வியாழன், மே 28, 2009

இறந்து விடு,யோகியே இறந்து விடு.(நூல் அறிமுகம்)

ஓஷோ வின் 'DIE O YOGI DIE ' என்ற புத்தகம்.
(TALKS ON GREAT TANTRA MASTER, GORAKH)


ஸ்ரீ கோரக்கநாதர் என்றும் கோரக்க சித்தர் என்றும் அழைக்கப் படும் அந்த மாபெரும் ஞானியின் நூல் ஒன்றினைப் பற்றிப் பேச வரும் ஓஷோ எவ்வளவு விறுவிறுப்பாகத் தனது உரையைத் தொடங்கி இருக்கிறார் பாருங்கள்.


'வானத்தைப் போல விரிந்து கிடக்கும் இந்து மதத்தின் பரப்பில், அதிக பட்சம் ஒளி வீசும் நட்சத்திரங்களில் பன்னிரண்டு பேரைக் குறிப்பிடச் சொன்னால் நீங்கள் யார் யாரைக் குறிப்பிடுவீர்கள்?' என்று சுமித்ரனந்தன் பண்ட என்ற இந்திக் கவிஞர் ஓஷோவைக் கேட்கிறார்.
'இந்து மத வானம் ஏகப் பட்ட நட்சத்திரங்களால் ஜொலிப்பது.இதில் யாரை விடுவது,யாரைச் சேர்ப்பது?இந்தப் பட்டியலைக் கொடுப்பது மிகவும் சிரமமான வேலை ' என்று கூறி விட்டு நீண்ட நேரம் சிந்தித்த பின்னர் ஓஷோ இவர்களைச் சொன்னாராம்.
'கிருஷ்ணா,பதஞ்சலி, புத்தர்,மகாவீரர்,நாகர்ஜுனர்,ஆதிசங்கரர், கோரக்கநாதர்,கபீர்,குருநானக், மீரா,ராமகிருஷ்ணர்,ஜே .கிருஷ்ணமூர்த்தி.'
சுமித்ரனந்தன் பண்ட விடவில்லை.

'ஏன் ஸ்ரீ ராமரை விட்டு விட்டீரகள்?' என்று கேட்கிறார்.

'பன்னிரண்டு பேரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதால் நான் நிறையப் பேரை விட வேண்டியதாக இருந்தது.அதனால் அசலான,சுயமான பங்களிப்புச் செய்தவர்களையே பட்டியலிட்டேன்.ஸ்ரீராமர் ,கிருஷ்ணரைக் காட்டிலும் சுயமான பங்களிப்பு இந்து மதத்திற்குச் செய்யவில்லை.அதனாலேயே இந்துக்கள் கிருஷ்ணரையே பூரண அவதாரம் என்று கருதுகிறார்கள், ராமரை அல்ல' என்கிறார் ஓஷோ.
'சரி ஏழே பேரைத் தேர்ந்தெடுக்கச் சொன்னால் இதில் யார் யாரைச் சொல்வீர்கள்?'என்று கேட்கிறார் அந்த இந்திக் கவிஞர்.
ஓஷோ இந்த இரண்டாவது பட்டியலைக் கொடுக்கிறார்.
'கிருஷ்ணா,பதஞ்சலி,புத்தர்,மகாவீரர்,சங்கரர்,கோரக்கநாதர்,கபீர்'
கவிஞர் இதற்குச் சும்மா தலையாட்டி விடவில்லை .
'பன்னிரண்டு பேரில் ஐந்து பேரை விட்டிருக்கிறீர்களே ,அதற்கு ஏன் என்று காரணங்கள் சொல்ல முடியுமா?'
அதற்கு ஓஷோ சொன்ன பதிலில்தான் ஓஷோவின் ஆழமான சிந்தனையின் அற்புதங்கள் நமக்குப் புரிகிறது.
'நாகார்ஜுனர் புத்தருக்குள் அடங்கி விடுகிறார்.புத்தர் விதை என்றால் நாகார்ஜுனர் அது முளைத்து வந்த மரம்.புத்தர் கங்கை நதியின் மூலம் என்றால் நாகர்ஜுனர் அதனுடைய பல புண்ணிய படித்துறைகளில் ஒன்றே.
எதனை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கும் நிலையில் மரத்தை விட விதையை வைத்துக் கொள்வதே சிறப்பு.விதையிலிருந்து இன்னுமே பல மரங்கள் முளைத்துத் தழைத்து வளரும்.
கிருஷ்ணமூர்த்தியும் புத்தருக்குள் அடக்கம்.கிருஷ்ணமூர்த்தி புத்தரின் இன்றைய பதிப்பு.'உனக்கு நீயே ஒளியாக இரு ' என்ற புத்தரின் பழைய சூத்திரத்திற்கு இன்றைய மொழியில் இருக்கும் விரிவுரை.
ராமகிருஷ்ணரை எளிதாக கிருஷ்ணரில் அடக்கி விடலாம்.
மீராவையும்,குருநானக்கையும் கபீரில் கரைத்து விடலாம்.அவர்கள் இருவரும் கபீரின் இரண்டு கிளைகளே ஆவர்.கபீரின் ஆண் அம்சம் குருநானக்கின் வெளிப்பட்டத்தைப் போல அவரது பெண் அம்சம் மீராவாய் ஆனது.
இப்பிடித்தான் நான் ஏழு பேர்ப் பட்டியலைச் சொன்னேன்' என்கிறார் ஓஷோ.
'சரி,இந்த ஏழு பேரை ஐந்து பேராகச் சுருக்குங்கள்!' என்கிறார் பண்ட.
ஓஷோ அதற்கும் விடை அளிக்கிறார்.
'கோரக்கநாதர் மூலவேர்.அதனால் கபீரை அவருள் அடக்கலாம்.அதே போல் சங்கரரைக் கண்ணனுக்குள் கண்டு விடலாம் .'
'இன்னும் நான்கு பேராக ஆக்கினால்?'
'மகாவீரரையும் புத்தருக்குள் தரிசித்து விடலாம்.எனவே இறுதியாக எஞ்சியது நான்கு பேர்.'என்கிறார் ஓஷோ.
'சரி மூன்று பேராக.....'
'அது இனி நடக்கவே நடக்காது ,கவிஞரே !' என்கிறார் ஓஷோ.
'இவர்கள் நான்கு பேரும் நான்கு திசைகளைப் போல.
கால,வெளியின் நான்கு பரிமாணங்களைப் போல.
தெய்வம் ஒன்றாக இருந்தாலும் அதற்குக் கரங்கள் நான்கு.இந்த நான்கு பேரில் யாரை விட்டு விட்டாலும் அது தெய்வத்தின் நான்கு கரங்களில் ஒன்றை வெட்டுவதாகும் அதனை நான் செய்யத் தயாராக இல்லை.
இதுவரை உடைகளைக் களையச் சொன்னீர்கள்.செய்ய முடிந்தது.இப்போது அங்கங்களையே வெட்டச் சொல்கிறீர்கள்.அந்த வன்முறைக்கு நான் ஒப்ப மாட்டேன் !' என்று கூறி விடுகிறார் ஓஷோ.
ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா,புத்த பகவான், பதஞ்சலி முனிவர்,கோரக்கநாதர் என்று, எல்லையற்ற இந்திய ஞானிகளின் சாராம்சத்தை எல்லாம் இந்த நான்கு மகா ஞானிகளிடம் தரிசிக்க முடியும் என்று கூறும் ஓஷோ கோரக்க சித்தரைப் பற்றித் தனது கடைசி நாட்களில் உரை நிகழ்த்தியத்தின் வடிவமே இந்தப் புத்தகம்.

இனிப் புத்தகத்தில் இருந்து...
'ஆத்மாவில் மையம் கொண்டிருங்கள்.அதைப் பற்றிய விவாதங்களை வலியுறுத்தாதீர்கள்.'-இது கோரக்க சித்தரின் சூத்திரம்.
இதற்கு ஓஷோவின் விரிவுரை:
-ஆன்மா (இருப்பு,BEING) என்பதே உண்மை.அது வெறுமனே கண்ணாடி.அதன் மேல் 'நான்' என்ற அகந்தை எதனைப் பதிகிறதோ அதனை அது பிரதிபலிக்கிறது.நான் இஞ்சினியர் என்று நீ எண்ணினால் அது உன்னை இஞ்சினியராகக் காட்டும்.நான் டாக்டர் என்று நினைத்தால் அது உன்னை டாக்டராகக் காட்டும்.நீ எதனை மனதில் பதிகிறாயோ அதுவாகவே நீ ஆகி விடுகிறாய்.சமயங்களில் நீ எதிர்பாராமலேயே ஒரு விபத்தைப் போலவும் உனது பிம்பம் உருவாகி விடும்.

கூச்ச சுபாவம் உள்ளவன் அவன்.முதல் தடவையாகக் கல்வி கற்க ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக் கழகத்துக்குள் வருகிறான்.அங்கிருந்த எழுத்தர் அவனிடம் 'நீ என்ன பாடம் படிக்க விரும்புகிறாய்?'என்று கேட்க அவன் 'THEOLOGY' என்று கூற, எழுத்தர் அவன் சொன்னதை '
GEOLOGY ' என்று புரிந்து கொண்டு படிவத்தில் நிரப்புவதைப் பார்த்தும் இவன் ஒன்றும் சொல்லாமல் இருந்து விடுகிறான்.நம் ஆள்தான் கூச்ச சுபாவம் உள்ளவனாயிற்றே!
அது மட்டுமல்ல ஆறு வருடங்கள் கழித்துத் தேர்வுகளில் தங்கப் பதக்கம் வாங்கும் அளவுக்கு மதிப்பெண்கள் பெற்று உலகப் புகழ் பெற்ற மண்ணியல் துறை விஞ்ஞானியாக ஆகிறான்!
கடவுளைப் பற்றிப் படிக்கப் போனவன் வாழ்க்கை முழுதும் மண்ணைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன் என்று பின்னாளில் அவன் சொல்கிறான்.

எனவே நீ யார் என்று,யார் அல்லது எது தீர்மானிக்கிறது?

ஆழ்ந்த உறக்கத்தில் நீ இஞ்சினியரோ, டாக்டரோ வணிகரோ இல்லை.
பிறப்புக்கு முன்,இருந்தது யாரோ அதுதான் நீ.
கருவாக உன் தாய் வயிற்றில் இருந்ததுதான் நீ .
இறப்புக்குப் பின் நீ யாராக இருக்கப் போகிறாயோ அதுதான் நீ.
மீதி அனைத்து 'நீ'' களும் விபத்துக்களே.
அந்த உண்மையான ஆன்மாவில் மையம் கொண்டிரு என்கிறார் கோரக்கர்.

சூத்திரத்தின் இரண்டாம் வரி: 'அதைப் பற்றிய விவாதங்களை வலியுறுத்தாதீர்கள்'

ஓஷோ:

--விடிந்து கொண்டிருந்தது. பசுமையாக விரிந்து பரந்திருந்த அந்தப் பாதாம் மரத்தில் காலைப் புத்துணர்ச்சியுடன் ஓடி விளையாடத் தயாரானது ஒரு அணில்.அப்போது அதனருகில் வந்து அமர்ந்தது ஆந்தை ஒன்று.
அணிலிடம் ஆந்தை கேட்டது.
'ஓ அணிலே! இரவு வரப் போகிறது.நான் ஓய்வெடுக்க வேண்டும்.இந்த மரம் வசதிப் படுமா?'
அணிலுக்குப் புரியவில்லை.பளபளவென்று விடிந்து கொண்டிருக்கும் காலைப் பொழுதை இரவு என்று தப்பாகச் சொல்கிறதே ஆந்தை என்று அதனிடம் உண்மையைச் சொல்வோம் என்று எண்ணியது.
'மன்னிக்கவும்,ஆந்தையாரே.இது இரவு அல்ல. பகல் பொழுது!'
'வாயை மூடு.உளறாதே,எனக்குத் தெரியும்.இது இரவுதான்.வெளியே இருண்டு கொண்டு வருகிறதே ,உன் கண்ணுக்குத் தெரியவில்லை?' என்று கோபமாகக் கத்தியது ஆந்தை.
ஆந்தையின் சிலிர்த்துக் கொண்ட சிறகுகளைப் பார்த்துப் பயந்து போன அணில் இதனிடம் நமக்கேன் வம்பு என்று எண்ணிக் கொண்டு 'ஆம்,ஆந்தையே நீங்கள் சொல்வதுதான் சரி.இது இரவுதான் 'என்று சொல்லி விட்டு நகர்ந்தது.

பகலில் கண் தெரியாததினால்,கண்களை மூடிக் கொண்ட ஆந்தைக்கு அது இரவுதான்.கண்களைத் திறந்து பார்க்கும் அணிலுக்குத்தான் கதிரொளி தெரியும்.

காலைச் சூரியனைப் பற்றி ஆந்தையிடம் விவாதம் நடத்தி என்ன பயன்?

உட்புறமாகக் கண்களைத் திறந்து பார்ப்பவர்களுக்குத்தான் ஆத்ம உணர்வு விளங்கும்.அகக் கண்களை மூடி வைத்திருப்பவர்களிடம் விவாதத்தில் ஈடுபடுவது வீண் வேலை.அந்த நேரத்தில் தியானத்தில் அமருங்கள் என்கிறார் கோரக்கர்.
***************************************************

முல்லா நஸ்ருதீன் ஒரு கடை முதலாளியிடம் வேலைக்குச் சேரச் சென்றார்.அந்த முதலாளி ஒரே ஒரு நிபந்தனை விதித்தார்.
'முல்லா,எழுதப் படிக்கத் தெரிந்தவர்களைத்தான் நான் வேலைக்கு வைத்துக் கொள்வேன்'
'அப்படியா.எனக்கு எழுதத் தெரியும்.ஆனால் படிக்கத்தான் தெரியாது!' என்றார் முல்லா.
'அடே!இதுவரை நான் கேள்விப் படாத விஷயமாக இருக்கிறதே!எங்கே எழுதுங்கள் பார்ப்போம்' என்று முல்லாவிடம் கடை முதலாளி இரண்டு தாள்களையும், பேனாவையும் நீட்ட முல்லா ஏதேதோ யோசித்து,யோசித்து எழுதித் தள்ளினார்.பிறகு தான் எழுதியதை முதலாளியிடம் பவ்யமாக நீட்டினார்.
ஆவலுடன் வாங்கிப் பார்த்த முதலாளிக்கு முல்லா கிறுக்கித் தள்ளி இருந்தது என்னவென்றே புரியவில்லை.
'என்ன எழுதி இருக்கிறீர்கள்,முல்லா.நீங்கள் எழுதியதை நீங்களே படித்துச் சொல்லுங்கள் பார்ப்போம்' என்று தாள்களை முல்லாவிடமே நீட்டினார்.
'நான்தான் முதலிலேயே சொன்னேனே முதலாளி.எனக்கு எழுதத்தான் தெரியும் படிக்கத் தெரியாது!'
ஓம் கோரக்கநாதாய நமஹ!

திங்கள், மே 25, 2009

விக்கி,கிறிஸ்டினா,பார்சிலோனா (திரைப்பட ரசனை)

VICKY CRISTINA BARCELONA
A Film Written and Directed by
WOODY ALLEN.

Cast: Javier Bardem,Scarlett Johansson,Panelope Crust,Kevin Dunn.

ஆன்மாவை, உடலுக்குள்ளும் மனதுக்குள்ளும் தேடிச் செல்லும் மேற்கத்திய அலசல்தான் இந்தப் படம்.
துவக்கம்,இடைவேளை,முடிவு என்று வழக்கமாகச் சொல்லப் படும் கதை இல்லை இது.
ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான காதல்,திருமணம் போன்ற உறவுகளை ஆய்வதின் மூலம் வாழ்க்கையையே ஆய்வு செய்கிறார் இயக்குனர்.

பொருளால் நிறைவு பெற்ற பின்பும் மனித மனம் ஓய்வதில்லை.

படத்திலேயே சொல்லப் படுவதைப் போல மேற்கத்தியர் இப்போது அவதிப படுவது 'CHRONIC DISSATISFACTION' என்ற மன உளைச்சளினால்தான்.

விக்கி வரையறுக்கப் பட்ட வாழ்க்கை வாழ விரும்புபவள்.வெற்றிகரமான்,நிலையான் வருமானம் உள்ள ஒருவனைத் தேர்ந்தெடுத்துத் திருமணம் நிச்சயித்துக் கொண்டவள்.
கிறிஸ்டினா உண்மையான் ஆழமான காதல் என்றாலே வலிகளும் வேதனைகளும் இருக்கும் என்று எதிர்பார்த்தே ஒரு உறவினைத் தேடிக் கொண்டிருப்பவள்.
அமெரிக்கர்களான இருவரும் கல்லூரித் தோழிகள்.
ஜூலை,ஆகஸ்ட் மாதங்களில் வரும் கோட்டை விடுமுறையைக் கழிக்க பார்சிலோனா செல்கிறார்கள்.
ஸ்பெயினில் இருக்கும் அந்த நகரம் நியூயார்க நகரத்தின் இயந்திரத்தனமான பண்பாடுகளிலிருந்து ஒரு மாறுதலாக இருக்கும் என்று பர்சிலோனவின் ஸ்பானிஷ் பாரம்பரியத்தைத் தேடிச் செல்லும் அந்த இளம் பெண்கள் அங்கே ஒரு ஸ்பானிஷ் ஓவியனைச் சந்திக்கிறார்கள்.
ஓவியன் உணர்வு பூர்வமானவன். ஏற்கனவே தனது இளம் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்றிருக்கிறான்.அவனைக் கண்டதுமே கிறிஸ்டினாவுக்குப் பிடித்து விடுகிறது.
இந்த மூவருக்குள்ளும் உடலாலும்,உள்ளத்தாலும் நடக்கும் போராட்டங்கள்தான் படமே.
எல்லாவித மனப் பிரச்சினைகளுக்கும் காமத்தைத் துணைக்கு இழுத்துத் தோற்றுப் போகும் மேற்கத்தியப் பண்பாட்டைக் கவர்ச்சியாகவும் நிதானமாகவும் சொல்லி இருக்கிறார் இயக்குனர்.

ஓவியனாக வரும் நாயகன் நமது ஊர் முகவெட்டில் அழகாக இருக்கிறார்.

கிரிச்டினவாக வரும் ஸ்கார்லெட் ஜான்சன் பனிக்கட்டிகளுக்கிடையில் பூத்த ரோஜாப் பூவைப் போலக் குளுகுளுவென்று இருக்கும் அழ்கியோ அழகி.
அதற்கேற்ற உடைகள் வேறு ,பருத்திப் பூக்கள் அந்த அழகிக்காகவே செடியில் வெடித்திருக்கின்றன!

ஆணுடன் பெண்,பெண்ணுடன் பெண்,ஆண்-பெண்-பெண்ணுடன் என்று வித விதமாக உடலுறவு கொண்டாலும் மனம் கேட்கும் கேள்விகளுக்கு விடை இல்லை என்பதனை முதிர்ச்சியான ரசனையுடன் சொல்லி இருக்கிறார் வுடி ஆலன்.

வறுமை,வன்முறை,ஊழல், யுத்தம் என்று வாழும் வாழ்க்கையில் உள்ள பிரச்சினைகள் நமக்குத் தெரியும்.ஆனால்,மெல்லிய இசை,வண்ண ஓவியம்,அழகு ,கவிதை,மதர்த்த மார்புகள்,மதுக் கோப்பைகள்,பட்டுப் போல வழுக்கி ஓடும் பெண்களின் நிர்வாணங்கள் என்று வாழும் வாழ்க்கையிலும் பிரச்சினைகள் இருக்கின்றன என்று தெரிந்து கொள்ள வேண்டுமா?
இந்தப் படத்தைப் பாருங்கள்.

இயக்குனருக்கு வயது எழுப்பத்து நான்கு!

அவரது நகைச்சுவையான மேற்கோள்களில் ஒன்று.

'நான் கடத்தப் பட்ட போது உடனடியாக எனது பெற்றோர்கள் நடவடிக்கை எடுத்தார்கள்,எனது அறையை வாடகைக்கு விட்டு விட்டார்கள்!-வுடி ஆலன்.

ஞாயிறு, மே 24, 2009

ஒருவர் குறையாமல் (திரைப்பட ரசனை)

இன்று 'NOT ONE LESS' என்ற ஒரு சீனத் திரைப் படம் பார்த்தேன்.
ஒரு மகிழ்ச்சிக்குரிய விஷயம் மிக மிக நிறைவான ஒரு படம் பார்த்த அதிர்வு.
ஒரு வருத்தத்துக்குரிய விஷயம் இது போலத் திரைப் படங்களைத் தமிழில் படைக்கும் வாய்ப்புக்கான அறிகுறிகள் ஏதும் அண்மைக்காலத்தில் இல்லை என்பது.
சரி ,மகிழ்ச்சியான விஷயத்துக்கு வருவோம் .
வறண்ட மலைகள் சூழ்ந்த,காமிராவில் பார்ப்பதற்கு மட்டுமே அழ்கான ஒரு குக்கிராமம்.அங்கே ஒரு துவக்கப் பள்ளி.ஒன்று முதல் நான்கோ ,ஐந்தோ வகுப்புப் படிக்கும் வறிய குழந்தைகள்.(வறிய குழந்தைகளைப் பற்றி நான் விளக்கம் சொல்லும் அளவுக்கு இது பணக்கார நாடில்லை).

எல்லோருக்கும் ஒரே அறை.
அதனால் ஒரே பாடம்.
பக்கத்திலேயே ஆசிரியர் தங்கிக் கொள்ளும் அறை.இதுதான் ஒட்டு மொத்த பள்ளிக் கட்டிடம்.
இங்கே பல வருடங்களாக வேலை பார்க்கும் ஆசிரியர் தனது தாய் உடல நலம் சரியில்லாத காரணத்தினால் ஒரு மாதம் விடுமுறையில் போக வேண்டியதாகிறது.
எந்த வசதிகளும் அற்ற அந்தக் குக்கிராமத்துப் பள்ளிக்கு வேறு ஆசிரியர் யாரும் வர மாட்டேன் என்று சொல்லி விட்டதால், அந்த ஊர்த தலைவர் இன்னொரு தொலை தூரத்துக் கிராமத்துப் பண்ணையில் வேலை பார்க்கும் ஒரு பதின்ம வயதுச் சிறுமியை மாற்று ஆசிரியராக நியமித்துக் கூட்டி வருகிறார்.

பண்ணையில் கிடைப்பதை விடக் கூடுதல் சம்பளம்-ஐம்பது ரூபாய்!

அதனால் அந்தச் சிறுமி ஆசிரியர் வேலைக்கு வருகிறாள். அவள்தான் கதை நாயகி.
அவளும் அதிகம் படிக்க வில்லை என்றாலும் இந்தக் கிராமத்துக் குழந்தைகளை மேய்க்கும் அளவு படித்தவள்.
ஏற்கனவே வறுமையின் காரணமாக பள்ளியை விட்டு நிறையக் குழந்தைகள் படிப்பை விட வேலை முக்கியம் என்று சொல்லிச சென்று விடுவதால் இந்த ஒரு மாதத்தில் ,இருக்கும் நாற்பது குழந்தைகளையும் ஒன்று கூடக் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான் அந்தச் சிறுமி ஆசிரியையின் தலையாயப் பணி!!
அப்போதுதான் அவளுக்குப் பேசிய சம்பளமான ஐம்பது ரூபாய் கிடைக்கும் !
அதுதான் படத்தின் தலைப்பே -'ஒருவர் குறையாமல்' !

அதில் ஒரு மாணவன் குடும்பத்தின் கடன் சுமைக்காக கிட்டத்தட்ட தொலைவில் இருக்கும் நகரத்துக்கு வேலை பார்க்க ஓடிவிடுகிறான்.
அவனைத் தேடி கண்டு பிடித்து வந்தால்தான் இந்தப் பதின்மூன்று வயது ஏழை டீச்சருக்குச் சம்பளம்!!
படத்தின் கருவைச் சொல்லி விட்டேன்
மீதி அற்புதங்களை நீங்களே படத்தைப் பார்த்து விட்டு எனக்கு நெகிழ்ந்த படி சொல்லுவீர்கள்.

வியாழன், மே 21, 2009

கன்னிகா (எட்டாம் பாகம்)


9.
'ஆயிரம் வெறுமையான வார்த்தைகளைக் காட்டிலும்
அமைதி தரும் ஒரு சொல் நன்று.
ஆயிரம் வெற்றுப் பாடல்களை விட
அமைதி தரும் ஒரு பாட்டு நன்று.
ஆயிரம் போர்களில் வெல்வதை விட
உன்னையே நீ வெல்வது நன்று.
ஏன் எனில் அந்த வெற்றி யாராலும் எதனாலும் பறிபோகாது.

கௌதம புத்தரின் 'தம்ம பதம்'

(இலகுவான,எளிமையான எழுத்துக்களை விரும்பிப் படிப்பவர்களாக இருந்தால் இதனைப் படிப்பதைத் தவிர்க்கும்படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.)

சிறுவர்கள் அனைவரையும் அவரவர் அறைகளுக்குக் கூட்டிச் சென்ற பின்னும் அவர்கள் முகங்களை என் மனதில் யாரோ செதுக்கி இருந்தார்கள்.
மகிழ்ச்சியை விடத் துயரத்திற்கே அழுத்தம் அதிகம் போலிருக்கிறது.எவ்வளவு பெரிய மகிழ்ச்சியையும் விரைவில் மறந்து விடுகிறோம்.ஆனால் சின்னஞ் சிறிய துயரங்கள் கூட மனதில் இருந்து அழிய வெகு நாட்கள் ஆகின்றன.
திவ்யாவின் கைபேசிக்கு அழைப்பு வந்தது.
லாமா பத்மசூர்யா அறைக்கு வந்து விட்டாராம்.நாங்கள் அவரைப் பார்க்கச் சென்றோம்.
அவரது அறைக் கதவு திறந்தே இருந்ததால் நேராக அறைக்குள் எந்த அறிவிப்பும் இன்றி உள்ளே சென்று விட்டோம்.
திவ்யாவைப் பார்த்ததும் எல்லோரையும் போல லாமாஜியும் 'நமஸ்தே திவ்யாஜி' என்று உற்சாகமாக வரவேற்றார்.
திவ்யா என்னை அறிமுகப் படுத்த, திபெத்திய முறைப்படி பத்மசூர்யா பணிவுடன் குனிந்து இரு கரம் கூப்பி என்னை வணங்கினார்.
நானும் அவரை இருகரம் கூப்பி வணங்கினேன்.
பத்மசூர்யா நான் எதிர்பார்த்ததைப் போல வயதானவராக இருக்கவில்லை..இளைஞர்தான் மிஞ்சி,மிஞ்சி 25,26 வயதுதான் இருக்கும் அவருக்கு.
செம்பொன் நிறத்தில் பௌத்தர்களின் துறவு அங்கியை அணிந்திருந்தார் அவர்.பிரிட்டன் உச்சரிப்புடன் அழகாக ஆங்கிலம் பேசினார்.அறிமுக விபரங்களுக்குப் பிறகு நான் நேரடியாக பத்மசூர்யாவிடம் கேட்டது இந்தக் கேள்வியைத்தான்.
'நீங்கள் முக்தி அடைந்து விட்டீர்களா,லாமாஜி?'
லாமாஜி கிட்டத்தட்ட விழுந்து விழுந்து சிரித்தார்.பிறகு நிதானமான குரலில் சொன்னார்.
'சாவைப் பற்றிய முழுமையான அனுபவத்தையும்,உண்மையையும் தெரிந்து கொள்ள விரும்பினீர்கள் என்றால் நீங்கள் செத்தவரிடம்தான் கேட்க வேண்டும்,இல்லையா,அரவிந்தன்?நீங்கள் செத்து விட்டீர்களா என்று கேட்டால் அவர் அதற்கு ஆம் என்பாரா?இல்லை என்பாரா?' என்று என்னைக் கேட்டார் பத்மசூர்யா.
நான் ஒன்றும் சொல்லாமல் அவரையே பார்த்தேன்.

'ஆம் என்று சொன்னால் செத்து விட்டேன் என்று அவர் சொல்வது பொய்.
இல்லை என்று சொன்னால் அவரது அனுபவத்தினால் உங்களுக்குப் பயனில்லை.அதே போல்தான் இதுவும். உங்கள் கேள்விக்கு நான் ஆம் என்றும் சொல்ல முடியாது.இல்லை என்றும் சொல்ல முடியாது' என்றார் லாமாஜி.

'சரி.மரணத்தைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்,லாமாஜி?'என்று கேட்டாள் திவ்யா.

'அது ஒரு பட்டமளிப்பு தினம்.வாழ்க்கையின் படிப்பு முடிந்து விட்டது என்று மரணத்தன்று சொல்லப் படுகிறது.படிப்பு முடிந்து பட்டம் வாங்கும் தினத்தன்றும் கல்லூரியிலேயே இன்னும் தங்கிப் படிக்க விரும்புகிறார்கள் மனிதர்கள்.அதற்கு எந்தக் கல்லூரியிலும் அனுமதி கிடையாது.' என்றார் லாமாஜி.

'எதைப் படித்தோம் என்றே தெரியாத போது எப்படிப் பட்டம் கொடுப்பார்கள்,லாமாஜி?'

சிரித்தார் பத்மசூர்யா.

'படிக்கவில்லை என்று நீங்கள் நடிக்கிறீர்கள்,அரவிந்தன்.எடுத்துக் காட்டாக,மனித உயிர் நிரந்தரமில்லை என்று உங்களுக்கு இனிமேல்தான் வாழ்க்கை கற்றுத் தர வேண்டுமா,என்ன?உங்களுக்குத் தெரியும். ஆனால் தெரியாதது போல் நடிக்கிறீர்கள்.மரணத்தைப் பற்றித் தெரியாவிட்டால் அதனைக் கண்டு ஏன் இவ்வளவு அஞ்சுகிறீர்கள்?உங்களுக்குத் தெரியும்.ஏன் என்றால் நீங்கள் நிறையத் தடவை இறந்திருக்கிறீர்கள்,நிறையத் தடவை பிறந்ததைப் போலவே.' என்றார் பத்மசூர்யா புன்னகை மாறாமல்.

'உங்களுக்குப் பிறவிகளில் நம்பிக்கை இருக்கிறதா?' என்று கேட்டாள் திவ்யா.

'உண்மை என்று தெரிந்ததை எதற்காக நம்ப வேண்டும்,திவ்யாஜி?' என்று கேட்டார் லாமாஜி.

'ஆனால் எனக்கு நம்பிக்கை இல்லை!' என்றேன் நான்.

அவர் ஆழமாக என்னை ஒரு முறை பார்த்தார்.

'நீங்கள் பத்து வயதுச் சிறுவனாக இருந்தது உண்மைதானே?' என்று கேட்டார் பத்மசூர்யா.
'ஆம்' என்று தலையாட்டினேன்.
'அந்தச் சிறுவன் இப்போது எங்கே?'
நான் மௌனமாக பதிலை யோசித்தபடி இருந்த போது அவரே பேசினார்.

'அவனது சிறிய உடல் எங்கே? அவனது விளையாட்டுத் தனமான பேச்சும், பார்வையும் எங்கே?பாலுணர்வு இன்னும் விழிக்காத அந்த அரவிந்தன் பார்த்ததைப் போலத்தான் இன்னும் பெண்களை எல்லாம் தோழமையுடன் மட்டும் பார்க்கிறீர்களா?அவனது உடைகள்,விருப்பங்கள், விளையாட்டுக்கள்,ஆசைகள் ஏதாவது இப்போது உங்களுக்குப் பொருந்துமா?சொல்லுங்கள் அரவிந்தன், அவன் உயிருடன் இருக்கிறானா,இல்லை செத்து விட்டானா?'

'சாகவில்லை,நான்தான் அது என்று எனக்குத் தெரியும்'

'எப்படி?'

'எனக்கு ஞாபகம் இருக்கிறது' என்றேன் நான்.

'நீங்கள் உங்கள் தாயின் வயிற்றில் குழந்தையாக இருந்தது ஞாபகத்தில் இருக்கிறதா?'

'இல்லை' என்று தலையாட்டினேன்.

'கருப்பையில் ஸ்கேன் எடுத்த பல குழந்தைகளின் புகைப் படங்களை உங்களிடம் காட்டினால் உங்கள் படத்தை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?'

'முடியாது' என்றேன்.

திவ்யா என்னைப் பார்த்துப் புன்னகைத்தாள்.

'ஏன் என்றால் அது உங்களுக்கு ஞாபகமில்லை.உங்களுக்கு ஞாபகம் இல்லாததினால் மட்டும், நீங்கள் கருப்பையில் குழந்தையாக இருந்திருக்கவில்லை என்று கூற முடியுமா?'

நான் மௌனமானேன்.

'அது போலவே உங்களுக்கு ஞாபகமில்லை என்ற ஒரே காரணத்தினால் மட்டும் நீங்கள் முன்னர் வாழ்ந்திருக்கவில்லை என்று கூற முடியாது அரவிந்தன்.'

அவரது தர்க்கம் என்னுள் உறைத்தது.

'உண்மையைச் சொல்லப் போனால் குழந்தைகளுக்கும் கருப்பை ஞாபகங்கள் இருக்கிறது என நவீன மருத்துவம் இப்போது கண்டறிந்திருக்கிறது.நமது நினைவாற்றலின் திறனை வைத்தே நமது இறந்த காலத்தை நாம் கணிக்கிறோம்,அரவிந்தன்.புத்த பகவானுக்கு ஞானம் வந்த போது அவருக்குத் தனது முந்திய பிறவிகள் 500க்கும் மேல் ஞாபகத்துக்கு வந்ததென்று எங்கள் ஜாதகக் கதைகள் கூறுகின்றன.'
அவரது எண்ண ஓட்டத்தை தடை செய்யாமல் நாங்கள் அவர் சொல்வதைக் கூர்ந்து கேட்டபடி இருந்தோம்.

'ஆடு,மாடு,ஒட்டகங்களின் மேல் பூச்சிகள் ஊர்ந்தால் அவை என்ன செய்யும் என்று கவனித்திருக்கிறீர்களா?' என்று கேட்டார் பத்மசூர்யா திடீரென்று.
நாங்கள் இந்தத் திடீர்க் கேள்வியை எதிர்பார்க்காததினால் பதிலேதும் சொல்லாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம்.

'அவற்றிற்குப் பூச்சிகளை உதறக் கைகள் இல்லாததினால் அலை அலையாகத் தங்கள் தோலையே உதறிப் பூச்சிகளை அகற்றும்.பார்த்திருக்கிறீர்களா?'
'ஆம்'என்றோம் ஒருசேர.

' நாமும் அது போல ஒரு காலத்தில் ஆடு,மாடுகளாக,மற்ற விலங்குகளாக வாழ்ந்ததின் அடையாளம்,நாம் விரும்பும் போது நம் தோலைச் சுருக்கும் சக்தி நம் உடலில் இன்னும் ஒரு இடத்தில் மட்டும் மிச்சமிருக்கிறது என்கிறார் டார்வின்.அது எங்கே என்று தெரியுமா?'

தெரியவில்லை என்று வெறுமனே தலையாட்டினோம்.

'நம் நெற்றித் தோலை மட்டும் நாம் விரும்பும் போது நம்மால் சுருக்க முடியும் ' என்று தனது நெற்றியைச் சுருக்கியபடியே சொல்லிச் சிரித்தார் லாமாஜி.

நாங்களும் சிரித்தோம்.

'இப்படிப் பூர்வ ஜென்மத்தில் குரங்குகளாக இருந்தாம் என்று மேற்கத்திய விஞ்ஞானிகள் சொன்னால் நம்புகிறீர்கள்.ஆனால் முந்திய பிறவியில் மனிதர்களாக இருந்தோம் என்று நம் ஊர் ஞானிகள் சொன்னால் நம்ப மாட்டேன் என்று சொல்கிறீர்களே,என்ன நியாயம் அரவிந்தன்?' என்று அவர் கேட்ட போது மூன்று பேருமே ரசித்துச் சிரித்தோம்.

பிறகு சற்று யோசித்து விட்டுத் திவ்யா கேட்டாள்.

'போரும்,வறுமையும்,நோய்களும் இது போன்ற ஏராளமான அவலங்களும் மனிதர்களை வாட்டி,வதைதுக் கொண்டிருக்கும் போது நீங்கள் பேசும் மரணம்,பிறவி,தியானம் போன்ற ஞானங்களினால் என்ன பயன் லாமாஜி?'

'இந்த ஞானம் இல்லாததினால்தான் நீங்கள் சொல்லும் அத்தனை துயரங்களாலுமே மனிதர்கள் இன்னல் படுகிறார்கள் என்கிறோம் நாங்கள் ' என்றார் லாமாஜி.

'உங்கள் அஞ்ஞானத்துக்கு ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.உலகம் முழுதும் தங்கள் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையை மக்களுக்குக் கொடுத்து விட்டு அதனை ஜனநாயகம் என்கிறீர்கள்.
தன்னையே தனது ஆசைகளில் இருந்தும்,சுயநலங்களில் இருந்தும் ஆள முடியாத மனிதன் தன்னை ஆள்வதற்கு எப்படி இன்னொரு சக மனிதனைச் சரியாகத் தேர்ந்தெடுக்க முடியும்?
பார்வையற்றவர்கள் நிறையப் பேர் சேர்ந்து சொல்லி விட்டால் பௌர்ணமியை அடையாளம் காடி விட முடியுமா? எனக்குப் புரியவில்லை.
ஜனநாயகத்தில் தலைவர்கள் உங்களை வழி நடத்துவதில்லை.உஙகள் எண்ணிக்கைதான் அவர்களை வழி நடத்துகிறது. வெறும் எண்ணிக்கை எப்படி அறிவாகும்?தீர்வாகும்?
உங்கள் ஜனநாயக முறைப்படி புத்தரையும்,ஏசுவையும்,பதஞ்சலியையும் மக்கள் ஓட்டுப் போட்டுத் தேர்ந்தெடுத்திருந்தால் அவர்கள் யாரும் வார்டு கௌன்சிலர்கள் கூட ஆகி இருக்க மாட்டார்கள்!' என்றார் பத்மசூர்யா.

இந்த முறை நாங்கள் மனம் விட்டு, வாய் விட்டுச் சிரித்தோம்.

'உலகத்திலேயே கிடைத்தற்கரிய ஞானம் தங்கள் குருவைத்,தங்கள் வழிகாட்டியைத்,தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் ஞானம்தான். அந்த ஒப்பற்ற ஞானம் மக்கள் எல்லோருக்கும் இருப்பதாக நாம் நினைத்துக் கொண்டதனால் வந்த துயரங்கள்தான் அனைத்துமே' என்றார் பத்மசூர்யா,சிரத்தையுடன்.
சற்று நேரம் கழித்து நான் கேட்டேன்.

'உங்களிடம் பெர்சனலாக ஒன்று கேட்கலாமா, லாமாஜி?'

'என்னுடைய செக்ஸ் லைஃப் பற்றித்தானே?' என்று கேட்டார் பதமசூர்யா,பட்டென்று.

நான் உண்மையில் அசந்து போனேன்.

'சரியாகச் சொன்னீர்கள்,லாமாஜி.இந்த இளம் வயதில் பெண் இன்பத்தைத் துறந்து வாழ்வது வேதனை இல்லையா?உடலுக்கும் மனதுக்கும் தரும் செயற்கையான தண்டனை இல்லையா?உங்கள் துறவுக்கும் உங்கள் ஞானத்துக்கும் என்ன சம்பந்தம்?' என்றேன் நான்.

'நீங்கள் நினைப்பதைப் போல நான் பெண் இன்பத்தைத் துறந்து விடவில்லை.கடந்து வந்திருக்கிறேன்.
பிறந்த குழந்தை உயிர் வாழ்வதற்கு முக்கியம் என்றாலும்,தாய்ப் பாலைப் பெரியவன் ஆன பின்னும் யாராவது குடித்துக் கொண்டிருக்கிறார்களா?
விமானம் பறக்கும் வரையில்தான் அதற்குச் சக்கரங்கள் தேவை.பறக்கத் தொடங்கியவுடன் அது சக்கரங்களை உள்ளிழுத்துக் கொள்வதைப் போல மேலே செல்லச் செல்ல மனித மனமும் தனது தேவைகளை மாற்றிக் கொண்டே போகிறது.
அது மட்டுமல்ல அரவிந்தன்,நீங்கள் நம்பாவிட்டலும் உங்களுக்கு நான் சொல்லும் பதில் இதுதான்.
பல பிறவிகளில் நான் பெண்ணாயும் பிறந்திருப்பதை நான் அறிவேன்.அதனால் எனக்குப் பெண்ணுடல் புதியதல்ல.நானே உள்ளிருந்து பழகிய ஒன்று.
சிறு குழந்தையாக இருந்த போது சாக்லெட்களின் மேல் இருக்கும் ஆசை வயது முதிரும் போது இயல்பாகவே மறைவதைப் போல எனக்கு செக்ஸின் மேல் இருக்கும் ஆசை போன பிறவிகளிலேயே மறைந்து விட்டது.இது செயற்கையாக இருந்தால்தான் வேதனை,வலி,சஜ்சலம் எல்லாம்.இதுதான் எனது இயல்பு.எனது இயற்கை.
அவ்வளவு ஏன், உங்களுக்கும் கூட இது சாத்தியமாகக் கூடும்' என்றார் லாமாஜி.
'பயப்படாதீர்கள், அது இன்னும் பல பிறவிகள் தாண்டித்தான்!' என்று சொல்லிச் சிரித்தார் பத்மசூர்யா.

'தேங்க்ஸ் லாமாஜி' என்றேன் நான்.
திவ்யா வெட்கத்துடன் சிரித்தாள்.
அப்போது ஒரு நர்ஸ் ஓடி வந்தாள்.
இறக்கும் தறுவாயில் இருக்கும் ஒரு நோயாளி லாமாஜியை அழைப்பதாகச் சொன்னாள் அவள்.
லாமாஜி விரைய நாங்களும் உடன் சென்றோம்.
வாழ்க்கையிலேயே நான் சந்தித்திராத முற்றிலும் புதிய அனுபவம் அது.

(வாழ்க்கை தொடரும்)

வியாழன், மே 14, 2009

உடல்,உள்ளம்,உலகம்.

உடல்
----------

கேள்வி : ஏன் பகவான் கிருஷ்ணரின் நிறம் எப்போதும் கறுப்பாகவும்,கருநீல நிறமாகவும் சித்தரிக்கப் படுகிறது?
அவர் உண்மையில் கறுப்பானவரா?

(எப்போதும் எனது வியப்புக்கும், மெய்சிலிர்ப்புக்கும் உரிய ஞானி ஓஷோ இதற்குச் சொன்ன பதிலை எல்லோருடனும் பகிர்ந்து கொள்ளாவிட்டால் எனது பிறவி பயனற்றதாகும்.

இறை நம்பிக்கை உள்ளவர்கள் இதனை ஆன்மீகத்தின் செம்மையாக உணரலாம்.
இறை நம்பிக்கையைப் போக்கிக் கொண்டவர்கள் இதனையே அழகியல் உணர்வின் நுட்பமாக உணரலாம்.)
ஓஷோ.
------------

உண்மைதான்.எங்கள் நாட்டில் கிருஷ்ணாவின் நிறம் எப்போதும் இருண்டதாகவே உருவகிக்கப் படுகிறது.இதற்குக் காரணங்கள் உண்டு.

கறுப்பு நிறம் ஸ்ரீ கிருஷ்ணாவின் நிலைத்த தன்மையின் அடையாளம்.
இந்தத் தேசத்திற்கு எப்போதுமே கரிய நிறத்தின் மீது ஒரு தனி ஈடுபாடு இருக்கிறது.

உண்மையைச் சொல்லப் போனால்,கறுப்பை விட வெண்மை ஒருபோதும் அழகானதல்ல.பொதுவாக வெள்ளைத்தோல் அழகாகக் கருதப் படுவது ஏன் என்றால்,அதனுடைய பளபளப்பும்,கவர்ச்சியும் உடலின் அசிங்கமான அம்சங்களை மூடி மறைத்து விடும்; ஆனால் கரிய நிறம் அப்படி எதனையும் மறைக்காது.உடலின் அம்சங்களை உள்ளது உள்ளபடியே அது காட்டி விடும்.அதனால்தான் கறுப்பு நிறம் படைத்தவர்களில் அழகானவர்களைப் பார்ப்பது அரிதாகவும்,வெள்ளை நிறத்தவர்களில் அழகானவர்களாக அதிகம் பேர் தென்படுவதற்கும் காரணம்.

ஆனால் கறுப்பு நிறத்திலேயே அழகாக இருப்பவர்கள் எந்த வெள்ளைத் தோல் இருப்பவர்களையும் பின்னுக்குத் தள்ளி விடுவார்கள்.
கறுப்பில் அழகு என்பது சிறப்பிலும் சிறப்பு.அது ஒரு அபூர்வம்.அதனால்தான் எங்கள் நாட்டில் ஸ்ரீ ராமரையும்,ஸ்ரீ கிருஷ்ணரையும் ஸ்ரீ பராசக்தியையும் இன்ன பிற தெய்வங்களையும் நாங்கள் கரிய நிறம் படைத்தவர்களாகவே சித்தரிக்கிறோம்.

வெள்ளை நிறத்தில் அழகாக இருப்பது சாதாரணம்.கரிய நிறத்தில் அழகாக இருப்பது அபூர்வம்.

கரிய நிறத்தை நாங்கள் விரும்புவதற்கு இன்னுமே காரணங்கள் உண்டு.வெள்ளை நிறத்துக்கு ஆழமில்லை.பெரும்பாலும் அந்த நிறம் சப்பையானது.ஆனால் கரிய நிறம் ஆழமானது,தீவிரத் தன்மை கொண்டது.

ஓடும் நதி எங்கே ஆழமாக இருக்கிறதோ அங்கே அதன் நீர்ப் பரப்பு கருமையாக இருப்பதைப் பார்த்திருக்கிறீர்களா? அது போல்தான் இதுவும்.

கறுப்பு நிறத்தில் அழகாக இருப்பவர்களின் அழகு வெறும் தோலுடன் நின்று விடுவதல்ல.அந்த அழகுக்குப் பல அடுக்குகள் உண்டு. அதனால்தான் வெள்ளைத் தோல் இருப்பவர்களுடன் பழகும் போது விரைவிலேயே அலுப்புத் தட்டி விடுகிறது.ஆனால் கரிய நிறம் நீடித்த தன்மை கொண்டது.அது உங்களைச் சலிப்படையச் செய்வதில்லை.

மேற்கே அனைத்துக் கவர்ச்சிப் பெண்களும் கடற்கரையில் படுத்துக் கதிர் ஒளியில் தங்கள் வெள்ளை தோலைக் கரிய நிறமாக்கிக் கொள்வது பற்றி நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள்.அது ஏன் என்று உங்களுக்குத் தெரியுமா?

எப்பொதெல்லாம் ஒரு சமூகம் உச்சத்தைத் தொடுகிறதோ அப்போதெல்லாம் வெறும் பரவலான பண்புகளில் ஆர்வம் இழந்து,எதிலும் ஒரு ஆழத்தையும்,தீவிரத்தையும் அது தேடத் தொடங்கும்.
நாம் மேற்கத்திய வெள்ளைக்காரர்களை அழகென்று சொல்லிக் கொண்டிருக்கும் போது அவர்கள் அழகின் வெறும் மேற்புறத் தோற்றத்தை தாண்டி, அதில் இருக்கும் ஆழத்தைக் காணத் தொடங்கி விட்டார்கள்.

அதனால்தான் வெள்ளைக்கார அழகிகள் எல்லாம் தங்கள் தோலைக் கருமையாக்குவதில் மும்முரமாகி விட்டார்கள்.

மேலும் ஒன்று .

ஸ்ரீகிருஷ்ணா கறுப்பு நிறமானவர் என்ற விவரத்தை விட அந்த நிறத்தை அவருக்குக் கற்பித்ததில் இருக்கும் கவிதை நயத்தைப் புரிந்து கொள்ளுவதே சிறப்பானதாகும்.
உள்ளம்
-------------

இன்றைக்கு நாம் எல்லோரும் பெரும் நகரங்களில் பல லட்சக் கணக்கான மக்கள் தொகையாக வாழ்கிறோம்.ஆனால் அது நமது பரிணாம விதிகளுக்கு முரணானது என்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறது.

டெஸ்மான்ட் மாரிஸ் தனது 'மனித மிருகக் காட்சிசாலை' என்ற நூலில் சொல்வது இதுதான்.

குரங்குகளாகவும் அதற்கு முந்தைய நம் மூதாதையரான விலங்குகளாகவும் நாம் வாழ்ந்ததெல்லாம் சிறு சிறு கூட்டங்களாகவும் மந்தைகளாகவும்தான்.

500அல்லது 600பேரைத் ஐத் தாண்டாமல் வாழ்ந்த நாம் இன்று பல லட்சக் கணக்கில் ஒரே இடத்தில் கூடி இருக்கும் சூழ்நிலையில் வாழ்வதே நகர வாழ்க்கையில் நமது மன இறுக்கத்திற்கான உயிரியல் காரணமாகும் என்கிறார் மாரிஸ்.

சரி நம் ஆதி மனப் பண்பிற்கு ஒவ்வாத இந்தச் சூழ்நிலையை நாம் எப்படி அனுசரித்துக் கொள்கிறோம்?

உலகில் எந்த நகரமானாலும், எந்த இனமானாலும் எவ்வளவு படித்தவர்களானாலும்,நாகரிக மனிதர்களானலும் நாம் சிறு சிறு குழுக்களாகப் பிரிந்து கொள்கிறோம்.
சாதிகளாக,சங்கங்களாக,மாவட்டக்காரர்களாக,மாணவர்களாக,ஆசிரியர்களாக திரைத்தொழில்புரிபவர்களாக,பத்திரிகையாளர்களாக,பதிவர்களாக,ஆண்களாக,பெண்களாக, குட்டையானவர்களாக,நெட்டையானவர்களாக,இப்படித்,தொழில் ரீதியாக,உடல் ரீதியாக, பண்பு ரீதியாகக் கொள்கை ரீதியாக ஏதாவது ஒரு பெயரில் சிறு சிறு குழுக்களாக,கூட்டங்களாக,பழைய விலங்குகளின் மொழியில் 'ட்ரைப்ஸ்' களாக வட்டம் போட்டுக் கொள்வது அந்த ஆதிக் குரங்குகளின் அடிமனப் பண்பு என்கிறார்.
லட்சக் கணக்கில் ஒன்று கூடி வாழ்வது நமது அடிப்படை இயல்புக்கு மாறானது.நூற்றுக் கணக்கில் வாழ்வதுதான் நமது இயல்பு என்னும் மாரிஸின் கோட்பாட்டைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?

உலகம்
_____

தமிழ் கூறும் நல்லுலகத்தைப் பற்றி தெரிந்து கொள்ள 16ம் தேதி தேர்தல் முடிவுகள் உதவும் என்று காத்திருக்கிறேன்.

ஈழத்தைப் பற்றிய தமிழர்களின் உணர்வு,தென் சென்னையில் நிற்கும் சரத்பாபு என்ற கட்சி சார்பற்ற இளைஞருக்குக் கிடைக்கும் வாக்குகளின் எண்ணிக்கை இந்த இரண்டு விஷயங்களை வைத்து தமிழர்களின் உணர்வுகளைக் கணிக்கலாம் என்பது எனது எண்ணம்.

சரிதானே நண்பர்களே?

சனி, மே 09, 2009

கண்ணீர்த் துளிகளின் நடனம்...

ஒரு நடனம் கண்களில் நீரை வரவழைக்க முடியுமா?

ஒரு இசையைக் கேட்டு நீங்கள் தேம்பியதுண்டா?

ஈழ்த்துக் கொடுமையை இதற்கு மேல் உங்கள் நெஞ்சில் பதைபதைக்கத் தைக்க முடியுமா ?

நண்பர் உங்கள் நண்பனின் 'வானவில் எண்ணங்கள்'பதிவில் நான் கண்ட விஜய் டி.வி. நிகழ்ச்சியை நான் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்..
அதற்கான சுட்டிகள் கீழே....

http://www.youtube.com/watch?v=CCYRkC40KDQ

http://www.youtube.com/watch?v=ZPjGj8LRRp4

http://msams.blogspot.com/

இந்த நடனக் கலை நிகழ்ச்சியைப் படைத்தளித்த எனதருமை இளைஞர் பிரேம் கோபாலின் கலைக்கு நான் அடிமை.
விஜய் டி.வி.க்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

வெள்ளி, மே 01, 2009

கன்னிகா (ஏழாம் பாகம்)

8.
'பொய்மையில் இருந்து எஙகளை உண்மைக்கு அழைத்துச் செல்.
இருளில் இருந்து எங்களை ஒளிக்கு அழைத்துச் செல்.
சாவில் இருந்து எங்களைச் சாகாமைக்கு அழைத்துச் செல்.'

-பிருஹத்தாரண்யக உபநிஷதம்.

'லாமாஜி எங்கோ வெளியே பேஷண்ட்டைப் பார்க்கப் போயிருக்கிறார் என்று நினைக்கிறேன் அரவிந்த்.வா, நாம் இரண்டாம் தளத்துக்குச் சென்று விட்டு வருவோம்' என்று என்னை அழைத்துக் கொண்டு,லாமா பத்ம சூர்யாவின் அறையில் இருந்து வெளியே வந்தாள் திவ்யா.

'இரண்டாம் தளத்தில் யார் இருக்கிறார்கள் திவ்யா?'என்று நான் அவளைக் கேட்டேன்.
ஒருகணம் அவள் என்னையே பார்த்துவிட்டுப் பிறகு சொன்னாள்.

'மரணத்துக்கு அருகில் நின்று கொண்டு,அது தெரியாமல் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகள்' என்றாள் திவ்யா.

பிறகு இருவரும் மௌனமாக மேல் தளத்திற்குச் சென்றோம்.

முதல் தளத்தைப் போலவே வட்ட வடிவமான காரிடார்.
ஒவ்வொரு தூணுக்கும் முன்னால், கணபதி சிவபெருமான்,ஆதிபராசக்தி, ஸ்ரீராமர்,ஸ்ரீகிருஷ்ணர்.ஆஞ்சனேயர்,முருகர்,புத்தர்,ஏசுபிரான்,கஃபா எழுத்துக்கள் அடங்கிய இஸ்லாம் கல்வெட்டு,வீர சைவர், குரு நானக், ராமகிருஷ்ணர்,ரமணர் இப்படி எல்லா மதத்தைச் சேர்ந்த புனிதச் சிலைகளும் அழகாகப் பளிங்கில் வைக்கப் பட்டிருந்தன.
நாங்கள் போனது அந்தி நேரமாதலால் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பார்கள், என்ற திவ்யா காரிடாரின் கடைக் கோடியில் இருந்த ஹாலுக்குக் கூட்டிச் சென்றாள்.

அது நாற்பதுக்கு, நாற்பது இருக்கும் பெரிய ஹால். ஹாலில் குழந்தைகளின் விளையாட்டுக்குத் தேவையான அனைத்துக் கருவிகளும் பொருத்தப் பட்டு, அது ஒரு மினி பார்க்கைப் போல இருந்தது.
பத்துப் பதினைந்து குழந்தைகள் இரைச்சலிட்டபடி ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

கிட்டத் தட்ட எல்லாக் குழந்தைகளுமே கீமோதெராபி சிகிச்சையினால் முடிகள் கொட்டி மொட்டைத் தலைகளாகவே இருந்தார்கள்.

'இங்கே தூணுக்குத் தூண் இருக்கும் கடவுளை, நான் மனதார வெறுக்கும் ஒரே இடம் இந்த ஹால்தான், அரவிந்த்' என்றாள் திவ்யா கனத்த குரலில்.

அவள் முகம் உணர்ச்சிகளின் வெப்பத்தால் சிவந்து போயிருந்தது.அதற்குள் சில குழந்தைகள் அவளைப் பார்த்து 'திவ்யா ஆன்டி ' என்று கூச்சலிடத், திரும்பி பார்த்த எல்லாக் குழந்தைகளுமே 'ஹோய்' என்று கத்திக் கொண்டு அவளிடம் ஓடி வந்தன.

அவர்கள் எல்லோருமே எட்டு முதல் பத்து வயது வரை இருக்கும் சிறுவர், சிறுமிகள்.எல்லோரும் திவ்யாவின் கழுத்தைக் கட்டிப் பிடித்து முத்தங்களைச் சொரிந்ததில் இருந்தே,அவள் எவ்வளவு தூரம் அந்தக் குழந்தைகளின் மனதில் இடம் பிடித்திருந்தாள் என்பதை அவள் சொல்லாமலே தெரிந்து கொண்டேன்.

ஒவ்வொன்றும் ஒரு புகார் செய்தன,அவரவர் மொழியில்.

வடக்கத்தியக் குழந்தைகள் பெரும்பாலும் பேசிய இந்தி மொழியைப் புரிந்து கொண்டு திவ்யா பதில் அளித்தது எனக்கும் புரிந்தது.ஆனால் தெற்கத்தியக் குழந்தைகள் பேசிய பேச்சினை நான் மட்டுமே புரிந்து கொண்டேன்.

எத்தனை மொழிகள்,ஆனால் வேதனை ஒன்றுதான்,என்ற பிரம்மாண்டமானதொரு சோகத்தின் முன் நான் நின்றேன்.

மொழிகள் புரியாமலே இருந்திருந்தால்,ஏன்,மனிதர்களாகப் பிறக்காமலே இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று மனதார நான் நினைத்தது அந்தக் கணத்திலதான்.

அந்தக் குழந்தைகள் திவ்யாவைச் சுற்றிக் கொண்டு கேட்ட கேள்விகள் இதுதான்.

'எனக்கு ரொம்ப வலிக்கிறது ஆன்ட்டி..ஏன் என்னை எந்த மருந்தும் கொடுத்துக் குணமாக்க மாட்டேன் என்று டாகடர் அங்கிள்கள் பிடிவாதம் பிடிக்கிறார்கள்?'

'எனக்குப் பசியே இல்லை என்றாலும் ஏன் என்னைச் சாப்பிடு,சாப்பிடு என்று என் அம்மா உயிரெடுக்கிறாங்க?'

'சாப்பிட்டவுடன் வாந்தி எடுப்பதையாவது யாராவது நிறுத்த மாட்டார்களா?'

'நான் என் வீட்டில் தம்பி,தங்கைகளுடன் எப்போது மீண்டும் இதுபோலவே விளையாடப் போகிறேன்,ஆன்ட்டி?'

'ஏன் எந்தக் கடவுளுமே நாங்கள் எது சொன்னாலும் காதிலேயே வாங்கிக் கொள்ள மாட்டேன் என்கிறார்கள்,ஆன்ட்டி?'

'எங்களைக் குளிப்பாட்ட வரும் ஆயா அடிக்கடி சொல்லும்,சாவு என்பதற்கு உண்மையான அர்த்தம்தான் என்ன,ஆன்ட்டி?'

திவ்யா பார்வையைக் குழந்தைகளிடம் இருந்து திருப்பி என்னைப் பார்த்தாள்.

அந்தக் குழந்தைகள் கேட்ட கேள்விகளுக்கு எந்தக் கடவுளுமே பதில் சொல்ல முடியாது என்ற பேருண்மையை நான் அந்தக் கணத்தில்தான் உணர்ந்தேன்.

அதுவரை அமைதியாக இருந்த ஒரு பையன் கடைசியாக ஒரு கேள்வி கேட்டான்.

'நேக்கு எப்போ ஆன்ட்டி முடி வளரும்?' என்றான் தமிழில்!

திவ்யா புரியாமல் என்னைப் பார்த்தாள்.

'நேக்கு இவா மாதிரி இங்க்லிஷ் எல்லாம் சொல்லித் தரலே.நான் வேத பாட சாலையில் படிச்சவன்!' என்றான் அந்தச் சிறுவன்.

என்னை யாரோ உள்ளே இருந்து உலுக்கினார்கள்.
'உம் பேரு என்ன தம்பி?' என்றேன் நான்.

என் தமிழைக் கேட்டதும் அவனது முகம் மலர்ந்தது.பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் தராமலே, என் தமிழின் பெருமை புரிந்தது அந்தத் தருணத்தில்தான்.

'நீங்க நம்மவாளா?' என்றான் சிறுவன்,உண்மையில் மகிழ்ந்து.

ஆம் என்று வெறுமனே தலையாட்டினேன்.

'நான் வேத பாட சாலையிலே படிக்கிற பையன்.எல்லா மந்திரமும் அக்ஷரச் சுத்தமா நன்னாச் சொல்லுவேன்.கேக்கறேளா?' என்றவன் நான் தலையசைக்கும் முன்னரே கணீரென்று வேதம் சொன்னான்.

'அசத்தோ ம சத் கமய
தமசோ ம ஜ்யோதிர் கமய
ம்ரித்யோ ம அம்ருதம் கமய
ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி ஓம் ஷாந்தி' என்றான் அந்தச் சிறுவன்.

என் கண்களில் நீர் முட்டுவதற்குள் அந்தச் சிறுவனே சொன்னான்.
'இதுக்குத் தமிழில் அர்த்தமும் சொல்லிடறேன்' என்றவன்

''பொய்மையில் இருந்து எஙகளை உண்மைக்கு அழைத்துச் செல்.
இருளில் இருந்து எங்களை ஒளிக்கு அழைத்துச் செல்.
சாவில் இருந்து எங்களைச் சாகாமைக்கு அழைத்துச் செல்.'

என்று அதே கணீர்க் குரலில் தமிழில் சொன்னான்.

'உன் பேரு?' என்றேன் அவனருகில் முழந்தாளிட்டு அமர்ந்து.

'பதஞ்சலி' என்றான் அந்தச் சிறுவன்.

'எனக்குக் குடுமி இல்லேன்னா நான் சொல்ற இந்த மந்திரத்தை யாரும் மதிக்க மாட்டா,நீ பாஸ் ஆக மாட்டேன்னு என்னோட வேதபாடசாலைப் பசங்க எல்லாம் சொல்றா! எனக்கு எப்போ மாமா முடி வளரும்?' என்று பரிதாபமாகக் கேட்டான் அந்தச் சிறுவன்.

இப்போதுதான் நான் அழுதேன்,அந்தச் சிறுவனைக் கட்டிப் பிடித்து.

(மந்திரங்கள் தொடரும்)