செவ்வாய், பிப்ரவரி 17, 2009

முழுமை

நாளைக் காலை ஆறு மணிக்குக் குல தெய்வமான வெங்காளி அம்மன் கோவிலில் தீ மிதிக்க வேண்டும், ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியரான அருணாசலம்.ஆனால் இப்போது பிரச்னை என்னவென்றால்,அவர் இந்தப் பத்துப் பதினைந்து நாட்களில் முற்றிலும் நாத்திகராக மாறி விட்டிருந்ததுதான்!கடவுள்,அம்மன்,குலதெய்வம் என்பதெல்லாம் சுத்த ஏமாற்று வேலை,முட்டாள் தனமான நம்பிக்கை எனபதை அவர் மனதாரப் புரிந்து கொண்டார்.


வாழ்க்கை அவரைப் போட்டு வாட்டிய வாட்டலில்தான் அந்த உண்மை அவருக்குப் புலனானது.மனதின் உள்ளே பக்தி என்னும் மூட உணர்வு அறவே அற்றுப் போயிருந்தாலும் அவர் நாளை தீ மிதித்தே ஆக வேண்டும் என்பதே சூழ்நிலையின் விளையாட்டு.

அருணாச்சலத்துக்கு மூன்று குழ்ந்தைகள்.திருமணமான இரண்டு பெண்கள்.ப்ளஸ்2 படித்துக் கொண்டிருக்கும் கடைசிப் பையன் தனஞ்சயன் .தனலக்ஷ்மி, வரலக்ஷ்மி என்ற தனது இரண்டு பெண்களுக்குத் திருமணம் முடித்து வைத்ததிலேயே அவரது சேமிப்பெல்லாம் காலியாகிக் கடன்கள் தலைக்கு மேலே ஏறி விட்டிருந்தன.ஓய்வுதியம்,கட்டும் வட்டிகளுக்கே போதாமல் மேலும் மேலும் கடன் என்று வாழ்க்கை கடன் வாங்குவதற்காகவே என்றாகி இருந்தது.ஆனால் என்னதான் வறுமையின் கோரப் பிடிகளில் சிக்கித் துவண்டாலும் தனது குலதெய்வமான வெங்காளி அம்மன் மீது தான் கொண்டிருந்த பக்தியை மட்டும் அவர் எள்ளளவும் குறைத்துக் கொள்ளவில்லை.

ஆறு வயதிலிருந்து இந்த அறுபத்தோராம் வயது வரை வருடந்தோறும் அவர் திருக்கோவிலில் தீ மிதித்துக் கொண்டுதானிருக்கிறார்.அதற்கான கடுமையான விரதங்களை எந்த மனச் சுளிப்புமின்றி,தீவிரமான பக்தி தரும் உற்சாகத்துடன் மேற்கொண்டிருக்கிறார்.
ஆனால் இந்தப் பதினைந்து நாட்களில் அடுக்கடுக்காக நடந்த நிகழ்வுகள்தான் அவரது குலையாத நம்பிக்கையையும்,குன்றாத பக்தியையும் வேரோடு பிடுங்கி வீசி எறிந்து விட்டன.மூத்த பெண்ணின் மாமனார் திடீரெனக் காலமாகி விட,சம்பந்தி என்ற முறையில் அவர் செய்தே ஆக வேண்டிய திடீர்ச் செலவு இரண்டாயிரம் அவரைத் திக்கு முக்காடச் செய்து விட்டது.வழக்கமாக வட்டிக்குக் கடன் தரும் வேதமூர்த்தி, முந்தின வட்டி பாக்கியே இருக்கும போது மறுபடியும் கடன் என்பதை அறவே நிராகரித்து விட்டார்.என்ன செயவதென்று தெரியாமல் அருணாசலம் திரும்பி நடக்கும் போதுதான் பரிதாபப் பட்டு ,வேதமூர்த்தியே அந்த யோசனையைச் சொன்னார்.
நடக்கப் போகும் சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிடும் தேவகுமார்தான் ஓட்டுக்காக வீட்டுக்கு இரண்டாயிரம் என்று பணம் தந்து கொண்டிருக்கிறானே,அவனிடம் நீங்கள் ஏன் பணம் வாங்கக் கூடாது என்று அவர் சொன்ன யோசனையைக் கேட்டவுடனேயே திடுக்கென்றது அருணாச்சலத்துக்கு.

தேவகுமார் அவருடைய மாணவன்தான்.உண்மை, நேர்மை என்றெல்லாம் தானே தமிழ்ப் பாடம் நடத்திய மாணவன்.வாக்கு சேகரிப்பிற்காக தனது தெருவில் வந்த போது கூடத் ,தனது கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு போனவன்.

அது மட்டுமல்ல,அவனும் அவன் சார்ந்த கட்சியும் மக்கள் நலனைக் கூறு போட்டு விற்றுக் கொண்டு தங்கள் சுயலாபத்துக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதும் அருணாச்சலத்துக்கு நன்றாகவே தெரியும்.

ஓட்டுக்காகப் பணம் வாங்குவது என்பதே இதுவரையில் நெறி பிறழாத தனது வாழ்க்கை முறைக்குக் கேவலம்.அதிலும் அயோக்கியன் ஒருவனை மக்கள் பிரதிந்தியாகத் தேர்ந்தேடுப்பதற்குத்,தானே துணை போவதை எப்படி தமிழாசிரியரிலும் நல்லாசிரியர் விருது வாங்கிய அவரது மனச்சாட்சி ஒப்புக் கொள்ளும்?அவர் வேதமூர்த்தியின் யோசனையை ஏற்க மறுத்து விட்டு வந்து விட்டார்.

ஆனால் அவரது உறுதியை மகளின் கண்ணீர் கரைத்து விட்டது.அவளுடைய மாமனார் உயிருடன் இருக்கும் போதுதான் அவரது பெருந்தன்மையால் அருணாசலம் செய்ய வேண்டிய சீர் வரிசைகளைச் செய்யத் தவறிய போது பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டு விட்டார்.ஆனால் அவர் இறந்த பிறகாவது அவருக்குச் செய்ய வேண்டிய முறைமைகளைச் செய்யா விட்டால் தான் புகுந்த வீட்டில் மானம் மரியாதையுடன் வாழ முடியாது என, அவர் முன்னால் பேசவே பயப்படும் தனலக்ஷ்மியே கோபமாகப் பேசிய போது அவரால் தனது கொள்கைகளைக் காப்பாற்றிக் கொண்டிருக்க முடியவில்லை.

தனது மாணவன் தேவகுமாருக்கு பொதுத் தொலைபேசியிலிருந்து போன் செய்தார்.பேசும் போது அவர் தமிழே அவரது தொண்டையை அடைத்தது.

அடித்ததும் தேவகுமார் அலட்சியமாக 'யாரு?'என்றான்.
'நான் அருணாசலம் பேசறேம்பா' என்றார் ஆசிரியர் குரல் கம்ம.
'யார் ஒயின் ஷாப் அருணாசலமா?'
'இல்லேப்பா.. உன்னோட தமிழ்... தமிழ் ஆசிரியர் அருணாசலம்,தேவகுமார்'
சில நொடிகள் கழித்தே அவர் யார் என்று அடையாளம் புரிந்து கொண்டான் தேவகுமார்.
'சார்...அய்யா! சொல்லுங்கய்யா..வணக்கங்கய்யா' என்றான் அவன் அதிமரியாதையுடன்.
இல்லே..உங்கிட்டே..ஒரு உதவி..'அருணாசலம் தடுமாறினார்.
தவறான வழியில் செல்லும் தன் மாணவனிடமே, ஓட்டுக்குப் பணம் கேட்கும் அந்தக் கொடூரமான சூழ்நிலை எந்த ஒரு நல்லாசிரியருக்கும் வரக் கூடாது எனத் தனது குல தெய்வமானவெங்காளியம்மனிடம் மனமார வேண்டிக் கொண்டார் அருணாசலம்.
'என்ன உதவி வேணும் ?எதுவா இருந்தாலும் சொல்லுங்கய்யா!'என்றான் தேவகுமார் பணிவாக.

ஒரு தீய மாணவன் தடம் புரண்ட தன்னை மாதிரியான ஒரு ஆசிரியரை விட எத்தனையோ மேலானவன் என்றெண்ணினார் அவர்.

'இல்லேப்பா..தேர்தல்லே.. நீ ஏதோ..ஓட்டுக்குப் பணம் தர்ரதா..'
'மன்னிச்சிடுங்க அய்யா..நீங்க சொல்லிக் கொடுத்த தர்ம நியாயத்தை எல்லாம் பின்பற்ற முடியாத அரசியல் வாழ்க்கையிலே நான் இருக்கேன், அய்யா!.உங்க முகத்துலே முழிக்கிற தகுதி கூட இப்போ எல்லாம் எனக்கில்லே..நல்லவனா இருன்னு சொல்றதைத் தவிர நீங்க எது சொன்னாலும் கேக்கறேன்!சொல்லுங்கய்யா..என்ன உதவி செய்யனும் நான்?'
'நான் சொல்லித் தந்ததை எல்லாம் நீ மறந்துட்டதுக்கு நன்றி சொல்றதுக்குத்தாம்பா நான் கூப்பிட்டேன்' என்றார் அவர் இறுதியாக.
'என்னங்கய்யா சொல்றீங்க?' அவனுக்குப் புரியவில்லை.
'எனக்கும் ஓட்டுக்குப் பணம் வேணும்பா!'என்றார் அவர் சட்டென்று. இந்த வார்த்தைகளை சீக்கிரம் கக்கி விட்டதில் அவருக்குப் பெரும் நிம்மதி வந்தது.
ஒரு நிமிடம் மறுமுனை அமைதியாக இருந்தது,அவருக்குத் தகித்தது.
'என்னோட மேனேஜர் சதாசிவம் உங்களை வீட்டுலே வந்து பார்ப்பான்!'என்ற தேவகுமார்போனைத் துண்டித்து விட்டான்.இந்த முறை அவன் அய்யா என்று அவரை அழைக்கவில்லை.

அவனது மேனேஜர் சதாசிவம் அரை மணி நேரத்தில் பணத்துடன் வந்து விட்டான்.
'எம்.எல்.ஏ சார் உங்களைப் பத்தித்தாங்க சதா பேசிட்டே இருப்பார். இன்னிக்கு மேடையேறி அவரு பொளந்து கட்டுறதுக்குக் காரணமே பள்ளிக் கூடத்துலே நீங்க சொல்லிக் கொடுத்த தமிழ்தான்னு அடிக்கடி சொல்லுவாரு!'
யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இழிவானது எங்கும் காணோம் என்று பாரதியை மாற்றிக் கத்த வேண்டும் போலிருந்தது அவருக்கு.அதற்குப் பிறகு சதாசிவம் செய்ததுதான் அவரது வேதனையின் உச்சக் கட்டம்.
'ஹி..ஹி..சார் தப்பா நெனைச்சுக்கக் கூடாது யாரா இருந்தாலும் இப்படிச் சத்தியம் வாங்கிட்டுப் பணம் தர்ரதுங்கறது தான் எம்.எல்.ஏ சாரோடே பாலிசி.'என்றவன் ஒரு ப்ளாஸ்டிக் தட்டு,வெற்றிலை,பாக்கு எல்லாம் எடுத்தான்.
ஓட்டை மாற்றிப் போடக் கூடாதெனக் குலதெய்வத்தின் மீது குடும்பத்தினர் அனைவரையுமே சத்தியம் செய்து தரச் சொன்னான் அவன்.தான் செய்யும் தவறுக்கு வெங்காளியம்மனே சாட்சி என்ற போதுதான்,இந்தக் கீழ்த்தரமான சூழ்நிலைக்குத் தன்னை ஆளாக்கி வேடிக்கை பார்க்கும் தெய்வத்தின் மேலேயே அவருக்கு வெறுப்பு வந்தது.

அனுதினமும் தவறாமல் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்த அவர் அதற்குப் பிறகு குல தெய்வம் கோவிலுக்கே போகவில்லை. ஆனால் அதற்கும் அந்தத் தெய்வம் விடவிலை.ஒருநாள் தீ மிதி விழாக் குழுவினர் அவரது வீட்டுக்கே வந்து விட்டார்கள்.வெங்காளி அம்மனின் ஸ்தல புராணம் எழுதிப் புத்தகமாய்க் குண்டம் மிதிக்கும் நாளில் வெளியிட வேண்டுமாம்.அதை எழுதுவதற்கு ஊரிலேயே அவரை விடத் தகுதியான நபர் கிடையாதென விழாக் குழுவினர் ஒட்டு மொத்தமாகத் தீர்மானித்து விட்டார்களாம்.

உடனடியாக அவர்களது கோரிக்கையை அருணாசலம் நிராகரித்து விட்டார். அவரது மனதுக்குள் வெங்காளி அம்மன் மேல் இருந்த வெறுப்பு குண்டத் தீயை விடக் கொடூரமாக எரிந்து கொண்டிருக்கும் போது,அம்மனின் ஸ்தல புராணத்தை அவர் எப்படி எழுத முடியும்?ஆனால் வந்தவர்களோ விடவில்லை.ஸ்தல புராணம் எழுதுவதற்கு ஐயாயிரம் பணம் தருவதாகச் சொல்லி முன்பணம் ஆயிரம் ரூபாயும் அவரது கையில் திணித்து விட்டார்கள்.

அம்மன் மீதிருந்த கோபத்தை விட ஆயிரம் ரூபாய் பணம் பெரியதாக இருந்ததால் அவர் வேறு வழியின்றி ஒத்துக் கொண்டார்.
சிறு வயதிலிருந்து செய்ததைப் போலவே இந்த வருடமும் அவர் தீ மிதித்து விட்டு வந்த பக்திக் கோலத்திலேயே அவரே எழுதும் ஸ்தல புராணம் புத்தகதையும் வெளியிட வேண்டும் என்பது வந்தவர்களின் ஏற்பாடு.மீதிப் பணம் நான்காயிரம் அவருக்கு அங்கேயே வழங்கப் படும்.

ஒரு, ஒரு சதவீதக் கடனாவது அடையும் என்ற ஒரே சின்ன ஆறுதலுக்காக,தனது வறுமை அளித்திருக்கும் பொய்மைதான் கடவுள் என்பதை மனதார உணர்ந்து கொண்ட அருணாசலம் தீ மிதிக்கவும், ஸ்தல புராணம் என்ற அநியாயமான ஏமாற்று வேலையைப் பரப்பும் புத்தகத்தை எழுதவும் மனம் கசந்து ஒப்புக் கொண்டார்.

முத்தாய்ப்பாக நடந்த நிகழ்வு ஒன்றுதான் அறவே அவர் மனதில் அது நாளும் குடி இருந்த வெங்காளி அம்மனைத் தூரத் தூக்கி எறிந்து விட்டது.

வீட்டு வாடகை பாக்கியைக் குண்டம் மிதித்துக் கிடைக்கும்,ஸ்தல புராணப் புத்தகப் பணத்தில் தருகிறேன் என்று தவணை சொல்வதற்காக வீட்டுக்காரரைத் தேடிச் சென்றார் அருணாசலம்.வீட்டுக்காரர் தனது பிறந்த நாளைப் பக்கத்தில் இருக்கும் டாஸ்மாக் பாரில் கொண்டாடிக் கொண்டிருப்பதாகக் கேள்விப் பட்டு அங்கே சென்றார் அவர்.
குடியில் இருந்த வீட்டுக்காரர் குடி ஒன்றுக்கே வரும் வக்கிர புத்தியில் அவரையும் குடித்தே தீர வேண்டுமென அருணாசலத்தைப் பிழிந்து விட்டார்.தான் இது வரை மதுவைத் தொட்டதே இல்லை என்று அருணாசலம் சொன்னதும் வீட்டுக்காரருக்குக் குஷி பிய்த்துக் கொண்டது.காமுகன் கையில் கிடைத்த கன்னிப் பெண் போலானார் அருணாசலம்.அவர் குடித்தால் வாடகையை இன்னும் மூன்று மாதங்களுக்குத் தள்ளிப்போடுவதாக அவர் வாக்களித்தார்.

இயலாமைக்கே வரும் வெறுப்பில் அதற்கும் தலையாட்டி விட்டார் அருணாசலம்.
அம்மனுக்கு இருக்கும் விரதத்தைக் கறைப் படுத்துகிறோம் என்பதில் அவருக்கே தான் இத்தனை நாள் நம்பிய ஒரு பொய்யான பேராற்றலுக்கு எதிர்த்துச் சவால் விடுகிறோம் என்ற புதியதொரு பேராண்மையை உணர்ந்தார் அருணாசலம்.
ஆர்டர் கொடுக்க பார் ஆளைக் வீட்டுக்காரர் கூப்பிட்டவுடன் 'என்ன சார் வேண்டும் ?'என்று வந்த பையனைப் பார்த்து அதிர்ந்து போனார் அருணாசலம்.

தனஞ்ஜயன்! ப்ளஸ் டூ படிக்கும் தனது மகன் டாஸ்மாக் பாரிலா வேலை செய்கிறான்?
தினமும் வேறொரு நண்பன் வீட்டில் படிக்கச் செல்கிறேன் என்று கூறி விட்டுத் தனஞ்ஜயன் பாரில் வேலை செய்யவா வருகிறான்?
அவ்வப்போது வீட்டுச் செலவுக்கு நண்பனிடம் பணம் வாங்கி வருவதாகச் சொல்லி அவன் கொடுத்த பணம் இப்படியா வருகிறது?

மற்றவர்கள் முன்னால் தாங்கள் தந்தையும் மகனுமே என்று இருவருமே அறிமுகம் செய்து கொள்ள முடியாத சூழ்நிலை.
அறுபத்தொரு வயதில் அவரது முதல் கிளாஸ் மதுவை மகனே ஊற்றிக் கொடுத்தான்.
இதற்கு மேல் அம்மனாவது! தெய்வமாவது!!
**********************************
தீ மிதி விழா.
கடவுளே இல்லை, இல்லை என்றே அவர் எழுதிய ஸ்தல புராணத்தைப் படித்த கோவில் பிரமுகர்களும்,பலரும் இப்படி ஒரு பக்திக் காவியத்தைத் தாங்கள் இதுவரை படித்ததே இல்லை என்று மனமுருகிச் சொன்ன போது பலநாட்களுக்குப் பிறகு வாய் விட்டுச் சிரித்தார் அருணாசலம்.

குண்டத்தீ அவர் முன்னால் கொழுந்து விட்டு எரிந்தது.அவர் அதனை வெறியுடன் பார்த்தார்.
தான் இதுவரை நம்பிய பொய்யே தீயாக அவர் முன் எரிகிறது.
தன்னை நம்பிய மனைவி மக்களைப் பட்டினி போட்டு விட்டுத்,தான் நம்பிய மடமைக்காக வாழ்க்கையையே பறிகொடுத்த தனது முட்டாள்தனத்துக்குத் தண்டனை இந்தத் தீயில் எரிந்து சாமபலாவதுதான்.தனது கால்களில் தொடங்கித் தன் உடல் முழுதும் பற்றி எரியட்டும் அந்தக் குண்டத் தீ.

தானே தனக்குக் கொடுக்கும் தண்டனையாக முழுமையான பக்தியின்மையுடன் குண்டம் இறங்கினார் அருணாசலம்.
ஒரு கணம் கூட அம்மனை நினைக்காமல்,தனது மடமையை மட்டும் எண்ணி எண்ணி மறுகிய ஆவேசத்துடன்,பரிபூரண வெறுமையுடன் தீயில் நடந்தார் அவர்.
தீயை விட்டு வெளியே வரும் போது கூட அவர் தன்னிலையில் இல்லை.
வெறுப்பின் உச்சத்தில் தன்னையே மறந்த ஆவேசம் கூடப் பரவசமாய்த்தான் இருக்கிறது.
அவரது கால்களில் யாரோ தண்ணீரைக் கொட்டிய போதுதான் நினைவு திரும்பினார் அருணாசலம்.
ஆனால் விந்தையிலும் விந்தை ,
பாதங்களைக் குனிந்து அவர் பார்த்த போது, ஒரு சின்னத் தீக்காயம் கூட இன்றிச், சில்லென்றிருந்தன பாதங்கள்.
திகைத்துப் போய் 'இது எப்படி சாத்தியம்?'என்ற அவரது ஆச்சரியமான கேள்விக்குச் சுளீரென விடை கிடைத்தது.
ஸ்தல புராணத்துக்காகத் தான் படித்து எழுதிய உபநிடத வரிகள்.
'அங்கேயும் முழுமை.இங்கேயும் முழுமை
முழுமையிலிருந்து முழுமை வந்த பிறகும்
முழுமையே எஞ்சி நிற்கிறது..'
பக்தி அல்லது பக்தியின்மை முக்கியமல்ல,அவற்றின் முழுமையே முக்கியம் என்று யாரோ அவருடைய உள்மனதில் உணர்த்தினார்கள் .

திரும்பி வெங்காளி அம்மன் சிலையைப் பார்த்தார் அவர்.
கருணை மட்டுமல்ல, உக்கிரத்தின் முழுமையும் தெய்வ நிலைதான் என்ற அவளது சீற்றத்தின் பொருள் புரிந்தது.
இன்பம் மட்டுமல்ல, அவலமும் வாழ்க்கைதான் என்று வெங்காளி அம்மன் அவருக்குக் கோபமாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
**********************************************************
நான்காயிரம் ரூபாயைத் திருப்பிக் கொடுத்த அருணாசலத்தை ஆச்சரியமாகப் பார்த்தார் அறங்காவலர்.
'எதுக்கு ஆசிரியரே, அம்மன் குடுத்த பணத்தைத் திருப்பிக் குடுக்கறீங்க?'
'கோவில் பார்கிங் கான்றாக்டுக்கு உங்களுக்குக் கொடுக்க வேண்டிய மாமூல்! கான்றாக்ட் எனக்குத்தான் இந்தத் தடவை கிடைச்சாகணும்'என்று உறுதிபடக் கூறிவிட்டுத் திரும்பி நடந்தார்,அருணாசலம்.
வாழ்க்கையை உக்கிரமாகப் பார்க்கத் தொடங்கி இருந்தார் அவர்,முதன் முறையாக.

16 கருத்துகள்:

 1. மிக நன்றாக இருக்கிறது சார்.. வாழ்கையின் நிதர்சனஙக்ளை கண்முன்னே ஓட்டி காட்டியது போலிருந்தது.

  பதிலளிநீக்கு
 2. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் தொடுத்துள்ளோம்.

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இப்பூக்களில் சரி பார்த்து கொள்ளவும்.

  இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.

  நட்புடன்
  வலைபூக்கள் குழுவிநர்

  பதிலளிநீக்கு
 3. மிகவும் அருமையான சிறுகதை !! நேரில் கண்ட சம்பவம் போல் உள்ளது, நன்றி!!!!!!!!

  பதிலளிநீக்கு
 4. க க க போ ..
  (கருத்துகளை கச்சிதமாக கதைத்து விட்டீர்கள் என்று கூறினேன் )

  பதிலளிநீக்கு
 5. Hi

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை www.tamilblogger.com ல் சேர்த்துள்ளோம்.

  உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

  இதுவரை இந்த www.tamilblogger.com இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

  நட்புடன்
  tamilblogger குழுவிநர்

  பதிலளிநீக்கு
 6. எந்த நகாசு வேலைகளும் இல்லாத உங்கள் கதை, நிதர்சனத்தை உரத்த குரலில் ஒலிக்கிறது.

  பதிலளிநீக்கு
 7. மதிப்புரை செய்த திரு.கேபிள் ஷங்கர்,திரு.செந்தா,திரு.மந்திரன்,பட்டாம்பூச்சி அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 8. உண்மைத் தமிழன்(15270788164745573644) கூறியது...
  ஸார்..

  மிகச் சிறந்த படைப்பாக்கம் இது..

  February 21, 2009 8:48 AM

  பாராட்டுக்கு நன்றி,நண்பரே!

  பதிலளிநீக்கு
 9. மிக யாதார்த்தமான சிறுகதை. நிஜ சம்பவம் போல் உள்ளது. மிக அருமை.

  பதிலளிநீக்கு
 10. // குடுகுடுப்பை கூறியது...
  அருமை இதற்கு மேல் சொல்ல ஒன்றுமில்லை.//

  படைத்தவரும்,ரசித்தவரும் இணைகின்ற தருணம் எவ்வளவு இனிமையாக இருக்கிறது.அதை வழங்கிய குடுகுடுப்பையாருக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. //அமர பாரதி சொன்னது…
  அற்புதமான கதை சார்.//

  நன்றி அமரபாரதி சார்.உங்கள் தொடர்ந்த மேலான வருகையை எதிர்பார்க்கிறேன்.

  பதிலளிநீக்கு
 12. Balakumar சொன்னது…

  அருமையா இருக்கு சார்..
  நன்றி,பாலகுமார்,சார்.மீதிக் கதைகளையும் படித்துவிட்டுச் சொல்லுங்கள்.

  பதிலளிநீக்கு