அமிர்தவர்ஷிணி
2.
முருகன் கோவில் அடிவாரத்தில் மூன்றாவது முறையாக ரத்த வாந்தி எடுத்த போதுதான் நான் முதன் முதலாகப் பயப்பட்டேன்,அப்பாவை நினைத்து.
அப்பாவை நினைத்ததும் மேலே முருகன் கோவிலில் மணி அடித்தது.அப்பா மிக மென்மையான மனிதர்.சராசரி உயரம்.மானிறம். ஐம்பதை வயதை நெருங்கும் அவருக்கு இன்னும் தலையில் ஒரு முடி கூட நரைக்கவில்லை என்பது ஆச்சர்யம்.அற நிலையத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.
நாங்கள் இருவரும் தமிழ் நாடு முழுதும் கோவில் கோவிலாகவே வாழ்ந்திருக்கிறோம். அப்பா எந்தக் கோவிலுக்குப் பணியாற்றச் சென்றாலும் அந்தக் கோவில் தெய்வத்தின் தீவிர பக்தராகி விடுவார் சிவன்,விஷ்ணு,முருகன்,அம்மன் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்துத் கடவுளர்களிடத்தும் பரிபூரண பக்தி பூண்டிருந்தவர் அப்பா.
எந்தக் கோவிலில் பணியாற்றுகிறாரோ அந்தக் கோவிலின் ஸ்தல புராணம் அவருக்குக் கரதலப் பாடமாகி விடும்.அந்தக் கோவில் தொடர்பான தமிழ், வடமொழி இலக்கியங்கள் அனைத்தையும் படித்து விடுவார்.எங்கள் வீட்டில் ஒரு பெரிய ஆன்மிக நூலகமே இருக்கிறது.கோவில் குருமார்கள், அர்ச்சகர்களுக்கே வழிகாட்டியாக இருக்கும் அப்பா துளிக் கூடக் கர்வமின்றி அவர்களிடமும் இதர கோவில் அடி நிலைப் பணியாளர்களிடமும் கனிவுடனும்,பரிவுடனும் நடந்து கொள்வதால் அப்பாவை வெறுத்துப் பேசியவர்களையோ,அல்லது அவரிடம் முகம் சுளித்தவர்களையோ கூட நான் இதுவரை பார்த்தது கிடையாது.தியானம்,யோகா,ஆழ்ந்த நூலறிவு இவற்றின் நிரந்தரப் பயிற்சியே அவரது மன முதிர்ச்சிக்குக் காரணம் என்று நினைத்துக் கொள்வேன்.அப்பாவுக்கு எப்போதுமே சைவ உணவுதான். அம்மா இறந்த பிறகு பாதி நாள் காவி வேட்டிதான்.அரைகுறைத் தாடிதான்.அவர் கிட்டத்தட்டத் துறவியாகவே வாழ்ந்தார் எனலாம்.
அவருக்கு இருந்த ஒரே உலகப் பற்று இப்போது நான்தான்.எனக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர் துடித்து விடுவார் என்பதாலேயே எனது ரத்தவாந்தியால் என்னை விட அவரை நினைத்துத்தான் நான் அதிகம் கலங்கினேன்.எனக்கு சீரியசாக எதுவும் நடந்து விடக் கூடாது என்று மயிலம் முருகனை மனதார வேண்டிக் கொண்டேன்.
சென்னை வந்ததும் நேராக அப்பாவின் நெருங்கிய நண்பரான டாக்டர்.அன்பரசனிடம் சென்றோம்.எனது நண்பர்கள் என்னை விடப் பதறிப் போயிருந்தார்கள்.ரத்த வாந்தியைப் பற்றிச் சொன்னதும் என்னை ஆதரவுடன் தோளில் அணைத்துக் கொண்டார் .அன்பரசன்
'கவலைப் படாதே சரவணா..ஏதோ ஆகாத சாப்பாட்டைச் சாப்பிட்டிருக்கேன்னு நினைக்கிறேன்.ப்ளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்துடுவோம்.நான் குடுக்கற மாத்திரைகளைச் சாப்பிடு.யூ வில் பி ஆல்ரைட்,பை டொமாரோ ஈவினிங்'
அன்பரசனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும்தான் நாங்கள் பழைய உற்சாகத்திற்குத் திரும்பினோம்.
'தேங்க்ஸ்,அங்கிள்' என்றேன் நான்,மயிலம் முருகனுக்கும் சேர்த்து.
கிளினிக்கிலிருந்து வெளியே வரும் முன்னர் 'ஒரு முக்கியமான விஷயம்' என்றார் அன்பரசன்.
திரும்பி நின்றோம்.
'இதைப் பத்தி உங்கப்பன் சாமியார் கிட்டே மூச்சுக் கூட விட்டுடாதே.அப்புறம் ஒரே நாள்ளே அவன் நாலு கிலோ இளச்சுடுவான்! அவனைத் தேத்தறதுக்கு வேறே நான் தனியா ஒரு கோர்ஸ் டானிக் தரனும்!' என்றார் அவர்.
நாங்கள் சிரித்தோம்.
'வீக் என்ட்லே நாம எல்லோரும் ஒண்ணா என் வீட்டுலே பீர் சாப்பிடப் போறோம்.என் பொண்ணு தேன்மொழி பிரமாதமா ஃபிஷ் ஃப்ரை பண்ணுவா.ஓ.கே,பாய்ஸ்?' என்றார் அன்பரசன்.
வெட்கத்துடன் 'தேங்க்ஸ் அங்கிள்' என்றார்கள் எனது நண்பர்கள்.
வெளியே வந்ததுமே 'இனிமே எங்களுக்கும் இவர்தாண்டா ஃபேமிலி டாக்டர்!' என்றான் மணி.
'டாக்டரோட பொண்ணு தேன்மொழி எப்படிடா இருப்பா?' என்று ஆர்வமாகக் கேட்டான் தாமஸ்.
'செகன்ட் இயர் எம்.பி.பி.எஸ். பண்றா!' என்றேன் நான்.
'சரி விடறா மாப்பிள்ளே,நம்ம ரேஞ்ச்லேயே நாம ஃபிஷ் ஃபிரை சாப்பிடுவோம்!' என்றான் ஹசன்.
நண்பர்களைப் பிரிந்து வீட்டுக்கு நான் வந்த போது மாலை மணி மூன்றாகி விட்டது.நன்றாகத் தூங்கி எழுந்து ஒரு குளிர்ந்த நீர்க் குளியல் போட்டதுமே பழைய சுறுசுறுப்பு வந்து விட்டது.அப்பாவைப் பார்க்க அவர் வேலை பார்க்கும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்குப் போனேன்.
நான் சென்ற போது பெருமாளுக்கு அந்திக் காலப் பூஜை நடந்து கொண்டிருந்தது.அர்ச்சகர் ஸ்வாமிக்கு ஆராதனை காட்டிக் கொண்டிருந்தார்.மஞ்சள் விளக்குகளின் ஒளியில் பெருமாள் மின்னும் தங்க வைர,நகைகளின் செல்வங்களுக்குப் பின்னால் அவற்றைப் பற்றிய எந்த ரியாக்ஷனும் இல்லாமல் சாந்தமாக நின்று கொண்டிருந்தார்.அப்பா முன்னால் நின்று கண்களை மூடி அதே அமைதியுடன் பெருமாளைக் கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பாவின் அந்த அமைதி குலையக் கூடாது என்று நானும் பெருமாளை வேண்டிக் கொண்டேன்.
'சார்,பிள்ளையாண்டான் வந்திருக்கார் பாருங்கோ' என்று அர்ச்சகர் சொன்னதும்தான் கண்கள் திறந்து என்னைப் பார்த்தார் அப்பா.அதே பாசமான பார்வை.
'எப்போப்பா வந்தே?'
'சாயந்திரம் மூணு மணி ஆயிடுச்சுப்பா' என்றேன் நான்.
ஆண்டவனை வழிபட்டு முடிந்ததும் நாங்கள் இருவரும் எப்போதும் கோவிலில் உட்காரும் கல்பெஞ்சில் அமர்ந்தோம்.
அந்திக் கருக்கலில் கோபுரம் மனித நம்பிக்கையைப் போலவே பிரம்மாண்டமாக நின்றது.ஆலய மணியின் ஓசை எப்போதையும் விட இன்றைக்கு எனக்கு ஆறுதலாக இருந்தது.
இந்தப் பின்னணியில் அப்பாவுடன் ஒன்றும் பேசாமல் உடகார்ந்திருந்தாலே உள்ளெல்லாம் குளிர்ந்து அமைதியாக இருக்கும்.பலநாள் இந்த ஆழ்ந்த சுகத்தை நான் அனுபவித்திருக்கிறேன்.
கோபுரத்தையே பார்த்துக் கொண்டு மௌனமாக அமர்ந்திருந்த எங்களது அமைதியை 'ஸ்வாமி' என்ற குரல் கலைத்தது.
திரும்பிப் பார்த்தோம்.
மடப்பள்ளி சமையற்காரரான சேஷாத்திரி கையில் ஒரு வெண்கலப் பாத்திரத்துடன் நின்று கொண்டிருந்தார்.
'உங்க ரெண்டு பேரோட ஐக்கியத்தைக் கலைச்சுட்டேன்னு நினைக்கிறேன்' என்றார் சேஷாத்திரி.
'அதெல்லாம் ஒண்ணுமில்லே சொல்லுங்க,சேஷாத்திரி' என்றார் அப்பா.
'இந்த நைவேத்தியப் பொங்கலைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்களேன்' என்று வெண்கலப் பாத்திரத்தையும் இரண்டு பிளாஸ்டிக் ஸ்பூன்களையும் நீட்டினார்,சேஷாத்திரி.
நானும்,அப்பாவும் ஆளுக்கு ஒரு வாய் சாப்பிட்டோம்.
நெய்யும்,பருப்பும்,வெல்லமும், முந்திரியும் இதற்கு மேல் இவ்வளவு அழகாக இணைய முடியாது.அத்தனை மணமான,சுவையான சர்க்கரைப் பொங்கலை நான் அதுவரை சாப்பிட்டதே இல்லை.
'உங்களோட கைமணத்துக்குச் சொல்லவா வேணும் சேஷாத்திரி.பெருமாளே உங்களோட பொங்கலைப் படைக்கலேன்னா சோகமாயிடுவார்.எப்படி சரவணா இருக்கு?'என்றார் என்னைப் பார்த்து.
'சிம்ப்ளி சூபர்ப்' என்றேன் நான்
உண்மையில் ருசித்து,ரசித்து,நான் சொன்ன வார்த்தைகளில் எல்லாம் சர்க்கரைப் பொங்கலின் நெய் மணம் வீசியது.
'உங்க வாயாலே இந்த ஆசிர்வாதம் வாங்குனது நான் இல்லே.இதைச் சமைச்சவாதான்.அமிர்தவர்ஷிணி,இங்கே வா,குழந்தே' என்று கோவில் தூணுக்குப் பின்னால் மறைந்தும் மறையாமல் நின்றிருந்த யாரோ ஒரு பெண்ணை அவர் அழைக்க அவள் வெளிப்பட்டாள்.
அந்திக் கருக்கலில், ஆலய மணியின் ஓயாத ஓசைகளுக்கு மத்தியில், பின்னணியில் நின்ற அந்த பிரம்மாண்டமன கோபுரமே பெருமையுடன் அறிமுகப் படுத்திய ஒரு வெள்ளை மின்னல் போல் தூணுக்குப் பின்னாலிருந்து வெளிப் பட்டாள் அவள்.
கரும் பச்சைப் பாவாடை தாவணியில் மெல்லென நடந்து வந்தது அந்த சுகம்.
'எங்களுக்குத் தெரிஞ்சவா பொண்ணு. பேரு அமிர்தவர்ஷிணி.பெரியவாளைச் சேவிச்சுக்க,குழந்தே' என்றார் சேஷாத்திரி.
அவளிடமிருந்து ஒரு மயக்கும் பச்சைக் கற்பூர வாசனை வீசியது.
சர்க்கரைப் பொங்கலை அவளைச் சமைக்கச் சொல்லி, ஸ்வாமிக்கு நைவேத்தியமாகப் படைப்பதை விட அவளையே சர்க்கரைப் பொங்கலாக ஸ்வாமிக்கு நைவேத்தியமாகப் படைத்திருக்கலாம் என்று தோன்றியது.
அவள் அப்பாவை நமஸ்கரித்தாள்.கூப்பிய அவளது கைவிரல்களின் அழகுக்கு நான் இன்னும் உவமையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
என்னை வெறுமனே மரியாதையான புன்னகையுடன் பார்த்தாள்.
அமிர்தத்தைப் பொழிபவள் என்ற அர்த்ததைத் தரும் அமிர்தவர்ஷிணி என்ற அவளது பெயரை சத்தியமாக அவளது விழிகளைப் பார்த்த பின்னரே அவளுக்கு யாரோ வைத்திருக்கிறார்கள்.
இப்போது உணர்ந்ததினால் சொல்கிறேன்.
பெண் அங்கங்களின் ராணி,மார்புகள் அல்ல,அவளது விழிகளே!
(தொடரும்)
(பின்குறிப்பு: இந்தக் கதையின் முதல் பாகம் கணிணித் திரையில் தோன்றிய சில மணி நேரங்களிலேயே ரசித்தும்,பின்னூட்டமிட்டும்,வாக்களித்தும் வாழ்த்தி ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் ஒட்டுமொத்தமான மகிழ்ச்சியைனையும்,நன்றியினையும் இங்கேயே தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று மாலையே எனது கதை விவாதத்திற்காக ஹைதராபாத் செல்ல வேண்டி இருப்பதால் சென்னை திரும்பியவுடன் தனித் தனியே நண்பர்களுடன் தொடர்பு கொள்கிறேன்.நன்றி.வாழ்த்துக்கள்.)
சென்று வாருங்கள்
பதிலளிநீக்குநண்பரே
இரண்டு பாகமும் சூப்பர்.
பதிலளிநீக்கு------------
கதை விவாதத்திலே அமெரிக்காவில ஒரு ஹீரோ இருக்கிற சேதிய எல்லாரு காதுலயும் போட்டு வையுங்க சார்.
நல்ல நடை, தொடருங்கள்
பதிலளிநீக்குஅய்யா,
பதிலளிநீக்குநல்ல தொடர்ச்சி,
எங்கே டாஷ்போர்டில் தெரியாமல் போய்விடுமோ? என்று உங்கள் தளம் வந்த்தேன்.
இரண்டாம் பாகம் இருந்தது.
'சரி விடறா மாப்பிள்ளே,நம்ம ரேஞ்ச்லேயே நாம ஃபிஷ் ஃபிரை சாப்பிடுவோம்!' என்றான் ஹசன்.//
வெரி யூத் ஃபுல்
ஒன்றும் பேசாமல் உடகார்ந்திருந்தாலே உள்ளெல்லாம் குளிர்ந்து அமைதியாக இருக்கும்.பலநாள் இந்த ஆழ்ந்த சுகத்தை நான் அனுபவித்திருக்கிறேன்.//
உண்மை தான் அய்யா.
பெண் அங்கங்களின் ராணி,மார்புகள் அல்ல,அவளது விழிகளே!//
நல்ல இடத்திலே தான் தொடரும் போட்டுள்ளீர்கள் அய்யா.
எழுத்து நடை அருமை..
பதிலளிநீக்குஅடுத்த அங்கத்திற்காகக்(!) காத்திருக்கிறேன.
பதிலளிநீக்குநல்லா போய்ட்டு இருக்கு..
பதிலளிநீக்குஅப்பா பையன் இடையில் இருக்கும் ஒரு பாசப்பிணைப்பை பற்றிய சமிபக்காலத்தில் நான் படிக்கும் கதை..
ஐயா அடுத்த படத்துக்கு என்னையும் சேத்துக்கோங்க.. உதவாக்கரை இயக்குனரா !!
பதிலளிநீக்குரசனை மிக்க எழுத்து நடை வாசிக்கத்தூண்டுகிறது.
பதிலளிநீக்குஅடுத்த பாகத்துக்கு வெயிடிங்...
//.. பெண் அங்கங்களின் ராணி,மார்புகள் அல்ல,அவளது விழிகளே! ..//
பதிலளிநீக்குஅருமையான வரிகள்ங்க....
அப்பாவுக்கு ஒரே பையன், பெரிய வியாதி ஏதாவது கொடுத்துடாதிங்க..
வணக்கம் சார்... அப்பறம் வந்து படிக்கின்றேன்
பதிலளிநீக்குமதிப்பிற்குரிய ஷண்முகப்பிரியன் அவர்களுக்கு
பதிலளிநீக்குஸ்வாமி ஓம்காரின் பதிவில் நீங்கள் இட்ட தரமான் , காத்திரமான் பின்னூட்டத்திற்கு என்னுடைய நன்றியையும் பாராட்டையும் தெரிவிக்கின்றேன் .
சரியாகச் சிந்திக்கும் ஒரு சக மனிதனின் ஆளுமையை சந்தோஷமாக வரவேற்கிறேன்.
ம்ம்ம் நல்லாயிருக்கு சார்... அடுத்ததையும் பார்க்கின்றேன்
பதிலளிநீக்கு