சனி, ஜூலை 18, 2009

ஒரு மேதையின் விடைபெறல்

தொடர்ந்த வேலைப் பளுவினால் பதிவுகளின் மூலம் நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்பினை அடிக்கடி இழக்க வேண்டியதாக ஆகிறது.

எனினும்,இன்று மின்னஞ்சலில் பார்த்த, உலகப் புகழ் பெற்ற லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான
கபீரியல் கார்ஷியா மார்க்கசின் ஒரு கடிதத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டே ஆக வேண்டும் என்று தோன்றியது.

பல புகழ் பெற்ற நாவல்களை எழுதிய அந்தப் படைப்பாளி இப்போது கணையப் புற்று நோயால் பாதிக்கப் பட்டு உடல் நலம் மிகவும் குன்றியிருப்பதனால் இனி எழுத முடியாத சூழ்நிலையில் இருக்கிறார்.
அவர் நண்பர்களிடம் இருந்தும்,பொது வாழ்க்கையில் இருந்தும் விடைபெற்று, இணையத்தில் எழுதிய இறுதிக் கடிதத்தின் மொழியாக்கமே இது.

'நான் கடவுளின் கையில் ஆடும் ஒரு வெறும் கைப்பாவை என்பதனை மட்டும் அவர் ஒரு கணம் மறந்து விட்டு எனது வாழ்க்கையில் மீண்டும் ஒரு துளியினை மட்டும் எனக்கு அவர் தந்தாரே ஆனால்,அதனை அதிகபட்சம் இப்படிப் பயன் படுத்திக் கொள்வேன்.

நான் எண்ணியதை எல்லாம் சொல்ல முடியாமல் போனாலும் சொல்வதை எல்லாம் எண்ணிப் பார்த்த பின்னரே சொல்லுவேன்.

பொருட்களை அவற்றினுடைய தகுதிக்காக மதிக்காமல் அவை எதனைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறதோ அதற்காக மதிப்பேன்.

உறங்குவதைக் குறைத்துக் கொண்டுக் கனவுகளை அதிகம் காண்பேன்.ஏனென்றால் ஒவ்வொரு நிமிடம் கண்களை மூடும் போதும் அறுபது வினாடி ஒளியினை இழக்கிறீர்கள்.

மற்றவர்கள் நிறுத்திக் கொண்ட இடத்தில் இருந்து நான் தொடங்குவேன்.மற்றவர்கள் தூங்கும் போது நான் விழித்தெழுவேன்.

கடவுள் இன்னும் ஒரு துளி வாழ்க்கையைத் தந்தாரே எனில் குறைந்த,எளிமையான ஆடைகளையே உடுத்திக் கொண்டு கதிரவனின் ஒளியில் திளைப்பேன்,உடல் மட்டுமல்ல ஆன்மாவும் மூடப் படாமல்.

வயதானதால்தான் காதல் வயப்படுவதை நிறுத்தி விடுகிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களே மனிதர்கள் அதனைத் தவறென்று கூறிக் காதல் வயப் படுவதை நிறுத்தி விட்டதனால்தான் நீங்கள் வயதானவர்களாக்வே ஆகிறீர்கள் என்று நிரூபிப்பேன்.

குழந்தைகளுக்குச் சிறகுகளைக் கொடுப்பேன்.ஆனால் அவர்கள் தாங்களாகவே பறக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் ஆதலால் அவர்களைத் தனியே விட்டு விடுவேன்.

மரணம் வருவது வயதினால் அல்ல,மறப்பதினால் என்று முதியவர்களுக்கு எடுத்துக் காட்டுவேன்.

உங்களிடம் இருந்து நிறையக் கற்றுக் கொண்டிருக்கிறேன்.அவற்றில் இதுவும் ஒன்று.நீங்கள் எல்லோரும் மலையின் உச்சியிலேயே வாழ வேண்டுமென நினைக்கிறீர்கள்,அதை விட அந்த உச்சிக்கு ஏறிச் சென்ற பயணமே முக்கியம் என்பதை மறந்து விட்டு.

பிறந்த குழந்தை பெற்றவனின் கைவிரல்களைப் பற்றும் போது அது என்றென்றும் தொடரும் பிடிப்பு என்றும் நான் கற்றிருக்கிறேன்.

ஒருவனைக் கைதூக்கி விடும் போது மட்டுமே அவனை உங்களை விடக் கீழ் நிலையில் வைத்துப் பார்க்கும் உரிமை உங்களுக்கு இருக்கிறது என்றும் நான் கற்றிருக்கிறேன்.
இப்படி உங்களிடம் நான் கற்றது நிறைய.

எப்போதும்,என்ன உணர்கிறீர்களோ அதனைச் சொல்லி விடுங்கள்.
என்ன நினைக்கிறீர்களோ அதனைச் செய்து விடுங்கள்.

இன்றைக்குத்தான் உங்களைப் பார்க்கும் சமயம் எனக்குக் கிடைக்கிறது என்றால் உங்களை இறுகஅணைத்துக் கொள்வேன், உங்கள் ஆன்மாவின் பாதுகாவலனாக.
உங்களைப் பார்க்கும் கடைசி நிமிடங்கள இதுதான் என்றால் எனது அன்பு உங்களுக்குப் புரிந்திருக்கும் என்று நானாகக் கற்பனை செய்து கொள்ளாமல் 'நான் உங்களை நேசிக்கிறேன் 'என்று பளிச்சென்று சொல்லி விடுவேன்.

வாழ்க்கையை சரி படுத்திக் கொள்ள எப்போதுமே அடுத்த நாள் காலை காத்திருக்கிறது.
உங்களுக்கு நெருங்கியவர்களிடம் அவர்களது அவசியத்தையும்,அன்பையும் தெளிவாகப் புலப்படுத்தி எப்போதும் அவர்களைப் பேணி பாதுகாவல் புரியுங்கள்.

'வருந்துகிறேன்','மன்னித்து விடுங்கள்,' 'நன்றி' 'உங்களை நேசிக்கிறேன்' போன்ற இனிய ,நல்ல வார்த்தைகளை அடிக்கடிப் பயன்படுத்துங்கள்.
உங்கள் எண்ணங்களை ரகசியமாகவே வைத்திருந்தால் அவை யாருக்குமே புரியாது.
எப்போதும் நீங்கள் நினைப்பதை வலிய வெளிப்படுத்தி விடுங்கள்.

நீங்கள் மனதார நேசிப்பவர்களிடமும், நெருங்கியவர்களிடமும் இந்த வார்த்தைகளைச் சொல்லுங்கள்.
இன்றே அதனைச் செய்யா விட்டால் நாளையும் இன்று போலவே இருக்கும். வாழ்த்துகள்.

இப்படிக்கு,

கபீரியல் கார்ஷியா மார்க்கஸ்