நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாவல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 01, 2009

கன்னிகா (ஏழாம் பாகம்)

8.
'பொய்மையில் இருந்து எஙகளை உண்மைக்கு அழைத்துச் செல்.
இருளில் இருந்து எங்களை ஒளிக்கு அழைத்துச் செல்.
சாவில் இருந்து எங்களைச் சாகாமைக்கு அழைத்துச் செல்.'

-பிருஹத்தாரண்யக உபநிஷதம்.

'லாமாஜி எங்கோ வெளியே பேஷண்ட்டைப் பார்க்கப் போயிருக்கிறார் என்று நினைக்கிறேன் அரவிந்த்.வா, நாம் இரண்டாம் தளத்துக்குச் சென்று விட்டு வருவோம்' என்று என்னை அழைத்துக் கொண்டு,லாமா பத்ம சூர்யாவின் அறையில் இருந்து வெளியே வந்தாள் திவ்யா.

'இரண்டாம் தளத்தில் யார் இருக்கிறார்கள் திவ்யா?'என்று நான் அவளைக் கேட்டேன்.
ஒருகணம் அவள் என்னையே பார்த்துவிட்டுப் பிறகு சொன்னாள்.

'மரணத்துக்கு அருகில் நின்று கொண்டு,அது தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்' என்றாள் திவ்யா.

பிறகு இருவரும் மௌனமாக மேல் தளத்திற்குச் சென்றோம்.

முதல் தளத்தைப் போலவே வட்ட வடிவமான காரிடார்.
ஒவ்வொரு தூணுக்கும் முன்னால், கணபதி சிவபெருமான்,ஆதிபராசக்தி, ஸ்ரீராமர்,ஸ்ரீகிருஷ்ணர்.ஆஞ்சனேயர்,முருகர்,புத்தர்,ஏசுபிரான்,கஃபா எழுத்துக்கள் அடங்கிய இஸ்லாம் கல்வெட்டு,வீர சைவர், குரு நானக், ராமகிருஷ்ணர்,ரமணர் இப்படி எல்லா மதத்தைச் சேர்ந்த புனிதச் சிலைகளும் அழகாகப் பளிங்கில் வைக்கப் பட்டிருந்தன.
நாங்கள் போனது அந்தி நேரமாதலால் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பார்கள், என்ற திவ்யா காரிடாரின் கடைக் கோடியில் இருந்த ஹாலுக்குக் கூட்டிச் சென்றாள்.

அது நாற்பதுக்கு, நாற்பது இருக்கும் பெரிய ஹால். ஹாலில் குழந்தைகளின் விளையாட்டுக்குத் தேவையான அனைத்துக் கருவிகளும் பொருத்தப் பட்டு, அது ஒரு மினி பார்க்கைப் போல இருந்தது.
பத்துப் பதினைந்து குழந்தைகள் இரைச்சலிட்டபடி ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

கிட்டத் தட்ட எல்லாக் குழந்தைகளுமே கீமோதெராபி சிகிச்சையினால் முடிகள் கொட்டி மொட்டைத் தலைகளாகவே இருந்தார்கள்.

'இங்கே தூணுக்குத் தூண் இருக்கும் கடவுளை, நான் மனதார வெறுக்கும் ஒரே இடம் இந்த ஹால்தான், அரவிந்த்' என்றாள் திவ்யா கனத்த குரலில்.

அவள் முகம் உணர்ச்சிகளின் வெப்பத்தால் சிவந்து போயிருந்தது.அதற்குள் சில குழந்தைகள் அவளைப் பார்த்து 'திவ்யா ஆன்டி ' என்று கூச்சலிடத், திரும்பி பார்த்த எல்லாக் குழந்தைகளுமே 'ஹோய்' என்று கத்திக் கொண்டு அவளிடம் ஓடி வந்தன.

அவர்கள் எல்லோருமே எட்டு முதல் பத்து வயது வரை இருக்கும் சிறுவர், சிறுமிகள்.எல்லோரும் திவ்யாவின் கழுத்தைக் கட்டிப் பிடித்து முத்தங்களைச் சொரிந்ததில் இருந்தே,அவள் எவ்வளவு தூரம் அந்தக் குழந்தைகளின் மனதில் இடம் பிடித்திருந்தாள் என்பதை அவள் சொல்லாமலே தெரிந்து கொண்டேன்.

ஒவ்வொன்றும் ஒரு புகார் செய்தன,அவரவர் மொழியில்.

வடக்கத்தியக் குழந்தைகள் பெரும்பாலும் பேசிய இந்தி மொழியைப் புரிந்து கொண்டு திவ்யா பதில் அளித்தது எனக்கும் புரிந்தது.ஆனால் தெற்கத்தியக் குழந்தைகள் பேசிய பேச்சினை நான் மட்டுமே புரிந்து கொண்டேன்.

எத்தனை மொழிகள்,ஆனால் வேதனை ஒன்றுதான்,என்ற பிரம்மாண்டமானதொரு சோகத்தின் முன் நான் நின்றேன்.

மொழிகள் புரியாமலே இருந்திருந்தால்,ஏன்,மனிதர்களாகப் பிறக்காமலே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று மனதார நான் நினைத்தது அந்தக் கணத்திலதான்.

அந்தக் குழந்தைகள் திவ்யாவைச் சுற்றிக் கொண்டு கேட்ட கேள்விகள் இதுதான்.

'எனக்கு ரொம்ப வலிக்கிறது ஆன்ட்டி..ஏன் என்னை எந்த மருந்தும் கொடுத்துக் குணமாக்க மாட்டேன் என்று டாகடர் அங்கிள்கள் பிடிவாதம் பிடிக்கிறார்கள்?'

'எனக்குப் பசியே இல்லை என்றாலும் ஏன் என்னைச் சாப்பிடு,சாப்பிடு என்று என் அம்மா உயிரெடுக்கிறாங்க?'

'சாப்பிட்டவுடன் வாந்தி எடுப்பதையாவது யாராவது நிறுத்த மாட்டார்களா?'

'நான் என் வீட்டில் தம்பி,தங்கைகளுடன் எப்போது மீண்டும் இதுபோலவே விளையாடப் போகிறேன்,ஆன்ட்டி?'

'ஏன் எந்தக் கடவுளுமே நாங்கள் எது சொன்னாலும் காதிலேயே வாங்கிக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்,ஆன்ட்டி?'

'எங்களைக் குளிப்பாட்ட வரும் ஆயா அடிக்கடி சொல்லும்,சாவு என்பதற்கு உண்மையான அர்த்தம்தான் என்ன,ஆன்ட்டி?'

திவ்யா பார்வையைக் குழந்தைகளிடம் இருந்து திருப்பி என்னைப் பார்த்தாள்.

அந்தக் குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு எந்தக் கடவுளுமே பதில் சொல்ல முடியாது என்ற பேருண்மையை நான் அந்தக் கணத்தில்தான் உணர்ந்தேன்.

அதுவரை அமைதியாக இருந்த ஒரு பையன் கடைசியாக ஒரு கேள்வி கேட்டான்.

'நேக்கு எப்போ ஆன்ட்டி முடி வளரும்?' என்றான் தமிழில்!

திவ்யா புரியாமல் என்னைப் பார்த்தாள்.

'நேக்கு இவா மாதிரி இங்க்லிஷ் எல்லாம் சொல்லித் தரலே.நான் வேத பாட சாலையில் படிச்சவன்!' என்றான் அந்தச் சிறுவன்.

என்னை யாரோ உள்ளே இருந்து உலுக்கினார்கள்.
'உம் பேரு என்ன தம்பி?' என்றேன் நான்.

என் தமிழைக் கேட்டதும் அவனது முகம் மலர்ந்தது.பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் தராமலே, என் தமிழின் பெருமை புரிந்தது அந்தத் தருணத்தில்தான்.

'நீங்க நம்மவாளா?' என்றான் சிறுவன்,உண்மையில் மகிழ்ந்து.

ஆம் என்று வெறுமனே தலையாட்டினேன்.

'நான் வேத பாட சாலையிலே படிக்கிற பையன்.எல்லா மந்திரமும் அக்ஷரச் சுத்தமா நன்னாச் சொல்லுவேன்.கேக்கறேளா?' என்றவன் நான் தலையசைக்கும் முன்னரே கணீரென்று வேதம் சொன்னான்.

'அசத்தோ ம சத் கமய
தமசோ ம ஜ்யோதிர் கமய
ம்ரித்யோ ம அம்ருதம் கமய
ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி' என்றான் அந்தச் சிறுவன்.

என் கண்களில் நீர் முட்டுவதற்குள் அந்தச் சிறுவனே சொன்னான்.
'இதுக்குத் தமிழில் அர்த்தமும் சொல்லிடறேன்' என்றவன்

''பொய்மையில் இருந்து எஙகளை உண்மைக்கு அழைத்துச் செல்.
இருளில் இருந்து எங்களை ஒளிக்கு அழைத்துச் செல்.
சாவில் இருந்து எங்களைச் சாகாமைக்கு அழைத்துச் செல்.'

என்று அதே கணீர்க் குரலில் தமிழில் சொன்னான்.

'உன் பேரு?' என்றேன் அவனருகில் முழந்தாளிட்டு அமர்ந்து.

'பதஞ்சலி' என்றான் அந்தச் சிறுவன்.

'எனக்குக் குடுமி இல்லேன்னா நான் சொல்ற இந்த மந்திரத்தை யாரும் மதிக்க மாட்டா,நீ பாஸ் ஆக மாட்டேன்னு என்னோட வேதபாடசாலைப் பசங்க எல்லாம் சொல்றா! எனக்கு எப்போ மாமா முடி வளரும்?' என்று பரிதாபமாகக் கேட்டான் அந்தச் சிறுவன்.

இப்போதுதான் நான் அழுதேன்,அந்தச் சிறுவனைக் கட்டிப் பிடித்து.

(மந்திரங்கள் தொடரும்)

திங்கள், ஏப்ரல் 27, 2009

கன்னிகா (ஆறாம் பாகம்)

7.

'ஓ மேன்மையாகப் பிறந்தவரே! நீங்கள் உண்மையின் பாதையைத் தேடும் நேரம் வந்து விட்டது. உங்கள் மூச்சு நிற்கப் போகிறது.
உங்கள் குரு உங்களை அந்தத் தூய ஒளியின் முன் நேருக்கு நேர் நிறுத்தி இருக்கிறார்.

எங்கே எல்லாப் பொருட்களும் வெற்றிடம் போல,மேகங்கள் அற்ற வானம் போலத் தோன்றுகிறதோ,எங்கே மையமோ சுற்றளவோ இல்லாத வெற்றிடம் போல மூடப்படாத,களங்கமற்ற அறிவு தோன்றுகிறதோ அந்த பார்டோ நிலையில் இருந்து தூய ஒளியை அதனுடைய உண்மை நிலையில் உணரப் போகிறீர்கள்.

இந்தக் கணத்தில் உங்களை நீங்களே அறிகிறீர்கள்.'

திபெத்தின் 'இறந்தவர்களின் புத்தகம்' நூலிலிருந்து.

7.
பாபா புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ மையம்.
இந்தக் கட்டிடத்தை வடிவமைத்த திவ்யா அதனை வட்ட வடிவமாக உருவாக்கி இருந்தாள்.
முழுநிலவின் குளிர்ந்த நீலம் பூத்த வெண்மையும், மதலை இளஞ் சிவப்பும் (பேபி பிங்க்) முதன்மை நிறங்களாகக்,கட்டிடம் காலை நேரத்து மேகத்தால் செய்தது போல மெத்தென்று இருந்தது.

'ஏன் வட்ட வடிவத்தைத் தேர்வு செய்தாய்,திவ்யா?' என்றேன் நான்.

'குறைந்த சுற்றளவில் நிறையப் பரப்பளவு வட்டத்துக்குத்தான் உண்டு.அதனால்தான் இயற்கை தனது படைப்பில் பெரும்பாலும் வட்டங்களையும்,அதனுடைய மூன்றாவது பரிமாணம் என்றால் கோளங்களையும் படைத்திருக்கிறது.நானும் இயற்கையைப் பின் தொடர்ந்திருக்கிறேன்'' என்றாள் அவள் ஒரு ஆர்கிடெக்டாக.

'கட்டிடத்தின் நிறங்களாக வெண்மையையும்,இளஞ்சிவப்பையும் தேர்ந்தெடுக்கக் காரணம்?'

'வெண்மை, தூய்மை. ஆதிமூலமான சிவம். இளஞ்சிவப்பு, வைகறைச் சூரியனைப் போல சக்தியின் துவக்கம்.' என்றாள் திவ்யா.

கட்டிடத்தின் முகப்பில் இரண்டு பெரிய வெண்பளிங்கு யானைகள் நின்றிருந்தன.
ஆறு ஏழு அடி உயரத்தில் உண்மையான யானையின் அளவுகளையே ஒத்து இருந்தன அந்தப் பளிங்கு யானைச் சிற்பங்கள்.
யானையின் தந்தங்கள்,தும்பிக்கை,நெற்றியின் செதுக்கல்களில் எல்லாவற்றிலும் சிற்பி தன் உயிரையே நிரப்பி இருந்தார்.

'பிரமாதம்.பிரமாதம். ' என்றேன் நானே அந்த வெள்ளை யானைகளின் கம்பீரத்திலும் அழகிலும் என்னை மறந்து.
'இந்த யானைகளுக்கும் ஏதாவது உள்அர்த்தம் உண்டா?'
'நிச்சயமாக' என்றாள் திவ்யா சிரித்தபடியே.
'என்ன?' என்றேன் நானும் சிரித்துக் கொண்டே.

'யானை ஆற்றலுக்கும் அமைதிக்கும் குறியீடு.அதனுடைய பேராற்றல் அதற்கு அமைதியைத் தந்ததா,அல்லது அதனுடைய அமைதி அதற்குப் பேராற்றலைத் தந்ததா என்பது இயற்கையின் மாயை.அதனால்தான் கிழக்கத்திய சமயங்களில் எல்லாம் யானைக்குத் தனி முக்கியத்துவம் உண்டு.' என்றாள் திவ்யா.

'சரி,இங்கு அவற்றை நீ நிறுவியதற்குக் காரணம்?'

'இனி எந்தச் சிகிச்சையும் பலனளிக்க முடியாது என்று தெரிந்த புற்று நோயாளிகள் தான் இங்கே வருகிறார்கள்.வாழ்க்கையின் இந்த இறுதிக் கட்டத்தில் இருக்கும் அவர்களுக்குத் தேவை மரணத்தைச் சந்திக்கும் பேராற்றலும், அதனால் வரும் பேரமைதியும்தான். நிறைய நோயாளிகள் இங்கே வந்து இந்த யானைகளைத் தடவிக் கொண்டு நீண்ட நேரம் மௌனமாக நின்றிருப்பதை நானே பார்த்திருக்கிறேன்.' என்றாள் திவ்யா அந்த யானைகளைத் தானும் நெகிழ்ச்சியுடன் தடவியபடி.

சில நிமிடங்கள் மவுனத்திற்குப் பிறகு 'சரி,உள்ளே போவோம்' என்று என்னை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள் அவள்.

வரவேற்பு ஹால்.அதே நீலம் பாரித்த வெண்மை.அதே பேபி பிங்க் ஜன்னல்களும் நிலைப் படிகளும்.வரவேற்பாளராக இருந்த அழகிய இளம் பெண் திவ்யாவைப் பார்த்தவுடனேயே முகம் மலர ஓடி வந்தாள்.

'ஹாய் திவ்யா.' அவள் உற்சாகத்துடன் திவ்யாவை ஆரத் தழுவிக் கொண்டாள்.

இரண்டு அழகான பெண்களை ஒரே நேரத்தில் பார்ப்பது இரண்டு நாசிகளாலும் ஒரே நேரத்தில் மூச்சு விடுவதைப் போல சிரமமாக இருந்ததால் நான் பார்வையை வேறு புறம் திருப்பிக் கொண்டேன்.அதைப் பார்த்த திவ்யா என்னை அந்தப் பெண்ணுக்கு அறிமுகம் செய்து வைத்தாள்.

'மஹதி,இது அரவிந்தன்.என்னுடைய ஃப்ரன்ட்' என்றாள் திவ்யா.
''இவள் மஹதி.' என்றாள் என்னிடம்.
மஹதி எனது கைகளைக் குலுக்கினாள்.

அவளது உள்ளங்கையில் இருந்தால் எந்த மலரும் ஒரு வாரத்துக்கு வாடாது.அவ்வளவு குளுமையான,மிருதுவான கைகள்.

'அழகான பெயர்' என்றேன் நான் இயல்பான புன்னகையுடன்.
'அழகான பெண்ணும் கூட என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டாயா இல்லையா?' என்றாள் திவ்யா சிரித்தபடி. மஹதியும் சிரித்தாள்.
‘ஆமாம் என்றால் நீ கோபித்துக் கொள்வாயா மாட்டாயா?’ என்றேன் நானும் சிரித்தபடியே.
இருவரும் சிரிக்க,திவ்யா மட்டும் என்னை முதுகில் செல்லமாக அடித்தாள்.அதற்குள் மஹதியின் மேஜையின் மேல் இருந்த தொலைபேசி அடிக்க 'சரி உங்கள் இருவரையும் அப்புறம் சந்திக்கிறேன்'என்று தனது மேஜைக்கு ஓடினாள் மஹதி.

நாங்கள் இருவரும் மருத்துவ மனைக்குள் செல்லும் பெரிய தேக்கு மரக் கதவுகளைத் திறந்து கொண்டு உள்ளே போனோம்.
கதவுகள் எங்கள் பின்னால் தானாக மூடிக் கொண்டன.

உள்ளே நான் கண்ட கட்டிடத்தின் தோற்றம் உண்மையில் என்னைப் பிரம்மிக்க வைத்தது.

மாபெரும் வட்ட வடிவமான தளத்தின் நடுவில் ஒரு பெரிய தாமரைக் குளம்!

ஸ்படிகம் போன்ற நீரில் வெள்ளையும், சிவப்புமாய்த் தாமரைகள் பூத்து நிறைந்திருந்திருந்தன.சுற்றிலும் பேபி பிங்க் பளிங்குப் படிக்கற்கள் குளத்துக்குள் இறங்கின.தளத்தின் மேல் கூரை கெட்டிக் கண்ணடியால் வேயப்பட்டிருந்ததால், சூரிய வெளிச்சம் இயற்கையாக உள்ளே வழியும் படியான கட்டிடம்.

'ஓம் ஷாந்தி ஓம் 'என்று மந்திரமும் ஃப்யூஷன் இசையுமாக அந்தச் சூழ்நிலையே அமைதியும்,குளுமையுமாக மென்மையாகப் பூரித்திருந்தது.
இந்த மனதுக்கு இதமான சூழ்நிலயே எந்தப் பிணியையும் ஆற்றி விடும் என்று தோன்றியது.

குளத்தைச் சுற்றிலும் பெரிய காரிடார்கள் வட்டமாக ஓடின.கண்ணாடித் திரைகளால் காரிடார்கள் அடைக்கப் பட்டிருந்ததால்,அங்கே இருந்த எந்த அறைகளுக்குள்ளும் குளத்தில் இருந்து வரும் பூச்சி புழுக்கள் அணுகா வண்ணம் மருத்துவ மனையின் தூய்மை பேணப் பட்டிருந்தது.

'150 அடி உயரம்.மூன்று தளங்கள்.'என்றாள் திவ்யா,புன்னகையுடன்.
'இந்த மருத்துவ மனை யாருக்குச் சொந்தமானது திவ்யா?' என்று கேட்டேன் வியப்பின் உச்சியில் நின்று.

'இந்தியாவின் பல பகுதிகளில் இருக்கின்ற ஆறு பெரிய பணக்காரர்கள் ஒன்று சேர்ந்து கட்டி இருக்கிறார்கள்.ஏழைகளுக்கு இலவச மருத்துவம்.மற்றவர்களுக்கு வருமானத்துக்குத் தகுந்த கட்டணம் வாங்குகிறார்கள்.இங்கே வேலை பார்க்கும் டாக்டர்கள், மற்ற ஊழியர்கள் யாரும் ஊதியம் வாங்கிக் கொள்ளாமல் சேவையாக இதனைச் செய்கிறார்கள்.மஹதி கூட பெங்களூரில் ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் ஹெச்.ஆர் ஆகப் பணி புரிகிறாள்.அவ்வப்போது லீவ் போட்டு விட்டு வந்து இங்கே பணி புரிகிறாள்.' என்றவள்,சற்றே கழித்து
'இது பணம் இருக்கிறவர்கள் எப்போதாவது எழுதும் கவிதை!'என்று சொல்லிச் சிரித்தாள் .

'நமது அரசர்கள் கோவில்கள் கட்டியதைப் போல!' என்றேன் நான்.
பிறகு நாங்கள் இருவரும் மருத்துவ மனையின் தலைமை மருத்துவரான டாக்டர் அப்துல் ரூமியைப் பார்க்கப் போனோம்.

விசாலமான அவரது அறையின் முன்பகுதியில் வரவேற்பாளராக இருந்த இளம்பெண் திவ்யாவைப் பார்த்ததும் மனம் குளிரச் சிரித்தாள்.
'ஹாய் திவ்யா'
'ஹல்லோ,ஜெனிஃபர்' என்றால் திவ்யா அவளது கைகளைக் குலுக்கிய படியே.
'ரூமி ஃப்ரீயா ஜெனிஃபர்?' என்று திவ்யா கேட்டதும் 'அதிர்ஷ்டவசமாக இன்னும் அரை மணி நேரம் ரூமி ஃப்ரீ' என்றாள் ஜெனிஃபர்.அவள் ஆங்கில நடிகை ப்ரிட்டனி மர்ஃபி போல இருந்தாள்.நிறம் மட்டும் தான் நமது இந்திய வெள்ளை.

அந்த மருத்துவ மனையில் மேற்கத்திய நிறுவனங்களில் புழங்குவதைப் போல பதவிகளைக் குறிப்பிட்டுப் பேசாமல் எல்லோரும் பெயர்களைச் சொல்லியே பழகுவார்கள் போலிருக்கிறது என நினைத்துக் கொண்டேன்.

இன்டர்காமில் அனுமதி பெற்றபின் ஜெனிஃபர் டாக்டரின் அறைக்குள் எங்களை அனுப்பினாள்.
டாக்டர் அப்துல் ரூமி உற்சாகமாகத் திவ்யாவை வரவேற்றார்.என்னை அறிமுகப் படுத்தியதும் 'ஹல்லோ அரவிந்த்' என்று கூறி அழுத்தமாகக் கைகளை பற்றிக் குலுக்கினார்.அவருக்கு 50 வயது இருக்கும்.பார்ப்பதற்குப் பாடகர் ஜேசுதாஸைப் போல இருந்தார்.உ.பி.க்காரர் என்று பின்னர் திவ்யா சொன்னாள்.

இருவரும் அவர்களுக்குத் தெரிந்த பல நோயாளிகளைப் பற்றிப் பேசினார்கள்.இறுதிக் கட்டப் புற்று நோயாளிகள் ஆதலால் அவர்களில் பெரும்பாலோர் காலமாகி இருந்தார்கள்.

'இப்படித் தினமும் மரணத்தைப் பார்க்கிறீர்களே,அது உங்கள் மனதைப் பாதிக்கவில்லையா?' என்று ரூமியிடம் கேட்டேன் நான்.

'நிச்சயமாக அரவிந்த்.மரணம் என்னை,இன்னும் வாழ்க்கையை ஆழமாக நேசிக்க வைத்திருக்கிறது' என்றார் டாக்டர் சற்றும் யோசிக்காமல்.

'சிறுகுழந்தைகள் உடையாமல் பார்த்துக் கொண்டு விளையாடும் சோப்புக் குமிழியைப் போல வாழ்க்கையை நான் பார்க்கிறேன்.இது நிலையானதில்லை என்று உறுதியாகத் தெரிந்த பின்னரே எனது மனைவியை நான் எப்பொழுதையும் விட இப்போது அதிகம் நேசிக்கிறேன்.இங்கிருந்து வீட்டுக்குப் போன பின்னர் எனது குழந்தைகளின் சிரிப்புச் சத்தம் எவ்வளவு உற்சாகமாக இருக்கிறது தெரியுமா?நான் சாப்பிடும் சப்பாத்திகள்தான் உலகத்திலேயே இனிமையான உணவு என்று உண்ணும் போதெல்லாம் மனதார உணர்கிறேன்.எல்லாவற்றையும் விட இப்போதுதான் இதய பூர்வமாக ஐந்து வேளையும் தொழுகிறேன்' என்றார் ரூமி சிரித்தபடியே.

பிறகு என்னையே ஆழமாகப் பார்த்தபடியே,ஆனால் அவரது பார்வை என் மேல் மையம் கொள்ளவில்லை, இதைச் சொன்னார்..
'மரணம் என்ற கோப்பையில் இருந்துதான் நாம் வாழ்க்கையின் இனிய திராட்சை ரசத்தையே பருகிக் கொண்டிருக்கிறோம்,அரவிந்த்' என்றார் ரூமி.

'அருமையாகச் சொன்னீர்கள் டாக்டர்' என்றாள் திவ்யா உண்மையில் ரசித்து.
'பார்த்தாயா,வெறும் மருந்துச் சீட்டு எழுதிக் கொண்டிருந்தவனை மரணம் கவிதை எழுத வைத்து விட்டது'என்று சிரித்தார் ரூமி.
'இதைக் கேட்கும் போது எனக்கும் சாக வேண்டும் என்ற ஆசை வந்து விட்டது டாக்டர்!' என்றேன் நான். டாக்டரும் திவ்யாவும் மனம் விட்டுச் சிரித்தார்கள்.

'ஆனால் புற்று நோய் மட்டும் வரக் கூடாது என்று வேண்டிக் கொள்.அப்புறம் திவ்யா உன்னை என்னிடம் அழைத்து வந்து விடுவாள்.'என்று ரூமி மேலும் சிரித்தார்.

'பயத்தை மட்டும் அகற்றி விட்டால்,மரணம்தான் வாழ்க்கையின் உச்ச கட்ட இன்பமாக இருக்க முடியும் அரவிந்த்' என்றார் ரூமி.
அப்போது இன்டர்காம் அவரை அழைக்கக்,கேட்டு விட்டு 'வரச் சொல்' என்றார் சுருக்கமாக.நாங்கள் எழ முற்பட, வேண்டாம் என்று சைகையாலேயே எங்களை அமரச் செய்தார் அவர்.
உள்ளே வந்த பெண்ணுக்கு நாற்பது வயதிருக்கும்.ஏதோ வட மாநிலத்தைச் சேர்ந்த பெண்.இந்தியில் பேசினாள்.ஏற்கனவே நன்கு அழுது விட்டு வந்திருப்பாள் போலிருக்கிறது.கண்கள் சிவந்து வீங்கி இருந்தன.அவளது கணவன் தான் நோயாளி.ரத்தப் புற்று நோய்.இப்போதெல்லாம் அவளது கணவன் அவளிடம் பேசவே மாட்டேன் என்கிறானாம்.அது பரவாயில்லை,எதைச் சாப்பிடக் கொடுத்தாலும் சாப்பிட மறுக்கிறான் என்பதே அவளது முதன்மையான புகார்.

டாக்டர் ரூமி அவள் சொன்னதையெல்லாம் பரிவுடன் கேட்டார்.பிறகு சொன்னார்.

'கல்பனா,நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது.உங்கள் கணவருக்கு நீங்கள் இப்போது செய்யும் பெரிய உதவி அவரைக் கூடுமான வரை தனிமையில் விடுவதுதான்.அதுதான் அவருக்கு அமைதி அளிக்கிறது என்றால் தயவு செய்து அந்த அமைதியை அவருக்குத் தாருங்கள்.இந்த மாதிரி சமயங்களில் உண்பதே நோயாளிகளுக்குப் பிடிக்காது.பசியே எடுக்காது.நீங்கள் அதற்காக மனது வேதனைப் படாதீர்கள்.அவரது உடலுக்குத் தேவையான சத்துக்கள் அனைத்தும் நாங்கள் கொடுக்கும் மருந்து மாத்திரைகளிலேயே கிடைக்கும்.நீங்கள் முதலில் அமைதியாக இருந்து உங்கள் உடம்பைப் பார்த்துக் கொள்ளுங்கள்.உங்களுக்குத்தான் இப்போது அபரிமிதமான சக்தி தேவை. மற்றதற்கு நாங்கள் இருக்கிறோம்,கவலைப் படாதீர்கள்.' என்று ஆறுதல் கூறி அந்தப் பெண்ணை அனுப்பி வைத்தார் ரூமி.

பிறகு எங்களிடம் பேசினார்.

'வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொண்ட பின்னர், பெரும்பாலான மனிதர்கள் தனிமையையே விரும்புகிறார்கள். மரணத்தை அவர்கள் தங்களுடைய மிகவும் அந்தரங்கமான விஷயமாகவே நினைக்கிறார்கள்.தங்கள் அனுபவத்தை அவர்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளத் தாயாராக இல்லை என்பதே நான் கண்ட உண்மை.'

'அது எதனால் டாக்டர்?' என்று கேட்டேன் நான்.

'தங்கள் கவனம் முழுதும் சாவின் மேலேயே மையம் கொண்டிருக்கும் தருணம் அது. அதை யார் மூலமும் சிதறடிக்க விரும்புவதில்லை நோயாளிகள்.'என்றார் ரூமி.

'உங்களுக்கு மரணத்துக்குப் பிறகு மனிதர்கள் என்ன ஆகிறார்கள் என்பதில் ஏதாவது கருத்துக்கள் உண்டா?'என்று கேட்டேன்.
சிரித்தார் டாக்டர் ரூமி.

'இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல எங்களிடம் ஒருவர் வந்திருக்கிறார்.அவரிடம் கேளுங்கள். இதற்கெல்லாம் அவர்தான் நன்கு விளக்கம் அளிப்பார்.'என்றவர் திவ்யாவைப் பார்த்து 'லாமா பத்ம சூர்யாவைத்தான் சொன்னேன்' என்றார்.

பத்ம சூர்யா என்றதும் திவ்யா நாற்காலியிருந்து துள்ளியே குதித்து விட்டாள்.

'லாமாஜி வந்திருக்கிறாரா டாக்டர்?' என்றாள் திவ்யா.
'அவர் வந்து பத்து நாட்கள் ஆகின்றன திவ்யா' என்ரார் ரூமி.
அடுத்த அழைப்பு இன்டர்காமில் சிவப்பு அழைப்பாக இருக்க,'மன்னிக்கவும்.ஒரு எமர்ஜென்சி' என்று ரூமி எழுந்து கொண்டார்.
டாக்டரிடம் விடை பெற்றுக் கொண்டு நாங்கள் வெளியே வந்தோம்.
'இவ்வளவு உணர்ச்சி வசப் படுகிறாயே,யார் அந்த பத்ம சூர்யா?' என்று கேட்டேன் திவ்யாவிடம்.

'அவர் ஒரு திபெத்தியன் லாமா."இறந்தவர்களின் புத்தகம்" பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறாயா அரவிந்த்?' என்று கேட்டாள் திவ்யா.

'நிறைய. இறக்கப் போகும் மனிதர்களுக்கு மரணத்துப் பிறகு வழிகாட்டும் பழைய நூல் எட்டாம் நூற்றாண்டிலோ என்னவோ பத்ம சம்பவா என்ற மாபெரும் ஞானி எழுதியதாகச் சொல்வார்கள்' என்றேன்.

'சரியாகச் சொன்னாய் அரவிந்த்.அந்தப் புத்தகத்தில் சொல்லப் படும் விஷயங்களில் பத்ம சூர்யா மாபெரும் அறிஞர்.மிக மிக அற்புதமான மனிதர்.அவரைப் பார்த்துப் பேசினால் அதை நீயே சொல்வாய்.' என்றவள் என்னை அவரது அறைக்கு அழைத்துச் சென்றாள்.பேசிய படியே நடந்தோம்.
திபெத்தைச் சேர்ந்த லாமா இந்த மருத்துவமனைக்கு எதற்கு வருகிறார் என்று கேட்டதற்கு அவள் பதிலளித்தாள்.

'இந்த மருத்துவமனை எல்லா மதங்களின் சங்கமம்,மரணத்தைப் போலவே! சாகும் மனிதர்களுக்கு எந்த வழியில் அமைதி கிடைத்தாலும் சாதி,மத பேதமின்றி இங்கே அனுமதிப்பர்கள்.லாமாஜி அப்படி வந்தவர்தான் இங்கே.அவருடைய வழிகாட்டலில் அமைதியோடு இறந்தவர்கள் இங்கே ஏராளம்.அதனால் அவருக்கு இங்கே தனி மரியாதை. அவருக்கென்று ஒரு தனி அறையையே ஒதுக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.' என்றவள் லாமாவின் அறைக்கு முன்னால் நின்றாள்.

கதவைத் தட்டிப் பார்த்தோம்.பதில் இல்லை.கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றோம்.

அறை எளிமையாக ஆனால் படு தூய்மையாக இருந்தது.சுவர் ஓரமாகக் கிழக்குப் பார்த்தாற் போல் ஒரு தேக்கு மர மேஜை. அதன் மேல் ஒரு சிறிய பளிங்குப் புத்தர் சிலை.சிலைக்குப் பின்புறத்தில் பத்ம சம்பவாவின் செதுக்கு ஓவியம்.ஒரு கண்ணாடிக் கிண்ணத்தில் அன்றலர்ந்த வெள்ளைத் தாமரை மலர் ஒன்று நீரில் மிதந்து கொண்டிருந்தது.ஒரு நெய் விளக்கில் தீபம்,சிற்பம் போல் ஆடாமல்,அசையாமல் எரிந்து கொண்டிருந்தது.

ஏதோ திபெத்திய ஊதுவத்தி போலிருக்கிறது,ஒரு அழகிய மர ஸ்டேண்டில் புகைந்து கொண்டிருந்தது.அதன் நறுமணத்தைப் போல நான் இதுவரை எங்கும் முகர்ந்ததில்லை.
சடாரென உங்களைப் பூமியில் இருந்து வானவெளியில் தூக்கி எறிந்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு வாசனை.

'அவர் அறையைப் பூட்டாமலே சென்றிருக்கிறாரே,திவ்யா?' என்று கேட்டேன் நான்.
'லாமாஜி எங்கே இருந்தாலும் எப்போதும் தனது அறையைப் பூட்டுவதில்லை!' என்றாள் திவ்யா.
'ஏன்?' கேட்டேன் வியந்து.
'அவர் இறந்த பிறகு என்ன பார்ப்போமோ,அதைத்தான் நாம் இப்போது இங்கே பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பார் லாமாஜி' என்றாள் திவ்யா அமைதியாக.

யாருமற்ற அந்த அறையின் அர்த்தம் எனக்குச் சுளீரெனப் புரிந்தது.

வெளியே 'ஓம் சாந்தி ஓம்' என்று சிதார்களின் பின்ணணியில் மந்திரம் ஒலித்துக் கொண்டிருந்தது.
(மந்திரம் இன்னும் ஒலிக்கும்)

வியாழன், ஏப்ரல் 09, 2009

கன்னிகா (ஐந்தாம் பாகம் )

6.
பத்து நிமிட இடைவேளைக்குப் பிறகு வகுளாபரணன் வர,நீதிமன்றம் கூடியது.அரவிந்தனின் வாக்குமூலத்தை இப்போது ஒரு புதிய உத்வேகத்துடன் படிக்கத் தொடங்கினான்,மதிவாணன்.முன்பு அவன் உணர்ச்சி வசப்பட்டு அழுத இடத்திலிருந்தே ஆரம்பித்தான்.
''எப்படி இவ்வளவு அழகாகாப் பேசுகிறாய் அரவிந்த்?' என்றாள் திவ்யா சிரித்து.
மீண்டும் பழைய நிலைக்கு வந்து சிரித்தேன்.

'வெரி சிம்பிள்,திவ்யா.உன்னை மாதிரி அழகான பெண்கள் அருகில் இருக்கும் போதெல்லாம் எனக்கு ஒரு அருள் வந்து விடும்.அப்புறம் உலகத்துக் கவிஞர்கள் எல்லோரும் எனக்குள் வந்து எனக்குப் பதிலாகப் பேச ஆரம்பித்து விடுவார்கள்.கம்பனில் இருந்து தொடங்கித் தாகூர்,பாரதி,வாலி,வைரமுத்து என்று லிஸ்ட் போய்க் கொண்டே இருக்கும் ..அவ்வளவு ஏன், ஆறு மாதத்துக்கு முன்னால் முதல் கவிதைப் புத்தகம் வெளியிட்ட மதிவாணன்--என்ற இளங்கவிஞன் கூடத் தனது அற்புத வரிகளால் எனக்காக உன்னிடம் பேசுவான்.' என்றேன் நான்.

திவ்யா மௌனமாக என்னையே பார்த்தாள்.

இரவில் ஹோட்டல் தோட்டத்தில் எங்கோ பூத்த நைட்குயின் பூக்களின் வாசமும், தூரத்தில் அப்போதுதான் கேட்க ஆரம்பித்த என்யாவின் 'நட்சத்திரங்களால் வானத்தைப் பெயிண்ட் பண்ணு' என்ற அழகிய பாட்டும்,எதிரில் சத்தமில்லாமல் பொங்கிக்கொண்டிருக்கும் ஒரு பிங்க் நீரூற்றைப் போன்ற திவ்யாவின் அழகும்,பேச்சினை அறவே ரத்து செய்திருந்தன.

இருவரும் ஒன்றும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தோம்.

மௌனம் ஒரு இடையறாத பாஷை என்று ரமண மகரிஷி இதைத்தான் சொன்னாரோ?
'சாப்பிடப் போகலாமா ?' என்றாள் திவ்யா,அநேகமாக இந்த மௌனத்தின் கனம் தாங்காமல்.
'சாப்பாடு என்ற சொல்லே கேவலமாக இருக்கிற நிமிடங்கள் இது ' என்றேன் நான்.உண்மையில் உணர்ந்து.
அவள் சிரித்தாள், ரசித்து
பிறகு அவள் நடக்க ஆரம்பிக்க,நானும் அவளுடன் நடந்தேன்.

'நான் சாப்பிட என்று சொன்னது உனது வழக்கமான பீரை!' என்றாள் திவ்யா சிரித்தபடி.
'இன்று எனக்கு அது தேவைப் படவில்லை.' என்றேன் நான்.
'நான் இன்று மாலை வேளையில் உன்னைச் சந்திக்க வந்ததே அதற்காகத்தான்.உண்மையில் நான் இன்று முழுக்க எனது அறையில்தான் இருந்தேன் ' என்றாள் திவ்யா.

சட்டென நான் அவளைத் திரும்பிப் பார்த்தேன்.

'ஏன் பெரும்பாலான பெண்களுக்கு ஆண்கள் குடிப்பது பிடிக்க மாட்டேன் என்கிறது?' என்று எனது பலநாட்களுக்கான அடிப்படைக் கேள்வியைக் கேட்டேன்.
இந்த முறை அவள் என்னை ஆழமாகப் பார்த்தாள்.

'பெண் தனது பிடித்தமான ஆணுடன் இருக்கும் போது, தான் மட்டுமே போதையாக இருக்க விரும்புகிறாள்.அதனால்தான். ஒரே நேரத்தில் இரண்டு போதைகளை அவள் அனுமதிப்பதில்லை.' என்றாள் திவ்யா.
'பெண்களைப் பற்றிச் சரியாகச் சொன்னாய்.ஆனால் மதுவைப் பற்றி சொன்னது தப்பு' என்றேன் நான்.
'எப்படி?' என்று கேட்டாள் அவள்.
'மதுவைக் கண்டு பிடித்தது குடிகாரர்கள் இல்லை என்பது உனக்குத் தெரியுமா?'என்றேன் நான்.
அப்போதுதான் அவள் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
'பிறகு?. என்றாள்.

'வலி நிவாரணிகளைக் கண்டு பிடித்தவர்கள் வலியால் துடித்துக் கொண்டிருக்கும் போது கண்டு பிடிக்க வில்லை.அது முடியவும் முடியாது. வலியிலிருந்து விலகி நின்று பார்த்தால்தான் வலியைக் குணப் படுத்தும் வழி தெரியும்.இது போல மன நிவாரணியான மதுவைக் கண்டு பிடித்தவர்களும் மனதிலிருந்து விலகி நின்று பார்த்த ரிஷிகளே.வேதங்களில் மிகப் பரவலாகச் சொல்லப் படும் சோமபானத்தைப் பற்றி நீ கேள்விப் பட்டதில்லையா?' என்றேன் நான்.

'இது முழுக்க முழுக்க நான் கேள்விப் படாத கோணம்.சரி மதுவைப் பற்றி மேலும் சொல் அரவிந்த் ' என்றாள் திவ்யா சிரத்தையுடன்.
'அது பெரிய விவாதமாகப் போய் விடும். சுருக்கமாகச் சொன்னால்,மது அருந்துவது என்பது மனதிற்குள்ளே மேலும் விழுவதற்கல்ல,மனதிலிருந்து வெளியேறுவதற்கே. தப்பாக உபயோகித்தால், தாய்ப் பாலும் விஷமே' என்றேன் நான்.
அவள் முகம் மாறியது.
'பரவாயில்லை திவ்யா, ஒரே மனநிலையைத் தியானம் என்றும் சொல்லாம்,தியானத்தையே தூக்கம் என்றும் சொல்லலாம்,தூக்கத்தையே போதை என்றும் சொல்லலாம்,போதையை மயக்கம் என்றும் சொல்லலாம்.இது நுகர்வோர் சந்தைதானே!' என்றேன் நான் சீரியஸாக.

'சாரி அரவிந்த்! கோபமா?' என்றாள் திவ்யா,சற்று நேரம் கழித்து.
நான் சிரித்தேன்.
'பார்த்தாயா?குடிக்காமல் இருக்கும் போதே குடிகாரர்களுக்கே கற்பிக்கப் படும் கோபத்தை என் மேலும் சுமத்தி விட்டாய்!' என்றேன் நான்.

இருவருமே சிரித்தபடியே ரெஸ்டாரண்ட்டுக்குள் நுழைந்தோம்.அன்று நானும் அவளைப் போலவே வெறும் பச்சைக் காய்கறிகளையே சாப்பிட்டேன்.அவளது அறை வரைக்கும் சென்று அவளை வழி அனுப்பிவிட்டு வந்த போதும் தனது அறைக்குள் என்னை அழைக்கவில்லை திவ்யா.
வந்து எனது அறைக் கட்டிலில் விழுந்த போதுதான் காதலின் வேதனையை உணர்ந்தேன்.எனது உடம்புக்குள் இருக்கும் அனைத்தையும் துப்புரவாக அகற்றி விட்டு திவ்யாவின் நினைவுகளை மட்டும் யாரோ உள்ளே நிரப்பி இருந்தார்கள்.
காதல் என்பது 90% வலி. பிறகு அந்த வலி தரும் சுகம் மீதி 10% என்று கணக்குப் போட்டது மனம்.

அடுத்த நாளில் இருந்து இருவரும் பெங்களூரை அப்படிச் சுற்றினோம்.

விதான் சௌதாவின் வனப்பு,லால்பாக்,கப்பன்பாக்கின் குளுமை,எம்.ஜி.ரோட்டின் நுகர்வோர் கவர்ச்சி,பிரிகேட் ரோட்டில் இருந்த சிற்றுண்டிச் சாலைகளின் பலதரப் பட்ட சுவை.மஹாராஜாவின் கோடை அரண்மனையின் கம்பீரம்.

'500 வருடங்களுக்கு முன்னே இந்தப் பெங்களூருவை நிர்மாணித்த கெம்ப கௌடா ஒரு மிகப் பெரிய தீர்க்க தரிசியாக இருந்திருக்க வேண்டும் திவ்யா.'

'எப்படிச் சொல்கிறாய் அரவிந்த்?'
'நாம் இரண்டு பேரும் இங்கே வரப் போகிறோம் என்று அப்போதே அவருக்குத் தெரிந்திருக்கிறது.நாம் வருவோம் என்பதற்காக எவ்வளவு அழகாக இந்தக் கார்டன் சிட்டியை உருவாக்கி வைத்து விட்டுப் போயிருக்கிறார் பார்த்தாயா !' என்றேன் நான்.
அவள் எனது இடுப்பைச் செல்லமாகத் தட்டி விட்டுச் சிரித்தாள்.இப்படி ஒவ்வொரு நாளும் ஒரு கொண்டாட்டமாகப் போயிற்று.

ஒருநாள் மாலை எனது அறைக்கு வந்த திவ்யா 'இன்று நாம் எங்கும் வெளியே செல்லப் போவதில்லை ' என்றாள்.
'ஏன்?'
'எனது ஐ.டி.ரிடர்னை சமர்ப்பிக்க வேண்டும்' என்றாள் அவள்.
'அது என்ன அவ்வளவு கஷ்டமான வேலையா என்ன ?'
'உலகத்திலேயே போரடிக்கும் வேலை இந்தக் கவர்ன்மெண்ட் ஃபார்ம்ளைப் பூர்த்தி செய்வதுதான்' என்றாள் திவ்யா எனது படுக்கையில் அமர்ந்தபடியே.
'எனக்காக ஒரு உதவி செய்வாயா,அரவிந்த்?'
'சொல்'
'எனது ஐ.டி.பேப்பர்களை நீ ஃபில் அப் செய்து தருகிறாயா?' என்று கேட்டாள் அவள்.
'நிச்சயமாக திவ்யா' என்றவன் அவளது ஃபைலை வாங்கிப் பார்த்தேன்.
பிறகு பொறுமையாக அந்த விண்ணப்பப் படிவங்களைப் பூர்த்தி செய்த போதுதான் அவளது ஆறு இலக்க வருமானம் எனக்குப் புரிந்தது.தனது வருமான வரிக் கணக்குகளை ஏன் என்னிடம் காட்டினாள் என்ற காரணமும் எனக்குப் புரிந்தது.

அவள் எனது படுக்கையில் கண்களை மூடி ஏதோ யோசனையில் படுத்திருந்தாள். மெல்ல அவளது அருகில் சென்று நின்றேன்.

'திவ்யா'
கண் திறந்து பார்த்தாள்.
'உண்மையைச் சொல்,உனது வருமானத்தைப் பற்றிய முழுவிபரங்களையும் எதற்கு என்னிடம் பகிர்ந்து கொண்டாய்? எனது வருமானம் என்ன என்பதை நானும் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தானே?' என்றேன் நான் சீரியஸாக.
அவள் சிரித்தாள்.
'கண்டு பிடித்துவிட்டாயா?'
'உன்னை விட நான் கிட்டத்தட்ட எண்பதாயிரம் ரூபாய் குறைவாக வருமான வரி கட்டுகிறேன்!' என்றேன் நான்.
'சோ,உனது ஆண்டு வருமானம் இதுதானே' என்று நானே அசந்து போகுமளவுக்குத் துல்லியமாக எனது வருவாயைக் கணக்கிட்டுச் சொன்னாள் திவ்யா.
நான் வியந்து போய் அவளைப் பார்த்தேன்.
'நாங்கள் சிந்திகள்,பணத்தை வழிபடுபவர்கள்.ஏன் என்றால் அது ஒன்றுதான் எங்களைப் பாதுகாத்துக் கொள்ள நாங்கள் வைத்திருக்கும் ஒரே ஆயுதம்.' என்றாள்,திவ்யா சிரத்தையுடன்.
'நீ போய் உன் வேலயைப் பார். நான் இப்போது வந்து விடுகிறேன்' என்று சொல்லி விட்டு வெளியே போனாள் திவ்யா.
அவள் மீண்டும் வருவதற்குள் நான் அவளது படிவங்களை நிறைவு செய்திருந்தேன்.ஃபைலை அவளிடம் திருப்பிக் கொடுத்தபோது நான் கேட்டேன்.
'என் வருமானம் குறைவென்றதால் நாம் பழகுவதில் ஒன்றும் தடை இல்லையே திவ்யா?'என்று அவளை உண்மையான ஆதங்கத்துடன் கேட்டேன்.
அவள் என்னை மெல்லிய புன்முறுவலுடன் பார்த்தாள்.
'இல்லை என்று சொல்லி விட்டாள் எனது அம்மா!'என்றாள் அவள்.

'அம்மாவிடம் ஃபோன் பேசி விட்டுத்தான் வருகிறேன்.'

'அம்மாவிடமா?' என்றேன் வியந்து.

'ஆம். என் அம்மாவிடம் நான் எதையுமே மறைப்பதில்லை.,நாம் இருவரும் பழகுவது உட்பட.
நான் அவளையே கவலையுடன் பார்த்தேன்.
'கவலைப் படாதே.உன் வருமானத்துக்கு ஓ.கே சொல்லி விட்டாள்.!' என்றாள் அவள்.
ஒருகணம் யோசித்து விட்டுக் கேட்டேன்.
'எனது வருமானம் குறைவென்று உன் தாயார்,ஒருவேளை நாம் பழக வேண்டாம் என்று சொல்லி இருந்தால்?'
'உனது வருமானத்தைப் பெருக்கும் வழி எனக்குத் தெரியும்! ஏனென்றால் நீ படுபுத்திசாலி!' என்றாள் திவ்யா தீர்க்கமாக.
அடுத்தநாள் சாப்பிடும் போது நான் அவளைக் கேட்டேன்.

'நீ டிசைன் செய்த கட்டிடங்களிலேயே உனக்கு மிகவும் பிடித்த கட்டிடம் எது திவ்யா?'
அவள் என்னை ஒருகணம் மௌனமாகப் பார்த்து விட்டுச் சொன்னள்.'அந்த பில்டிங் பெங்களூரில்தான் இருக்கிறது, அரவிந்த்.நாளை உன்னை நான் அங்கு கூட்டிச் செல்கிறேன்'
அடுத்த நாள் மாலையே நாங்கள் அங்கு சென்றோம்.
நகரத்தை விட்டு வெகு தூரம் தள்ளி வந்தபின் பிரதான சாலையிலிருந்து இடது புறம் திரும்பச் சொன்னாள் அவள்.சிறிய தார் ரோட்டில் கொஞ்ச தூரம் சென்றதும் அந்தக் கட்டிடம் வந்தது.அதன் பெயரைப் பார்த்ததும் நான் திகைத்துப் போனேன்.
'பாபா புற்று நோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ மையம்' என்று ஆங்கிலத்தில் பித்தளை எழுத்துக்கள் மின்னின.
'கேன்ஸர் இன்ஸ்டிட்யூட்டா?'
'ஆம். வாழும் நாட்களே குறைவாக இருக்கிறவர்களுக்குத்தானே,வாழ்க்கையின் முழு அழகுகளையும் நாம் வழங்க வேண்டும்! நான் டிசைன் செய்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த கட்டிடம் இதுதான்' என்ற திவ்யா 'நீ பார்த்து விட்டுச் சொல்' என்றாள்.
அந்தக் கட்டிடம் அவளைப் போலவே அமைதியாக என்னைப் பார்த்திருந்தது.
(வாழ்க்கை தொடர்கிறது)