சனி, பிப்ரவரி 06, 2010

பவுலோ கோலோவின் 'பிரிடா' (நாவல் அறிமுகம்)

உலகம் முழுதும் பல்வேறு மொழிகளில் கோடிக் கணக்காக விற்றிருக்கும், பௌலோ கோலோவின் புத்தகங்கள்-
மொட்டை மாடியில் அமர்ந்து,முழு நிலவின் அர்த்தமின்மையைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு,
மூன்றாவது பெக்குக்கும்,நாலாவது சிகரெட்டுக்கும் ,மத்தியில் திடீரென ஒரு வெறுமையை உணர்பவர்களுக்கு,
முப்பத்து நான்கு வயதில், பின்னிரவின் போர்வைக்குள், ஆண்மையின் தனிமையை மென்று கொண்டிருப்பவர்களுக்கு,
அந்தி ஜன்னல் கம்பிகளுக்குப் பின்னால் நின்று, பெண்ணுடலின் சாபத்தில் நலிந்து கொண்டிருக்கும் பேரிளம் பெண்களுக்கு,
70 வயதில் கோவில் முடை நாற்றத்தில் கடவுளைக் காணவில்லை என்று கண்டுபிடித்து அலுப்புற்றிருபவர்களுக்கு,
சாம்பிராணிப் புகை நடுவே,கிழக்கத்திய த்த்துவங்களைப் புரட்டிக் கொண்டிருந்து விட்டு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் மேற்கத்திய ஞானம் என்ன என்று எட்டிப் பார்க்க விரும்புவர்களுக்கு,
மட்டும்.

'பௌலோ கோலோ’ என்னுடைய மிகவும் ஆதர்சமான எழுத்தாளர்களில் ஒருவர்.
போர்த்துகீசியர்.
அவருடைய எழுத்துக்களின் மாயம், என்னை மிகவும் ஆட்டுவித்து உள்புகும்.
மிகவும் எளிய வார்த்தைகளினால் உங்கள் ரத்தத்தின் ரசாயன்ங்களை மாற்ற வல்லவர்.
இப்போது நான் படித்து முடித்த ‘ப்ரிடா’ என்ற அவரது நாவலைப் பற்றி, இந்தப் பகிர்வு...

‘பத்து வெள்ளிக் காசுகள் வைத்திருந்த வீட்டு வேலைக்காரி, ஒரு காசைத் தொலைத்து விடுகிறாள்.பின்னர் நாள் பூராவும்,வீடு பெருக்கும் போது,துணிகள் துவைக்கும் போது,பாத்திரம் பண்டங்கள் தேய்க்கும் போதெல்லாம் அந்தக் காசையே தேடி அலைகிறாள்.மாலையில் அந்தக் காசைக் கண்டெடுத்தவுடன் அக்கம் பக்கத்தார்,நண்பர்கள்,உற்றார், உறவினர்கள் அனைவரிடமும் அந்த ஒற்றைக் காசைப் பற்றியே பெருமை அடித்துக் கொள்கிறாள்,கையிலேயே இருந்த ஒன்பது காசுகளை மறந்து விட்டு....’
-பைபிள் கதை. ல்யூக் 15.8-9

சூனியக்காரி என்று அழைக்கப் படும் ‘விட்ச்’ ஆக விரும்புகிறாள் ப்ரிடா என்ற இளம் பெண்.
மேகஸ் என்ற ஆசிரியரிடமும், விக்கா என்ற ஆசிரியையிடமும் ’மேஜிக்’ என்று கோலோ கூறும் அந்த மாயக் கலையை அவள் கற்றுத் தேர்வதுதான் நாவலின் அடித்தளம்.
அயர்லாந்துக் காட்டினிலும்,அதனை ஒட்டிய சிற்றூரிலும் கதை நடக்கிறது.
தனது மாணவியாகச் சேர்த்துக் கொண்ட முதல் நாளிலேயே,அடர்ந்த காட்டின் நடுவே, காரிருளில் ப்ரிடாவைத் தன்னந்தனியாக விட்டுச் சென்று விடுகிறார் மேகஸ்.
காட்டின் பேய்த்தனிமையில்,காரிருளின் அடர்த்தியில் ப்ரிடா நடுங்கி வெலவெலத்துப் போய் விடுகிறாள்.
இரவு முழுதும் எண்ணங்களின்,கற்பனைகளின் பீதியில் அல்லாடுகிறாள் ப்ரிடா.மனதின் அச்சங்களுக்கு வடிகாலாக, அவள் சிறு வயதில் இருந்து கற்ற மந்திரங்களும், கடவுள் நம்பிக்கைகளும், உற்றார், உறவினர், நண்பர்களின் நினைவுகளுமாகப் பொழுதைப் பயத்தின் சித்திரவதைகளிலேயே கழிக்கிறாள்,அவள்.
ஒரு கட்டத்தில் காலை வரப் போகும் கதிரொளியின் நம்பிக்கை மட்டும் எஞ்சியிருக்க, மனம் ஓய்ந்து நிம்மதியாக உறங்கி விடுகிறாள்,ப்ரிடா.
மேகஸ் அவளுக்கு நட்த்திய ‘மேஜிக்’ என்ற மாயக் கலையின் முதல் பாடம் இதுவே!
‘இருள் சூழ்ந்த இரவே நான் கற்றுக் கொண்ட முதல் பாடம்.கடவுளைத் தேடும் பாதையே காரிருளில்தான்.நம்பிக்கையும்,விசுவாசமும் கூட ஒரு இருள் சூழ்ந்த இரவுதான்.இது விந்தையே அல்ல.ஏனெனில் ஒவ்வொரு ,பகலும் உண்மையில் இருள் சூழ்ந்த இரவே.அடுத்த நிமிடம் என்ன நடக்கப் போகிறது என்பதை அறியாமல்தான், நாம் முன்னே போய்க் கொண்டிருக்கிறோம்.காரணம்,நாம் வைத்திருக்கும் நம்பிக்கை.கொண்டிருக்கும் விசுவாசம்.
வாழ்க்கையின் ஒவ்வொரு கணமுமே நமது நம்பிக்கை, ஆற்றும் செயலே.’
இருள் சூழ்ந்த இரவை முதல் பாடமாக்க் கற்பிக்கும் இந்தப் பாதையின் பெயர் ’சூரியப் பாதை’ என்கிறார் மேகஸ்!
அடுத்து விக்கா என்ற சூனியக் காரியிடம் ப்ரிடா கற்றுக் கொள்வது ‘சந்திரப் பாதை’
************************
ஒரு புத்தக்க் கடைக்காரர்தான் ப்ரிடாவுக்கு, விக்காவின் முகவரியைத் தருகிறார்.
‘இந்த மாயக் கலை என்றால் என்ன,சொல்?’ என்று கேட்கிறார் அந்தப் புத்தக்க் கடைக்காரர்.
‘நாம் பார்க்கும் உலகத்தையும், நாம் பார்க்காத உலகத்தையும் இணைக்கின்ற பாலமே இந்த ”மேஜிக்” ’ என்கிறாள் ப்ரிடா..
*************************
மறுபிறப்பைப் பற்றிக் கூறும் விக்கா,அதனைச் சந்தேகத்துடன் கேட்கும் ப்ரிடாவுக்குச் சொல்லும் செய்தி இது...
‘பிறந்தவர்களே மீண்டும்,மீண்டும் பிறக்கிறார்கள் என்ற மறுபிறப்புக் கோட்பாட்டில் உனக்கு ஐயம் வருவது நியாயமே.ஆதியில் பூமியில்,கொஞ்சம் மனிதர்களே இருந்தார்கள்.மீண்டும்,மீண்டும் அவர்களே பிறந்தால் பூமியில் எப்படி இத்தனை ஜனத்தொகை பெருகியது என்று நீ கேட்பாய்.பதில் மிகவும் எளிது.சில பிறவிகளில் நாம் இரண்டாகப் பிரிந்து பிறக்கிறோம்,செல்களைப் போல,செடிகளைப் போல,நட்சத்திரங்களைப் போல,ஸ்படிகங்களைப் போல...
ஒரு ஆத்மாவே இரண்டாகப்,பின்னர் நான்காகப்,பின்னர் பதினாறாகப் பிரிந்து சில தலை முறைகளிலேயே பெரும் பகுதி பூமியை, ஒரு ஒற்றை ஆத்மா நிறைத்து விடுகிறது....
இப்படிப் பிரிந்து கொண்டே போவதால் எண்ணிக்கையில் அதிகமாதலைப் போல, ஆற்றலில் வீரியம் குறைந்து கொண்டே போகிறோம்.அதைச் சரிக்கட்டவே பிரிந்த ஆத்மாவின் பகுதிகள் ஒன்றை ஒன்று அடையாளம் கண்டு கொண்டு இணைகின்றன.இதனையே ரசவாதிகள் அன்பு என்று சொல்கிறார்கள்.
அது மட்டுமல்ல,ஆத்மா இரண்டாகப் பிரியும் போது, அது ஆணாகவும்,பெண்ணாகவுமே பிரிகிறது..இதைத்தான் பைபிளில் ஆதாமிலிருந்து ஏவாள் பிரிந்த கதையாக்ச் சொல்லப் படுகிறது.
பிரிந்து போன நமது ஆத்மாவின் பகுதிகளையே, நமது உயிர்க் கூட்டாளிகளாக நாம் பிறவிதோறும் அடையாளம் கண்டு கொள்கிறோம்..
ஒரு வித்த்தில் இந்த முழுப் பூமியின் மனிதர்கள் அனைவருக்கும் நாம் ஒவ்வொருவருமே பொறுப்பாகிறோம்.நம்மிலிருந்து பிரிந்து போன நமது உயிர்க் கூட்டாளிகள் எங்கே இருக்கிறார்கள் என்பதே நமக்குத் தெரியாது.அவர்கள் எங்கோ மகிழ்ச்சியுடன் இருந்தால் நமக்குள்ளும் அந்த இனம் புரியாத மகிழ்ச்சி பொங்குகிறது..அவர்கள் எங்கோ வேதனைப் பட்டால் நமக்குள்ளும் இந்த இனம் புரியாத வேதனை பெருக்கெடுக்கும்..
உனது பிறவியின் நோக்கமே,உனது உயிர்க் கூட்டாளியை நீ தேடிக் கண்டு பிடித்து இணைவதுதான்...’

*************************
தொலைபேசிகளைப் பற்றி விக்கா கூறுவது...
‘தொலைபேசி கண்டுபிடிக்கப் பட்ட, போன நூற்றாண்டு வரை, பார்த்தலும்,பேசுதலும் ஒன்றாக இணைக்கப் பட்ட புலன்களே.
ஆனால்,தொலைபேசியில் பேசும்போது, நேரில் பார்க்காத ஒருவரிடம் நாம் முதன்முதலாகப் பேசுகிறோம்.பார்த்தலும்,பேசுதலும் பிரிக்கப் படுகின்றன.மனித மூளையில் இது எவ்வளவு பெரிய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது தெரியுமா?பார்ப்பதில் இருந்து, பார்க்கப் படாத ஒன்றுக்கு நேரிடையாகத் தொடர்பு கொள்ளும் விழிப்புணர்வு, நமக்கு இப்போது அதிகமாகி இருக்கிற்து.’

*****************************

நாம் அணியும் ஆடைகளைப் பற்றி விக்கா கூறுவது..
‘நாம் உடுத்தும் உடைகள் முக்கியமானவை.ஏனெனில் அவை உணர்ச்சிகளைப் பொருட்களாக மாற்றும் ஆற்றல் கொண்டவை.நாம் பார்க்கும் உலகத்தையும்,பார்க்காத உலகத்தையும் இணைக்கும் பாலங்களில், ஆடையும் ஒன்று...’
*********************************
‘சந்திரப் பாதையில்’ மிகவும் தேர்ந்த ஐரிஷ் கவிஞர் W.B.YEATS. மகாகவி.தாகூரை மேற்கத்திய உலகுக்கு அறிமுகப் படுத்தியவர்..
அவரது கவிதை வரிகள்...

‘உனது காலடியில் எனது கன்வுகளை விரித்திருக்கிறேன்..
நடக்கும் போது மிருதுவாக நட..
நீ நடப்பது எனது கனவுகளின் மேல்....’

****************************

நாவல் முழுதும் இது போல நிறையப் புதிய,புதிய வாழ்க்கைச் செய்திகள்,உணர்வுகள்,பார்வைகள்,கோணங்கள்..
நண்பர்களுக்கு, நான் பரிந்துரைப்பது பௌலோ கோலோவின் ALCHEMIST' என்ற அற்புதமான சிறிய நாவலை....
நாம் எல்லோரும் பௌலோவின் உயிர்க் கூட்டாளிகளாகத் தொடர்வோமாக....

13 கருத்துகள்:

  1. நல்ல பகிர்வு. 'பௌலோ கோலோ’ பற்றிய அறிமுகத்திற்கு நன்றி சார்.

    பதிலளிநீக்கு
  2. நண்பரே,
    அல்கெமிஸ்ட் நாவலை சில ஆண்டுகளுக்கு முன்னர் (ஆங்கிலத்தில்) படித்தேன்.
    ஒரு சாதாரண குழந்தைகளுக்கான பாண்டஸி கதையை விட அதில் என்னதான் இருக்கிறது?
    (அடர்த்தியான நூல்களுக்கு நான் புதியவனல்ல. இது போன்ற பல மேலை நாட்டு சரக்குகளுடன் ஓரளவு பரிச்சயம் உள்ளவன்தான்.)
    தத்துவார்த்த ரீதியாக சிறப்பான நூல் என பரிந்துரைக்கப் பட்ட அந்த நூலில் எதுவுமே இல்லாதது கண்டு ஏமாற்றமடைந்தேன்.
    கனவு, தரிசனம், அது இது என பல பெரிய வார்த்தைகள் இறைக்கப்பட்டிருப்பதை வைத்து பலரும் அதை புகழ்ந்து பேசுகின்றனர்.
    அபத்தங்கள் நிறைந்த ஒரு சாதாரண கதைப் புத்தகமாகவே பட்டது.
    உங்கள் கருத்தென்ன?

    பதிலளிநீக்கு
  3. ஐயா,
    வணக்கம்,அருமையாக இருந்தது பௌலோ கோலோவைப் பற்றிய பதிவு,மிகுந்த பணிச்சுமையிலும் புத்தகம் படிக்கும் வழக்கம் அருமை.
    நேரம் கிடைக்கையில் நாங்களும் இவரை படிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  4. செ.சரவணக்குமார் சொன்னது…
    நல்ல பகிர்வு. 'பௌலோ கோலோ’ பற்றிய அறிமுகத்திற்கு நன்றி சார்.//

    பௌலோவைப் படிப்பதற்கு இந்தப் பதிவு உங்களுக்கு ஆர்வமூட்டினால் மகிழ்வேன்,சரவணன்.

    பதிலளிநீக்கு
  5. நீங்கள் யாரென்று தெரியாமல் கருத்துச் சொல்வது எனக்கு உடன்பாடில்லை.இருப்பினும் உங்கள் ஆர்வத்தினை மதித்துச் சொல்கிறேன்.

    புத்தகத்துக்கான முன்னுரையிலேயே இது இவர்களுக்கு,இன்ன மனநிலையில் இருப்பவர்களுக்கு மட்டும் என அதனால்தான் எழுதி உள்ளேன்.

    மேலும், உங்களுக்கு ஒரு புத்தகம் பிடிக்காமல் போவது தவறொன்றுமில்லை.

    எல்லோருக்கும் எல்லாமும் பிடிப்பது இயற்கை அல்ல.

    கருத்தால் மட்டுமல்ல,மன நிலையால் கூட சில வேளைகளில் சில புத்தகங்கள் நமக்குப் பிடிக்காமல் போகும்.

    காதலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில்,பகவத் கீதை பக்கத்தில் கிடந்தால் கூடப் படிக்கத் தோன்றாது,நண்பரே!

    பதிலளிநீக்கு
  6. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…
    ஐயா,
    வணக்கம்,அருமையாக இருந்தது பௌலோ கோலோவைப் பற்றிய பதிவு,மிகுந்த பணிச்சுமையிலும் புத்தகம் படிக்கும் வழக்கம் அருமை.
    நேரம் கிடைக்கையில் நாங்களும் இவரை படிக்கிறோம்.//

    துவக்கத்தில்தான் நாம் புத்தகங்களைப் படிக்கிறோம்.மனதைக் கவர்ந்து விட்டால் புத்தகங்கள் நம்மைப் படிக்க ஆரம்பித்து விடும்,கார்த்தி.!
    நாம் நினைத்தாலும் நிறுத்த முடியாது!

    பதிலளிநீக்கு
  7. நல்ல பகிர்வுக்கு நன்றி சார்....

    சார் நம்ம பக்கம் வருவதேயில்லை, வேலைப்பளு என்று நினைக்கின்றேன். சமயம் கிடைத்தால் வந்து செல்லுங்கள் காத்திருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  8. //அது மட்டுமல்ல,ஆத்மா இரண்டாகப் பிரியும் போது, அது ஆணாகவும்,பெண்ணாகவுமே பிரிகிறது..இதைத்தான் பைபிளில் ஆதாமிலிருந்து ஏவாள் பிரிந்த கதையாக்ச் சொல்லப் படுகிறது.
    //

    இருப்பது ஒன்று மட்டுமே. அது ஆத்மா. பிரிவதும் இல்லை. சேர்வதும் இல்லை
    jaisankarj@gmail.com
    jaisankar jaganathan

    பதிலளிநீக்கு
  9. //பிரிந்து போன நமது ஆத்மாவின் பகுதிகளையே, நமது உயிர்க் கூட்டாளிகளாக நாம் பிறவிதோறும் அடையாளம் கண்டு கொள்கிறோம்..//

    அருமையான வரிகள் , ஏன் ஒருவரை பார்த்தவுடன் பிடித்து போகிறது என்பதற்கு எடுத்துக்காட்டு ......

    பதிலளிநீக்கு
  10. நல்ல பகிர்வுங்க..

    //.. எல்லோருக்கும் எல்லாமும் பிடிப்பது இயற்கை அல்ல. ..//

    //.. காதலியைப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில்,பகவத் கீதை பக்கத்தில் கிடந்தால் கூடப் படிக்கத் தோன்றாது,நண்பரே! ..//

    உண்மையான வரிகள்..

    பதிலளிநீக்கு
  11. ப‌கிர்வ்ற்கு ந‌ன்றி சார்.

    -Toto.

    பதிலளிநீக்கு
  12. paulo coelho வின் Alchemist , Valkyries புத்தங்களைப் படித்திருக்கிறேன்.
    இரண்டுமே மிக சிறந்த படைப்புகள்.
    frida வின் கதைக்களமும் alchemist , Valkyries கதைக்களம் போலவே இருக்கிறது.
    alchemist , Valkyries ல்-இருந்து இது கருத்தளவில் எந்தளவில் வேறுபடுகிறது ?

    நல்ல பகிர்வு

    பதிலளிநீக்கு
  13. எல்லோரும் இடுகையில் எழுதுபவர் சொல்லும் கருத்துக்காக வருவார்கள். நான் ஒவ்வொரு இடத்திலும் நீங்கள் இடும் பின்னூட்டத்திற்கு, உங்கள் இடுகையில் பதில் மொழிக்கு கற்றுக்கொள்ள அலைந்து உங்கள் பின்னால் பயணிப்பவன்.

    பதிலளிநீக்கு