உயிர் (LIFE)
விழிப்புணர்வு (AWARENESS)
உடல் (body)
தன்னுணர்வு (consciousness)
பட்டறிவு (cognition)
நினைவு (memory)
மனம் (mind)
உணர்வு (feeling)
எண்ணம் (thought)
செயல் (deed)
என்று இந்தத் தளங்களின் வரிசையில் நீள்கிறது நம் வாழக்கை.
சொல்லப் போனால் காலமும்,மொழிகளும் ஆறாவது தளத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது.
ஆகவே காலத்துக்கும் முன்னால் இருக்கும் தளங்களுக்கும் நமது மொழிகளுக்கும் தொடர்பே இல்லை.அதாவது எந்த மொழியும் அந்த நிலைகளை விவரிக்க இயலாது. எப்போது மொழிகளால் உணர்த்தப் படுமோ அப்போதே அது காலத்தால் கட்டுப் பட்டு விடுகிறது.
அதனால்தான் ஆதி மூலமான முன் ஐந்து தளங்களில் பிரவேசித்தவர்கள் தாங்கள் உணர்ந்ததைச் சொல்ல இப்படி முடிவெடுத்தார்கள் .
'கண்டவர் விண்டிலர்,விண்டவர் கண்டிலர்'!
எப்போது ஒன்றைப் பற்றிச் சொன்னார்களோ,அப்போதே அதுவும் பொய்யாயிற்று! ஏன் என்றால் மொழிகள் நுழைய முடியாத இடத்தை எப்படி சொற்களால் சொல்வது?
எனில் எப்படி ஞானிகள் நம்முடன் உரையாடினார்கள்?எப்படி இத்தனை வேதங்கள்?உபநிடதங்கள்?
எந்த வேதமும் நடக்கிறதைச் சொல்ல முடியாது .நடந்ததைத்தான் சொல்லும். நடக்கிறதுதான் இயற்கை.உண்மை.நடந்ததாகச் சொல்லப் படுவதெல்லாம் நிழலே.
நிஜத்தின் நிழல்,நிஜமே ஆகி விடாது.
கண்ணாடியில் தெரியும் உங்கள் பிம்பம் உங்களைப் பிரதிபலிக்கும்.ஆனால் அதுவே நீங்கள் அல்ல.
அதனால்தான் உண்மையான வேதங்கள் எல்லாம்,ஆழத்தில் தங்களையே நிராகரித்துக் கொள்ளும்.
எது சொல்லப் படுகிறதோ அது டாவோ (இறைமை) இல்லை என்கிறார் லாவோட்சு.
மனிதனின் முதல் பகுப்பே காலத்தைப் பிரித்ததிலிருந்து துவங்குகிறது .அதுவே மனித சிந்தனையின் ஆரம்பம்.நேற்று நடந்தது,இன்று நடக்கிறது,நாளை நடக்கப் போவது என இடைவெளி இல்லாத ஒரு மாபெரும் கால சமுத்திரத்தை,தான் நுட்பமாக ஆராயும் வசதிக்காக மனிதன் செயற்கையாகப் பிரித்துக் கொண்டான்.காலத்தை ஒரு ஓட்டமாக,இயக்கமாக உருவகித்துக் கொண்டான்.நினைவுகளைத் தேக்கி வைக்கும் மூளை அமைப்பு அதற்கு ஒரு மாபெரும் ஆற்றல் வாய்ந்த கருவி ஆனது.ஆனால் உண்மையில் நாம் ஒரு காலத்தைக் கடந்த, ஒரு TIMELESS ZONE ல் தான் வாழ்கிறோம்.இந்தக காலமும் ,சொற்களும் அற்ற நிலையைத்தான் நம் ஆழ்துயிலில் தினமுமே அனுபவிக்கிறோம்.
எனவே வார்த்தைகளும், அவற்றை விடத் துல்லியமான எண்களுமே புக முடியாத உயிரின் அந்தரங்கமான வெளிக்குள் நாம் நுழைய முடிந்தால் அது என்ன அனுபவமாக இருக்க முடியும் என்பதையே திரும்பத் திரும்ப எல்லா ஞானிகளும் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .
ஆன்மா(soul)வை ஏன் விட்டுவிட்டீர்கள் நண்பரே?
பதிலளிநீக்குஐயா,
பதிலளிநீக்குஇந்தத் தளத்திற்கு முதல் பின்னூட்டமே நான்தான் இட வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் எனதருமை வாத்தியார் முந்திக் கொண்டார்.
எப்போதும் மாணவன்தான் ஆசிரியரை முந்தவேண்டும்.. வலையுலகில் இந்த வாத்தியார் ஒருவர்தான் மாணவர்களை அவ்வப்போது முந்திக் கொண்டேயிருக்கிறார் வாழ்க.
மற்றபடி பதிவு சூப்பர் என்றோ, நன்றாக இருக்கிறது என்றோ பொய் சொல்லி எனது முதல் அறிமுகத்தைத் துவக்க விரும்பவில்லை.
இயக்குநர் ஸார்.. மறுபடியும் மறுபடியும் படித்துப் பார்க்கிறேன்.. உங்களுடைய இது தொடர்பான முதல் பாகத்தில் இருந்து படித்து வருகிறேன்..
இனியும் எழுதுங்கள்.. கடைசி வரையிலும் படிக்கிறேன். மொத்தமாக படித்த பின்பு, முழுவதும் புரிந்துவிட்ட பின்பு, மறுபடியும் எனது கருத்துரையை இடுகிறேன்..
இப்போதைக்கு உள்ளே வந்து வருகைப் பதிவேட்டில் எனது பெயரை பதிவு செய்து கொள்கிறேன்..
தங்கள் வரவு நல்வரவாகட்டும்..
வாழ்க வளமுடன்