வியாழன், டிசம்பர் 24, 2009

அவதார்- பரவசம்.

அவதார் -பரவசப் பட்ட்டதைத் தவிர என்னால் வேறு எதுவும் சொல்லவோ ,எழுதவோ இயலவில்லை.

படைப்புணர்வின் சொல்ல முடியாத சிகரத்தில் இருக்கும் ஜேம்ஸ் கேமரானின் பாதங்களைத் தொட்டு வணங்குவதற்குக் கூட,அவர் படைத்த பறவைகளின் துணையன்றி வேறு சாத்தியங்கள் எனக்கில்லை.

இந்த படைப்பின் பரவசத்தை ,அனுபவத்தை மனிதர்கள் அனைவரும் துய்க்க வேண்டுமென மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

வெள்ளி, டிசம்பர் 11, 2009

சம்மருடன் ஐந்நூறு நாட்கள்

500 DAYS OF SUMMER
சமயங்களில் ஒன்றைப் பற்றித் திட்டமிடலோ,முன்னறிவோ இல்லாமல் சில நல்ல படங்களைப் பார்க்கும் சந்தர்ப்பங்கள் நேர்ந்து விடும்.
அப்படி நேர்ந்ததுதான், நான் நேற்றுப் பார்த்த இந்தப் படம்.
ஒரு நல்ல எழுத்தோ,நல்ல இசையோ,நல்ல படமோ உங்களை முழுக்க முழுக்க மாற்றிப் புரட்டிப் போடாது.ஆனால் ஏற்கனவே உங்களுக்குள் இருக்கும் கவிதையை,ரசனையை,மனிதத்துவத்தை இன்னும் கூராக்கும்.தீவிரமாக்கும்.செழுமைப் படுத்தும்.
அதற்குப் பிறகு நீங்கள் நேசிக்கும் பெண் இன்னும் அழகாக தெரிவாள் .நீங்கள் சாப்பிடும் உணவு இன்னும் ருசிக்கும்.நீங்கள் கேட்கும் பாடலின் ராகம் புரியும்.நிலவுகள் புதிதாகும்.புத்தக வரிகளுக்கு நடுவில் விளங்கும் மௌனங்கள் விளங்கும.
உங்களை, உங்களுக்கே புதிதாக அறிமுகப் படுத்தும்,சில படைப்புகள்.
அந்த வகைப் படம் இது என நான் கருதுகிறேன்.
பையன்,பெண்ணைச் சந்திக்கும் கதைதான்.ஆனால் இது காதல் கதை அல்ல! என்ற முன்னுரையுடன் துவங்கும் படம்.
ஆம்.இது காதல் கதை அல்ல.காதலைப் பற்றிய கதை.
க்ரீட்டிங் கார்ட் கம்பெனியில் வேலை பார்க்கும் டாம் என்ற இளைஞன்,மேலதிகாரிக்கு உதவியாளராக வரும் சம்மர் என்னும் இளம் பெண்ணைப் பார்த்ததுமே இவள்தான், தான் தேடிக் கொண்டிக்கும் அந்த ஒற்றைப் பெண் என உணர்கிறான்.
பார்த்தவுடன் காதல் வயப் படும் டாம்.
காதலைப் பற்றி மட்டுமல்ல,நவீன வாழ்க்கையின் எந்த உறவின் நிரந்தரத்தின் மீதும் நம்பிக்கை இல்லாத பெண் சம்மர்.
இந்த இரண்டு பேரின் 500 நாள் வாழ்க்கைதான் படம்.

கடலியல் படித்து,நீர்முழ்கிக் கப்பலை எடுத்துக் கொண்டு, கடலின் ஆழத்துக்குப் போகும் விஞ்ஞானிகளுக்குக் கூடக் கிடைக்காத முத்துக்கள்,எந்தப் படிப்பறிவும் இல்லாமல் முத்துக் குளிக்கப் போகும் ஒரு மீனவனுக்குக் கிடைத்து விடுவதைப் போல, பெரிய தத்துவங்கள் மூலம் கூட விளங்காத வாழ்க்கையின் மெல்லிய அர்த்தங்கள், எளிய வார்த்தைகள் மூலம் விளங்கி விடும் என்பதற்கு இந்தப் படத்தின் வசனங்கள் எடுத்துக்காட்டு.

சம்மரை அறிமுகப் படுத்தும் வரிகள்.
'சம்மருக்கு மிகப் பிடித்த விஷயங்கள் இரண்டு.ஒன்று, அவளது நீளமான கூந்தல்.இரண்டு,அதை எந்த நேரத்திலும் அவள் வெட்டி விடுவது !'

இயக்குநர் கதை சொல்லி இருக்கும் முறை அற்புதம்.
வழக்கமாக,நாம் சொல்வதைப் போல 'ஒரு ஊரில்' என்று கதையை ஆரம்பித்துப் பால பாடம் நடத்துவதைப் போல இல்லாமல் நாயகன்,நாயகி பழகும் 500 நாட்களில் 300 வது நாள்,167 வது நாள், 410 வது நாள் என்று எங்கெங்கோ கதை நகருகிறது.
காதலர்களை எந்தத் தருணத்தில் பார்த்தாலும் சுவாரஸ்யந்தான் என்று சொல்லும் திரைக் கதை உத்தியின் பிரமிப்பு இன்னும் என்னைத் திகைக்க வைக்கிறது.
பிரம்மாண்டங்களைக் காட்டி, நமது வல்லுணர்வுகளை மிரள வைக்கும் படம் அல்ல இது.ஒற்றைப் புல்லாங்குழலை வைத்துக் கொண்டு, உங்கள் உள்மனதின் மெல்லுணர்வுகளை வருடிக் கொடுக்கும் வகை இந்தத் திரைப்படம்.
ஹாலிவுட் பாலாவோ அல்லது அவரது குருநாதர் கேபிள் ஷங்கரோ அல்லது திரை ரசனையில் வல்ல மற்ற சக பதிவர்களோ இந்தப் படத்தைப் பற்றி ஏற்கனவே எழுதியிருந்தால்,அதன் சுட்டிகளைத் தரும் படி கேட்டுக் கொள்கிறேன்.
படத்தைப் பார்த்து விட்டுச் சொல்லுங்கள்,நண்பர்களே.

http://www.youtube.com/watch?v=PsD0NpFSADM

வியாழன், நவம்பர் 26, 2009

விடுமுறைக் கடிதம்...

வேலைப் பளுவின் காரணமாக சில நாட்களுக்குப் பதிவுலகம் வர முடியாமை குறித்து வருந்துகிறேன்..

மீண்டும் சந்திக்கும் வரை நண்பர்களுக்கு வாழ்த்துக்களும் ,வணக்கங்களும்...

சனி, நவம்பர் 21, 2009

ஒரே இரவில் இரண்டு முதல் இரவுகள்

நான் விஜயமங்கலம் சின்னசாமி. ஒரு இளம் திரைப்பட இயக்குனன். எனக்குத்தான் இந்த அனுபவம் நிகழ்ந்தது.

விஜயமங்கலம், ஈரோடு மாவட்டத்தில் கோவை செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு சிற்றூர்.சாலை ஓரத்தில் எனது அப்பா நாச்சிமுத்து ஒரு டீக்கடை வைத்துள்ளார்.

எனது அம்மா வள்ளியம்மாள் சுட்ட மசால் வடையில் மயங்கிக்,கோவையிலிருந்து வடநாடு செல்லும் நிறைய லாரி டிரைவர்கள் குடும்பத்துக்காக வாங்கிச் செல்லும் வடைப் பொட்டணங்கள் நடு வழியில் கடக்கும் காவேரி ஆற்றுப் பாலங்களிலும்,கோதாவரி ஆற்றுப் பாலங்களிலுமே காலியாகி விடும் சிறப்பு எங்கள் கடைக்கு உண்டு.அம்மா சுடும் ஆம்லெட்டுக்களுக்காகவே கோழிகள் தனியாக முட்டையிடுகின்றனவா என்று கேட்காத டிரைவர்களே அந்த நெடுஞ்சாலையில் கிடையாது.

45 வயது வரை,அப்பா போட்ட டீயும், 40 வயது வரை அம்மா சுட்ட வடைகளும், ஆம்லெட்டுகளுமே என்னைச் சென்னை அண்ணா பலகலைக் கழகத்தில் கட்டிடக் கலைப் பொறியியல் படிப்பு வரைக்குமே இட்டுச் சென்றன.ஆனால் அவ்வளவு கஷ்டப் பட்டுப் படித்த படிப்பை இரண்டாவது ஆண்டிலேயே பாதியில் விட்டு,விட்டுப்,பிரபல திரைப்பட ஒளிப்பதிவு இயக்குனரான அசோக் மேத்தாவிடம் உதவியாளனாகச் சேர்ந்து விட்டேன்.

அடுப்பின் வழியே கொதிக்கும் பாலிலும்,எண்ணையிலும் அவர்கள் பார்த்துச் சுவைத்த வாழ்க்கையை,அசோக் மேத்தாவின் காமிராக்களின் வழியே குளிர்ந்த வைகறைகளிலும்,பனி மூட்டத்தில் வெட்கப் பட்டுச் சிரிக்கும் ரோஜாக்களிலும் நான் ருசித்த விந்தையை, நான் ரசித்த அளவுக்கு என்னைப் பெற்ற கிராமத்துப் பெற்றோர்கள் ரசித்தார்களா எனபது இது வரைக்கும் எனக்குத் தெரியாது.

'ஆனா,வள்ளி! நாமதான் நம்ம பையனுக்குத் தெரியாமே சின்னசாமின்னு பேரு வெச்சுட்டோம்ன்னு நினைக்கிறேன்!உண்மையிலே அவன் ரொம்பப் பெரியசாமி தெரியுமா?' என்பாராம் அப்பா, இரவு மூன்று மணிக்குக் கடையை மூடி விட்டு வந்த அசதியுடன்.

அம்மா, பெருந்துறை சந்தைக்குப் போய் விட்டு வந்த காய்கறி மூட்டை முடிச்சுக்களுக்கு நடுவில் அமர்ந்து சென்னையிலிருந்து எப்போதாவது ஊருக்கு வரும் என்னிடம் சொன்ன வார்த்தைகள் இவை.

பெற்றவர்கள் மகனை நேசிக்கும் அளவுக்கு,மகன்கள் பெற்றவர்களை நேசிக்கிறார்களா என்று எனக்குள்ளேயே நான் கேட்டுக் கொண்டது அப்போதுதான்.

வடபழனியில் ஒரு மொட்டை மாடியில் இருந்தது எனது அறை.ஒரு சின்ன பத்தடிக்குப் பத்தடி அறை.நடுவில் காலி மொட்டை மாடித் தளம்.எதிரே தடுப்புச் சுவரருகே ஒரு குளியலறை.கழிப்பறை.

அறை ஜன்னல் கதவுகளைத் திறந்தால் மட்டும், வாழ்க்கையின் நம்பிக்கையே எதிரே,அருகிலேயே தெரிவதைப் போல வடபழனிக் கோபுரம்.வடபழனி ஆலய மணி ஓசை கூடக் கேட்குமளவுக்கு முருகன் எனது அறைக்கு அருள் புரிந்திருந்திருந்தார்.நான் வடபழனிக்குப் போவதே இல்லை.ஆனால் முருகன் மட்டும் எனது அருகிலேயே இருந்தார் எனபதை மட்டும் நான் அடிக்கடி படப்பிடிப்புக்குச் செல்லும் அதிகாலைகளில் உணர்வேன்.

எனது ஒளிப்பதிவு இயக்குநரிடம் பெரிய படங்கள் வேலை பார்க்கும் போது, அவை எல்லாம் எவ்வளவு அபத்தக் களஞ்சியங்களாக உருவாகிக் கொண்டிருக்கின்றன எனபதை, அவருடனேயே அவர் மது அருந்தும் தனிமைகளில் வாதிடுவேன்.அவர் சிரிப்பார்.

'சினிமாங்கறது வெறும் ஆர்ட் மாத்திரமில்லே.பெரிய பிசினஸும் கூட.சரஸ்வதியும்,லக்ஷ்மியும் நாட் ஆல்வேய்ஸ் குட் ஃப்ரண்ட்ஸ்!' என்பார் அசோக் மேத்தா.

'சினிமாவுலே மாத்திரமில்லே,வாழ்க்கையிலும் கூட இதுதான் உண்மை.சரஸ்வதிக்கும், லக்ஷ்மிக்கும் நடக்கற சண்டையிலே பெரும்பாலும் லக்ஷ்மிதான் ஜெயிப்பா.இல்லே சரஸ்வதி விட்டுக் குடுத்துடுவா!' என்பார் அசோக் மேத்தா.

ஒருநாள் நான் பாண்டி பஜாரில் செருப்பு வாங்க அலைந்து கொண்டிருந்த போது, அசோக் மேத்தாவிடமிருந்து ஃபோன் வந்தது.உடனே வீட்டுக்கு வரும் படி அழைத்தார்.

நான் பஸ் பிடித்து அவரது அண்ணா நகர் வீட்டுக்குப் போனபோதுதான் அவர் எனக்கு டாக்டர் நிர்மல் குமாரை அறிமுகப் படுத்தினார்.டாக்டர்,அமெரிக்காவில் நியூஜெர்சியில், மிகப் பெரிய கண் மருத்துவராக முப்பது ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றுகிறார் என்பதெல்லாம் எனக்குப் பின்னால்தான் தெரிந்தது.அசோக் மேத்தாவின் ஒளிப்பதிவுக் கலைக்கு அந்தக் கண் மருத்துவர் ஒரு தீவிர ரசிகர்.அசோக் மேத்தாவின் இயக்கத்தில் ஒரு படம் பண்ண வேண்டும் என்ற ஆர்வத்தில் வந்திருக்கிறார்,டாக்டர் நிர்மல் குமார்.

'டாக்டர் நிர்மல்,எனக்கு லென்ஸும்,லைட்டிங்கும்தான் தெரியும்.ஆனாக் கதை தெரிஞ்சவன் இந்தப் பொடியன்தான்.இவனை டைரக்டராப் போட்டுப் படம் பண்ணுங்க,நான் காமிராப் பண்றேன்!'என்றார் ஐம்பது வயதான எனது குருநாதர்.

நான் திகைத்துப் போய் நின்று விட்டேன்.

நிர்மல் குமார் என்னைச் சந்தேகத்துடனேயே பார்த்தார்.
'உம் பேரு?'
'சின்னசாமி!' என்றேன்.

நிர்மல்குமார் அசோக் மேத்தாவை ஒருமுறை பார்த்து விட்டுப் பிறகு என்னிடம் கேட்டார்.
'நீ படம் டைரக்ட் பண்ணுவியா?'

அவர்கள் இருவரையும் ஒரு கணம் பார்த்தேன்.

வடபழனி ஆண்டவனின் கோபுரத்தை மட்டும் நினைத்துக் கொண்டு 'பண்ணுவேன்,சார்!'என்றேன்.

நான் வேலை பார்த்த பெரிய படங்களின் மேல் இருந்த கோபத்தில்தான்,எனக்கு அந்தத் துணிச்சலே வந்ததென்று இப்போது நினைக்கிறேன்.

'கதை வெச்சிருக்கியா?' என்றார் நிர்மல் குமார்.

'இருக்கு சார்!' என்றேன்,கதை என்னவென்று தெரியாமலேயே.

'இப்பவே சொல்ல முடியுமா?'

ஒரு நிமிடமே அமைதி.

'பாத்ரூம் போயிட்டு வந்து சொல்லட்டுமா,சார்?' என்றேன்.

'ஓ,ஷ்யூர்!' என்றார் நிர்மல்குமார் மெல்லிய புன்னகையுடன்.
அசோக் மேத்தா மட்டும் என்னையே உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தார்.

பாத்ரூமில் சிறுநீர் கழிக்கும் போது, என் மனமே காலியாக இருந்தது.

வாஷ் பேசினில் முகம் கழுவும் போது மட்டும், அம்மா சொன்ன அப்பாவின் வார்த்தைகள் எனக்குள் எதிரொலித்தன.

'நாமதான் நம்ம பையனுக்குத் தெரியாமே சின்னசாமின்னு பேரு வெச்சுட்டோம்ன்னு நினைக்கிறேன்!உண்மையிலே அவன் ரொம்பப் பெரியசாமி தெரியுமா?'

முகத்தை அழுந்தத் துடைத்துக் கொண்டு வந்து அவர்களிடம் எனது கதையைச் சொன்னேன்.

அடுத்த மாதம், அந்தக் கதையின் ஷூட்டிங்குக்குத்தான் நான் நியூயார்க் போகிறேன்!

(படப் பிடிப்புத் தொடரும்)

புதன், நவம்பர் 04, 2009

ஸ்வாமி ஓம்கார் கேட்ட கேள்விகள்...

Swami omkar to me show details 09:37 (2 hours ago)
சாதாரண மனிதன் உடலுறவின் மூலமும், கலைஞன் கற்பனையின் மூலமும் தனது அளவற்ற சக்தியையும், எக்ஸ்டஸியையும் வெளிப்படுத்துகிறான்.-ஓஷோ
ஆன்மீகமுள்ள ஷண்முகப்ரியனுக்கு,

உங்களின் ரசிகனில் ஒருவன் எழுதும் வரிகள் இவை.
உங்கள் வலைப்பக்கத்தில் நீங்கள் எழுதிய தொடரான ’காதல் மலரும் கணங்கள்’ மிக அருமையானதாக இருந்தது.அதை தொடர்ந்து உங்களிடம் சில கேள்விகள்.
1) உங்கள் கதையின் நாயகி ஆன்மீக உணர்வு கொண்டவளாக சித்தரிக்கபட்டுள்ளது. ஒரு முப்பது வருடத்திற்கு முன் இக்கதையை நீங்கள் எழுதியிருந்தாலும் அவ்வாறு சித்தரிக்கபட்டு இருக்குமா? அல்லது தற்சமயம் உங்கள் ஆன்மீக தேடல் அதற்கு காரணமா?
2) இத்தொடர்கதையை இதற்கு முன் நீங்கள் வலைதளத்தில் எழுதிய தொடர்கதைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக உணர்கிறேன். அவ்வாறு நீங்களும் உணர்கிறீர்களா? ஆம் என்றால் அதன் காரணம் என்ன என கூறமுடியுமா?
3) தொடரின் முடிவில் நீங்கள் இக்கதை திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறி இருக்கிறீர்கள். கடவுளின் அருளால் இக்கதை திரைப்படமாக்குவதாக கொண்டால், தற்கால திரைசூழலில் இக்கதை திரையில் வந்தால் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் தந்து படமாக்கும் சாத்திய கூறுகள் உண்டா? இத்தகைய ஆன்மீக விஷயங்களை திரையுலகம் தாங்குமா?
4) கன்னிகா மற்றும் காதல் மலர்ந்த கணங்கள் இவற்றில் பெண்கள் முக்கியத்துவமும், வர்ணனையும் அதிகம் இடப்பெறகாரணம் என்ன?
5) கன்னிகா தொடரில் கூட சில பகுதிகள் தோய்வுடன் இருந்தது. ஆனால் இத்தொடர் ஒவ்வொரு பகுதியும் உற்சாகத்திடன் காணப்பட்டது. இறுதி பகுதி சினிமாவின் தன்மையில் இருந்தாலும் ஒரு விறுவிறுப்பையும், கருத்தையும் கூறுகிறது. இத்தொடரை நீங்கள் எழுதும் பொழுது அப்படி உணர்ந்தீர்களா? எது உங்களை இவ்வாறு எழுத தூண்டியது?
பல கேள்விகள் இருந்தாலும் பொதுக்கேள்வியாக இவற்றை வைக்கிறேன்.
உங்கள் பதிலை வலைப்பதிவில் எதிர்பார்க்கிறேன்
அன்பும் ஆசியும்ஸ்வாமி ஓம்கார்.

எனது சிந்தனைகளின் அணுகுமுறையை முற்றிலும் மாற்றியமைத்த ஓஷோவின் மேற்கோளுடன் நீங்கள் உங்களது ரசனையைப் பகிர்ந்து கொள்ள வந்ததை எனது பேறாகக் கருதுகிறேன்,ஸ்வாமிஜி.

//உங்களின் ரசிகனில் ஒருவன் எழுதும் வரிகள் இவை.
உங்கள் வலைப்பக்கத்தில் நீங்கள் எழுதிய தொடரான ’காதல் மலரும் கணங்கள்’ மிக அருமையானதாக இருந்தது.//

உங்களை ரசிகராகப் பெற்றதை விட இனி இந்தக் கதைக்கு வேறெந்தப் பெருமையும் கிடைத்து விட முடியாது.இந்தக் கதை புண்ணியம் செய்திருக்க வேண்டுஎன நினைக்கிறேன்,ஸ்வாமிஜி.

1) உங்கள் கதையின் நாயகி ஆன்மீக உணர்வு கொண்டவளாக சித்தரிக்கபட்டுள்ளது. ஒரு முப்பது வருடத்திற்கு முன் இக்கதையை நீங்கள் எழுதியிருந்தாலும் அவ்வாறு சித்தரிக்கபட்டு இருக்குமா? அல்லது தற்சமயம் உங்கள் ஆன்மீக தேடல் அதற்கு காரணமா?

முப்பது வருடங்களுக்கும் முன்...// எனது 'ஆன்மீகத் தேடல்' பற்றி...

முப்பது வருடங்களுக்கும் முன்னால் கிட்டத் தட்ட என்னுடைய இருபதுகளில் 'குருமூர்த்தி' என்ற ஒரு நாவலை எழுதி உள்ளேன்.அதனுடைய கையெழுத்துப் பிரதி இன்னும் என்னிடத்தில் உள்ளது.
நான் அணுகிய சில பதிப்பகங்கள் அப்போது அதனை வெளியிடத் தயங்கி மறுத்து விட்டனர்.
அதனைப் பதிப்பிற்கும் முயற்சியில் இன்னும் யாரென்று தெரியாத ஒரு சந்யாசி உட்பட ஒரு கூட்டத்தில் அதனைப் படித்து மட்டும் காண்பித்தேன்.அவர் மட்டும் வெகுவாக என்னைப் பாராட்டினார்.
மற்ற எல்லோரும் எனது சின்ன வயதைக் கண்டு அதிசயித்தார்கள் அன்றி அது அச்சுக்கே வரவில்லை.
'கடை விரித்தோம் கொள்வார் இல்லை, கட்டிக் கொண்டோம்' என்று உங்களவர்களில் ஒருவர் சொன்னதைப் போல நானும் அதற்குப் பின் எந்த சிரத்தையும் எடுக்காமல் விட்டு விட்டேன்.

அந்த சந்யாசியை மட்டும் சில வருடங்கள் கழித்து எனது கல்யாணக் கூட்டத்தில் பார்த்தேன்.அழைக்காமலேயே வந்திருந்தார்.அவரிடம் ஆசி வாங்கினேனானா என்பது கூட இப்போது ஞாபகம் இல்லை.
ஒரு சாதாரண மனிதனின் மனம் எப்படி அனைத்தும், களைந்து முக்தி அடைகிறது என்பதை உள்ளிருந்து பார்க்கும் கதைக் களம் அது.
அந்த நாவலுடன் ஒப்பிடும் போது இந்தக் கதை, எங்களது திரைப் படப் பாணியில் சொல்வதென்றால் 'கமர்ஷியல்'!
பார்ப்பவர்களைப்,படிப்பவர்களை ஒரு கணம் கூட நழுவ விடாமல்,இறுக்கிப் பிடித்துக் கொண்டே கொண்டே படைக்கும் பயம்.
ரசிகனது சிறிய கொட்டாவி கூட எங்களது வாழ்க்கையையே அலைக்கழிக்கும் ஒரு பெரும் புயல்.!
'அன் இன்டிரஸ்டிங் மீன்ஸ் டெட்' என்பதுதான் எங்கள் தாரக மந்திரம்.

திரையுலகத்தின் உள்ளே வந்து பார்க்கும் போது,மக்களைக் கட்டிப் போடும் மந்திரக் கயிறுகளை சதா தேடிக் கொண்டிருப்பதையே முழு நேர வாழ்க்கையாக வைத்திருப்பவர்களைப் பார்க்கலாம்.

பெண்களின் மார்புகள்,ஆண்களின் உக்கிரம்,இசை,நகைச் சுவை,கண்ணீர்,கவிதை, உணர்ச்சிப் பெருக்குகள்,கடவுள்கள்,மதம்,மொழி,மஹான்கள்,கொடுங்கோலர்கள்,கற்பு,விபச்சாரம் அனைத்தையுமே,அனைவரையுமே திரை அரங்குகளில் விற்கப் படும் டிக்கெட்டுக்களின் எண்ணிக்கை வழியாக மட்டும் பார்க்கப் பட வேண்டிய கட்டாயக் கலை இது.
அதனால் ஆன்மீகம் 'இன்டெரஸ்டிங்' என்ற ஒரே காரணத்தால் மட்டுமே என்னைக் கவர்கிறது.ஆங்கில நாவல்களைப் போல,விஞ்ஞானத்தைப் போல..சோதிடத்தைப் போல..
படைப்புக்கான 'பொடன்ஷியல்' உள்ளது அனைத்துமே எனக்கு ஆன்மீகம்தான்.
அதனால் ஆன்மீகத் தேடல் என்று இதனக் கூற முடியாது.

2) இத்தொடர்கதையை இதற்கு முன் நீங்கள் வலைதளத்தில் எழுதிய தொடர்கதைக் காட்டிலும் சற்று வித்தியாசமாக உணர்கிறேன். அவ்வாறு நீங்களும் உணர்கிறீர்களா? ஆம் என்றால் அதன் காரணம் என்ன என கூறமுடியுமா?//

இல்லை,ஸ்வாமிஜி.எல்லாக் கதைகளையும் போல இதையும் ஒரு வழக்கம் போலக் கதையாக எண்ணித்தான் எழுதினேன்.
ஒரே ஒரு வித்தியாசம்.
இது விற்பனைக்கல்ல என்ற தைரியம்.
அதனால் வரிக்கு வரி எந்த முன்திட்டமிடலும் இல்லாமல் சித்தம் போன போக்கில் எழுதிய கதை.
ஆஜ்மிர் என்று ஊர் தானாக வந்து விழுந்த பின்னர்தான் இணையத்தில் சென்று அந்த ஊரைப் பற்றித் தெரிந்து கொண்டேன். பின்னர் வந்ததுதான் அங்கே இருக்கும் தர்க்காவும்,ஆஜ்மீர் பாபாவும்.
பின்னாளில் பல உயிர்களைக் காப்பாற்றும் ஒரு வீரன் ஒரு கட்டத்தில் தனது உயிருக்காக எப்படியெல்லாம் போராடினான் என்ற மையக் கருதான் இந்தக் கதையாக வளர்ந்தது.
ஒரு வீர்யமுள்ள கதைக் கரு தன்னைத் தானே கதையாக வளர்த்துப் பெருகிக் கொள்ளும் என்பது நான் அனுபவத்தில் கண்ட ஒன்று.

3) தொடரின் முடிவில் நீங்கள் இக்கதை திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என கூறி இருக்கிறீர்கள். கடவுளின் அருளால் இக்கதை திரைப்படமாக்குவதாக கொண்டால், தற்கால திரைசூழலில் இக்கதை திரையில் வந்தால் கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் தந்து படமாக்கும் சாத்திய கூறுகள் உண்டா? இத்தகைய ஆன்மீக விஷயங்களை திரையுலகம் தாங்குமா?

முதலிலேயே சொன்னதைப் போல் இது விற்பனைக்காக எழுதிய கதை அல்ல.அந்தக் கதைகளை நான் பதிவுகளில் எழுதுவதில்லை!

சங்கத்தில் பதிவு பண்ணியது இதில் வரும் குணச் சித்திரங்களைக் களவு போகாமல் காக்க.

இந்தக் கதை திரைப்படமாக வேண்டுமானால் முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை எழுதப் படவேண்டும்.
பட்ஜெட் பெரிதானால் பெரிய ஸ்டார் வேல்யூ உள்ள ஹீரோவை முதலில் நீங்கள் உள்ளே இழுத்து வரவேண்டும். அதற்கு ஏற்ற முறையில் கதை திருத்தப் படவேண்டும்.
படத்தைப் பெரிதாக விற்பதற்கு இப்போது கதாநாயகிகள் பயன்படுவதில்லை.அதனால் நாயகிகளை மட்டும் நம்பிப் படம் எடுப்பதானால் பட்ஜெட்டைச் சுருக்க வேண்டும்.அதுதான் பாதுகாப்பு. அந்தச் சுருங்கிய பட்ஜெட்டுக்குக் கதை இடம் கொடுக்காதெனில் கதையைத்தான் கைகழுவி விடவேண்டும்.
'அருந்ததி' போன்ற நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பெரும் வெற்றிப் படங்கள் உருவானதுக்குக் காரணம், முழுக்க முழுக்க அந்த இயக்குநர்,தயாரிப்பாளரின் முழுமையான,துணிச்சல்.நம்பிக்கை.வெறி.அளவற்ற ஈடுபாடு.
அந்த மாதிரி நிகழ்வுகள் விதிகள் அல்ல.விதி மீறல்கள்.
தயரிப்பாளர்களே விரும்பினாலும்,பெரும் பணத்தை ,வெறும் கதையை மட்டும் நம்பி முதலீடு செய்வது எனக்கு எப்போதும் உடன்பாடில்லை.
புதிய முகங்கள்.சின்ன பட்ஜெட்.வித்தியாசமான கதை.இதுதான் இன்றைய ஃபார்முலா.
இது திரைப் படத்துக்குப் பின்னாலிருந்து யோசிப்பது.
முன்னால் கொட்டகைகளில் அமரும் ஆடியன்ஸுக்கு படம் நன்றாக இருந்தால் போதும்.பாகுபடின்றி ஓட்டிக் காண்பித்து விடுவார்கள்! தயாரிப்பாளரின் பணத்துக்குத்தான் எல்லைகள் உண்டு.மக்களின் ரசனைக்கு எல்லைகளே இல்லை!

4) கன்னிகா மற்றும் காதல் மலர்ந்த கணங்கள் இவற்றில் பெண்கள் முக்கியத்துவமும், வர்ணனையும் அதிகம் இடப்பெறகாரணம் என்ன?

நான் ஒரு ஆணாக இருப்பதுதான் ஸ்வாமிஜி!

5) கன்னிகா தொடரில் கூட சில பகுதிகள் தோய்வுடன் இருந்தது. ஆனால் இத்தொடர் ஒவ்வொரு பகுதியும் உற்சாகத்திடன் காணப்பட்டது. இறுதி பகுதி சினிமாவின் தன்மையில் இருந்தாலும் ஒரு விறுவிறுப்பையும், கருத்தையும் கூறுகிறது. இத்தொடரை நீங்கள் எழுதும் பொழுது அப்படி உணர்ந்தீர்களா? எது உங்களை இவ்வாறு எழுத தூண்டியது?//

கன்னிகா நீள்தொடராக உருவாக ஆரம்பித்து விட்டது.பதிவுலகின் அவசர ரசனைக்கு அது ஒவ்வாதது என்றதனால்தான் அதனைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்டேன்.

//சினிமாவின் தன்மையில் இருந்தாலும் ....//

நான் முதன் முதலில்'உறவாடும் நெஞ்சம்' என்ற படத்துக்குக் கதை-வசனம் எழுதிய போது எனக்கு வயது 20.!

37 வருடங்கள் நான் உண்டு,உறங்கி வாழ்ந்து கொண்டிருக்கும் திரைப் படக் கலையின் பாதிப்பு இல்லாமல் நான் எப்படி ஸ்வாமிஜி எழுத முடியும்?

விஷுவல்களும்,உண்ர்ச்சிகளும் இல்லாத ஒவ்வொரு ஃப்ரேமும் வீண் என்பது நான் கற்று வந்த கலை.
எப்போதுமே ஒன்றினுடைய இறுதிப் பகுதி விறுவிறுப்பாகத்தான் இருக்கும்.
இறுதிகளுக்கே உரிய இயல்பு அது.
அதுவும் திரைத் துறையில்,படத்தின் உச்ச கட்டம்தான் நமக்கும் படம் பார்ப்பவர்களுக்கும் இருக்கும் கடைசி நெருக்கம்.
அங்கே அவர்களது கவனத்தைத் தவற விட்டு விட்டால் மீண்டும் அவர்களைப் பிடிக்கவே முடியாது.
காதலியின் ரயில் போன பிறகு, ஓடிவரும் காதலனைப் போல ஆகி விடுவோம்.

விறு விறுப்பு இல்லையென்றால் கிளைமேக்ஸைத்தான் மாற்ற வேண்டுமே தவிர,விறுவிறுப்பை அல்ல!

இன்னொன்று.பதிவுலக நண்பர்கள் நிறையப் பேர் 'சினிமாத் தனம்' என்ற சொல்லைக் குறிப்பிட்டிருந்தார்கள்.
மந்தமான நமது இயல்பு வாழ்க்கையில் இருந்து சற்று நேரம் தப்பிக்கவே நமக்குச் சினிமாவின் போலி விறுவிறுப்பு தேவைப் படுகிறது.
அந்தத் தேவை சிலருக்கு சீக்கிரமே பூர்த்தியாகி விடுகிறது.பல பேருக்கு அது பூர்த்தி ஆவதே இல்லை.
விறுவிறுப்புப் போதும் என்று ஆனவர்கள் நமது இயல்பு வாழ்க்கையின் மந்தத்துடன், படக் கதையின் ஊட்டப் பட்ட விறு விறுப்பை,வேகத்தை ஒப்பிட்டுப் பார்த்துச் சொல்லும் வார்த்தையே இந்த 'சினிமாத்தனம்.'

இந்த 'சினிமாத்தனம்தான்' சரியான மாயை.
இந்த உணர்வு மக்களுக்கு எங்கே தோன்றும் என்று யாராலும்,எந்த நியூட்டன்,ஐன்ஸ்டீன் விதியாலும் தீர்மானிக்க முடியாதது.
படங்களின் வெற்றி தோல்வியைத் தீர்மானிப்பது இந்த நூலிழையைப் பற்றிய கணிப்புத்தான்.
ஒரே காட்சியில் காதல் வருவதை ஒரு படத்தில் ஒத்துக் கொள்வார்கள்.அடுத்த படத்தில் காறித் துப்புவார்கள்.
சண்டைக்காட்சியை ஒரு படத்தில் சூப்பர் என்பார்கள்.
அடுத்த படத்திலேயே கிண்டலடிப்பார்கள்.

சினிமாத் தனம் என்று அவ்வப்போது ரசிகர்கள் சொல்வது, கல்யாண மாப்பிள்ளை, காசி யாத்திரை போவது மாதிரி!
அதை உண்மையான சந்யாசம் என்று எடுத்துக் கொண்டால் கல்யாணமே நடக்காது!
என்ன,இங்கே எப்போது ரசிகர் காசி யாத்திரை போவார்,திரும்பத் தாலி கட்ட வருவார் என்று யாருக்குமே தெரியாது!இந்த விந்தையை அறியத்தான் நிறைய சினிமாக் காரர்கள் ஜோதிடத்தை நாடுகிறார்கள்.

//அன்பும் ஆசியும்ஸ்வாமி ஓம்கார்//

என்னுடைய முதல் படமான 'ஒருவர் வாழும் ஆலயம்' தவிர நான் எனது முழு நிறைவுடன் ஒரு படத்தை இன்னும் எழுதவோ,இயக்கவோ இல்லை.உங்கள் அன்பும் ஆசியும் அதற்கு என்னை வழி நடத்திச் சென்றால் நான் நிறைவடைவேன்.

சரணங்கள்,ஸ்வாமிஜி.

திங்கள், நவம்பர் 02, 2009

காதல மலரும் கணங்கள் 9

அமிர்தவர்ஷினி
---------------------
9.
அப்பாவிடம் எங்கள் காதலைச் சொன்ன அடுத்த நாள் அமிர்தவர்ஷினி என்னைப் பார்க்க வரவில்லை.ஃபோனிலும் கிடைக்கவில்லை.ஏதாவது அவளுக்கே உடம்புக்குச் சரி இல்லையா?
மதியம் அப்பா சாப்பாடு கொண்டு வந்த கொடுத்த போது, அது ஹோட்டல் சாப்பாடாக இருந்தது,எனக்கு இன்னும் ஐயத்தைக் கிளப்பியது.அப்பாவுக்கே அன்று இரவு ஃபோன் செய்து கேட்டேன்.சேஷாத்திரி அங்கிளுக்கு உடம்புக்குச் சரி இல்லை என்று அவரது வீட்டுக்குச் சென்றிருக்கிறாள் என்று அப்பா சொன்ன போதுதான் நான் கொஞ்சம் ஆறுதல் அடைந்தேன்.ஆனால் அன்று மாலையே சேஷாத்திரி அங்கிள் எதேச்சையாக என்னைப் பார்க்க வந்திருந்தார்.அவரே அமிர்தவர்ஷினியைத் தேடி வந்திருந்தார்.இதைக் கேட்ட பிறகுதான் நான் பதறிப் போனேன்.
அப்பா என்னிடம் எதையோ மறைக்கிறார் என்று புரிந்தது.
அடுத்த நாள் மதியம் அப்பா எனக்குச் சாப்பாடு எடுத்து வந்த போதுதான் உண்மை புரிந்தது.

'அமிர்தவர்ஷினி எங்கேப்பா?' என்றேன் எடுத்த எடுப்பில்.
அப்பா என்னை ஒரு முறை ஆழமாகப் பார்த்தார்.
'இனி அவ இங்கே வர மாட்டாப்பா'
'ஏன்?'
'அவளை நான் வேறே ஊருக்கு அனுப்பிட்டேன்.' என்றார் அப்பா.
நான் ஒரு கணம் திகைத்துப் போய் விட்டேன்.
'ஏம்பா?'
'சாகப் போற என்னோட மகனுக்காக வாழப் போற அந்தப் பொண்ணோட வாழ்க்கையைப் பலி குடுக்க நான் தயாரா இல்லே!' என்றார் அப்பா அமைதியாக.

'அப்பா' என்று கத்தியே விட்டேன் நான்.
'நாங்க ரெண்டு பேரும் உயிருக்குயிராக் காதலிக்கிறோம்ப்பா'
'ரெண்டுலே ஒரு உயிருக்குக் கேரண்டி இல்லையேப்பா!' என்றார் அவர், முற்றிய துயரத்தில் மட்டும் வரும் அமைதியுடன்.
'அமிர்தவர்ஷினியே இதுக்கு ஒத்திருக்க மாட்டாளேப்பா?'
'நானே ஒத்துக்காத விஷயத்தை அவ எப்படிப்பா ஒத்துக்குவா? அவ பெரியவங்களை மதிக்கிற பொண்ணு!' என்றார் அவர்.

'சரி.அவளை எங்கே அனுப்பப் போறீங்க? அவகிட்டே நான் பேசிக்கிறேன்.'
'நீ பேசக் கூடாதுங்கறதுக்காகத்தானே, உன்னை இனிப் பார்க்கக் கூடாதுன்னு சத்தியம் வாங்கிட்டு அவளை நம்ம வீட்டுலே இருந்தே அனுப்பிச்சுட்டேன் '

நான் அவரை வெறுமையின் ஆழத்துடன் ஒரு கணம் பார்த்தேன்.

'இதுவரைக்கும் என்னோட அப்பா ஒரு புழு,பூச்சிக்குக் கூட துரோகம் பண்ணியிருக்க மாட்டார்ன்னு என்னோட ஃப்ரண்ட்ஸ்கிட்டே எல்லாம் அடிக்கடி உங்களைப் பத்திப் பெருமை அடிச்சுட்டிருப்பேன்.இப்போ எல்லாத்துக்கும் சேர்த்து வெச்சு உங்க சொந்த மகனையே கொன்னுட்டீங்களேப்பா!' என்றேன் நான் கண்களில் ஈரம் வற்றிப் போய்..

சற்று நேரம் தலை குனிந்து நின்றிருந்த அப்பா, மெல்லத் தலை நிமிர்ந்து என்னைப் பார்த்தார்.

முழுக்க வடிந்திருந்தார் அவர்..
'உங்க அம்மாவை இழந்து முப்பது வயசுலே நான் பட்ட கஷ்டத்தைப், பதினெட்டு வயசுலிருந்தே அந்தப் பொண்ணு அனுபவிக்கறதை என்னாலே பார்க்க முடியாதுப்பா! காதலோட வலி, என்னன்னு உன்னை மாதிரி சின்னப் பசங்க மட்டுமில்லே..,என்னை மாதிரி வயசானவங்களும் புரிஞ்சுக்குவாங்கன்னு ஏனோ உங்களுக்குத் தெரிய மாட்டேங்குது!' என்றார் அப்பா,குரல் உடைய .

தளர்ந்திருந்திருந்த அவரை நான் அணைத்துக் கொண்டேன்.

'என்னை மன்னிச்சுடு,சரவணா' என்று அப்போதுதான் அவர் கதறினார்.

'நான் உங்களைப் புரிஞ்சுக்காமே பேசினப்போ அழாமே,இப்போ முழுக்கப் புரிஞ்சுகிட்டதுக்கப்புறம் ஏம்பா அழறீங்க?' என்று அவரை இன்னும் ஆறுதலாக அணைத்துக் கொண்டேன்.
அவர் கொண்டு வந்திருந்த மதிய உணவைச் சாப்பிட்டு முடித்தேன்.அவர் அரைகுறை நிம்மதியுடன் என்னிடம் விடை பெற்றுப் போனார்.
பிறகு சற்று நேரம் அமிர்தவர்ஷிணி என்னிடம் கொடுத்திருந்த ஆஜ்மீர் பாபாவின் திருக்குரான் கையெழுத்துப் பிரதியைப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

அவளை இனிமேல் பார்க்க முடியாது என்பதை நினைத்தாலே ஆக்சிஜன் இல்லாத காற்றை சுவாசிப்பதைப் போல, நெஞ்சை அடைத்து மூச்சுத் திணறியது.

கையில் இருந்த அந்த வேத நூலின் கையெழுத்துப் பிரதியையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

'எப்படி இத்தனை நூற்றாண்டுகளாக,,இத்தனை கோடி மனிதர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும் ஒரு தெய்வீகம் என்னை மாத்திரம் கைவிடும் என்று ஒரு வெறி,திடீரென எனக்குள் கிளம்பியது.

தர்க்கம் அனைத்தும் உடைய,அந்தக் கையெழுத்துப் பிரதியைத் தொட்டுக் கும்பிட்டு விட்டு, மருத்துவ மனையிலிருந்து வெளியேறினேன்.

ஒரே,ஒருநாள் இடைவெளியில் என்னையும்,அமிர்தவர்ஷிணியையும் பிரிக்க முடியுமென்றால்,அது ரயில்களால்தான் முடியும் என்று ஏனோ தோன்றியது.

சென்ட்ரலை நோக்கி ஓடினேன்.என்னிடம் பணம் எதுவும் இல்லையாதலால் வேறு வாகனங்களின் உதவி ஏதுமின்றி ஓடினேன்.மூச்சு வாங்கியது.ஆனால் ஒவ்வொரு மூச்சுக் காற்றும் அமிர்தவர்ஷிணியைத் திரும்ப எனக்கு மீட்டுத் தரும் என்ற நம்பிக்கையுடன் ஓடினேன்.
ஓடியே சென்ட்ரலை அடைய ஒரு மணி நேரத்துக்கும் மேலே ஆனது.
சென்ட்ரல் ஸ்டேஷனை நெருங்கிய போது என்னால் கிட்டத்தட்ட நடக்க முடியாத நிலைமை.
அமிர்தவர்ஷிணியை முதன் முதலாக நான் பார்த்த அதே அந்தி வேளை. மயங்கிய நிலையில் அடைந்த என்னை அதே பிங்க் சூரியன்,பரிதாபமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

சென்ட்ரல் ஸ்டேஷனின் வழக்கமான கூட்டத்தில் என்னுடைய அமிர்தவர்ஷிணி எங்கே?
எந்த ரயிலில் அமர்ந்து என்னிடம் இருந்து ஒரேயடியாகப் பிரியப் போகிறாள்?
அல்லது அவளது ரயில் ஏற்கனவே கிளம்பிப் போய் விட்டதா?
முதலில், ரயில் நிலையம்தான் நான் அவளைத் தேடி அடைய வேண்டிய உண்மையான இலக்கா?
ஏதோ ஒரு நம்பிக்கையில்,பரபரப்பான கூட்டத்துக்கு மத்தியில், அரைகுறை மயக்கத்துடன் அவளது பெயரைச் சார்ட் லிஸ்ட்டில் தேட ஆரம்பித்தேன்.
மொய்த்துக் கிடந்த அந்த இருபத்தாறு ஆங்கில எழுத்துக்களுக்குள்,எனது தலையெழுத்து மறைந்து கிடக்க,அவளது பெயரை அந்தத் தள்ளு முள்ளலில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அது மட்டுமல்ல,வலுவான அந்தக் கூட்டம் என்னைப் பிதுக்கி வெளியே தள்ளி விட, நான் கிட்டத்தட்ட அந்த இடத்திலிருந்தே வெளியே வந்து விழுந்தேன்.
மூச்சு வாங்கித், தலை சுற்றியது.
அப்போது கசங்கிய உடைகளுடன் வெளியே வந்த ஒருவன் 'டேய், நீ பார்த்த பேரு,நம்ம அம்சவேணி இல்லேடா, யாரோ அமிர்தவர்ஷிணியாம்!' என்றான் தனது நண்பனிடம்.
மயங்கி விழும் சூழ்நிலயில் இருந்த என்னை,அந்த ஒற்றைப் பெயர் மீண்டும் உயிர்ப்பித்தது.
அந்த இளைஞனிடம் தட்டுத் தடுமாறிப் போய் 'சார் எந்த ட்ரெயின்லே,அமிர்தவர்ஷிணி பேரைப் பார்த்தீங்க?' என்றேன் மூச்சு வாங்க. எனது முற்றிலும் இயலாத நிலைமையை ஒருமாதிரியாகப் பார்த்துவிட்டு அவன் 'க்ரேண்ட் ட்ரன்க்' என்றான்.
ஓடினேன்.
பிளாட்ஃபார்ம் கண்டு பிடித்து, நான் ஓடிய போது ரயிலின் கடைசிப் பெட்டி மறைந்து கொண்டிருந்தது.
'அமிர்தவர்ஷிணி' என்று கத்தியபடி, ஓடிய ரயிலுக்குப் பின்னால் ஓடினேன்.

ஸ்டேஷனைத் தாண்டிய பின்னர் வரும் ரயில் பாதையின் ஓரத்துக் கருங்கற்கள் எனது பாதங்களைக் குத்திக் கிழித்தன.
ரத்தம் வந்த எனது பாதங்கள் என்னைக் கடைசியாகத் தடை செய்யப் பார்த்தன.ஆனால் நான் எப்படி ரத்தம் வழிய,அத்தனை வலிகளையும் தாண்டி ஓடினேன் என்று இதுவரைக்கும் எனக்குத் தெரியாது.
அவள் எங்கே நடுவழியில், எந்த ஊரில் இறங்கினாலும், அப்பாவிடம் அவள் அளித்திருந்த சத்தியம் அவளை, என்னை இனிமேல் சந்திக்க விடாது என்ற அச்சம்தான் என்னைத் துரத்தியது.
ஆனால் ஏற்கனவே தளர்ந்து,விழுந்திருந்த எனது உடம்பால் இப்போது வேகம் எடுத்து விட்ட ரயிலின் ஓட்டத்தைப் பிடிக்க முடியவில்லை.

'அமிர்தவர்ஷிணீ ' என்று கடைசியாக எனது சக்தி முழுவதையும் திரட்டிக் கத்தினேன்.
எனது உயிரின் கதறல் கேட்டதோ என்னவோ,ரயில் மெதுவாக நின்றது.
ஏதோ சிக்னல் கிடைக்கவில்லை போலிருந்தது. தூரத்தில் எரிந்த சிகப்பு விளக்கு, எனது கண்ணுக்குப் பச்சை விளக்காகத் தெரிந்தது.
தள்ளாடித் தள்ளாடி ஓடினேன்.

'அமிர்தவர்ஷிணீ !'

யாரும் பெட்டிக்குள்ளிருந்து எட்டிக் கூடப் பார்க்கவில்லை.

சிக்னல் கிடைத்து மீண்டும் ரயில் கிளம்பியது.இனிப் பார்க்க முடியாது என்று எனது கண்கள் சொருகி விட்டன.
தடதடவென்று ஓடத் தொடங்கிய ரயில் பெட்டியிலிருந்து, கடைசியாக அமிர்தவர்ஷிணியின் முகம் எட்டிப் பார்த்தது!
அவள் முகத்தை அவ்வளவு அழகாக நான் என்றுமே பார்த்ததில்லை.
அவளது பெயரைக் கூப்பிடக் கூட முடியாமல், அவளைப் பார்த்து வெறுமனே கையசைத்து விட்டு விழுந்து விட்டேன்.
'சரவணா!' என்று அவள் கத்திய சப்தம் ஓடிய ரயில் சப்ததையும் தாண்டிக் கேட்டது.

அவள் ஓடும் ரயிலில் இருந்து எட்டிக் குதித்து ஓடி வந்தது இப்போது எனக்கு மங்கலாகத் தெரிந்தது.
ஓடி வந்தவள் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

இருவரும் அழுது,கதறியபடியே அரவணைத்துக் கொண்டோம்.

தேவர்கள் பூமாரி பொழிந்தார்கள் என்பதெல்லாம் பொய் என்று சொல்பவர்கள் அதனை இன்னும் அனுபவிக்கவில்லை என்று அர்த்தம்.
உலகத்துப் பெண்கள் எல்லோரும் காதல் வயப் பட்டார்கள்.ஆண்கள் அனைவரும் பெண்களை ஆராதிக்கத் தொடங்கினார்கள்.
உலகம் முழுவதும் இருந்த பியானோக்களும்,வயலின்களும் எனக்குப் பிடித்த 'லவ் ஈஸ் ப்ளூ'வை வாசித்த இசை எனக்குள் கேட்டது.
தாமரைகளும்,மல்லிகைகளும்,ரோஜாக்களும் தங்கள் பிறந்த நாளைக் கொண்டாடின.
எங்களது இரண்டு பக்கங்களும் ஓடிய ரயில்களில் இருந்த ஜனங்கள் சிரித்தபடியே பல மொழிகளில் வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டே போனார்கள்.
**********************************

'காதல் மலரும் கணங்கள்' என்ற இந்த உண்மைக் காதல் கதை எனது தயாரிப்பில் தொலைக் காட்சியில் வெளியான போதுதான், அதனுடைய டி.ஆர்.பி ரேட் வானைத் தொட்டது.
அமிர்தவர்ஷிணியும்,சரவணனும் இணைந்த காட்சி முடிந்தவுடன் நிகழ்ச்சித் தயாரிப்பாளனான நான் தொலைக் காட்சியில் வந்தேன்.

மக்கள் தொடர்ந்து அளித்து வந்த ஆதரவுக்கும்,பாராட்டுக்களுக்கும் நன்றி தெரிவித்த பின்னர்,உண்மைக் காதலர்களை மக்களுக்கு அறிமுகப் படுத்தும் பரபரப்பான கட்டத்துக்கு வந்தேன்.

'ரசிகப் பெருமக்களே! இத்தனை நாட்கள் நீங்கள் பார்த்து,ரசித்துருகிய இந்த உண்மைக் காதல் கதை, உண்மையில் நடந்த வருடம் 1983!' என்றேன்.

பார்த்த மக்கள் அனைவரும் 'ஆ'வென்று கத்தியே விட்டார்கள்.

நான் புன்னகையுடன் அவர்களிடம் சொன்னேன்.

'இந்தக் காதல் கதையில் நீங்கள் இதுவரை பார்த்தது,உண்மைக் கதாபாத்திரங்களாக நடித்தவர்களைத்தான். ஆறே மாதத்தில் இறந்து விடுவார் என்று மருத்துவர்கள் சொன்ன அந்த உண்மைச் சரவணன் 26 வருடங்கள் கழித்தும், இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அந்த உண்மைச் சரவண குமாரை நீங்கள் பார்க்கும் முன் ஒரு சின்ன கமர்ஷியல் ப்ரேக்' என்றேன்.

நேரில், இதனைச் சொல்லிக் காக்க வைத்திருந்தால், பார்த்த மக்கள் என்னை அடித்தே கொன்றிருப்பார்கள். எங்கள் தொலக்காட்சி வரலாற்றிலேயே அதிக பட்ச வருமானம் ஈட்டிக் கொடுத்த விளம்பர நிமிடங்கள் அவை.

மீண்டும் நான் தோன்றி,'இதோ உங்கள் முன்னர், அந்தப் புற்று நோயாளி சரவண குமார் வருகிறார்!' என்றேன்.

நாடு முழுதும் ,மொழியாக்கம் செய்யப் பட்டு அனைத்துப் புற்று நோய் மருத்துவ மனைகளிலும் இந்தத் தொடர் அன்று ஒளிபரப்பப் பட்டது. அனைத்து நோயாளிகளும்,அவர்களது குடும்பத்தினரும் ஆனந்தக் கண்ணீருடன் பார்த்த நிகழ்ச்சி அது.

சரவண குமார் வந்தார்.

ராணுவ உடையில் அவர் கம்பீரமாக வந்த போது, நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ஒவ்வொரு குடும்பத்திலும் அனைவரும் முதலில் திகைத்துப் போய்ப் பின்னர்,எழுந்து நின்று ஒரு சேரக் கைதட்டினார்கள்.

ஐம்பது வயதிருக்கும் உண்மைச் சரவணனின் காலைத் தொட்டுச், சரவணனாக நடித்த இளம் வயது நடிகர் கும்பிட்டார்.நடித்தவரை விட உண்மைச் சரவணன்,அழகோ அழகு.

'வெல்டன்' என்று நடித்தவரைப் பாராட்டினார் அந்த ராணுவ அதிகாரி!
சரவணனிடம் மைக்கைக் கொடுத்து விட்டு, நான் ஒதுங்கிக் கொண்டேன்.

'ஆறே மாசத்துலே செத்துடுவேன்னு டாக்டர்க சொன்னாங்க.ஆனா நூத்துக் கணக்கான மனுஷங்களோடே உயிரைக் காப்பாத்த வேண்டியவன், நீயே உயிரை விட்டா எப்படிடான்னு, என்னை இன்னும் காப்பாத்திட்டிருக்கறது, என்னோட கதையிலே வந்த,அந்த ஆஜ்மீர் பாபாதான்!' என்றார் சரவண குமார் மேலே பார்த்துக், கையெடுத்துக் கும்பிட்டுக் கண்கலங்கியபடியே.

பார்த்த மக்கள் கண்களில் தங்களை அறியாமலேயே கண்ணீர் பெருகியது.

'இன்னும் புரியற மாதிரி சொல்றேன்.கொஞ்ச நாள் முந்தி பாகிஸ்தான் தீவிரவாதிக மும்பைத் தாஜ் ஹோட்டலைத் தாக்கினப்போ,பல நூறு அப்பாவி மக்களோடே உயிரைக் காப்பாத்த வந்த நேஷனல் செக்யூரிட்டி கார்ட்ஸோட வீரத்தை நீங்க நேரடியாத் தொலைக்காட்சியிலே பார்த்திருப்பீங்க.
அந்தக் கமாண்டோப் படையிலே ஒரு பிரிவுக்குத் தலைமை தாங்கின மேஜர் நான்!' என்றார் சரவண குமார்.

'சார்' என்றான் என்னுடன் இந்த நேரடி நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மார்க்கெட்டிங் மேனேஜர் கௌதம்.
'என்ன கௌதம்?' என்றேன் நான்.

'இந்த சீரியல் இது மாதிரி எத்தனை கிளைமேக்ஸை வேணும்ன்னாலும் தாங்கும் சார்!' என்றான் அவன் உண்மையில் பரவசத்துடன்.

'இப்போ நீங்க எல்லாரும் ஆவலோடே எதிர்பார்த்திட்டிருக்கிற என்னோட அமிர்தவர்ஷிணியை பார்க்கப் போறீங்க!'' என்றார் சரவணன்.

'சார்!' என்றான் கௌதம், இன்னும் உற்சாகமாக.

'இப்போ மாத்திரம் ஒரு பத்தே நிமிஷம் கமர்ஷியல் ப்ரேக் விட்டீங்கன்னா,இன்னொரு பத்து லட்ச ரூபாயை அள்ளிடலாம் சார்!'

'பணம்,காசு முக்கியமில்லேன்னு தெரியற நேரம் லைஃப்லே எப்பவாச்சும் ஒரு வாட்டித்தான் வரும்,கௌதம்.அதை மிஸ் பண்ணா மறுபடியும் அந்த நிமிஷம் வரவே வராது!' என்றேன் நான்.

அமிர்தவர்ஷிணி வந்தாள்.இப்போது அவளுக்கு 44,45 வயதிருக்கும்.

ஆனால் ஸ்படிகத்துக்கு வயதேது?

'எனது உயிர் மனைவி!' என்று ஆதரவுடன் தோளில் அணைத்துக் கொண்டார்,சரவணன்.

அமிர்தவர்ஷிணியிடம் மைக்கை நீட்டினேன்.

'தொலைக்காட்சியில் உங்கள் வாழ்க்கையை நீங்களே பார்த்தப்போ உங்களுக்கு என்ன தோணுச்சு மேடம் ?' என்று கேட்டேன்.

'என்னை விட என் கேரக்டர்லே நடிச்ச பொண்ணு நல்லா டிரஸ் பண்ணியிருந்துச்சு!' என்றாள் அவள், தனது கணவனைப் பார்த்துச் சிரித்தபடியே.

'சாகக் கிடந்த பல பேரு உயிரை, சின்ன வயசுலே இருந்தே உங்களோட அன்பும்,நம்பிக்கையும் காப்பாத்தியிருக்குன்னு தெரிஞ்சுகிட்டோம்.அதுக்கப்புறம் நீங்க அந்தப் பணியைத் தொடர்ந்து செஞ்சுட்டு வர்ரீங்களா மேடம்?'

'நான் மட்டுமில்லே. ராணுவத்துலே பணி புரியற என்னோடே கணவர்,அம்னஸ்டி இன்டர்னேஷனல்ங்கிற மனித உரிமைக் கழகத்துலே வேலை பார்க்கிற என்னோட மூத்த மகன் அரவிந்த் குமார்,அமெரிக்காவுலே கேன்சர் ட்ரீட்மெண்ட்டுக்காக மேல் படிப்புப் படிச்சிட்டிருக்கிற என்னோட ரெண்டாவது மகன் சஞ்சய் குமார் நாங்க நாலு பேருமே ஒரு மனித உயிர் எவ்வளவு புனிதமானது,அதைக் காப்பாத்தறது அதை விட எவ்வளவு புனிதமானதுன்னு புரிஞ்சுட்டு எங்க வாழ்க்கையைவே அதற்காகவே அர்ப்பணம் பண்ணிட்டு இருக்கோம்' என்றார் அந்த அம்மையார்.

'பார்த்துட்டிருக்கிற உங்க ரசிகர்களுக்கு நீங்க என்ன சொல்லப் போறீங்க?'

அமிர்தவர்ஷிணி தொலைக்காட்சி ரசிகர்களைப் பார்த்துச் சொன்னார்.

'சாவு நம்ம கையிலே இல்லே.ஆனா சாகாமே இருக்கறது நம்ம கையிலதான் இருக்கும்பாரு பாபா!'

'காதல் மலரும் கணங்களின்' அடுத்த உண்மைக் கதையை மீண்டும் உங்களுக்குப் படைக்கும் வரை நன்றி.வணக்கம்.' என்று கூறி விடை பெற்றேன் நான்.

இனி ரோலிங் டைட்டில்கள்..

துறவு வாழ்க்கைக்கு, நாம் கற்பித்திருக்கும் இலக்கணங்களை உடைத்து விட்டு, இதனை எழுதும் போது வாழ்த்திப் பாராட்டி அருள்புரிந்த ஸ்வாமி ஓம்கார் அவர்களது ஆத்ம ரசனையின் பாத கமலங்களுக்கு இந்தக் காதல் கதையைச் சமர்ப்பிக்கிறேன்.

இதனை எழுதிக் கொண்டிருக்கும் போது பாராட்டி,ஊக்குவித்து,உற்சாகமளித்த அனைத்துப் பதிவுலகப் பெருமக்களுக்கும் எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள்.
எழுதத் தொடங்கியதுதான் நான்.தொடர்ந்து எழுதி முடித்தது உங்கள் அனைவரின் ரசனையே.

திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் பதிவு பெறும் இக்கதையினை ஆசிரியனின் அனுமதியின்றி எந்த வடிவத்திலும் எடுத்தாள அனுமதி இல்லை என்பது இங்கே அறிவிக்கப் படுகிறது.

இனி அடுத்து வரும் 'காதல் மலரும் கணங்களை' எழுதும் படி நமது பதிவுலகின் இளம் பதிவர்களைக் கேட்டுக் கொண்டு நான் ஒதுங்கிக் கொள்கிறேன்.
காதல் தேவதை உங்கள் எல்லோருக்கும் அருள்புரிவாளாகுக..
ஓம் ஸ்ரீ சாய்ராம்.

புதன், அக்டோபர் 28, 2009

காதல மலரும் கணங்கள் 8

அமிர்தவர்ஷினி
---------------------
8.
'கோதாவரி ஆத்தங்கரையில், சேலத்துக்குப் பக்கத்துலே இருக்கற ஊர்ப் பேரிலேயே தர்மபுரின்னு ஒரு புனித ஸ்தலம் இருக்கு.' என்று இரண்டு நாட்கள் கழித்துச் சம்பந்தமே இல்லாமல் ஆரம்பித்தாள் அமிர்தவர்ஷிணி.

கௌதம முனிவர், தெரியாமல் ஒரு பசுவைக் கொன்ற பாவத்தைப் போக்கக் கங்கையே கோதாவரியாகப் பிரவகித்தாள் என்ற புராணக் கதையை அப்போது அவள் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.கௌதம முனிவரின் பாவத்தைக் கழுவியதால் கௌதமி என்ற பெயரே பின்னாளில் கோதாவரியாக மாறியது என்றாள் அமிர்தவர்ஷிணி.
'தர்மபுரியிலே கோதாவரி ஆத்தங்கரையில் இருக்கிற ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் ரொம்ப பிரசித்தி பெற்ற கோவில்.ஆயிரம் வருஷத்துக் கோவில்ன்னு சொல்றாங்க.அங்கே ஒரு ஐம்பது வயசிருக்கிற அம்மா, பத்து வயசிலே இருந்தே தங்கிட்டிருக்காங்க.பெரிசாக் குங்குமப் பொட்டெல்லாம் வெச்சுகிட்டு, எப்பவுமே மஞ்சப் புடவைதான் கட்டிட்டிருப்பாங்க.அவங்களைக் கோதாவரி அம்மான்னுதான் அந்த ஏரியாவிலே இருக்கிறவங்க எல்லாம் கூப்பிடறாங்க.ரொம்ப சக்தி வாய்ஞ்சவங்க.அவங்க கூட நான் ஒரு மூணு மாசம் தங்கியிருந்தேன்' என்றாள் அவள்.
என்னிடம் எதற்கு இதைச் சொல்கிறாள் என்பதைப் போல் நான் வெறுமனே கேட்டுக் கொண்டிருந்தேன்.
ஒருநாள் அமிர்தவர்ஷிணி கோதாவரி அம்மாவின் மஞ்சள் புடவையை அதிகாலையில் இருந்து வெகுநேரம் துவைத்துக் கொண்டிருந்தாள்.
'அமிர்தவர்ஷிணி' என்றார்கள் கோதாவரி அம்மா அவளது அருகில் வந்து நின்று,அவளது பெயரை அம்மா எப்போதுமே முழுமையாகத்தான் கூப்பிடுவார்களாம்.
'இவவளவு நேரமாவா ஒரு புடவையைத் துவைச்சிட்டிருக்கே?' என்று கேட்டார்கள் அம்மா தெலுங்கில்.
'ஆமாம்மா! பாருங்க, உங்க புடவையிலே இருந்த எண்ணைக் கறை போயே போயிடுச்சு!' என்றாள் அமிர்தவர்ஷிணி,முகம் முழுக்க மகிழ்ச்சி பொங்கி வழிய.
பிரம்மாண்டமான அந்த நதியின் மறுபக்கத்தில், அதனுடைய குளுமையில் குளித்து விட்டு சூரியன் அப்போதுதான் உதித்துக் கொண்டிருக்கிறான்.

'புடவையிலே இருக்கிற இத்துனூண்டு எண்ணைக் கறைக்காகவா, இவ்வளவு பெரிய கோதாவரியை ஒரு மணி நேரமாச் செலவு பண்ணிட்டிருந்தே?' என்றார்கள்,அம்மா.
அமிர்தவர்ஷிணி கோதாவரி நதியின் பெருக்கை ஒரு கணம் பார்த்து விட்டுப் பிறகு சொன்னாள்.
'இத்துனூண்டு கறைதான் .ஆனா அது, இவ்வளவு பெரிய கோதாவரியையே என் கண்ணுலிருந்து மறைச்சிடுச்சேம்மா!' என்றாள் அமிர்தவர்ஷிணி.

கோதாவரி அம்மா அவ்வளவு சத்தம் போட்டுச் சிரித்ததை அதுவரை யாருமே பார்த்ததில்லையாம்.
கண்ணில் நீர் வரச் சிரித்த அம்மா, அப்போது சொன்ன வார்த்தைகள்தான் இவை.
'உன்னோடே பிறவியே, முழு ஈடுபாடுன்னா என்னன்னு உன் கூடப் பழகறவங்களுக்குக் காட்டறதுக்குத்தான்' என்ற அம்மா அவளது தலை மேல் கைவைத்து ஆசிர்வதித்துக் கண்களை மூடிய படியே சொன்னார்கள்.
'பெண்ணே,இப்போ சொல்றேன் கேட்டுக்கோ.சுத்தமான உன் மனசுலே, யார் மேலாவது உனக்கு விருப்பம்ன்னு வந்துச்சுன்னா, அந்த அன்பு அவனை முழுக்க,முழுக்கப் புரட்டிப் போட்டுடும்.அதுக்கப்புறம் அவன்,அவனாவே இருக்க மாட்டான். அவன் ஒருத்தனை மாத்திரமில்லே, அவனோட வம்சத்தையே உன்னோட அன்பு வாழ வைக்கும், இந்தக் கோதாவரி மாதிரியே.அந்தப் பாக்கியசாலிக்கும் சேர்த்து இந்த ஆசிர்வாதம்!' என்று சொல்லி விட்டு கோதாவரி அம்மா, நதியின் தண்ணீரைக் கைகளால் அள்ளி அவள் தலை மேல் தெளித்தார்கள்.
அமிர்தவர்ஷிணி இந்தச் சம்பவத்தைச் சொன்னதின் அர்த்தம் எனக்கு இப்போதுதான் புரிந்தது.

இருவரும் கொஞ்ச நேரம் ஒன்றும் பேசவில்லை.
'ஆறே மாசத்துலே செத்துடுவேன்னு திடீர்ன்னு ஒருநாள் டாக்டர்க சொல்றாங்க.இன்னொரு நாள் திடீர்ன்னு நீ வந்து, ஆஜ்மீர் பாபா,கோதாவரி அம்மா பேரை எல்லாம் சொல்லி நீ சாக மாட்டேன்னு சொல்றே.கெமோதெராபின்னு யாருக்குமே நடக்கக் கூடாத கொடுமையான சாபம் ஒரு நாள். அமிர்தவர்ஷிணின்னு யாருக்குமே கிடைக்க முடியாத வரம் இன்னொரு நாள்.யாரோ அவங்க கண்ணையும் கட்டிட்டு,என் கண்ணையும் கட்டிட்டு என் கூட ஃபுட்பால் விளையாடிட்டிருக்காங்க வர்ஷிணி.என்ன,காலே போனதுக்கப்புறம் நான் ஆடற ஃபுட்பால் மேட்ச்' என்றேன் சோர்வாக.

அவள் ஆதரவுடன் எனது கையைப் பற்றிக் கொண்டாள்.

'எதை நம்புறதுன்னே தெரியலே.எவ்வளவுதான் லைட் அடிச்சாலும் ரெண்டடிக்கு மேலே வெளிச்சம் தெரியாத நீளமான இருட்டுக் குகைக்குள்ளே நடந்துட்டிருக்கிற மாதிரி இருக்கு,எனக்கு.' என்றேன் நான்.
அவள் மெல்லச் சிரித்தாள்.
'ஏன் சிரிக்கிறே?'
'குகையோட நீளமே ரெண்டடிதான்.நீ நடக்க நடக்கத்தான் குகையும் நீண்டுட்டே போகும்!'என்றாள் அவள்.
எனக்கு உள்ளுக்குள் ஏதோ சட்டென்று விழித்தாற்போலத் தெரிந்து மனமே லேசாகியது.அவளை இழுத்து எனது மார்போடு சாய்த்துக் கொண்டேன்.அவளது முகத்தை நிமிர்த்திச் சொன்னேன்.
'இப்போ இந்த ரெண்டடி வெளிச்சத்துலே நீ மாத்திரம்தான் தெரியறே,வர்ஷிணி' என்றேன் குரல் கனக்க.
எவ்வளவு பெரிய அழகியும் தூரத்திலிருந்து இருந்து பக்கத்தில் வர வர அவளது குறைகள் ஒவ்வொன்றாகப் புலப்பட்டுக் கொண்டே வரும்.ஆனால் அமிர்தவர்ஷிணியோ அருகில் வர வர இன்னும் அழகாகிக் கொண்டே போனாள்.

'என்ன தைரியம் இருந்தா செத்துட்டிருக்கறவனை இப்படி லவ் பண்ணுவே?' என்றேன் அவளது முகத்தருகில்.
'நான் லவ் பண்றதே நீ சாகாமே இருக்குறுதுக்குத்தான்,முட்டாளே!' என்றாள் அவள் செல்லமாக.
அவளது உதடுகளில் முதன்முதலாக முத்தமிட்டேன்.
எந்தச் சுவையும் இல்லாமல் இருப்பதுதான் உலகத்திலேயே மிகப் பெரிய சுவை என்ற உண்மையை அவளது உதடுகள்தான் எனக்குக் கற்பித்தன.
என்ன கொடுக்கிறோம், என்ன பெறுகிறோம் என்று தெரியாமலேயே மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து நடக்கும் ஒரே பரிவர்த்தனை.
இதுவரை முத்தமிட்ட.இனிமேல் முத்தமிடப் போகும் கோடான கோடிக் கணக்கான முத்தங்களின் கடலில் எங்கள் முத்தமும் கலந்து, கரைந்தது.
மெல்ல விலகினோம்.
பிரிந்த போதுதான்,சேர்ந்த மாதிரி இருந்த விந்தையான கணத்தில் இருவருமே இருந்தோம்.

அடுத்த நாள் எனக்குச் சாப்பாடு எடுத்துக் கொண்டு அப்பா மதியம் வந்த போது அவரிடம் எங்களது காதலைச் சொன்னேன்.அவரிடம் நான் இதுவரை எதையுமே மறைத்ததில்லை.
சொன்ன போது எந்தச் சலனமுமின்றி அமைதியாகக் கேட்டுக் கொண்டார் அப்பா.

'என்னப்பா சைலன்ட்டா இருக்கீங்க?உங்களுக்குப் பிடிக்கலியா?' என்று கேட்டேன் நான்.
அவர் என்னைக் கண்களின் ஈரத்தினூடே பார்த்தார்.

'வைட் செல் கௌன்ட் ஜாஸ்தி ஆயிட்டதினாலே அடுத்த வாரம் உனக்கு மறுபடியும் கெமோதெராபி ஆரம்பிக்கப் போறாராம் சீஃப் டாக்டர். கீழே என்னைப் பார்த்துட்டுச் சொன்னாரு.மே பி எ லிட்டில் பிட் ரிஸ்கியா இருக்கலாம்ன்னாருப்பா அவரு.'
மீண்டும் அதே இருட்டுக் குகை நீள ஆரம்பித்து விட்டது..

ஆஜ்மிர் பாபா,கோதாவரி அம்மா வெர்சஸ் என்னுடைய லுகேமியா செல்கள்.

அமிர்தவர்ஷிணியின் காதல் வெர்சஸ் எனது தீராத வியாதி.

கொடிது கொடிது காதல் கொடிது, புற்று நோயைக் காட்டிலும்.

(தொடரும்)

ஞாயிறு, அக்டோபர் 25, 2009

காதல மலரும் கணங்கள் 7

அமிர்தவர்ஷினி
---------------------
7.
'இந்த அஞ்சு பேரு குடுத்த லவ் லெட்டர்ஸுக்கு என்ன பதில்ன்னு நீ சொல்லவே இல்லையே,வர்ஷிணி?' என்று அமிர்தவர்ஷிணியைக் கேட்டேன், எனது சுய இரக்கத்தின் அழுகையிலிருந்து மீண்டவுடன்.

'தேங்க்ஸுன்னு சொல்லி லெட்டர்ஸை எல்லாம் அவங்ககிட்டேயே திருப்பிக் குடுத்திடு,சரவணா' என்றாள் அவள் அமைதியாக.

ஏன் என்பதைப் போல அவளைப் பார்த்தேன்.

'இந்த மாதிரிப் பொண்ணுக வேணும்ன்னு ஆசைப் படறது ஒரு ரகம்.இதே பொண்ணுதான் வேணும்ன்னு ஆசைப் படறது ஒரு ரகம்.இவங்க எல்லாம் முதல் ரகம்.அதனாலேதான் லெட்டர்களைத் திருப்பிக் குடுக்கச் சொல்றேன்'என்றாள் அவள்.

'அவங்களை முதல் ரகம்ன்னு எப்படிச் சொல்றே?'
'பத்துப் பதினைஞ்சு நாள்ளே நீயே தெரிஞ்சுக்குவே!' என்றாள் அவள்.

அவள் சொன்னதைப் போலவே ஐந்து பேரில் மூன்று பேர் பதினைந்தே நாட்களில் தங்கள் கல்யாணப் பத்திரிகைகளைக் கொண்டு வந்து என்னிடம் தந்தார்கள்!

'எப்படி அவங்களைப் பத்தி இவ்வளவு கரக்டாச் சொன்னே,வர்ஷிணி?' என்று அவளிடம் கேட்டேன் நான், அவளிடம் அவர்களுடைய கல்யாணப் பத்திரிகைகளைக் காட்டி.

'சில பேருக்குள்ளே கல்யாண ஆசையைத் தூண்டி விடறதோட என் வேலை முடிஞ்சுதுன்னு எனக்கு நல்லாத் தெரியும்,சரவணா' என்றாள் அமிர்தவர்ஷிணி அமைதியாக.

ஒருநாள் அவள் என்னிடம் சொன்ன தகவல்,வாழ்க்கைப் பாடத்தை அவள் எவ்வளவு ஆழமாக,அத்துபடியாகக் கற்று வைத்திருந்தாள் என்பதற்கு இன்னொரு உதாரணம்.

'இப்போ எல்லாம் என்ன சாப்பிட்டாலும்,நான் முந்தி மாதிரி வாந்தி எடுக்கறதில்லே,வர்ஷிணி'என்றேன் அவளிடம் ஒரு நாள் மாலை.
அன்று அவள் மாங்காயையும்,கேரட்டையும் பச்சையாகத் துருவிப் போட்டு பச்சைப் பயறு சுண்டல் கொண்டு வந்திருந்தாள்.நல்ல பசிக்கே வரும் ருசியுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்த என் தட்டில், இன்னும் சுண்டலை வைத்த படியே அவள் சொன்னாள்.

'ஏப்ரல்லே,நான் மும்பையில் ஒரு வைர வியாபாரி வீட்டுலே அவருக்கு உதவியா இருந்தேன்,சரவணா. நேமிசந்த்ன்னு பேரு.பெரிய கோடீஸ்வரன்.அவருக்கு கல்லீரல்லே புற்று நோய். டாக்டர் நிகொலஸ்ன்னு ,கேன்சர் ட்ரீட்மென்ட்லே ரொம்ப ஃபேமஸான அமெரிக்கன் டாக்டர் ஒருத்தர், அவருதான் நேமிசந்த் அய்யாவுக்கு கன்சல்டன்ட்..மாசத்துக்கு ஒருநாள் நேமிசந்த் அய்யாவை அட்டண்ட் பண்ரதுக்காகவே வாஷிங்டன்லே இருந்து டாக்டர் நிகொலஸ் வருவாரு.அப்போ அந்த டாக்டர் சொன்னது இன்னும் எனக்கு நல்லா ஞாபகத்துலே இருக்கு.என்னாலே மறக்கவே முடியாது.

'என்ன சொன்னார் என்பதைப் போல அவளைப் பார்த்தேன்.

'சாவுங்கறது திடீர்ன்னு ஒருநாள் நமக்கு வர்ரதில்லே.பொறந்ததிலே இருந்தே சாவு ,நம்ம மேலே சாஞ்சுட்டு எப்போ நசுக்கலாம்ன்னு டயம் பார்த்துட்டேதான் இருக்கு.அது நம்ம மேலே முழுக்கச் சாஞ்சு,நசுக்கிடாமே தாங்கிப் பிடிச்சுட்டிருக்கிறது நம்ம நம்பிக்கைகளும்,ஆசைகளும்தான்.தீராத வியாதின்னு தெரிஞ்சவுடனே நோயாளி முதல்லே இழக்கறது அவனுடைய நம்பிக்கையைத்தான்.நம்பிக்கை போனவுடனே ஆசைகளும் அத்துப் போயிடுது.நோயாளிக்கு முன்னாலே சாகறது அவனோட ஆசைகளும்,நம்பிக்கையுந்தான்.அதனாலே அதைச் சாக விடாமே பார்த்துகிட்டாலே எந்த நோய்கிட்டே இருந்தும் தப்பிச்சுக்கலாம்பாரு அந்த டாக்டர்.'

அவள் சொன்னதில் இருந்த உண்மையை எனக்குள்ளேயே உணர்ந்து பார்த்தேன்.சரி என்பதைப் போலத்தான் தோன்றியது.

'இதை நீ குழந்தைககிட்டே இருந்துதான் கத்துக்க முடியும்பாரு அந்த டாக்டர்,சரவணா.குழந்தைகளைப் பாரு.எல்லாத்தையும் நம்பும்.எல்லாத்துக்கும் ஆசைப் படும்.அதனாலே அதுகளுக்கு வர்ர வியாதிகள் கிட்டே இருந்து அதனாலே சீக்கிரம் மீண்டுட முடியுது.நோயிலேயே பெரிய நோய், இதிலிருந்து மீள முடியுமாங்கிற சந்தேகந்தான்!'என்றாள் அவள்.

'புரியுது' என்றேன்.
அவள் எனக்கு முதல் நாள் தலைமாட்டில் வைத்த ஆஜ்மீர் பாபாவின் திருக்குரான் கையெழுத்துப் பிரதியின் சூட்சுமம் புரிந்தது.சரிந்து போயிருந்த எனது நம்பிக்கையை, முதலில் தூக்கி நிறுத்த வேண்டும் என்ற அவளது முயற்சியே அது.

கால கட்டத்துக்கும்,சமூகச் சூழலுக்கும் தகுந்த மாதிரி, நம்பிக்கை விதைகளை மனிதர்களுக்கு மத்தியில் தூவி வரும் ஞானிகளின் உளவியல் தந்திரமும் புரிந்தது.

'தாகத்தால் சாகப் போகும் மனிதனுக்கு, கானல் நீர் கூட தாகத்தைத் தணித்து அவனை உயிர் வாழ வைக்கும்' என்று இன்னொரு நாள் அமிர்தவர்ஷிணி சொல்லி இருக்கிறாள்.

' நான் பார்க்கிற பத்தாவது கேன்ஸர் பேஷண்ட்,சரவணா நீ. உன்னை மாதிரியே நம்பிக்கை வளர,வளர அவங்க தேறிட்டே வந்ததை நான் என் கண் கூடப் பார்த்திருக்கேன்'

'நீ எனக்குத் துணையா வந்ததுக்கு அந்தக் கடவுளுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லனும்'என்றேன் நான்.

'கடவுள்தான், மனுஷன் கண்டு பிடிச்ச முதல் நம்பிக்கைன்னு சொல்லுவாரு,பாபா'என்றாள் அவள் புன்னகையுடன்.

மாத விலக்கான மூன்று நாட்களுக்கு அமிர்தவர்ஷிணி என்னைப் பார்க்க வரவில்லை.அவளைப் பார்க்க முடியவில்லை என்றதும்,வண்ணப் படமாகத் தெரிந்து கொண்டிருந்த உலகம், திடீரெனக் கறுப்பு வெள்ளைப் படம் போலத் தெரிந்தது எனக்கு.
ஒரு பெண்,ஒரு ஆணின் மனதுக்குள் எவ்வளவு ஆழமாக ஊடுருவ முடியும் என்பதை எனக்குள்ளேயே நான் பார்த்த போது,நானே எனக்குப் பேரதிசயமானேன்.
கோளாறான புரஜக்டரைப் போல மனம் அவளது பிம்பங்களையே திருப்பித், திருப்பிச் சலிக்காமல் போட்டுக் கொண்டிருந்தது.
புன்னகையாலேயே செய்ததைப் போன்ற அவளது உதடுகள்,நாம் கண்களை மூடினாலும் நம் மூடிய கண்களுக்குள்ளேயே பார்த்துக் கொண்டிருக்கும் அவளது விழிகள்,கிடைக்காதா என்ற ஏக்கத்தையும்,கிடைத்தால் என்ன செய்வதென்று தெரியாத பரவசத்தையும் ஒருசேர வழங்கும் அவளது அழகிய உடல்...

மூன்று நாட்கள் கழிவதற்கு மூன்று ஜென்மங்களாக, நான்காம் நாள் மாலை அமிர்தவர்ஷிணி வந்தாள்.கறுப்பு ஜீன்ஸ்,மேலே வெள்ளை டி.ஷர்ட்.கழுத்தில் ஏதோ ரூபி மணிமாலை.
உலர்ந்த கருங் கூந்தலை அவள் தளர்வாக விட்டிருந்தது, நமது மனதை இறுக்கி முறுக்கவே என்று தோன்றியது.

'எப்படி இருக்கே சரவணா?' என்றாள் அவள்,புன்னகையுடன்.

முள் ஏறிய காலைக் கல்லில் தேய்த்தாற் போல ஒரு இதமான வலிதான் காதல் என்றால், அது பெருமழையாய் என்னுள் கொட்டிக் கொண்டிருந்தது.

எனது கனத்த மௌனமே எனக்காக அவளுடன் பேசியது.

பல நிமிடங்கள் இந்த உலகத்தைப் பற்றிப் பேசி விட்டு, மெல்ல எங்கள் உலகத்துக்குப் போனோம்.

அப்போதுதான் நேற்று இரவு அவள் கண்ட கனவை எனக்குச் சொன்னாள் அவள்.

அவளுடைய தாய்,தந்தையைப் பறிகொடுத்த அதே ரிஷிகேஷ் கங்கையின் படித்துறையில் நானும் அவளும் நீராடிக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.

அடிவானம் வரை யாருமற்றுக், கங்கை மட்டும் ஓடிக் கொண்டிருக்கும் பூமியில் நானும் அவளும் மட்டுமே.
வெறுமனே ஒரு வெள்ளைக் காட்டன் புடவையைச் சுற்றிக் கொண்டிருந்த அவளது புடவை சற்றே விலகி,அவளது மேனியின் வெண்மையைப் பறை சாற்ற, எனது கவனம் மாறியதைக் கண்ட அவள், கங்கையின் பனி நீரை என் மேல் விளையாட்டாக எறிய,வழுக்கி விழுந்தவன் போல ஏமாற்ற நினைத்தவன் உண்மையில் வழுக்கி விழுந்து கங்கையின் பிரவாகத்தில் கலந்து விட்டேன். அவள் தாய் தந்தையை அடித்துக் கொண்டு போன கங்கை என்னையும் அடித்துக் கொண்டு போவதைப் பார்த்த அமிர்தவர்ஷிணி பதறிப் போனாள்.

'சரவணா' என்று கத்திக் கொண்டு அவளும் நீரில் பாய்ந்து விட்டாள்.சில நிமிடங்களில் எனது பாதங்களைப் பற்றியவள் வெறியுடன் நீந்தி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொள்ள இருவரையுமே கங்கை அடித்துக் கொண்டு போனது.

சற்றுக் கழித்து அவள் மட்டுமே கண் விழித்துப் பார்க்க, கங்கைக் கரையின் ஒரு பச்சைப் புல்தரையில் அவள் மட்டுமே தனியாக ஒதுங்கிக் கிடக்க, என்னைத் தனது உயிரையே தேடுவதைப் போல அவள் தேடுகிறாள். பத்தடி தொலைவில் நான் மயங்கிக் கிடப்பதைப் பார்த்து எழுந்து ஓடி வருகிறாள்.என் மேல் அமர்ந்து எனது நெஞ்சைக் குத்துகிறாள்.சில நொடிகளில் அவளது தீவிர முயற்சியினால் நான் குடித்த கங்கை நீரெல்லாம் மூக்கு,வாய் வழியே வெளியேற நான் மெல்லக் கண் விழித்து என் மேல் அமர்ந்திருக்கும் அவளைப் பார்த்துப் புன்னகைக்கிறேன்.

எனக்கு உயிர் வந்ததைப் பார்த்ததும்தான் அவளுக்கு உயிரே வருகிறது.

மெல்ல எனது பார்வை அவளது கழுத்துக்குக் கீழே சென்றதும்தான், கங்கை அவளது மேலாடை முழுதையுமே கலைத்து அவளைத், துணிகளற்ற வெற்று மார்புகளுடனே என் மேல் அமர வைத்திருக்கிறது என்பதை உணர்கிறாள்,அமிர்தவர்ஷிணி.

இதற்கு மேல் மலரவே மாட்டேன் என்று வரம் வாங்கிக் கொண்டு வந்த தாமரை மொட்டுக்களைப் போன்ற அவளது இளம் மார்புகள், கங்கை நீர் சொட்டச் சொட்ட எனது உயிருக்கு உற்சாகமூட்டிக் கொண்டு நின்றன.

எனது பார்வைக்கு வெட்கப் பட்ட அவள், தனது மார்புகளை மூடுவதற்கு எதுவுமின்றி எனது மார்பையே தேர்ந்தெடுத்து முகம் புதைத்தாள்.

பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதை விடப்,பார்க்கப் படாமலிருக்கும் போது அதிகம் வாதித்தன அந்தப் பெண் மார்புகள்.

கனவைச் சொல்லி விட்டுத் தலைகுனிந்து அமர்ந்திருந்த அமிர்தவர்ஷிணியை எனது குரல்தான் நிமிர்த்தியது.

'வர்ஷிணி'

அவள் சிரமப் பட்டு என்னை நிமிர்ந்து பார்த்தாள்.

'நான் ஒண்ணு சொன்னா நம்புவியா?' '?'

'நேத்து ராத்திரி எனக்கும் இதே கனவு வந்துச்சு!'

நான் இதைச் சொல்லி முடித்ததும்தான் தாமதம், அழுதபடியே ஓடி வந்து என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்,அமிர்தவர்ஷிணி.

(தொடரும்)

ஞாயிறு, அக்டோபர் 18, 2009

காதல மலர்ந்த கணங்கள் 6

அமிர்தவர்ஷிணி.
6.
அமிர்தவர்ஷிணி எங்கள் வீட்டுக்குள் நுழைந்தததிலிருந்து வீடே மாறி விட்டது என்று அப்பா சொன்னார்.
தூசு, தும்பு இல்லாமல் பளிச்சென்று ஆகி வீடு பூப்பெய்தியது.

'அதே அவரைக்கா,வெண்டைக்கா,கத்தரிக்காதான் ஆனா அவ கைபட்டுச் சமைச்சுதுக்கப்புறந்தான் இத்தனை நாள் ஒளிச்சு வெச்சிருந்த அதுகளோட ஒரிஜினல் ருசியை எல்லாக் காய்கறிகளுமே வெளியே காட்டுது,சரவணா'என்றார் அப்பா ஒருநாள் ரசனை பொங்க.

அவள் வந்த ஒரு வாரத்துக்குப் பிறகு அப்பா திரும்ப வேலைக்குப் போக ஆரம்பித்து விட்டார்.

குறிப்பாகப் பூஜை அறையை அவள் மாற்றிய விதத்தில்தான் அப்பாவின் மனதில் நிரந்தரமாக மரியாதையைப் பெற்று விட்டாள்,அமிர்தவர்ஷிணி. எங்கள் பூஜை அறையில் அவர் வேலை பார்த்த எல்லாக் கோவில் தெய்வங்களின் உருவப் படங்களை மட்டுமல்லாது எல்லா மதங்களின் புனிதச் சின்னங்களையும் அப்பா வைத்திருப்பார்.கர்த்தர்,கஃபா,புத்தர்,மகாவீரர், குரு நானக்,ஷ்ரீடி சாய்பாபா,மற்றும் இன்றைய,நேற்றைய மஹான்கள் என்று அவருக்குத் தெரிந்த,கிடைத்த அனைத்து ஆன்மீக சிகரங்களின் வெளிப்பாடுகள் அனைத்தையும் எங்கள் பூஜை அறையில் பார்க்கலாம்.

அமிர்தவர்ஷிணி வந்ததும்தான் எல்லாப் படங்களும்,சிலைகளும் தூய்மையாகி, வைகறையில் அவளுக்குப் பிடித்தமான சந்தன ஊதுவத்தி,மல்லிகைப் பூக்களின் வாசனை கமகமக்க வீடே கோவிலானது என்றார் அப்பா.

'இப்போ எல்லாம் காலங் கார்த்தாலே பூஜை ரூமுக்குள்ளே நுழைஞ்சாப் போதும், நாம இத்தனை நாளு வெறுமனே கும்பிட்ட நம்ம வீட்டு சாமிக எல்லாம் என்ன வரம் கேளுன்னு குடுக்கத் தயாரா நின்னுட்டிருக்காங்க சரவணா!' என்றார் அவர், அமிர்தவர்ஷிணியைப் பார்த்துச் சிரித்தபடியே.
அமிர்தவர்ஷிணி அதே வற்றாத புன்னகையுடன் எனக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தாள்.

அப்ப்பா!அப்பாவின் முகத்தில் நான் இந்தச் சிரிப்பைப் பார்த்து எவ்வளவு நாட்கள் ஆகின்றன!

'நீங்க என்ன வரம் கேட்டிங்கப்பா?' என்றேன் நானும் சிரித்து.
'எதுவுமே கேக்கத் தோணாத பரிபூர்ண நிம்மதியிலே எதையுமே கேக்கத் தோணலேப்பா' என்றார் அப்பா கண்களில் மெல்லிய ஈரம் கசிய.

ஒரே மகனை சாவுக்குக் காவு கொடுக்கக் காத்திருக்கும் எனது அப்பாவுக்குக் கூட நிம்மதியைத் தர முடியும் என்றால்,அது அமிர்தவர்ஷிணியினால்தான் முடியும் என்று தோன்றியது எனக்கு.

நான் நன்றியுடன் அவளைப் பார்த்தேன்.
அப்பா, தான் கோவிலுக்குப் போவதற்கு முன்னால் மருத்துவ மனைக்குக் கொண்டு வந்து அவளை இறக்கி விட்டு விட்டுப் பிறகு, தான் திரும்பி வீட்டுக்குப் போகும் போது அழைத்துச் செல்வது வழக்கமாகிப் போனது.

தினமும் மருத்துவமனைத் தோட்டத்தின் அந்திப் பூக்கள், அவள் வருகிறாள் என்று கிறங்கிப் போய் தங்கள் வாசனைகளால் கட்டியம் கூறும் போது, அவள் எனது அறைக்குள் புன்னகையுடன் நுழைவாள். ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாநிலத்தின் ஆடைகளை அணிந்து வருவதுதான் அமிர்தவர்ஷிணியின் ஸ்பெஷாலிடி.
தான் சென்ற மாநிலங்களில் எல்லாம் அந்தந்த வீட்டுப் பணி முடிந்து கிளம்பும் போது, அவர்கள் அன்புடன் அவளுக்கு எடுத்துக் கொடுத்த ஆடைகளையே அவள் எப்போதும் உடுத்தினாள். குஜராத்தி ,ராஜஸ்தானி,பஞ்சாபி, நமது பாவாடை தாவணி, மலையாளம்,மும்பையின் ஜீன்ஸ்,டி.ஷர்ட் இப்படி எந்த வித உடுப்பும் அவளுக்கு அழகாகப் பொருந்தி வந்ததுதான் ஆச்சர்யத்திலும் ஆச்சர்யம்.

'அமிர்தவர்ஷிணி ஒரு ஆபாசம் கலக்காத ஃபேஷன் பேரேட்டாக்கும்!' என்றாள் என்னைக் கவனிக்கும் நர்ஸ் உன்னி மேரி.

பார்ப்பவரது உயிரை எந்த கஷ்டமும் படாமல் எளிமையாகக் கவ்விச் செல்வதே உண்மையான அழகு என்றால்,அமிர்தவர்ஷிணியைப் பேரழகி என்று சொல்லலாம். இப்போதெல்லாம் மருத்துவமனையே அவளது வருகையை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்திருந்தது.

அதனை விட அவளது வாழ்க்கை அனுபவங்களை, அவள் சொல்லக் கேட்டால் கொஞ்ச நஞ்சமிருக்கும் நமது மீதி மனமும் பறிபோய்விடும்.

'அஞ்சு வயசிலிருந்தே அப்பா,அம்மா இல்லாமே மூணாவது மனுஷங்க வீட்டுலியே வளர்ந்திருக்கியே, எப்படி வர்ஷிணி உன்னாலே உண்மையாவுமே சந்தோஷமா இருந்திருக்க முடியும்? ஒருநாளாவது நீ இப்படி அனாதையா இருக்கறமேன்னு நினைச்சு மனசு கஷ்டப் பட்டதில்லையா?' என்றேன் நான் ஒரு நாள்.

அவள் என்னை நிமிர்ந்து பார்த்து விட்டுச் சொன்னாள்.
'அன்பு கிடைக்காதவங்க அனாதைக இல்லே,சரவணா. அன்பு செலுத்த முடியாதவங்கதான் அனாதைக!' என்றாள் அவள்.

'என்னைக் கூப்பிட்டுட்டுப் போனவங்க எல்லாமே, நம்ம தேசம் இத்தனை வருஷமா சொல்லித் தந்திட்டுருக்கிற அத்தனை நல்ல குணங்களோட ஒட்டு மொத்தமான அம்சம்.ஒரு குடும்பமும் கூட என்னை அந்நியமாப் பார்க்கலே.நடத்தலே. அதனாலே எனக்கும் அன்பைத் தவிர வேறெந்த அனுபவமும் தெரியாது..'

'மூணு மாசத்துக்கு ஒரு வீடு,ஒரு ஊரு,ஒரு பாஷைன்னா எந்தப் பள்ளிக்கூடத்துக்கும் நீ போயிருக்க முடியாதே?'

.'நல்ல வேளை!' என்றாள் அவள் சிரித்து.

'இல்லாட்டி நான் இத்தனை குருமார்கள் கிட்டே இவ்வளவு விஷயங்களைக் கத்திருக்க முடியாது' என்றாள் அவள்.

சமையல்,தையற் கலை,வெவ்வேறு வழிபாட்டு முறைகள்,மொழிகள்,ஒப்பனை,அந்தந்த பிரதேசங்களின் எளிய நாட்டு மருத்துவம்,முதல் உதவிகள் அனைத்திலும் அவள் கை தேர்ந்திருந்தாள்.

அவள் அருகில் இருந்தால்,அனைவரையும்,காரணம் தேடாமல் நேசிக்கும் அபரிமிதமான அன்பின் சாரல் அடித்துக் கொண்டிருக்கும் ஒரு மலைப் பிரதேசத்தின் நிலவொளியில் இருப்பதைப் போல இருக்கும்.

அவள் மருத்துவ மனைக்கு வந்து போய்க் கொண்டிருந்த பதினெட்டு நாள் கழித்து,ஒரு நாள் பொறுக்க முடியாமல் ஐந்து காதல் கடிதங்களை அவளிடம் நீட்டினேன்.
'என்ன இது ?' என்றாள் அமிர்தவர்ஷிணி.
'உனக்கு எழுதுன லவ் லெட்டர்ஸ்!' என்றேன் நான்.

என்னை ஒரு கணம் பார்த்து விட்டுச் சொன்னாள்.

'உன் கண்ணுலே ஒரு எழுத்துக் கூடத் தெரியலியே,சரவணா!' என்றாள் அவள் உடனே.

'உன்கிட்டே குடுக்கச் சொல்லி, என் காலிலே விழாத குறையாக் கெஞ்சி அஞ்சு பேரு இதைக் குடுத்திருக்காங்க வர்ஷிணி.' என்றேன் நான் பரிதாபமாக.

அவள் எந்தச் சலனமுமின்றி என்னைப் பார்த்தாள்.

'அஞ்சுலே, மூணு லெட்டர்களை இங்கிருக்கிற டாக்டர்களே குடுத்திருக்காங்க. ரெண்டு ,இங்கே வந்திட்டிருக்கற வி.ஐ.பி.விசிட்டர்களோட பசங்க.முதல் லெட்டர், எனக்கு ட்ரீட்மென்ட் குடுத்திட்டிருக்கிற சீஃப் டாக்டர் சித்தார்த் ரே.லண்டன் ரிடர்ன்.கேன்ஸர் ட்ரீட்மென்ட்லே இந்தியாவுலேயே நம்பர் டூ ன்னு சொல்றாங்க.எக்கச் சக்க வருமானம்.அதி மேதாவி. ரெண்டாவது லெட்டர்..'
அவள் என்னை அமைதியாக இடை மறித்தாள்.
'உன்னைப் பார்த்துட்டிருக்கிற டாக்டருக்கு உன்னை விடப் பத்துப் பதினைஞ்சு வயசு ஜாஸ்தி இருக்குமே ,சரவணா.அவரு எப்படி உங்கிட்டே போய் எனக்கு லவ் லெட்டரைக் குடுக்கச் சொல்லி..'
'அவரு மாத்திரமில்லே வர்ஷிணி.இந்த லெட்டர்களைக் குடுத்தவங்க எல்லாருமே என்னை விடப் பெரியவங்கதான்' என்றேன் நான்.

அவள் என்னை அமைதியாகப் பார்த்தாள்.

சற்றுக் கழித்து நான் சொன்னேன்.

'ஒருவேளை,கிட்டத்தட்ட சாவை நெருங்கிட்டதனாலே அவங்க எல்லாரையுயும் விட நான்தான்னு மூத்தவன்னு அவங்க நினைக்கிறாங்களோ என்னமோ!' என்று நான் சொல்லச் சொல்லவே என்னை அறியாமல் நான் அழுது விட்டேன்.

அமிர்தவர்ஷிணி மெல்ல என் அருகில் வந்து கனிவுடன் என்னைத் தனது மார்புடன் அணைத்துக் கொண்டாள்..
அப்படி ஒரு ஆறுதல் கிடைத்தவுடன், எனது அழுகை இன்னும் பீறிட்டுக் கிளம்பியது.
'அமிர்தம்ன்னா என்ன அர்த்தம் தெரியுமா,சரவணா?' என்றாள் அவள், என் முகத்தை நிமிர்த்தி.
நான் வெறுமனே அவளைப் பார்த்தேன்,தேம்பியபடி.
'அமிர்தம்ன்னா சாகாமை.அமிர்தவர்ஷிணின்னா சாகாமையைத் தருபவள்ன்னு அர்த்தம்.நான் உன் பக்கத்திலே இருக்கும் போது உன்னைச் சாக விடுவேனா?' என்று அவள் கேட்டாளே பார்க்கலாம், உலகத்துத் தெய்வங்களை எல்லாம் அந்தப் பெண்ணின் வடிவத்தில் பார்த்தேன்.

அவளை இறுக அணைத்துக் கொண்டேன்.

தாயின் கருப்பை அனுபவம் எனக்குக் கிடையாது.இப்போது சத்தியமாகச் சொல்கிறேன்,காதலிக்கும் பெண்ணின் அரவணைப்பில்தான் அதனை மீண்டும் உணர முடியும்.

தாயை வேறு பரிமாணத்தில் சந்தித்தால் அதுவே காதலி.

(தொடரும்)

செவ்வாய், அக்டோபர் 13, 2009

காதல மலர்ந்த கணங்கள் 5


அமிர்தவர்ஷிணி

5.
'ஆஜ்மீர்லே நான் அட்டன்ட் பண்ணிட்டிருந்த சூஃபி பெரியவர்தான் என்னை இங்கே அனுப்பிச்சு வெச்சிருக்கார்!' என்றாள் அமிர்தவர்ஷிணி.
எனக்குள் சிலீரென்றது.
'அவருக்கு எப்படி வர்ஷிணி,என்னைப் பற்றி..?' என்றேன் வியந்து.
அமிர்தவர்ஷிணி அமைதியாக என்னைப் பார்த்தாள்.
'நடந்ததையும் ,நடந்திட்டிருக்கிறதையும் மட்டும் தெரிஞ்சுக்குறதுக்குத்தான் நம்ம மனசுனாலே முடியும்.மீதி நடக்கப் போறதை,அதுவாக் கற்பனை பண்ணிப் பார்த்துட்டு நம்ம மேலே சுமத்திட்டே இருக்கும்.நாளைக்கு நீ என்ன பார்க்கப் போறேன்னு உன்னோட கண்ணு என்னிக்காவது உங்கிட்டே காட்டி இருக்கா?' என்று கேட்டாள் அவள்.

நான் பொம்மை போல இல்லையென்று தலையாட்டினேன்.

'கண்ணு,காது,மூக்கு,உடம்பு எல்லாமே எப்பவுமே நிகழ்காலத்துலேதான் இருக்கும்.ஆனா மனசு மட்டும் அதிகப் பிரசங்கித் தனமா எதிர்காலத்தைப் பத்தி ஏதாச்சும் தொணதொணத்துகிட்டே இருக்கும்.நாமும் அந்த அதிகப்பிரசங்கி கிட்டே ஏமாந்து ஆடிட்டிருப்போம் இல்லேன்னா ஆடிப் போய் உட்காந்திருப்போம்!' என்றாள் அவள் ஏதோ பிரசன்னம் வந்தவள் போல.

ஏதோ தெலுங்குப் பக்திப் படத்தில் பார்க்கும் அழகிய, அமானுஷ்யச் சிறுமி போலத் தோன்றினாள் அவள்.
அவளை அதிசயமாகப் பார்த்தேன்.பதினேழோ,பதினெட்டு இருக்கும் அவள் வயதுக்கு, அவள் பேசுவது அதிகமாகத் தோன்றியது எனக்கு.அதற்கு அவளே பதில் சொன்னாள்.

'இது நான் சொல்லலே.நான் பார்த்துட்டிருந்த அந்த வயசான முஸ்லீம் யோகி அடிக்கடி இதைச் சொல்லுவார்.' என்றாள் அவள்.

'அவரைத் தெரிஞ்சவங்க எல்லாம் அவரை ஆஜ்மீர் பாபான்னு கூப்பிடுவாங்க.அவருக்கு இப்போ 98 வயசிருக்கும்ன்னு, கூட இருக்கிறவங்க சொல்றாங்க.ஆனா நான் அவரை, உங்களுக்கு உண்மையா என்ன வயசு பாபான்னு கேக்கும் போதெல்லாம் எனக்கு வயசே ஆகமாட்டேங்குதே,தாயே.எப்போதான் எனக்கு வயசாகித் தொலையுமோ தெரியலேம்பாரு!' என்று சொல்லிச் சிரித்தாள் அமிர்தவர்ஷிணி.

இந்த மூன்று மாதத்தில் நான் மனம் லேசாகிச் சிரித்தது அப்போதுதான்.

'உனக்கு அவரு எப்படிப் பழக்கம்?' என்றேன் நான்.
'அஞ்சு வயசுலே என்னோட அப்பா,அம்மாவை ரிஷிகேஷ் கங்கை அடிச்சுட்டுப் போனப்போ, அழுதிட்டிருந்த என்னை ஆதரவா அணைச்சுகிட்டவர் அவருதான்!' என்றாள் அவள்.

என்னை மாதிரிப் புற்று நோயில் சாகப் போகிறவனுக்குத்தான் பகுத்தறிவை விட இந்த மாதிரி அற்புதங்கள் உணர்வுப் பூர்வமாக எவ்வளவு அவசியம் என்று தெரியும்.

அதற்குப் பிறகு ஆஜ்மீர் பாபாவைப் பற்றி அவள் சொன்னதை சுருக்கமாகச் சொல்கிறேன்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆஜ்மீரில் இருக்கும் புகழ் வாய்ந்த தர்கா, ஹஸ்ரத் க்வாஜா மொயினுதீன் சிஷ்டி என்பதாகும்.'ஏழைகளிடம் அனபைப் பொழிபவர்' என்று அழைக்கப் படும் அந்த பன்னிரண்டாம் நூற்றாண்டு மஹானின் பிரசித்தி பெற்ற சமாதி, முஸ்லீமகள்,இந்துக்கள் அனைவருக்குமே புனிதத் தலமாகக் கருதப் படுகிறது.அக்பர் சக்ரவர்த்தியே தனது தலை நகரிலிருந்து வாரக் கணக்காகப் பாத யாத்திரை புரிந்து வழிபட்ட அந்த மஹா ஞானியின் சீடர்களின் வழி வந்தவர் ஆஜ்மீர் பாபா என்றாள் அமிர்தவர்ஷிணி.

திடீர் திடீர் என்று பாபாவிடமிருந்து அழைப்பு வந்தால் அமிர்தவர்ஷிணி அவரது எளிய இருப்பிடத்துக்குச் சென்று விடுவாள்.

அமிர்தவர்ஷிணியை மட்டுமல்ல, பாபா எல்லாப் பெண்களையுமே தாயே என்றுதான் கூப்பிடுவார்.தினமும் ஷரிஃப் தர்கா என்றழைக்கப் படும் தர்காவுக்கு, அவளை அழைத்துச் சென்று அதனுடைய பளிங்குப் படிக்கட்டுக்களில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பாபா திடீரென மூன்று நாட்களுக்கு முன்னால் 'நீ மெட்ராஸுக்குப் போ!' என்றாராம்.

'ஏன் பாபா திடீர்ன்னு மெட்ராஸ்?' என்று அமிர்தவர்ஷிணி கேட்டதற்கு 'அவன் உன்னைக் கூப்பிடறான்' என்று மட்டும் சொல்லி விட்டுத் தர்காவின் தளத்திலிருந்து பாபா எழுவதற்கும் அமிர்தவர்ஷிணிக்கு சேஷாத்திரி அங்கிளின் ஃஃபோன் வருவதற்கும் சரியாக இருந்தது என்றாள் அவள்.

ஒரு கணம் எனது வாழ்க்கை மௌனத்தால் நிரம்பியது.

'ஆஜ்மீர் பாபாவுடன் நான் ஃபோனில் பேச முடியுமா?' என்று பிறகு அவளிடம் கேட்டேன்.
முடியாது எனத் தலையாட்டினாள் அவள்.
'ஏன்,ஃபோனில் பாபா பேசமாட்டாரா?' என்றேன்.
'அவன் உன்னைக் கூப்பிடறான்னு என்கிட்டே பேசினதுதான் அவரு கடைசியாப் பேசினதே!'என்றாள் அவள் அமைதியாக.

நான் புரியாமல் அவளையே பார்த்தேன்.

'நான் சென்னைக்கு ரயில்லே வந்திட்டிருக்கும்போதே, பாபா அவரோட வீட்டுலே சமாதி ஆகியிருக்காரு.'என்றாள் அவள்.
முகத்தில் எந்த உணர்வுமே இல்லாமல் சாந்தமாக இதனைச் சொன்னாள்,அமிர்தவர்ஷிணி.
'அவர் இறந்ததை இவ்வளவு கேஷுவலா எடுத்துட்டுச் சொல்றே?' என்றேன் நான் வியந்து.
'அவர் இறந்தார்ன்னு நான் சொல்லலியே.சமாதி அடைஞ்சார்ன்னுதானே சொன்னேன்!' என்றாள் அவள் அதே அமைதியுடன்.

பிறகு அவள் ஏற்கனவே கொண்டு வந்திருந்த ஒரு பச்சை நிறச் சணல் பையிலிருந்து ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தை எடுத்தாள்.நீண்ட வருடங்களாகப் பயன் படுத்தப் பட்டுக் கிட்டத்தட்ட பழுப்பு நிறத்தில் இருந்தன அந்த நோட்டின் தாள்கள்.

'இது பாபா தன் கைப்பட எழுதி, ஓதின திருக்குரான்.நான் இங்கே கிளம்பி வர்ரப்போ, இதை இனி நீ வெச்சுக்கோ தாயேன்னு எனக்குப் பரிசாக் குடுத்தாரு.அதை உன் தலை மாட்டுலே வெக்கிறேன்' என்றவள் அந்த நோட்டுப் புத்தகத்தை எனது கட்டில் தலைமாட்டில் சிரத்தையாக வைத்தாள்.
'தேங்க்ஸ்!' என்றேன் நான் என்ன சொல்வதென்று தெரியாமல்.
அவள்
என்னைப் பார்த்து வெறுமனே புன்னகைத்தாள்.பிறகு அதே சணல் பையிலிருந்து ஒரு சிறிய மூடி போட்ட கிண்ணத்தை எடுத்து மூடியைத் திறந்து என்னருகில் வந்தாள்.
'இதைக் குடி.ஒரு மடங்குதான்' என்றாள் அமிர்தவர்ஷிணி.
'இது என்ன?' என்றேன் நான்.
'பயப்படாதே.வெறும் துளசிச்சாறுதான்.சாமியைக் கும்பிட்டு எடுத்துட்டு வந்திருக்கேன்' என்றாள்,அவள்.
முதலில் அவளது அழகிய,அமைதியான முகத்தைப் பருகி விட்டுப், பின் அவள் கொடுத்த துளசிச் சாற்றை ஒரே மடங்கில் குடித்தேன்.

'துளசி எந்த விஷத்தையும் முறிக்கும்' என்றாள் அவள் தீர்க்கமாக.
'நீ குடுத்தா!' என்றேன் நான்.

அவள் அதற்கும் வெறுமனே முறுவலித்தாள்.அந்த நேரத்தில் அவளது புன்னகையை விடப் பெரிய ப்ரிஸ்க்ரிப்ஷன் எதுவுமில்லை என்று எனக்குத் தோன்றியது.

ஆனால் அந்தத் துளசி சாற்றைக் குடித்த சில நொடிகளில் எனது வயிற்றைப் பிரட்டி அப்படி ஒரு குமட்டல் எடுத்தது எனக்கு.மீண்டும் வாந்தி என்றதும் எனக்குப் பயம்தான் உச்சிக்கேறியது.

'வாந்தி வர்ர மாதிரி இருக்கா?'என்றாள் அவள்.
ஆம் என்று என்னால் தலையைத்தான் அசைக்க முடிந்தது.
'எடு' என்று அவள் நிதானமாகத் தனது கைகளை நீட்டினாள்.நான் அவளைத் தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்.
'எடு,சரவணா' என்றாள் அவள்,தீர்க்கமாக.

நான் அவளது கைகளில் ரத்தமாக வாந்தி எடுத்த போதுதான்,சிவப்பு சிவப்புடன் சேர்வது எவ்வளவு அழகாக இருக்கிறது என யோசித்தேன்.
அவள் அமைதியாக பாத்ரூமுக்குச் சென்று கைகளைக் கழுவி விட்டுச் சொன்னாள்.

'இதுவரைக்கும் நீ சாப்பிட்ட சாப்பாட்டைத்தான் வாந்தி எடுத்திருப்பே.இப்போ எடுத்தது உன் உடம்பிலே தங்கி இருந்த விஷம்.துளசி எல்லாத்தையும் வெளியே கொண்டு வந்துடுச்சு!' என்றாள் அமிர்தவர்ஷிணி அமைதியாக.

எனக்குள் காதல் மலர்ந்த கணம் அதுதான்.

அவளைக் காதலிக்கத் தொடங்கினேன்,எல்லாக் காதலையும் போல இது நிறைவேறுமா என்று தெரியாமலேயே.

( தொடரும்....)

(ஹஸ்ரத் மொயினுதின் சிஷ்டி போன்ற சரித்திர மகா புருஷர்களைத் தவிர இந்தக் கதையில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் கற்பனையே .நிகழ்வுகளும் புனைவுகளே.யாரையும் எதனையும் குறிப்பிடுவன அல்ல.)

திங்கள், அக்டோபர் 12, 2009

காதல மலர்ந்த கணங்கள் 4

அமிர்தவர்ஷிணி
4.
மூன்று மாதங்கள் ஆகின்றன,நான் இந்தப் புற்று நோய் மருத்துவமனைக்கு வந்து.

கெமோ தெராபி,ரேடியேஷன் தெராபி மற்ற சிகிச்சைகள், மருந்து மாத்திரைகள் என்று என்னுடைய உடலுடன் மருத்துவர்கள் இடைவிடாமல் போராடினார்கள்.இதற்குக் கேன்சர் என்று பெயர் வைக்காமல் நத்தை என்று பெயர் வைத்திருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.ஏனென்றால் மரணம் நத்தை வேகத்தில் வந்து கொண்டிருந்தது.

மனித உடலுக்குள்ளும்,மனதுக்குள்ளும் எத்தனை வலிகளும்,வேதனைகளும் இருக்க முடியுமோ அத்தனையையும் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.முடிகள் எல்லாம் கொட்டிப் போய்,நிறம் வெளிறிப் போய்....எனது நண்பர்களை எல்லாம் என்னை இந்தக் கோலத்தில் பார்க்க வர வேண்டாமென்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன்.
ஆனால் அப்பாவை மட்டும் அப்படிச் சொல்ல முடியவில்லை.லுகேமியா செல்கள் என்னைவிட அவரைத்தான் அதிகம் உருக்கி எடுத்துக் கொண்டிருந்தது.

மகன் தந்தைக்காற்றும் உதவி புற்று நோய் மட்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதுதான் என்று தோன்றியது.

என்னுடைய அப்பாவுக்கு ஒரு முடி கூட நரைக்கவில்லை என்று நண்பர்களிடம் அடிக்கடி பெருமை அடித்துக் கொள்வேன்.அதைக் கூடக் கடவுள் (யார் அந்த சேடிஸ்ட்?) விட்டு வைக்காமல் பிடுங்கிக் கொண்டார். நான் மருத்துவ மனைக்கு வந்த ஒரே வாரத்தில் அப்பாவுக்குத் தலை முழுதும் நரைத்து விட்டது.

யாரையும் கடிந்து கூடப் பேசாத அந்த மென்மையான ஆத்மாவை, இப்படி நரகக் குழியில் தள்ளி வேடிக்கை பார்க்கும் முகம் தெரியாத எதிரியே! தயவு செய்து என்னைச் சீக்கிரம் சாக விட்டு எனது அப்பாவைக் காப்பாற்று!

கால வரையரையற்று விடுமுறை எடுத்துக் கொண்டு,அப்பா தானே சமைத்து எனக்குத் தினமும் எடுத்து வந்தார்.
'எப்படியும் வாந்தி எடுக்கப் போறேன்.அதுக்கு ஏம்பா இவ்வளவு கஷ்டப் பட்டுச் சமைச்சு எடுத்துட்டு வர்ரீங்க?' என்பேன் நான்.
'உனக்குத் தேவை இல்லேன்னாலும் உனக்காகப் பண்றோங்கற காரியத்திலே எல்லாம் எனக்கு ஒரு திருப்தி இருக்குப்பா' என்றார் அவர் சாப்பாடு பரிமாறிக் கொண்டே.
அவர் நெற்றியில் இன்னுமே விபூதிக் கீற்றும்,குங்குமமும் இருந்தன.
'நீங்க இன்னும் சாமி எல்லாம் கும்பிடறீங்களாப்பா?'
'சாகும் போது உன்னோட அம்மா விபூதி,குங்குமத்தை வெச்சு உட்டுட்டுக் கடவுள் எப்பவும் உங்களைக் கைவிட மாட்டாருன்னு சொல்லிட்டுக் கண்ணை மூடினா.நான் ஆண்டவனை நம்பறனோ இல்லையோ உங்க அம்மாவை நம்பறேன்' என்றார் அப்பா அமைதியாக.
'பாவம்பா நீங்க' என்றேன் என்னை அறியாமல்.இப்போதெல்லாம் இருவருமே அழுவதில்லை.
துயரம் முற்றி வந்த அமைதி.
சாவுக்கு வைத்த ஆறு மாதக் கெடுவில் ஒரு வழியாக மூன்று மாதங்கள் கழிந்தது என்பது மட்டுமே இப்போது எனக்கு இருக்கும் ஒரே நிம்மதி.

இன்னும் மூன்று மாதங்கள் என்று, ஏதோ விடுமுறைக்குக் காத்திருக்கும் பள்ளிக்கூடச் சிறுவனைப் போல நான் எனது மரணத்துக்காகக் காத்திருந்தேன்.

ஒருநாள் காலை பத்து மணிவாக்கில் மருந்துகளின் அசதியில் நான் என்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென எனக்குக் கனவு போல ஒரு விழிப்பு வந்தது.எனது உறக்கத்தைக் கலைத்தது ஒரு வாசனை.

ஆம்.அதே பச்சைக் கற்பூர வாசனை.மருத்துவ மனையின் செயற்கைத் தூய்மையான டெட்டால் வாசத்தையும் மீறி கோவில் நைவேத்தியங்களில் மட்டும் வீசும் அதே வாசனை.
மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தேன்.படுக்கையின் அருகில் அப்பா,எங்கள் கோவில் மடப்பள்ளி சமையற்காரரான சேஷாத்திரி, சற்றுத் தள்ளிப் பின்னால் அமிர்தவர்ஷிணி மூவரும் நின்றிருந்தார்கள்.

முடிகள் இழந்து மொட்டைத் தலையுடன் இளைத்துக் களைத்துப் போயிருந்த என்னைப் பார்த்துக் கொண்டிருந்த சேஷாத்திரி கண்ணீரை அடக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
'அழ மாட்டேன்,அழமாட்டேன்னு சார் கிட்டே நூறுதடவை சத்தியம் பண்ணிக் குடுத்துட்டுதான் வந்தேன்..ஆனா முடியலேப்பா..'என்ற சேஷாத்திரி மேல் துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்.சிறுவயதில் குலதெய்வத்துக்கு மொட்டை போடமாட்டேன் என்று அழுத என்னைச் சிரித்தபடியே ஆறுதலாக நெஞ்சில் அணைத்துக் கொண்டவர் சேஷாத்திரி அங்கிள்.
அப்பா அமைதியாக அமிர்தவர்ஷிணியைப் பர்த்தார்.

குளிர்ந்த வைகறை நதியைப் போல அவளது பார்வை என் மேல் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது.எந்தச் சலனமுமில்லாத அம்மன் முகம் அவளுக்கு.

'இனி மூணு மாசத்துக்கு அமிர்தவர்ஷிணி நம்ம கூட, நமக்கு உதவியா இருக்கறேன்னு வந்திருக்கா,சரவணா.' என்றார் அப்பா.

சேஷாத்திரி அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட, அமிர்தவர்ஷிணி மெல்ல எனது அருகில் வந்து நின்றாள்.
மூன்று மாதங்களுக்கு முன்னால் கோவிலில் பாவாடை தாவணியில் பார்த்த அமிர்தவர்ஷிணி இப்போது வடக்கத்திய பாணி சுடிதாரில் வந்திருந்தாள்.செல்ஃப் டிசைனில் பூக்கள் போட்ட தூய வெள்ளைச் சுடிதாரில் இன்னும் யாருமே வாசிக்க ஆரம்பிக்காத பொன்னிற வயலினைப் போல இருந்தாள் அவள்..

எந்த ஆசையையும் படக்கூடிய சக்தியை அறவே இழந்து விட்ட சக்கையான என் உடலுக்குள்ளிருந்து அவளது அழகைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.ஆசைகள் அற்றுப் பார்க்கும் போது பெண்ணே வேறு மாதிரி தெரிகிறாள்.பிறந்த குழந்தை அம்மாவைப் பார்க்கும் போது எனது மனோ நிலையில்தான் இருக்கும் போலிருக்கிறது.ஃபில்டர் போட்டுக் காமிராமேன்கள் பனிமூட்டம் போலக் காட்டுவார்களே அது போல அமிர்தவர்ஷிணி இப்போது எனது கண்களுக்குத் தெரிந்தாள்.

மரணம் ஒரு பெரிய புகைப் படக் கலைஞன் என்று நினைத்துக் கொண்டேன்.

சற்று மௌனத்திற்குப் பின் நான்தான் பேசினேன்.

'ஆஜ்மீரிலிருந்து எப்போ வந்தே?'

'இன்னிக்குக் காலையிலேதான்' என்றாள் அவள்.
அவள் குரலை இப்போதுதான் முதல் முறையாகக் கேட்கிறேன்.கோவிலில் அவள் பேசவே இல்லை என்று இப்போதுதான் உணர்கிறேன்.
அந்தரங்கமாகப் பேசுவதுக்கென்றே அமைந்த குரல்,அமிர்தவர்ஷிணியினுடையது.நெருக்கமான சூழ்நிலயிலேயே பெண்கள் பயன்படுத்தும் குரல்.

'எப்படி அதுக்குள்ளே எனக்கு உன்னோடே அப்பாயின்ட்மென்ட் கிடைச்சுது?'

'ஆஜ்மீரிலிரிந்து நான் வந்ததே உன்னைப் பார்த்துக்கறதுக்காகத்தான்!' என்றாள் அவள்.

'சேஷாத்திரி அங்கிள் உன்னை அவ்வள்வு ஃபோர்ஸ் பண்ணியிருக்கார்ன்னு நினைக்கிறேன்'என்றேன் வறண்ட புன்னகையுடன்.

இல்லை என்று உறுதியாகத் தலையாட்டினாள் அவள்.

'பின்னே,யாரு என்னோட அப்பாவா?' என்று கேட்டேன் நான்.

'என்னை உங்கிட்டே வலுக்கட்டாயமா அனுப்பிச்சவரை நீ பார்த்திருக்கவே முடியாது,சரவணா!'என்றாள் அவள்,இப்போதுதான் முதன் முறையாகக் கண்களில் ஈரம் கசிய.

நான் அவள் கண்களில் நீரைப் பார்த்து வியந்து போனேன்.

'பின்னே யாரு,வர்ஷிணி?' அவளது பெயரை மிக இயல்பாகச் சுருக்கிக் கூப்பிட்டது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.

அவள் என்னை ஒரு கணம் ஆழமாகப் பார்த்தாள்.
'ஆஜ்மீர்லே நான் அட்டன்ட் பண்ணிட்டிருந்த சூஃபி பெரியவர்தான் என்னை இங்கே அனுப்பிச்சு வெச்சிருக்கார்!' என்றாள் அமிர்தவர்ஷிணி.

எனக்குள் சிலீரென்றது.

(மீண்டும் சஸ்பென்சுடன் தொடரும் போடுவதற்கு நண்பர் அப்துல்லாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.)

வியாழன், அக்டோபர் 08, 2009

மகா என்ற மகா ரசிகர்..

மனதினையும் தொட்டுச் செல்லும் ஒரு சில விளம்பரங்களில் இதுவும் ஒன்று என்ற தலைப்பினில் இளம் பதிவர் மகா ஒரு இடுகை இட்டுள்ளார்.
கூந்தலுக்கான பேண்டின் விளம்பரம்தான்.
ஆனால் கூந்தல் மட்டுமல்ல, ஆத்மாவே அலைபாய்கிறது..
காமிராவே வயலினை வாசிக்கும் அற்புதம்..
பருகி விட்டுப் பகிர்ந்து கொள்ளுங்கள்..
உங்கள் ரசனைக்கு நன்றி கலந்த வாழ்த்துகள் மகா..
http://ulmanasu.blogspot.com/2009/10/blog-post_08.html

புதன், அக்டோபர் 07, 2009

காதல் மலர்ந்த கணங்கள் 3

3.
அமிர்தவர்ஷிணி.
அமிர்தத்தைப் பொழிபவள் என்ற அர்த்ததைத் தரும் அமிர்தவர்ஷிணி என்ற அவளது பெயரை சத்தியமாக அவளது விழிகளைப் பார்த்த பின்னரே அவளுக்கு யாரோ வைத்திருக்கிறார்கள்.
இப்போது உணர்ந்ததினால் சொல்கிறேன்.
பெண் அங்கங்களின் ராணி,மார்புகள் அல்ல,அவளது விழிகளே!

'பொண்ணு யாரு,சேஷாத்திரி?உங்க சொந்தக் காரப் பொண்ணா?' என்று அமிர்தவர்ஷிணியைப் பார்த்த புன்முறுவலுடனேயே அப்பா கேட்டார்.

'இல்லை.ஆனா சொந்தக்காரப் பொண்ணுகளை விட நெருங்குன சொந்தம் இவோ!' என்றார் சேஷாத்திரி,தானும் பரிவுடன் அமிர்தவர்ஷிணியைப் பார்த்தபடியே.
'இவளை உங்க கிட்டே அறிமுகப் படுத்தறதுக்காகத்தான் கோவிலுக்கு அழைச்சுண்டு வந்தேன்' என்றார் சேஷாத்திரி.
'இந்தப் பொண்ணோட சர்க்கரைப் பொங்கலை விட இவங்களுக்கு இனி வேறென்ன அறிமுகம் வேணும்?'என்றார் அப்பா தனது வழக்கமான மென்மையான சிரிப்புடன்.
'உட்காரும்மா' என்றார் அப்பா
அமிர்தவர்ஷிணியைப் பார்த்து.
அவள் மெல்லெனக் கோவில் தளத்தில் சம்மணமிட்டு அமர்ந்தது, பளிங்கு நீரில் மலர்ந்து விகசித்த தாமரைகளுக்குப் பாடம் எடுத்ததைப் போல இருந்தது.
முகத்தில் தம்பூர் நாதத்தைப் போல ரிம்மென்று எப்போதும் ஒரு புன்னகை அவளுக்கு.
அவளைப் பற்றி சேஷாத்திரி சொன்ன விஷயங்கள் அந்தி வேளையில்,நான் கேட்ட கோவில் பின்னணியிலேயே நீங்களும் கேட்டிருந்திருக்க வேண்டும்.அப்போதுதான் அமிர்தவர்ஷிணியின் அழகை நீங்கள் 3டி விஷனாக உணர முடியும்.

அப்பா,அம்மாவை ஐந்து வயதிலேயே ரிஷிகேஷில் கங்கை ஆற்றின் நீரோட்டத்தில் பறிகொடுத்தவள்,அமிர்தவர்ஷிணி. புனித நீராடச் சென்ற அவளது தாய்,தந்தையைக் கங்கை நதி அவளுக்குத் திருப்பித் தரவே இல்லை.அனாதையான அமிர்தவர்ஷிணியை அவளது அப்பாவின் நண்பர்களே பொறுப்பேற்றுக் கொண்டு இதுவரை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார்கள்.நன்கு,விசாரித்துத் தெரிந்தபின்னர் ஒவ்வொரு குடும்பமாக அனுப்பப் பட்டு,அடைக்கலம் தரப்பட்டு வளர்ந்தவள் அமிர்தவர்ஷிணி.இந்தியா முழுதும் வெவ்வேறு பாரம்பரியக் குடும்பங்களில் வளர்ந்தவள்,அவள்.அவள் வளர்வதற்காகவே ஒரு செம்மையான நெட்வொர்க் உருவாகி இருந்தது, இப்போதும் யார்,யார் வீட்டுக்கு அவள் பணி தேவையோ அதை முன்கூட்டியே சொல்லி அவளை வரச் சொல்லி முன்பதிவு செய்து விடுகிறார்கள்அந்தந்த வீட்டுக்காரர்கள்.மதமோ,கலாசாரமோ தடையில்லை,அவளுக்கு.செம்மையான,உண்மையான மனம் இருந்தால் போதும் அந்த வீடுகளுக்குப் பணி புரியச் சென்று விடுவாள்,அமிர்தவர்ஷிணி.

முதியவர்கள்,மன நலம் குன்றிய இளம் பெண்கள்,குழந்தைகள்,மரணத் தறுவாயில் இருக்கும் நோயாளிகள் அனைவருக்கும், இறக்கைகள் இல்லாத இன்றைய நிஜ தேவதை அவள்.

உங்களைப் பூவாக மாற்றும் அவளது புன்முறுவல்,ஆத்மா வரைக்கும் ஊடுருவும் அவளது சமையல்,உடலைத் தாண்டி உள்ளே தொடும் உண்மையான பெண்மையின் ஸ்பரிசங்கள், சொல்லப் போனால் கமர்ஷியல் ஃப்ளைட்டுகளுக்காகக் காட்டப் படும் இன்டர்நேஷனல் விளம்பரங்களில் வரும் விமானப் பணிப் பெண்களின் வேத காலத்துப் பெண் வடிவம்தான் அமிர்தவர்ஷிணி.
அம்பாளுக்கு அவள் அப்பா, தனது வாழ்நாள் முழுதும் மனப் பூர்வமாகச் செய்த அபிஷேகங்களின் பலன்தான் இப்படி ஒரு மகள் என்று இப்போது நினைக்கிறேன்.

அந்த மாலை வேளையில் கோவில் தரையில் வைக்கப் பட்டிருக்கும் ஒரு வெள்ளித் தீர்த்தக் குடம் போல விளங்கினாள்,அவள்.
நோய்வாய்ப் பட்டிருக்கும் ஒரு சூஃபி முஸ்லீம் பெரியவருக்குப் பணிவிடைகள் புரிவதற்காக நாளை ஆஜ்மீர் செல்கிறாள் அமிர்தவர்ஷிணி,என்று சொல்லி முடித்தார் சேஷாத்திரி.

அப்பா அவளையே ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தார்.ஒரு இளம் பெண்ணை அவ்வளவு மரியாதையோடும்,கனிவோடும் அப்பா பார்த்து நான் பார்த்ததே இல்லை.
என் இருபத்து நான்கு வயதுக்கு, என் மனதைத் தாண்டிப் பூரணமாக இருக்கும் பெண்ணான அவளை ஒரு இளம் வலியாக மட்டுமே எனக்குள் உணர முடிந்தது.
விடை பெறும் போது அப்பாவை வணங்கி விட்டு என்னைப் பார்த்து வெறும் புன்னகை மட்டும் புரிந்து சென்றாள் அவள்.
பூர்வ ஜெனமங்களில் நம்பிக்கை இல்லாதவர்கள் இந்த மாதிரி அழகான பெண்களின் புன்னகைகளைப் பார்க்காதவர்களாய் இருக்க வேண்டும்.அவள் என்னைப் பார்த்து முறுவலித்த போது, நான் எப்போதோ பார்த்த ஒரு தொல்பொருள் துறையின் பராமரிப்பில் இருக்கும் அரண்மனையே என் மனக் கண்ணில் விரிந்தது.அங்கே நானே இளவரசனாய் இருந்ததைப் போன்ற உணர்வு.
சாமான்யனான என்னை சமஸ்தான இளவரசனாக்கியதற்கு நன்றி,பெண்ணே என்று உள்ளுக்குள்ளேயே உருகினேன்.
அடுத்த நாள் கல்லூரிக்குக் கட் அடித்து விட்டு ஒரு சூடான ஆங்கிலப் படம் பார்த்து விட்டு மாலை வீடு திரும்பினேன்.அந்தப் படத்தின் வெள்ளைக்காரக் கதாநாயகி என் இதயத்தைத் தனது பியானோவாக ஆக்கி இன்னும் சௌண்ட் ஆஃப் மியூசிக்கை வாசித்துக் கொண்டிருந்தாள்.

அப்பாவின் நண்பர் டாக்டர் அன்பரசன் எனக்கு எடுத்திருந்த ரத்தப் பரிசோதனை முடிவுகள் வந்திருந்தன.
அப்பா ரிசல்ட் பேப்பர்களின் மேல் முகம் புதைத்துப் படுத்திருந்தார்.

'அப்பா' என்று அருகில் சென்று அவர் தோளில் கை வைத்தபோது அவரது கண்களில் நீரோடியிருந்த தாரை புரிந்தது.
'உடம்புக்குச் சரியில்லையாப்பா?' என்றேன் உண்மையான கவலையுடன்.

சடாரென அவர் உரக்கக் கேவிக் கேவி அழுதார்.அவரை ஆதரவுடன் தோளில் அணைத்துக் கொண்டேன்.அவர் அவ்வளவு அழுது நான் இதுவரை பார்த்ததே இல்லை.
'ஏம்பா..ஏம்பா..என்னாச்சுப்பா உங்களுக்கு?' என்று திருப்பித் திருப்பிக் கேட்டேனே தவிர அவர் அழுவதே எனக்காகத்தான் என்பது அந்தக் கணம் வரைக்கும் எனக்கே தெரியவில்லை.

எனக்குத்தான் லுகேமியா என்ற தீவிர ரத்தப் புற்று நோய்.ஆறே மாதங்களில் நான் சாகப் போகிறேன் என்று மருத்துவர்கள் அறுதியாகச் சொல்லி விட்டார்கள்.

எனக்கு மரணம் என்றதும் பயம் வரவில்லை.மாறாக அமிர்தவர்ஷிணியின் முகம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

இனி மேல்தான் எனது காதல் மலர்ந்த கணங்களே!

(காதல் தொடரும்)

புதன், செப்டம்பர் 16, 2009

காதல் மலர்ந்த கணங்கள் (2)

அமிர்தவர்ஷிணி

2.
முருகன் கோவில் அடிவாரத்தில் மூன்றாவது முறையாக ரத்த வாந்தி எடுத்த போதுதான் நான் முதன் முதலாகப் பயப்பட்டேன்,அப்பாவை நினைத்து.
அப்பாவை நினைத்ததும் மேலே முருகன் கோவிலில் மணி அடித்தது.அப்பா மிக மென்மையான மனிதர்.சராசரி உயரம்.மானிறம். ஐம்பதை வயதை நெருங்கும் அவருக்கு இன்னும் தலையில் ஒரு முடி கூட நரைக்கவில்லை என்பது ஆச்சர்யம்.அற நிலையத் துறையில் அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

நாங்கள் இருவரும் தமிழ் நாடு முழுதும் கோவில் கோவிலாகவே வாழ்ந்திருக்கிறோம். அப்பா எந்தக் கோவிலுக்குப் பணியாற்றச் சென்றாலும் அந்தக் கோவில் தெய்வத்தின் தீவிர பக்தராகி விடுவார் சிவன்,விஷ்ணு,முருகன்,அம்மன் என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைத்துத் கடவுளர்களிடத்தும் பரிபூரண பக்தி பூண்டிருந்தவர் அப்பா.

எந்தக் கோவிலில் பணியாற்றுகிறாரோ அந்தக் கோவிலின் ஸ்தல புராணம் அவருக்குக் கரதலப் பாடமாகி விடும்.அந்தக் கோவில் தொடர்பான தமிழ், வடமொழி இலக்கியங்கள் அனைத்தையும் படித்து விடுவார்.எங்கள் வீட்டில் ஒரு பெரிய ஆன்மிக நூலகமே இருக்கிறது.கோவில் குருமார்கள், அர்ச்சகர்களுக்கே வழிகாட்டியாக இருக்கும் அப்பா துளிக் கூடக் கர்வமின்றி அவர்களிடமும் இதர கோவில் அடி நிலைப் பணியாளர்களிடமும் கனிவுடனும்,பரிவுடனும் நடந்து கொள்வதால் அப்பாவை வெறுத்துப் பேசியவர்களையோ,அல்லது அவரிடம் முகம் சுளித்தவர்களையோ கூட நான் இதுவரை பார்த்தது கிடையாது.தியானம்,யோகா,ஆழ்ந்த நூலறிவு இவற்றின் நிரந்தரப் பயிற்சியே அவரது மன முதிர்ச்சிக்குக் காரணம் என்று நினைத்துக் கொள்வேன்.அப்பாவுக்கு எப்போதுமே சைவ உணவுதான். அம்மா இறந்த பிறகு பாதி நாள் காவி வேட்டிதான்.அரைகுறைத் தாடிதான்.அவர் கிட்டத்தட்டத் துறவியாகவே வாழ்ந்தார் எனலாம்.

அவருக்கு இருந்த ஒரே உலகப் பற்று இப்போது நான்தான்.எனக்கு ஏதாவது ஒன்று என்றால் அவர் துடித்து விடுவார் என்பதாலேயே எனது ரத்தவாந்தியால் என்னை விட அவரை நினைத்துத்தான் நான் அதிகம் கலங்கினேன்.எனக்கு சீரியசாக எதுவும் நடந்து விடக் கூடாது என்று மயிலம் முருகனை மனதார வேண்டிக் கொண்டேன்.
சென்னை வந்ததும் நேராக அப்பாவின் நெருங்கிய நண்பரான டாக்டர்.அன்பரசனிடம் சென்றோம்.எனது நண்பர்கள் என்னை விடப் பதறிப் போயிருந்தார்கள்.ரத்த வாந்தியைப் பற்றிச் சொன்னதும் என்னை ஆதரவுடன் தோளில் அணைத்துக் கொண்டார் .அன்பரசன்
'கவலைப் படாதே சரவணா..ஏதோ ஆகாத சாப்பாட்டைச் சாப்பிட்டிருக்கேன்னு நினைக்கிறேன்.ப்ளட் டெஸ்ட் எடுத்துப் பார்த்துடுவோம்.நான் குடுக்கற மாத்திரைகளைச் சாப்பிடு.யூ வில் பி ஆல்ரைட்,பை டொமாரோ ஈவினிங்'

அன்பரசனின் இந்த வார்த்தைகளைக் கேட்டதும்தான் நாங்கள் பழைய உற்சாகத்திற்குத் திரும்பினோம்.

'தேங்க்ஸ்,அங்கிள்' என்றேன் நான்,மயிலம் முருகனுக்கும் சேர்த்து.
கிளினிக்கிலிருந்து வெளியே வரும் முன்னர் 'ஒரு முக்கியமான விஷயம்' என்றார் அன்பரசன்.
திரும்பி நின்றோம்.
'இதைப் பத்தி உங்கப்பன் சாமியார் கிட்டே மூச்சுக் கூட விட்டுடாதே.அப்புறம் ஒரே நாள்ளே அவன் நாலு கிலோ இளச்சுடுவான்! அவனைத் தேத்தறதுக்கு வேறே நான் தனியா ஒரு கோர்ஸ் டானிக் தரனும்!' என்றார் அவர்.
நாங்கள் சிரித்தோம்.

'வீக் என்ட்லே நாம எல்லோரும் ஒண்ணா என் வீட்டுலே பீர் சாப்பிடப் போறோம்.என் பொண்ணு தேன்மொழி பிரமாதமா ஃபிஷ் ஃப்ரை பண்ணுவா.ஓ.கே,பாய்ஸ்?' என்றார் அன்பரசன்.
வெட்கத்துடன் 'தேங்க்ஸ் அங்கிள்' என்றார்கள் எனது நண்பர்கள்.

வெளியே வந்ததுமே 'இனிமே எங்களுக்கும் இவர்தாண்டா ஃபேமிலி டாக்டர்!' என்றான் மணி.

'டாக்டரோட பொண்ணு தேன்மொழி எப்படிடா இருப்பா?' என்று ஆர்வமாகக் கேட்டான் தாமஸ்.
'செகன்ட் இயர் எம்.பி.பி.எஸ். பண்றா!' என்றேன் நான்.
'சரி விடறா மாப்பிள்ளே,நம்ம ரேஞ்ச்லேயே நாம ஃபிஷ் ஃபிரை சாப்பிடுவோம்!' என்றான் ஹசன்.

நண்பர்களைப் பிரிந்து வீட்டுக்கு நான் வந்த போது மாலை மணி மூன்றாகி விட்டது.நன்றாகத் தூங்கி எழுந்து ஒரு குளிர்ந்த நீர்க் குளியல் போட்டதுமே பழைய சுறுசுறுப்பு வந்து விட்டது.அப்பாவைப் பார்க்க அவர் வேலை பார்க்கும் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோவிலுக்குப் போனேன்.
நான் சென்ற போது பெருமாளுக்கு அந்திக் காலப் பூஜை நடந்து கொண்டிருந்தது.அர்ச்சகர் ஸ்வாமிக்கு ஆராதனை காட்டிக் கொண்டிருந்தார்.மஞ்சள் விளக்குகளின் ஒளியில் பெருமாள் மின்னும் தங்க வைர,நகைகளின் செல்வங்களுக்குப் பின்னால் அவற்றைப் பற்றிய எந்த ரியாக்ஷனும் இல்லாமல் சாந்தமாக நின்று கொண்டிருந்தார்.அப்பா முன்னால் நின்று கண்களை மூடி அதே அமைதியுடன் பெருமாளைக் கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்பாவின் அந்த அமைதி குலையக் கூடாது என்று நானும் பெருமாளை வேண்டிக் கொண்டேன்.
'சார்,பிள்ளையாண்டான் வந்திருக்கார் பாருங்கோ' என்று அர்ச்சகர் சொன்னதும்தான் கண்கள் திறந்து என்னைப் பார்த்தார் அப்பா.அதே பாசமான பார்வை.
'எப்போப்பா வந்தே?'
'சாயந்திரம் மூணு மணி ஆயிடுச்சுப்பா' என்றேன் நான்.
ஆண்டவனை வழிபட்டு முடிந்ததும் நாங்கள் இருவரும் எப்போதும் கோவிலில் உட்காரும் கல்பெஞ்சில் அமர்ந்தோம்.
அந்திக் கருக்கலில் கோபுரம் மனித நம்பிக்கையைப் போலவே பிரம்மாண்டமாக நின்றது.ஆலய மணியின் ஓசை எப்போதையும் விட இன்றைக்கு எனக்கு ஆறுதலாக இருந்தது.
இந்தப் பின்னணியில் அப்பாவுடன் ஒன்றும் பேசாமல் உடகார்ந்திருந்தாலே உள்ளெல்லாம் குளிர்ந்து அமைதியாக இருக்கும்.பலநாள் இந்த ஆழ்ந்த சுகத்தை நான் அனுபவித்திருக்கிறேன்.
கோபுரத்தையே பார்த்துக் கொண்டு மௌனமாக அமர்ந்திருந்த எங்களது அமைதியை 'ஸ்வாமி' என்ற குரல் கலைத்தது.
திரும்பிப் பார்த்தோம்.
மடப்பள்ளி சமையற்காரரான சேஷாத்திரி கையில் ஒரு வெண்கலப் பாத்திரத்துடன் நின்று கொண்டிருந்தார்.
'உங்க ரெண்டு பேரோட ஐக்கியத்தைக் கலைச்சுட்டேன்னு நினைக்கிறேன்' என்றார் சேஷாத்திரி.
'அதெல்லாம் ஒண்ணுமில்லே சொல்லுங்க,சேஷாத்திரி' என்றார் அப்பா.
'இந்த நைவேத்தியப் பொங்கலைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்துச் சொல்லுங்களேன்' என்று வெண்கலப் பாத்திரத்தையும் இரண்டு பிளாஸ்டிக் ஸ்பூன்களையும் நீட்டினார்,சேஷாத்திரி.
நானும்,அப்பாவும் ஆளுக்கு ஒரு வாய் சாப்பிட்டோம்.
நெய்யும்,பருப்பும்,வெல்லமும், முந்திரியும் இதற்கு மேல் இவ்வளவு அழகாக இணைய முடியாது.அத்தனை மணமான,சுவையான சர்க்கரைப் பொங்கலை நான் அதுவரை சாப்பிட்டதே இல்லை.
'உங்களோட கைமணத்துக்குச் சொல்லவா வேணும் சேஷாத்திரி.பெருமாளே உங்களோட பொங்கலைப் படைக்கலேன்னா சோகமாயிடுவார்.எப்படி சரவணா இருக்கு?'என்றார் என்னைப் பார்த்து.
'சிம்ப்ளி சூபர்ப்' என்றேன் நான்
உண்மையில் ருசித்து,ரசித்து,நான் சொன்ன வார்த்தைகளில் எல்லாம் சர்க்கரைப் பொங்கலின் நெய் மணம் வீசியது.
'உங்க வாயாலே இந்த ஆசிர்வாதம் வாங்குனது நான் இல்லே.இதைச் சமைச்சவாதான்.அமிர்தவர்ஷிணி,இங்கே வா,குழந்தே' என்று கோவில் தூணுக்குப் பின்னால் மறைந்தும் மறையாமல் நின்றிருந்த யாரோ ஒரு பெண்ணை அவர் அழைக்க அவள் வெளிப்பட்டாள்.

அந்திக் கருக்கலில், ஆலய மணியின் ஓயாத ஓசைகளுக்கு மத்தியில், பின்னணியில் நின்ற அந்த பிரம்மாண்டமன கோபுரமே பெருமையுடன் அறிமுகப் படுத்திய ஒரு வெள்ளை மின்னல் போல் தூணுக்குப் பின்னாலிருந்து வெளிப் பட்டாள் அவள்.
கரும் பச்சைப் பாவாடை தாவணியில் மெல்லென நடந்து வந்தது அந்த சுகம்.
'எங்களுக்குத் தெரிஞ்சவா பொண்ணு. பேரு அமிர்தவர்ஷிணி.பெரியவாளைச் சேவிச்சுக்க,குழந்தே' என்றார் சேஷாத்திரி.
அவளிடமிருந்து ஒரு மயக்கும் பச்சைக் கற்பூர வாசனை வீசியது.

சர்க்கரைப் பொங்கலை அவளைச் சமைக்கச் சொல்லி, ஸ்வாமிக்கு நைவேத்தியமாகப் படைப்பதை விட அவளையே சர்க்கரைப் பொங்கலாக ஸ்வாமிக்கு நைவேத்தியமாகப் படைத்திருக்கலாம் என்று தோன்றியது.
அவள் அப்பாவை நமஸ்கரித்தாள்.கூப்பிய அவளது கைவிரல்களின் அழகுக்கு நான் இன்னும் உவமையைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
என்னை வெறுமனே மரியாதையான புன்னகையுடன் பார்த்தாள்.

அமிர்தத்தைப் பொழிபவள் என்ற அர்த்ததைத் தரும் அமிர்தவர்ஷிணி என்ற அவளது பெயரை சத்தியமாக அவளது விழிகளைப் பார்த்த பின்னரே அவளுக்கு யாரோ வைத்திருக்கிறார்கள்.
இப்போது உணர்ந்ததினால் சொல்கிறேன்.

பெண் அங்கங்களின் ராணி,மார்புகள் அல்ல,அவளது விழிகளே!
(தொடரும்)

(பின்குறிப்பு: இந்தக் கதையின் முதல் பாகம் கணிணித் திரையில் தோன்றிய சில மணி நேரங்களிலேயே ரசித்தும்,பின்னூட்டமிட்டும்,வாக்களித்தும் வாழ்த்தி ஊக்கமளித்த அனைத்து நண்பர்களுக்கும் ஒட்டுமொத்தமான மகிழ்ச்சியைனையும்,நன்றியினையும் இங்கேயே தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று மாலையே எனது கதை விவாதத்திற்காக ஹைதராபாத் செல்ல வேண்டி இருப்பதால் சென்னை திரும்பியவுடன் தனித் தனியே நண்பர்களுடன் தொடர்பு கொள்கிறேன்.நன்றி.வாழ்த்துக்கள்.)

செவ்வாய், செப்டம்பர் 15, 2009

காதல மலர்ந்த கணங்கள்

ஒரு பிரபலமான தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகப் பணி புரிகிறேன்,நான்.
ஒரு கலந்துரையாடல் தொடர்,ஒரு விளையாட்டுத் தொடர்,ஒரு வாழ்க்கைத் தொடர் இப்படி மூன்று தொடர்களை உருவாக்கி ஏற்கனவே பெரும் பரபரப்பையும்,புகழையும் பெற்றிருந்த நான், நான்காவதாக உருவாக்கிய 'காதல் மலர்ந்த கணங்கள்' என்ற உண்மைக் காதல் சம்பவங்களின் தொடர்தான் என்னைப் புகழின் உச்சிக்கே கொண்டு சென்றது.

நூற்றுக்கணக்கான உண்மைக் காதலர்களைப் பேட்டி கண்டு, வாழ்க்கையில் முதன் முதலாக அவர்கள் மனதில் காதல் மலர்ந்த கணங்களைத் தொடராக்கிப், பின்னர் உண்மைக் காதலர்களை நேயர்களுக்கு நேருக்கு நேர் அறிமுகப் படுத்தும் நிகழ்ச்சி அது.

மக்கள் மனங்களைக்,குறிப்பாக இளைஞர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட அந்த நிகழ்ச்சியில் பெரிதும் வரவேற்பினைப் பெற்ற ஐந்து தொடர்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

அமிர்தவர்ஷினி
---------------------

நெஞ்சே,அமைதியாக இரு.
பிரிகின்ற நேரம் இனிமையாக இருக்கட்டும்.
அது மரணமாக இருக்க வேண்டாம்,நிறைவாக இருக்கட்டும்.
காதல், நினைவுகளாகவும்,வலி, கீதங்களாகவும் உருகட்டும்.
வானம் முழுக்கப் பறந்தது, கூட்டில் வந்து சிறகுகள் மடங்குவதாக இருக்கட்டும்.
இரவுப் பூக்களைப் போல மென்மையாக, உனது விரல்கள் என்னைக் கடைசி முறையாகத் தொடட்டும்.
அழகிய முடிவே,ஒரு கணம் ஆடாமல் அசையாமல் நின்று உனது இறுதி வார்த்தைகளை மௌனமாகச் சொல்.
உன்னைப் பணிந்து வணங்குகிறேன்.
உனது வழியெல்லாம் ஒளிதுலங்க, நான் எனது விளக்கினை ஏந்தி வருகிறேன்...
-ரவீந்திரநாத் தாகூர்.

எனது பெயர் சரவணகுமார்.
23 வயது முடிந்து எனது 24 வயதை, இன்றுதான் அப்பா ஆசையுடன் வாங்கி வந்த பிறந்த நாள் கேக்கை வெட்டிக் கொண்டாடுகிறேன்.என் வீட்டில் சுற்றிலும் நண்பர்கள் பட்டாளம்.ஒரே ஆரவாரம்.அமர்க்களம்.முதல் வாய்க் கேக்கை நான் அப்பாவுக்கு ஊட்டிவிட மகிழ்ச்சியுடன் அவர் எனக்குக் கேக்கை ஊட்டி விட்டார்.கேக்கை விழுங்கியதும் சில நிமிடங்களிலேயே வாஷ் பேசினுக்கு ஓடிச் சென்று வாந்தி எடுத்தேன்.

வெண்பனி போல் நான் சாப்பிட்ட ஸ்ட்ராபெரி கேக், செர்ரிப் பழ நிறத்தில் ரத்தத்துடன் வெளியே வந்தது.அப்போது நான் அதனைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

வாழ்க்கையின் முதல் அறியாமையே நம் மரணத்தைப் பற்றித்தான் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

அலட்டிக் கொள்ளாமல் வாயைக் கழுவிக் கொண்டு,பாத்ரூமிலிருந்து வெளியே வந்து நண்பர்கள்,அப்பாவின் உற்சாகத்தில் கலந்து கொண்டேன்.ஒரு மணி நேரம் கழித்து நண்பர்கள் நாங்கள் ஐந்து பேரும் பைக்குகளில் பாண்டிச்சேரி செல்வதாகத் திட்டம் போட்டிருந்தோம்.என்னுடைய பிறந்த நாள் பரிசாக நான் நண்பர்களுக்குக் கொடுக்கும் ட்ரீட் இது. அப்பா ஹோட்டலில் வாங்கி வைத்திருந்த இனிப்பையும்,பொங்கலையும் ஒப்புக்குச் சாப்பிட்டு விட்டு நாங்கள் பாண்டிச்சேரிக்குப் பறந்தோம்.

எனது அம்மா நான் மூன்று வயதாக இருக்கும் போதே அப்பாவுடன் கோவிலுக்குச் சென்ற போது பைக் விபத்தில் இறந்து விட்டாள்.இன்றும் அந்தி நேரத் தனிமைகளில் அப்பா கண்களை மூடிக் கண்ணீர் வழிய அமர்ந்திருப்பது அம்மாவின் ஞாபகத்திலதான் என்று எனக்குத் தெரியும்.நான் அப்படியே அம்மாவின் ரோஜா நிறத்தில் அவளது கலர் செராக்ஸ் ஆக இருப்பதினால் அப்பாவுக்கு என் மேல் அதீத அன்பு.

அவருக்கு, அம்மாவின் நினைவுச் சின்னமே நான்தான்.

பைக்கை ஸ்டார்ட் செய்துவிட்டு 'வர்ரேன்பா' என்று அப்பாவிடம் விடை பெற்றுக் கொண்டு கிளம்பினேன்.'ஜாக்கிரதை,சரவணா' என்று அவர் சொன்ன போது அவரது கண்களில் ஈரம் தெரிந்தது.அம்மாவைப் பைக் விபத்தில் இழந்தபின் அவர் பைக்கைத் தொடுவதே இல்லை.

ஐந்து பைக்குகள்.இளமைக்குப் பெட்ரோலும் ஊற்றிப் பற்ற வைத்து விட்டால் எப்படி இருக்கும்?
100க்குக் குறையாமல் எங்கள் பைக்குகள் விரைந்தன.போகும் வழியில் மூன்று பஸ்கள்,நான்கு லாரிகள்,ஒரு கார் இவற்றுக்கு எங்கள் உடல்களைத் தாரை வார்த்திருப்போம்.மயிரிழையில் மரணங்களைத் தவிர்த்து விட்ட சிரிப்புடன் 'ஹோய்' என்று கத்திக் கொண்டே பறந்தோம்.

மணக்குளம் விநாயகர் கோவிலில் கிண்டல்கள் நிறைந்த பிரார்த்தனைகளுடன் எங்கள் பாண்டிச்சேரி உல்லாசம் தொடங்கியது.பீரும்,பெட்ரோலும் கரை புரளக் கடற்கரை,ஆரோவில் என்றெல்லாம் சுற்றி அலைந்தோம்.அம்மாவின் சந்நிதியில் ஒரு காலை நேரத்தில் மலர்களை வைக்கும் போது மட்டும் சற்றே அமைதியுடன் இருந்தோம்.அப்பாவின் மகிழ்ச்சிக்காக மனப் பூர்வமாக வேண்டிக் கொண்டேன்.

அன்று மாலை பாண்டிச்சேரிக் கடற்கரையில் இரண்டே நாளில் இரண்டாம் முறையாக வாந்தி எடுத்தேன்.

பீர் நுரையுடன் ரத்தமும் வந்த போது நண்பர்கள் பதறிப் போனார்கள்.அப்போதே மருத்துவ மனைக்குப் போகலாம் என்றவர்களை நான்தான் இது ஒரு சின்ன விஷயம் என்று அடக்கி விட்டேன்.அந்த நேரம் பார்த்து வெள்ளைக்காரப் பெண் ஒருத்தி எங்களைக் கடந்து போனாள்.17,18வயதுதானிருக்கும்,அவளுக்கு.சடாரென நெஞ்சில் அறைவதைப் போல அப்படி ஒரு அழகு, அவளுக்கு.
அவளையே என்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்த என்னை நண்பர்கள்தான் இந்த பூமிக்கு மீண்டும் அழைத்து வந்தார்கள்.
'டேய்,சரவணா,என்னாச்சுடா உனக்கு?'என்றான் ஹசன்.
'தொட்டாக் கரைஞ்சுடுவா போலே இருக்கேடா!' என்றேன் மெய்மறந்து.இல்லை,பார்த்தாலே கரைந்து விடுவாளோ என்று பின்னால் திருத்தத் தோன்றியது.

ஹோட்டல் அறையில் அன்று இரவு முதன் முறையாக நண்பர்கள் அனைவரும் விஸ்கி சாப்பிட்டோம். அந்த ஹோட்டலில் டாப்லெஸ் நடனம் வேறு இருந்தது.இரண்டு பெக்குகளுக்குப் பிறகு அங்கே சென்றோம்.

நாங்கள் அனைவருமே பெண்மார்புகளுக்குப் புதிது.

முதன் முறையாக ஆடைகள் அற்ற வெற்று மார்புகளைப் பார்க்கப் போகிறோம் என்ற பரவசத்தில், விஸ்கி கொத்திய விஷம் இன்னும் பரபரவென்று உடம்புக்குள் மேலே மேலே ஏறிக் கொண்டிருந்தது..அரைகுறை உடைகளுடன் அந்தப் பெண் ஆட,ஆட மனதுக்குள் இருந்த பூதங்களுக்கு யாரோ தீ வைத்து விட்டார்கள்.உடம்பு ராட்சசத் தனமாக வளர்ந்து கொண்டே போவதைப் போல உணர்ந்தோம்.

நடனமாடிய அந்த இளம் பெண் கடைசி மேல் துணியை அவிழ்த்து எறிந்ததுமே எங்கள் எல்லோருக்குமே அடிவயிற்றில் விர்ரென்று ஒரு சக்கரம் படுவேகமாகச் சுற்ற ஆரம்பித்தது. கல்லூரியில் என்றோ யோகா வகுப்பில் உடம்பில் பல இடங்களில் சக்கரங்கள் சுழலும் என்று சொன்னது உண்மைதான் போலிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.கண்ணுக்குத் தெரியாத ஒரு தீ உடம்பு முழுதும் பரவிய தணலில் காய்ச்சல் வந்தவர்களைப் போல ஆனோம்.

பெண்ணுடலில்,அங்கங்களின் ராணி என்று மார்புகளையே சொல்லலாம் என்று தோன்றியது.

அந்தப் பெண்ணின் மேலுடம்பைத் தாண்டி அவள் முகத்தைப் பார்க்கவே எங்களுக்குப் பல நிமிடங்கள் ஆகின.ஆடிக் கொண்டிருந்த அவளது வேர்த்து வழிந்த முகம் சாலையோரத்தில் விற்கும் பிளாஸ்டிக் பூவைப் போல அழகாகவே இருந்தது.அதில் ஏனோ தானோ என்ற ஒரு நிரந்தரப் புன்னகை.

அறைக்குத் திரும்பியவுடன் ஆளாளுக்கு மீண்டும் விஸ்கியை ஊற்றிக் கொண்டதும்தான் செலவழிந்த உணர்ச்சிகள் மீண்டும் உயிர் பெற்றன.
'பெண் அங்கங்களின் ராணி'யை முதன் முதலாகப் பார்த்த அனுபவத்தை ஆளாளுக்கு ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்று நான் தொடங்கியதும் நண்பர்கள் அனைவரும் உற்சாகமாக ஆரம்பித்தனர்.

'வயர்லெஸ்.ஆனா இன்னும் ஷாக் அடிச்சுகிட்டே இருக்கு!' என்றான் ஹசன்.
'ஒரு பொண்ணு மூலமா உலகத்துப் பொண்ணுகளை எல்லாம் பார்த்துட்டேன்!'என்றான் மணி.
'அவ இப்படியே ரோட்டுலே நடந்து போனா பாண்டிச்சேரியிலே பார்களே தேவை இல்லே!எல்லாத்தையும் இழுத்து மூடிடலாம்!'என்றான் ஃபிலிப் தாமஸ்.
'தொட்டுப் பார்க்காமே என்னாலே எதையும் முழுசாச் சொல்ல முடியாது!'என்றான் ராகவன்.
எல்லாரும் கடைசியாக என்னைப் பார்த்தார்கள்.
'ஆம்பளைப் பையன்னா என்ன அர்த்தம்ன்னு ஒரு பொண்ணுதாண்டா சொல்லித் தர முடியும்!'என்றேன் நான்.

நான்காம் நாள் காலை எல்லோரும் மயிலம் முருகன் கோவில் வழியாகச் சென்னை திரும்பினோம்.
என்னால் கோவில் படிக்கட்டுக்கள் ஏற முடியவில்லை.திடீரென மூச்சுத் திணறியது.ஹசனும்,தாமஸும் என்னுடன் இருந்து கொள்ள மணியும்,ராகவனும் மட்டும் கோவிலுக்குச் சென்றார்கள்.
முருகன் கோவில் அடிவாரத்தில் மூன்றாவது முறையாக ரத்த வாந்தி எடுத்த போதுதான் நான் முதன் முதலாகப் பயப்பட்டேன்,அப்பாவை நினைத்து.

(தொடரும்)

வியாழன், செப்டம்பர் 03, 2009

யூ.ஜி.உடன் ஒரு உரையாடல்

(யூ.ஜி.யுடன் கே.சந்திரசேகர் நடத்திய ஒரு உரையாடல்.ஒலிப்பதிவு நாடாவிலிருந்து மொழிபெயர்த்துத் தொகுத்தவர் ஜே.எஸ்.ஆர்.எல்.நாராயணமூர்த்தி.)
யூ.ஜி.என்னும் ஆன்மீகத் தீவிரவாதியின் இந்த சிந்தனைகளின் குண்டு வீச்சில்,உங்கள் மனதின் பல ட்வின் டவர்கள் தகர்ந்து பொல பொலவென உதிரும் என நம்புகிறேன்.
****************************
எண்ணங்கள்தான் பிரச்சினையா?
'என்னால் செய்ய முடியவில்லையே' என்று நீங்கள் எண்ணுவதிலிருந்துதான் துயரமே தொடங்குகிறது.
பிரச்சினை, துயரம் அல்ல.துயரத்தைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதுதான் பிரச்சினையே.
'நினைப்பதை நிறுத்துங்கள்' என்று உங்களிடம் நான் சொல்லவில்லை.ஏன் என்றால் நினைப்பது நின்றால் நீங்களே இல்லை.
எண்ணங்கள் இல்லை என்றால் நீங்களும் இல்லை.ஒன்றுமே இல்லை.எண்ணங்கள் அற்ற போது, அங்கே இருப்பதை வெளிப்பட விடுங்கள்.அதனைத் தனியே விட்டு விட்டால் அது தானே செயல் படத் தொடங்கும்.
நினைப்பின் மூலம்தான் உங்கள் துயரங்களை நிலைத்திருக்கச் செய்கிறீர்கள்.
உங்களிடம் தவறே இல்லை,ஒன்றைத் தவிர.
துணிச்சல் இல்லை.
எண்ணங்களுக்கும் அப்பால் இருப்பதை ஒத்துக் கொள்வதே துணிச்சல்.
அது ஒன்றே உண்மையான புத்திசாலித்தனம்.
'நான் யாரோ, அதைத் தவிர வேறு யாராகவும் இருக்க மாட்டேன்'
இதுதான் துணிச்சல்.திடம்.ஏற்கனவே உங்களிடம் உள்ளதுதான் அது.புதிதாக அடைய வேண்டிய அவசியம் இல்லாதது.

எண்ணங்களின் இயக்கம்தான் நீங்கள்.

எதிரிடைகளுக்கு மத்தியில் இருக்கும் இடைவெளியைப் புரிந்து கொள்வது மிகவும் கடினம்.
உதாரணமாக,எனக்கு நண்பர்கள் இல்லையென்று சொன்னால் எனக்கு எதிரிகள் இருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல.எனக்கு எதிரிகள் இல்லையென்றால் ஒவ்வொருவரும் எனக்கு நண்பர் என்றும் அர்த்தமல்ல.அப்புறம்,நண்பர்களோ எதிரிகளோ இல்லாத ஒரு நிலையை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்வீர்கள்?
நீங்கள் ஒரு பெண்டுலத்தைப் போல இந்த முனைக்கும்,அந்த முனைக்கும் ஊசலாடிக் கொண்டே இருக்கிறீர்கள்.இதைத்தான் எண்ணங்களின் இயக்கம் என்று சொல்கிறேன்.
அந்த நிலை எதிரிடைகளுக்கு மத்தியில் இருக்கிறது.எதிரிடைகளே இல்லாத அந்த ஒரு நிலையை உங்களால் நினைத்துப் பார்க்கவே முடியாது.

நீங்கள் நீங்களாகவே இருக்கும் துணிச்சல்.

நீங்கள் நீங்களாகவே இருக்கும் ஆசையை, அடித்து,உருக்குலைக்காமல் நீங்கள் விட்டதே இல்லை.அதுதான் உங்கள் வாழ்க்கையே.
எவ்வளவுக்கெவ்வளவு அந்த ஆசையை உருக்குலைக்கிறீர்களோ அவ்வளவுக்கவ்வளவு நீங்கள் துயருறுகிறீர்கள்.
எல்லாக் கஷ்டங்களுமே நீங்கள் நீங்களாக இருக்க விரும்பாமல் இன்னொன்றாக இருக்க விரும்புவதினால்தான்.
நீங்கள் நீங்களாகவே இருக்கும் துணிச்சல் உங்களுக்கு இல்லை.அதாவது உலகத்தில் நீங்கள் மட்டும் ஒரு தனி ஆள்.உங்களை விட்டால் இரண்டாமவர் இல்லை என்ற துணிவு.

அழகு.

எது அழகு?எங்கே இருக்கிறது அழகு?பார்க்கும் பொருளிலா,இல்லை உங்கள் கண்ணிலா?அழகைப் பற்றிய உங்கள் கருத்தைத்தான் நீங்கள் பார்க்கும் பொருளின் மேல் சுமத்துகிறீர்கள்.
அங்கே ஒரு அழகான மாலைக் கதிரவனின் மறையும் காட்சி தென்படுகிறது.அது அழகாக இருக்கிறது என்று உங்களுக்குள் நீங்களே சொல்லிக் கொண்டால் கூட அதனை நீங்கள் உண்மையில் பார்த்துக் கொண்டிருக்கவில்லை.
அழகு பொருளில் இல்லை.பார்க்கும் உங்கள் கண்களிலும் இல்லை.முற்றிலுமாய் நீங்களே அங்கே இல்லாத போதுதான் அது இருக்கிறது.
என்றால், அழகு என்பது என்ன?உண்மையில் யாருக்கும் தெரியாது.
அழகை அனுபவித்து அதைச் சொல்வதற்கு உள்ளே யாருமே இல்லாத போது, உங்களது முழு இருப்பையும் ஒன்று நிரப்புகிறதே அதனை வேண்டுமானால் அழகு என்று சொல்லலாம்.
அனுபவிக்கும் ஒரு அமைப்பின் மூலம் எப்பொழுது அழகினை சிறைப் பிடிக்கிறீர்களோ அப்போதே அது தொலைந்து போகிறது.

உங்களுடைய வாழ்க்கைத் தத்துவம் என்ன?

ஒன்றுமே இல்லை என்பதுதான்.
வாழ்வதற்கு ஒரு தத்துவம் தேவையா என்ன?
வாழ்க்கையின் குறிக்கோள் என்ன?வாழ்க்கையின் அர்த்தம் என்ன? இதற்கெல்லாம் விடை தெரிய வேண்டும் என்ற அவசியம் உங்களுக்கு இருக்கிறதா?
எனில்,நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கவில்லை என்றுதான் பொருள்.ஏனென்றால்,உள்ளே செத்துப் போன மனிதர்கள்தான் இந்தக் கேள்விகளைக் கேட்பதில் ஆர்வமாய் இருப்பார்கள்.உயிர்ப்புடன் இருப்பவர்கள் அல்ல.

வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கும்,எங்களைப் போல செத்துப் போனவர்களுக்கும் என்ன வேறுபாடுகளைக் காண்கிறீர்கள்?

கேள்வி என்ற ஒன்றே இறப்பிலிருந்துதான் வரும்,உயிர்ப்புடன் இருப்பவர்களிடம் இருந்தல்ல.

ஞானி அல்லது யோகி,அல்லது ஜீவன்முக்தன் என்கிறார்களே அவர்களுடைய அடையாளங்கள் என்ன?

தெரிந்து கொள்ள வேண்டுமென நானே விரும்புகிறேன்!
ஒரு ஜீவன் முகதன் உங்கள் எதிரிலேயே அமர்ந்திருந்தால் கூட அவனை உங்களுக்குத் தெரியாது.அவனை அடையாளம் கண்டு கொள்ள எந்த வழியுமே கிடையாது.
யோகிகளைப் பற்றி உங்களுக்கென்று சில வரையறைகள்,நடை,உடை,பாவனைகள் பற்றிய தீர்மானங்கள் இருக்கின்றன.அவற்றின் கட்டங்களுக்குள் அவர் அடைபட்டால் அவரை ஜீவன் முக்தன் என்று அழைப்பீர்கள்.
உண்மையிலேயே அப்படி ஒருவன் இருப்பானேயாகில் தான் கடவுள் நிலை அடைந்தவன் என்றோ ஜீவன் முகதன் என்றோ அவனுக்கே தெரியாது.
அதனால் நான் ஒரு ஜீவன் முக்தன் என்று யார் தன்னைத் தானே சொல்லிக் கொள்கிறானோ அவன் ஒரு மிகப் பெரிய போலியாகவோ அல்லது சாமர்த்தியசாலியாகவோ தான் இருப்பான்.

மதம்,ஆன்மீகம் பற்றி..

நான் சொல்லுவது எதற்கும் எந்த மதத்திற்கும் சம்பந்தமே இல்லை.எந்த ஆன்மீக உட்கருத்தும் இல்லை.தூய,எளிமையான புற,உடலியல் மாற்றங்களையே நான் விவரிக்கிறேன்.

எனது உரையாடலின் நோக்கம்...

மனித எண்ணங்களின் வழியே எதனையும் புரிந்து கொள்ள முடியும் என்ற எண்ணத்தை உடைத்து உங்களை மீட்க வேண்டும் என்பதுதான்..

மனதைப் பற்றி

மனதைப் பற்றிய அறிவும் மனம்தான்.இந்த அறிவிலிருந்து விடுபடும் போது அங்கு மனமும் இல்லை.

ஆசைகள் அனைத்தும் எண்ணங்களே..

ஆசைப் படுதல் அனைத்தும் எண்ணமே.'என்னை நான் புரிந்து கொள்ள வேண்டும்,இந்த மன ஓட்டத்திலிருந்து விடுபெற வேண்டும்' என்று நினைப்பதெல்லாம் எண்ணங்களே.உலகத்தில் சாதாரணமாக இயங்குவதற்கு மட்டுமே எண்ணங்கள் பயன்படுமே அன்றி வேறெதற்கும் அவை உதவா.

அன்பு,காதல்...

நேசம்,காதல் எல்லாமே உங்கள் எண்ணம்தான்.
'நான் எனது மனைவியைக் காதலிக்கிறேன்,எனது வீட்டை நேசிக்கிறேன்,எனது பேன்க் பேலன்ஸை விரும்புகிறேன் 'இவை அனைத்துமே உங்கள் எண்ண ஓட்டம்தான்.அதனாலேயே அவை அழிக்கும் தன்மையே உடையது என்று கூறுகிறேன்.
உண்மையாகச் சொல்ல வேண்டும் என்றால் அன்பு வயப்பட்டிருக்கும் போது அங்கே எந்த எண்ணமும் இருக்காது.அதனால் அதற்கு எந்த உறவும் இருக்காது.
நீங்கள் அன்பு என்று சொல்வது ஒரு அதிர்வை. பிரதிபலன் கிடைக்கவில்லை என்றால் அது தானாகவே உணர்ச்சியின்மையாகவோ,அக்கறையின்மையாகவோ,வெறுப்பாகவோ மாறிவிடும்.

கேள்விகள்

கேள்வி கேட்பது புத்திக் கூர்மையின் அடையாளமல்ல.கேள்விகள் அற்று இருப்பதே புத்திக்கூர்மை.
(உரையாடல் தொடரும்)