வியாழன், பிப்ரவரி 19, 2009

இரண்டு அமெரிக்கர்களுடன் நான் பார்த்த தமிழ்ப் படம்

அமெரிக்காவில் சால்ட் லேக் சிடி நகரத்தில் நான் மென்பொருள் பொறியாளனாகப் பணிபுரிகிறேன்.

அவ்வப்போது ஏதாவது சில ஞாயிற்றுக் கிழமைகளில் அரிதாகத் தமிழ்ப் படங்கள் திரையிடுவது அங்கே உள்ள திரையரங்குகளில் நடக்கும்.அதுபோல் சமயங்களில்தான் நான் தமிழ்ப் படங்களையே பார்க்க முடியும்.இன்று ஒரு தமிழ்ப் படம் ரிலீசாகி இருக்கிறது.ஆர்வமாக நான் கிளம்பிக் கொண்டிருக்கும் போதுதான் என் அலுவலகத்திலேயே அமெரிக்க நிறுவனத்தின் சார்பாகப் பணி ஆற்றிக் கொண்டிருக்கும் ஜானும், லாராவும் எனது அறைக்கு வந்தார்கள்.ஜானும் லாராவும் இரண்டு வருடங்களாகக் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரே அறையில் தங்கி இருக்கிறார்கள்.ஒன்றாகப் படுக்கிறார்கள்.ஆனால் திருமணம் மட்டும் செய்து கொள்ளவில்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் கிடைக்கும் சுகங்களை மட்டும் அனுபவிக்கும் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டு,குடும்பம்,குழந்தை என்ற பொறுப்புக்களிலிருந்து விலகிக் கொள்ளும் இன்றைய மேலை நாட்டுத் தலைமுறை அவர்கள்.

லாராவின் ஒரே பொழுதுபோக்கு பிற உலக நாட்டுப் படங்களைப் பார்த்து ரசிப்பது.

இன்னும் ஒரு தமிழ்ப் படம் கூடப் பார்த்ததில்லை என்று கூறி இன்று, தான் தமிழ்ப் படம் பார்த்தே தீர வேண்டும் என்று அவள் பிடிவாதம் பிடிக்க, ஜான் என்னுடன் அவளைக் கோர்த்து விட்டான்.மூவரும் சேர்ந்து போய் நான் பார்க்க நினைத்த தமிழ்ப் படத்தைப் பார்க்கலாம் என முடிவாயிற்று.

முதலில் டைட்டிலில் இருந்தே ஆரம்பித்தது அவளது ஆர்வக் கொந்தளிப்பு.அந்தப் படத்தில் பார்த்து,டைட்டிலில் திருப்பதி ஏழுமலையானைக் காட்டித் தனது படத்தின் கம்பெனிப் பெயரிலேயே தயாரிப்பாளர் தன் பக்தியையும் பயத்தையும் காட்டியிருந்தார்.

லாரா ஆரம்பித்து விட்டாள்.'இந்தப் போட்டோவில் இருப்பது யார்?'

'அவர் எங்கள் கடவுள்' என்றேன் நான்.

'இது சினிமாதானே?இதில் கடவுளை ஏன் காட்டுகிறார்கள் ?

'நாங்கள் என்ன தொழில் செய்தாலும் கடவுளைத் தொழுது விட்டுத்தான் தொடங்குவோம்!'என்றேன் நான்.
'yes.They will start any bullshit with a prayer!' என்றான் ஜான்
.அவன் என்னுடன் ஏற்கனவே மூன்று,நான்கு தமிழ்ப் படங்களைப் பார்த்து நொந்திருந்தான்.இப்போது லாராவின் ஆசைக்காக வேறு வழியின்றி வந்திருந்தான்.

கம்பெனி டைட்டில் கார்டில் தயாரிப்பாளர் தனது குடும்பத்துடன் திருப்பதி ஆண்டவன் படத்துக்குப் பூத்தூவிக் கொண்டிருந்தார்.

'Who is this?Is he a character in the film?The film started?' என்றாள் லாரா.

'இல்லை.அவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்!'என்றேன் நான்.

'அவர் ஏன் தனது குடும்ப நிகழ்ச்சியைப் படத்தில் காட்டிக் கொண்டிருக்கிறார்?'என்றாள் லாரா உண்மையில் ஆச்சரியமாக.

''That bugger is always showing his bloody family affairs in all his movies.'என்றான் ஜான் எரிச்சலுடன்.

'Funny'என்றாள் லாரா,குழம்பிப் போய்.

ஒருவழியாகப் படத்தில் நம் ஹீரோ அறிமுகமானார்.அவர் முகத்தை நமது பாணியில் ஸ்டெப் ஃப்ரீஸில் மூன்று முறை திருப்பித்திருப்பிக் காட்டினார் படத்தின் இயக்குநர்.லாரா திரும்பிப் ப்ரொஜெக்டர் அறையைக் கவலையுடன் பார்த்தாள்.

'Anything wrong with the projector?' என்று கேட்டாள் அவள்.

'இல்லை. நாங்கள் எங்கள் கதாநாயகர்களை படங்களில் இப்படித்தான் அறிமுகப் படுத்துவோம்!'என்றேன் நான்.
'ஏன்?'
'அவர்களைக் காட்டும் போது எங்கள் ஜனங்கள் கைதட்டி ஆரவாரம் பண்ணுவதற்குக் 'கேப்' கொடுக்க வேண்டும்.'
'கைதட்டுவார்களா?எதற்கு? அவர் இன்னும் படத்தில் ஒன்றுமே செய்ய ஆரம்பிக்கவில்லையே?'என்று கேட்டாள் லாரா.

'இனி அவர் செய்யப் போவதெல்லாம் கண்றாவியாக இருக்கும் என்று ஜனங்களுக்கு முதலிலேயே தெரிந்து விடுவதனால்தான் அவர் வந்தவுடனேயே கைதட்டி விடுகிறார்கள்' என்றான் ஜான்.
அவனை முறைத்தேன்.
அடுத்து அவள் கேட்டதுதான் ஒரு இமாலய சந்தேகம்.

'Is the hero in this film mentally alright?'

'What is your doubt?'

'பின் ஏன் இவ்வளவு ஹெவியாக மேக்கப் போட்டிருக்கிறார்?.'

அதற்கு நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை.பிறகு படத்தில் அதிரடியாக ஒரு சண்டைக் காட்சி வந்தது.ஜான் வெளியே கிளம்பினான்.

'ஜான்!எங்கே போகிறாய்?காட்சிகளை மிஸ் பண்ணி விடுவாய்'என்று தடுத்தாள் லாரா.

'அந்தச் சோம்பேறி அவ்வளவு சீக்கிரம் எதிரிகளை ஃபினிஷ் பண்ண மாட்டான்,ரொம்ப டயம் எடுத்துக்குவான்!காஃபி குடித்து விட்டு ஸ்மோக் பண்ணி விட்டு வருகிறேன்'

பார்க்கும் போதுதான் அந்த சண்டைக் காட்சி எனக்குமே நீளம்மாகத் தோன்றியது.லாரா சண்டையைப் பொறுமையாகப் பார்த்து விட்டு 'அவன் அடிக்கவில்லை.அவர்களாக வந்து அடி வாங்கிக் கொண்டு விழுகிறார்கள்' என்றாள் அமைதியாக.

பிறகு ஒன்று இரண்டு மூன்று என எண்ண ஆரம்பித்து விட்டாள் அவள்.

'அடேங்கப்பா!இதுவரை நூத்தித் தொன்னூறு பேரை அடித்திருக்கிறான்.ஆனால் அவனுக்குக் கொஞ்சம் கூட வேர்க்கவே இல்லை!'என்றாள் அவள்.

'எங்கள் ஊரில் உழைக்கும் மக்கள் அதிகம்.வேர்த்துக் கொட்ட வேலை பார்த்து விட்டு சினிமாப் பார்க்க வருபவர்களுக்கு வேர்வை வாசம் பிடிக்காது.அதனால் எங்கள் படங்களில் கதாநாயகர்களை நாங்கள் வேர்க்க விடுவதில்லை.!'என்றேன் நான்.

ஜான் வந்து அமர்ந்ததும் பாடல் காட்சி ஆரம்பித்தது.

'ஹீரோ சிட்டி பாய்தானே?ஏன் சிட்டியில் ட்ரைபல் டான்ஸ் ஆடுகிறான்?'இது அவளது அடுத்த சந்தேகம்.

'இது ட்ரைபல் டான்ஸ் இல்லை.இதை நாங்கள் குத்துப் பாட்டு என்று சொல்லுவோம்.இது அங்கு எல்லோருக்கும் பிடிக்கும்.'

'ஓ' என்றவள் அதைப் பெரிய முயற்சி பண்ணி ரசிக்கப் பார்த்தாள்.

அடுத்தது கதாநாயகி அறிமுகமானாள்.லாரா அமைதியாக இரண்டு மூன்று காட்சிகள் வரை பார்த்துக் கொண்டிருந்தாள்.

'இவள்தான் இப்போது அங்கே பாபுலர் ஹீரோயின்!எப்படி இருக்கிறாள்?'என்று கேட்டேன்.

'ஓக்கே.அழகாக இருக்கிறாள்.ஆனால் கொடுமையான ட்ரெஸ் ஸென்ஸ்.!என்றாள் லாரா.

'ஏன்?'

'கறுப்பு,மஞ்சள்,சிகப்பு என பேசிக் கலர்ஸையே உபயோகிக்கிறாளே,ஏன்?' என்று அவள் திருப்பி என்னைக் கேட்டாள்.

'அவளையே கேட்டுச் சொல்லுகிறேன் 'என்றேன் நான்.

வில்லனைப் பார்த்ததும்தான் குதித்து விட்டாள் அவள்.

'ஹே!யார் இந்த ஃபன்னி ஃபெலோ?'

'படத்தின் வில்லன்'என்றேன் உண்மையில் வெட்கப் பட்டு.

'வில்லனா?ஏன் அவன் ஹீரோயினை விட ஜாஸ்தி நகை நட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறான்?'

'பணக்கார வில்லன்' என்றேன்.

அவள் திரும்பி என்னை அதிசயமாகப் பார்த்தாள்.

'உங்கள் கலாசாரத்துக்கு என்ன வயதாகிறது?'

'அதையெல்லாம் நாங்கள் கணக்கு வைத்துக் கொள்வதில்லை'

அதுதான் என்பதைப் போல அவள் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

'எதற்கு ஹீரோயின் வீட்டில் பார்ட்டி நடக்கிறது?'என்று இன்னொரு கட்டத்தில் கேட்டாள்.

'ஹீரோயினின் அப்பாவை வில்லன் கொன்று விட்டானில்லையா?அந்த இழவுக் காட்சி'
'See John!At her father's death scene ,that girl even did not remove her lipstick and high heels 'yar'இந்த முறை அவள் நேராக ஜானிடம் முறையிட்டாள்.

'If she removed all those makeup ,she would be looking more deadly than her dead father!' என்றான் அந்த ராஸ்கல் கூலாக.

இருநூறு அடி போனதுமே டூயட் பாடல் வந்தது. ஜான், லாரா இருவருமே நாயகன் நாயகி நெருக்கத்தை மெய்மறந்து பார்த்தார்கள்.

'முத்தம் கூட இல்லாமல்,உடலுறவைக் காட்டிலும் நெருக்கமான பாவனைகளை இருவருமே நன்கு காட்டுகிறார்கள்' என்றாள் லாரா.

'Yes.their love duets are more sexier than intercourse!' என்றான் ஜான்.

தமிழ்ப் படம் என்பதால் ஒருவழியாக இடைவேளை விட்டு வெளியே வந்தோம்.

'நாம் கிளம்பலாமா? என்று லாராவைக் கேட்டான் ஜான்.

'மீதிப் படம்?'

மீதிக் கதையை ஐந்தே நிமிடங்களில் சொல்லி முடித்தான் ஜான்.

நான் ஏற்கனவே பதிவுகளில் படத்தின் கதையைப் படித்து வைத்திருந்ததனால்,அவன் சொன்னது அப்படியே நூறு சதவீதம் ஒத்திருந்தது.

'சரியா?'என்றான் ஜான் சிரித்தபடி.

ஆம் என்று தலையாட்டுவதை விட எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை.

'எனக்கு ஒரே சந்தேகம்'என்றான் ஜான்.

'உங்கள் படங்களை எல்லாம் ஒரே இயக்குநர்தான் கதை எழுதி இயக்குகிறாரா?'

'நோ,நோ.நிறைய இயக்குநர்கள் இயக்குகிறார்கள்' என்று வேகமாக மறுத்தேன்.
'பின் எப்படி கொஞ்சம் கூட வித்தியாசமின்றி ஒரே மாதிரி படங்களை அவர்களால் எடுக்க முடிகிறது?'என்று உண்மையிலேயே ஆச்சரியமாகக் கேட்டான் ஜான்.

சில வினாடிக் கோபம் தணிந்து ஜான்-லாராவிடம் கேட்டேன்.

'நாளை, இங்கு ரொம்ப நன்றாக ஓடும் உங்கள் இங்கிலீஷ் படத்தை நாம் மூன்று பேரும் பார்க்கலாமா?'

'ஏன்?'என்றார்கள் இருவரும்.

'உங்கள் படங்களின் அபத்தங்களையும்,உங்கள் நடிகர்கள்,இயக்குநர்களின் முட்டாள்தனங்களையும் நானும் நார் நாராகக் கிழிக்க வேண்டாமா?'என்றேன் கோபமாக.

சிரித்தபடியே அவர்கள் நாளை படம் பார்க்க ஒத்துக் கொண்டார்கள்.

அப்போது என் செல் ஃபோன் ஒலித்தது.

இன்றே என் வேலை போய் விட்டதென அமெரிக்கக் கம்பெனியிலிருந்து சொன்னார்கள்.

27 கருத்துகள்:

 1. 2கலக்கல்! சிரித்து வயிறு புண்ணாகி விட்டது.. :))) நிலைமை அதுதான் உண்மை!

  பதிலளிநீக்கு
 2. ஹாஹாஹா... உண்மையிலேயே வாய்விட்டு சிரிச்சேங்க.

  சில படங்கள் பார்த்துவிட்டு 'இனிமேல் அந்த இயக்குனர் இயக்கும் எந்த படத்தையும் திருட்டு விசிடியில் கூட பார்க்கக் கூடாது' என்று முடிவெடுத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. //ஜானும் லாராவும் இரண்டு வருடங்களாகக் காதலித்துக் கொண்டிருக்கிறார்கள்.ஒரே அறையில் தங்கி இருக்கிறார்கள்.ஒன்றாகப் படுக்கிறார்கள்.ஆனால் திருமணம் மட்டும் செய்து கொள்ளவில்லை. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதில் கிடைக்கும் சுகங்களை மட்டும் அனுபவிக்கும் சுதந்திரத்தை எடுத்துக் கொண்டு,குடும்பம்,குழந்தை என்ற பொறுப்புக்களிலிருந்து விலகிக் கொள்ளும் இன்றைய மேலை நாட்டுத் தலைமுறை அவர்கள்//

  because they dont have some old fellow known as grand ma and grand dad to take care fo the kids.

  if u see the americans.. no one sends their kids in auto/van .. either the husband or wife try to leave their job to take care fo the kids.. and also.. they make sure they attend the school base ball game, basket ball game ... they dont sleep in the bed till 11am on sundays.. so please understand their culture.. rather than just complaining.

  பதிலளிநீக்கு
 4. ஆஹா ...நக்கல் தாங்காக முடியலை. என்னை தனிய இருந்து சிரிக்க வைத்ததுக்கு நன்றி..

  பதிலளிநீக்கு
 5. கண்ணாடி வீட்டுகுள்ள இருந்துகிட்டு கல்லெறியற வேலை சார். ஆனா சூப்பரா எறிஞ்சிருக்கீங்க..!!!!

  அருமை.. அருமை..!!

  பதிலளிநீக்கு
 6. வருகையும்,பாராட்டும் புரிந்த திரு.தமிழ்ப்ரியன்,ஊர்சுற்றியார்,வண்ணத்துபூச்சியார்,மாயாவியார்,லோயர் சார்,பாலா சார் அனைவருக்கும் நன்றி.
  மாயாவி சார்,தங்கள் கருத்தை உள்வாங்கிக் கொண்டேன் with my own reservations.Thank you sir.

  பதிலளிநீக்கு
 7. உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

  கேள்வி. நெட்

  பதிலளிநீக்கு
 8. boss... did you loose your job as you said in the story...or is the story fiction?

  பதிலளிநீக்கு
 9. எம்.எம்.அப்துல்லா கூறியது...
  :)))))))))))

  February 20, 2009 11:46 PM

  நன்றி,திரு.அப்துல்லா.

  பதிலளிநீக்கு
 10. Cable Sankar கூறியது...
  சூப்பர் பதிவு சார்..

  February 21, 2009 12:46 AM

  நன்றி,ஷங்கர்.இப்போதுதான் பதிவிலேயே நன்றியும் சொல்ல முடியும் என்பதைக் கற்றுக் கொண்டேன்.Anyway thank you,Friend.

  பதிலளிநீக்கு
 11. Satish Govindarajan கூறியது...
  boss... did you loose your job as you said in the story...or is the story fiction?

  February 21, 2009 1:38 AM
  Indeed it is a fiction only.Thank you for your visit and concern,Mr.Sathish.

  பதிலளிநீக்கு
 12. ஸார்..

  மிக இயல்பான நகைச்சுவை..

  கடைசிவரையிலும் சிரித்துக் கொண்டேதான் படிக்க முடிந்தது..

  தொடருங்கள்..

  இதுக்கெல்லாம் கொஞ்சம் 'தில்லு' வேணும்.. உங்களுக்கு நிறையவே இருக்குன்னு நினைக்கிறேன்..

  பதிலளிநீக்கு
 13. HS கூறியது...
  உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

  கேள்வி. நெட்

  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி,திரு.HS.

  பதிலளிநீக்கு
 14. உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது...
  ஸார்..

  மிக இயல்பான நகைச்சுவை..

  கடைசிவரையிலும் சிரித்துக் கொண்டேதான் படிக்க முடிந்தது..

  தொடருங்கள்..

  நன்றி,நண்பரே.இன்றைய வன்முறைகளுக்கு மத்தியில் இதெல்லாம் 'தில்'லா என்ன?

  பதிலளிநீக்கு
 15. திரு ஷண்முகப்ரியன்..

  அருமை. அருமை அருமை.

  வேறு என்ன சொல்ல?

  ஜான் சொன்னது அதை படிக்கும் முன் எனது மனதுக்குள் ஓடியது. :))

  பதிலளிநீக்கு
 16. 'ஸ்வாமி ஓம்கார் கூறியது...
  திரு ஷண்முகப்ரியன்..

  அருமை. அருமை அருமை.

  வேறு என்ன சொல்ல?

  ஜான் சொன்னது அதை படிக்கும் முன் எனது மனதுக்குள் ஓடியது. :))'

  வணக்கம் ஸ்வாமிஜி,தங்களின் பாராட்டை நான் பெற்ற பேறாகக் கருதுகிறேன்.நன்றி ஸ்வாமிஜி.

  பதிலளிநீக்கு
 17. சூப்பர்ங்க...சிரிச்சுட்டே இருக்கேன். ஆனா கடைசி வரைக்கும் படத்தோட பேர சொல்லவே இல்ல...

  பதிலளிநீக்கு
 18. 'நான் ஆதவன் கூறியது...
  சூப்பர்ங்க...சிரிச்சுட்டே இருக்கேன். ஆனா கடைசி வரைக்கும் படத்தோட பேர சொல்லவே இல்ல...'

  நன்றி ஆதவன்.உங்களுக்குப் பிடிக்காத எந்தத் தமிழ்ப்படமும் இந்த வகையைச் சார்ந்தவைதானே.

  பதிலளிநீக்கு
 19. பதிவு சூப்பர்ப்.

  குறிப்பாக கதாநாயகன் அறிமுகத்தின் போது கழுத்தை மூன்று முறை திருப்பி திருப்பி காட்டுவது :))))

  பதிலளிநீக்கு
 20. //மங்களூர் சிவா கூறியது...
  பதிவு சூப்பர்ப்.

  குறிப்பாக கதாநாயகன் அறிமுகத்தின் போது கழுத்தை மூன்று முறை திருப்பி திருப்பி காட்டுவது :))))//

  நன்றி சிவா.

  பதிலளிநீக்கு
 21. எனக்கு மனசு கஷ்டமாக உணரும் பொழுதெல்லாம் இணையத்தில் டிஆர் பேட்டி பார்த்து சிரித்துக்கொள்வேன்.

  இன்று அதற்கு அவசியமில்லை உங்கள் பதிவு அதனை சமப்படுத்திவிட்டது....நன்றாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
 22. //Gnaniyar @ நிலவு நண்பன் சொன்னது…
  எனக்கு மனசு கஷ்டமாக உணரும் பொழுதெல்லாம் இணையத்தில் டிஆர் பேட்டி பார்த்து சிரித்துக்கொள்வேன்.

  இன்று அதற்கு அவசியமில்லை உங்கள் பதிவு அதனை சமப்படுத்திவிட்டது....நன்றாக இருக்கிறது//
  நன்றி ஞானியாரே!உங்கள் வருகைக்கும்,பாராட்டுக்கும்.

  பதிலளிநீக்கு