வெள்ளி, ஜனவரி 22, 2010

இலக்கில்லாத பறவைகள் (தாகூர்)

தற்காலப் படைப்புக்களில் சலிப்புக் காணும் போதெல்லாம், நான் அடைக்கலம் புகும் தாகூரின் 'STRAY BIRDS' கவிதைத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள்..
*****************************
எல்லையற்ற வார்த்தைகள், காதலனிடம் தங்கள் முகமூடிகளைக் கழற்றி வைக்க
அவை ஒரே ஒரு சிறிய பாடலாக, நித்தியத்தின் முத்தமாகச் சுருங்கி விட்டது...
*************************************
பிரம்மாண்டமான பாலைவனம் ஒரு சிறிய பசும் புல்லின் காதலுக்காகத் தகித்துக் கொண்டிருக்க,
புல்லோ சிரித்தபடி தலையசைத்து விட்டுப் பறந்து விட்டது....
*****************************************
சூரியனைத் தவற விட்டதுக்குக்காக நீ கண்ணீர் சிந்தும் போதெல்லாம்,
நட்சத்திரங்களையும் தவற விடுகிறாய்...
****************************************
ஓ , கடலே, உனது மொழிதான் என்ன?
நித்தியமான கேள்விகள்.
ஓ,வானமே, உனது பதிலின் மொழி என்ன?
நித்தியமான மௌனம்.
****************************************
நீ பார்ப்பது உன்னை அல்ல, உனது நிழலைத்தான்.
*****************************************
' ஆடிக் கொண்டிருக்கும் இலைகளான நாங்கள் எங்கள் சலசலப்பின் மூலம் புயலுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்..
ஆனால் மௌனமாகவே இருக்கிறாயே, நீ யார்?'
'நானா? ஒரு சாதாரணமான பூ.'
*******************************************
ஓய்வு உழைப்புக்குச் சொந்தமானது, கண்ணுக்கு இமைகளைப் போல...
*****************************************
ஓ,அழகே, அன்பில் உன்னைப் பார், கண்ணாடியின் புகழ்ச்சியில் உன்னைப் பார்க்காதே..
*******************************************
அவனது காலை நேரங்கள் ,இறைவனுக்கே புதிய அதிசயங்கள்...
***************************************
காய்ந்து போன ஆற்றுப் படுகை, தனது இறந்த காலத்துக்காக நன்றிகளைக் காண்பதில்லை...
*****************************************
உனக்குப் பசி இல்லாததற்காக, உணவைக் குறை சொல்லாதே...
*******************************************
நீரில் இருக்கும் மீன் மௌனமாக இருக்கிறது.
தரையில் இருக்கும் விலங்கு சத்தம் போடுகிறது.
வானில் பறக்கும் பறவை பாட்டுப் பாடுகிறது.
ஆனால் மனிதனுக்குள் கடலின் மௌனமும்,பூமியின் இரைச்சலும்,காற்றின் பாட்டும் இருக்கின்றன....
*********************************
உனது விக்கிரகம் புழுதியில் உடைந்து கிடப்பது ,
கடவுளின் புழுதி, உனது விக்கிரகத்தை விட மேலானது என்பதை நிரூபிக்கத்தான்....
********************************
கடல் பறவைகளும், கடல் அலைகளும் நெருங்கி வந்து சந்திப்பதைப் போல நாம் சந்திக்கிறோம்.
பறவைகள் பறந்தபின்,அலைகளும் திரும்பிச் செலவதைப் போல நாம் பிரிகிறோம்..
*******************************
வாழக்கை நமக்குக் கொடுக்கப் படுகிறது.
அதனைக் கொடுப்பதின் மூலம் ,நாம் அதனைச் சம்பாதிக்கிறோம்...
**********************************
சிட்டுக் குருவி, மயிலின் தோகையின் பாரத்திற்காக வருத்தப் படுகிறது...
**********************************
குறைபாடுகள் தன்னை நேசிப்பதற்காகத்தான், முழுமை தன்னை அப்படி அலங்கரித்துக் கொள்கிறது...
********************************
இளம் மொட்டு விரிந்தவுடன் ' உலகே, மறைந்து விடாதே' என்று கதறுகிறது....
********************************
இறைவன் பெரிய சாம்ராஜ்யங்களிடம் சலிப்படைகிறான், சிறிய பூக்களிடம் அல்ல...
***********************************
மரம் வெட்டுபவனின் கோடரி, அவன் வெட்டப் போகும் மரத்திடம் தனக்குக் கைப்பிடி வேண்டுமென இறைஞ்சியது..
மரமும் கொடுத்தது...
**********************************
ஒவ்வொரு குழந்தையும், கடவுள் இன்னும் மனிதன் மேல் நம்பிக்கை இழக்கவில்லை என்ற செய்தியோடு பிறக்கிறது...
*******************************
புல்,தனது கூட்டத்தைப் பூமியில் தேடுகிறது.
மரம், தனது தனிமையை வானத்தில் தேடுகிறது ....
*****************************
கண்ணுக்குத் தெரியாத இருள் என்ற ஜோதியின், பொறிகல்தான் நட்சத்திரங்களா?
*******************************
நல்லது செய்ய நினைப்பவன், கதவைத் தட்டுகிறான்.
அன்பு செய்ய நினைப்பவனுக்குக், கதவு திறந்தே கிடக்கிறது...
*************************
சாவில் அனைத்தும் ஒன்றாகிறது.
வாழ்வில் ஒன்று அனைத்துமாகிறது.
கடவுளின் சாவில்,மதங்கள் ஒன்றாகின்றன...
***************************
'கனியே, நீ இன்னும் எவ்வளவு தொலைவில் இருக்கிறாய்?'
'நான் உன் இதயத்தில்தான் ஒளிந்திருக்கிறேன், பூவே!'
********************************
வெளிச்சத்தில் தெரியாமல்,இருளில் மட்டும் தட்டுப் படும் ஒன்றுக்கான ஏக்கம் இது....
***********************************
'தாமரை இலையின் அடியில் இருக்கும் பெரிய பனித் துளி நீ, நான் அதன் மேல் இருக்கும் சிறிய துளி' என்றது பனித் துளி குளத்தைப் பார்த்து...
******************************
மறைந்து கொண்டிருக்கும் பகல் பொழுதிடம் இரவு கிசுகிசுத்தது,
'நான்தான் மரணம்.உனது தாய். காலையில் உன்னைப் புதிதாகப் பெற்றெடுக்க வந்திருக்கிறேன்'....
******************************
சூரியனிடம் இரவு கூறியது..
'நீ உனது காதல் கடிதங்களை, நிலவின் மூலம் அனுப்பினாய்..நான் எனது பதிலைக், கண்ணீர்த் துளிகலாகப் புல் நுனிகளின் மேல் விட்டுச் செல்கிறேன்...
************************
இதழ்களைப் பறித்துக் கொள்வதன் மூலம் ,பூக்களின் அழகினைச் சேகரிக்க முடியாது...
****************************
சிலந்திவலை பனித்துளிகளைப் பிடிக்கிறேன் என்று நடித்துக் கொண்டு ,பூச்சிகளைப் பிடிக்கிறது...
*****************************
'நீங்கள் ஒரு நாள் அழிந்து விடுவீர்கள் என்று படித்தவர்கள் சொல்கிறார்கள்' என்று மின்மினிப் பூச்சிகள் நட்சத்திரங்களைப் பார்த்துக் கூறின.
நட்சத்திரங்கள் பதிலேதும் சொல்லவில்லை...
**********************************
சிறிய விஷயங்களை என்னை நேசிப்பவர்களுக்காக விட்டுச் செல்கிறேன்.
பெரிய விஷயங்களை எல்லோருக்காகவும் விட்டுச் செல்கிறேன்....
*************************************
'நான் எனது பனித் துளிகளை இழந்து விட்டேன் 'என்று ,நட்சத்திரங்களையே இழந்து விட்ட காலை வானத்திடம் சொல்லி அழுதது,பூ.
***********************************
புகழ், என்னை அவமானப் படுத்துகிறது. ஏனெனில் அது ரகசியமாக நான் பிச்சை எடுத்தது....
**********************************
இரவின் இருள்,வைகறையின் பொன்னை எல்லாம் சுமந்திருக்கும் ஒரு பை.
***********************************
நிலவு,தனது ஒளியை ஆகாயம் முழுக்கப் பரப்புகிறது.ஆனால் தனது கறைகளை மட்டும் தன்னிடமே வைத்துக் கொள்கிறது...
************************
பிறப்பைப் போல, இறப்பும் வாழ்க்கைக்குச் சொந்தமானதுதான்.நடப்பது எனபது காலை மேலே தூக்குவதில் மட்டுமல்ல,மீண்டும் கீழே வைப்பதிலும் அடங்கி இருக்கிறது...
**************************
உங்கள் அன்பின் மேல், நான் வைத்திருக்கும் நம்பிக்கையின் கடைசி வார்த்தைகளாக இவை இருக்கட்டும்...
________________

15 கருத்துகள்:

 1. திரும்ப திரும்ப பலமுறை படிக்க வேண்டிய வரிகள் அனைத்துமே..

  பகிர்வுக்கு நன்றி சகோ...

  பதிலளிநீக்கு
 2. ஐயா,நலம் தானே?
  ஒவ்வொன்றும் அருமையான வரிகள் .
  நினைவில் கொள்ளத்தக்கவை.பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. //நீ பார்ப்பது உன்னை அல்ல, உனது நிழலைத்தான்.//

  மேற்கண்டதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....

  பதிலளிநீக்கு
 4. கருத்துக்கு நான் வேறு விளக்கம் தர வேண்டுமா? சூரியன் வெளிச்சமானது என்று சொன்னால் என்ன தோன்றும்?

  அதெல்லாம் சரி இத்தனை பெரிய்ய்ய் எப்படி (தமிழ் டைப்) சாத்யமானது.

  நீங்கள் பேசியது நினைவுக்கு வருகிறது?

  பதிலளிநீக்கு
 5. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…
  ஐயா,நலம் தானே?
  ஒவ்வொன்றும் அருமையான வரிகள் .
  நினைவில் கொள்ளத்தக்கவை.பகிர்வுக்கு நன்றி//

  நலமே,கார்த்தி.

  தாகூர் இறவாத கவி என்று இன்னும் நிறைய நண்பர்கள் உணர வேண்டும் என்பதே எனது இந்தப் ப்திவின் ஆசை,கார்த்தி.
  ஏனெனில் வாழ்க்கை இறப்பதில்லை,மனிதர்கள்தான் இறக்கிறார்கள்.

  பதிலளிநீக்கு
 6. மகா சொன்னது…
  //நீ பார்ப்பது உன்னை அல்ல, உனது நிழலைத்தான்.//

  மேற்கண்டதில் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் ....//

  இதுவும் உனது நிழல்தான்,மகா!

  பதிலளிநீக்கு
 7. நசரேயன் சொன்னது…
  நல்ல பகிர்வு//

  தாகூரை நேரடியாக அவரது ஆங்கில வார்த்தைகளிலேயே நீங்கள் சந்தியுங்கள்,நச்ரேயன்.

  பதிலளிநீக்கு
 8. ஜோதிஜி சொன்னது…
  கருத்துக்கு நான் வேறு விளக்கம் தர வேண்டுமா? சூரியன் வெளிச்சமானது என்று சொன்னால் என்ன தோன்றும்?

  அதெல்லாம் சரி இத்தனை பெரிய்ய்ய் எப்படி (தமிழ் டைப்) சாத்யமானது.

  நீங்கள் பேசியது நினைவுக்கு வருகிறது?//

  விம்மலைப் போலத்,தும்மலைப் போலத் தாங்க முடியாத தருணங்களில்தான் இனி எனது பதிவுகள் வரும்,ஜோதிஜி.
  அந்தத் தருணங்களில் எது சாத்தியமில்லை?

  பதிலளிநீக்கு
 9. வணக்கம் ஷண்முகப்ரியன் சார்... அனைத்தும் பத்திரப்படுத்த வேண்டிய அழகு வரிகள்

  நன்றி சார்

  பதிலளிநீக்கு
 10. ஆ.ஞானசேகரன் சொன்னது…
  வணக்கம் ஷண்முகப்ரியன் சார்... அனைத்தும் பத்திரப்படுத்த வேண்டிய அழகு வரிகள்

  நன்றி சார்//

  மகிழ்ச்சி,ஞானம்.

  பதிலளிநீக்கு
 11. கபீஷ் சொன்னது…
  பகிர்வுக்கு நன்றி. நல்லாருக்கு//

  மகிழ்ச்சி,கபீஷ்.

  பதிலளிநீக்கு
 12. அனைத்தும் அருமை. பகிர்விற்கு நன்றி சார்.

  பதிலளிநீக்கு