
---------------------
8.
'கோதாவரி ஆத்தங்கரையில், சேலத்துக்குப் பக்கத்துலே இருக்கற ஊர்ப் பேரிலேயே தர்மபுரின்னு ஒரு புனித ஸ்தலம் இருக்கு.' என்று இரண்டு நாட்கள் கழித்துச் சம்பந்தமே இல்லாமல் ஆரம்பித்தாள் அமிர்தவர்ஷிணி.
கௌதம முனிவர், தெரியாமல் ஒரு பசுவைக் கொன்ற பாவத்தைப் போக்கக் கங்கையே கோதாவரியாகப் பிரவகித்தாள் என்ற புராணக் கதையை அப்போது அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.கௌதம முனிவரின் பாவத்தைக் கழுவியதால் கௌதமி என்ற பெயரே பின்னாளில் கோதாவரியாக மாறியது என்றாள் அமிர்தவர்ஷிணி.
'தர்மபுரியிலே கோதாவரி ஆத்தங்கரையில் இருக்கிற ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் ரொம்ப பிரசித்தி பெற்ற கோவில்.ஆயிரம் வருஷத்துக் கோவில்ன்னு சொல்றாங்க.அங்கே ஒரு ஐம்பது வயசிருக்கிற அம்மா, பத்து வயசிலே இருந்தே தங்கிட்டிருக்காங்க.பெரிசாக் குங்குமப் பொட்டெல்லாம் வெச்சுகிட்டு, எப்பவுமே மஞ்சப் புடவைதான் கட்டிட்டிருப்பாங்க.அவங்களைக் கோதாவரி அம்மான்னுதான் அந்த ஏரியாவிலே இருக்கிறவங்க எல்லாம் கூப்பிடறாங்க.ரொம்ப சக்தி வாய்ஞ்சவங்க.அவங்க கூட நான் ஒரு மூணு மாசம் தங்கியிருந்தேன்' என்றாள் அவள்.
என்னிடம் எதற்கு இதைச் சொல்கிறாள் என்பதைப் போல் நான் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் அமிர்தவர்ஷிணி கோதாவரி அம்மாவின் மஞ்சள் புடவையை அதிகாலையில் இருந்து வெகுநேரம் துவைத்துக் கொண்டிருந்தாள்.
'அமிர்தவர்ஷிணி' என்றார்கள் கோதாவரி அம்மா அவளது அருகில் வந்து நின்று,அவளது பெயரை அம்மா எப்போதுமே முழுமையாகத்தான் கூப்பிடுவார்களாம்.
'இவவளவு நேரமாவா ஒரு புடவையைத் துவைச்சிட்டிருக்கே?' என்று கேட்டார்கள் அம்மா தெலுங்கில்.
'ஆமாம்மா! பாருங்க, உங்க புடவையிலே இருந்த எண்ணைக் கறை போயே போயிடுச்சு!' என்றாள் அமிர்தவர்ஷிணி,முகம் முழுக்க மகிழ்ச்சி பொங்கி வழிய.
பிரம்மாண்டமான அந்த நதியின் மறுபக்கத்தில், அதனுடைய குளுமையில் குளித்து விட்டு சூரியன் அப்போதுதான் உதித்துக் கொண்டிருக்கிறான்.
'புடவையிலே இருக்கிற இத்துனூண்டு எண்ணைக் கறைக்காகவா, இவ்வளவு பெரிய கோதாவரியை ஒரு மணி நேரமாச் செலவு பண்ணிட்டிருந்தே?' என்றார்கள்,அம்மா.
அமிர்தவர்ஷிணி கோதாவரி நதியின் பெருக்கை ஒரு கணம் பார்த்து விட்டுப் பிறகு சொன்னாள்.
'இத்துனூண்டு கறைதான் .ஆனா அது, இவ்வளவு பெரிய கோதாவரியையே என் கண்ணுலிருந்து மறைச்சிடுச்சேம்மா!' என்றாள் அமிர்தவர்ஷிணி.
கோதாவரி அம்மா அவ்வளவு சத்தம் போட்டுச் சிரித்ததை அதுவரை யாருமே பார்த்ததில்லையாம்.
கண்ணில் நீர் வரச் சிரித்த அம்மா, அப்போது சொன்ன வார்த்தைகள்தான் இவை.
'உன்னோடே பிறவியே, முழு ஈடுபாடுன்னா என்னன்னு உன் கூடப் பழகறவங்களுக்குக் காட்டறதுக்குத்தான்' என்ற அம்மா அவளது தலை மேல் கைவைத்து ஆசிர்வதித்துக் கண்களை மூடிய படியே சொன்னார்கள்.
'பெண்ணே,இப்போ சொல்றேன் கேட்டுக்கோ.சுத்தமான உன் மனசுலே, யார் மேலாவது உனக்கு விருப்பம்ன்னு வந்துச்சுன்னா, அந்த அன்பு அவனை முழுக்க,முழுக்கப் புரட்டிப் போட்டுடும்.அதுக்கப்புறம் அவன்,அவனாவே இருக்க மாட்டான். அவன் ஒருத்தனை மாத்திரமில்லே, அவனோட வம்சத்தையே உன்னோட அன்பு வாழ வைக்கும், இந்தக் கோதாவரி மாதிரியே.அந்தப் பாக்கியசாலிக்கும் சேர்த்து இந்த ஆசிர்வாதம்!' என்று சொல்லி விட்டு கோதாவரி அம்மா, நதியின் தண்ணீரைக் கைகளால் அள்ளி அவள் தலை மேல் தெளித்தார்கள்.
அமிர்தவர்ஷிணி இந்தச் சம்பவத்தைச் சொன்னதின் அர்த்தம் எனக்கு இப்போதுதான் புரிந்தது.
இருவரும் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை.
'ஆறே மாசத்துலே செத்துடுவேன்னு திடீர்ன்னு ஒருநாள் டாக்டர்க சொல்றாங்க.இன்னொரு நாள் திடீர்ன்னு நீ வந்து, ஆஜ்மீர் பாபா,கோதாவரி அம்மா பேரை எல்லாம் சொல்லி நீ சாக மாட்டேன்னு சொல்றே.கெமோதெராபின்னு யாருக்குமே நடக்கக் கூடாத கொடுமையான சாபம் ஒரு நாள். அமிர்தவர்ஷிணின்னு யாருக்குமே கிடைக்க முடியாத வரம் இன்னொரு நாள்.யாரோ அவங்க கண்ணையும் கட்டிட்டு,என் கண்ணையும் கட்டிட்டு என் கூட ஃபுட்பால் விளையாடிட்டிருக்காங்க வர்ஷிணி.என்ன,காலே போனதுக்கப்புறம் நான் ஆடற ஃபுட்பால் மேட்ச்' என்றேன் சோர்வாக.
அவள் ஆதரவுடன் எனது கையைப் பற்றிக் கொண்டாள்.
'எதை நம்புறதுன்னே தெரியலே.எவ்வளவுதான் லைட் அடிச்சாலும் ரெண்டடிக்கு மேலே வெளிச்சம் தெரியாத நீளமான இருட்டுக் குகைக்குள்ளே நடந்துட்டிருக்கிற மாதிரி இருக்கு,எனக்கு.' என்றேன் நான்.
அவள் மெல்லச் சிரித்தாள்.
'ஏன் சிரிக்கிறே?'
'குகையோட நீளமே ரெண்டடிதான்.நீ நடக்க நடக்கத்தான் குகையும் நீண்டுட்டே போகும்!'என்றாள் அவள்.
எனக்கு உள்ளுக்குள் ஏதோ சட்டென்று விழித்தாற்போலத் தெரிந்து மனமே லேசாகியது.அவளை இழுத்து எனது மார்போடு சாய்த்துக் கொண்டேன்.அவளது முகத்தை நிமிர்த்திச் சொன்னேன்.
'இப்போ இந்த ரெண்டடி வெளிச்சத்துலே நீ மாத்திரம்தான் தெரியறே,வர்ஷிணி' என்றேன் குரல் கனக்க.
எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள்.
'என்ன தைரியம் இருந்தா செத்துட்டிருக்கறவனை இப்படி லவ் பண்ணுவே?' என்றேன் அவளது முகத்தருகில்.
'நான் லவ் பண்றதே நீ சாகாமே இருக்குறுதுக்குத்தான்,முட்டாளே!' என்றாள் அவள் செல்லமாக.
அவளது உதடுகளில் முதன்முதலாக முத்தமிட்டேன்.
எந்தச் சுவையும் இல்லாமல் இருப்பதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய சுவை என்ற உண்மையை அவளது உதடுகள்தான் எனக்குக் கற்பித்தன.
என்ன கொடுக்கிறோம், என்ன பெறுகிறோம் என்று தெரியாமலேயே மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடக்கும் ஒரே பரிவர்த்தனை.
இதுவரை முத்தமிட்ட.இனிமேல் முத்தமிடப் போகும் கோடான கோடிக் கணக்கான முத்தங்களின் கடலில் எங்கள் முத்தமும் கலந்து, கரைந்தது.
மெல்ல விலகினோம்.
பிரிந்த போதுதான்,சேர்ந்த மாதிரி இருந்த விந்தையான கணத்தில் இருவருமே இருந்தோம்.
அடுத்த நாள் எனக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு அப்பா மதியம் வந்த போது அவரிடம் எங்களது காதலைச் சொன்னேன்.அவரிடம் நான் இதுவரை எதையுமே மறைத்ததில்லை.
சொன்ன போது எந்தச் சலனமுமின்றி அமைதியாகக் கேட்டுக் கொண்டார் அப்பா.
'என்னப்பா சைலன்ட்டா இருக்கீங்க?உங்களுக்குப் பிடிக்கலியா?' என்று கேட்டேன் நான்.
அவர் என்னைக் கண்களின் ஈரத்தினூடே பார்த்தார்.
'வைட் செல் கௌன்ட் ஜாஸ்தி ஆயிட்டதினாலே அடுத்த வாரம் உனக்கு மறுபடியும் கெமோதெராபி ஆரம்பிக்கப் போறாராம் சீஃப் டாக்டர். கீழே என்னைப் பார்த்துட்டுச் சொன்னாரு.மே பி எ லிட்டில் பிட் ரிஸ்கியா இருக்கலாம்ன்னாருப்பா அவரு.'
மீண்டும் அதே இருட்டுக் குகை நீள ஆரம்பித்து விட்டது..
ஆஜ்மிர் பாபா,கோதாவரி அம்மா வெர்சஸ் என்னுடைய லுகேமியா செல்கள்.
அமிர்தவர்ஷிணியின் காதல் வெர்சஸ் எனது தீராத வியாதி.
கொடிது கொடிது காதல் கொடிது, புற்று நோயைக் காட்டிலும்.
(தொடரும்)