அமிர்தவர்ஷினி --------------------- 9.அப்பாவிடம் எங்கள் காதலைச் சொன்ன அடுத்த நாள் அமிர்தவர்ஷினி என்னைப் பார்க்க வரவில்லை.ஃபோனிலும் கிடைக்கவில்லை.ஏதாவது அவளுக்கே உடம்புக்குச் சரி இல்லையா?
மதியம் அப்பா சாப்பாடு கொண்டு வந்த கொடுத்த போது, அது ஹோட்டல் சாப்பாடாக இருந்தது,எனக்கு இன்னும் ஐயத்தைக் கிளப்பியது.அப்பாவுக்கே அன்று இரவு ஃபோன் செய்து கேட்டேன்.சேஷாத்திரி அங்கிளுக்கு உடம்புக்குச் சரி இல்லை என்று அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறாள் என்று அப்பா சொன்ன போதுதான் நான் கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன்.ஆனால் அன்று மாலையே சேஷாத்திரி அங்கிள் எதேச்சையாக என்னைப் பார்க்க வந்திருந்தார்.அவரே அமிர்தவர்ஷினியைத் தேடி வந்திருந்தார்.இதைக் கேட்ட பிறகுதான் நான் பதறிப் போனேன்.
அப்பா என்னிடம் எதையோ மறைக்கிறார் என்று புரிந்தது.
அடுத்த நாள் மதியம் அப்பா எனக்குச் சாப்பாடு எடுத்து வந்த போதுதான் உண்மை புரிந்தது.
'அமிர்தவர்ஷினி எங்கேப்பா?' என்றேன் எடுத்த எடுப்பில்.
அப்பா என்னை ஒரு முறை ஆழமாகப் பார்த்தார்.
'இனி அவ இங்கே வர மாட்டாப்பா'
'ஏன்?'
'அவளை நான் வேறே ஊருக்கு அனுப்பிட்டேன்.' என்றார் அப்பா.
நான் ஒரு கணம் திகைத்துப் போய் விட்டேன்.
'ஏம்பா?'
'சாகப் போற என்னோட மகனுக்காக வாழப் போற அந்தப் பொண்ணோட வாழ்க்கையைப் பலி குடுக்க நான் தயாரா இல்லே!' என்றார் அப்பா அமைதியாக.
'அப்பா' என்று கத்தியே விட்டேன் நான்.
'நாங்க ரெண்டு பேரும் உயிருக்குயிராக் காதலிக்கிறோம்ப்பா'
'ரெண்டுலே ஒரு உயிருக்குக் கேரண்டி இல்லையேப்பா!' என்றார் அவர், முற்றிய துயரத்தில் மட்டும் வரும் அமைதியுடன்.
'அமிர்தவர்ஷினியே இதுக்கு ஒத்திருக்க மாட்டாளேப்பா?'
'நானே ஒத்துக்காத விஷயத்தை அவ எப்படிப்பா ஒத்துக்குவா? அவ பெரியவங்களை மதிக்கிற பொண்ணு!' என்றார் அவர்.
'சரி.அவளை எங்கே அனுப்பப் போறீங்க? அவகிட்டே நான் பேசிக்கிறேன்.'
'நீ பேசக் கூடாதுங்கறதுக்காகத்தானே, உன்னை இனிப் பார்க்கக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டு அவளை நம்ம வீட்டுலே இருந்தே அனுப்பிச்சுட்டேன் '
நான் அவரை வெறுமையின் ஆழத்துடன் ஒரு கணம் பார்த்தேன்.
'இதுவரைக்கும் என்னோட அப்பா ஒரு புழு,பூச்சிக்குக் கூட துரோகம் பண்ணியிருக்க மாட்டார்ன்னு என்னோட ஃப்ரண்ட்ஸ்கிட்டே எல்லாம் அடிக்கடி உங்களைப் பத்திப் பெருமை அடிச்சுட்டிருப்பேன்.இப்போ எல்லாத்துக்கும் சேர்த்து வெச்சு உங்க சொந்த மகனையே கொன்னுட்டீங்களேப்பா!' என்றேன் நான் கண்களில் ஈரம் வற்றிப் போய்..
சற்று நேரம் தலை குனிந்து நின்றிருந்த அப்பா, மெல்லத் தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.
முழுக்க வடிந்திருந்தார் அவர்..
'உங்க அம்மாவை இழந்து முப்பது வயசுலே நான் பட்ட கஷ்டத்தைப், பதினெட்டு வயசுலிருந்தே அந்தப் பொண்ணு அனுபவிக்கறதை என்னாலே பார்க்க முடியாதுப்பா! காதலோட வலி, என்னன்னு உன்னை மாதிரி சின்னப் பசங்க மட்டுமில்லே..,என்னை மாதிரி வயசானவங்களும் புரிஞ்சுக்குவாங்கன்னு ஏனோ உங்களுக்குத் தெரிய மாட்டேங்குது!' என்றார் அப்பா,குரல் உடைய .
தளர்ந்திருந்திருந்த அவரை நான் அணைத்துக் கொண்டேன்.
'என்னை மன்னிச்சுடு,சரவணா' என்று அப்போதுதான் அவர் கதறினார்.
'நான் உங்களைப் புரிஞ்சுக்காமே பேசினப்போ அழாமே,இப்போ முழுக்கப் புரிஞ்சுகிட்டதுக்கப்புறம் ஏம்பா அழறீங்க?' என்று அவரை இன்னும் ஆறுதலாக அணைத்துக் கொண்டேன்.
அவர் கொண்டு வந்திருந்த மதிய உணவைச் சாப்பிட்டு முடித்தேன்.அவர் அரைகுறை நிம்மதியுடன் என்னிடம் விடை பெற்றுப் போனார்.
பிறகு சற்று நேரம் அமிர்தவர்ஷிணி என்னிடம் கொடுத்திருந்த ஆஜ்மீர் பாபாவின் திருக்குரான் கையெழுத்துப் பிரதியைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.
அவளை இனிமேல் பார்க்க முடியாது என்பதை நினைத்தாலே ஆக்சிஜன் இல்லாத காற்றை சுவாசிப்பதைப் போல, நெஞ்சை அடைத்து மூச்சுத் திணறியது.
கையில் இருந்த அந்த வேத நூலின் கையெழுத்துப் பிரதியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.
'எப்படி இத்தனை நூற்றாண்டுகளாக,,இத்தனை கோடி மனிதர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் ஒரு தெய்வீகம் என்னை மாத்திரம் கைவிடும் என்று ஒரு வெறி,திடீரென எனக்குள் கிளம்பியது.
தர்க்கம் அனைத்தும் உடைய,அந்தக் கையெழுத்துப் பிரதியைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு, மருத்துவ மனையிலிருந்து வெளியேறினேன்.
ஒரே,ஒருநாள் இடைவெளியில் என்னையும்,அமிர்தவர்ஷிணியையும் பிரிக்க முடியுமென்றால்,அது ரயில்களால்தான் முடியும் என்று ஏனோ தோன்றியது.
சென்ட்ரலை நோக்கி ஓடினேன்.என்னிடம் பணம் எதுவும் இல்லையாதலால் வேறு வாகனங்களின் உதவி ஏதுமின்றி ஓடினேன்.மூச்சு வாங்கியது.ஆனால் ஒவ்வொரு மூச்சுக் காற்றும் அமிர்தவர்ஷிணியைத் திரும்ப எனக்கு மீட்டுத் தரும் என்ற நம்பிக்கையுடன் ஓடினேன்.
ஓடியே சென்ட்ரலை அடைய ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆனது.
சென்ட்ரல் ஸ்டேஷனை நெருங்கிய போது என்னால் கிட்டத்தட்ட நடக்க முடியாத நிலைமை.
அமிர்தவர்ஷிணியை முதன் முதலாக நான் பார்த்த அதே அந்தி வேளை. மயங்கிய நிலையில் அடைந்த என்னை அதே பிங்க் சூரியன்,பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.
சென்ட்ரல் ஸ்டேஷனின் வழக்கமான கூட்டத்தில் என்னுடைய அமிர்தவர்ஷிணி எங்கே?
எந்த ரயிலில் அமர்ந்து என்னிடம் இருந்து ஒரேயடியாகப் பிரியப் போகிறாள்?
அல்லது அவளது ரயில் ஏற்கனவே கிளம்பிப் போய் விட்டதா?
முதலில், ரயில் நிலையம்தான் நான் அவளைத் தேடி அடைய வேண்டிய உண்மையான இலக்கா?
ஏதோ ஒரு நம்பிக்கையில்,பரபரப்பான கூட்டத்துக்கு மத்தியில், அரைகுறை மயக்கத்துடன் அவளது பெயரைச் சார்ட் லிஸ்ட்டில் தேட ஆரம்பித்தேன்.
மொய்த்துக் கிடந்த அந்த இருபத்தாறு ஆங்கில எழுத்துக்களுக்குள்,எனது தலையெழுத்து மறைந்து கிடக்க,அவளது பெயரை அந்தத் தள்ளு முள்ளலில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அது மட்டுமல்ல,வலுவான அந்தக் கூட்டம் என்னைப் பிதுக்கி வெளியே தள்ளி விட, நான் கிட்டத்தட்ட அந்த இடத்திலிருந்தே வெளியே வந்து விழுந்தேன்.
மூச்சு வாங்கித், தலை சுற்றியது.
அப்போது கசங்கிய உடைகளுடன் வெளியே வந்த ஒருவன் 'டேய், நீ பார்த்த பேரு,நம்ம அம்சவேணி இல்லேடா, யாரோ அமிர்தவர்ஷிணியாம்!' என்றான் தனது நண்பனிடம்.
மயங்கி விழும் சூழ்நிலயில் இருந்த என்னை,அந்த ஒற்றைப் பெயர் மீண்டும் உயிர்ப்பித்தது.
அந்த இளைஞனிடம் தட்டுத் தடுமாறிப் போய் 'சார் எந்த ட்ரெயின்லே,அமிர்தவர்ஷிணி பேரைப் பார்த்தீங்க?' என்றேன் மூச்சு வாங்க. எனது முற்றிலும் இயலாத நிலைமையை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு அவன் 'க்ரேண்ட் ட்ரன்க்' என்றான்.
ஓடினேன்.
பிளாட்ஃபார்ம் கண்டு பிடித்து, நான் ஓடிய போது ரயிலின் கடைசிப் பெட்டி மறைந்து கொண்டிருந்தது.
'அமிர்தவர்ஷிணி' என்று கத்தியபடி, ஓடிய ரயிலுக்குப் பின்னால் ஓடினேன்.
ஸ்டேஷனைத் தாண்டிய பின்னர் வரும் ரயில் பாதையின் ஓரத்துக் கருங்கற்கள் எனது பாதங்களைக் குத்திக் கிழித்தன.
ரத்தம் வந்த எனது பாதங்கள் என்னைக் கடைசியாகத் தடை செய்யப் பார்த்தன.ஆனால் நான் எப்படி ரத்தம் வழிய,அத்தனை வலிகளையும் தாண்டி ஓடினேன் என்று இதுவரைக்கும் எனக்குத் தெரியாது.
அவள் எங்கே நடுவழியில், எந்த ஊரில் இறங்கினாலும், அப்பாவிடம் அவள் அளித்திருந்த சத்தியம் அவளை, என்னை இனிமேல் சந்திக்க விடாது என்ற அச்சம்தான் என்னைத் துரத்தியது.
ஆனால் ஏற்கனவே தளர்ந்து,விழுந்திருந்த எனது உடம்பால் இப்போது வேகம் எடுத்து விட்ட ரயிலின் ஓட்டத்தைப் பிடிக்க முடியவில்லை.
'அமிர்தவர்ஷிணீ ' என்று கடைசியாக எனது சக்தி முழுவதையும் திரட்டிக் கத்தினேன்.
எனது உயிரின் கதறல் கேட்டதோ என்னவோ,ரயில் மெதுவாக நின்றது.
ஏதோ சிக்னல் கிடைக்கவில்லை போலிருந்தது. தூரத்தில் எரிந்த சிகப்பு விளக்கு, எனது கண்ணுக்குப் பச்சை விளக்காகத் தெரிந்தது.
தள்ளாடித் தள்ளாடி ஓடினேன்.
'அமிர்தவர்ஷிணீ !'யாரும் பெட்டிக்குள்ளிருந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை.
சிக்னல் கிடைத்து மீண்டும் ரயில் கிளம்பியது.இனிப் பார்க்க முடியாது என்று எனது கண்கள் சொருகி விட்டன.
தடதடவென்று ஓடத் தொடங்கிய ரயில் பெட்டியிலிருந்து, கடைசியாக அமிர்தவர்ஷிணியின் முகம் எட்டிப் பார்த்தது!
அவள் முகத்தை அவ்வளவு அழகாக நான் என்றுமே பார்த்ததில்லை.
அவளது பெயரைக் கூப்பிடக் கூட முடியாமல், அவளைப் பார்த்து வெறுமனே கையசைத்து விட்டு விழுந்து விட்டேன்.
'சரவணா!' என்று அவள் கத்திய சப்தம் ஓடிய ரயில் சப்ததையும் தாண்டிக் கேட்டது.
அவள் ஓடும் ரயிலில் இருந்து எட்டிக் குதித்து ஓடி வந்தது இப்போது எனக்கு மங்கலாகத் தெரிந்தது.
ஓடி வந்தவள் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.
இருவரும் அழுது,கதறியபடியே அரவணைத்துக் கொண்டோம்.
தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள் என்பதெல்லாம் பொய் என்று சொல்பவர்கள் அதனை இன்னும் அனுபவிக்கவில்லை என்று அர்த்தம்.
உலகத்துப் பெண்கள் எல்லோரும் காதல் வயப் பட்டார்கள்.ஆண்கள் அனைவரும் பெண்களை ஆராதிக்கத் தொடங்கினார்கள்.
உலகம் முழுவதும் இருந்த பியானோக்களும்,வயலின்களும் எனக்குப் பிடித்த 'லவ் ஈஸ் ப்ளூ'வை வாசித்த இசை எனக்குள் கேட்டது.
தாமரைகளும்,மல்லிகைகளும்,ரோஜாக்களும் தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடின.
எங்களது இரண்டு பக்கங்களும் ஓடிய ரயில்களில் இருந்த ஜனங்கள் சிரித்தபடியே பல மொழிகளில் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டே போனார்கள்.
**********************************
'காதல் மலரும் கணங்கள்' என்ற இந்த உண்மைக் காதல் கதை எனது தயாரிப்பில் தொலைக் காட்சியில் வெளியான போதுதான், அதனுடைய டி.ஆர்.பி ரேட் வானைத் தொட்டது.
அமிர்தவர்ஷிணியும்,சரவணனும் இணைந்த காட்சி முடிந்தவுடன் நிகழ்ச்சித் தயாரிப்பாளனான நான் தொலைக் காட்சியில் வந்தேன்.
மக்கள் தொடர்ந்து அளித்து வந்த ஆதரவுக்கும்,பாராட்டுக்களுக்கும் நன்றி தெரிவித்த பின்னர்,உண்மைக் காதலர்களை மக்களுக்கு அறிமுகப் படுத்தும் பரபரப்பான கட்டத்துக்கு வந்தேன்.
'ரசிகப் பெருமக்களே! இத்தனை நாட்கள் நீங்கள் பார்த்து,ரசித்துருகிய இந்த உண்மைக் காதல் கதை,
உண்மையில் நடந்த வருடம் 1983!' என்றேன்.
பார்த்த மக்கள் அனைவரும் 'ஆ'வென்று கத்தியே விட்டார்கள்.
நான் புன்னகையுடன் அவர்களிடம் சொன்னேன்.
'இந்தக் காதல் கதையில் நீங்கள் இதுவரை பார்த்தது,உண்மைக் கதாபாத்திரங்களாக நடித்தவர்களைத்தான். ஆறே மாதத்தில் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் சொன்ன அந்த உண்மைச் சரவணன் 26 வருடங்கள் கழித்தும், இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அந்த உண்மைச் சரவண குமாரை நீங்கள் பார்க்கும் முன் ஒரு சின்ன கமர்ஷியல் ப்ரேக்' என்றேன்.
நேரில், இதனைச் சொல்லிக் காக்க வைத்திருந்தால், பார்த்த மக்கள் என்னை அடித்தே கொன்றிருப்பார்கள். எங்கள் தொலக்காட்சி வரலாற்றிலேயே அதிக பட்ச வருமானம் ஈட்டிக் கொடுத்த விளம்பர நிமிடங்கள் அவை.
மீண்டும் நான் தோன்றி,'இதோ உங்கள் முன்னர், அந்தப் புற்று நோயாளி சரவண குமார் வருகிறார்!' என்றேன்.
நாடு முழுதும் ,மொழியாக்கம் செய்யப் பட்டு அனைத்துப் புற்று நோய் மருத்துவ மனைகளிலும் இந்தத் தொடர் அன்று ஒளிபரப்பப் பட்டது. அனைத்து நோயாளிகளும்,அவர்களது குடும்பத்தினரும் ஆனந்தக் கண்ணீருடன் பார்த்த நிகழ்ச்சி அது.
சரவண குமார் வந்தார்.
ராணுவ உடையில் அவர் கம்பீரமாக வந்த போது, நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு குடும்பத்திலும் அனைவரும் முதலில் திகைத்துப் போய்ப் பின்னர்,எழுந்து நின்று ஒரு சேரக் கைதட்டினார்கள்.
ஐம்பது வயதிருக்கும் உண்மைச் சரவணனின் காலைத் தொட்டுச், சரவணனாக நடித்த இளம் வயது நடிகர் கும்பிட்டார்.நடித்தவரை விட உண்மைச் சரவணன்,அழகோ அழகு.
'வெல்டன்' என்று நடித்தவரைப் பாராட்டினார் அந்த ராணுவ அதிகாரி!
சரவணனிடம் மைக்கைக் கொடுத்து விட்டு, நான் ஒதுங்கிக் கொண்டேன்.
'ஆறே மாசத்துலே செத்துடுவேன்னு டாக்டர்க சொன்னாங்க.ஆனா நூத்துக் கணக்கான மனுஷங்களோடே உயிரைக் காப்பாத்த வேண்டியவன், நீயே உயிரை விட்டா எப்படிடான்னு, என்னை இன்னும் காப்பாத்திட்டிருக்கறது, என்னோட கதையிலே வந்த,அந்த ஆஜ்மீர் பாபாதான்!' என்றார் சரவண குமார் மேலே பார்த்துக், கையெடுத்துக் கும்பிட்டுக் கண்கலங்கியபடியே.
பார்த்த மக்கள் கண்களில் தங்களை அறியாமலேயே கண்ணீர் பெருகியது.
'இன்னும் புரியற மாதிரி சொல்றேன்.கொஞ்ச நாள் முந்தி பாகிஸ்தான் தீவிரவாதிக மும்பைத் தாஜ் ஹோட்டலைத் தாக்கினப்போ,பல நூறு அப்பாவி மக்களோடே உயிரைக் காப்பாத்த வந்த நேஷனல் செக்யூரிட்டி கார்ட்ஸோட வீரத்தை நீங்க நேரடியாத் தொலைக்காட்சியிலே பார்த்திருப்பீங்க.
அந்தக் கமாண்டோப் படையிலே ஒரு பிரிவுக்குத் தலைமை தாங்கின மேஜர் நான்!' என்றார் சரவண குமார்.
'சார்' என்றான் என்னுடன் இந்த நேரடி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மார்க்கெட்டிங் மேனேஜர் கௌதம்.
'என்ன கௌதம்?' என்றேன் நான்.
'இந்த சீரியல் இது மாதிரி எத்தனை கிளைமேக்ஸை வேணும்ன்னாலும் தாங்கும் சார்!' என்றான் அவன் உண்மையில் பரவசத்துடன்.
'இப்போ நீங்க எல்லாரும் ஆவலோடே எதிர்பார்த்திட்டிருக்கிற என்னோட அமிர்தவர்ஷிணியை பார்க்கப் போறீங்க!'' என்றார் சரவணன்.
'சார்!' என்றான் கௌதம், இன்னும் உற்சாகமாக.
'இப்போ மாத்திரம் ஒரு பத்தே நிமிஷம் கமர்ஷியல் ப்ரேக் விட்டீங்கன்னா,இன்னொரு பத்து லட்ச ரூபாயை அள்ளிடலாம் சார்!'
'பணம்,காசு முக்கியமில்லேன்னு தெரியற நேரம் லைஃப்லே எப்பவாச்சும் ஒரு வாட்டித்தான் வரும்,கௌதம்.அதை மிஸ் பண்ணா மறுபடியும் அந்த நிமிஷம் வரவே வராது!' என்றேன் நான்.
அமிர்தவர்ஷிணி வந்தாள்.இப்போது அவளுக்கு 44,45 வயதிருக்கும்.
ஆனால் ஸ்படிகத்துக்கு வயதேது?
'எனது உயிர் மனைவி!' என்று ஆதரவுடன் தோளில் அணைத்துக் கொண்டார்,சரவணன்.
அமிர்தவர்ஷிணியிடம் மைக்கை நீட்டினேன்.
'தொலைக்காட்சியில் உங்கள் வாழ்க்கையை நீங்களே பார்த்தப்போ உங்களுக்கு என்ன தோணுச்சு மேடம் ?' என்று கேட்டேன்.
'என்னை விட என் கேரக்டர்லே நடிச்ச பொண்ணு நல்லா டிரஸ் பண்ணியிருந்துச்சு!' என்றாள் அவள், தனது கணவனைப் பார்த்துச் சிரித்தபடியே.
'சாகக் கிடந்த பல பேரு உயிரை, சின்ன வயசுலே இருந்தே உங்களோட அன்பும்,நம்பிக்கையும் காப்பாத்தியிருக்குன்னு தெரிஞ்சுகிட்டோம்.அதுக்கப்புறம் நீங்க அந்தப் பணியைத் தொடர்ந்து செஞ்சுட்டு வர்ரீங்களா மேடம்?'
'நான் மட்டுமில்லே. ராணுவத்துலே பணி புரியற என்னோடே கணவர்,அம்னஸ்டி இன்டர்னேஷனல்ங்கிற மனித உரிமைக் கழகத்துலே வேலை பார்க்கிற என்னோட மூத்த மகன் அரவிந்த் குமார்,அமெரிக்காவுலே கேன்சர் ட்ரீட்மெண்ட்டுக்காக மேல் படிப்புப் படிச்சிட்டிருக்கிற என்னோட ரெண்டாவது மகன் சஞ்சய் குமார் நாங்க நாலு பேருமே ஒரு மனித உயிர் எவ்வளவு புனிதமானது,அதைக் காப்பாத்தறது அதை விட எவ்வளவு புனிதமானதுன்னு புரிஞ்சுட்டு எங்க வாழ்க்கையைவே அதற்காகவே அர்ப்பணம் பண்ணிட்டு இருக்கோம்' என்றார் அந்த அம்மையார்.
'பார்த்துட்டிருக்கிற உங்க ரசிகர்களுக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க?'
அமிர்தவர்ஷிணி தொலைக்காட்சி ரசிகர்களைப் பார்த்துச் சொன்னார்.
'சாவு நம்ம கையிலே இல்லே.ஆனா சாகாமே இருக்கறது நம்ம கையிலதான் இருக்கும்பாரு பாபா!''காதல் மலரும் கணங்களின்' அடுத்த உண்மைக் கதையை மீண்டும் உங்களுக்குப் படைக்கும் வரை நன்றி.வணக்கம்.' என்று கூறி விடை பெற்றேன் நான்.
இனி ரோலிங் டைட்டில்கள்..
துறவு வாழ்க்கைக்கு, நாம் கற்பித்திருக்கும் இலக்கணங்களை உடைத்து விட்டு, இதனை எழுதும் போது வாழ்த்திப் பாராட்டி அருள்புரிந்த ஸ்வாமி ஓம்கார் அவர்களது ஆத்ம ரசனையின் பாத கமலங்களுக்கு இந்தக் காதல் கதையைச் சமர்ப்பிக்கிறேன்.இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது பாராட்டி,ஊக்குவித்து,உற்சாகமளித்த அனைத்துப் பதிவுலகப் பெருமக்களுக்கும் எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள்.எழுதத் தொடங்கியதுதான் நான்.தொடர்ந்து எழுதி முடித்தது உங்கள் அனைவரின் ரசனையே.திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு பெறும் இக்கதையினை ஆசிரியனின் அனுமதியின்றி எந்த வடிவத்திலும் எடுத்தாள அனுமதி இல்லை என்பது இங்கே அறிவிக்கப் படுகிறது.இனி அடுத்து வரும் 'காதல் மலரும் கணங்களை' எழுதும் படி நமது பதிவுலகின் இளம் பதிவர்களைக் கேட்டுக் கொண்டு நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.காதல் தேவதை உங்கள் எல்லோருக்கும் அருள்புரிவாளாகுக.. ஓம் ஸ்ரீ சாய்ராம்.