சனி, ஏப்ரல் 04, 2009

பேய் ஹோ! (இரண்டாம் பாகம்)

2.

வழக்கமாக அதிகாலையிலேயே எழுந்து வந்து பாத்திரங்கள் தேய்க்க ஆரம்பித்துவிடும் பாப்பம்மா அன்று காலை ஒன்பது,ஒன்பதரை ஆகியும் தனது குடிசையிலிருந்து வரவில்லை. நானும்,அம்மாவும், தங்கைகளும் இன்னும் இரவு நடந்து முடிந்த நிகழ்ச்சியின் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
'ஏம்மா தியாகராஜா தாத்தா ரொம்ப நல்லவருன்னு அடிக்கடி சொல்லுவியே அவரு ஏம்மா பேயா வந்து நம்ம பாப்புவைப் புடிச்சிருக்காரு?' என்று கேட்டாள் என் சின்னத் தங்கை அருள்மொழி.
'தியாகு சித்தப்பா ரொம்ப நல்லவருதாம்மா.ஊருக்குப் பல நல்ல காரியம் பண்ணுவருதான். ஆனா அவரு ஊரையே வெறுத்துப் போய்க் கோபத்துலீல்லே தற்கொலை பண்ணியிருக்காரு.இந்த மாதிரிக் கோபத்துலே செத்தவங்க ஆவி அடங்காதாம்.தன்னோட கோபத்தை எப்படியாவது தீர்த்துக்கறதுக்காக அலையுமாம்.எங்க சாமியாடி அப்பத்தா சொல்லும்.'

அப்போது பின்னாடி தடதடவெனக் கதவு தட்டப்படும் சத்தம் கேட்க நாங்கள் நால்வரும் திடுக்கிட்டோம்.
'பாப்புதான்!'என்றாள் மூத்த தங்கை பூங்கொடி.
'அப்பாவைக் கூப்பிடலாமா?'என்றேன் நான்.
'மனிவண்ணா,கதவைத் தொற கண்ணு'
வழக்கமான பாப்பம்மாவின் குரல்.என்னைத்தான் கூப்பிடுகிறது பாப்பு. நான்தான் எப்பவும் பாப்புவின் செல்லம்.ஒருவேளை நான் அப்பாவின் சாயலில் இருப்பதனால் இருக்கலாம்.

பகல்தானே என்ற தைரியத்தில் நானே போய்ப் புழக்கடைக் கதவைத் திறக்கப்- பாப்பு.

நன்கு குளித்து முடித்துத் தலையெல்லாம் ஒழுங்காகச் சீவிப் பளிச்சென்று வந்திருந்தது பாப்பு.என்னைப் பார்த்ததும் புன்னகை தவழ 'குட் மானிங் கண்னு!' என்றது.அது.யாரோ பள்ளிக்கூடம் போகும் சின்னக் குழந்தை, பாப்பு அதனுடன் விளையாடும் போது அதற்குச் சொல்லிக் கொடுத்திருக்கும் போலிருக்கிறது.அதிலிருந்து இந்த இரண்டு மாதமாக காலை,மாலை,ராத்திரி என்று நேரம் காலம் கிடையாது.முதன் முதலாக அன்றைக்கு அது யாரைப் பார்த்தாலும் அவர்களுக்குக் 'குட்மானிங்' சொல்லி விட்டுத்தான் மறுவேளை.துரத்தித் துரத்திப் போய்க் 'குட்மானிங்' சொல்லி விட்டு வருகிறது பாப்பு.

எங்கள் எல்லோருக்கும் 'குட்மானிங்' சொல்லிவிட்டு வழக்கம் போலப் பாத்திரங்களைத் தேய்க்க ஆரம்பித்து விட்டது.இரவு நடந்தது எதுவுமே அதற்கு ஞாபகமில்லை என்று நினைத்தோம் நாங்கள்.
அப்பா குளித்து முடித்து வெளியே செல்ல வெள்ளை வேட்டி சட்டையுடன் வந்தவர் பாப்புவைப் பார்த்ததும் 'என்னாயிற்று?'என்று அம்மாவிடம் ஜாடையிலேயே கேட்டார்.'ஒன்றும் ஆகவில்லை' என்று அம்மாவும் ஜாடையிலேயே உதட்டைப் பிதுக்கினாள்.எதற்கோ திரும்பிய பாப்பு அப்பாவைப் பார்த்துவிட 'என் குட்மானிங்கை வாங்கிக்கச் சொல்லு சிவா!' என்று அம்மாவிடம் அனத்த ஆரம்பித்து விட்டது பாப்பு.அப்பாவுக்கு மட்டும் நேரடியான 'குட்மானிங் 'கிடையாது.அம்மாவின் மூலந்தான்.

'பாப்பு உங்களுக்குக் 'குட்மானிங்' சொல்றாளாம்.வாங்கிக்கச் சொல்றா!' என்றாள் அம்மா.
'ம்ம்' என்றார் அப்பா.
அவர் சாப்பிட்டு விட்டு 'சரி நான் வெளியே போயிட்டு வர்ரேன்' என்று கிளம்பும் போதுதான் பாப்புவின் ஆளுமை மீண்டும் மாறியது.

'டேய்,திருவாசகம்'
இரவு கேட்ட அதே தடித்த குரலில் பேச ஆரம்பித்தது பாப்பு.

நேராக அவரிடம் சென்று எதிரில் ஒரு அதிகாரியைப் போல நிமிர்ந்து நின்றது அது.
'நீ பாட்டுக்கு வெளியே போயிட்டா?எனக்காக யாரு தேர்தல் வேட்பு மனு தாக்கல் பண்ண என் கூட வருவா?' என்று கேட்டது பாப்பு.
அவருக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை.
'பாப்பம்மா! நீ எல்லாம் எலக்ஷன்லே நின்னு எப்படி...?'
அமைதியாகவே பேசிய அப்பாவை இடைமறித்துக் கத்தினார் தியாகாராஜ சித்தப்பா பாப்பம்மாவின் குரலில்.
'இல்லே.நான் பாப்பம்மா இல்லே. நான் வேறே.அந்த அயோக்கியப் பய பரமசிவத்தோட பய இளவரசனையும் நிக்கற மத்த அயோக்கிய ராஸ்கல்களையும் நான் ஜெயிக்கவே விட மாட்டேண்டா.அது மாத்திரமில்லே.இந்த ஊரு ஜனங்களுக்காக நான் எவ்வளவு நல்லது பண்ணியிருப்பேன்.அதை எல்லாம் தூக்கி எறிஞ்சுட்டு எனக்கெதிரா ஓட்டுப் போட்டு, டெபாசிட் போய்ப் பைத்தியம் புடிச்சு நான் சாகற அளவுக்குப் பண்ணுனானுகளே இந்த ஊர்க்காரனுக,இந்த ஊருக்கு ஒரு பைத்தியத்தை எம்.எல்.ஏ ஆக்காமே விடமாட்டேண்டா!' என்று கத்தியது பாப்பு.

அப்போதுதான் தியாகராஜ சித்தப்பாவினுடைய ஆவியின் சபதம் எங்கள் எல்லோருக்கும் புரிந்தது.

ஆவியாக இருந்தாலும் அவர் பாப்புவின் மூலம் தனது சபதத்தை எப்படி நிறைவேற்ற முடியும்,அதுவும் ஆயிரக் கணக்கான மக்கள் பங்கு பெறும் தேர்தல் போன்ற பொதுக் காரியத்தில்?

அதனுடைய தேர்தல் பணியை இப்படி ஆரம்பித்தது பாப்பு.
'எடுறா வண்டியை' என்று பாப்பு அப்பாவைத் திடீரென மிரட்டியதுதான் தாமதம் ,வாசலில் நின்று கொண்டு இருந்த அப்பாவின் ஸ்கூட்டர் தானாக 'உர்'ரென்று ஸ்டார்ட் ஆகியது.

'வா தாலுக்கா ஆபிஸுக்குப் போலாம் !' என்று அப்பாவைத் தரதரவென்று இழுத்துக் கொண்டு போனாள் பாப்பு.
'ஏறுடா வண்டியிலே' என்றதும் அப்பா ஸ்கூட்டரில் உட்கார்ந்து கொள்ள ஜங்கென்று ஏறி உட்கார்ந்து கொண்டது பாப்பு.

ஹி..ஹி என்று எங்களைப் பார்த்துச் சிரித்தபடியே 'டாட்டா,டாட்டா' என்று பாப்பு கத்திக் கொண்டு போகும் போது பாப்பு பழையபடி ஆகி இருந்தது.

அப்பாவின் ஸ்கூட்டரின் பின்னால் அமர்ந்து கொண்டு 'அடியே கொல்லுதே அலகோ அல்லுதே' என்று பாப்பு சத்தம் போட்டுக் கொண்டு பாடிச் சென்றதைப் பார்த்து ஊரே அசந்து போய் நின்றது.

அதைவிடத் தேர்தல் வேட்பு மனுவைப் பாப்பு தாக்கல் செய்தது எனக் கேட்ட போது ஊரில் ஆண்,பெண் உட்பட எல்லோரும் 'என்ன!என்ன!' என்று கேட்டு மயங்கி விழாத குறைதான்.

பழைய எம்.எல்.ஏ பரமசிவமும்,மற்ற வேட்பாளர்கள் எல்லோரும் முதலில் சிரிப்பை அடக்க முடியாமல் சிரி சிரியென்று சிரித்தார்கள்.
'என்னடா ஆச்சு?திருவாசகத்துக்கும் பைத்தியம் புடிச்சிருச்சா?' என்று அப்பாவைக் கேலியும் கிண்டலும் பண்ணாத ஆட்களே கிடையாது. அதற்குப் பிறகு பல நாட்கள் அப்பா வெளியே தலைகாட்ட முடியவில்லை.

மற்ற வேட்பாளர்களின் தேர்தல் பிரசாரங்கள் அனல் பறக்க நடந்த போது பாப்பு ஆரம்பப் பள்ளிக் குழந்தைகளுடன் எட்டாங்கரம் விளையாடிக் கொண்டிருந்தது.

அவர்கள் வீட்டுக்கு வீடு வந்து வாக்கு சேகரித்த போது, பாப்பு பலூன் கந்தசாமியிடம் ஓசியில் ஒரு பலூன் கிடைத்த குஷியில் மற்ற குழந்தைகளுடன் சிரித்தபடியே அதனைப் பறக்கவிட்டுக் கொண்டிருந்தது.

மற்றவர்கள் இரவெல்லாம் கண் விழித்துத் தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொண்டிருந்தபோது,இது வழக்கம் போலத் தனியாகப் பாடிக் கொண்டிருந்தது.

தேர்தல் பிரசாரம் முடிய இன்னும் ஒரு வாரமே இருந்தது.

அன்று பரமசிவம் தனது மகன் இளவரசனுக்குக் கட்சி ஆதரவாளர்களின் மிகப் பெரிய ஊர்வலத்தை ஏற்பாடு செய்திருந்தார். இரு கரங்களையும் கைகூப்பியபடியே இளவரசன் ஊர்வலத்தின் நடுவே ஒரு இயந்திரன் போல உணர்ச்சியற்ற நிரந்திரப் புன்னகையுடன் ஊரின் முக்கியமான வீதிகளின் வழியே வலம் வந்து கொண்டிருந்தார்.

அப்போது காலை மணி பதினொன்று இருக்கும்.ஆரம்பப் பள்ளிக் கூடத்தில் ஒன்றாம் வகுப்பு ஏ,பி,சி மூன்று செக்ஷன்களையும் சுகுணா டீச்சர் ஒன்றாக உட்கார வைத்து ஆங்கிலப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.150 குழந்தைகளும் ஏ ஃபார் ஏப்பிள்,பி ஃபார் பிஸ்கட்,சி ஃபார் சாக்லேட் என்று கத்திப் பாடம் படித்துக் கொண்டிருந்தார்கள்

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது..

பி ஃபார் பியூபில் என்று சுகுணா டீச்சர் சொல்லக்,குழந்தைகள் எல்லோரும் திடீரென ஒருமித்த குரலில்'பி ஃபார் பாப்பம்மா' என்றார்கள்.
டீச்சர் சற்று நேரம் ஒன்றும் புரியாமல் நின்றவர்,மீண்டும் பி ஃபார் பியூபில் என்று அழுத்தமாகக் கூற இந்த முறையும் குழந்தைகள்'பி ஃபார் பாப்பம்மா'என்றார்கள்!

'டேய் பசங்களா உங்களுக்கெல்லாம் என்னடா ஆச்சு?'என்று டீச்சர் கேட்கக் கேட்கவே 'வோட் ஃபார் பாப்பம்மா' என்றன குழந்தைகள்!

சுகுணா டீச்சருக்கு ஒன்றும் புரியவில்லை.அவள் நிற்க நிற்கவே அந்த ஐந்தாறு வயதுக் குழந்தைகள் 'பி ஃபார் பாப்பம்மா ,வோட் ஃபார் பாப்பம்மா ' என்று உரக்கக் கத்தியபடியே வெளியே ஓடி விட்டனர்.

ஆசிரியர்கள் என்ன தடுத்தும் நடக்கவில்லை.

திமிறிக் கொண்டு வெளியே ஓடி விட்டனர் குழந்தைகள்.

150 குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆர்ப்பாட்டத்தையும் ஓட்டத்தையும் தடுக்க முடியாமல் திணறி விட்டார்கள் ஆசிரியர்கள்.ஒன்றாம் வகுப்புக் குழந்தைகள் வரிசையாக ஊர்வலம் வந்ததைப் பார்த்ததும் அதே பாப்பம்மா கோஷங்களுடன் மற்ற வகுப்புக் குழந்தைகளும் ஊர்வலத்தில் கலந்து கொள்ள பள்ளியிலிருந்து பாப்பம்மாவின் முதல் தேர்தல் ஊர்வலம் ஊருக்குள் வீதிகளில் செல்ல ஆரம்பித்தது.

கடைத் தெருவில் பம்பரம் விட்டு விளையாடிக் கொண்டிருந்த பாப்பு குழந்தைகளின் ஊர்வலத்தை முதலில் வியப்புடன் பார்த்தவள் பிறகு அவளும் 'வோட் ஃபார் பாப்பம்மா' என்று கத்தியபடியே ஓடி வந்து ஊர்வலத்தின் முன்வரிசையில் கலந்து கொண்டாள்.

ஏதோ பாப்புவே திட்டம் போட்டு ஏற்பாடு செய்த ஊர்வலம் போல அது ஊருக்குள் பரபரப்பாக சென்றது.

ஈரானின் பிரபல இயக்குநர் மஜித் மஜ்டி,சீனாவின் ஒலிம்பிக் போட்டிகளை விளம்பரப்படுத்துவதற்கு அந்த அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் எடுத்த அழகான ஆவணப் படத்தில் வருவதைப் போல, ஊரையே அதிசயிக்க வைத்தது இந்தக் குழந்தைகளின் திடீர் ஊர்வலம்.

ஆவேசமாய்க் கத்தியபடியே ஊர்வலமாய் வரும் தங்கள், தங்கள் குழந்தைகளைக் கண்ட ஆண்களும்,பெண்களும் திகைத்துப் போய்ப் பார்த்திருக்க, இந்தக் குழந்தைகள் ஊர்வலம் இப்போது ஊரின் பெரும் புள்ளியான பரமசிவத்தின் மகன் இளவரசனின் தேர்தல் ஊர்வலத்தை நேருக்கு நேர் சந்தித்தது.

இளவரசனே இதை எதிர்பார்க்கவில்லை.அவன் முகத்தில் மட்டுமல்ல ,அவனுடைய ஆதரவாளர்கள் முகத்திலும் ஈயாடவில்லை.

இளவரசனின் ஊர்வலத்தில் தங்களுடைய அப்பா,அம்மா,உறவினர்களைப் பார்த்ததும் கோஷங்களை மாற்றினாள் பாப்பு, தனது தடித்த தியாகராஜா சித்தப்பாவின் குரலில்.!

'அப்பா,வோட் ஃபார் பாப்பம்மா !'

'அம்மா,வோட் ஃபார் பாப்பம்மா !

'மாமா,வோட் ஃபார் பாப்பம்மா !

குழந்தைகளும் அவரவர் அப்பா,அம்மா மாமாக்களைப் பார்த்து அப்படியே கத்தினர்.

கடைசியாக பாப்பு போட்ட கோஷத்தைக் கேட்டு இளவரசனின் ஆதரவாளர்களே சிரித்தார்கள்.

'இளவரச மாமா,வோட் ஃபார் பாப்பம்மா !'

என்று குழந்தைகள் கத்தியதும் சிரித்த தனது ஆதரவாளர்களைப் பார்த்து முறைத்தான் அவன்.

'என்னடா மயிரு உங்களுக்குச் சிரிப்பு வேண்டியிருக்கு.அடிச்சு விரட்டுங்கடா இந்தச் சனியனுகளை!' என்று அவன் ஆத்திரமாய்க் கத்தியதும் தங்கள் குழந்தைகளையே அவன் திட்டியதை அவனது ஆதரவாளர்களாலேயே பொறுத்துக் கொள்ள முடியவில்லை,முக்கியமாகப் பெண்களால்.

'எங்க குழந்தைகளை நீங்க எப்படித் திட்டலாம்?' என்று நிறையப் பேர் அவனிடம் சண்டைக்குப் போய் விட்டனர்.பிரச்சினை பெரிதாகக் கண்டு பயந்து விட்டான் இளவரசன்,

'சரி அதுகளை எப்படியாவது கலஞ்சு போகச் சொல்லுங்கய்யா' என்று தனது நெருக்கமான நண்பர்களிடம் அவன் கேட்டுக் கொண்டான்.
5000 பேருக்கு ஆளாளுக்கு 500 என்று கொடுத்துக் கூட்டி வந்த ஊர்வலமே வீணாகி விடுமோ என்ற கவலை அவனுக்கு.
ஆனால் அப்பா,அம்மா,அண்ணன் என்று யார் போய் மிரட்டியும் கெஞ்சியும் குழந்தைகள் நகர மாட்டோம் என்று அடம் பிடித்து நின்றார்கள்.
கோஷங்களை மேலும் மேலும் சத்தமாகப் போட ஆரம்பித்துவிட்டார்கள் குழந்தைகள். பணம் கொடுத்துக் கூட்டி வந்த இளவரசனின் ஆட்கள் அமைதியாக இருக்கக், குழந்தைகள் சத்தம்தான் பெரியதாக இருந்தது.
ஊரே சிரித்தபடியே இதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்து விட்டது. அப்பாவுக்கு நிலைமையைச் சொல்லி ஃபோன் போட்டு ஆலோசனை கேட்டான் இளவரசன்.
'நெகடிவ் கேம்பேன் ரொம்ப டேஞ்சர்டா.நீ ஊர்வலத்தைக் கலைச்சுட்டு வந்துடு!'என்று அப்பா சொல்லி விட்டார்.
இளவர்சனின் ஊர்வலம் கலைந்து போகத் தொடங்கியதும் ஓவென்று கத்தி ஆர்ப்பாட்டம் செய்தார்கள்குழந்தைகள்.
'வெற்றிச் செல்வி பாப்பம்மா வாழ்க!' என்று கத்தியது பாப்பு. குழந்தைகளும் அதனை எதிரொலிக்க ஊர்க்காரர்களே தங்களை அறியாமால் கைதட்டினார்கள்.

அது மட்டுமல்ல, அன்று இரவு எல்லோருடைய வீட்டு வானொலி, தொலைக்காட்சியில் எந்த சேன்னலைத் திருப்பினாலும் இந்தப் பாட்டே ஒலிபரப்பானது.

'ஒரு பொண்ணு ஒண்ணுதான் பார்த்தேன் ..மில்லி மீட்டர் சிரிப்புத்தான் கேட்டேன்.

'.பாப்பு..பாப்பு..'

ஊரில் பாப்புவைத் தவிர வேரெந்தப் பேருமே அன்று அடிபடவில்லை.!

இரவு பரமசிவம் அப்பாவுக்குப் ஃபோன் செய்தார்.

'என்னப்பா திருவாசகம்,பரமசிவத்துக்கு எதிராவே உன் திருவாசகத்தைப் பாடறியா?' என்று அவர் கோபமாகக் கேட்டதிற்கு அப்பா பதிலொன்றும் சொல்ல முடியாமல் ஃபோனைக் கட் செய்து விட்டார்.
அடுத்த நாள் தேர் முட்டி அருகே ஊரின் சந்தை கூடியிருந்தது.

திடீரென 'டேய் மக்கா!'என்று பாப்புவின் உரத்த குரல் எங்கிருந்தோ கேட்க, மக்கள் திடுக்கிட்டு எல்லோரும் குரல் வந்த திசையில் பார்க்கத், தேரின் மேல் உச்சியில் நின்று கொண்டிருந்தது பாப்பு.

'இப்பச் சொல்றேன் கேட்டுக்கங்கடா! எனக்கு மாத்திரம் நீங்க ஓட்டுப் போடலே, இந்தத் தொகுதியிலே ஒரு பயலும் எந்த ஒரு தப்புத் தண்டாவும் பண்ண முடியாது..பார்த்துக்குங்க.அதை இன்னியிலே இருந்தே
நான் காட்டப் போறேன்.அதனாலே மருவாதையா எனக்கேதான் ஓட்டுப் போடணும்!' என்று சொல்லி விட்டுப் பாப்பு மளமளவென்று இறங்கி எங்கோ ஓடி விட்டது.

அந்த மிரட்டல் பலிக்க ஆரம்பித்த போதுதான் ஊரே அரண்டு போனது.

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த கணவனின் சட்டைப் பாக்கட்டில் வழக்கம் போலப் பணம் திருடக் கையை விட்ட பொன்னம்மாவைக் கருந்தேள் ஒன்று சட்டைப் பாக்கெட்டில் இருந்து கடிக்கத்,துடித்து விட்டாள் அவள்.

கரும்புக் காட்டுக்குள் சென்ற கள்ளக் காதலர்களை எல்லாம் பாம்புகள் துரத்தின.

நியாய விலைக் கடையில் எடையை ஏமாற்றி அரிசியை அளந்து போட்டவுடனேயே ரேஷன் கடை சிங்காரத்தின் வலது கை விளங்கவில்லை.

லஞ்சம் வாங்கிய எல்லா அரசு ஊழியர்களும் லஞ்சப் பணத்தைப் பீரோவில் பூட்டி வைத்து விட்டு அடுத்த நாள் திறந்து பார்த்தால் பணமெல்லாம் மறைந்து போயிருந்தது.

மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிடப் போன எல்லோருக்கும்,அம்மனைத் தவிர வேறு எந்த நினைப்பு வந்தாலும் பிடரியில் சொடேரென அடி விழுந்தது.யாராருக்கு எத்தனை தடவை வேறு நினைப்பு வந்தாலும் அத்தனை பேருக்கும் அத்தனை தடவையும் சொடேர்,சொடேர்.
பூசாரி அங்கமுத்துவுக்குத்தான் நிறைய அடி.கழுத்துக்குக் காலர் போடவேண்டுமென்று டாக்டர் சொல்லி விட்டார்.

பழைய எம்.எல்.ஏ பரமசிவத்துக்குத் 'தேர்தல்'என்ற வார்த்தையைச் சொன்னாலே வாய் இழுத்துக் கொண்டது.

அவரது மகன் இளவரசனுக்கு 'ஓட்டு' என்று நினைத்தாலே ஜன்னி வந்தது.

மருமகள்கள் மாமியாரை கொடுமைப் படுத்தும் போதெல்லாம் வாங்கி வைத்திருந்த பட்டுப் புடவைகள் கருகின.

அப்பாவி மருமகள்களை மாமியார்கள் கொடுமைப் படுத்தும் போதெல்லாம் உடம்பெல்லாம் கொப்புளித்தது.

மதுபானக் கடைகளின் பார்களில் லிட்டர்,லிட்டராகக் குடித்தாலும் யாருக்கும் 'கிக்'கே ஏறவில்லை.எல்லாச் சரக்கிலும் திடீர்,திடீரென கெரஸின் வாசமும் மூத்திர வாசமும் அடித்தன.

ஓட்டுக்குப் பணம் கொடுக்கச் சென்றவர்களின் வாகனங்களின் பெட்ரோல் டேங்குகள் வெடித்தன.

எல்லாவற்றையும் விட ஊர்மக்கள் அதிகம் அவதிப் பட்டது, யார் பொய் சொன்னாலும் உடனே வாந்தி பேதி வந்து படுத்த படுக்கையானதில்தான்..

இதனால் எல்லாம் பாதிக்கப் படாதவர்கள் ஊரில் இருந்த குழந்தைகளும்,எண்ணிக்கையில் மிகக் குறைவான நல்லவர்களுந்தான்.

இதையும் தாண்டிப் பரமசிவம் வெளி ஊரிலிருந்து அடியாட்களைத் தருவித்துப் பாப்பம்மவைத் தீர்த்துக் கட்டிவிட ஏவி விட்டார்.

பாப்பு அப்போது ஊர் மைதானத்தில் பட்டம் விட்டுக் கொண்டிருந்தது.டாடா சுமோவில் வீச்சரிவாள்களோடு வந்திறங்கிய அடியாட்கள் பாப்புவை நெருங்கியவுடன் அது அவர்களைப் பார்த்து ஒரே சிரிப்புத்தான் சிரித்தது.

வீச்சரிவாள்களை வீசிய நிலைகளிலேயே அவர்கள் அப்படியே சிலைகள் பொல உறைந்து போய்,சென்னைக்கடற்கரையில் இருக்கும் உழைப்பாளைர் சிலையைப் போல நின்றுவிட்டார்கள்.
பாப்பு சிரித்தபடியே ஓடிவிட்டது.

அடியாட்களை அப்புறப் படுத்த யாருமே முன்வராததால் அவர்கள் ரொம்ப நாளைக்கு எங்கள் ஊரின் மைதானத்தில் பக்கத்தில் டாடா சுமோவுடன் அப்படியே நின்று கொண்டு இருந்தார்கள்!

தேர்தல் நாளுக்கு முதல் நாள் ராத்திரி எட்டு மணி செய்திகளின் போது எல்லோருடைய வீட்டுத் தொலைக் காட்சிகளிலும் பாப்பு .தோன்றியது.

'வழக்கம் போல அக்கிரமங்களும் அநியாயங்களும் பண்ணனும்னு ஆசைப் பட்டீங்கன்னா எனக்கு ஓட்டுப் போட்டு என்னை ஜெயிக்க வைங்க.அப்படி இல்லே, நல்லவங்களாவே வாழனும்ன்னு நினைச்சீங்கன்னா மத்த யாருக்கு வேணும்ன்னாலும் ஓட்டுப் போட்டுக்குங்க 'என்று சொல்லி விட்டுப் பாப்பு மறைந்து போனது.

தேர்தல் முடிவு வெளியான போது பாப்பு மிகப் பெரும்பான்மையான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற,எதிர்த்து நின்ற மற்ற அனைத்து வேட்பாளர்களும் டெபாஸிட் இழந்தனர்!

அன்று அதிகாலை நான்கு மணிக்கு யாரோ எங்கள் வீட்டுப் பின்புறக் கதவைத் தட்ட, அப்பா, நாங்கள் எல்லோரும் போய்க் கதவைத் திறக்கப் பாப்பு அமைதியாக நின்று கொண்டிருந்தது.

குளித்து முடித்து விபூதி மட்டும் இட்டிருந்தது பாப்பு. அதனுடைய கையில் ஒரு துணிப் பை.

'நான் கிளம்பறேன் மாமா' என்றது என் அப்பாவிடமே நேரடியாக.

'எங்கே பாப்பம்மா?' என்றார் அப்பா வியந்து.

'ஒரு தொகுதிக்கு எம்.எல்.ஏ. ஆனதுக்கப்புறம் அந்தத் தொகுதியிலேயே இருக்கலாமா மாமா.! அதுதான் ஒரு அஞ்சு வருசத்துக்கு இந்த ஊர்ப் பக்கமே தலையைக் காட்டக் கூடாதுன்னு வேறே ஊருக்குப் போறேன்.!' என்றது பாப்பு.

'உனக்கு எந்த ஊருலே, யாரைத் தெரியும் பாப்பு?' என்று அம்மா உண்மையாகவே அக்கறையுடன் கேட்டாள்.

' ஜனங்க எல்லா ஊர்லேயும் ஒரே மாதிரித்தான் இருப்பாங்க சிவா.
எல்லா ஊரும் ஒரே ஊருதான் எனக்கு. நான் வர்ரேன்!'என்று சொல்லி விட்டு விறுவிறுவென நடந்து விடியல் இருட்டில் போயே போய் விட்டது பாப்பு.

இருபத்திரண்டு வருடங்களுக்குப் பிறகு எங்கள் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் தோட்டத்துக் குடிசை இரவில் அமைதியாக இருந்தது.

பாப்பு இப்போது எங்கே பாடிக் கொண்டிருக்கிறதோ?

**********

31 கருத்துகள்:

  1. நல்ல ஒரு குறும்படத்திற்கான தீம்.

    வேடிக்கையான கதையின் பின்னால் தனிமனித சமூகம் சார்ந்த சோகம் இழையோடுகிறது.

    பதிலளிநீக்கு
  2. நல்ல விறுவிறுப்பா இருந்துச்சு சார்.
    நடுவுல சின்ன சின்ன நக்கலோடு சமூகத்தை சாடி உள்ளது போல் தெரிகிறது.
    இருந்தல்லும் நல்ல இருந்துச்சு.
    பாப்புவின் மாயஜால வித்தைகள் கொஞ்சம் நார்னியா, ஜுமஞ்சி படங்களை பார்ப்பது போல் இருந்தது..

    பதிலளிநீக்கு
  3. ஸ்வாமி ஓம்கார் சொன்னது…
    நல்ல ஒரு குறும்படத்திற்கான தீம்.

    வேடிக்கையான கதையின் பின்னால் தனிமனித சமூகம் சார்ந்த சோகம் இழையோடுகிறது.//

    உங்கள் பாராட்டும்,தெளிவான கருத்துக்களும் உவகை அளிக்கிறது ஸ்வாமிஜி.நன்றி.

    பதிலளிநீக்கு
  4. vinoth gowtham கூறியது...
    நல்ல விறுவிறுப்பா இருந்துச்சு சார்.
    நடுவுல சின்ன சின்ன நக்கலோடு சமூகத்தை சாடி உள்ளது போல் தெரிகிறது.
    இருந்தல்லும் நல்ல இருந்துச்சு.
    பாப்புவின் மாயஜால வித்தைகள் கொஞ்சம் நார்னியா, ஜுமஞ்சி படங்களை பார்ப்பது போல் இருந்தது..//

    உங்களுடைய தூண்டுதல்தான் இந்தக் கதைக்கே காரணம்.நன்றி வினோத்

    பதிலளிநீக்கு
  5. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைபூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

    இவண்
    உலவு.காம்

    பதிலளிநீக்கு
  6. நசரேயன் சொன்னது…
    ரெம்ப அருமையா இருக்கு//

    மிகுந்த நன்றி நச்ரேயன் சார்.

    பதிலளிநீக்கு
  7. நல்லா போயிட்டிருந்தது முடிவுல சப்புனு ஆயிருச்சு சார்.

    பதிலளிநீக்கு
  8. //பழைய எம்.எல்.ஏ பரமசிவத்துக்குத் 'தேர்தல்'என்ற வார்த்தையைச் சொன்னாலே வாய் இழுத்துக் கொண்டது.//

    ஹா.. ஹா.. சொல்ல வேண்டியது எல்லாம் இதுல இருக்கே! :) :) :)

    பதிலளிநீக்கு
  9. Cable Sankar சொன்னது…
    நல்லா போயிட்டிருந்தது முடிவுல சப்புனு ஆயிருச்சு சார்.//

    அப்படியா ஷங்கர்!முடிவுதான் உங்களுக்குப் பிடிக்கும் என நான் எதிர்பார்த்திருந்தேன்.இதுதான் ரசனையின் மாயம்.
    யாருக்கு எது பிடிக்கும் என்று யாராலுமே தீர்மானிக்க முடிவதில்லை..நன்றி ஷங்கர்.

    பதிலளிநீக்கு
  10. ஹாலிவுட் பாலா கூறியது...
    //பழைய எம்.எல்.ஏ பரமசிவத்துக்குத் 'தேர்தல்'என்ற வார்த்தையைச் சொன்னாலே வாய் இழுத்துக் கொண்டது.//

    ஹா.. ஹா.. சொல்ல வேண்டியது எல்லாம் இதுல இருக்கே! :) :) :)//

    'From each according to their abilty and to each according to their needs.'என்று காரல் மார்க்ஸ் சொன்னதைப் போல ஒரே கதை அவரவர் பார்வைக்கேற்ப நிறம் மாற்றிக் கொள்கிறது.நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  11. //ஒரே கதை அவரவர் பார்வைக்கேற்ப நிறம் மாற்றிக் கொள்கிறது//

    கதையில் நீங்க சொல்லும் ‘கோட்’களை விட பின்னூட்டங்களில் உங்க எழுத்து இன்னும் பவர்ஃபுல்லா இருக்கு! இதுவும் ”என்னை பொருத்தவரையில்”-தான் இல்லையா?! :) :)

    நீங்க சொன்னது 101% உண்மை!

    பதிலளிநீக்கு
  12. //மாரியம்மன் கோவிலில் சாமி கும்பிடப் போன எல்லோருக்கும்,அம்மனைத் தவிர வேறு எந்த நினைப்பு வந்தாலும் பிடரியில் சொடேரென அடி விழுந்தது//

    இது நல்லா இருக்கு :-)

    //பூசாரி அங்கமுத்துவுக்குத்தான் நிறைய அடி//

    ஹா ஹா ஹா

    சார் நல்லா எழுதி இருக்கீங்க (உங்களுக்கு சொல்லனுமா!)

    பதிலளிநீக்கு
  13. ஹாலிவுட் பாலா சொன்னது…
    //ஒரே கதை அவரவர் பார்வைக்கேற்ப நிறம் மாற்றிக் கொள்கிறது//

    கதையில் நீங்க சொல்லும் ‘கோட்’களை விட பின்னூட்டங்களில் உங்க எழுத்து இன்னும் பவர்ஃபுல்லா இருக்கு! இதுவும் ”என்னை பொருத்தவரையில்”-தான் இல்லையா?! :) :)

    நீங்க சொன்னது 101% உண்மை!//

    கதை, நாமே வரையறுத்துக் கொண்ட விதிகளுக்குள் விளையாடுவது,குடும்பம் நடத்துவதைப் போல.
    பின்னூட்டம், காதலைப் போல,விதிகள் தளர்ந்த விளையாட்டு. அதுதான் காரணம் என்று நினைக்கிறேன்.மீண்டும் வந்தமைக்கு நன்றி பாலா.

    பதிலளிநீக்கு
  14. கிரி சொன்னது…

    //பூசாரி அங்கமுத்துவுக்குத்தான் நிறைய அடி//

    ஹா ஹா ஹா

    சார் நல்லா எழுதி இருக்கீங்க (உங்களுக்கு சொல்லனுமா!)//

    தீவிர எழுத்திலிருந்து சும்மா இளைப்பாற எழுதியது.உங்கள் காமெடிக்கு நானே ரசிகனாகி விட்டேன்.Keep it up Giri.!

    பதிலளிநீக்கு
  15. //
    'வழக்கம் போல அக்கிரமங்களும் அநியாயங்களும் பண்ணனும்னு ஆசைப் பட்டீங்கன்னா எனக்கு ஓட்டுப் போட்டு என்னை ஜெயிக்க வைங்க.அப்படி இல்லே, நல்லவங்களாவே வாழனும்ன்னு நினைச்சீங்கன்னா மத்த யாருக்கு வேணும்ன்னாலும் ஓட்டுப் போட்டுக்குங்க 'என்று சொல்லி விட்டுப் பாப்பு மறைந்து போனது.
    //

    நல்ல வேளை குழந்தைகளுக்கு ஓட்டுப் போடும் உரிமை இல்லாது இருப்பதுவும் ஊரில் நல்லவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருப்பதுவம். இல்லையெனில் பப்புவால் ஜெயித்திருக்க முடியாது.

    பதிலளிநீக்கு
  16. வலசு - வேலணை கூறியது... நல்ல வேளை குழந்தைகளுக்கு ஓட்டுப் போடும் உரிமை இல்லாது இருப்பதுவும் ஊரில் நல்லவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாக இருப்பதுவம். இல்லையெனில் பப்புவால் ஜெயித்திருக்க முடியாது.//

    மிகச் சரியே.ஜனநாயகத்தின் கேலிக்கூத்தே அதுதான்.அரசியல் வாதிகளை மட்டும் குறை கூறிக் கொண்டு அவர்களைத் தேர்ந்தெடுக்கும் மக்களாகிய நாம் பொறுப்பிலிருந்து தப்பித்துக் கொள்கிறோம்.
    ஒத்த கருத்துக்கு நன்றி,வலசு - வேலணை

    பதிலளிநீக்கு
  17. என்னக்கு பிடித்த வரிகள் " இதனால் எல்லாம் பாதிக்கப் படாதவர்கள் ஊரில் இருந்த குழந்தைகளும், எண்ணிக்கையில் மிகக் குறைவான நல்லவர்களுந்தான்."... அந்த பள்ளி நாட்கள் ஏன் இவள்ளவு இனிமைஆனவை என்று மிக சரியாக கூறி விட்டீர்கள்...

    பதிலளிநீக்கு
  18. அது ஒரு கனாக் காலம் சொன்னது…
    என்னக்கு பிடித்த வரிகள் " இதனால் எல்லாம் பாதிக்கப் படாதவர்கள் ஊரில் இருந்த குழந்தைகளும், எண்ணிக்கையில் மிகக் குறைவான நல்லவர்களுந்தான்."... அந்த பள்ளி நாட்கள் ஏன் இவள்ளவு இனிமைஆனவை என்று மிக சரியாக கூறி விட்டீர்கள்...//

    பாராஅட்டுக்கு நன்றி சுந்தரராமன்.

    பதிலளிநீக்கு
  19. இந்தக்கதையை நான் அருந்ததீ பார்த்த பின் படிக்கலாமா? இப்பவே படிக்கலாமா?

    பதிலளிநீக்கு
  20. குடுகுடுப்பை சொன்னது…
    இந்தக்கதையை நான் அருந்ததீ பார்த்த பின் படிக்கலாமா? இப்பவே படிக்கலாமா?//

    அருந்ததீ படக் கதைக்கும் இந்தக் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.படத்தைப் பார்த்தபின் படித்தால் அந்த டி.டி.எஸ்,கிராஃபிக்ஸ் டெக்னிகல் எஃபக்ட்ஸோடு கதையைப் படிக்கலாம் குடுகுடுப்பை சார்.(நீங்கள் அறிவுரைத்த பிறகுதான் உங்கள் பெயரை வெட்டி ஒட்டி விடுகிறேன்.)

    பதிலளிநீக்கு
  21. சார், இரண்டாம் பாகம் திரைப்படம் பார்ப்பது போலவே இருந்தது.

    பதிலளிநீக்கு
  22. அமர பாரதி சொன்னது…
    சார், இரண்டாம் பாகம் திரைப்படம் பார்ப்பது போலவே இருந்தது.//

    THANK YOU FOR YOUR ENCOURAGING COMMENT,AMRABHARATHI SIR

    பதிலளிநீக்கு
  23. ஒரு பேயை வைத்து சமூகச்சாடலை அருமையாக கதைப்படுத்தி உள்ளீர்கள். எனக்கு தெரிந்து நீங்கள் சாதாரண மக்கள் முதல், அரசியல்வாதி, தனிமனிதனின் பழிவாங்கும் எண்ணம் அனைத்தையும் சாடும் ஒரு சாதனமாக பாப்பு பேயை துணைக்கு கூப்பிட்டு இருக்கிறீர்கள்.

    கன்கல் ரெண்டால்.. பாப்புவின் வெர்சனா என அறிய நான் பாடல் கேட்கவேண்டும் விரைவில்.

    இரண்டு பதிவுகளையும் இப்போதுதான் படித்தேன் மிகவும் திருப்தி அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  24. ஒரு பேய் மக்களிடம் நம்மிடம் இருந்து ஓட்ட நிறைய இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  25. குடுகுடுப்பை சொன்னது…

    இரண்டு பதிவுகளையும் இப்போதுதான் படித்தேன் மிகவும் திருப்தி அளிக்கிறது.//

    உங்கள் விமர்சனத்தை நான் பெரிதும் மதிப்பதால் பயந்து கொண்டேதான் படித்தேன்.அப்பாடா,தப்பித்து விட்டேன்.நன்றி குடுகுடுப்பையாரே.

    பதிலளிநீக்கு
  26. குடுகுடுப்பை கூறியது...

    ஒரு பேய் மக்களிடம் நம்மிடம் இருந்து ஓட்ட நிறைய இருக்கிறது.//

    என் கதையை விட இந்த வரிகள் சூப்பர்.

    பதிலளிநீக்கு
  27. ஷண்முகப்ரியன் கூறியது...

    குடுகுடுப்பை சொன்னது…

    இரண்டு பதிவுகளையும் இப்போதுதான் படித்தேன் மிகவும் திருப்தி அளிக்கிறது.//

    உங்கள் விமர்சனத்தை நான் பெரிதும் மதிப்பதால் பயந்து கொண்டேதான் படித்தேன்.அப்பாடா,தப்பித்து விட்டேன்.நன்றி குடுகுடுப்பையாரே.//

    நான் எழுதும் விமர்சனம். என்னுடைய பார்வை மட்டுமே.சினிமா என்ற ஊடகம் செல்லும் அனைத்து தரப்பு மக்களையும் நான் கணக்கில் கொள்வதில்லை.மனதில் பட்டதை அப்படியே சொன்னேன். வாரணம் ஆயிரம் படம் எனக்கு பிடித்தது ஆனால் பெருவாரியானவர்களுக்கு பிடிக்கவில்லை.

    ஒரு படைப்பை அலசி ஆராய்ந்து விமர்சிக்கும் அளவிற்கு நான் தேர்ந்தவன் அல்ல.

    பதிலளிநீக்கு
  28. குடுகுடுப்பை சொன்னது…

    ஒரு படைப்பை அலசி ஆராய்ந்து விமர்சிக்கும் அளவிற்கு நான் தேர்ந்தவன் அல்ல.//

    நான் எழுதியவனின் கோணத்திலிருந்து பேசுகிறேன்.நீங்கள் படித்தவரின் கோணத்திலிருந்து பேசுகிறீர்கள்.ஒரு படைப்பிற்கு இரண்டு கோணங்களுமே அவசியம் சார்.

    பதிலளிநீக்கு
  29. ”பூசாரி அங்கமுத்துவுக்குத்தான் நிறைய அடி.”

    நல்ல பன்ச்.

    பதிலளிநீக்கு
  30. Rajan சொன்னது…
    ”பூசாரி அங்கமுத்துவுக்குத்தான் நிறைய அடி.”

    நல்ல பன்ச்.//

    நன்றி ராஜன்.

    பதிலளிநீக்கு