வெள்ளி, மார்ச் 20, 2009

திறனாய்வுகளைப் பற்றி ஒரு திறனாய்வு

கலைகளை விமர்சனம் பண்ணுவதே ஒரு தனிக் கலை.ஆனால் மற்ற மூலக் கலைகளுக்கும்,விமர்சனக் கலைக்கும் ஒரே ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது.

எடுத்துக் காட்டாக,வீணை வாசிக்கும் கலையில் ஒருவன் கைதேர்ந்த கலைஞனாக வேண்டுமென்றால் அதற்கென்று குறைந்த பட்சம் மூன்று,நான்கு வருடங்களாவது பயிற்சி,இடைவிடாத ஈடுபாடு,மற்ற அனைத்து சுகங்களையும் தியாகம் செய்து வீணை ஒன்றே வாழ்க்கை என்ற தியானம்,இத்தனையும் தாண்டி இனம்புரியாத ஏதோ ஒன்றின் அனுகிரகம் இதெல்லாம் கைகூட வேண்டும். ஆனால் இதே இந்த வீணைக் கலைஞனின் இசையை விமர்சிக்க வேண்டுமெனில், உங்களுக்கு மேற்சொன்ன எந்த வலியும்,வேதனையும் வேண்டாம்.சுமாராகக் கேட்கும் காதுகள் மட்டும் உங்களுக்கு இருக்கின்றன என்று மற்றவர்கள் நம்பினால் போதும்.நீங்கள் அவனது இசையைப் பற்றிக் கிழித்து நார்நாராக்கும் அல்லது எதுவும் புரியாமல் பாராட்டும் உரிமை பெற்றவர்கள் ஆவீர்கள்.

நாற்பதுவருடங்களாக இசையையே தவமாகப் போற்றும் இளையராஜவின்,ஏ.ஆர்.ரஹ்மானின் பாடலகளைப் பாதி கேட்ட மறுகணமே வயலினையே பார்த்திராத எனது நண்பன் ஆறுச்சாமி குப்பை என்றோ சூப்பர் என்றோ மூன்றாவது பெக்கிலேயே ஐ.எஸ்.ஓ முத்திரை குத்தி விடுகிறான்.என்ன கொடுமை சார் இது?

டாகடர் பட்டம் பெறுவதற்கு நீங்கள் பெரிய செல்வாக்குப் பெற்ற அரசியல் தலவராகவோ,பிரமுகராகவோ இருக்க வேண்டாம்.விமர்சகரானால் போதும் ,அந்தத் துறையில் நீங்கள் டாகடர்தான்.நீங்களே உங்களுக்குப் பி.ஹெச்.டி பட்டம் கொடுத்துக் கொள்ளக் கூடிய ஒரே துறை விமர்சனத் துறைதான்.இப்போது நான் கூடப் பி.ஹெச்.டி தான்.

சரி,புதிதாக எது வெளி வந்தாலும் விமர்சனங்கள் வருகின்றனவா?புதிதாக வந்திருக்கும்குழந்தைகள்பால்பௌடர்,பிஸ்கட்கள்,புதியஎல்.ஐ.சி.திட்டங்கள்,கொலஸ்ட்ராலைக் குறைக்கும்மாத்திரைகள்,புதியபி.பி.மெஷின்,இதயநோய்ச்சிகிச்சைகள்,கார்கள்,பைக்குகள்,புதிய வகை சமையல் குறிப்புக்கள்,அழகு சாதனங்கள் உயரிய புத்தகங்கள்,நாவல்கள்,இப்படி எத்தனை விஷயங்கள் தினமும் வெளியே வருகின்றன,ஆனால் அவற்றைப் பற்றி விமர்சனங்கள் வருகின்றனவா?கிடையாது.ஆனால் ஒரு புதிய திரைப் படம் ரிலீசானால் மட்டும் வருகின்றன பாருங்கள் விமர்சனங்கள்,டிஸ்கவரி சேனலில் ஒரு தனி மான் தென்பட்டால் கூட்டமாகத் துரத்தித் துரத்தி வேட்டையாடி அந்த மானை ரத்தம் வரக் கடித்துக் குதறி தின்று தீர்த்துக் களைப்பாறும் சிறுத்தைகளைப் போல அந்தப் படத்தைப் புகழ்ந்தும் இகழ்ந்தும்... பத்திரகைகளுக்கும்,இணையங்களுக்கும்,தொலைக் காட்சி ஊடகங்களுக்கும் இரண்டு மூன்று வாரங்களுக்கு எங்கு பார்த்தாலும் இந்த விமர்சன மேனியாதான்.

விமர்சனங்கள் வருவதற்குள் ஓடிப் போய்ப் படத்தைப் பார்த்தால் தப்பித்தோம்.இல்லாவிட்டால் இத்தனாயிரம் திறனாய்வுச் சுமைகளும் நம் மண்டையில் ஏறிச்,சுயமாக நாம் அந்தப் படத்தைப் பற்றி என்ன நினைக்கிறோம் என்பதே மறந்து,மறைந்து போய் விடுகிறது.ஒரே இரண்டு மணி நேரப்படத்துக்கு இரண்டாயிர மணிநேரத்துக்கு 200,300 கோணங்களில் படத்தின் கதையையும் இதர டெக்னிகல் அம்சங்களையும் அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்து மேய்ந்து விடும் விமர்சனங்கள்.

நாம் அதற்குப் பின்னால் படம் பார்க்கப் போகும் போது,ஏற்கனவே நிர்வாணமாகப் பார்த்து விட்ட பெண்ணை, முறைப்படிப் பெண் பார்க்கச் செல்பவனைப் போல் ஆகிறோம்
ஏன் திரைப்படங்களுக்கு மட்டும் இந்தத் தனி மரியாதை?அல்லது அவமரியாதை?வாழ்க்கையையே திருப்பிப் போடும் அளவுக்கு அவ்வளவு முக்கியமான அம்சமா என்ன அது?இல்லை.எல்லாருக்கும் தெரிந்த,புரிந்த எல்லாரையும் கவர்ந்தது சினிமா என்பதனால் தான் அதன் மீது மட்டும் இந்தப் பாய்ச்சல்.

திரைப் படங்களைப் பார்க்கிறார்களோ இல்லையோ ,அவற்றைத் திறனாய்வு செய்வதன் மூலம் நம்மைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற தனி மனித அடையாளங்களைத் தேடித் தீர்த்தாக வேண்டிய நவீன சமூகத்தின் ஏக்கம் இது. கிராமத்தில் இருந்தால் நீங்கள் யாரென்று எல்லோருக்கும் உங்கள் அடையாளம் தெரியும்.நகரத்தின் மனிதக்கடலில் மூழ்கிக் கிடக்கும் நாம் தலையைத் தூக்கித் தூக்கி 'நானும் இருக்கிறேன் ,நானும் இருக்கிறேன் 'என்று கூப்பாடு போட இத்தனை சாடிலைட்டுக்கள் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்க வேண்டி இருக்கிறது.

சரி,இனித் திரைப் பட விமர்சனங்களைப் பற்றி...

ஷேக்ஸ்பியர் இறந்து இருநூறு ஆண்டுகள் கழித்து அவரது நாடகங்களைப் பற்றி ஏ.சி. பிராட்லி என்னும் பேராசிரியர் திறனாய்வு செய்தார். ஏ.சி பிராட்லியைப் படித்து விட்டுத்தான் ஷேக்ஸ்பியரையே படிக்க வேண்டுமெனச் சொல்லுமளவுக்கு மிகவும் பிரபலமான விமர்சனங்கள் அவை.அவரைப் பற்றி கிண்டலாகப் பின்னாளில் ஒருவர் சொன்னதுதான் எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது
'பேசாமல் ஷேக்ஸ்பியர் ஏ.சி. பிராட்லியைப் படித்து விட்டுத் தனது நாடகங்களை எழுதி இருக்கலாம்.இருநூறு வருடங்கள் முன்னால் பிறந்து தொலைத்து அந்த வாய்ப்பை இழந்து விட்டார்.'
எனக்கும் அது நல்ல யோசனையாகத் தோன்றுகிறது.பேசாமல் நமது புது இயக்குநர்கள் முதலில் தங்கள் கதைகளை இந்தத் திறனாய்வாளர்களிடம் ஒப்படைத்து விட்டு அவர்களது விமர்சனங்களைப் படித்த பின்னர் படங்களை எடுத்தால் ,படம் ரிலீசான பிறகு இந்த விமர்சன மழையில் நனையாமல் குடை பிடித்துக் கொண்டே போய்ப் படம் பார்க்கும் அவதியிலிருந்து மீளலாம்.
பெரும்பாலான விமர்சனங்களில் தென்படும் வார்த்தை 'லாஜிகல் ஓட்டைகள்'
இதற்கும் நான் ஷேக்ஸ்பியரையே வம்புக்கு இழுக்க வேண்டி இருக்கிறது. பாவம் அவர், காலை நேரத்தில் என்னிடம் மாட்டிக் கொண்ட அவரது ஆத்மா சாந்தி அடைவதாக.
அவர் லாஜிகலாகவே பல நாடகங்கள் எழுதிச் சலித்துப் போய் 'ஏஸ் யு லைக் இட்' என்று ஜாலிக்கு ஒரு டிராமா எழுதினார்.எந்த சீரியஸ்னசும் இல்லாத ஏழை பணக்கரக் காதல் கதை அது .தர்க்கங்களை எல்லாம் இளைப்பாற விட்டு விட்டு அவர் ஹாயாக எழுதிய நாடகம் அது. வெறும் லாஜிகல் ஓட்டை மட்டும் அல்ல ,லாஜிகல் பள்ளத்தாக்குகளே அந்த நாடகத்தில் இருக்கும்.அதிர்ச்சி என்னவென்றால் அந்த நாடகமும் பெரிய ஹிட்டானதுதான்.'மேரா நாம் ஜோக்கர்' தோல்விக்குப் பிறகு ராஜ்கபூர் கோபத்தில் 'பாபி' எடுக்க அது ஹிட்டானதைப் போல.

இங்கு நமக்குத் தேவை எப்படி அந்த நாடகமும் ஹிட்டானது என்பதற்கு வில்லியம் ஹேஸ்லிட் என்ற புகழ் பெற்ற விமர்சகர் சொன்ன வாசகங்கள்தான்.கேளிக்கைக்காக நாடகமோ படமோ பார்க்க வரும் ஜனங்களுக்கு முக்கியமான ஒரு குணாதிசயம் இருப்பதாகச் சொன்னார் அவர்.அதுதான்-
'WILLING SUSPENSION OF DISBELEIF'

'நம்பிக்கையின்மையை நாமே விரும்பிக் கொஞ்ச நேரம் விலக்கி வைப்பது.' உலகம் பூராவும் தியேட்டர்களில் படங்கள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதற்கு ஜனங்களின் இந்த உளவியல் அம்சமே காரணம்.
வில்லன் பதினாலாவது ரீலில் செத்தால் போதும் என்று நாம்தான் படத்தின் இயக்குநருக்கும்,கதாசிரியருக்கும் லைசன்ஸ் கொடுத்து விட்டு உட்காருகிறோம்,நமது நம்பிக்கை இன்மைகளை தள்ளி வைத்துவிட்டு.
தேவை இல்லாத இடங்களில் இஷ்டப் படி விஜய்யும்,அஜீத்தும்,விக்ரமும்,சூர்யாவும் திரிஷாவுடனும்,அசினுடனும் குத்துப் பாட்டுப் பாட நாம்தான் நம் லாஜிக்கை விரும்பி விட்டுக் கொடுக்கிறோம்.
இப்படி எல்லாம் நடக்காது என்று விமர்சகர்களுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் தெரியும்.தெரிந்தே அனுமதிக்கும் விளையாட்டு அது.
ஏன் ?
வாழ்க்கையில் நாம் பார்க்கும் லாஜிக் ஓட்டைகளைக் கண்டு உள்ளே கனலும் வெறுப்பும் கோபமும் திரைப் படங்களிலும் அவற்றை அங்கீகரிக்கச் சொல்லுகிறது..

எனக்குச் சமமாக மதிப்பெண்களை எடுத்த எனது வகுப்புத் தோழன் அமெரிக்காவில் டாலர்களில் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கும் போது நான் மட்டும் ஒரு அரசுத் துறையில் மக்கிப் போன ஃபைல்களுக்கு மத்தியில் மக்கிக் கொண்டிருப்பது என்ன லாஜிக்?

அழகான எனக்குத் திருமணம் நடக்காமல்,அழகுக்குச் சம்பந்தமே இல்லாத என் தோழிக்கு அவள் விரும்பிய ஆடவனே கணவனாகக் கிடைத்திருப்பது என்ன லாஜிக்?

எங்கள் ஊர்க் கல்யாண முருகன் கோவிலில் அவருக்கு மாலை வாங்கிப் போடவே வழி இல்லாத போது ,பழனிமலைக் கோவணான்டி முருகனுக்கு மட்டும் வைரக் கிரீடங்களும்,தங்கத் தேர் பவனியும் என்ன லாஜிக்?

பொதுவாக உற்சாகத்தோடு இருக்கும் போது நமக்கு லாஜிக் தேவைப் படுவதில்லை.நான் விரும்பிய பெண் என்னைப் பார்த்துக் கடைசி கடைசியாகப் புன்னகைத்தே விட்டால் 12பி பஸ்ஸின் நெரிசலும் கூட எனக்கு சுகமே.நான் கோபமாகப் போய்க் கொண்டிருக்கும் போது என் காரின் ஏ.சி.சத்தம் கூட எனக்கு இரைச்சலே.
பார்ப்பவனின் உற்சாகத்தையும்,கோபத்தையும் பொறுத்து படத்தின் லாஜிக் ஓட்டைகள் பெரிதாகவும் சின்னதாகவும் ஆகின்றன. ஒரே படம் ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவத்தைத் தருமாதலால் அடுத்தவர் விமர்சனத்தைச் சுமந்து கொண்டு படம் பார்க்கச் செல்லாதீர்கள்.

சரி, இந்த விமர்சனங்களால் படவருவாய் பாதிக்கப் படுகிறதா?
சத்தியமாக இல்லை.படம் விட்டு வெளியே வரும் பெரும் பாலான ரசிகர்களின் ஒற்றைச் சொல் மதிப்பீடுகள்தான் படத்தின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கின்றன.'பரவாயில்லே சார்' ,'குப்பை சார்' சூப்பர் சார்' என்று கூறிவிட்டு அவர்கள் பஸ்ஸையும் ஆட்டோவையும் பிடிக்க ஓடி விடுகிறார்கள்.விலாவாரியாக டைட்டிலில் இருந்து தொடங்கி அவர்கள் மூச்சு முட்டப் படங்களை விமர்சிப்பதில்லை. விநியோகஸ்தர்கள் அவர்கள் வாக்கைத்தான் தேவ வாக்காகக் கருதுகிறார்கள்.

புது இயக்குனர்களின் படங்களை விமர்சிக்கும் போது மட்டும் இப்படிச் செய்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். பாராட்டுக்களைப் பக்கங்களாகவும்,வசவுகளை வரிகளாகவும் ...

ஆம் உண்மையாகத்தான் கேட்கிறேன்.
ஒருவரை பாராட்டும் போது கிடைக்கும் மன நிறைவும்,நெகிழ்வும் வையும் போது கிடைக்கிறதா என்ன?

24 கருத்துகள்:

  1. சார்.. இதை சொன்னாலே.. லாஜிக் ஓட்டையாய்டுமோ என்னமோ தெரியலை. ஒரு 2 மணி நேரத்துக்கு முன்னாடி.. நான் எழுதுவதை பத்தி.. நானே கேட்டுகிட்ட கேள்வி. படங்களை எல்லாம் ரொம்ப தெரிஞ்ச மாதிரி கிழிக்கிறியே..! உனக்கு என்ன தெரியும்னு கேட்டுகிட்டேன்.

    உங்க கட்டுரையில்... 100% என்னால ஒத்து போக முடியலை. ஆனா விமர்சனங்கள் என்பது, தனிப்பட்ட மனிதனின் பார்வை மட்டுமே என்பது நிச்சயம்.

    உங்களோட கடைசி வரிகள்... இன்னும் குழப்பிடுச்சி. ‘விமர்சனங்கள்’ என்பது இங்கே ‘நெகடிவ்’ லுக்-க்குங்கற மாதிரி ஒரு தோற்றம் தெரியுது.

    இளையராஜா.. பாட்டை விமர்சிக்கனும்னா.. எனக்கு மியூசிக்ல இருபது வருச எக்ஸ்பீரியன்ஸ் இருக்கனுமா...? எனக்கென்னமோ.. கேக்கறமாதிரி ரெண்டு காதும்.. ஒரு பேசற வாயும் போதும்-ன்னு தோணுது.

    பாராட்டும் சந்தோசம் திட்டுறதில் இல்லைதான். அந்த பாராட்டும் திட்டும்.. நான் சம்பாதிச்ச காசுல... செலவு பண்ணி பார்த்த படத்தை பத்தி சொல்றது. அதற்கான உரிமை 200% இருக்குன்னு நினைக்கிறேன்.

    அதே மாதிரி தியேட்டர் கமெண்ட்ஸ்... உண்மைதான்! கேபிள் சங்கர் விமர்சனத்தில் ‘நல்லா இருக்கா இல்லை’-ன்னு பார்த்துட்டு சொல்லு...! அப்ப நான் படம் பார்க்க போறேன்னு சொல்லுறவங்க எல்லாம் இருக்காங்க.

    சன் டிவி-ல காட்டும் அந்த ஒற்றை வரி.. ‘நல்லா இருக்கு’ விமர்சனங்கள்... அது சரி.. எப்பவாவது. டிவி-யில்.. ‘நல்லா இல்லை’-ன்னு யாராவது சொல்லி காட்டியிருக்காங்களா?

    விட்டா.. இன்னும் பேசிட்டே இருப்பேன்..!!! :-)))

    சில கருத்துக்கள்.. ரொம்ப யோசிக்க வைக்குது! ஆனாலும்.. வரிக்கு வரி.. என்னால் ஆர்க்யு பண்ண முடியும்னுதான் தோணுது...! அதனால அப்பீடு.. ! :-)

    சூப்பர்... பதிவு...!

    பதிலளிநீக்கு
  2. நிர்வாணமாகப் பார்த்து விட்ட பெண்ணை, முறைப்படிப் பெண் பார்க்கச் செல்பவனைப் போல் ஆகிறோம் ////// அருமை.

    ,அவற்றைத் திறனாய்வு செய்வதன் மூலம் நம்மைத் திரும்பிப் பார்க்க வேண்டும் என்ற தனி மனித அடையாளங்களைத் தேடித் தீர்த்தாக வேண்டிய நவீன சமூகத்தின் ஏக்கம் இது//////// உண்மை.


    வாழ்க்கையில் நாம் பார்க்கும் லாஜிக் ஓட்டைகளைக் கண்டு உள்ளே கனலும் வெறுப்பும் கோபமும் திரைப் படங்களிலும் அவற்றை அங்கீகரிக்கச் சொல்லுகிறது..///// சூப்பர்.

    ////ஒருவரை பாராட்டும் போது கிடைக்கும் மன நிறைவும்,நெகிழ்வும் வையும் போது கிடைக்கிறதா என்ன?/// சிலருக்கு நிச்சயம் கிடைக்கும். அது ஒரு வகை பிழைப்புவாதம்.

    ஒரு வெள்ளை சுவற்றில் உள்ள சிறிய கருப்பு புள்ளியை போன்றது.
    உற்று நோக்க வைக்கும் தந்திரமே..

    ஆனால் கதையும் ஒரு புண்ணாக்கும் இல்லாமல் வெற்று விளம்பரங்களால் படத்தை சூப்பர் 10 டாப் 10 என்று சிகரம் ஏற்றுவது, மார்க் போடுவது மட்டும் நியாயமா சார்...?? அது நடுநிலையான விமர்சனமா..??

    பதிலளிநீக்கு
  3. ///எங்கள் ஊர்க் கல்யாண முருகன் கோவிலில் அவருக்கு மாலை வாங்கிப் போடவே வழி இல்லாத போது ,பழனிமலைக் கோவணான்டி முருகனுக்கு மட்டும் வைரக் கிரீடங்களும்,தங்கத் தேர் பவனியும் என்ன லாஜிக்?///
    :)

    பதிலளிநீக்கு
  4. //சில கருத்துக்கள்.. ரொம்ப யோசிக்க வைக்குது! ஆனாலும்.. வரிக்கு வரி.. என்னால் ஆர்க்யு பண்ண முடியும்னுதான் தோணுது...! அதனால அப்பீடு.. ! :-)

    சூப்பர்... பதிவு...!//
    எனது கருத்து வேறு.எனது விமர்சனம் வேறு பாலா.எனது கருத்து என்பது என்னைக் கேட்டால் மட்டும் சொலவது.இல்லை என்றால் மற்ற்வர்களின் எண்ணங்களுக்கு இடையூறு இல்லாமல் எனது ரசனையைச் சொல்வது.ஆனால் விமர்சனம் என்பது எனது கருத்தை உங்கள்மேல் வலியுறுத்துவது.ஒரு படைப்பை நமது உணர்வுகளின் நிறத்தில் பெயின்ட் பண்ணுவது.This is only a discussion,not an arguement to win over by either side.You have every right to disagree with me.Thank you Bala.

    பதிலளிநீக்கு
  5. வண்ணத்துபூச்சியார் கூறியது... //ஆனால் கதையும் ஒரு புண்ணாக்கும் இல்லாமல் வெற்று விளம்பரங்களால் படத்தை சூப்பர் 10 டாப் 10 என்று சிகரம் ஏற்றுவது, மார்க் போடுவது மட்டும் நியாயமா சார்...?? அது நடுநிலையான விமர்சனமா..??//

    அதனால்தான் சொல்கிறேன்,வண்ணத்துபூச்சியாரே, விமர்சனங்கள் என்றபெயரில் நமது விருப்பு,வெறுப்புக்களைத்தான் நாம் விளம்பரப் படுத்திக் கொள்கிறோம்.திரைப்பட விமர்சனங்களில் படங்களை விட நாம்தான் நம்மை அதிகம் புலப்படுத்திக் கொள்கிறோம்.படங்களை விட
    நாம் ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்வதற்ககே இந்த விமர்சனங்கள் அதிகம் உதவுகின்றன.உங்கள் விமர்சனங்களைக் கூறுங்கள்,நான் உங்களைப் பற்றிக் கூறிவிடுவேன் என்று நண்பர்களைப் பற்றிச் சொல்லும் அந்தப் பழைய மொழி இதற்கும் பொருந்தும்.

    பதிலளிநீக்கு
  6. தமிழ் பிரியன் கூறியது...

    :)

    தங்கள் புன்சிரிப்பிற்கு நன்றி ப்ரியன்.

    பதிலளிநீக்கு
  7. உண்மைதான். ஒத்து கொள்கிறேன். அரசியல் விமர்சனம் செய்தால் ஆட்டோ வரும். அதுக்கு என்ன செய்ய..??

    எப்படியோ நம்மையெல்லாம் ஒன்று திரட்டிய விமர்சனங்களுக்கு நன்றி.

    "எல்லா புகழும் இண்டர்நெட்டுக்கே"

    பதிலளிநீக்கு
  8. Nice, should be acceptable one.. but where is KANNIKA Story?? am eagerly waiting to read it.. pls post it soon..

    பதிலளிநீக்கு
  9. நான் விமர்சனம் எழுதலாமா வேணாமா..? ஒரே குழப்பமா இருக்கே சார்.? நான் யாரையும் திட்றது கிடையாதே..

    பதிலளிநீக்கு
  10. //பெயரில்லா சொன்னது…
    Nice, should be acceptable one.. but where is KANNIKA Story?? am eagerly waiting to read it.. pls post it soon..//

    Definitely sir.I am writing it. Soon you will find it.Thank you for your encouraging support.

    பதிலளிநீக்கு
  11. //வண்ணத்துபூச்சியார் கூறியது... ... எப்படியோ நம்மையெல்லாம் ஒன்று திரட்டிய விமர்சனங்களுக்கு நன்றி.

    "எல்லா புகழும் இண்டர்நெட்டுக்கே"//

    நிச்சயமாக.இல்லாவிட்டால் உங்கள் நட்பெல்லாம் கிடைத்திருக்குமா?நன்றி, வண்ணத்துபூச்சியாரே.

    பதிலளிநீக்கு
  12. பல இடங்களில் ரசித்தேன். மிக சுவையான கட்டுரை.

    பதிலளிநீக்கு
  13. //Cable Sankar சொன்னது…
    நான் விமர்சனம் எழுதலாமா வேணாமா..? ஒரே குழப்பமா இருக்கே சார்.? நான் யாரையும் திட்றது கிடையாதே..//
    பல காம்ப்ரமைஸ்களுக்கு மத்தியில் உழன்று, படாத பாடுபட்டுப் படத்தை வெளியிட்ட பின்னர் வரும் தங்கள் படத்தின் முதல் விமர்சனம் வரும்போது படிக்கும் புதிய இயக்குனர்களைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.வெற்றி தோல்விகளின் விளிம்பில் நின்று கொண்டு அந்த இளைஞர்கள் அப்போது படும் பயத்தையும்,பதற்றத்தையுமே நான் பிரதிநிதித்துவப் படுத்த முயன்றிருக்கிறேன் ஷங்கர். பிரபலங்களை எவ்வளவு வேண்டுமானாலும் வாருங்கள்.தாங்கிக் கொள்ளும் சக்தி அவர்களுக்கு உண்டு. ஆனால்,பாவம் புதியவர்களை முடிந்தவரை ஊக்கப் படுத்துங்கள்.மற்றபடி இவை என் கருத்துக்கள்தானே தவிர ,முடிவுகள் அல்ல.தவறெனில் சுட்டிக் காட்டுங்கள்,திருத்திக் கொள்கிறேன்.நன்றி ஷங்கர்.

    பதிலளிநீக்கு
  14. //முரளிகண்ணன் சொன்னது…
    பல இடங்களில் ரசித்தேன். மிக சுவையான கட்டுரை.//
    மிக்க நன்றி முரளிகண்ணன் சார்.

    பதிலளிநீக்கு
  15. என்ன எழுதறதுன்னு மண்டையைப் பிச்சுக்கிட்டு உக்காந்திருக்கேன் அரைமணி நேரமா..!

    ஒத்த வரிகூட கிடைக்க மாட்டேங்குது..!

    அதுனால நான் இந்தப் பதிவுக்கு ஒண்ணுமே சொல்லலை..!

    என்னை விட்ருங்க சாமி..!

    பதிலளிநீக்கு
  16. //உண்மைத் தமிழன்(15270788164745573644) சொன்னது…
    என்ன எழுதறதுன்னு மண்டையைப் பிச்சுக்கிட்டு உக்காந்திருக்கேன் அரைமணி நேரமா..!

    ஒத்த வரிகூட கிடைக்க மாட்டேங்குது..!

    அதுனால நான் இந்தப் பதிவுக்கு ஒண்ணுமே சொல்லலை..!

    என்னை விட்ருங்க சாமி..!//

    உங்களைச் சங்கடப் படுத்தியிருந்தால் என் வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் சரவணன்.என் நோக்கமெல்லாம் புதிய இயக்குநர்களின் முதல் படங்களுக்கு உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தாருங்கள் என்ற வேண்டுகோள்தான்.மற்றபடி உங்கள் எழுத்துச் சுதந்திரத்தில் யாராவது கை வைத்தால் விட்டு விடுவீர்களா என்ன?கிழித்து விட மாட்டீர்களா? நன்றி சரவணன்.

    பதிலளிநீக்கு
  17. ஹய்யோ... சார்...! நீங்க வேற ‘சங்கடப்படுத்திடேனோ’ அது இது-ன்னு எல்லாம் பேசிகிட்டு.

    நீங்க சொன்னது அத்தனை வரிகளும்... உண்மை.. உண்மை..உண்மை. ஆனா.. படம் பார்த்துட்டு ரூமுக்கு வரும்போது... அங்க இருக்கற நண்பர்கள் ‘படம் எப்படி இருக்கு மாமு’-ன்னு கேட்கும்போது.. நாம ஒரே வரியில சொல்ல மாட்டோம். அதை.. அக்கு-ஆணின்னு பிரிப்போம் இல்லையா.

    அதையேதான்.. ‘இண்டர்னெட்’-ப்லாக்-ன்னு வரும்போது முகம் தெரியாத நண்பர்களுக்கு சொல்லுறோம்.

    “தனக்கு என்ன தெரியும்ங்கறதை காட்டுவதுதான் விமர்சனம்”-ன்னு சுஜாதா சார் சொல்லுவார். அது 100% உண்மை. ஆனா.. எப்படி சொல்லனும்கறதை அடுத்த முறை டைப் பண்ணும்போது உங்க பதிவு நிச்சயம் யோசிக்க வைக்கும். அது ‘நிதர்சன உண்மை’. :-)))

    பதிலளிநீக்கு
  18. //ஹாலிவுட் பாலா சொன்னது…
    ஹய்யோ... சார்...! நீங்க வேற ‘சங்கடப்படுத்திடேனோ’ அது இது-ன்னு எல்லாம் பேசிகிட்டு.//

    பாலா, நீங்கள் எழுதுவது ஆங்கிலப் படங்களைப் பற்றிய ரசனை உரை.அது இங்கே யாரையும் பாதிக்காது..ஆனால் நான் குறிப்பிடுவது நம் தமிழ் நாட்டு இளைஞர்களைப் பற்றி.தமிழ் நாட்டின் பல கிராமங்களில் இருந்து கனவுகளோடு வந்து,ஏழெட்டு வருடங்களாவது நொந்து நூலாகி இங்கிருக்கும் திரைப் படவியாபாரத்தையும்,தங்களது ஒரிஜினலான கலை உணர்வுகளையும் எப்படி காம்ப்ரமைஸ் பண்ணுவது என்ற குழப்பத்தில் படம் பண்ணும் முதல் பட இயக்குனர்களை.நீங்கள் எழுதும் விமர்சனங்கள் அவனது இந்த மாத ரூம் வாடகை கொடுக்கும் சக்தியைப் பாதிக்கும்.அடுத்த பட வாய்ப்பைப் பாதிக்கும்.அவனது மனநிலையைப் பாதிக்கும்.அவர்கள் படிக்கும் முதல் விமர்சனங்கள், ஒரு குழந்தை நல மருத்துவர் அதன் நோய்களை அணுகுவதைப் போல் அணுக வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.படம் நன்றாக இல்லை என்றாலே துவண்டு விடுபவனை முகத்தில் தண்ணீர் அடித்து எழுப்பி எப்படி எல்லாம் நன்றாக இல்லை சொல்லும் விமர்சனங்கள் தேவையா?சரி அப்படி என்றால் உங்கள் முழு விமர்சனங்களின் தர்க்கம் மட்டும் நின்று விவாதித்தால் நிற்குமா என்பதே என் ஆதங்கம்.

    பதிலளிநீக்கு
  19. /* தமிழ் நாட்டின் பல கிராமங்களில் இருந்து கனவுகளோடு வந்து,ஏழெட்டு வருடங்களாவது நொந்து நூலாகி இங்கிருக்கும் திரைப் படவியாபாரத்தையும்,தங்களது ஒரிஜினலான கலை உணர்வுகளையும் எப்படி காம்ப்ரமைஸ் பண்ணுவது என்ற குழப்பத்தில் படம் பண்ணும் முதல் பட இயக்குனர்களை.நீங்கள் எழுதும் விமர்சனங்கள் அவனது இந்த மாத ரூம் வாடகை கொடுக்கும் சக்தியைப் பாதிக்கும்.அடுத்த பட வாய்ப்பைப் பாதிக்கும்.அவனது மனநிலையைப் பாதிக்கும் */

    நல்லா இருக்கு சார் நீங்க சொல்றது. ஏன் சார் விமர்சனங்களில் பாராட்டுக்களே இல்லையா? 4 வயசு குழந்தைக்களுக்கே மார்க் போட்டு ரேங்க் போட்டுகிட்டு இருக்கோம். அதையே இன்னும் மாத்தமுடியலே நீங்க என்னடான்னா? நான் மொத மொதலா வேலைக்கு போறேன் அதனால ஒரு ஆக்ஸீடண்ட் பண்ணா கோவிச்சுக்காதீங்க சார், நான் அழுதுருவேன் அப்படின்னு ஒரு டிரைவர் சொன்னா வேலைக்கு சேத்துப்பீங்களா?

    அப்புறம், இந்த விமர்சனங்களைப் பார்த்து யாரும் படம் பாக்கப் போறதோ பாக்காம இருக்கப்போறதோ இல்லைன்னு சொல்றீங்க. அப்புறம் எப்படி சார் அது அந்த இளம் இயக்குனரோட அடுத்தபட வாய்ப்பைக் கெடுக்கும்?

    உங்களோட உவமைகளும், லாஜிக் பற்றிய கேள்விகளும் அருமை. ஹாலிவுட் பாலாவின் பல கருத்துகளுடன் நானும் ஒத்துப் போகிறேன்.

    பதிலளிநீக்கு
  20. எனது பதிவு.

    'லாடம்’ - ஒரு copy காக்டெய்ல்

    http://vurathasindanai.blogspot.com/2009/03/copy.html

    பதிலளிநீக்கு
  21. இன்றுதான் முதன் முதலாக உங்கள் வலைத்தளத்திற்கு வருகின்றேன். அருமையாக உள்ளது. உங்கள் அனுபவங்களில் இருந்து நிறைய விடயங்கள் தெரிந்துகொள்ளலாம் என்று நம்புகின்றேன்

    பதிலளிநீக்கு
  22. அய்யா
    எத்தனை பேருக்கு இங்கே வரும் நாசூக்கான விமர்சனம்,,அடுத்தவர் மனம் கோணாமல்,முகம் வாடாமல் செய்யப்படும் விமர்சனம் ,காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல் எங்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்று ,கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது.
    இதில் நம் நண்பர்கள் பழம் தின்று கோட்டை போட்டவர்கள்,ஆனால் அதையும் மீறி நம் இளம் இயக்குனர்கள் சுப்ரமணியபுரம் சசிகுமார்,வெண்ணிலா கபடி குழு சுசீந்தரன் ,மிஷ்கின் போன்றவர்கள் தனித்து வெற்றி பெற்றுள்ளனர்,
    இந்த நூறுக்கும் மேற்பட்ட விமர்சனங்களால் (கண்டிப்பாக 100 மேலேயே இருக்கும் )நான் பாலாவின் நான் கடவுள் படத்தை வாய்ப்பு கிடைத்தும் பார்க்கவேயில்லை,என் என்றால் நீங்கள் சொன்ன அதே கோணம் தான் ,என்னால் இயல்பாக ஒன்றி அப்படத்தை பார்க்க முடியுமா ?என்ற சந்தேகமும்,ஒரு ஆர்வத்தில் பிளாக்கில் வெளிவந்த அத்தனை விமர்சனத்தையும் படித்த காரணமும் சேர்ந்து அப்படத்தை பார்காமலே செய்து விட்டது,எழுத்தாளர் ஜெயமோகன் அவரது வலையில் சொன்னது போல ,பார்வையாளர் ஒவ்வொருவரும் இயக்குனராக ,இசைஅமைப்பளராக,ஒளிப்பதிவாளராக அவதாரம் எடுத்த காலம் அது,ஆகவே யரையும் இப்போது நம்புவதில்லை.
    இப்பேற்பட்ட விமர்சன ஜாம்பவான்கள் நல்ல படைப்புகளுக்கு ஊக்கம் தந்து விமர்சிப்பார்களா?

    பதிலளிநீக்கு
  23. அய்யா
    எத்தனை பேருக்கு இங்கே வரும் நாசூக்கான விமர்சனம்,,அடுத்தவர் மனம் கோணாமல்,முகம் வாடாமல் செய்யப்படும் விமர்சனம் ,காய்த்த மரம் தான் கல்லடி படும் என்பது போல் எங்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒன்று ,கடும் விமர்சனத்திற்கு உள்ளாகிறது.
    இதில் நம் நண்பர்கள் பழம் தின்று கோட்டை போட்டவர்கள்,ஆனால் அதையும் மீறி நம் இளம் இயக்குனர்கள் சுப்ரமணியபுரம் சசிகுமார்,வெண்ணிலா கபடி குழு சுசீந்தரன் ,மிஷ்கின் போன்றவர்கள் தனித்து வெற்றி பெற்றுள்ளனர்,
    இந்த நூறுக்கும் மேற்பட்ட விமர்சனங்களால் (கண்டிப்பாக 100 மேலேயே இருக்கும் )நான் பாலாவின் நான் கடவுள் படத்தை வாய்ப்பு கிடைத்தும் பார்க்கவேயில்லை,என் என்றால் நீங்கள் சொன்ன அதே கோணம் தான் ,என்னால் இயல்பாக ஒன்றி அப்படத்தை பார்க்க முடியுமா ?என்ற சந்தேகமும்,ஒரு ஆர்வத்தில் பிளாக்கில் வெளிவந்த அத்தனை விமர்சனத்தையும் படித்த காரணமும் சேர்ந்து அப்படத்தை பார்காமலே செய்து விட்டது,எழுத்தாளர் ஜெயமோகன் அவரது வலையில் சொன்னது போல ,பார்வையாளர் ஒவ்வொருவரும் இயக்குனராக ,இசைஅமைப்பளராக,ஒளிப்பதிவாளராக அவதாரம் எடுத்த காலம் அது,ஆகவே யரையும் இப்போது நம்புவதில்லை.
    இப்பேற்பட்ட விமர்சன ஜாம்பவான்கள் நல்ல படைப்புகளுக்கு ஊக்கம் தந்து விமர்சிப்பார்களா?

    பதிலளிநீக்கு
  24. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…
    அய்யா
    எத்தனை பேருக்கு இங்கே வரும் நாசூக்கான விமர்சனம்//

    ஒன்று படுவதில் விட வேறு படுவதில் வரும் தனி மனித அடடையாள தாகம்தான் இன்றைய சமூக நோய்.புத்தரும்,கார்ல்ல மார்க்ஸும் கடைசியில் தோற்றே போய் விட்டர்கள்.
    சரணடைதலில் கூட நான்தான் அது என்ற அடையாளம் இல்லாவிட்டால் அந்த சுகத்தை இழக்கவும் மனிதர்கள் தயாராகி விட்டார்கள்.
    பெற்றோரை எதிர்க்கும் பிள்ளைகள்,பிள்ளைகளைப் புரிந்து கொள்ளாத பெறறோர்கள்,கண்வன்-மனைவி,தலைவன்-தொண்டன்,படைப்பாளி-ரசிகன்,குரு-சிஷ்யன் என்ற எல்லா உறவு முறைகளையும் ஆட்டிப் படைக்கும் இந்த அடையாள வெறி பிடித்த சூழலில் நியாயமான் விமர்சனங்களை நீங்கள் எதிர்பார்க்க முடியுமா,கார்த்திகேயன்?

    பதிலளிநீக்கு