செவ்வாய், அக்டோபர் 13, 2009

காதல மலர்ந்த கணங்கள் 5


அமிர்தவர்ஷிணி

5.
'ஆஜ்மீர்லே நான் அட்டன்ட் பண்ணிட்டிருந்த சூஃபி பெரியவர்தான் என்னை இங்கே அனுப்பிச்சு வெச்சிருக்கார்!' என்றாள் அமிர்தவர்ஷிணி.
எனக்குள் சிலீரென்றது.
'அவருக்கு எப்படி வர்ஷிணி,என்னைப் பற்றி..?' என்றேன் வியந்து.
அமிர்தவர்ஷிணி அமைதியாக என்னைப் பார்த்தாள்.
'நடந்ததையும் ,நடந்திட்டிருக்கிறதையும் மட்டும் தெரிஞ்சுக்குறதுக்குத்தான் நம்ம மனசுனாலே முடியும்.மீதி நடக்கப் போறதை,அதுவாக் கற்பனை பண்ணிப் பார்த்துட்டு நம்ம மேலே சுமத்திட்டே இருக்கும்.நாளைக்கு நீ என்ன பார்க்கப் போறேன்னு உன்னோட கண்ணு என்னிக்காவது உங்கிட்டே காட்டி இருக்கா?' என்று கேட்டாள் அவள்.

நான் பொம்மை போல இல்லையென்று தலையாட்டினேன்.

'கண்ணு,காது,மூக்கு,உடம்பு எல்லாமே எப்பவுமே நிகழ்காலத்துலேதான் இருக்கும்.ஆனா மனசு மட்டும் அதிகப் பிரசங்கித் தனமா எதிர்காலத்தைப் பத்தி ஏதாச்சும் தொணதொணத்துகிட்டே இருக்கும்.நாமும் அந்த அதிகப்பிரசங்கி கிட்டே ஏமாந்து ஆடிட்டிருப்போம் இல்லேன்னா ஆடிப் போய் உட்காந்திருப்போம்!' என்றாள் அவள் ஏதோ பிரசன்னம் வந்தவள் போல.

ஏதோ தெலுங்குப் பக்திப் படத்தில் பார்க்கும் அழகிய, அமானுஷ்யச் சிறுமி போலத் தோன்றினாள் அவள்.
அவளை அதிசயமாகப் பார்த்தேன்.பதினேழோ,பதினெட்டு இருக்கும் அவள் வயதுக்கு, அவள் பேசுவது அதிகமாகத் தோன்றியது எனக்கு.அதற்கு அவளே பதில் சொன்னாள்.

'இது நான் சொல்லலே.நான் பார்த்துட்டிருந்த அந்த வயசான முஸ்லீம் யோகி அடிக்கடி இதைச் சொல்லுவார்.' என்றாள் அவள்.

'அவரைத் தெரிஞ்சவங்க எல்லாம் அவரை ஆஜ்மீர் பாபான்னு கூப்பிடுவாங்க.அவருக்கு இப்போ 98 வயசிருக்கும்ன்னு, கூட இருக்கிறவங்க சொல்றாங்க.ஆனா நான் அவரை, உங்களுக்கு உண்மையா என்ன வயசு பாபான்னு கேக்கும் போதெல்லாம் எனக்கு வயசே ஆகமாட்டேங்குதே,தாயே.எப்போதான் எனக்கு வயசாகித் தொலையுமோ தெரியலேம்பாரு!' என்று சொல்லிச் சிரித்தாள் அமிர்தவர்ஷிணி.

இந்த மூன்று மாதத்தில் நான் மனம் லேசாகிச் சிரித்தது அப்போதுதான்.

'உனக்கு அவரு எப்படிப் பழக்கம்?' என்றேன் நான்.
'அஞ்சு வயசுலே என்னோட அப்பா,அம்மாவை ரிஷிகேஷ் கங்கை அடிச்சுட்டுப் போனப்போ, அழுதிட்டிருந்த என்னை ஆதரவா அணைச்சுகிட்டவர் அவருதான்!' என்றாள் அவள்.

என்னை மாதிரிப் புற்று நோயில் சாகப் போகிறவனுக்குத்தான் பகுத்தறிவை விட இந்த மாதிரி அற்புதங்கள் உணர்வுப் பூர்வமாக எவ்வளவு அவசியம் என்று தெரியும்.

அதற்குப் பிறகு ஆஜ்மீர் பாபாவைப் பற்றி அவள் சொன்னதை சுருக்கமாகச் சொல்கிறேன்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆஜ்மீரில் இருக்கும் புகழ் வாய்ந்த தர்கா, ஹஸ்ரத் க்வாஜா மொயினுதீன் சிஷ்டி என்பதாகும்.'ஏழைகளிடம் அனபைப் பொழிபவர்' என்று அழைக்கப் படும் அந்த பன்னிரண்டாம் நூற்றாண்டு மஹானின் பிரசித்தி பெற்ற சமாதி, முஸ்லீமகள்,இந்துக்கள் அனைவருக்குமே புனிதத் தலமாகக் கருதப் படுகிறது.அக்பர் சக்ரவர்த்தியே தனது தலை நகரிலிருந்து வாரக் கணக்காகப் பாத யாத்திரை புரிந்து வழிபட்ட அந்த மஹா ஞானியின் சீடர்களின் வழி வந்தவர் ஆஜ்மீர் பாபா என்றாள் அமிர்தவர்ஷிணி.

திடீர் திடீர் என்று பாபாவிடமிருந்து அழைப்பு வந்தால் அமிர்தவர்ஷிணி அவரது எளிய இருப்பிடத்துக்குச் சென்று விடுவாள்.

அமிர்தவர்ஷிணியை மட்டுமல்ல, பாபா எல்லாப் பெண்களையுமே தாயே என்றுதான் கூப்பிடுவார்.தினமும் ஷரிஃப் தர்கா என்றழைக்கப் படும் தர்காவுக்கு, அவளை அழைத்துச் சென்று அதனுடைய பளிங்குப் படிக்கட்டுக்களில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பாபா திடீரென மூன்று நாட்களுக்கு முன்னால் 'நீ மெட்ராஸுக்குப் போ!' என்றாராம்.

'ஏன் பாபா திடீர்ன்னு மெட்ராஸ்?' என்று அமிர்தவர்ஷிணி கேட்டதற்கு 'அவன் உன்னைக் கூப்பிடறான்' என்று மட்டும் சொல்லி விட்டுத் தர்காவின் தளத்திலிருந்து பாபா எழுவதற்கும் அமிர்தவர்ஷிணிக்கு சேஷாத்திரி அங்கிளின் ஃஃபோன் வருவதற்கும் சரியாக இருந்தது என்றாள் அவள்.

ஒரு கணம் எனது வாழ்க்கை மௌனத்தால் நிரம்பியது.

'ஆஜ்மீர் பாபாவுடன் நான் ஃபோனில் பேச முடியுமா?' என்று பிறகு அவளிடம் கேட்டேன்.
முடியாது எனத் தலையாட்டினாள் அவள்.
'ஏன்,ஃபோனில் பாபா பேசமாட்டாரா?' என்றேன்.
'அவன் உன்னைக் கூப்பிடறான்னு என்கிட்டே பேசினதுதான் அவரு கடைசியாப் பேசினதே!'என்றாள் அவள் அமைதியாக.

நான் புரியாமல் அவளையே பார்த்தேன்.

'நான் சென்னைக்கு ரயில்லே வந்திட்டிருக்கும்போதே, பாபா அவரோட வீட்டுலே சமாதி ஆகியிருக்காரு.'என்றாள் அவள்.
முகத்தில் எந்த உணர்வுமே இல்லாமல் சாந்தமாக இதனைச் சொன்னாள்,அமிர்தவர்ஷிணி.
'அவர் இறந்ததை இவ்வளவு கேஷுவலா எடுத்துட்டுச் சொல்றே?' என்றேன் நான் வியந்து.
'அவர் இறந்தார்ன்னு நான் சொல்லலியே.சமாதி அடைஞ்சார்ன்னுதானே சொன்னேன்!' என்றாள் அவள் அதே அமைதியுடன்.

பிறகு அவள் ஏற்கனவே கொண்டு வந்திருந்த ஒரு பச்சை நிறச் சணல் பையிலிருந்து ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தை எடுத்தாள்.நீண்ட வருடங்களாகப் பயன் படுத்தப் பட்டுக் கிட்டத்தட்ட பழுப்பு நிறத்தில் இருந்தன அந்த நோட்டின் தாள்கள்.

'இது பாபா தன் கைப்பட எழுதி, ஓதின திருக்குரான்.நான் இங்கே கிளம்பி வர்ரப்போ, இதை இனி நீ வெச்சுக்கோ தாயேன்னு எனக்குப் பரிசாக் குடுத்தாரு.அதை உன் தலை மாட்டுலே வெக்கிறேன்' என்றவள் அந்த நோட்டுப் புத்தகத்தை எனது கட்டில் தலைமாட்டில் சிரத்தையாக வைத்தாள்.
'தேங்க்ஸ்!' என்றேன் நான் என்ன சொல்வதென்று தெரியாமல்.
அவள்
என்னைப் பார்த்து வெறுமனே புன்னகைத்தாள்.பிறகு அதே சணல் பையிலிருந்து ஒரு சிறிய மூடி போட்ட கிண்ணத்தை எடுத்து மூடியைத் திறந்து என்னருகில் வந்தாள்.
'இதைக் குடி.ஒரு மடங்குதான்' என்றாள் அமிர்தவர்ஷிணி.
'இது என்ன?' என்றேன் நான்.
'பயப்படாதே.வெறும் துளசிச்சாறுதான்.சாமியைக் கும்பிட்டு எடுத்துட்டு வந்திருக்கேன்' என்றாள்,அவள்.
முதலில் அவளது அழகிய,அமைதியான முகத்தைப் பருகி விட்டுப், பின் அவள் கொடுத்த துளசிச் சாற்றை ஒரே மடங்கில் குடித்தேன்.

'துளசி எந்த விஷத்தையும் முறிக்கும்' என்றாள் அவள் தீர்க்கமாக.
'நீ குடுத்தா!' என்றேன் நான்.

அவள் அதற்கும் வெறுமனே முறுவலித்தாள்.அந்த நேரத்தில் அவளது புன்னகையை விடப் பெரிய ப்ரிஸ்க்ரிப்ஷன் எதுவுமில்லை என்று எனக்குத் தோன்றியது.

ஆனால் அந்தத் துளசி சாற்றைக் குடித்த சில நொடிகளில் எனது வயிற்றைப் பிரட்டி அப்படி ஒரு குமட்டல் எடுத்தது எனக்கு.மீண்டும் வாந்தி என்றதும் எனக்குப் பயம்தான் உச்சிக்கேறியது.

'வாந்தி வர்ர மாதிரி இருக்கா?'என்றாள் அவள்.
ஆம் என்று என்னால் தலையைத்தான் அசைக்க முடிந்தது.
'எடு' என்று அவள் நிதானமாகத் தனது கைகளை நீட்டினாள்.நான் அவளைத் தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்.
'எடு,சரவணா' என்றாள் அவள்,தீர்க்கமாக.

நான் அவளது கைகளில் ரத்தமாக வாந்தி எடுத்த போதுதான்,சிவப்பு சிவப்புடன் சேர்வது எவ்வளவு அழகாக இருக்கிறது என யோசித்தேன்.
அவள் அமைதியாக பாத்ரூமுக்குச் சென்று கைகளைக் கழுவி விட்டுச் சொன்னாள்.

'இதுவரைக்கும் நீ சாப்பிட்ட சாப்பாட்டைத்தான் வாந்தி எடுத்திருப்பே.இப்போ எடுத்தது உன் உடம்பிலே தங்கி இருந்த விஷம்.துளசி எல்லாத்தையும் வெளியே கொண்டு வந்துடுச்சு!' என்றாள் அமிர்தவர்ஷிணி அமைதியாக.

எனக்குள் காதல் மலர்ந்த கணம் அதுதான்.

அவளைக் காதலிக்கத் தொடங்கினேன்,எல்லாக் காதலையும் போல இது நிறைவேறுமா என்று தெரியாமலேயே.

( தொடரும்....)

(ஹஸ்ரத் மொயினுதின் சிஷ்டி போன்ற சரித்திர மகா புருஷர்களைத் தவிர இந்தக் கதையில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் கற்பனையே .நிகழ்வுகளும் புனைவுகளே.யாரையும் எதனையும் குறிப்பிடுவன அல்ல.)

26 கருத்துகள்:

  1. \\மீதி நடக்கப் போறதை,அதுவாக் கற்பனை பண்ணிப் பார்த்துட்டு நம்ம மேலே சுமத்திட்டே இருக்கும்.

    மனசு மட்டும் அதிகப் பிரசங்கித் தனமா எதிர்காலத்தைப் பத்தி ஏதாச்சும் தொணதொணத்துகிட்டே இருக்கும்.நாமும் அந்த அதிகப்பிரசங்கி கிட்டே ஏமாந்து ஆடிட்டிருப்போம்\\

    மனசை உற்றுக் கவனித்து சரியாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்...
    தங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. நல்லாயிருக்கு. கதையும், டெம்ப்ளேட்டும்...தொடருங்க. ஓட்டு போட்டுவிட்டேன்...

    பதிலளிநீக்கு
  3. //இதுவரைக்கும் நீ சாப்பிட்ட சாப்பாட்டைத்தான் வாந்தி எடுத்திருப்பே.இப்போ எடுத்தது உன் உடம்பிலே தங்கி இருந்த விஷம்.துளசி எல்லாத்தையும் வெளியே கொண்டு வந்துடுச்சு!' என்றாள் அமிர்தவர்ஷிணி அமைதியாக.//

    அப்பாடி , இப்பத்த்தான் நிம்மதியா இருக்கு.

    பதிலளிநீக்கு
  4. ம்ம்ம்... சொல்ல தெரியவில்லை . இதுவரை படித்ததில் இந்த பகுதி கொஞ்சம் மனதில் ஏதொ சொல்ல வைக்கின்றது... இஸ்லாம், இந்து சமய ஒற்றுமையும் சொல்லி வருவது அருமை.. கற்றுகொள்ள நல்ல விடயம் அதிகமாக இருக்கு.. நன்றி சார்

    பதிலளிநீக்கு
  5. நிகழ்காலத்தில்... சொன்னது… //

    மனசை உற்றுக் கவனித்து சரியாக எழுத்தில் கொண்டு வந்திருக்கிறீர்கள்...
    தங்களிடம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது..

    வாழ்த்துக்கள்//

    உண்மையில் நான் எதையும் யோசித்து எழுதவில்லை,சிவா.எழுதியதற்குப் பின்னரே நானே யோசிக்கிறேன்.

    எழுதி முடித்தவுடன் உங்கள் பின்னூட்டம் வந்தது தெம்பாக இருந்தது.மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  6. செந்தழல் ரவி சொன்னது…
    நல்லாயிருக்கு. கதையும், டெம்ப்ளேட்டும்...தொடருங்க. ஓட்டு போட்டுவிட்டேன்...

    கதைதான் என்னுடையது.டெம்ப்ளேட்,ஹாலிவுட் பாலாவினுடையது.
    மகிழ்ச்சியும்,நன்றியும் ரவி.

    பதிலளிநீக்கு
  7. சின்ன அம்மிணி சொன்னது…
    //இதுவரைக்கும் நீ சாப்பிட்ட சாப்பாட்டைத்தான் வாந்தி எடுத்திருப்பே.இப்போ எடுத்தது உன் உடம்பிலே தங்கி இருந்த விஷம்.துளசி எல்லாத்தையும் வெளியே கொண்டு வந்துடுச்சு!' என்றாள் அமிர்தவர்ஷிணி அமைதியாக.//

    அப்பாடி , இப்பத்த்தான் நிம்மதியா இருக்கு.//

    எனக்கும்தான்,மேடம்! வருகைக்கும்,நிம்மதிக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  8. ஆ.ஞானசேகரன் சொன்னது… //

    இஸ்லாம், இந்து சமய ஒற்றுமையும் சொல்லி வருவது அருமை.. கற்றுகொள்ள நல்ல விடயம் அதிகமாக இருக்கு.. நன்றி சார்//

    மதங்கள் எல்லாம் நமக்குத்தான்.மஹான்களுக்கு இல்லை,ஞானசேகரன்.

    பதிலளிநீக்கு
  9. தங்களின் கன்னிகா'வை முதல் பகுதியில் இருந்து ஆறாம் பகுதிவரை ஒரே மூச்சாய் படித்துவிட்டு ஏழாம் பகுதியை தேடிக்கொண்டிருக்கிறேன்!!

    பதிலளிநீக்கு
  10. //சின்ன அம்மிணி சொன்னது… //இதுவரைக்கும் நீ சாப்பிட்ட சாப்பாட்டைத்தான் வாந்தி எடுத்திருப்பே.இப்போ எடுத்தது உன் உடம்பிலே தங்கி இருந்த விஷம்.துளசி எல்லாத்தையும் வெளியே கொண்டு வந்துடுச்சு!' என்றாள் அமிர்தவர்ஷிணி அமைதியாக.//

    அப்பாடி , இப்பத்த்தான் நிம்மதியா இருக்கு.

    //


    சார் சின்ன அம்மிணி அக்கா இன்று அவர்கள் இடுகையில் உங்களுக்கு விருதும் குடுத்து கேன்ஸரில் இருந்து குணமாக்கிருங்கன்னு வேண்டுகோளும் வச்சுருக்காங்க.பார்த்தீங்களா??

    பதிலளிநீக்கு
  11. //மதங்கள் எல்லாம் நமக்குத்தான்.மஹான்களுக்கு இல்லை,ஞானசேகரன் //

    தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னனிடம் இடம் பெற்று சமாதி அடைந்த நாகூர் ஆண்டகை. சுல்தானிடம் இடம் பெற்று சமாதி அடைந்த ராகவேந்திரசாமிகள்.... எத்தனை எத்தனை வரலாற்று உதாரணம்.

    கொஞ்சம் யோசித்தால் நமக்கும்கூட இல்லைசார்.

    பதிலளிநீக்கு
  12. //நாமும் அந்த அதிகப்பிரசங்கி கிட்டே ஏமாந்து ஆடிட்டிருப்போம் இல்லேன்னா ஆடிப் போய் உட்காந்திருப்போம்//

    உண்மைதான் ஐயா! கதையை இதுபோல் வாக்கியங்கள்தான் சுவாரசியமாக கொண்டுசெல்ல உதவுகிறது... என்ன தலைவா திடீர்னு கதையில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் கற்பனையே ஒரு டிஸ்கி போட்டுட்டீங்க? என்ன ஏதாவது பிரச்சனையா?

    பதிலளிநீக்கு
  13. இரா.சிவக்குமரன் சொன்னது…
    தங்களின் கன்னிகா'வை முதல் பகுதியில் இருந்து ஆறாம் பகுதிவரை ஒரே மூச்சாய் படித்துவிட்டு ஏழாம் பகுதியை தேடிக்கொண்டிருக்கிறேன்!!//

    உங்கள் ரசனைக்கும் ஆர்வத்துக்கும் நன்றி,சிவக்குமரன்.ஆனால் கன்னிகாவை வேலைப் பளுவின் காரண்மாக என்னால் தொடர்ந்து எழுதமுடியவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
    அதற்குப் பதிலாக இப்போது நான் எழுதும் அமிர்தவர்ஷிணியைப் படித்து உங்கள் மேலான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. எம்.எம்.அப்துல்லா சொன்னது… //

    சார் சின்ன அம்மிணி அக்கா இன்று அவர்கள் இடுகையில் உங்களுக்கு விருதும் குடுத்து கேன்ஸரில் இருந்து குணமாக்கிருங்கன்னு வேண்டுகோளும் வச்சுருக்காங்க.பார்த்தீங்களா??//

    இப்போதுதான் படித்தேன்,அப்துல்லா.உங்கள் இருவருக்குமே என் நன்றி.

    பதிலளிநீக்கு
  15. எம்.எம்.அப்துல்லா சொன்னது…
    //மதங்கள் எல்லாம் நமக்குத்தான்.மஹான்களுக்கு இல்லை,ஞானசேகரன் //

    தஞ்சையை ஆண்ட மராத்திய மன்னனிடம் இடம் பெற்று சமாதி அடைந்த நாகூர் ஆண்டகை. சுல்தானிடம் இடம் பெற்று சமாதி அடைந்த ராகவேந்திரசாமிகள்.... எத்தனை எத்தனை வரலாற்று உதாரணம்.

    கொஞ்சம் யோசித்தால் நமக்கும்கூட இல்லைசார்.//

    ஆஹா.அற்புதமான தகவல்கள்,அப்துல்லா.

    இத்தனை மஹான்கள் தோன்றிய நாட்டில் மதக் கலவரங்களைத் தூண்டி விட்டு ஆதாயம் பார்ப்பவர்களும்,அதற்குத் துணை போகிறவர்களும் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனையான விஷயம்.

    பதிலளிநீக்கு
  16. கலையரசன் சொன்னது…

    //நாமும் அந்த அதிகப்பிரசங்கி கிட்டே ஏமாந்து ஆடிட்டிருப்போம் இல்லேன்னா ஆடிப் போய் உட்காந்திருப்போம்//

    உண்மைதான் ஐயா! கதையை இதுபோல் வாக்கியங்கள்தான் சுவாரசியமாக கொண்டுசெல்ல உதவுகிறது... என்ன தலைவா திடீர்னு கதையில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் கற்பனையே ஒரு டிஸ்கி போட்டுட்டீங்க? என்ன ஏதாவது பிரச்சனையா?//

    பிரச்சினைக்கு இதில் ஒன்றும் இடமில்லை,கலை.
    கேன்சர்,அதனைக் குணப்படுத்தும் ஆஜ்மீர் பாபா என்று சென்சிடிவான விஷயங்களை சரித்திர மஹா புருஷர்களோடு சேர்ந்து எழுதும் போது எது உண்மை,எது கற்பனை என்பதைத் தெளிவு படுத்துவது எழுதுபவர்களின் கடமையாகும்.

    ஆங்கில நாவல்களில் எல்லாம் நீங்கள் சகஜமாகப் பார்க்கும் வரிகள்தான் இவை.

    ரசனைக்கு மகிழ்ச்சி,கலை.

    பதிலளிநீக்கு
  17. ஐயா,
    மகிழ்ச்சியான திருப்பம் தான்.
    தாயில்லா பிள்ளைக்கு தாயாய் உற்ற துனையாய் அமிர்தவர்ஷினி வந்தாள்.பாபாவை பற்றி அறிந்து கொண்டதில் மட்டற்ற மகிழ்ச்சி.பாபா தான் ஓதிய குரானின் கைப்பிரதியை சரவணனுக்கு அனுப்பியதில்
    எங்களுக்கு மனம் குளிர்ந்தது.
    சரவணன் ஆசிபெற்றவனானான்.

    வார்த்தை ஜாலங்களும் அருமை.
    ஆபீஸில் வேலை அதிகம் உள்ளதால் நிறைய முறை படிக்க முடியவில்லை

    பதிலளிநீக்கு
  18. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது… //

    வார்த்தை ஜாலங்களும் அருமை.
    ஆபீஸில் வேலை அதிகம் உள்ளதால் நிறைய முறை படிக்க முடியவில்லை//

    மகிழ்ச்சி,கார்த்திகேயன்.இரவு முடிந்தால் ஜி டாக்கில் பேசுவோம்.

    பதிலளிநீக்கு
  19. கதை மிகஅருமையாக சென்று கொண்டிருக்கிறது..

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  20. தீப்பெட்டி சொன்னது…
    கதை மிகஅருமையாக சென்று கொண்டிருக்கிறது..

    இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்..//

    நன்றியும்,மகிழ்ச்சியும் நண்பரே.
    தங்களுக்கும்,தங்கள் குடும்பத்தாருக்கும் எனது இனிய தீபாவளி வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  21. சார் நல்லா போயிட்டு இருக்கு...
    அஜ்மீர் தர்காவை பற்றிய தகவல்கள் புதுசு..

    பதிலளிநீக்கு
  22. வினோத்கெளதம் சொன்னது…
    சார் நல்லா போயிட்டு இருக்கு...
    அஜ்மீர் தர்காவை பற்றிய தகவல்கள் புதுசு..

    எனக்கும்தான்,வினோத்.
    உங்களுடன்தான் நானுமே இந்தக் கதையில் பயணிக்கிறேன்.
    மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  23. தங்களது தத்துவப் புரிதலும் ஆன்மிகத் தேடலும் ஒருசேர தங்கள் எழுத்துக்களில் பிரதிபலிக்கிறது. இந்த அத்தியாயத்தின் முடிவில், சரவணனுக்குள் காதல் மலர்ந்த கணங்களால் அடுத்து என்ன நடக்குமோ என்ற எதிர்பார்ப்பு ஏற்படும் அதே நேரம்...இன்னும் சில நாட்களில் வெற்றுடலாகப் போகும் சரவணனுக்கு, பாபாவின் தெய்வீக அருளால் பிணியின் தீவிரம் குணமடைந்து விடுமோ என்ற கேள்வியும் எழுகிறது.
    கதைக்கு நிதர்னமான முடிவா அல்லது 'தெய்வாதீன' முடிவா என்பதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்!!

    சூப்பர், அசத்தல், அருமை...இப்படியெல்லாம் உங்களை பரவசத்துடன் பாராட்டி பாராட்டி போர் அடித்து விட்டது சார்...!

    பதிலளிநீக்கு
  24. பிரேம்குமார் அசோகன் சொன்னது…

    சூப்பர், அசத்தல், அருமை...இப்படியெல்லாம் உங்களை பரவசத்துடன் பாராட்டி பாராட்டி போர் அடித்து விட்டது சார்...!///

    ஆனால் உங்கள் அன்பு எனக்குச் சலிக்கவில்லை,ப்ரேம்.

    உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தார்,நண்பர்கள் அனைவருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளித் திருநாள் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  25. அன்புக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி சார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபஒளித் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  26. //
    'நடந்ததையும் ,நடந்திட்டிருக்கிறதையும் மட்டும் தெரிஞ்சுக்குறதுக்குத்தான் நம்ம மனசுனாலே முடியும்.மீதி நடக்கப் போறதை,அதுவாக் கற்பனை பண்ணிப் பார்த்துட்டு நம்ம மேலே சுமத்திட்டே இருக்கும்.நாளைக்கு நீ என்ன பார்க்கப் போறேன்னு உன்னோட கண்ணு என்னிக்காவது உங்கிட்டே காட்டி இருக்கா?'
    //
    உண்மைதான். தத்துவ முத்துகளை அள்ளி வீசுகிறீர்கள்

    பதிலளிநீக்கு