புதன், அக்டோபர் 28, 2009

காதல மலரும் கணங்கள் 8

அமிர்தவர்ஷினி
---------------------
8.
'கோதாவரி ஆத்தங்கரையில், சேலத்துக்குப் பக்கத்துலே இருக்கற ஊர்ப் பேரிலேயே தர்மபுரின்னு ஒரு புனித ஸ்தலம் இருக்கு.' என்று இரண்டு நாட்கள் கழித்துச் சம்பந்தமே இல்லாமல் ஆரம்பித்தாள் அமிர்தவர்ஷிணி.

கௌதம முனிவர், தெரியாமல் ஒரு பசுவைக் கொன்ற பாவத்தைப் போக்கக் கங்கையே கோதாவரியாகப் பிரவகித்தாள் என்ற புராணக் கதையை அப்போது அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.கௌதம முனிவரின் பாவத்தைக் கழுவியதால் கௌதமி என்ற பெயரே பின்னாளில் கோதாவரியாக மாறியது என்றாள் அமிர்தவர்ஷிணி.
'தர்மபுரியிலே கோதாவரி ஆத்தங்கரையில் இருக்கிற ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் ரொம்ப பிரசித்தி பெற்ற கோவில்.ஆயிரம் வருஷத்துக் கோவில்ன்னு சொல்றாங்க.அங்கே ஒரு ஐம்பது வயசிருக்கிற அம்மா, பத்து வயசிலே இருந்தே தங்கிட்டிருக்காங்க.பெரிசாக் குங்குமப் பொட்டெல்லாம் வெச்சுகிட்டு, எப்பவுமே மஞ்சப் புடவைதான் கட்டிட்டிருப்பாங்க.அவங்களைக் கோதாவரி அம்மான்னுதான் அந்த ஏரியாவிலே இருக்கிறவங்க எல்லாம் கூப்பிடறாங்க.ரொம்ப சக்தி வாய்ஞ்சவங்க.அவங்க கூட நான் ஒரு மூணு மாசம் தங்கியிருந்தேன்' என்றாள் அவள்.
என்னிடம் எதற்கு இதைச் சொல்கிறாள் என்பதைப் போல் நான் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் அமிர்தவர்ஷிணி கோதாவரி அம்மாவின் மஞ்சள் புடவையை அதிகாலையில் இருந்து வெகுநேரம் துவைத்துக் கொண்டிருந்தாள்.
'அமிர்தவர்ஷிணி' என்றார்கள் கோதாவரி அம்மா அவளது அருகில் வந்து நின்று,அவளது பெயரை அம்மா எப்போதுமே முழுமையாகத்தான் கூப்பிடுவார்களாம்.
'இவவளவு நேரமாவா ஒரு புடவையைத் துவைச்சிட்டிருக்கே?' என்று கேட்டார்கள் அம்மா தெலுங்கில்.
'ஆமாம்மா! பாருங்க, உங்க புடவையிலே இருந்த எண்ணைக் கறை போயே போயிடுச்சு!' என்றாள் அமிர்தவர்ஷிணி,முகம் முழுக்க மகிழ்ச்சி பொங்கி வழிய.
பிரம்மாண்டமான அந்த நதியின் மறுபக்கத்தில், அதனுடைய குளுமையில் குளித்து விட்டு சூரியன் அப்போதுதான் உதித்துக் கொண்டிருக்கிறான்.

'புடவையிலே இருக்கிற இத்துனூண்டு எண்ணைக் கறைக்காகவா, இவ்வளவு பெரிய கோதாவரியை ஒரு மணி நேரமாச் செலவு பண்ணிட்டிருந்தே?' என்றார்கள்,அம்மா.
அமிர்தவர்ஷிணி கோதாவரி நதியின் பெருக்கை ஒரு கணம் பார்த்து விட்டுப் பிறகு சொன்னாள்.
'இத்துனூண்டு கறைதான் .ஆனா அது, இவ்வளவு பெரிய கோதாவரியையே என் கண்ணுலிருந்து மறைச்சிடுச்சேம்மா!' என்றாள் அமிர்தவர்ஷிணி.

கோதாவரி அம்மா அவ்வளவு சத்தம் போட்டுச் சிரித்ததை அதுவரை யாருமே பார்த்ததில்லையாம்.
கண்ணில் நீர் வரச் சிரித்த அம்மா, அப்போது சொன்ன வார்த்தைகள்தான் இவை.
'உன்னோடே பிறவியே, முழு ஈடுபாடுன்னா என்னன்னு உன் கூடப் பழகறவங்களுக்குக் காட்டறதுக்குத்தான்' என்ற அம்மா அவளது தலை மேல் கைவைத்து ஆசிர்வதித்துக் கண்களை மூடிய படியே சொன்னார்கள்.
'பெண்ணே,இப்போ சொல்றேன் கேட்டுக்கோ.சுத்தமான உன் மனசுலே, யார் மேலாவது உனக்கு விருப்பம்ன்னு வந்துச்சுன்னா, அந்த அன்பு அவனை முழுக்க,முழுக்கப் புரட்டிப் போட்டுடும்.அதுக்கப்புறம் அவன்,அவனாவே இருக்க மாட்டான். அவன் ஒருத்தனை மாத்திரமில்லே, அவனோட வம்சத்தையே உன்னோட அன்பு வாழ வைக்கும், இந்தக் கோதாவரி மாதிரியே.அந்தப் பாக்கியசாலிக்கும் சேர்த்து இந்த ஆசிர்வாதம்!' என்று சொல்லி விட்டு கோதாவரி அம்மா, நதியின் தண்ணீரைக் கைகளால் அள்ளி அவள் தலை மேல் தெளித்தார்கள்.
அமிர்தவர்ஷிணி இந்தச் சம்பவத்தைச் சொன்னதின் அர்த்தம் எனக்கு இப்போதுதான் புரிந்தது.

இருவரும் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை.
'ஆறே மாசத்துலே செத்துடுவேன்னு திடீர்ன்னு ஒருநாள் டாக்டர்க சொல்றாங்க.இன்னொரு நாள் திடீர்ன்னு நீ வந்து, ஆஜ்மீர் பாபா,கோதாவரி அம்மா பேரை எல்லாம் சொல்லி நீ சாக மாட்டேன்னு சொல்றே.கெமோதெராபின்னு யாருக்குமே நடக்கக் கூடாத கொடுமையான சாபம் ஒரு நாள். அமிர்தவர்ஷிணின்னு யாருக்குமே கிடைக்க முடியாத வரம் இன்னொரு நாள்.யாரோ அவங்க கண்ணையும் கட்டிட்டு,என் கண்ணையும் கட்டிட்டு என் கூட ஃபுட்பால் விளையாடிட்டிருக்காங்க வர்ஷிணி.என்ன,காலே போனதுக்கப்புறம் நான் ஆடற ஃபுட்பால் மேட்ச்' என்றேன் சோர்வாக.

அவள் ஆதரவுடன் எனது கையைப் பற்றிக் கொண்டாள்.

'எதை நம்புறதுன்னே தெரியலே.எவ்வளவுதான் லைட் அடிச்சாலும் ரெண்டடிக்கு மேலே வெளிச்சம் தெரியாத நீளமான இருட்டுக் குகைக்குள்ளே நடந்துட்டிருக்கிற மாதிரி இருக்கு,எனக்கு.' என்றேன் நான்.
அவள் மெல்லச் சிரித்தாள்.
'ஏன் சிரிக்கிறே?'
'குகையோட நீளமே ரெண்டடிதான்.நீ நடக்க நடக்கத்தான் குகையும் நீண்டுட்டே போகும்!'என்றாள் அவள்.
எனக்கு உள்ளுக்குள் ஏதோ சட்டென்று விழித்தாற்போலத் தெரிந்து மனமே லேசாகியது.அவளை இழுத்து எனது மார்போடு சாய்த்துக் கொண்டேன்.அவளது முகத்தை நிமிர்த்திச் சொன்னேன்.
'இப்போ இந்த ரெண்டடி வெளிச்சத்துலே நீ மாத்திரம்தான் தெரியறே,வர்ஷிணி' என்றேன் குரல் கனக்க.
எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள்.

'என்ன தைரியம் இருந்தா செத்துட்டிருக்கறவனை இப்படி லவ் பண்ணுவே?' என்றேன் அவளது முகத்தருகில்.
'நான் லவ் பண்றதே நீ சாகாமே இருக்குறுதுக்குத்தான்,முட்டாளே!' என்றாள் அவள் செல்லமாக.
அவளது உதடுகளில் முதன்முதலாக முத்தமிட்டேன்.
எந்தச் சுவையும் இல்லாமல் இருப்பதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய சுவை என்ற உண்மையை அவளது உதடுகள்தான் எனக்குக் கற்பித்தன.
என்ன கொடுக்கிறோம், என்ன பெறுகிறோம் என்று தெரியாமலேயே மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடக்கும் ஒரே பரிவர்த்தனை.
இதுவரை முத்தமிட்ட.இனிமேல் முத்தமிடப் போகும் கோடான கோடிக் கணக்கான முத்தங்களின் கடலில் எங்கள் முத்தமும் கலந்து, கரைந்தது.
மெல்ல விலகினோம்.
பிரிந்த போதுதான்,சேர்ந்த மாதிரி இருந்த விந்தையான கணத்தில் இருவருமே இருந்தோம்.

அடுத்த நாள் எனக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு அப்பா மதியம் வந்த போது அவரிடம் எங்களது காதலைச் சொன்னேன்.அவரிடம் நான் இதுவரை எதையுமே மறைத்ததில்லை.
சொன்ன போது எந்தச் சலனமுமின்றி அமைதியாகக் கேட்டுக் கொண்டார் அப்பா.

'என்னப்பா சைலன்ட்டா இருக்கீங்க?உங்களுக்குப் பிடிக்கலியா?' என்று கேட்டேன் நான்.
அவர் என்னைக் கண்களின் ஈரத்தினூடே பார்த்தார்.

'வைட் செல் கௌன்ட் ஜாஸ்தி ஆயிட்டதினாலே அடுத்த வாரம் உனக்கு மறுபடியும் கெமோதெராபி ஆரம்பிக்கப் போறாராம் சீஃப் டாக்டர். கீழே என்னைப் பார்த்துட்டுச் சொன்னாரு.மே பி எ லிட்டில் பிட் ரிஸ்கியா இருக்கலாம்ன்னாருப்பா அவரு.'
மீண்டும் அதே இருட்டுக் குகை நீள ஆரம்பித்து விட்டது..

ஆஜ்மிர் பாபா,கோதாவரி அம்மா வெர்சஸ் என்னுடைய லுகேமியா செல்கள்.

அமிர்தவர்ஷிணியின் காதல் வெர்சஸ் எனது தீராத வியாதி.

கொடிது கொடிது காதல் கொடிது, புற்று நோயைக் காட்டிலும்.

(தொடரும்)

36 கருத்துகள்:

 1. //கௌதம முனிவர், தெரியாமல் ஒரு பசுவைக் கொன்ற பாவத்தைப் போக்கக் கங்கையே கோதாவரியாகப் பிரவகித்தாள் என்ற புராணக் கதையை அப்போது அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.கௌதம முனிவரின் பாவத்தைக் கழுவியதால் கௌதமி என்ற பெயரே பின்னாளில் கோதாவரியாக மாறியது என்றாள் அமிர்தவர்ஷிணி.//

  உங்கள் ஆன்மிகத் தேடல் பெரிது. அனைத்தையும் தகவல்களாகப் பகிராமல், பலாச் சுளையை தேனில் தோய்த்துத் தருவது போல, அழகான கதையின் ஊடாக அதைத் தெரிவிக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 2. ஐயா,
  மிகவும் அழகான நடையால் எங்களை கட்டிப்போட்டு விட்டீர்கள்.

  உன்னோடே பிறவியே, முழு ஈடுபாடுன்னா என்னன்னு உன் கூடப் பழகறவங்களுக்குக் காட்டறதுக்குத்தான்'//

  பொன்னான வரிகள்.
  வாழ்க அதுபோன்ற பிறவிகள்.

  சுத்தமான உன் மனசுலே, யார் மேலாவது உனக்கு விருப்பம்ன்னு வந்துச்சுன்னா, அந்த அன்பு அவனை முழுக்க,முழுக்கப் புரட்டிப் போட்டுடும்.அதுக்கப்புறம் அவன்,அவனாவே இருக்க மாட்டான். அவன் ஒருத்தனை மாத்திரமில்லே, அவனோட வம்சத்தையே உன்னோட அன்பு வாழ வைக்கும்,//

  தெய்வ சங்கல்ப்பம்.
  மகான்களின் ஆசிர்வாதம்.

  'குகையோட நீளமே ரெண்டடிதான்.நீ நடக்க நடக்கத்தான் குகையும் நீண்டுட்டே போகும்!'என்றாள் அவள்.//

  ஆமாம் ஐயா பயப்பட பயப்படத்தான் பிரச்சனை பூதாகரமாக உருவெடுக்கும்

  எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள்.//
  இது தானோ? எழுத்து போதை என்பது!எங்களை சொக்க வைப்பது.

  எந்தச் சுவையும் இல்லாமல் இருப்பதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய சுவை என்ற உண்மையை அவளது உதடுகள்தான் எனக்குக் கற்பித்தன.//

  ஐயா,
  தேனை விடவும் போதை தருவது இதழ்கள் (இதழ் + கள்)மிகவும் ரசித்த வரிகள்

  பிரிந்த போதுதான்,சேர்ந்த மாதிரி இருந்த விந்தையான கணத்தில் இருவருமே இருந்தோம்.//

  காதலில் பிரிவும் வேண்டும் ,அழகான வரிகள் ஐயா.


  ஆஜ்மிர் பாபா,கோதாவரி அம்மா வெர்சஸ் என்னுடைய லுகேமியா செல்கள்.//

  ஐயா இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?

  இறைசக்தி மீது அயராத நம்பிக்கை உள்ளது.

  அமிர்தவர்ஷிணியின் காதல் வெர்சஸ் எனது தீராத வியாதி.//
  அமிர்தவர்ஷிணி வெல்வாள்

  கொடிது கொடிது காதல் கொடிது, புற்று நோயைக் காட்டிலும். //

  ஆமாம் ஐயா,
  இரண்டுமே அனுஅனுவாய் கொல்லும் என்றாலும்
  முன்னது மனதையும் குலைக்கும்

  அடுத்த பாகமும் இனிதே வரட்டும் ஐயா.
  நன்றிகள்

  பதிலளிநீக்கு
 3. //எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள் //

  சார் நானேதான் சொல்லுறேன்...எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் இந்தத் தொடரை தொடருங்கள். எனக்கு இப்போது முடிவின் பரிதவிப்புபோய் உங்களின் நடை வசீகரம் கட்டிப்போடுகின்றது.

  பதிலளிநீக்கு
 4. //கௌதம முனிவர், தெரியாமல் ஒரு பசுவைக் கொன்ற பாவத்தைப் போக்கக் கங்கையே கோதாவரியாகப் பிரவகித்தாள் என்ற புராணக் கதையை அப்போது அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.கௌதம முனிவரின் பாவத்தைக் கழுவியதால் கௌதமி என்ற பெயரே பின்னாளில் கோதாவரியாக மாறியது//

  என் பெயருக்குள் இதேப்போல் ஒரு விஷயமும் இருக்கிறதா..
  ரொம்ப நன்றி சார்..உங்களால் நிறையா ஆன்மிக சம்பந்தப்பட்ட விஷயங்கள் தெரிந்துக்கொள்ள முடிகிறது..வலுக்கட்டயமாக திணிக்காமல் போகிறப்போக்கில் சொல்வதால் எளிதில் மனதில் நின்று விடுகிறது..

  பதிலளிநீக்கு
 5. உங்கள் எழுத்துநடை படிக்க இனிமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. 'புடவையிலே இருக்கிற இத்துனூண்டு எண்ணைக் கறைக்காகவா, இவ்வளவு பெரிய கோதாவரியை ஒரு மணி நேரமாச் செலவு பண்ணிட்டிருந்தே?' என்றார்கள்,அம்மா.
  அமிர்தவர்ஷிணி கோதாவரி நதியின் பெருக்கை ஒரு கணம் பார்த்து விட்டுப் பிறகு சொன்னாள்.
  'இத்துனூண்டு கறைதான் .ஆனா அது, இவ்வளவு பெரிய கோதாவரியையே என் கண்ணுலிருந்து மறைச்சிடுச்சேம்மா!

  அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்

  பதிலளிநீக்கு
 7. பிரேம்குமார் அசோகன் சொன்னது…//

  உங்கள் ஆன்மிகத் தேடல் பெரிது. அனைத்தையும் தகவல்களாகப் பகிராமல், பலாச் சுளையை தேனில் தோய்த்துத் தருவது போல, அழகான கதையின் ஊடாக அதைத் தெரிவிக்கிறீர்கள்.//

  என்னுடைய MISSION ஐ அழகாகப் புரிந்து கொண்டு சொல்லி இருக்கிறீர்கள்,பிரேம்.

  பெருமகிழ்ச்சி.
  stories are always the same.interpratations of the situations only can be new.

  பதிலளிநீக்கு
 8. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும் சொன்னது…

  Me and you are addicted to each other.so whatever you said is an extension of me,Karththi.

  Have a nice day.

  பதிலளிநீக்கு
 9. எவ்வளவு லைட் அடித்தாலும் இரண்டுஅடிக்கு மேல் போகாத வெளிச்சம்.

  எத்தனை எளிதாக சொல்லிவிட்டீர்கள். எத்தனை நாளைக்கு தான் உங்கள் சிந்தனைகள் அத்தனையும் ஆக்ரமித்த விசயங்கள் வெளியே வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதும் தெரியவில்லை. ஒவ்வொரு வரியும் மிக இயல்பாக புரட்டி போட்டு விடுகின்றது. கழிவிரக்கம், பச்சாதாபம், எதிர்பார்ப்பு அத்தனையும் கழித்து வாழ்ந்தாலும் இன்னமும் நிறைய நீ கழட்டி வைக்க வேண்டியதாய் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இது போன்ற விசயங்களை படிக்காமல் உணர்ந்ததால் தானோ ஞானிகள் ரிசிகள் அத்தனை பேரும் வெட்ட வெளியே இல்லமாக உள்ளத்தில் கொண்டு வாழ்ந்தார்களோ என்னவோ?

  பதிலளிநீக்கு
 10. எம்.எம்.அப்துல்லா சொன்னது//

  சார் நானேதான் சொல்லுறேன்...எவ்வளவு தூரம் முடியுமோ அவ்வளவு தூரம் இந்தத் தொடரை தொடருங்கள். எனக்கு இப்போது முடிவின் பரிதவிப்புபோய் உங்களின் நடை வசீகரம் கட்டிப்போடுகின்றது.//

  உங்கள் அழகிய பின்னூட்டமே உங்கள் உயர்ந்த ரசனை உள்ளத்துக்குச் சான்று,அப்துல்லா.
  நன்றி.மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 11. மங்களூர் சிவா சொன்னது…
  கோதாவரி ஆத்தங்கரையில தர்மபுரியா???
  ????//

  ஆமாம்,சிவா.இருக்கிறது.எங்கே ரொம்ப நாளா உங்களைக் காண வில்லையே,சிவா!

  பதிலளிநீக்கு
 12. வினோத்கெளதம் சொன்னது//

  என் பெயருக்குள் இதேப்போல் ஒரு விஷயமும் இருக்கிறதா..
  ரொம்ப நன்றி சார்..உங்களால் நிறையா ஆன்மிக சம்பந்தப்பட்ட விஷயங்கள் தெரிந்துக்கொள்ள முடிகிறது..வலுக்கட்டயமாக திணிக்காமல் போகிறப்போக்கில் சொல்வதால் எளிதில் மனதில் நின்று விடுகிறது..//

  எனது பணியே அதுதான் என்று நினைக்கிறேன்,வினோத்.

  திங்கள் ’புலம்பல்கள்’ வார்த்தையை மாற்றுகிறீர்களா?

  பதிலளிநீக்கு
 13. சின்ன அம்மிணி சொன்னது…
  உங்கள் எழுத்துநடை படிக்க இனிமையாக இருக்கிறது.//

  உங்கள் பாராட்டுத்தான் எனது உற்சாகம்.
  நன்றியும்,மகிழ்ச்சியும் மேடம்.

  பதிலளிநீக்கு
 14. நசரேயன் சொன்னது…
  படிச்சா நிறுத்த முடியலை//

  ரத்னச் சுருக்கம்.ஆனால் எனது எழுத்துக்கு இது powerful vitamin capsule.Thank you,Nasraeyan.

  பதிலளிநீக்கு
 15. யாசவி சொன்னது…//


  அடுத்த பாகத்துக்கு வெயிட்டிங்//

  உங்கள் உற்சாகமூட்டும் ஊக்கத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும்,யாசவி.

  பதிலளிநீக்கு
 16. உங்களின் எழுத்து ஒரு ஆன்மீக பயணம் ஐயா ... பரணீதரனின திருத்தலங்கள் படிப்பது மாதிரி இருந்தது, ஆனால் கதையோ காதல் ...

  பதிலளிநீக்கு
 17. ஜோதிஜி. தேவியர் இல்லம். சொன்னது…//

  எத்தனை எளிதாக சொல்லிவிட்டீர்கள். எத்தனை நாளைக்கு தான் உங்கள் சிந்தனைகள் அத்தனையும் ஆக்ரமித்த விசயங்கள் வெளியே வேறொரு தளத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதும் தெரியவில்லை. ஒவ்வொரு வரியும் மிக இயல்பாக புரட்டி போட்டு விடுகின்றது. கழிவிரக்கம், பச்சாதாபம், எதிர்பார்ப்பு அத்தனையும் கழித்து வாழ்ந்தாலும் இன்னமும் நிறைய நீ கழட்டி வைக்க வேண்டியதாய் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது. இது போன்ற விசயங்களை படிக்காமல் உணர்ந்ததால் தானோ ஞானிகள் ரிசிகள் அத்தனை பேரும் வெட்ட வெளியே இல்லமாக உள்ளத்தில் கொண்டு வாழ்ந்தார்களோ என்னவோ?//

  என்னுடைய பழைய பதிவுகளுக்கு நீங்கள் இடும் ஆழமான பின்னூட்டங்களுக்கு எப்படிப் பதிலளிப்பது எனத் தெரியாமல் யோசித்துக் கொண்டிருந்தேன்,ஜோதிஜி.
  இங்கே இடம் அளித்து விட்டீர்கள்.

  நம் எல்லோருக்குள்ளும் பொதுவான ஒரு மாமனிதன் இருக்கிறான்.அவனைச் சந்திக்கும் தருணத்தில்தான் நாம் எல்லோருமே அவனது வீட்டில்தான் ஒன்றாகக் குடி இருந்து கொண்டு இருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறோம்.அந்தப் புரிதலின் பரவசம்தான் நமது ரசனை.
  அவனைச் சந்திக்கும் வாய்ப்பை நமக்கு அளிப்பதுதான் எல்லாக் கலைகளுமே.

  உங்கள் பதிவுகளுக்குத் தனியாகக் கடிதம் எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன்,ஜோதிஜி.

  இறையருள், உங்களுக்கும்,உங்கள் குடும்பத்தாருக்கும்.

  பதிலளிநீக்கு
 18. உங்களை போல் எழுதுவதற்கு ஒரே ஒருவரே அவர்
  இயற்கை ....

  பதிலளிநீக்கு
 19. அது ஒரு கனாக் காலம் சொன்னது…
  உங்களின் எழுத்து ஒரு ஆன்மீக பயணம் ஐயா ... பரணீதரனின திருத்தலங்கள் படிப்பது மாதிரி இருந்தது, ஆனால் கதையோ காதல் ...//

  இந்தப் பதிவுகளின் பயணத்தில் உங்களை மாதிரி எத்தனை உயர்ந்த ரசிக உள்ளங்களை நண்பர்களாகப் பெற்றிருக்கிறேன் என்பதுதான் இறையருள் எனக்கு வழங்கிய அருட்கொடை எனக் கருதுகிறேன்,சுந்தர்.
  மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 20. //எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள்.//
  உங்கள் பாதம் பின்தொடரும் மகா

  பதிலளிநீக்கு
 21. மகா சொன்னது…
  உங்களை போல் எழுதுவதற்கு ஒரே ஒருவரே அவர்
  இயற்கை ....
  //
  இயற்கை என ஒரு பதிவுலக நண்பரைச் சொல்கிறீர்களா இல்லை இயற்கையைச் சொல்கிறீர்களா மகா?

  பதிலளிநீக்கு
 22. மகா சொன்னது…
  //எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள்.//
  உங்கள் பாதம் பின்தொடரும் மகா//

  மகுடங்களைச் சூடிய இளைஞர்கள் எல்லாம் பெரியவர்களின் பாதங்களில் இருந்துதான அந்தப் பயணங்களைத் தொடங்கி இருக்கிறார்கள்,மகா.

  வாழ்த்துக்கள்.வாழ்க மகிழ்க.

  பதிலளிநீக்கு
 23. என்ன சொல்லறதுன்னு தெரியல, ரொம்ப அழகான எழுத்துநடை, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு

  பதிலளிநீக்கு
 24. As all people said, nice wordings sir. close to heart. Please don't finish this series. continue it.

  Thanks,
  Arun

  பதிலளிநீக்கு
 25. சஹானா beautiful raga சொன்னது…
  என்ன சொல்லறதுன்னு தெரியல, ரொம்ப அழகான எழுத்துநடை, மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் அடுத்த பதிவிற்கு//

  நன்றி,சஹானா.விரைவிலேயே உங்களைச் சந்திக்கிறேன்.மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 26. Arunkumar Selvam சொன்னது…
  As all people said, nice wordings sir. close to heart. Please don't finish this series. continue it.

  Thanks,
  Arun//

  THANK YOU ARUN.BUT SINCE THIS IS A STORY IT SHOULD CONCLUDE IN ONE WAY OR OTHER.
  WE WILL MEET IN OTHER WRITINGS.NICE TO HEAR YOUR WORDS.

  பதிலளிநீக்கு
 27. இயற்கையைத்தான் சொன்னேன் பதிவரை அல்ல ..

  பதிலளிநீக்கு
 28. //மகுடங்களைச் சூடிய இளைஞர்கள் எல்லாம் பெரியவர்களின் பாதங்களில் இருந்துதான அந்தப் பயணங்களைத் தொடங்கி இருக்கிறார்கள்,மகா.//

  உங்கள் பின்னூட்டம் கூட எவ்வளவு அழகான உவமையாய் வருகிறது !

  பதிலளிநீக்கு
 29. //எந்தச் சுவையும் இல்லாமல் இருப்பதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய சுவை என்ற உண்மையை அவளது உதடுகள்தான் எனக்குக் கற்பித்தன.
  என்ன கொடுக்கிறோம், என்ன பெறுகிறோம் என்று தெரியாமலேயே மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடக்கும் ஒரே பரிவர்த்தனை.//

  ஒவ்வொரு வரிகளையும் உணர்ந்து ரசித்தேன். அழகான நடை என்னுள் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
  தொடர்ச்சியை எதிர்பார்த்த வண்ணம்…… காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 30. //
  'குகையோட நீளமே ரெண்டடிதான்.நீ நடக்க நடக்கத்தான் குகையும் நீண்டுட்டே போகும்!'
  //
  எந்தவொரு யாத்திரையும் முதல் அடியுடன் தான் தொடங்குகிறது.

  விறுவிறுப்பாகச் செல்லும் தொடர் எம்மைக் கட்எப்போட்டு விடுகிறது. கன்னிகாவில் கைவிடப்பட்டவை இங்கே கரையேறுகின்றன.

  பதிலளிநீக்கு
 31. மகா சொன்னது…
  இயற்கையைத்தான் சொன்னேன் பதிவரை அல்ல ..//

  அப்படியா,மகா.
  நானும் இயற்கையின் ஒரு பகுதிதானே.

  பதிலளிநீக்கு
 32. மகா சொன்னது… //
  //மகுடங்களைச் சூடிய இளைஞர்கள் எல்லாம் பெரியவர்களின் பாதங்களில் இருந்துதான அந்தப் பயணங்களைத் தொடங்கி இருக்கிறார்கள்,மகா.//

  உங்கள் பின்னூட்டம் கூட எவ்வளவு அழகான உவமையாய் வருகிறது !//

  யாருக்கு எழுதுகிறோமோ அதைப் பொறுத்து எழுத்தின் நிறமும் மாறுகிறது,மகா.செம்புலப் பெயல் நீர் போல...

  பதிலளிநீக்கு
 33. வலசு - வேலணை சொன்னது…
  //
  'குகையோட நீளமே ரெண்டடிதான்.நீ நடக்க நடக்கத்தான் குகையும் நீண்டுட்டே போகும்!'
  //
  எந்தவொரு யாத்திரையும் முதல் அடியுடன் தான் தொடங்குகிறது.

  விறுவிறுப்பாகச் செல்லும் தொடர் எம்மைக் கட்எப்போட்டு விடுகிறது. கன்னிகாவில் கைவிடப்பட்டவை இங்கே கரையேறுகின்றன.

  மகிழ்ச்சி,வலசு.உற்சாகம் அளிக்கிறது உங்கள் ஊக்கம்.

  பதிலளிநீக்கு
 34. //கொடிது கொடிது காதல் கொடிது, புற்று நோயைக் காட்டிலும்.

  (தொடரும்) //

  தொடரின் அடுத்த பகுதியை காண துடிக்கும்
  அன்பின்
  ஆ,ஞானசேகரன்

  பதிலளிநீக்கு