உண்மைச் சம்பவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உண்மைச் சம்பவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், செப்டம்பர் 01, 2009

இரண்டு கதாநாயகர்கள் (உண்மைச் சம்பவம்)

மின்னஞ்சலில் வந்த ஒரு சுவாரஸ்யமான உண்மைக் கதை....
பல வருடங்களுக்கு முன்...
சிகாகோ மாநகரத்தின் நிழல் உலக தாதா ஆல் கெபோன்.
கள்ளச் சாராயம்,விபசாரம்,கொலைகள் போன்ற குற்றங்களின் சாம்ராஜ்யத்திற்குப் பல வருடங்களுக்கு அவன்தான் சக்ரவர்த்தியாக விளங்கினான்.
சட்டத்தின் பிடியிலிருந்து அத்தனை வருடங்களும் அவனைக் காப்பாற்றியது ஈசி எடி (EASY EDDIE) என்ற ஒரு வழக்கறிஞர்தான்.
சிறைக் கம்பிகளை எண்ணும் வாழ்க்கை தனக்கு வராமல் தடுத்த காரணத்திற்காக, எண்ண முடியாத அளவுக்கு ஈசி எடிக்குப் பணம் காசுகளை அள்ளி வழங்கினான்,ஆல்.
சிகாகோவிலேயே ஒரு மைதானம் அளவுக்கு ஈசி எடியின் எஸ்டேட் பங்களா இருந்தது.அது மட்டுமல்ல, அன்றைய சிகாகோவின் அனைத்து வசதிகளையும் அனுபவித்து வாழ்ந்தவர் அந்த வழக்கறிஞர்.
ஆல் மற்றவர்களுக்கு இழைக்கும் எவ்வளவு கொடூரமான குற்றங்களைக் கண்டும் சற்றும் மனம் பதறாத எடி,ஒரே விஷயத்தில் மட்டும் பதறிப் போவார்.

அது அவரது ஒரே மகனைப் பற்றித்தான்.
அவனுக்கு ஏதாவது ஒன்று என்றால் அவ்வளவுதான்.உயிரே போய் விடும் அந்த வழக்கறிஞருக்கு. அவனுக்கு உயர்ந்த படிப்பறிவை அளித்தார்.அவன் கேட்ட அனைத்தையும் வாங்கிக் கொடுத்தார்.

ஆனால் தனது ஒரே செல்ல மகனுக்கு அவரால் கொடுக்க முடியாத ஒரே பொருள், தனது தந்தையின் பெயரைச் சொன்னால் அவனுக்குக் கிடைக்கும் மதிப்பையும்,மரியாதையையும்தான்.

ஒரு சமூகக் குற்றவாளிக்கு மனமறிந்து உடந்தையாக இருக்கும் தனது இழிவான அவப்பெயர், மகனது தூய வாழ்வைக் கறைப் படுத்தி விடக் கூடாது என்று எடி நினைத்தார்.அதற்கு ஒரே வழி, இதுநாள் வரை ஆலின் குற்றங்களை மூடி மறைத்த தவறுகளுக்குப் பரிகாரமாக அவற்றைப் பகிரங்கமாகக் காவல் துறையிடம் ஒப்புக் கொண்டு அரசுத் தரப்பு சாட்சியாகி விட வேண்டியதுதான்
என்று அவர் கருதினார்
ஆலும் அவனது மாஃபியாக் கும்பலும் தனது வாக்கு மூலத்தினால் சிறைக்குச் சென்றால்,இது வரையில் அவர் சம்பாதித்த அவரது அவப் பெயர் நீங்கி விடும்.ஆனால் அதற்குக் கொடுக்க வேண்டிய விலை என்னவென்று அவருக்குத் துல்லியமாகத் தெரியும்.

அவரது உயிர்.

ஆனால் உயிருக்குயிரான மகனுக்காக தனது உயிரையும் பணயம் வைக்கத் தயரானார்,எடி.

மகனுக்குச் சொத்துக்களை சம்பாதித்து விட்டுச் செல்வதை விட அவனுக்கு நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுத்து விட்டுச் செல்ல வேண்டும் என்பதில் அந்தத் தந்தை உறுதியாக இருந்தார். (நமது அரசியல்வாதிகளுக்கும்,ஊழல் பேர்வழிகளுக்கும் அவர் ஒரு கெட்ட உதாரணம்!)

காவல் துறையிடம் சரணடைந்து, ஆல் கெபொனின் நிழலுலகக் கொடுமைகளுக்கு முடிவு கட்டினார் அந்தத் தந்தை.

ஒரே வருடத்திற்குள் அடையாளம் தெரியாத நபர்கள் தள்ளி இருந்த சிகாகோ தெரு ஒன்றில் அவரைச் சுட்டுக் கொன்றார்கள்.
அவர் இறந்த பின்னர் அவரது பாக்கெட்டிலிருந்து காவல் துறை கண்டெடுத்த பொருள்கள் இவைதான்.
ஒரு ஜெபமாலை,ஒரு சிலுவை,அவரது மதத்தின் புனித டாலர்,அன்றைய வார இதழில் வந்த ஒரு கவிதையின் கிழிந்த பக்கம்.
2.

இரண்டாம் உலகப் போர் உண்மைக் கதாநாயகர்களைப் படைத்துக் கொண்டிருந்த நேரம்.
இந்தச் சம்பவமும் அப்படிப் பட்ட ஒரு போர் வீரனைப் பற்றிய கதைதான்.
அந்த இளைஞன் லெஃடினட் கமாண்டர் பட்ச் ஓ' ஹேர்.
தெற்கு பசிபிக் கடலில் நங்கூரமிட்டு நின்றிருந்த லெக்சிங்டன் என்ற அந்த விமானம் தாங்கிக் கப்பலில் போர் விமானியாகப் பணி புரிந்தான் அந்த இளைஞன்.

ஒரு நாள் போர்ப் பயிற்சிக்காக ஓ'ஹேரின் விமானப் படை வானில் பறந்தது.
.நடுவானில் சற்றுத் தொலைவு போனதும்தான் ஓ'ஹேரின் விமானத்தில் எரிபொருள் அளவு காட்டும் கருவி பழுதடைந்த நிலையில் ,சரியாக வேலை செய்யாத காரணத்தினால், விமானத்தில் போதுமான பெட்ரோல் இல்லை என்பது அவனுக்குத் தெரிந்தது.
அவனை மட்டும் திரும்பிச் செல்லும்படி படைத் தலைவரிடமிருந்து இருந்து உத்தரவு வர, வேறு வழியின்றி அவன் கப்பலுக்குத்திரும்ப வேண்டியதானது.

திரும்பி கொண்டிருக்கும் வழியில் அவன் கண்ட காட்சி அவனது ரத்தத்தையே உறைய வைத்தது.
ஜப்பானிய எதிரி விமானங்களின் பெரிய அணி வகுப்பொன்று ஓ'ஹேரின் பயிற்சி விமானங்களைத் தாக்கி அழிப்பதற்காகச் சென்று கொண்டிருந்தன.
பயிற்சிக்காகப் பறந்து கொண்டிருக்கும் தனது படைப் பிரிவைச் சேர்ந்த விமானங்களோ,அல்லது விமானிகளோ, எதிர்பாராத இந்த ஜப்பானியத் தாக்குதலை எதிர் கொள்ளும் நிலையில் இல்லை என்பது ஓ'ஹேருக்கு உறுதியாகத் தெரியும்.
தனது நண்பர்களுக்கோ, அல்லது தொலைவில் நின்று கொண்டிருக்கும் தனது யுத்தக் கப்பலுக்கோ எச்சரிக்கைத் தகவல் தர முடியாத சூழ்நிலை.

விரைவாக முடிவெடுத்தான் அந்த இளைஞன்.
தனது விமானத்தைத் துணிச்சலுடன் ஜப்பானிய விமானங்களின் அணிவகுப்பினுள் ஓட்டினான். விமானத்தில் பொருத்தியிருந்த 50 காலிபர் துப்பாக்கிகளால் அதிக பட்சம் ஜப்பானிய விமானங்களை சுட்டுத் தள்ளியபடிய பறந்த இந்த ஒற்றை விமானியின் தற்கொலைத் தாக்குதலை எதிர் பார்க்காத எதிரி விமானப் படையின் அணிவகுப்புக் குலைந்து போனது.
நிறைய ஜப்பனிய விமானங்கள் தீப்பிடித்து எரியலாயின.
அவர்கள் தப்பித்து வேறு திசையில் சென்று விட்டனர்.
ஓ'ஹேரின் விமானப் படையும்,விமானிகளும் உயிரையும் பணயம் வைத்து அவன் ஆற்றிய துணிகரச் செயலால் காப்பாற்றப் பட்டனர்.பின்னர் போர்க் கப்பலுக்குத் திரும்பிய ஓ'ஹேரின் விமானத்தில் பொருத்தியிருந்த காமிராவின் மூலம் பதிவு செய்யப் பட்டிருந்த படச் சுருள் திரையிடப் பட்டுப் பார்க்கப் பட்டது.

அவன் ஒற்றையாக ஐந்து ஜப்பானியப் போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தி இருந்தான்.!
இது நடந்தது பிப்ரவரி மாதம் 20ம் நாள்,1942.
அமெரிக்கக் கடற்படையின் முதல் காங்கிரஸ் விருதினை வழங்கி அவனது வீரத்தையும் தியாகத்தையும் பாராட்டிக் கௌரவித்தது அரசாங்கம்.

அடுத்த வருடமே போரில் ஒரு விமானத் தாக்குதலில் உயிரிழந்தான் பட்ச் ஓ'ஹேர்.
நாட்டுக்காக அந்த இளைஞன் உயிர் நீத்த போது அவனது வயது 29.
ஆனால் அவன் பிறந்து,வளர்ந்த நகரம் அந்த மாவீரனின் நினைவை மறக்கத் தயாராக இல்லை.
சிகாகோ நகரின் ஓ'ஹேர் பன்னாட்டு விமான நிலையம் அவனது பெயரை இன்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.
இந்த இரண்டு கதாநாயகர்களையும் முடிச்சுப் போட்ட விதத்தில்தான் வாழ்க்கையின் திரைக் கதை நம்மைக் கட்டிப் போடுகிறது.

நாட்டுக்காகத் தனது உயிரையும் ஈந்த பட்ச் ஓ'ஹேர்தான், ஒரு மாபெரும் மாஃபியாக் கும்பலைப் பல வருடங்களாகச் சட்டத்தின் பிடியிலிருந்து காப்பாற்றிக் கொண்டிருந்த ஈசி எடியின் ஒரே செல்ல மகன்!