைகள்' என்று பிரபலமாகக் கூறப்படும் 'ஹக குரே' என்ற பதினேழாம் நூற்றண்டைச் சேர்ந்த ஒரு சாமுராயின் நூல்.
அதனுடைய வரிகளை ஒரு கனத்த ஆண்குரல் நமக்குச் சொல்கிறது.
'சாமுராயின் நெறி அவனது மரணத்தில் தெரியும்.'
ஒவ்வொரு வரியுமே ஒரு ஸென் கவிதை போலச் சொல்லப் படுகிறது.
அந்தப் பதினேழாம் நூற்றாண்டுப் புத்தக வரிகளின் விரிவுரையாக, இன்றைய வாழ்க்கையின் நிகழ்ச்சிகளைச் சொல்லிக் கொண்டு செல்கிறது படம்.
மரணத்தின் தியானம்தான் ஒரு சாமுராயின் வாழ்க்கை முறை.
எந்த நேரத்திலும் சாகத் தயராக இருக்க வேண்டும் என்பதே சரியான ஒரு போர் வீரனின் இலக்கணம் என்று சொல்லப் படுகிறது.
படித்துக் கொண்டிருப்பவன் கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவன்.ஆறடிக்கு மேல் உயரமாய் உருண்டு திரண்டிருக்கும் அவன்தான் 'ஆவி நாய்'.அவனுக்குப் பெயரே சொல்லப் படுவதில்லை.இந்த அடைமொழியால் மட்டுமே அழைக்கப் படுகிறான்.

மொழியே தெரியாத ஒருவனுடன் அவனது நட்பு,சிறுமி ஒருத்தியிடம் அவன் காட்டும் தூய அன்பு,வினோதமான அவனது வழிபாடு,கள்ளங் கபடமற்ற அவனது குழந்தைச் சிரிப்பு,எல்லோவற்றிற்கும் மேல் அவனது உயிரை ஒரு முறை காப்பாற்றிய ஒரு அயோக்கியனிடம் அவன் கொண்டிருக்கும் விசுவாசம்,விலங்குகள்,பறவைகளை அவன் நேசிக்கும் இயற்கையான மனித நேயம்,அவனது புத்திக் கூர்மை இப்படி முழுக்கச் சொல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் அவனைப் பற்றிச் சொல்லப் படும் தகவல்கள்தான் அவனை முழுக்கத் தெரிந்து கொண்டே தீர வேண்டும் என்ற ஆர்வத்தை நம்முள் படம் முடியும் வரை தூண்டிக் கொண்டே இருக்கிறது.

அவனுக்கும் உள்ளூரில் இருக்கும் சிறிய மாஃபியாக் கும்பலுக்கும் நடக்கும் மோதல்தான் படமே.
குழந்தைகளின் வாட்டர் கலர்களைப் போலப் பயமுறுத்தாத ரத்தம் சிந்தல்.
உணர்ச்சிகளைத் தூண்டாத,அமைதியான கொலைகள்.
பூக்களைக் கொய்வதைப் போல மனித உயிர்களைப் பறிக்கும் அந்த சாமுராயைக் கொஞ்ச நேரத்திலேயே நாமும் நம்மை அறியாமலேயே நேசித்து விடுகிறோம்.

அழகான பெண்கள்,மயிர்க் கூச்செறியும் சண்டைக் காட்சிகள்,ஆடம்பரமான கார்த் துரத்தல்கள்,நெஞ்சைப் பிழியும் உணர்ச்சிகள்,குத்துப் பாட்டுக்கள்,வீர வசனங்கள்,உரத்த காமெடிகள் எதுவுமே இல்லாமல் இந்தப் படம் நம்மைக் கட்டிப் போடுகிறதே எப்படி?
மனிதனுக்குள் இருக்கும் ஆன்மாவைத் துல்லியமாகச் சித்தரிப்பதை விட வேறு கேளிக்கையே தேவை இல்லை என்பதற்கு இந்தப் படமே உதாரணம்.

இந்த 'மரணத்தின் தியானத்தைப்' பார்த்து விட்டுச் சொல்லுங்கள்.