வெள்ளி, ஜனவரி 30, 2009

ஒரு நாயும் ,ஒரு சன்யாசியும்..

பிரம்மத்தைப் பற்றிப் பேசிவிட்டு வெளியே வந்த அந்த சந்யாசியைப் பின் தொடர்ந்து ஒரே கூட்டம்..
அவர் முகத்தில் அப்படி ஒரு தேஜஸ்,என்று கேட்டவர்கள் எல்லோரும் புகழ்ந்து சிலிர்த்துக் கொண்டார்கள்..
அப்போது யாரும் எதிர் பார்க்காத நேரத்தில்,எங்கிருந்தோ ஒரு நாய் அவரைப் பார்த்துக் குரைத்தபடியே ஓடி வந்தது...
சன்யாசியின் முகத்தில் அப்படி ஒரு பீதி...
எல்லோரைக் காட்டிலும்,நாயைக் கண்டு பயந்தோடியது அவர்தான்..
ஆத்ம ஸ்வரூபம் என்றெல்லாம் அவரது பின்னால் ஓடியவர்களுக்கே புரியாத விஷயங்களைப் பேசியவர் .
பயம் என்றால் என்ன என்று அவர்களுக்கு எல்லாம் விளக்கியவர்.
இப்போது ,மற்றவர்கள் யாரும் தன்னைப் பின் தொடர முடியாத வேகத்தில் ,
ஒரு நாயைக் கண்டு பயந்து இந்த வேகத்தில் ஓடினார் என்றால்
அந்தச் செயல் மூலம் தங்களுக்கு ஏதோ சொல்ல முயல்கிறார் என நினைத்த ஒருவன்தான் அந்தப் பாடத்தைக் கற்றுக் கொள்ள அவர் பின்னால் விடாமல் ஓடினான்.
கடைசியாக,நாயிடம் இருந்து தப்பித்தவுடன் அந்த சன்யாசியின் முகத்தில் மீண்டும் அந்தப் பழைய தேஜசைக் கண்டு உள்ளூர நெகிழ்ந்தான்,துரத்தி வந்து அவரைப் பிடித்தே விட்ட அந்த பக்தன்...
இருவரும் மூச்சு வாங்க நின்றார்கள்.
அப்போது அவன் கேட்டான் .
'சாமி, பயமே கூடாது என்று எங்களுக்கெல்லாம் உணர வைத்த நீங்கள்,கேவலம் ஒரு நாயைக் கண்டு பயந்து ஓடியதன் உள்ளர்த்தம் என்ன என்று எனக்கு மட்டும் சொல்லுங்கள் '
'ஒன்றுமில்லை,இந்த நாயைக் கண்டால் மட்டும் எனக்குப் பயம் !!ஏனென்றால் இது,நான் கைவிட்டு விட்டு வந்த என் சம்சாரம் வளர்க்கும் நாய்.இது ஒன்றுக்கு மட்டுந்தான் என்னைப் பார்த்தால்,நான் யார் என்ற அடையாளம் தெரியும் '
என்றார் அந்த சந்நியாசி..
துரத்தி வந்தவன் ஒரு கணம் கழித்து 'ENLIGHTENED' ஆனான்..

வியாழன், ஜனவரி 29, 2009

புத்தர் முகத்தில் ரத்தம்..

அவர்கள் இருவரும் இறக்கும் தறுவாயில் கிடந்தார்கள் ..
இருவர் முகங்களுக்கும்
நடுவில் உடைந்து கிடந்த
புத்தர் சிலையின் முகத்தில் ரத்தம் ..
இன்னும் தூரத்தில் குண்டு வீசும் விமானங்களின் சத்தம்..
அவன் அவளை முத்தமிட முயன்ற போதெல்லாம்
அவள் அவனுடன் சண்டைதான் போட்டிருக்கிறாள்..
பக்கத்து வீட்டுக் குழந்தையாய் அவன் வீட்டு வாசலுக்கு
அவள் தவழ்ந்து வந்த போது அவன் சிறுவன் ..
அப்போதும் அவன் தாவி எடுத்து முத்தமிட முயல்கையில்
அவள் கோபித்துக் கொண்டு அழுதாள்..
பள்ளிக் கூட அறையில்,
ஜன்னல் வழியே மற்ற மாணவர்கள் பார்த்துச் சிரித்துவிட
பாதியிலேயே கோபித்துக் கொண்டு ஓடி விட்டாள்...
கல்லூரி மரத்தடியில், அவளாக வந்த அன்று
அவன் வாழ்வில் முதல் வாய் மது அருந்தி இருந்ததில் வந்த கோபம்..
திருமண நிச்சயத்தன்று
உள்ளறையில் நெருங்கிய போது
அவள் அண்ணனை எதிரிகள் கொன்று விட்டார்கள் என்ற
செய்தி கேட்டு வந்த கோபம்...
குண்டு வீச்சில் அப்பா அம்மாவைப் பறிகொடுத்து விட்டு
அவன் கதறிய போது
அணைத்துக் கொண்ட அவளுக்கு
மேலே பறந்து போன விமானத்தின் மீது கோபம்...
இப்போது போராளியாய் அடிபட்டுச் சாகக் கிடக்கும் அவனும்
அகதியாய்த் தப்பித்தோடும் போது பிடிபட்டு உருக்குலைந்த அவளும் .. இதுவரை இழந்த முத்தங்களை எல்லாம் ஈடுகட்டி
தன் கடைசி மூச்சில் அவள் புன்னகையாக மாற்றித் தர,
அவன் பார்த்து மடிவதற்குள்
குறுக்கே வந்தன இரண்டு ராணுவக் காலணிகள்..

பயம்

கனவில் நான் கண்ட கனவில்
வந்த கனவில்
பூத்த பூ ஒன்று
உதிர்ந்து விடுமோ
என்று பயமாய் இருக்கிறது...

திங்கள், ஜனவரி 26, 2009

எண்கள் என்னும் இயற்கையின் மொழி..5

உயிர் (LIFE)
விழிப்புணர்வு (AWARENESS)
உடல் (body)
தன்னுணர்வு (consciousness)
பட்டறிவு (cognition)
நினைவு (memory)
மனம் (mind)
உணர்வு (feeling)
எண்ணம் (thought)
செயல் (deed)
என்று இந்தத் தளங்களின் வரிசையில் நீள்கிறது நம் வாழக்கை.
சொல்லப் போனால் காலமும்,மொழிகளும் ஆறாவது தளத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது.
ஆகவே காலத்துக்கும் முன்னால் இருக்கும் தளங்களுக்கும் நமது மொழிகளுக்கும் தொடர்பே இல்லை.அதாவது எந்த மொழியும் அந்த நிலைகளை விவரிக்க இயலாது. எப்போது மொழிகளால் உணர்த்தப் படுமோ அப்போதே அது காலத்தால் கட்டுப் பட்டு விடுகிறது.
அதனால்தான் ஆதி மூலமான முன் ஐந்து தளங்களில் பிரவேசித்தவர்கள் தாங்கள் உணர்ந்ததைச் சொல்ல இப்படி முடிவெடுத்தார்கள் .
'கண்டவர் விண்டிலர்,விண்டவர் கண்டிலர்'!
எப்போது ஒன்றைப் பற்றிச் சொன்னார்களோ,அப்போதே அதுவும் பொய்யாயிற்று! ஏன் என்றால் மொழிகள் நுழைய முடியாத இடத்தை எப்படி சொற்களால் சொல்வது?
எனில் எப்படி ஞானிகள் நம்முடன் உரையாடினார்கள்?எப்படி இத்தனை வேதங்கள்?உபநிடதங்கள்?
எந்த வேதமும் நடக்கிறதைச் சொல்ல முடியாது .நடந்ததைத்தான் சொல்லும். நடக்கிறதுதான் இயற்கை.உண்மை.நடந்ததாகச் சொல்லப் படுவதெல்லாம் நிழலே.
நிஜத்தின் நிழல்,நிஜமே ஆகி விடாது.
கண்ணாடியில் தெரியும் உங்கள் பிம்பம் உங்களைப் பிரதிபலிக்கும்.ஆனால் அதுவே நீங்கள் அல்ல.
அதனால்தான் உண்மையான வேதங்கள் எல்லாம்,ஆழத்தில் தங்களையே நிராகரித்துக் கொள்ளும்.
எது சொல்லப் படுகிறதோ அது டாவோ (இறைமை) இல்லை என்கிறார் லாவோட்சு.
மனிதனின் முதல் பகுப்பே காலத்தைப் பிரித்ததிலிருந்து துவங்குகிறது .அதுவே மனித சிந்தனையின் ஆரம்பம்.நேற்று நடந்தது,இன்று நடக்கிறது,நாளை நடக்கப் போவது என இடைவெளி இல்லாத ஒரு மாபெரும் கால சமுத்திரத்தை,தான் நுட்பமாக ஆராயும் வசதிக்காக மனிதன் செயற்கையாகப் பிரித்துக் கொண்டான்.காலத்தை ஒரு ஓட்டமாக,இயக்கமாக உருவகித்துக் கொண்டான்.நினைவுகளைத் தேக்கி வைக்கும் மூளை அமைப்பு அதற்கு ஒரு மாபெரும் ஆற்றல் வாய்ந்த கருவி ஆனது.ஆனால் உண்மையில் நாம் ஒரு காலத்தைக் கடந்த, ஒரு TIMELESS ZONE ல் தான் வாழ்கிறோம்.இந்தக காலமும் ,சொற்களும் அற்ற நிலையைத்தான் நம் ஆழ்துயிலில் தினமுமே அனுபவிக்கிறோம்.
எனவே வார்த்தைகளும், அவற்றை விடத் துல்லியமான எண்களுமே புக முடியாத உயிரின் அந்தரங்கமான வெளிக்குள் நாம் நுழைய முடிந்தால் அது என்ன அனுபவமாக இருக்க முடியும் என்பதையே திரும்பத் திரும்ப எல்லா ஞானிகளும் நமக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் .




எண்கள் என்னும் இயற்கையின் மொழி..4

இயற்கையின் உண்மையான மொழியையே எண்களின் மூலமாகத்தான் புரிந்து கொள்கிறோம் எனக் கண்டோம்.ஆனால் எண்களின் மொழியையும் தாண்டும் கட்டங்களிலும் இயற்கை இயங்குகிறது.'Infinity' என்று கணித நூல்களில் சொல்லப் படும் இதனை நாம் 'அனந்தம்' என்றும் 'எல்லையற்றது' என்றும் சமய நூல்களில் சொல்லக் காணலாம். மொழிகள் அற்ற இடம் பேரமைதியாகவும்,பேரானந்தமாகவும் சித்தரிக்கப் படும் உயிரின் உச்சகட்ட நிலைகள் அவை.
அனந்த கோடி என்ற சொற்கள் அடிக்கடி புழஅங்கும் உயிரின் நிலைகளை ஆன்மிகம் மட்டுமே பயன் படுத்தும்.அறிவியல் தொட தயங்கும் நிலைகள் அவை.'Infinity' பற்றிக் கணித நூல்களே சொல்ல வார்த்தைகள் போதுமானவை இன்றி ஒதுங்கி நிற்கிறது.இதை ஓரளவேனும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் உயிர் என்றால் என்னவென்ற ஒரு கண்ணோட்டம் வேண்டும்.
சிந்தித்துப் பார்த்தால்,உயிர் என்பதே இயற்கை அன்னையின் 'எளிமையின் உச்ச கட்டம்' எனத் தோன்றுகிறது.இந்தப் பேரண்டத்தின் இத்தனாயிரம் கோடி பௌதீக விதிகளையும் தொகுத்து,அனைத்து உய்ரினங்களும் புலன்கள் வழி அவற்றை உணர்ந்து கொள்ளும் அரிதினும் அரிதான கொடையை அவள் அருளி இருக்கிறாள்.
சற்றே சிந்தியுங்கள்.
நாம் பார்ப்பதற்கு ஒளிஇயலின் விதிகள் எதுவும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வெப்பத்தை உணர்வதற்கு Thermodynamics laws எதுவும் படித்துப் புரிந்திருக்க வேண்டிய தொல்லை இல்லை.
உடலுக்குள் இயங்கும் கோடான கோடி செல்களும் நமது அறிவின் தயவின்றித் தங்களைத் தாங்களே வழி நடத்திச் சென்று கொண்டிருக்கின்றன.
இந்தப் பேரண்டத்தை உயிர்கள் மூலம் அணு அணுவாகக்,கணந்தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது இயற்கை .
தனது அனைத்து அறிவினையும் உயிர்களுக்குள்ளே ஒப்படைத்து விட்டு,அவற்றின் செயல்பாடுகளுக்கு மட்டும் அந்த அறிவு பயன் படுவதற்கும்,சிந்தித்தால் பெறுவதற்கு அரியதாகவும் இருக்கும் படியான உயிர் விளையாட்டையே இயற்கை அன்னை ஆடிக் கொண்டிருக்கிறாள்.
மருந்துக்கடைகளில் இருக்கும் அத்தனை மருந்துகளும் நமது உடல் தயாரிக்கும் ரசாயனங்களின் செயற்கை வடிவங்களே.
மின்காந்த அலைகளைப் பற்றி நமக்குத்தான் இந்த நூற்றாண்டில் தெர்யும்.ஆனால் நமது உடலுக்குக் கோடான கோடி வருடங்களாகத் தெரியும்.
நுண் அணுத் துரையின் அனைத்து அறிவும் கொண்டிருப்பதனால்தான் நமது செல்கள் செவ்வனே இயங்குகின்றன.
இந்த உட்புறப் பேரறிவினை நாம் நமது முயற்சியால் பெற இயலுமா ?



வலைத்தளத்தின் வல்லமை...

'தொடக்கம் முடிவில் இருக்கிறது' என்று நான் இங்கே ஆங்கிலத்தில் எழுதியிருந்த வலைப் பதிவு ,எங்கோ ஆபிரிக்காவில் இருக்கும் ஜூலியட் ஜோன்ஸ் என்ற பெண்மணியின் மனதைத் தொட்டிருக்கிறது என்பது அவர் எனக்கு அனுப்பியிருந்த மின்கடிதத்தின் மூலம் அறிந்த போது நானே திகைத்துப் போனேன்.
தொலைவையும் ,காலத்தையும் இமைப் பொழுதில் கடந்து செல்லும் இந்த சாதனத்தின் ஆற்றல்,மனிதர்களை ஆக்க பூர்வமாக இணைப்பதில் மட்டும் செயல் பட்டால் எவ்வளவு கனவுகள் நனவாகும்!
வலைப் பதிவாளர்கள் எல்லோரும் கலைப் பதிவாளர்களாக நான் பிரார்த்திக்கிறேன்...

ஞாயிறு, ஜனவரி 25, 2009

தொடக்கம் முடிவில் இருக்கிறது..

Beginning is in the end.
Root of all the words is silence.
At infinity everything exists as nothing.
Is awareness an activity?
Then activity of what?
Are you conscious of awareness or aware of consciousness?
Awareness goes so deep that finally it manifests as existance itself.
God is existance.
That’s why God is addressed as Sakshi-that is awareness as a non reactive energy field.
God only acts ,doesnot react.
Action is Nature’s Law,spontaneous,non –thinking whreas reaction is product of thinking,result of participation,
desire of intervention, simply a play of ego.
Love also does not react.
Love is awareness of the whole.
How a whole can participate or intervene?
To say God is LOVE, is only in this sense of Only Action and No reaction.

சனி, ஜனவரி 24, 2009

ஒருவரை ஒருவர்...

நேசம் என்பது ஒருவரை ஒருவர்
பார்த்துக் கொண்டிருப்பது அல்ல.
இருவரும் ஒரே திசையில் பார்ப்பது...
(வலைத் தளத்தில் படித்தது..)

கவிதை....

கவிதை.....
என்னுடனே நான் பேச ஆரம்பித்து
எல்லோருடனும் பேசி முடித்தேன்...

வெள்ளி, ஜனவரி 23, 2009

எண்கள் என்னும் இயற்கையின் மொழி..3

இருபதாம் நூற்றாண்டில் சில அடிப்படையான எண்களை அறிவியலாளர்கள் தேடத் தொடங்கினார்கள்.அந்தத் தேடலில் கிடைத்தவைதான் ஒளியின் வேகம் ,மற்றும் இன்னொரு பௌதிக மாறிலி எண்.
எல்லா விதமான சக்தி ,பொருண்மையின் மாறாத எண்கள் இவை.இந்த எண்களை வைத்து இந்த முழுப் பேரண்டத்தையும் அளந்து விடலாம்.
ஆனால் அந்த எண்களும் கூட முழுமையான புரிதலுக்குப் போதவில்லை.
அறிதலும்,புரிதலும் மனிதனின் ஒரு அங்கமே தவிர அவையே முழுமையல்ல.ஒன்றை அறிந்து கொண்டவுடன்,புரிந்து கொண்டவுடன் உங்கள் தேடல் முடிவது இல்லை.
இதைத் தாண்டி இன்னும் ஏதோ இருக்கிறது என்று முடியாத தேடலே இல்லை.
அதனால்தான் அறிவியலில் ஒரு பதில் கிடைத்தவுடன்,அந்தப் பதிலில் இருந்தே இன்னொரு கேள்வி பிறந்து விடும்.
அறிவுக்கு முடிவே இல்லை,ஏனெனில் அதனால் தீர்வுகள் இல்லை.
அறிவு,நமது சிந்தனா முறைகளில் ஒரு அம்சமே தவிர அதுவே மனிதனின் முழு ஆன்மாவின் பிரதிநிதித்துவம் இல்லை.இதைப் புரிந்து கொண்டவுடன் ,
அறிவியல் அன்றி வேறு திசைகளில் மனிதர்கள் என்றோ பயணமானார்கள் .
அதில் ஒன்றையே ஆன்மிகம் என்கிறோம்.
ஆன்மீகத்துக்கும் ,அறிவியலுக்கும் ஒரே வயதே. இதில் ஒன்று நவீனத்துவம் ,பிரிதொன்று பழைமைவாதம் என்பதற்கே இடமில்லை.
மூலத்தின் விடை தேடி வெவ்வேறு திசைகளில் மனிதன் பயணமான கதையே இரண்டும் .



வியாழன், ஜனவரி 22, 2009

எண்கள் என்னும் இயற்கையின் மொழி..2

பெரும்பாலும் எண்கள் பொய்மைக்கு விரோதி .
எண்களை வைத்துப் பொய் சொன்னால் சீக்கிரம் சிக்கிக் கொள்வோம் ('சத்யம்'ராமலிங்க ராஜு மற்றும் எத்தனையோ பேரைப் போல ).அதனாலேயே நிறையப் பேருக்குக் கணிதம் ஒரு கசப்பான துறையாக இருக்கிறது.அரசியல்வாதிகளுக்கும்,இலக்கியகர்த்தாக்களுக்கும் வார்த்தைகளைப் பிடிக்கும் அளவுக்கு எண்களைப் பிடிப்பதில்லை.ஏனென்றால் தங்கள் விருப்பபடி சிந்தனைகளை வளைத்து விளையாட சொற்களைப் போல எண்கள் இடம் தருவதில்லை .
ஆதாரப் பூர்வமான உண்மைகளை எல்லாம் எண் வடிவத்திலேயே ,கணித சமன்பாடுகளாகவே சொல்ல முடியும் என்பதே அறிவியலாளர்களின் கோட்பாடு.அப்படி எந்த உண்மையை வெளிப்படுத்த முடியவில்லையோ அது ஒரு அறிவியல் உண்மையே அல்ல என்பதே அவர்கள் சித்தாந்தம்.
எடுத்துக் காட்டாக, மருத்துவ மனைக் கட்டிலில் படுத்திருக்கும் நோயாளியின் கால் மேட்டில் ஒரு அட்டை தொங்கும்.நோயாளியின் உடல் நிலைகள் முழுதும் அதில் எண்களாகவே எழுதப்பட்டிருக்கும்.ரத்த அழுத்தம்,நாடித் துடிப்பு,சர்க்கரை அளவு,கொழுப்பின் அளவு இது போல அவனது உயிரின் அனைத்துச் செயல்பாடுகளும் எண் வடிவிலேயே எழுதப் பட்டிருக்கும்.மருத்துவர்,நோயாளியிடம் அவனது வார்த்தைகளால் கேட்டறியும் விஷயங்களைவிட அட்டைத் தாளில் எழுதியிருக்கும் எண்களைத்தான் பெரிதும் நம்புவார்.ஏனெனில் வார்த்தைகள் ஏமாற்றும்.எண்கள் அதனைப் புரிந்து கொண்டவர்களை ஏமாற்றாது.
எண்கள் இயற்கையின் உரையாடல்.உண்மையின் நெருங்கிய நண்பன்.
சரி ,இவ்வளவு முக்கியமான, நமது உயிர் தொடர்பான எண்களைக் கூட
நாம் ஏன் தெரிந்து கொள்ள முடியாமல்,தெரிந்தாலும் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறோம்?இயற்கையின் இந்த உரையாடலை நாம் ஏன் கேட்க முடிவதில்லை?நம்மிடமிருந்து நம்மையே மறைத்துக் கொண்டிருக்கும் அறியாமை எது?ஏன்?
உண்மையில் நமது மேற்புற மனதுக்கும் அறிவுக்குந்தான் இந்தக் கணித மொழி புரியாது.தெரியாது.நமது உயிருடன் நேரடித் தொடர்பு கொண்ட உடலுக்கு இந்த மொழி அத்துபடி.அதனால்தான் எந்த அறிவியல் நூலையும் படிக்காத நமது உடல் நாம் உண்ணும் உணவை செரிக்கிறது .பார்க்கிறது.பேசுகிறது.சிந்திக்கிறது.களிக்கிறது .எந்த உடல் வேதியியல் சூத்திரங்களும் தெரியாத பிறந்த குழந்தை கூட ,உலகத்தின் தலை சிறந்த மருத்துவரே இரவும் பகலும் அருகிலேயே இருந்து நிர்வகித்தாலும் அவரால் ஒரு வினாடி கூட ஆற்ற முடியாத பணியை தனது உடலை பராமரிப்பதில் ஆற்றுகிறது.இது மனிதக் குழந்தைக்கு மட்டுமல்ல ,பிறந்த அனைத்து உயிர்களுக்குமே பொருந்தும்.தன்னைத் தானே பேணிப் பாதுகாத்துக் கொள்ளும் திறனும் ,அறிவும் உயிர்களின் இயற்கைச் சொத்து.
எனவே உயிர் என்பதையே சுருக்கமாக் இப்படிச் சொல்லலாம் .
இயற்கையின் மொழியைப் புரிந்து கொள்ளும் ஒரு வெளிப்பாடு.அல்லது இயற்கை தன்னுடன் உரையாடத் தானே படைத்துக் கொண்ட நண்பனே உயிர்.
சிவம் தன்னை புரிந்து கொள்ளத், தானே தன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டது.அந்த இன்னொரு வடிவே சக்தி.தன்னிலிருந்து பிரிந்த சக்தியின் மூலமாகத் தன்னையே சிவம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் விளையாட்டே இந்த அகிலம் அனைத்தும்.
எனில்,எல்லாம் அறிந்த ஒன்று உள்ளுக்குள் இருந்து அறியாமை விளையாட்டை ஆடிக் கொண்டிருப்பதுதான் உயிரா ?

புதன், ஜனவரி 21, 2009

எண்கள் என்னும் இயற்கையின் மொழி..1

மனித உடலின் வெப்பநிலை 98.4 டிகிரி.
ரத்த அழுத்தம் 80/120.
இதயத் துடிப்பு சராசரியாக 72 முறை நிமிடத்திற்கு .
வங்கி இருப்புத் தொகை ரூபாய் 25,875.89 .
ஒளியின் வேகம் 1,86,000 மைல்/வினாடி.
பண வீக்கக் குறியீட்டு எண் 8.5
மழையின் அளவு 5 செ.மீ .
இயற்கை ஆனாலும் சரி,மனிதக் கண்டு பிடிப்புக்களானாலும் சரி, எணகள் மூலமாகவே விளங்கிக் கொள்கிறோம்.
சொல்லப் போனால் இயற்கை நம்முடன் உரையாடும் மொழியே எண்கள்தான்.அதனால்தான் செயற்கையிலும் நாம் எண்களைத் தேடுகிறோம். அதை நம் பாஷையில் அறிவியல் என்று கூறிக் கொள்கிறோம் .
எண்களுக்கு நாம் வைத்திருக்கும் விளக்கமே ,மனித மொழிகள் அனைத்துமே.
ஆகவே எண்களைப் புரிந்து கொண்டால் ஒழிய இயற்கையின் உரையாடலை நம்மால் புரிந்து கொள்ள முடியாது.
சரி,எண்களைப் புரிந்து கொள்ள நீங்கள் மிகப் பெரிய கணித மேதையாக இருக்க வேண்டுமா ,அல்லது அதனுடைய அடுத்த கட்ட தகுதியான அறிவியிலானாகஇருக்க வேண்டுமா?
தேவை இல்லை என்கிறது சைபர்ணடிக்ஸ் என்ற அறிவியல் துறை.
மருத்துவத்தைப் பற்றி எதுவுமே தெரியாத உங்களுக்குள் இருக்கும் தெர்மா மீட்டர் உங்களது வெப்ப நிலையை எப்போதும் அளந்து கொண்டிருக்கிறது.அதுதான் உங்கள் உடலுக்குள் வெப்பநிலை சற்றே மீறினாலும் உங்களுக்கு காய்ச்சல் என்று அறிவுறுத்துகிறது .

எண்கணிதம் தெரியாத காக்கை தனது கூட்டில் தான் இட்ட எண்பத்து நாலு முட்டைகளில் ஒன்றைக் காணவில்லை என்றாலும் 'கா கா 'என்று பதறுகிறது.

எந்த வெப்ப நிலையையோ ,அதை நிர்வகிக்கும் ஏ.சி.தொழில் நுட்பமோ தெரியாத தேனீக்கள் தன் கூட்டுக்குள் நிரந்தர வெப்பத்தை கட்டிக் காக்கிறது.

ஏன் ,அடர்ந்த காட்டினில் இருக்கும் மரங்கள் ,தங்களுக்கு நேரும் ஆபத்தை எதோ ஒரு மொழியில் தொலை தூரத்தில் இருக்கும் தங்கள் இனத்தவர்க்கு புலப் படுத்தி விடுகிறது.(உபயம் :ஜுராசிக் பார்க் நாவல் )
எப்படி ?
நமக்குள் இருக்கும் இயற்கை அறிவை நாம் ,நமது புற அறிவால் மறந்து விட்டோம் -கருவிலேயே நாம் கற்ற நீச்சலை மறந்ததைப் போல ...
நமக்குள் இருக்கும் இந்த இயற்கை அறிவைத் திரும்பப் பெறுவதே யோகம் ..
அதற்குத்தான் நமது இத்தனை சாஸ்திரங்களும் ..
மீண்டும் படைப்பை நோக்கிச் செல்லும் பயணம்..
உண்மையில் இந்தக் கணத்தோடு முடியும் நெடியதொரு பயணம்..!!
பூஜ்யத்தின் கரையில் இருந்து ஆரம்பிக்கும் அந்த எண்களின் கடலுக்குள் நீந்துவோம் ....

வெள்ளி, ஜனவரி 16, 2009

வீரம்...

குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகிறது என இன்றுதான் புரிந்தது.அது இன்னொருவரை நம்பி இனி வாழ வேண்டுமென்பதை எண்ணியே அழுகிறது.கருவிலேயே நம்முடன் இருந்த வீரம் இழந்து போய்
மனித உயிரின் முதல் கோழைத் தனம் அங்கிருந்தே ஆரம்பித்து விட்டது. நமது முதல் சாபம் நமது பயந்தான்.நமது பிறப்பின் முதல் நோய்.
பிறவிப் பிணி என்பதே நமது அச்சந்தான்.
தனிமையில் உலகை எதிர் கொள்வதில் வந்த மருட்சி .
அதனால்தான் வீரன் யார் என்பதையே நாம் மறந்து விட்டு அவனுக்கு வெவ்வேறு விளக்கங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
வீரன் என்பவன் யாரையுமே நம்பி இல்லாமலிருப்பவன்.தன்னை மட்டுமே ஏன், ஒரு கட்டத்தில் தன்னைக் கூடச் சார்ந்தில்லாமல் இருப்பவன்.
கூட்டம், வீரத்துக்கு அன்னியம்.
ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை எதிர்த்துப் போராடுவது பல கோழைகள் பல கோழைகளுடன் போராடுவது.
ராணுவ அமைப்புக்கள் கூட கோழைத்தனத்தின் புத்திசாலித்தனமே தவிர உண்மையில் வீரமாகாது.வீரம் என்பது கருப்பையில் இருந்ததைப் போல் ஒற்றைக்கு ஒற்றையே.
தனி மனிதன் ஒருவன் எதன் சார்புமின்றி ,எந்த அமைப்பின் பக்க பலமுமின்றி தனக்கு நேரும் அநீதியை எதிர்த்துத் தான் தனியே போராடுவதுதான் வீரம்.
அவனுக்கு யூனிபார்ம் தேவையில்லை.ஒரு புரட்சிக் கொடியின் பின்னணி தேவையில்லை.பாராட்ட அல்லது துணை நிற்க சகாக்கள் யாரும் தேவையில்லை.அவனது அவலமே அவனுக்கு உந்துசக்தி.
அந்த தனி மனித வீரனைப் பல நூற்றாண்டுகளாக இழந்து விட்டோம்.அதனால்தான் இன்றைய துயரங்களே.
இன்று சாதாரண கொடுமைகளை எதிர்த்துப் போராடக் கூட நமக்கு ஒரு கூட்டம தேவைப் படுகிறது.போலிஸ் உதவி இல்லாமல் நம் தங்கையின் மானத்தைக் கூட நம்மால் காப்பாற்ற முடியாது .
ஒவ்வொரு தனி மனிதனும் போர் வீரனாக வேண்டிய கட்டாயம் வந்தே விட்டது.
சமூகமாக கிடைக்க வேண்டிய பாதுகாப்பு முடிந்து போய்,தனி மனிதனாக என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டம் வந்தே விட்டது.
அரசாங்கங்கள் தோற்றது கூட நல்லதுதான் .
கருவிலேயே இழந்த வீரத்தை மனிதர்கள் மீண்டும் சம்பாதித்துக் கொள்ள
இதுவே தருணம்.
எனக்கு நானே அரண்.எனக்கு நானே துணை.
(ஆனந்த விகடனில் இலங்கைத் தமிழ்ர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப் படித்தவுடன் )



வியாழன், ஜனவரி 15, 2009

SLUMDOG MILLIANAIRE..

First let me say about the overall impression of the movie.It is interesting and told on an unimaginable platform.

Who can think of an interesting storyline based on a T.V.quiz programe like 'Who wants to be millianaire?'

The story is about a Mumbai slum boy who answered all the difficult questions in the quiz programme and became a Crorepathi! How?
All the answers he got, not from reading or studying books but from his own hard experiences of life.

Through his answers his life story is told from tender boyhood till his youth.

Although the story is told from an English Director's point of view of urban Indian life, the film more or less carry the drama interestingly.

It will be a commercial success even with our Indian audience because it contains all the ingredients of violence, love,sacrifice and family sentiments.

Music is by A.R.Rehman who won Golden Globe award for this movie and is really haunting.

Based on an Indian novel by Vikas Swaroop,photographed well the film is directed by Danny Boyle with all the vigour and sensibility of a good movie.

A really nice movie to watch and enjoy till the end.

செவ்வாய், ஜனவரி 13, 2009

காலமும்,தருணங்களும்..

காலம் வேறு.தருணம் வேறு.Time and Moment.
ரோஜா அழ்கானது என்பது எல்லாக் காலத்துக்கும் பொருந்தும்உண்மை .ஆனால் எல்லாத் தருணங்களுக்கும் பொருந்துமா ?
தீராத கண் வலியோடு துடிக்கும் ஒருவனுக்கு அந்தத் தருணத்தில் ரோஜா அழ்காகத் தோன்றுமா ?
ஆனால் உண்மைகளைப் பற்றிய நமது பொதுவான மதிப்பீடுகள் எல்லாமே காலத்தின் அடிப்படையில் செய்யப் படுவதில்தான் தவறுகளே நேர்கின்றன.அவை தருணங்கலோடு முரண்படுகின்றன.
வரலாறுகளில் காலம் தெரியும் ,ஆனால் தருணங்கள் தெரியாது.ஏனெனில் காலம் இயந்திரத் தனமானது.ஒன்றுக்குப் பிறகு இரண்டுதான்.திங்களுக்குப் பிறகு செவ்வாய்தான்.அது தர்க்க ரீதியான,கணித ரீதியான கணிப்புகளுக்கு உட்பட்டது.ஆனால் தருணங்கள் நிகழ காலத்தின் உயிப்போடு செயல் படுபவை.அவை கணத்துக்குக் கணம் மாறுபவை. தர்கத்துக்கும் கணிதத்துக்கும் கட்டுப் படாதவை.நமது அறிவு காலத்தை வேண்டுமானால் அறிய முடியும். ஆனால் தருணங்களை ஆராய , அறிவைத் தாண்டிய ஒரு அணுகுமுறை வேண்டும்.அதைத்தான் ஆன்மிகம் பல வழிகளில் முயன்று கொண்டிருக்கிறது.பல சாதனங்களையும் நமக்கு அறிமுகப் படுத்துகிறது.
பதினெட்டாம் நூற்றாண்டு,அன்று வாழ்ந்த எல்லாரையும் கார்ல் மார்க்ஸ் ஆக்கி விடவில்லை .அந்த ஒரு மனிதருக்குள் மட்டும் மார்க்சிய சிந்தனைகள் முகிழ்த்தது எப்படி?
ஒரே காலத்தில் ஒரே சூழ்நிலையில் ஒரே குடும்பத்தில் வாழும் ஒருவன் அடிமையாகவே வாழ்கிறான் .இன்னொருவன் புரட்சிக்காரனாகி அவன் வாழும் சமூகத்தையே மாற்றி அமைத்து சீர் செய்கிறான். எப்படி? இதற்குஅவர்கள் வாழும் காலத்தையும் இடத்தையும் மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டால் போதாது.அவர்களை முற்றிலும் புரிந்து கொள்ள அவர்கள் வாழும் காலத்தையும் இடத்தையும் மட்டும் ஆராய்ந்து முடிவுக்கு வர முடியாது.
வேறு வேறு காலங்களில் உருவான எண்ணங்களை அவற்றின் காலத்துக்கு மட்டுமே மதிப்புக் கொடுத்து ஏற்றுக் கொள்ளப் படுவதினால்தான் மதங்களின்,தத்துவங்களின் பயன்கள் நமக்குக் கிட்டாமல் போகின்றன.
சிந்தனைகளை, அவை உறுவான தருணங்கலோடு உள்வாங்கும் போதுதான் அவற்றின் உண்மையான புரிதல்கள் நேரும் .இதனால்தான் நிறைய ஆன்மீகத் தளங்களில் குருவிடம் சிஷ்யன் நேரடியாகப் பாடம் பெற வேண்டுமென வலியுறுத்தப் படுகிறது.
அனைத்துச் சமுதாயங்களிலும் கிடைத்த அபூர்வமான எண்ணங்கள் வலிவிழந்து போனதின் முக்கிய காரணமே அவை உறுவான தருணங்களின் உயிர்ப்பு செத்துப் போஅய் அவை வெறும் சாச்திரங்களாக காகிதங்களில் மட்டும் காலத்தின் சாட்சிகளாக இருப்பதே ஆகும்.
நாம் பிறந்த காலமும் இடமும் மட்டுமே நாம் யார் என்பதைத் தீர்மானிப்பதில்லை என்பதை ஏற்றுக் கொண்டுதான் நாம் பிறந்த தருணத்தை ஆராய்கின்றன ஜாதக சாஸ்த்ரங்கள்.இதே போல் இன்றைக்கு
நவீன இயற்பியலில் நுண் அணு துறைகளில் காலத்தை விட தருணங்களே அதிகம் ஆராயப் படுகின்றன.
மேலும் யோசிப்போம்....

ஞாயிறு, ஜனவரி 11, 2009

ஒரே பதில் ..ஆனால் ஒரு கோடிக் கேளவிகள்

என்றோ எங்கோ படித்த ஒரு வரிக்கு எவ்வளவு பெரிய அர்த்தம் என்று இன்றளவும் எனக்குப் புரிந்து கொண்டே இருக்கிறது .
மூன்று என்பது விடையாக வர வேண்டுமென்றால் எத்தனை கோடிக் கணக்குகள் வேண்டுமானாலும் போடலாம்.
3x1=3..3-0=3..3+0=3..5-2=3..2+1=3.. இப்படி எண்ணற்ற கணக்குகள் மூன்று என்ற ஒரே விடைக்கு போட்டுக் கொண்டே போகலாம்.
இந்த சமன்பாட்டில் விடையும் சரி ,கணக்குகளும் சரியே என்பது ஆரம்பக் கணிதம் படிக்கும் குழ்ந்தைக்கும் கூடத் தெரியும்.
சரி,
இதே சமன்பாட்டை நம் வாழ்க்கைக்கு பிரயோகித்தால் அது ஒரு ஆழமான சிக்கலுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
உதாரணமாக மகிழ்ச்சியை எடுத்துக் கொள்வோம்.
மகிழ்ச்சி என்ற ஒரு விடைக்கு நாம் ஏராளமான கணக்குகள் போடுகிறோம். மகிழ்ச்சிக்காக எழுதுகிறோம்..பாடுகிறோம் ... குடிக்கிறோம் ..சமூகத்துக்காக உழைக்கிறோம் ...கொலை செய்கிறோம் ....இதெல்லாம் தப்பு என்று வாதாடிக் கொண்டிருக்கிறோம் ....காதலிக்கிறோம் ...குடும்பம் நடத்துகிறோம்.. குழந்தையைக் கொஞ்சுகிறோம் ....அல்லது கடத்திக் கொண்டு போய் வியாபாரம் செய்கிறோம் ..பெண்களைக் கெடுக்கிறோம் ..ஆலயங்களுக்குப் போகிறோம்.. குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கிறோம் ... சாகவும் செய்கிறோம்..
இப்படி மகிழ்ச்சி என்ற ஒரே விடைக்கு நாம் பல கணக்குகளைப் போடுகிறோம் . ஆனால் முந்தைய சாதாரணக் கணக்குச் சமன்பாட்டில் ஒத்துக் கொண்டதைப் போல இங்கே விடையும் சரி கணக்குகளும் சரி என்று ஒப்ப மாட்டோம் என்பதே நம் முன் இருக்கும் சிக்கலே.
மகிழ்ச்சி என்ற நியாயமான ,சரியான விடைக்கு நாம் போடும் சில கணக்குகள்தான் தப்பு என்கிறது நம் சமூக,அறவியல் சட்டங்கள்.
நான் கணிதவியல் பட்டதாரி.ஆனால் எனக்கே இது வியப்பான உண்மையாக இருக்கிறது.
ஒரே விடைக்குப் பல கணக்குகள் என்பதே முரண்பாடு.அதிலும் விடை மட்டும் சரி ஆனால் சில கணக்குகள் மட்டும் தவறு என்பது எப்படி சாத்யமாகும்?.அப்படி என்றால் சமன்பாட்டில்தான் எங்கோ கோளாறு இருக்க வேண்டும்.
சரி, நம் சமன்பாட்டை எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி என்ற விடைதான் சிக்கலையே உருவாக்குகிறது என்பது சற்றே யோசித்தால் புரிகிறது.
எப்படி?மகிழ்ச்சி என்ற விடை சரிதான்,ஆனால் அதை முன்பாகவே தீர்மானித்துக் கொள்ளும் கோட்பாடுதான் நமக்குப் பிரச்னையே .
விடையை முன்னரே தீர்மானித்துக் கொள்வது சாதாரணக் கணக்குக்கு வேண்டுமானால் சரி.ஆனால் நம் வாழ்க்கைக் கணக்குக்கு சரியில்லை என்பதுதான் அது!
நமது பெரும் பாலான கேள்விகளுக்கும் தப்பான விடைகளே வருவது அந்தத் தீர்மானத்தினால்தான். ஏன்?
பொதுவாகவே (நாம் தேடல் என்று கூறிக் கொண்டு ),நம் கேள்விகளுக்குத்தான் விடைகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று தப்பாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் உண்மையில் நாம் நம் பதில்களுக்கான கேள்விகளையே தேடிக் கொண்டிருக்கிறோம்.
நான் கேள்வி கேட்பதே பதிலை ஒத்துக் கொள்வதற்காகத்தான்.


எல்லோருக்குள்ளும் இருக்கும் விடைகள்தான் துயரமே.நாம் எல்லோரும் பதில்களை வைத்துக் கொண்டு அதற்கு ஏற்ற கேள்விளைக் கேட்டுக் கொண்டு திரிகிறோம் .


எனில், நமக்கு இந்த விடைகள் எங்கிருந்து கிடைத்தன?


நாம் பிறப்பதற்கு முன்னரே நம் விடைகள் பிறந்து விட்டன.


நமது பரிணாம விதிகள்,உடற்கூற்று விதிகள், நாம் பிறக்கும் குடும்ப ,சமூகச் சூழல்கள்,(நீங்கள் நம்பினால் கிரகச் சேர்க்கைகள்)இதெல்லாம் சேர்ந்து உருவாகிய நமது மன இயக்கங்கள் இவை எல்லாம் ஏற்கனவே தந்த விடைகளுடந்தான் நாம் பிறக்கிறோம் .
நாம் கேட்கும் கேள்விகளுக்கு இந்தக் கணத்தில் கிடைக்கும் பதில்களை ,ஏற்கனவே நம்முடன் பிறந்த பதில்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தே எதனையும் ஒத்துக் கொள்கிறோம் .எனவே நம் பழைய விடைகளை இழந்தால் ஒழிய புதிய பதில்களை நாம் பெற மாட்டோம்.
இதனாலேயே ஏசு 'உனது பெற்றோர்களைக் கொன்ற பின்னரே என் பின்னால் வா'என்றார்.சென் ஞானிகள் மனதைக் காலி ஆக்கிய பின்னரே சிஷ்யனாக வா என்றார்கள். நிகழ காலத்திலேயே இரு என்பதெல்லாமே இதன் அடிப்படையில்தான்.
தொடர்ந்து யோசிப்போம்...

செவ்வாய், ஜனவரி 06, 2009

புத்தரும் பல்லிகளும்...

புத்தர் படத்துப் பின்புறப் பல்லி
பூச்சி தின்பதைப் போலே..

திங்கள், ஜனவரி 05, 2009

ஒரு ஆவணப் படம் கலைப் படமாக..

சமீபத்தில் பிகேபி வலைத் தளத்தில் ஆயுர்வேதம் பற்றிய ஒரு ஆவணப் படம் பார்த்தேன். பால் நளின் என்ற இயக்குனர அதி அற்புதமாக அதனை எடுத்திருந்தார்.
ஆயுர்வேதத்தின் உண்மையான ,ஆழமான அடிப்படைகளையும் ,சிகிச்சை முறைகளையும் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய அனைவரும் பார்த்தாக வேண்டிய படம்.
பால் நளின் இயக்கிய 'சம்சாரா' என்ற ஆங்கிலப் படம் ஏற்கனவே உலகப் புகழ் பெற்றது.
மருத்துவ முறைகள் பற்றிய கருத்து ரீதியான ஒரு ஆவணப் படம் கூட
ஒரு கலை விறபன்னரால் எவ்வளவு உன்னதமான ,விறுவிறுப்பான படமாகிறது என்பதற்கு இந்தப் படமே சாட்சி.

கொடுக்கல் வாங்கல்

எதை வாங்க முடியாதோ
அதை விற்கவும் முடியாது.

படித்த நூல்களிலிருந்து..

'The distance is nothing.It is only the first step that is difficult.'

'Whoever fights monsters should see to it that in the process he does not become a monster.And when you look long into an abyss the abyss also looks into you.'

FREDERICH WILHELM NIETZCHE.

'The first law of street is dont look for your trouble because trouble will always find you when it wants to !'ANONYMOUS

'Ambition in any form is action postponed.'

'Belief is not reality.'

'Aloneness is indivisible and loneliness is separation.'

'Knowledge is a flash between two darknesses but knowledge cannot go above and beyond that darkness.'


The respectable like the despised are always at the mercy of circumstances.
They are as the drum empty within but loud when beaten.'


Experience is a barrier to the state of experiencing.'

'Observer becomes the observed.'

J.KRISHNAMOORTHY.

'IF YOU WANT TO KNOW THE PAST-THAT IS CAUSE -LOOK AT YOUR PRESENT,WHICH IS ITS EFFECT.IF YOU WANT TO KNOW THE FUTURE -EFFECT,LOOK AT YOUR PRESENT, ITS CAUSE.'

BUDHDHA

'You are like a house where nobody knows who the host is.'

GURDJIEFF.

'When the shoe fits ,the foot is forgetten.'

CHUANG TZE

'He who dies before he dies ,does not die when he dies.'

MASAO ABE

படித்த நூல்களிலிருந்து...

'The difference from a person and an angel is easy to understand.

Most of the Angel is in the inside and most of the person is on the outside,'


'It is vain to do with more what can be done with less.'

பூஜ்யத்தின் அர்த்தங்கள்

சுத்தம்
நிசப்தம்
முழுச் சுதந்திரம்
காரணமில்லாத சுகம்
தான் என்று உணராத தனிமை
கடலின் நடு அமைதி
வெந்து தணிந்த சிதை
பாலைவனத்துப் பௌர்ணமி
எல்லோரும் ஊருக்குப் போய்விட்ட வீடு
அந்தரங்கமான சாவு
உடல்கள் கலந்ததின் முடிவு
முற்றிலும் நிறைந்த செல்வம்
அது முழுதும் கரைந்தபின் வரும்
இனியதொரு இல்லாமை .

சுகம்

மழைக் காலத்து ஜன்னல்
மல்லிகை
அழ்கியின் வெட்கம்
அருவிப் பனித் தூவல்
பறவைகளின் விடியல்
அந்தி நதி
தூரத்துக் கோவில் மனியோஅசை
இளம் வியர்வையின் மணம்
பச்சை வயல்களின் மத்தியில் போகும் புகைவண்டி
குழ்ந்தையின் கன்னக் குழி
மடி
மார்பு
ஆளிலாத மலைப் பாதை
நண்பனின் சிரிப்பு
மிரட்டக் கிடைத்த பலவீனன்
சாகசக் கதை
சரித்திரச் சின்னம்
மர்மம்
கட்டுப் பணங்கள்
மரத்திலேயே பழுத்திருக்கும் மாங்கனி
நாக்கில் ருசி மீட்டும் உணவு
நறுமணம்
வெற்றுடல்
விளையாட்டு
மற்றவர் வேதனை
அந்தரங்கமான கவிதை
கடித்துக் குதறும் கோஅபம்
குளித்து முடித்து வரும் அமைதி
சாவு

மனம்

மன நோய் என்கிறார்கள்

மனமே நோய் என்றார்களா?

ஒரு குழ்ந்தையின் குற்றப் பத்திரிக்கை

அவன் செய்த குற்றம்
அப்பனானது.
தனது தோல்விகளை எல்லாம் தினமும்
எனது தோள்களுக்கு மாற்றி இலைப்பாரும் சுயநலமி.
அவனது நிறைவேறாத கனவுகளால்
நித்தமும எனது விளையாட்டுப் பொம்மைகளை உடைத்தெறியும் வன்முறையாளன்.
அவனது ஆண்மைக்கு நான் சாட்சி.
அன்பு என்னும் அவனது வேஷத்துக்காக எழுதப் பட்ட காட்சி.
என்னை முதன்முதலாகக் கொன்றவன்.
சோறு போட்டு அதில் என்
சுதந்திரத்துக்கு விஷம் வைத்தவன்.
அவனது முரட்டுக் கரங்களின் கிறுக்கல் நான் .
இவர்கள் கும்பிடும் சாமிகளால் என்னைச் சிறை வைத்திருக்கிறார்கள்.
பள்ளிக்கூடச் சமாதிகளில் புத்தகங்களின் சிதை அடுக்கி
என்னை ஆசிரியர்கள் கொளுத்துகிறார்கள்.
நான் ஒரு குழ்ந்தை அல்ல-இப்படி சாகடிக்கப் பட்ட
ஆயிரமாயிரம் குழ்ந்தைகளின் ஆவி.

வெள்ளி, ஜனவரி 02, 2009

வாழ்க்கை

வாழ்க்கையே,
அன்பு ,வன்முறை ,கற்பு, கயமை,உண்மை. பொய்மை,
த்ர்மம் ,அதர்மம் ,நட்பு, பகை,விதி, மதி
என்று எல்லாவற்றுக்கும் தலை ஆட்டுகிறாயே
உனக்கு யார்தான் எஜமானன்?