உலகம்
---------
எந்த ஒரு விஷயத்தையும் பற்றி ஒரு முடிவு எடுப்பதற்கு முக்கியமான இரண்டு விஷயங்கள் வேண்டும்.
ஒன்று,அந்த விஷயத்தைப் பற்றிய போதுமான விபரங்கள்.
இரண்டு அந்த விபரங்களைத் தொகுத்து அலசி ஆராயும் தெளிவான சிந்தனையும் அணுகுமுறையும்.இதற்குப் பிறகுதான் நீங்கள் எல்லா முடிவுகளையுமே எடுக்கிறீர்கள் என்றால் கீழே காணும் இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.
நீங்கள் எடுக்கும் முடிவுகள் சரியா தவறா என்று பதிவின் இறுதியில் இருக்கும் உண்மைகளோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.(இந்த சஸ்பென்ஸுக்காகத்தான் உலகத்தை முன்னால் நிறுத்தி இருக்கிறேன்.!)
முதல் கேள்வி
------------------
ஒரு பெண் கர்ப்பமாக இருக்கிறாள்.
அவளுக்கு ஏற்கனவே எட்டுக் குழந்தைகள்.அதில் மூன்றுக்குக் காது கேட்காது.இரண்டு பிறவிக் குருடு.ஒன்றுக்கு மனவளர்ச்சி கிடையாது.எல்லவற்றுக்கும் மேலே அந்தக் கர்ப்பிணிக்கு முற்றிய பால்வினை நோயான சிஃபில்லிஸ் இருக்கிறது.
இப்போது அந்தப் பெண் கருச் சிதைவு செய்யலாம் என்றால் நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா, மாட்டீர்களா?
இரண்டாவது கேள்வி.
---------------------------
நாட்டின் தலைவரையே தேர்ந்தெடுக்கும் முக்கியமான தேர்தல் நேரம்.
அதில் உங்கள் ஒரு ஓட்டுத்தான் யார் தலவர் என்று தேர்தலில் தீர்மானிக்கும் ஓட்டாக இருக்கிறது.இந்த மூன்று வேட்பாளர்களில் நீங்கள் யருக்கு ஓட்டுப் போடுவீர்கள்?
முதல் வேட்பாளர்.
---------------------
ஊழல் பேர்வழிகளான பல அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார்.ஜோசியர்களுடன் ஆலோசனை நடத்தியே எதையும் தீர்மானிப்பார்.இரண்டு வைப்பாட்டிகள் வைத்திருக்கிறார். செயின் ஸ்மோக்கர்.ஒரு நாளைக்கு எட்டு முதல் பத்து பெக்குகள் குடிப்பார்.
இரண்டாம் வேட்பாளர்
----------------------------
இரண்டு முறை பதவி நீக்கம் செய்யப் பட்டவர்.தினமும் மதியம் வரை தூங்குவார்.கல்லூரி வாழ்க்கையில் கஞ்சா அடித்தவர்.இப்போது தினமும் ஒரு குவாட்டர் விஸ்கி சாப்பிடுபவர்.
மூன்றாம் வேட்பாளர்.
-------------------------
ராணுவத்தில் பணி புரிந்து இரண்டு முறை வீரப் பதக்கங்களை வாங்கியவர்.சுத்தமான சைவம்.புகைப் பழக்கம் கிடையாது.எப்போதாவது பீர் மட்டும் அருந்துவார்.மனைவியை ஒரு தடவை கூட ஏமாற்றியது கிடையாது.
இந்த மூவரில் உங்கள் ஓட்டு யாருக்கு?
இரண்டு கேள்விகளுக்கும் உங்கள் முடிவுகளை எடுத்து விட்டு பதிவின் இறுதிக்கு வாருங்கள்,நண்பரே.
உடல்
-------
உடம்பு பெருத்து,எடை கூடி இருப்பது இன்றைய பெரும்பாலான நண்பர்களின் பிரச்சினை.பல நோய்களுக்கு அதுவே மூல காரணம் என்று மருத்துவர்களால் அறிவுறுத்தப் படுகிறது.
உடலின் எடை குறைய, ஊளைச் சதை குறைய பலவிதப் உணவுப் பழக்கங்கள் சொல்லப் படுகின்றன.
அதில் '100% புரோட்டின் டயட்' என்பது அறிவியல் சார்ந்த மிகச் சிறந்த வழியாகச் சொல்லப் படுகிறது.
கொழுப்புச் சத்தை அறவே நீக்க வேண்டும் என்பது எந்த டயட்டாக இருந்தாலும் பொதுவான நிபந்தனை.
அதனால் எந்த வடிவத்திலும் எண்ணைக்கு அனுமதி இல்லை.
அதனுடன்,கார்போ ஹைட்ரேட்டுகளைக் குறைத்துப் புரோட்டின்களை நூறு சதவீதம் சாப்பிட்டால் உடம்பு மளமளவென்று குறையும்,ஆரோக்கியமும் கூடும் என்பது நவீனக் கண்டுபிடிப்பு.
அரிசி,கோதுமை போன்ற தானிய வகைகளில் எல்லாம் கார்போஹைட்ரேட்டுகளே அதிகம் இருப்பதால் அவற்றை அறவே தவிர்த்து விடவேண்டும்.எனவே பிஸ்கட்,ரொட்டி,சப்பாத்தி,சாதம் இவை அனைத்தும் தவிர்க்கப் பட வேண்டியவை.
அதற்குப் பதிலாக புரோட்டின்கள் நிறைந்த பருப்பு வகைகளைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்.
முக்கியமாகப் பச்சைப் பயறு.
அதனை அரைத்துத் தோசையாக,அவித்துச் சுண்டலாக, எந்த வடிவத்திலாவது சேர்த்துக் கொள்ளவேண்டும்.
இரண்டு மணி நேரம் பச்சைப் பயறை ஊற வைத்துப் பிறகு இஞ்சி,பச்சை மிளகாயுடன் அரைத்துத் தோசை வார்த்தால் ஆம்லெட்டைப் போல அவ்வளவு சுவையாக இருக்கிறது.
கொண்டைக் கடலை,கொள்ளுப் பருப்பு.ஓட்ஸ்,கடலைப் பருப்பு இப்படி எந்தப் பருப்பாக இருந்தாலும் அது ஓ.கே.
எண்ணை அறவே கிடையாது.
பச்சைக் காய்கறிகள்,அவித்த காய்கள் எல்லையில்லாமல்.
வாழைப் பழங்கள் தவிர ஆப்பிள்,திராட்சை என்ற எந்தப் பழமும் ஓ.கே.
புலால் உண்ணும் நண்பர்கள் கோழியும்,மீனும் தாராளமாக உண்ணலாம்,பொரிக்காமல்,வறுக்காமல்.எண்ணை சேர்க்காமல் எப்படி வேண்டுமானாலும்.
காலையில் வெறும் வயிற்றில் அரை அல்லது முக்கால் லிட்டர் தண்ணீர்.அதற்குப் பிறகு அரை மணி நேரம் எதுவும் அருந்தக்கூடாதுடீ காலை, மாலை இரண்டு வேளை ஓ.கே.
கண்டிப்பாக ஒரு மணி நேரம் வேக நடை.வெறும் வயிற்றில் நடப்பதே கலோரிகளைச் சீக்கிரம் எரிக்கிறது என்கிறார்கள்.
கார்போ ஹைட்ரேட்டுகளே சதையின் பெருக்கத்துக்குக் காரணம் என்பதாலும் புரோட்டின்கள் தசை நார்களையே வளர்க்கின்றன என்பதாலும் இந்த '100%புரோட்டின் டயட்' மிக விரைவான பலன்களைத் தருகிறது என்கிறார்கள் வெற்றி கண்ட எனது நண்பர்கள்.
நான் இதனை அனுசரித்து மூன்று வாரங்கள் ஆகின்றன.
மிக,மிக நலமாக உணர்கிறேன்.
உள்ளம்
---------
டெஸ்மான்ட் மாரிஸ் என்ற விலங்கியலாளர் 1967ல் 'நிர்வாண மனிதக் குரங்கு'என்ற ஒரு புத்தகம் எழுதினார்.
நமக்கும்,விலங்குகளுக்கும் குறிப்பாகக் குரங்குகளுக்கும் இடையில், நடத்தைகளில் இருக்கும் ஒற்றுமை வியக்கத் தக்க அளவில் இன்னும் மாறவே இல்லை என்று அவர் அதில் ஆராய்ந்து கூறி இருந்தார்.அதன் ஸ்வாரஸ்யம் எனக்கு இன்றளவும் குறையவில்லை. அவர் சொன்னதில் இருந்து.:
குரங்குகள் இன்றும் ஒன்றின் தலையில் ஒன்று பேன் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் சாதாரணமாகக் காணலாம்.அந்த ஆதிப் பழக்கத்தையே நாம் இன்றும் சலூனுக்குப் போய் முடிவெட்டிக் கொள்ளும் பழக்கமாக வைத்திருக்கிறோம்.!
தலையை இன்னொருவரிடம் ஒப்படைத்து விட்டுக் கண்கள் மூடி அதனை அனுபவிக்கும் சுகத்தை இன்றும் பழனியில் குரங்குகளிடம் காணலாம்!
நம் தலை முடியை இன்னொருவர் கோதுவது நமக்குச் சுகம் தரும் ஒரு இதமான செயல்.அதுவும் இந்த ஆதி சுகமே.இன ஒற்றுமையை வளர்க்கக் குரங்குகள் கண்டு பிடித்த உடல் ரீதியான ஸ்பரிசங்கள் இன்றும் நமக்குத் தேவைப் படுகின்றது.
உண்னும் உணவு சற்றே இளஞ் சூடாக இருப்பதைப் பெரும் பாலோர் விரும்புகிறோம்.மாமிச பட்சிணிகளாக இருந்த போது நாம் வேட்டையாடிக் கொன்ற மிருகங்களை அதன் ரத்தச் சூட்டோடு சாப்பிட்ட ஞாபகமே அது என்கிறார் டெஸ்மான்ட் மாரிஸ்!
சமைத்தால்தான் ஜீரணமாகும் என்பதால் மட்டுமல்ல, சமைக்கத் தேவையில்லாத உணவுமே சூடாக இருப்பதை விரும்புவதற்கு சுடச் சுட ரத்தம் நுகர்ந்த அந்தப் பழைய அனுபவமே காரணமாம்.
இன்னும் அறிவு வளர்ச்சி வராத இரண்டு வயது,மூன்று வயதுக் குழந்தைகளிடம் மிருகங்களின் படங்களைக் காட்டினால் அவை பெரும் பாலும் விரும்புவது குரங்குகளின் படங்களையே!பிறகு யானை,சிங்கம் போன்ற நிமிர்ந்து நிற்கும் மிருகங்களை.
அதிகம் அருவருப்பும் அச்சமும் கொள்வது பாம்பு முதலான ஊர்வன இன மிருகங்களை.குரங்குகளுக்கும் பாம்பைக் கண்டால் அறவே பிடிக்காதுநாம் ஊர்வனவாக இருந்து வந்த பழங் காலத்தை மறக்க விரும்புகிறோம்.புதிய பணக்காரர்களுக்குத் தங்கள் பழைய நண்பர்களைப் பார்க்கப் பிடிக்கததைப் போல!
நான்கு கால்களால் அலைந்து திரிந்ததிலிருந்து இரண்டு கால் பிராணிகளாக மாறி நிமிர்ந்து நின்ற போது நமது முன்னங் கால்களே கைகளாக உருமாறின.
மனித நாகரிகம் உழைக்கக் கற்றுக் கொண்டதே இந்தக் கால கட்டங்களில் இருந்துதான் என்று கம்யூனிஸத் தத்துவத்தின் தூணான எங்கெல்ஸ் எழுதி இருக்கிறார்.
இப்போதுதான் குரங்குகளின் மிகப் பெரிய பிரச்சினை தொடங்கியது.
அவற்றின் பாலின்பம்!
இதுவரை பின்புறமாக இருந்தே புணர்ச்சியை அனுபவித்த ஆண் குரங்குகள் முதன் முறையாகப் பெண்களை முன்புறமாகப் பார்க்க வேண்டிய கட்டாயம்!
ஆண் குரங்குகளுக்காகப் பரிதாபப் பட்டு இயற்கை பெண் குரங்குகளின் கவர்ச்சிகரமான பின்புறங்களை எல்லாம் முன்புறத்துக்குக் கொண்டு வந்தது.
அப்படி வந்ததுதான் பெண்களின் மார்பகங்கள்!
மார்பகங்கள் பெண் குரங்குகளின் பின்புற வடிவங்களின் பாவனையே.(இமிடேஷன்)என்கிறார் மாரிஸ்.
இது போலப் பெண்களின் முன்புறத்தை கவர்ச்சிகரமாக்க இயற்கை செய்த நுட்பமான வேலைகளை இன்னும் எந்த 'ப்ளேபாய்' போன்ற பத்திரிகைகளுமே செய்யவில்லை.
அதை நீங்களே படித்து இன்புறுங்கள் நண்பர்களே.
டெஸ்மான்ட் மாரிஸ் இது போலவே 'மனித மிருகக் காட்சிச் சாலை' என்ற புத்தகமும் நமது நகர வாழ்க்கையைப் பற்றி எழுதி இருக்கிறார்.
உலகம்
---------
என்ன நண்பர்களே! முதலில் கேட்ட கேள்விகளுக்கு சிந்தித்து முடிவுகளை எடுத்து விட்டீர்களா?
இதோ உண்மைகள்.முதலில் இரண்டாவது கேள்விக்குப் பதில்கள்.
முதல் வேட்பாளர்: அமெரிக்க ஜனாதிபதி ஃப்ரேங்க்ளின் ரூஸ்வெல்ட்.
இரண்டாம் வேட்பாளர்: இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில்மூன்றாம் வேட்பாளர்: ஜெர்மன் அதிபர் அடால்ஃப் ஹிட்லர்.
உங்கள் முடிவு உண்மைகளுடன் ஒத்து வந்ததா?
இரண்டாம் கேள்விக்குப் பதில்.அந்தக் கர்ப்பிணிப் பெண் கருச் சிதைவு செய்திருந்தால் உலகத்தின் மிகப் பெரிய இசை மேதையான பீதோவன் பிறந்தே இருந்திருக்க மாட்டார்!
நீங்கள் இரண்டு கேள்விகளுக்கும் சரியான பதிலை அளித்திருந்தால் உங்கள் சிந்தனை வக்கிரமாக இருக்கிறது என்று அர்த்தம்.
தவறாகப் பதில் அளித்திருந்தால் உங்கள் சிந்தனைகளோடு உண்மையான உலகம் ஒத்து வரவில்லை என்று அர்த்தம்.
எவ்வளவு பெரிய முரண்பாடு இல்லையா இதைப் போல-
'சூரிய வெளிச்சத்தில் எல்லாப் பொருட்களையுமே பார்க்கிறோம்,சூரிய வெளிச்சத்தைத் தவிர!' -நிசார்கதத்தா மகராஜ்.
அருமை. அருமை அருமை எனும் வார்த்தையை தவிர வேறு ஒன்றும் அறியேன் .
பதிலளிநீக்குகடைசி வரிகள்...”You are that?"
\\தவறாகப் பதில் அளித்திருந்தால் உங்கள் சிந்தனைகளோடு உண்மையான உலகம் ஒத்து வரவில்லை என்று அர்த்தம்.\\
பதிலளிநீக்குஎன் பதில் இரண்டுக்குமே தவறுதான். அதன் பொருள்
பொய்மையான உலகம் ஒத்துவரவில்லையா?
அல்லது உலகத்தோடு என் சிந்தனைகள் ஒத்து போகவில்லையா?
எனக்கு சரியாக புரியவில்லை. விளக்கமாக சொல்லமுடியுமா?
சார், பதிவு அருமையாக இருக்கிறது. 100% ப்ரோட்டீன் டயட் உண்மைதான். இங்கு வெறும் சிக்கன் ப்ரெஸ்ட்டை மட்டும் சாப்பிடுவார்கள், ஆனால் நமக்கு அருமையான பயறு வகைகள் இருக்கிறதே. வெங்காயத்திலும் கலோரிகள் உள்ளது. சிகப்பு வெங்காயத்தை விட வெள்ளை வெங்காயம் டயட்டுக்கு நல்லது.
பதிலளிநீக்கு//
பதிலளிநீக்கு'சூரிய வெளிச்சத்தில் எல்லாப் பொருட்களையுமே பார்க்கிறோம்,சூரிய வெளிச்சத்தைத் தவிர!' -நிசார்கதத்தா மகராஜ்.
//
புரிந்து கொள்ளப்படாத உண்மை.
//
குரங்குகள் இன்றும் ஒன்றின் தலையில் ஒன்று பேன் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் சாதாரணமாகக் காணலாம்.அந்த ஆதிப் பழக்கத்தையே நாம் இன்றும் சலூனுக்குப் போய் முடிவெட்டிக் கொள்ளும் பழக்கமாக வைத்திருக்கிறோம்.!
//
சின்ன வயதில் எனக்கும் பேன் பார்த்திருக்கிறார்கள். :-)
மிகவும் சுவையாண பதிவு, இப்படி சாப்பிட்டு மேளத்தோட பருமன் குறைச்சிரலாமா? ஆசையாத்தான் இருக்கு. முயற்சி பண்றேன்.
பதிலளிநீக்குபச்சைப்பயிறு தோலுடன் தானே சார்.?
ஸ்வாமி ஓம்கார் சொன்னது…
பதிலளிநீக்குஅருமை. அருமை அருமை எனும் வார்த்தையை தவிர வேறு ஒன்றும் அறியேன் .
கடைசி வரிகள்...”You are that?"//
உங்கள் வார்த்தைகளை விட எனக்கு வேறென்ன பெருமை இருக்க முடியும் ஸ்வாமிஜி.
நீங்கள் நினைத்தது சரியே.ஒரே ஒரு சின்ன மாற்றம்.'I AM THAT'என்பதே நிசார்கதத்தா மகராஜ் அவர்களின் 101 உரையாடல்களைப் பற்றிய தொகுப்பு.MODERN SPIRITUAL CLASSIC..
என்னங்க சார்.. இப்படி சொல்லிட்டீ(டா)ங்க..! அப்ப நான் வக்கிர புத்திக்காரனா? :( :(
பதிலளிநீக்குஅந்த ‘குரங்க்கு மேட்டரில்’ வேறு ஒரு விசயம் இருக்கு. சொன்னா.. இது 18+ பதிவு ஆய்டும். அதனால ‘மூச்’! :)
//'சூரிய வெளிச்சத்தில் எல்லாப் பொருட்களையுமே பார்க்கிறோம்,சூரிய வெளிச்சத்தைத் தவிர!' //
அட..!!!! :) :)
ஒருவேளை.. இதுதான் கடவுள் கான்செப்டோ?!
அறிவே தெய்வம் சொன்னது…
பதிலளிநீக்கு\\தவறாகப் பதில் அளித்திருந்தால் உங்கள் சிந்தனைகளோடு உண்மையான உலகம் ஒத்து வரவில்லை என்று அர்த்தம்.\\
என் பதில் இரண்டுக்குமே தவறுதான். அதன் பொருள்
பொய்மையான உலகம் ஒத்துவரவில்லையா?
அல்லது உலகத்தோடு என் சிந்தனைகள் ஒத்து போகவில்லையா?
எனக்கு சரியாக புரியவில்லை. விளக்கமாக சொல்லமுடியுமா?//
தவறான பதில்களை அளித்திருந்தீர்கள் என்றால் மூன்றாவது வேட்பாளரான ஹிட்லரைத் தேர்வு செய்திருப்பீர்கள்.பீத்தோவனைக் கருவிலேயே கொல்லும் முடிவினை எடுத்திருப்பீர்கள் எனப் பொருள்.அப்படித்தானே,அன்பரே.
பாசிடிவ்,நெகடிவ்,நல்லது,கெட்டது,இருள்,ஒளி,பிறப்பு,இன்பம்,துன்பம் இப்படி எதனையுமே இரண்டாகப் பிரித்துப் பார்த்தே இயங்கும் மனதினால் வாழ்க்கையை முழுமையாகத் தரிசிக்க முடியாது.
அமர பாரதி சொன்னது…
பதிலளிநீக்குசார், பதிவு அருமையாக இருக்கிறது. 100% ப்ரோட்டீன் டயட் உண்மைதான். இங்கு வெறும் சிக்கன் ப்ரெஸ்ட்டை மட்டும் சாப்பிடுவார்கள், ஆனால் நமக்கு அருமையான பயறு வகைகள் இருக்கிறதே. வெங்காயத்திலும் கலோரிகள் உள்ளது. சிகப்பு வெங்காயத்தை விட வெள்ளை வெங்காயம் டயட்டுக்கு நல்லது.//
நன்றி அமரபாரதி சார்.வெள்ளை வெங்காயம் என்று நீங்கள் சொலவது பெரிய வெங்காயம் என்றால் இங்கே அது அபூர்வமாகத்தான் கிடைக்கிறது.எனினும் பயனுள்ள செய்தி.
வலசு - வேலணை சொன்னது…
பதிலளிநீக்குசின்ன வயதில் எனக்கும் பேன் பார்த்திருக்கிறார்கள். :-)//
நம் மூதாதையர்களான குரங்குகளிடமிருந்து நாம் யாருமே தப்ப முடியாது வலசு - வேலணை :-)
இன்னும் அவர்கள் நம் மனங்களில் குதித்துக் கொண்டேதான் இருக்கிறார்கள்.!
குடுகுடுப்பை சொன்னது…
பதிலளிநீக்குமிகவும் சுவையாண பதிவு, இப்படி சாப்பிட்டு மேளத்தோட பருமன் குறைச்சிரலாமா? ஆசையாத்தான் இருக்கு. முயற்சி பண்றேன்.
பச்சைப்பயிறு தோலுடன் தானே சார்.?//
சீக்கிரமே மேளம், வயலினாக எனது வாழ்த்துக்கள் குடுகுடுப்பை சார்.
ஆம் சார்.தோலுடன் சேர்த்த பச்சைப் பயறுதான்.
எங்கே சில நாட்களாக உங்கள் பதிவைக் காணோம்.வீடு கட்டி முடித்த அசதியா?
ஹாலிவுட் பாலா சொன்னது…
பதிலளிநீக்குஎன்னங்க சார்.. இப்படி சொல்லிட்டீ(டா)ங்க..! அப்ப நான் வக்கிர புத்திக்காரனா? :( :(//
ஓஹோ!அப்போ ஹிட்லரைத் தேர்ந்தெடுத்து இரண்டாம் உலகப் போருக்குக் காரண்மானவர்களில் நீங்களும் ஒருவரா?
எப்படி போர்க் குற்றங்களுக்கான நியூரம்பர்க் நீதிமன்றத்தில் உங்களை விட்டார்கள்?
//அந்த ‘குரங்க்கு மேட்டரில்’ வேறு ஒரு விசயம் இருக்கு. சொன்னா.. இது 18+ பதிவு ஆய்டும். அதனால ‘மூச்’! :)//
18க்கும் குறைவானவர்கள் நம் பதிவை எல்லாம் படிக்கிறார்களா என்ன?!
//ஒருவேளை.. இதுதான் கடவுள் கான்செப்டோ?!//
கான்ஸெப்ட் என்ற எந்த இறந்த காலத்துக்குள்ளும் கடவுள் இல்லை.எப்போதும் அவர் 'இங்கே இப்பொழுதே'என்ற நிகழ் கால உண்மையில்தான் இருக்கிறார்.
மதிப்பிற்குறிய ஐயா, வணக்கம்! ஓர் மகிழ்ச்சியான செய்தி. என் வலைப்பக்கம் வந்து பாருங்கள்... உங்களின் வருகை என்னையும் மகிழச்செய்யும்..... இங்கு சுட்டவும்- அம்மா அப்பா
பதிலளிநீக்குஅன்புடன் ஆ.ஞானசேகரன்
// நீங்கள் நினைத்தது சரியே.ஒரே ஒரு சின்ன மாற்றம்.'I AM THAT'என்பதே நிசார்கதத்தா மகராஜ் அவர்களின் 101 உரையாடல்களைப் பற்றிய தொகுப்பு.MODERN SPIRITUAL CLASSIC.. //
பதிலளிநீக்குஅந்த புத்தகத்தின் தலைப்பை மறக்க முடியுமா?.
நான் கேட்க நினைத்தது...
After reading "I am that" ; you also become That ? :)
உங்களுக்காக அவரின் ஒளிக்காட்சி :
http://www.youtube.com/watch?v=yLTThOxXaNc
பட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குஸ்வாமி ஓம்கார் சொன்னது…
பதிலளிநீக்குAfter reading "I am that" ; you also become That ? :)//
ஆம்,ஸ்வாமிஜி.நானும் நிறைய சமய்ங்களில் 'அது' வாக ஆகிறேன்,விலங்காக.
உங்களைப் போன்ற உண்மையான 'அது'வாக மாற இன்னும் பல பிறவிகள் தாண்டவேண்டும்.!:)
நீங்கள் அனுப்பிய யு.டியூபைப் பார்த்துவிட்டு உங்களை மீண்டும் இம்சிக்கிறேன் ஸ்வாமிஜி.நன்றி.
கார்த்திகைப் பாண்டியன் சொன்னது…
பதிலளிநீக்குபட்டாம்பூச்சி விருது பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே
தங்கள் அன்புக்கும்,வாழ்த்துக்கும் நன்றி கார்த்திகைப் பாண்டியன்.
அருமை!!!
பதிலளிநீக்குசூரிய வெளிச்சத்தில் எல்லாப் பொருட்களையுமே பார்க்கிறோம்,சூரிய வெளிச்சத்தைத் தவிர!
நன்றிகள் பல.......
கேப்டன் ஜெகன் சொன்னது…
பதிலளிநீக்குஅருமை!!!
சூரிய வெளிச்சத்தில் எல்லாப் பொருட்களையுமே பார்க்கிறோம்,சூரிய வெளிச்சத்தைத் தவிர!
நன்றிகள் பல.......//
உங்கள் நன்றிகள் சத்குருவையே சாரும் கேப்டன் சார்.
உங்கள் வருகைக்கு எனது இனிய நன்றிகள்,கேப்டன் ஜெகன்.
சார் முதல் கேள்விக்கு பதில் சரி, இரண்டாவதுதான் சுதப்பலாகிவிட்டது, பதில் மூன்றை தேர்வு செய்துவிட்டேன்....
பதிலளிநீக்குநல்ல பதிவு சார்...
//இதுவரை பின்புறமாக இருந்தே புணர்ச்சியை அனுபவித்த ஆண் குரங்குகள் முதன் முறையாகப் பெண்களை முன்புறமாகப் பார்க்க வேண்டிய கட்டாயம்!//
அற்புதம் காலத்தின் கட்டாயம்...
//'சூரிய வெளிச்சத்தில் எல்லாப் பொருட்களையுமே பார்க்கிறோம்,சூரிய வெளிச்சத்தைத் தவிர!' -நிசார்கதத்தா மகராஜ். //
விளக்கின் ஒளியில் விளக்கை பார்க்க முடியாது.... நன்றாக இருக்கின்றது...
ஆ.ஞானசேகரன் சொன்னது/
பதிலளிநீக்குசார் முதல் கேள்விக்கு பதில் சரி, இரண்டாவதுதான் சுதப்பலாகிவிட்டது, பதில் மூன்றை தேர்வு செய்துவிட்டேன்....//
நமது தர்க்கத்தைப் பார்த்து புன்னகை செய்து கொண்டே, வாழ்க்கை தன் வழியிலேயே ஓடிக் கொண்டே இருக்கிறது.!
பட்டாம் பூச்சியின் சிறகுகளைக் கொடுத்தமைக்குத் தனி நன்றி.ஆனால் அந்த படத்தின் நிரலியை இன்னும் என் பதிவில் ஒட்டத் தெரியவில்லை.அதனால் வானம் இன்னும் இந்தப் பூச்சிக்கு வசப் படவில்லை.!
தங்களின் தொடர்ந்த ரசனைக்கு நன்றி ஆ.ஞானசேகரன்.
////ஒன்று,அந்த விஷயத்தைப் பற்றிய போதுமான விபரங்கள்.
பதிலளிநீக்குஇரண்டு அந்த விபரங்களைத் தொகுத்து அலசி ஆராயும் தெளிவான சிந்தனையும் அணுகுமுறையும்.இதற்குப் பிறகுதான் நீங்கள் எல்லா முடிவுகளையுமே எடுக்கிறீர்கள் என்றால் கீழே காணும் இரண்டு கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்.///
முடிவு எடுப்பதிலும் இவ்வளவு விசயங்கள் இருக்கு என்பது உங்கள் பதிவை பார்த்து புரிந்து கொண்டேன் .பெரும்பாலான நேரங்களில் எடுத்தேன் கவிழ்த்தேன் முவுதான் .
உங்கள் பதிவில் நீங்கள் சொல்லி இருக்கும் விசயங்கள் எல்லாமே அறிவு பூர்வமாக இருந்தது .
malar சொன்னது…
பதிலளிநீக்குமுடிவு எடுப்பதிலும் இவ்வளவு விசயங்கள் இருக்கு என்பது உங்கள் பதிவை பார்த்து புரிந்து கொண்டேன் .பெரும்பாலான நேரங்களில் எடுத்தேன் கவிழ்த்தேன் முவுதான் .
உங்கள் பதிவில் நீங்கள் சொல்லி இருக்கும் விசயங்கள் எல்லாமே அறிவு பூர்வமாக இருந்தது .
நன்றி,சகோதரி.உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்.
ஒரு கேள்விக்கு விடை தவறு ( இசை மேதை )... அந்த வேட்டை, சூடான உணவு படித்த பொழுது, இதுவும் நினைவுக்கு வந்தது, ..பெண்களின் பார்வை, விரிந்த பார்வை ( அதாவது ) 180 டிகிரி போல, ஆண் வேட்டையாடி , வேட்டையாடி , குறி பார்த்து, பார்த்து குறிகிய பார்வை... பெண்கள் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வார்கள் ( டெலிபோனில் பேசிக் கொண்டே , தொட்டிலை ஆடுவார்கள், சமயலில் உப்பை போடுவார்கள் ( சரியாக ), ...multitasking comes naturally to
பதிலளிநீக்குwomen.
அருமையான பதிவு
சுந்தர்
அது ஒரு கனாக் காலம் சொன்னது…/
பதிலளிநீக்குஒரு கேள்விக்கு விடை தவறு ( இசை மேதை )... அந்த வேட்டை, சூடான உணவு படித்த பொழுது, இதுவும் நினைவுக்கு வந்தது, ..பெண்களின் பார்வை, விரிந்த பார்வை ( அதாவது ) 180 டிகிரி போல, ஆண் வேட்டையாடி , வேட்டையாடி , குறி பார்த்து, பார்த்து குறிகிய பார்வை... பெண்கள் பல வேலைகளை ஒரே சமயத்தில் செய்வார்கள் ( டெலிபோனில் பேசிக் கொண்டே , தொட்டிலை ஆடுவார்கள், சமயலில் உப்பை போடுவார்கள் ( சரியாக ), ...multitasking comes naturally to
women.
அருமையான பதிவு //
பெண்களைப் பற்றி டெஸ்மாண்ட் மாரிஸ் சொல்லாத புதுத் தகவல் உங்கள் மூலம் இன்று தெரிந்து கொண்டேன் நன்றி,சுந்தர்.
//பிஸ்கட்,ரொட்டி,சப்பாத்தி,சாதம் இவை அனைத்தும் தவிர்க்கப் பட வேண்டியவை//
பதிலளிநீக்குசார் சப்பாத்தி பலர் பரிந்துரைத்து கேள்வி பட்டு இருக்கிறேன்..உடல் திடமாக இருக்க, விளக்க முடியுமா?
//குரங்குகள் இன்றும் ஒன்றின் தலையில் ஒன்று பேன் பார்த்துக் கொண்டிருப்பதை நாம் சாதாரணமாகக் காணலாம்.அந்த ஆதிப் பழக்கத்தையே நாம் இன்றும் சலூனுக்குப் போய் முடிவெட்டிக் கொள்ளும் பழக்கமாக வைத்திருக்கிறோம்.!//
சார் இதுக்கு வேற காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன், நாம் முடி வெட்டாமல் இருக்க முடியாதே.
//தலையை இன்னொருவரிடம் ஒப்படைத்து விட்டுக் கண்கள் மூடி அதனை அனுபவிக்கும் சுகத்தை இன்றும் பழனியில் குரங்குகளிடம் காணலாம்//
காரணம் ஏற்று கொள்ளும்படி உள்ளது.
//இதுவரை பின்புறமாக இருந்தே புணர்ச்சியை அனுபவித்த ஆண் குரங்குகள் முதன் முறையாகப் பெண்களை முன்புறமாகப் பார்க்க வேண்டிய கட்டாயம்!//
நல்ல லாஜிக்
//இது போலப் பெண்களின் முன்புறத்தை கவர்ச்சிகரமாக்க இயற்கை செய்த நுட்பமான வேலைகளை இன்னும் எந்த 'ப்ளேபாய்' போன்ற பத்திரிகைகளுமே செய்யவில்லை.//
இது புரியவில்லை சார்
//தவறாகப் பதில் அளித்திருந்தால் உங்கள் சிந்தனைகளோடு உண்மையான உலகம் ஒத்து வரவில்லை என்று அர்த்தம்.
எவ்வளவு பெரிய முரண்பாடு இல்லையா இதைப் போல//
சார் இது அனைத்து சமயங்களிலும் சரியாக வராது. சூழ்நிலையை பொறுத்தே இதை ஏற்று கொள்ள முடியும் என்பது என் கருத்து.
நல்ல பதிவு சார்
இந்த பதிவிற்கு படித்தோம் பின்னூட்டம் போட்டோம் என்று செய்ய விருப்பமில்லை, எனவே தான் இந்த தாமத பின்னூட்டம்.
கிரி சொன்னது…
பதிலளிநீக்குசார் சப்பாத்தி பலர் பரிந்துரைத்து கேள்வி பட்டு இருக்கிறேன்..உடல் திடமாக இருக்க, விளக்க முடியுமா?//
கிரி,முதலில் உங்களைப் போன்ற இளைஞர்களுக்கு இந்த டயட் தேவை இல்லை,நீங்கள் அதிக எடையால் கஷ்டப் படாதவராக இருக்கும் பட்சத்தில்.
வீட்டுப் பெரியவர்களுக்கும் தேவைப் படும் நண்பர்களுக்கும் இதைப் பரிந்துரைக்கலாம்.
டாக்டர் அட்கின்ஸ் என்பவரால் அமெரிக்காவில் பிரபலப் படுத்தப் பட்ட உணவு முறை இது.
கொழுப்புச் சத்துக் குறைவாகவும்,கார்போ ஹைட்ரேட்கள் குறைவாகவும் புரோட்டின் மட்டும் அதிகமாகவும் உள்ள உணவுகளை உட்கொண்டால் எடைக் குறைப்பு சாத்தியமாகும் என்பதே அவரது சித்தாந்தம்.
ரிஃபைண்ட் மாவுகளால் செய்யப் பட்ட கோதுமை ரொட்டி,சப்பாத்தி,அரிசி சாதம்,பிஸ்கட்டுகள் இவற்றில் கார்போ ஹைட்ரேட்டுகள் அதிகம் ஆதலால்,புரதச் சத்துக்கள் அதிகம் இருக்கும் பருப்பு வகைகளையும்,மீன்,கோழி.முட்டையின் வெள்ளைக் கரு,பச்சைக் காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உண்ணும் முறை இது.
//சார் இதுக்கு வேற காரணம் இருக்கும் என்று நினைக்கிறேன், நாம் முடி வெட்டாமல் இருக்க முடியாதே.//
முடியை நாமே திருத்திக் கொள்ளும் வசதிகள் வந்த பின்னும் நாம் சலூனுக்குச் செல்வதையும்,அங்கே கிடைக்கும் அடிப்படையான சுகத்தையுமே குறிப்பிடுகிறார்,மாரிஸ்.
//இது புரியவில்லை சார் //
அந்த அந்தரங்கமான செக்ஸ் விஷயங்களை நீங்கள் புத்தகத்தைப் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்,கிரி.!
//சார் இது அனைத்து சமயங்களிலும் சரியாக வராது. சூழ்நிலையை பொறுத்தே இதை ஏற்று கொள்ள முடியும் என்பது என் கருத்து.//
எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும் ’நம் தர்க்க அறிவு எப்பொதுமே சரியான முடிவே எடுக்கும் என்ற நம் நம்பிக்கையின் போதாமையே இங்கே சுட்டிக் காட்டப் படுகிறது,கிரி.
நல்ல பதிவு சார்
இந்த பதிவிற்கு படித்தோம் பின்னூட்டம் போட்டோம் என்று செய்ய விருப்பமில்லை, எனவே தான் இந்த தாமத பின்னூட்டம்.//
கரக்ட்.நீங்கள் சிந்தித்து நீங்களே ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்பதே எனது நோக்கம்.
நன்றி,கிரி.