திங்கள், ஆகஸ்ட் 31, 2009

பெண்களுக்கு ஒரு முக்கிய செய்தி.

எனது டாக்டர் நண்பர் எனக்கு அனுப்பி இருந்த மின்னஞ்சல் ..

போன சனிக்கிழைமை இரவு மும்பை கேஸ் இரவு விடுதிக்கருகில் ஒரு இளம் பெண்ணை, அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் கடத்திச் சென்று பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கி இருக்கின்றனர்.பின்னர் அவளை வேறொரு இடத்தில் போட்டு விட்டுப் போய் விட்டார்கள்.

காவல் துறையினால் மீட்கப் பட்டு அவர்கள் விசாரித்த போது
எந்தக் கொடுமைகளையும் அந்தப் பெண்ணினால் நினைவு கூர முடியவில்லை.மருத்துவ பரிசோதனைகளில்தான் அவள் பலமுறை அடுத்தடுத்துக் கற்பழிக்கப் பட்டிருக்கிறாள் என்பது தெரிய வந்தது.
அதுமட்டுமல்ல அவளது ரத்தத்தில் ROHYPNOL என்ற மருந்து கலந்திருப்பது கண்டு பிடிக்கப் பட்டது.

'பகல் நேரக் கற்பழிப்பு மருந்து ' என்று கொடுமைக்காரர்களால் செல்லமாக அழைக்கப் படும் அந்த மருந்து இப்போது பரவலாகப் பார்ட்டிகளில் உபயோகிக்கப் படுகிறது.குடிபானங்களில் சுலபமாகக் கரைந்து விடும் அந்த மருந்து குடித்தவர்களின் நினைவுகளை மட்டும் அழிப்பதில்லை,அந்தப் பெண்கள் கருத்தரிப்பதையும் தடை செய்து விடுகிறது.
கற்பழிப்பின் முக்கிய தடயமான ,பலியான பெண்ணின் கர்ப்பத்திலிருந்து தப்பிக்க அந்தக் கயவர்கள் பயன்படுத்தும் மருந்து இது.

கொடுமை என்னவென்றால் அந்தப் பெண் தற்காலிகமாக அல்ல, இனி நிரந்தரமாகவே கருத்தரிக்க முடியாமல் செய்து விடுகிறது அந்த மருந்து.
அந்த மருந்தைப் பற்றிய முழு விபரங்களை அறிய விரும்புவோர் பார்க்க..

http://en.wikipedia.org/wiki/Rohypnol.
பெண்கள் பார்ட்டிகளில் குளிர் பானங்களைக் குடிக்கும் முன்னர் எச்சரிக்கைகளைக் கடைப் பிடிக்க வேண்டுமெனக் காவல் துறை அறிவுறுத்தி உள்ளது.
கொடுமை சூழ இந்த உலகத்தில்தான் நாம் பெண் குழந்தைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கி ....
அன்னை பராசக்திதான் அருள் புரிய வேண்டும்.

சனி, ஆகஸ்ட் 29, 2009

வசதியான தொலைவில் இருந்து நமது ஒப்பாரிகள்..

வசதியான தொலைவில் கொண்டு இருந்து நாம் வைக்கும் ஒப்பாரிகளைக் கேட்டால்
வீழ்ந்து கிடக்கும் அந்த ஈழத் தமிழ்ர்களின் சடலங்களுக்கும் கோபம் வரும்...
ஹிட்லர் ஒரு முறைதான் ஜெர்மனியில் செத்தான் ஆனால் இன்றும் இலங்கையிலும்,இந்தியாவிலும் அவன் பல,பல ஜென்மங்களாய்ச் சிரித்தபடி வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறான்...
அவனது கொடூரங்களைக் காண .....இங்கே செல்லுங்கள்...
http://arivhedeivam.blogspot.com/2009/08/blog-post_29.ஹ்த்ம்ல்
http://chinthani.blogspot.com/2009/08/blog-post_29.ஹ்த்ம்ல்
http://maaruthal.blogspot.com/2009/08/blog-post_29.ஹ்த்ம்ல்
http://www.narsim.in/2009/08/blog-post_29.html

யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி-இதுவரை நீங்கள் சந்தித்திராத எதிரி.

யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி.

அதற்குப் பிறகு எனக்குள் வினோதமான நிகழ்வுகள் நடந்தன.ஆனால் அவற்றையெல்லாம் முக்தி,வீடுபேறு,விடுதலை என்று சொல்லப் படுவதுடன் எல்லாம் நான் சம்பந்தப் படுத்தவில்லை.ஏனெனில் அப்போது அவற்றைப் பற்றிய அனைத்தும் முற்றிலுமாக எனது சிஸ்டத்திலிருந்தே வெளியேறி இருந்தன.

அனைத்தும் என்னைப் பொறுத்த வரையில் முடிந்து விட்டிருந்தன.அவ்வளவுதான்.
அனைத்துத் தொடர்புகளும் அறுந்து விட்டிருந்தன.

ஒவ்வொரு எண்ணமும் தோன்றியவுடனேயே அது வெடித்துச் சிதறுகிறது.

அணுகுண்டு வெடித்த பின்னர் தோன்றும் பின்விளைவுகளைப் போல இந்த வெடித்தலும் பின் விளைவுகளை விட்டுச் செல்கிறது.
உடலின் ஒவ்வொரு செல்லுமே மாற்றத்துக்கு ஆளாகிது.
அது பழைய நிலைக்குத் திரும்பவே முடியாத மாற்றம்.முழு உடலையுமே அது நொறுக்கி விடுகிறது.அது எளிதான விஷயமல்ல.உடலின் ஒவ்வொரு செல்லும்,ஒவ்வொரு நரம்புமே வெடித்துச் சிதறுவதால் அதுதான் மனிதனின் முடிவு.

அந்தக் கொடுமையான உடலின் சித்திரவதைக்கு நான் ஆளானேன்.அந்த வெடித்தலை நீங்கள் அனுபவிக்க முடியாது.ஆனால் அதனுடைய பின்விளைவுகளை உணர முடியும்.அதற்குப் பின் உங்கள் உடலின் ரசாயனமே மாறிவிடுகிறது.புலன்கள் ஒரு ஒருங்கிணைப்பாளர் இன்றி,ஒரு மையமின்றி இயங்கத் தொடங்கி விடுகின்றன என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்.அந்த ரசவாதமோ அல்லது உடலின் ரசாயனமே மாறினாலன்றி இந்த உயிரை எண்ணங்களிலிருந்தும்,எண்ணங்களின் தொடர்ச்சியில் இருந்தும் விடுவிக்க முடியாது.

அதற்குப் பின் எனது கண்கள் இமைப்பதை நிறுத்தி விட்டன.ருசிப்பதிலும்,முகர்வதிலும்,கேட்பதிலும் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன.
எனது மேல் தோல் பட்டுப் போல் மென்மையாகிப் பொன்னிறமாய் ஒளிர ஆரம்பித்ததை நானே கவனித்தேன்.

தனிமையில் இருக்கும் போது வழக்கம் போலக் கற்பனைகளிலோ,கவலைகளிலோ,கருத்தாக்கங்களிலோ அல்லது இதர எண்ண ஓட்டங்களிலோ நான் நேரத்தைச் செலவழிக்கவில்லை.
அவசியப் படும் போது மட்டும் மனம் செயல் பட்டது.எனது நினைவாற்றல் பின்னணியிலேயே இருந்தது.அவசியம் வரும்போது மட்டும் தானாகவே வந்து இயங்கும்.

அவசியம் இல்லாத போது மனம் இல்லை:எண்ணம் இல்லை:வெறும் உயிர் மட்டுமே.

எனது உடல் போயே போய் விட்டது,திரும்பி வரவே இல்லை.
அதற்குப் பிறகு என்ன நடந்தது என்றால், யாருக்குமே தெரியாது.அனுபவிப்பனே இல்லையாதலால் நடந்ததைச் சொல்ல யாருமில்லை.ஒரு வாரம் வரை என்னை வியப்பில் ஆழ்த்திய இந்த விசித்திர அனுபவங்கள் பின்னர் நிலைத்து விட்டன.
இந்த அனுபவத்தைப் பேரானந்தம்,களிப்பு,அற்புதம், அன்புமயம் என்றெல்லாம் எதிர்பார்த்திருப்பவர்களுக்கு இது மிகப் பெரும் இடர்ப்பாடு என்றுதான் சொல்லுவேன்.

(இடர்ப்பாடு தொடரும்)

வெள்ளி, ஆகஸ்ட் 28, 2009

யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி-இது வரை நீங்கள் சந்தித்திராத எதிரி

புனிதம்,பவித்ரம்,தர்மம்,ஆன்மீகம்,ஆத்மா,கலை,கடவுள்,குரு,ஞானிகள்,பண்பாடு,மதம் என்று வாழ்க்கையில் எதைப் பற்றியெல்லாம் நீங்கள் இதுவரை உயர்வான அல்லது தாழ்வான கருத்துக்களை வைத்திருந்தீர்களோ அவற்றையெல்லாம் தவிடு பொடியாக்கி, உங்களை நீங்களாகவே தரிசிக்க உதவுதற்குத் தோன்றிய அபூர்வமான மனிதர் யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தி.

தன்னை ரிஷி என்று அறவே ஒத்துக் கொள்ள மறுத்த இன்றைய ரிஷி.

உண்மையைத் தேடத் தொடங்கினாலேயே,தவறான திசையில் பயணமாக ஆரம்பிக்கிறீர்கள் என்று அர்த்தம் என்று சொல்லிய இந்த நூற்றாண்டின் இணையற்ற மாற்றுச் சிந்தனையாளர்.

இனி அவரது வார்த்தைகளிலேயே......

'உண்மையைத் தேடிச் செல்லும் எந்த முயற்சியுமே நீங்கள் ஏற்கனவே இருந்து கொண்டிருக்கும் உங்களது இயற்கையான நிலையிலிருந்து உங்களை விலக்கி விடுகிறது.

உண்மை என்பது உங்களது முயற்சியினால் அடைவதோ,பெறுவதோ அல்லது நிறைவேறுவதோ கூடிய பொருள் அல்ல.அது தன்னைத் தானே வெளிப்படுத்த முடியாதபடிக்குச் செய்கின்ற தடைகளே நீங்கள் செய்கின்ற முயற்சிகள் எல்லாம்.
எப்போதும் நீங்கள் உங்கள் இயற்கையான நிலையில்தான் இருக்கிறீர்கள்.உண்மை தனக்கே உரித்தான வழியில் தன்னிச்சையாக வெளிப்படத் தடையாக இருப்பதே உங்களது தேடல்கள்தான்.அதனால்தான் தேடுதல் என்பதே தவறான திசையில்தான் இருக்க முடியும்!

நீங்கள் புனிதம்,பவித்ரம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அனைத்துமே உங்கள் உணர்வில் படிந்திருக்கும் அசுத்தங்கள்.

அசுத்தம் என்ற வார்த்தை உங்களுக்குப் பிடிக்காமல் இருக்கலாம்,இருந்தாலும் சொல்கிறேன் அவை அசுத்தங்களே.

உங்களால் எதுவுமே செய்ய முடியாது.உங்கள் கைகளில் எதுவுமே இல்லை.

இதை நான் உங்களுக்கு தர முடியாது.ஏனெனில் அது ஏற்கனவே உங்களிடம் இருக்கிறது.

உங்களிடம் உள்ள பொருளையே நீங்கள் தானம் கேட்பது தமாஷாக இருக்கிறது.

எவரிடமும் கேட்டுப் பெறுவதற்கு எந்தப் பொருளும் இல்லை.

என்னிடம் இருப்பதுதான் உங்களிடமும் இருக்கிறது.

நான் இருக்கும் இடத்தில்தான் நீங்களும் இருக்கிறீர்கள்.

என்னைப் பற்றிச் சொல்வதானால்,

மத சம்பிரதாயங்கள்,அனுஷ்டானங்களுடன் நிரம்பிய ஒரு சூழ்நிலையிலேயே நான் வளர்க்கப் பட்டேன்.எனது தாத்தா நல்ல பண்பாடுடைய மனிதர்.நிறையப் படித்த, பண்டிதர்களை அவர் சம்பளம் கொடுத்து ஊழியத்துக்கு வைத்திருந்தார்.நான் தரமான கல்வியும்,அதற்கானஆழ்ந்த சூழ்நிலையும் பெறவேண்டும் என்பதில் அவர் கண்ணும் கருத்துமாய் இருந்தார்.

தினமும் காலை நாலு மணியிலிருந்து ஆறு மணி வரைக்கும் அந்தப் படித்த பேர்வழிகள் வந்து புனித நூல்களையும்,அதன் விளக்க உரைகளையும்,இன்னும் எல்லா சாஸ்திரங்களையும் படிப்பார்கள்.ஐந்து வயதோ,ஆறு வயதோ,ஏழு வயதோ சிறு பிள்ளையான நான் அந்தக் கருமத்தையெல்லாம் கேட்டுத் தொலைய வேண்டும்!

நிறையப் புனித மஹான்கள் எங்கள் இல்லத்துக்கு வருகை புரிந்திருக்கிறார்கள்.எந்தப் புண்ணிய ஆத்மாவுக்கும் எங்கள் வீட்டுக் கதவு திறந்தே இருக்கும்.ஆனால் அந்தச் சிறிய வயதிலேயே ஒன்றை மட்டும் நான் கண்டுபிடித்து வைத்திருந்தேன்.

வந்த மஹான்கள் எல்லோருமே போலியான மனிதர்கள்.அவர்கள் எல்லாருமே பொய்யர்கள் என்றுதான் சொல்லுவேன்.
எப்படியோ எதுவெல்லாம் புனிதம் என்று சொல்லப் பட்டதோ,தெய்வீகம் என்று கூறப் பட்டதோ அவற்றின் மீதெல்லாம் எனது சிஸ்டத்துக்குள்ளேயே ஒரு வெறுப்பு ஊர்ந்து வந்து,அவற்றையெல்லாம் தூக்கி எறிந்து விட்டது.

அதற்குப் பிறகுதான் எனது தேடல் தொடங்கியது.சொல்லப் பட்ட அனைத்து அனுஷ்டானங்களையும் முறைப்படி செய்தேன்.எனக்கு இளைய வயதுதான்.ஆனால் வீடுபேறு,மோட்சம்,விடுதலை,நிர்வாணம் என்று சொல்லப் பட்டதை யெல்லாம் அடைந்தே தீருவது என்ற உறுதியுடன் செயல் பட்டேன்.அது எனக்கு அவ்வளவு தேவைப் பட்டது.இல்லையெனில் இப்படி ஒரு முழு வாழ்க்கையையே அதற்காக அர்ப்பணித்திருக்க மாட்டேன்.பிறகு எனது இன்னும் தீவிரமான தேடல் ஆரம்பித்தது.எனக்கு ஆழமான மதப் பின்னணி இருந்தது.எனது வழியிலேயே நான் அனைத்தையும் ஆராய ஆரம்பித்தேன். உளவியல்,தத்துவ இயல்,மேற்கத்திய,கிழக்கத்திய தந்திர சாஸ்திரங்கள்,இன்றைய அறிவியல் கோட்பாடுகள் அனைத்தையும் பல வருடங்கள் கற்றேன்.பரந்து பட்ட மனித அறிவினை நானே ஆராயத் துவங்கினேன்.
எனக்குப் பல சக்திகள் கிடைத்தன. பல அனுபவங்கள் நிகழ்ந்தன.ஆனால் அவை எதனிடமும் எனது கவனம் போகவில்லை.

ஒருவரைப் பார்த்தவுடன் அவரது இறந்த காலம்,நிகழ் காலம்,எதிர் காலம் எல்லாவற்றையும் என்னால் பார்க்க முடிந்தது.ஆனால் எனக்கு மட்டும் எப்படி, ஏன் இந்த ஆற்றல் என்று வியந்தும்,குழம்பியும் இருந்திருக்கிறேனே தவிர அந்த ஆற்றலை நான் ஒரு போதும் பயன் படுத்த வில்லை.
பல சமயங்களில் நான் ஏதோ சொல்லுவேன்.அது அப்படியே நடக்கும். அதனுடைய சூட்சுமம் என்னவென்று நான் எவ்வளவு முயன்றும் எனக்குத் தெரியவே இல்லை.இது பல முறை நடந்த போதும் அந்த எனது ஆற்றலுடன் நான் விளையாட வில்லை.
அதற்கான ஆர்வமும் அவசியமும் எனக்கு ஏற்படவில்லை. அது மட்டுமல்ல எனக்குள் அனைத்துத் தேடலுமே நின்று போனது.அதற்குப் பிறகுதான் எனக்குப் பல விந்தையான நிகழ்ச்சிகள் நடந்தன.
இப்போது
எனது உடலைத் தேய்த்தால் ஒளிப் பொறிகள், பாஸ்பரஸைப் போல சிதறின.
(இன்னும் இந்த எதிரியுடன் மோதத் தயாரா?)

செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009

ஒரு தெய்வத்தின் நாட்குறிப்பு 3

வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் நமோ நமஹ
....................................................................
ச்வப்ய ச்வபபதிப்யச்ச நமஹ..
( ஸ்ரீருத்ரம் )

வஞ்சகராகவும்,படுவஞ்சகராகவும்,நயவஞ்சனையால் திருடுபவர்களின் தலைவராகவும் உள்ள பரமேஸ்வரனுக்கு நமஸ்காரம்.
.................நாய்களாகவும்,நாய்களைப் பாதுகாப்பவர்களாகவும் உள்ள பரமேஸ்வரனுக்கு நமஸ்காரம்.....

(இந்தப் பகுதியைப் படிக்கும் அன்பர்கள் உணர்வுத் தொடர்ச்சிக்காக இதற்கும் முன் பகுதிகளைப் படித்து விட்டு இதனைப் படிக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.)

நான் முழுதும் விக்ரஹமாக உருவாக ஏழு நாட்கள் ஆகின.
கண்கள் மட்டும் இன்னும் திறக்கப் படாத நிலையில் என்னையே சற்றுத் தள்ளி நின்று அமைதியாகப் பார்த்தான் முடவாண்டிச் சித்தன்.

'விச்வமூர்த்திர் மஹாமூர்த்திர் தீப்தமூர்த்திர் அமூர்த்திமான்' என்ற விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் வரிகளைப் போன்ற ஏதோ ஒன்று அவன் மனதில் ஓடின.
சற்றே நிதானித்தவன் பின்னர் விக்ரஹத்தின் வலது பக்கம் வந்து நின்று சில மாற்றங்களைச் செதுக்கினான்.அதே போல் இடது பக்கமும் போய் நின்று சில நுட்பமான மாற்றங்களைச் செதுக்கினான்.
இப்போது மையத்தில் நின்று பார்த்தால் பெண் வடிவமாகத் தெரிந்த விக்ரஹம் சற்றே தள்ளி வலது புறத்தில் இருந்து பார்த்தால்
'வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே' என்று பின்னாளில் பெரியாழ்வார் பாடப் போகும் மஹாவிஷ்ணுவின் கோலமாய் ஆண் வடிவமாய்த் தெரிந்தது !

இடது புறமாய் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வந்து நின்று பார்த்தால்,

'அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
கற்பதும் இறுதியும் கண்டோன் காண்க
யாவரும் பெற உறும் ஈசன் காண்க'
என்று மாணிக்க வாசகர் பாடிய லிங்கேஸ்வர ரூபத்தில் மஹாலிங்கமாய்க் காட்சி அளித்தது !

மையத்தில் ஆதி பராசக்தியாகவும்,வலப்புறத்தில் மூவுலகளந்த பரந்தாமனாகவும்,இடப்புறத்தில் அரூபமான ஆதிசிவனாகவும் காட்சியளிக்கும் பரம்பொருளான எனனை ஒரே விக்ரஹத்தில் செதுக்கிய நிறைவு அவன் முகத்தில் மலர்ந்தது.
விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு சூரியக் குகையை விட்டு வெள்யே வந்து என்னை நிறுத்தி ஒருகணம் உற்றுப் பார்த்தான்.
என் முன்னர் கண்கள் மூடி கரங்கள் கூப்பி ஏதோ மந்திரங்கள் சொல்லச் சொல்ல அவன் கண்களில் நீராய் வழிந்தது.
அது எட்டாவது நாள் மாலை நேரம்.
உளியை எடுத்து என் கண்களைத் திறக்க அவன் தொடங்கியவுடன் சடேரென முதல் மழைத் துளி விழுந்தது.
நான் கண்களைத் திறந்ததும் ’ஓம் மஹா ஸ்ரீ திரி நேத்ரா’ என்ற ஓங்காரக் குரல் அவனது நாபிக் கமலத்திலிருந்து முட்டி மோதிக் கொண்டு வந்து வெடித்தது.

அவனது அத்தனை வருட மௌனமும் உடைந்து சிதறிப் பிறந்த குரலின் மாபெரும் முழக்கம்.

’ஓம் மஹா ஸ்ரீ திரி நேத்ரா’

அவனது ஓங்கார முழக்கத்தின் பேரலை வான்முகட்டில் முட்டியதும் சடசடவென இடி இடித்தது.வானத்தின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை ஓடிய மின்னல் ஒன்று பளீரெனெச் சிலையின் தலைக்குள் இறங்கி எனது பெயரை ஆமோதித்தது.

கொட்டியது பெருமழை.வீசியது சூறாவளிக் காற்று.வைரமணி அருவியில் கட்டறுந்த வெள்ளை யானைகளின் கூட்டத்தைப் போல வெள்ளம் பெருக்கெடுத்தது.

ஆணாகவும்,பெண்ணாகவும்,ஆணும்,பெண்ணுமற்ற அரூபமாகவும் முப்பரிமாணங்களிலும் முழுமையாகத் தரிசிக்கும் மூன்று பார்வைகளைத் தருபவள் ஆதலால் என்னைத் திரிநேத்ரா என்றழைத்தான் சித்தன்.மஹா என்ற நான்காவது பரிமாணத்தை எனது பெயரில் சேர்த்தான் அவன்.

'ஓம் மஹா ஸ்ரீ திரி நேத்ரா’
என்ற சித்தனின் குரல் (பின்னாளில் எர்த் சாங் என்ற பாடலைப் பாடும் போது மைக்கேல் ஜாக்சனிடம் இதே குரலைக் கேட்டேன் நான்) அத்தனை இடியோசைகளையும் தாண்டி மலைத்தொடர் முழுதும் எதிரொலித்தது.

மூன்றாம் மலையிலிருந்து மலைத் தொடரின் அடிவாரம் வரை குடியிருந்த மலை வாழ் மக்களின் வீடுகளில் எல்லாம் அவனது குரல் பொங்கி நிறைந்தது.
ஆறாவது மலையில் உடுக்கைச் சத்தமும்
’ஓம் மஹா ஸ்ரீ திரி நேத்ரா’ என்ற சித்தனின் ஓங்காரக் குரலும் கேட்ட மாத்திரத்தில் அவர்களது ரத்த நாளங்களில் எல்லாம் புயலடித்தது.

ஆண்களும்,பெண்களும்,பெரியவர்களும்,குழந்தைகளும் மலைக் காடுகளின் வழியே கொட்டும் மழையிலும் காற்றிலும் மேலே திரள்திரளாக ஓடி வந்தனர்.

ஆறாவது மலையை அவர்கள் வந்தடைந்த போது சடை முடிகள் காற்றிலும் மழையிலும் அவிழ்ந்து ஆட எனது விக்ரஹத்தின் முன்னர் வெறிபிடித்தாற் போல நின்றிருந்த சித்தனைக் கண்டார்கள் அவர்கள்.

வானம் இடியாகவும்,மின்னலாகவும்,மழையாகவும்,பூமி காற்றாகவும் பேரண்டமே எனது பிறப்பைக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரம்.

அப்போது எங்கிருந்தோ ஒரு உடுக்கைச் சத்தம் பளீரெனக் கேட்க அந்த ஊழிக் காற்றிலும் மழையிலும் ஆட ஆரம்பித்தான் அவன்.விந்தி விந்தி அவன் ஆடிய தாண்டவத்தில் இயற்கையின் அத்தனை அசைவுகளையுமே அவர்கள் கண்டார்கள்.
குழந்தையின் தளர் நடை,மரங்களின் இலையாட்டல்,பூக்களின் குறும் நடுங்கல்,நதியின் நீரோட்டம்,அருவிகளின் குதியாட்டம்,அலைகளின் நர்த்தனம்,மேகங்களின் ஒய்யாரம்,வேங்கையின் பாய்ச்சல்,யானைகளின் சுகவாசம் இப்படி அனைத்து அசைவுகளையுமேஅவன் ஆடிய போது கண்ட மக்கள் கிறங்கிப் போய் அவனுடன் அவர்களும் சேர்ந்து ஆட ஆரம்பித்தார்கள்.

மலை மேல் காற்றும் மழையும் சுழன்று சுழன்று அடிக்க எனது விக்ரஹத்தின் முன்னர் மனிதர்களின் இந்த ஒருங்கிசைந்த நடனத்தை மரங்களின் பின்னாலிருந்து காட்டு விலங்குகளும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தன!

ஆறுநாட்கள் தொடர்ந்த இந்த நடனம் ஏழாவது நாள் அதிகாலை முடிவுற்றது.
’ஓம் மஹா ஸ்ரீ திரி நேத்ரா’
என்று பெருங்குரலெடுத்துச் சொல்லி சித்தன் ஆட்டத்தை நிறுத்திய போது மழையும் நின்றது.
எனது விக்ரஹத்தைத் தூக்கிக் கொண்டு சூரியக் குகைக்குள் சென்ற சித்தனைக் கூட்டமும் தொடர்ந்தது.
குகையின் மேல் கூரையின் வழியே, மழை நின்றவுடன் வரும் தூய சூரிய ஒளி படும் இடத்தில் விக்ரஹத்தை நிறுத்தினான் சித்தன்.
சொட்டச் சொட்ட நனைந்திருந்த அவன் கடைசியாக எனது பெயரை உரக்கச் சொன்னான்.
’ஓம் மஹா ஸ்ரீ திரி நேத்ரா’

பிறகு எனது காலடியில் வீழ்ந்தவன் எழவே இல்லை..
மூன்றாம் மலைக் கூட்டத்தின் தலைவனான செங்கோட்டு வேலன்தான் குகைக்குள் வந்து சித்தனின் உடம்பைத் தொட்டுப் பார்த்தான்.

அவனது உடல் சில்லென்று இருந்தது.ஆனால் எனது விக்ரஹம் சுட்டது!

எனது சிலையைத் தள்ளி வைத்து விட்டு குகைக்குள்ளேயே குழி தோண்டி சித்தனின் உடலை அடக்கம் பண்ணினார்கள் அவர்கள்.
சித்தனின் சமாதியின் மேலேயே என்னை நட்டார்கள்.
செங்கோட்டு வேலன்தான் எனது முதல் பூசாரியாக ஆனான்.
வைரமணி அருவித் தண்ணீரில் எனக்கு அபிஷேகம் பண்ணியதால் அதுவே எனது கோவில் தீர்த்தமாயிற்று.
சித்தன் அமர்ந்திருந்த கொன்றை மரப் பூக்களாலேயே என்னை அலங்கரித்தார்கள்.அதனால் அந்த மரமே ஸ்தல விருட்சமாயிற்று.
குகைக்கு வெளியே ஒரு பாறையைத் தேய்த்தாலே வெள்ளை மணலாய்க் கொட்டும். அதுவே எனது கோவில் நீறாயிற்று.அந்தப் பாறையைத் திறுநீற்றுப் பாறை என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
மலைத் தேனையும்,மலைப் பலாவையும் படைத்து என்னை அந்த மலை வாழ்மக்கள் வழிபட்டதால் அவையே எனது கோவில் பிரசாதங்கள் ஆகின.

ஒரு நூற்றாண்டு கழித்து செங்கோட்டு வேலனின் வழிவந்த ஒருவன் அந்த மலை நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.அவன்தான் சூரியக் குகையையே கருவறையாக்கி எனக்கு முதல் கோவிலைக் கட்டினான்.

ஆனால் யாரும் எனது முப்பரிமாணத்தையும்,முழுமையையும் பார்க்கவில்லை.

எனது கோவிலுக்கு வரும் ஒற்றையடி மலைப் பாதையை அவன்தான் அமைத்தான்.
இரண்டு நூற்றாண்டுகள் கழித்து அந்த மலைநாடு,கீழே இருந்த பேரரசன் ஒருவனின் கைக்குப் போய் விட வழிபடுவோர் குறைந்து எனது கோவில் சிதிலமடைய ஆரம்பித்தது.
ஐம்பது வருடங்கள் கழித்து அந்தப் பேரரசனின் வாரிசான மன்னனுக்குத் தீராத வயிற்று வலி வர அவனது படையில் ஊழியம் பார்த்த மலைநாட்டுப் படை வீரன் ஒருவன் கொண்டு போய்க் கொடுத்த திறு நீற்றுப் பாறை விபூதி அந்த நோயை மூன்றே நாட்களில் குணப்படுத்தியது.
அதனால் என் மேல் அசைக்க முடியாத பக்தி பூண்ட அந்த மன்னன் ஒரு பெரும் கோவிலை எனக்காகக் கட்டினான்.கோவிலுக்கு வரும் ஒற்றையடி மலைப்பாதையை அகலப் படுத்தி மன்னனின் வாகனங்கள் வரும் பாதையாக்கினான்.மன்னனின் குலதெய்வமாக நான் உயர்ந்ததால் அவன் எனது கோவில் பராமரிப்புக்கு நிறையக் கிராமங்களை சாசனம் செய்து வைத்தான்.
எனது நிம்மதி கெடும் அளவுக்கு எனக்கு ஐந்து கால பூசைகள் நடக்கத் தொடங்கின.

ஆனால், இன்னும் யாரும் எனது முப்பரிமாணத்தையும்,முழுமையையும் பார்க்கவில்லை.

நிறையப் புலவர்கள் என் மேல் பாடல்கள் இயற்றினார்கள்.எனக்கே தெரியாத எனது கதைகளை அவர்கள் என் மேல் சுமத்திப் பாடினார்கள்.அவர்கள் பாடல்களில்,பழம் பெரும் புராணங்களில் மூச்சிழந்து,முடி கொட்டியிருந்த தெய்வங்கள் எல்லாம் என் மேல் விழுந்து எனக்கு மூச்சு முட்டியது!

இரண்டு நூற்றாண்டுகள் கடக்க, நாடு இப்போது வேற்று மதத்தைச் சார்ந்த மன்னனின் வசம் போயிற்று.எனது கோவில் கிராமங்கள் பறிக்கப் பட்டன.ஐந்து கால பூசைகள் நின்றன.புலவர்கள் வேறு தெய்வங்களைப் பாடப் போய் விட்டார்கள்.கோவிலுக்கு வரும் மலைப் பாதையில் புல்லும் புதரும் முளைக்கத் தொடங்கின.விளக்கேற்றக் கூட ஆளின்றி,நிறைய நாட்கள் எனது கோவில் இருளில் மூழ்கிக் கிடந்தது.

பிறகு ஆங்கிலத் துரைமார்களின் ஆட்சி வந்தது.வெள்ளைக்காரன் ஒருவன்தான் மலையின் தட்ப வெப்பம் டீ எஸ்டேட்களுக்கு ஏற்றது எனக் கண்டு பிடித்தான்.தேயிலை பணம் கொழிக்கும் பயிர் என்றதால் நிறைய வெள்ளைக்காரர்கள் மலை முழுக்கத் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினார்கள்.மலைவழிச் சாலைகள் போடப் பட்டன.எஸ்டேட் பங்களாக்கள் நிறைய வந்தன.ஆறாவது மலை வரையிலுமே பணம் புழங்கும் சிறிய நகரங்கள் நிறைய உருவாகின.

தேயிலைப் பணத்தில் செழித்த வெள்ளைக்காரத் துரைமார்கள் எனது கோவிலுக்குப் பக்கத்திலேயே பிரும்மாண்டமான சர்ச் ஒன்றைக் கட்டினார்கள்.அப்போதுதான் எனது கோவில் மீண்டும் இந்துக்களின் கண்களில் பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரரான ஒருவர் தேசிய எழுச்சிக்காக என்னைப் பயன் படுத்திக் கொண்டார்.அவர்தான் பல நாட்கள் பல கூட்டங்கள் நடத்தி எனது கோவிலைப் புதுப்பிக்க நிதி திரட்டினார்.எனக்குப் பல நூற்றாண்டுகள் கழித்துக் கும்பாபிஷேகம் பண்ணியதும் அவரே.

அன்றும் யாரும் எனது முப்பரிமாணத்தையும்,முழுமையையும் பார்க்கவில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு என்னை வழிபட்டுப் போய் எம்.எல்.ஏ ஆன ஒருவர் அறநிலையத் துறை அமைச்சரும் ஆகிவிட எனது கோவிலுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.
என் சாலைகள் தார் ரோடுகள் ஆகின.வைரமணி அருவியில் தண்ணீர்த் தொட்டிகள் கட்டப் பட்டு பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர் வசதிகள் செய்து தரப் பட்டன.என்னைப் பார்க்க ஸ்பெஷல் தரிசனத்திற்கு டிக்கட்டுக்கள் வழங்கப் பட்டன!செங்கோட்டுவேலன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கப் பட்டு வேறு அர்ச்சகர்கள் நியமிக்கப் பட்டார்கள்.

அப்போதும் யாரும் எனது முப்பரிமாணத்தையும்,முழுமையையும் பார்க்கவில்லை.

இப்போது...
மலைப் பாதைகள் முற்றிலும் அகலப் படுத்தப் பட்டுக் கார்களும்,பஸ்களும்,வேன்களும் பெட்ரோல்,டீசல் புகைகளால் மலை நிரம்பியது.
வானமே தானாக வழங்கிய மின்னலில் சித்தரால் பார்க்கப் பட்ட எனது பெயர், இப்போது நியான் விளக்குகளில் கோவில் முகப்பில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
சித்தரின் ஓங்காரக் குரலுக்குப் பதிலாக ஒலிபெருக்கிகள் அங்காங்கே நாராசமாய் எனது பெயரை முழங்கிக் கொண்டிருந்தன.
வைரமணி அருவி சுருங்கிக் குழாய் நீராய் ஆனது.திருநீற்றுப் பாறை முற்றிலும் கரைந்து போய் இப்போது ஒப்பந்தக் காரர் ஒருவர் வெறும் மண்ணை அரைத்து விபூதி ஆக்கி தேவஸ்தான போர்டின் மூலம் விற்றுக் கொண்டிருக்கிறார்.
மலைத் தேனுக்குப் பதிலாகக் கலப்படத் தேனும்,வெளிஊர்களில் இருந்து லாரிகளில் வந்த பலாச் சுளைகளும் அதிக விலைகளில் பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்கப் பட்டன.
எனது சிலையின் மேல் வெவ்வேறு பணக்காரப் பக்தர்கள் சாற்றிய தங்கக் கிரீடங்களும்,விலை உயர்ந்த மணி மாலைகளும் எனது உடலை நெரித்தன.அவற்றைத் திருடிய வழக்குகளில் நிறையப் பேர் தண்டிக்கப் பட்டார்கள்.சிலர் ஆட்சியே கவிழ்ந்தது.
அன்று கொட்டும் மழையிலும்,காற்றிலும் கரடு முரடான மலைக் காடுகளின் வழியே குழந்தை குட்டிகளுடன் ஓடி வந்து எதுவும் எதிர்பார்க்காமல் என் முன்னர் ஆடிய எளிய மலை வாழ் மக்களுக்குப் பதிலாக இன்று பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் என்ற பெயரில் வந்த ஆசைகளின் மொத்த வடிவமான ஒரு மக்கள் மந்தை எனது கோவிலை மொய்த்தது.

இன்று...
அதே புரட்டாசி மஹாளய அமாவாசை.காலை எட்டு மணி.

எனது கோவில் வாசலில் போடப் பட்டிருந்த பளிங்கு இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தார்கள் அந்த அமெரிக்கச் சுற்றுலாப் பயணியும்,அவனது காதலியுமான ஒரு ஜப்பானியப் பெண்ணும்.
இருவருமே காவி வேட்டி கட்டி மேலே டீ ஷர்ட் போட்டிருந்தார்கள்.
அவன் மொட்டை அடித்திருந்தான்.இருவருமே ஆங்கிலத்தில்தான் உரையாடினார்கள்.
எனது கோபுரத்தையே நீண்ட நேரம் பார்த்திருந்த அமெரிக்கன் அவனது ஜப்பானியக் காதலியைக் கேட்டான்.
'இந்தக் கோவிலில் சக்தி வாய்ந்த பெண் தெய்வம் இருப்பதாகத்தானே சொன்னார்கள்?'
'ஆமாம்,ஏன் பீட்டர்?' என்று கேட்டாள் அந்தப் பெண்.
'ஆச்சர்யம்!கருவறையில் இருந்த மூல விக்ரஹத்தை நான் எத்தனை முறை பார்த்தாலும் திருப்பதியில் நான் பார்த்த ஆண் தெய்வம்தான் என் கண்ணுக்குத் தெரிந்தது! நான் ஏதாவது பாவம் செய்து இருப்பேனா,சகிடோ? என்று அந்த அமெரிக்கன் தன் ஜப்பானியக் காதலியைக் கேட்டான்.அவன் முகத்தில் அச்சமும்,குழப்பமும் தெளிவாகத் தெரிந்தன.
'நீ பாவம் செய்தவனானால் நானும் செய்திருக்க வேண்டும்,பீட்டர்!' என்றாள் அந்த ஜப்பானியப் பெண்.
'ஏன்?'
'நானும் இங்கு எந்தப் பெண் தெய்வத்தையும் பார்க்கவில்லை.திருவண்ணாமலையில் நாம் இருவருமே பார்த்த லிங்கத்தைத்தான் பார்த்தேன்.எனக்கும் பயமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது!' என்றாள் அவள்.
பின்னாலிருந்து ஒரு சிரிப்புச் சத்தம் கேட்க அவர்கள் திரும்பிப் பார்த்தனர்.
வயதான ஒரு முதியவர் வெள்ளைத் தாடி மீசையுடன் அவர்களது இருக்கையின் பின் புறம் அமர்ந்திருந்தார்.
'குழந்தைகளே, நீங்கள் இருவரும்தான் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்தக் கோவில் தெய்வத்தின் வேறு பரிமாணங்களைப் பார்க்கிறீர்கள்!' என்றார் அவர் அவர்களைப் பார்த்துச் சிரித்தபடியே.
'நீங்கள் யார்?' என்றார்கள் அவர்கள் ஒருசேர.

எனது கோபுரத்தை ஒருமுறை நிச்சலனமாகப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் அவர் எழுந்து நடந்தார்.
பக்தர்கள் மூச்சு வாங்க ஏறிக் கொண்டிருந்த மலைக் கோவில் படிக்கட்டுக்களின் வழியே அவர் கோவிலை விட்டு இறங்கலானார்.
பாதிப் படிக்கட்டுக்களை அவர் கடந்த சமயத்தில் ஒரு சிறு குழந்தையின் அழுகுரல் சப்தம் கேட்டுப் பெரியவர் திரும்பிப் பார்த்தார்.
கொழுக் மொழுக்கென்று அழகியதோர் பெண் குழந்தை.
படிக்கட்டில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தது. பக்தர்கள் யாரும் அதனைச் சட்டை செய்யாமல் விரைந்து கொண்டிருந்தனர்.குழந்தையின் அருகில் சென்று அமர்ந்த பெரியவர் அதனிடம் கேட்டார்.
'ஏம்மா அழுதுட்டிருக்கே?'
'எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க!' என்றது குழந்தை விழிகளை உருட்டியபடி.
பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர் கண் திறந்த அதே விழிகள்!

'உன்னோட பேரென்னம்மா?' என்று கேட்டார் பெரியவர்.

'திரிநேத்ரா' என்றது குழந்தை.
(முற்றும்)

சனி, ஆகஸ்ட் 08, 2009

ஒரு தெய்வத்தின் நாட்குறிப்பு 2

2.
அவன் என்னைச் செதுக்க ஆரம்பித்தான்.
தான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.

பேராற்றலாய்ப்,பேரானந்தமாய்ப்,பேரமைதியாய் நுட்பத்திலும் நுட்பமாய் இருக்கும் நான், அந்த இரண்டடிக் கல்லுக்குள் பிரவகித்து நான்,நானாய் விளங்க முடியுமா?
நான் என்ற விளையாட்டு எப்போது தொடங்கியதோ அப்போதே இது சாத்தியம் என்று எனக்கு நானே புன்னகைத்துக் கொண்டேன்.

உங்கள் கண்ணின் சிறிய பாப்பாவுக்குள் முழு ஆகாயமும் அடங்கி விடவில்லையா?அது போல.
நான் என்று நினைத்த தருணத்திலேயே சிவம், சக்தி ஆகி இந்தப் பேரண்டமும் ஆனது.
உங்கள் பின்னாளில் BIG BANG என்று அறிவியலாளர்கள் சொன்னது சிவத்தின் இந்த 'நானைத்தான்'
கல்லுக்குள் நான் உருவாகலானேன்.
எனது நெற்றியில் அவன் அனைத்து உயிர்களின் தலையெழுத்துக்களையும் செதுக்கினான்.

அவன் எனது செவிகளைச் செதுக்கும் போது யமுனை ஆற்றங்கரையில் இடையனாய் நான் என்றோ வாசித்த ஒற்றைக் குழலின் இசையை மட்டுமல்ல, இனி வரப்போகும் அனைத்து ராக ஸ்வரங்களின் மயக்கும் இனிமைகளையும்,,பியானோவின் மென்மையான வருடல்களையும்,கீ போர்டின் தழுவல்களையும், வயலின்களின் அரவணைப்புக்களையும், எலக்ட்ரானிக் கருவிகளின் துள்ளல்களையும் கேட்டுணர்ந்தான்.

பல யுகங்களுக்கும் சேர்த்து வழி விட்ட ஒலிகளின் சங்கீதத்தை, அவன் எனது செவிகளின் மூலமாக ரசித்தான்.இதற்கு முன்னர் பிறந்த,இனிப் பிறக்கப் போகும் பாடகர்களும்,பாடகிகளும்,இசை மேதைகளும் அவனுள் உருகி,வழிந்தார்கள்.
இன்னும் திறக்கப் படாத எனது மூடிய விழிகளுக்குள்ளே மனித மனங்களின் அத்தனை,கனவுகளும்,கற்பனைகளும்,வன்முறைகளும்,வக்கிரங்களும் மொய்த்திருப்பதைக் கண்டான்.

எனது நாசியில் உலகத்து நறுமணங்களை எல்லாம் அவன் முகர்ந்தான்.

அந்தரங்கத்தில் மோஹத்தின் கண்ணி வெடிகளாய் வெடிக்கும் அந்தி மல்லிகைகளின் சுக வாசனைகளையும்,அருவிக் குளியலின் புத்துணர்ச்சியைக் கிளப்பும் செயற்கை சிட்ரஸ்களின் பரிசோதனச் சாலை நறுமணங்களையும்,நெருங்கிய கன்னிப் பெண்ணின் மூச்சுக் காற்றைப் போன்ற முல்லைப் பூக்களின் கொல்லும் மணங்களையும்,அனைத்தில் இருந்தும் விடுபட்ட மனித மனம் அனுபவிக்கும் சந்தன சுகந்தத்தையும்,ஒருவரோடு ஒருவர் சங்கமிக்கும் தருணத்தில் மட்டும் அனுபவிக்கும் வியர்வையின் புனித நெடியையும் அவன் முகர்ந்து வாசனைகளின் சமாதி அடைந்தான்.

வெண்புறாவின்,அதுவும் பெண்புறாவின் அடிவயிற்றுச் சிறகுகளை எனது கன்னங்களில் தொட்டான்.

காமத்தின் முதல் படியும்,காதலின் கடைசிப் படியுமான எனது உதடுகளை அவன் செதுக்கும் போதுதான் நானே எனது பெண்ணிருப்பை உணர்ந்தேன்.

இயல்புகள் எதுவுமற்ற பிரும்மத்தைப் பெண்ணாக்கிப் பார்க்கும், பிரும்மத்தின் விளையாட்டே அவன் மூலம் நடக்கிறது என்பதை உணர்ந்து நானே என்னை ரசித்தேன்.
சிவம் தன்னை சக்தியாக்கித் தன்னைத் தானே பார்த்ததிலிருந்துதான் ரசனையே தொடங்கியது.
தன்னை ரசித்த குழந்தை மனம் தான், முதலில் தாயையும்,பிறகு மற்றவற்றையும் ரசிக்க ஆரம்பிக்கிறது என்று பின்னாளில் மனோதத்துவ ஞானிகள் சொன்னது இதனைத்தான்.

அவன் செதுக்கிய எனது பெண் உதடுகள்.
ஆண்களின் தர்க்க ஞானத்தின் வறட்சியை எல்லாம் துடைக்க வந்த இயற்கையின் முதல் ஈரம் பெண்ணின் உதடுகளில் இருந்துதான் உற்பத்தி ஆகிறது.

முத்தம் என்ற மனித இனப்பெருக்கின் கங்கோத்ரி.

உதடுகளே படைப்பின் முதல் புனிதஸ்தலம்.

கண்ணாடியே கண்ணடியைப் பார்த்துக் கொள்வதைப் போல என்னை நானே பார்த்து ரசித்த வேடிக்கையில் எனது உதடுகளில் புன்னகை சுழிந்தது.

பிறகு கழுத்தினைச் செதுக்கினான்.காதுகளில் அவன் கேட்ட அனைத்து இசையினையும் வெல்லும் எனது மழலைச் சிணுங்கல்கள் பிறக்கும் இடம் என்பதனை உண்ர்ந்தான் அவன்.

என்ன உயிர் போகும் வேதனை என்றாலும் தொட்டவுடன் அதனை மாயமாய் மறையச் செய்யும் எனது மெல்லிய கரங்களும்,பூ விரல்களும்.
அவன் எனது மார்புக்கு வரும் போது குகையின் கூரை துவாரத்தின் வழியே பௌர்ணமியும் வந்தது.நிலவின் ஒளியில் குகையே குளிர்ந்து போகப்,பெண்ணுடலிலேயே மிகக் குளிர்ச்சியான பாகமான எனது மார்பகங்களைச் செதுக்கினான் அவன்.

'இடங்கொண்டு விம்மி, இணைகொண்டு, இறுகி,இளகி,முத்து வடங்கொண்ட கொங்கை' என்று பின்னாளில் அபிராமிப் பட்டர் வருணித்ததைப் போல் அல்லாமல்,
ஆண்களின் உயிர் முனைகளை எல்லாம் சுருட்டிப் பிடித்து வைத்திருக்கும் இரண்டு கைப்பிடிகளைப் போன்ற அளவான சிறிய மார்புகள்.

இதயத்திலிருந்து அன்பும் கருணையுமே இரண்டாக முளைத்துக் கிளம்பினாற் போன்ற இரண்டு தாய் முலைகள்.

பருகினால் மனதின் அடையாளங்கள் எல்லாம் கரைந்து போய்,மனமே மறைந்து சிவஸ்வரூபம் ஆகி விடுவதால் மனிதர்களாய் யாரும் உண்ணா முலைகள்.

உண்பதை மட்டுமல்ல பார்ப்பவர்கள் மனதையும் செரிக்கும் மணிவயிறு.

கர்ப்ப காலத்தில் மட்டும் தனது இருப்பைக் கூட்டி,மேனியின் எழில்கள் அனைத்தையும் கூட்டும் பெண்வயிறு.

படைப்பின் கருவூலம் மிளிரும் இடை.

திரயம்பகா என்று சிற்ப சாஸ்திரத்தில் பெண்ணுக்கே உரிய அங்க லாவண்யங்களாக வருணித்திருக்கும் மூன்று பகுதிகள் மார்பும்,இடையும்,பின்னழகும்.

துறவுக்கு மாபெரும் இரண்டு தடைக் கற்களைப் போன்ற எனது பின்னழகுகள்.

காமத்தின் அளவுகோல்களைப் போன்ற இரண்டு தொடைகள்.

கடைசிப் பற்றும் உதிர்ந்த பின்னர் மனிதன் இயல்பாகவே அடைக்கலம் சேரும் பாத கமலங்கள்.

இப்படி நான் முழுதும் விக்ரஹமாக உருவாக ஏழு நாட்கள் ஆகின.

வெள்ளி, ஆகஸ்ட் 07, 2009

ஒரு தெய்வத்தின் நாட்குறிப்பு

நான் வெளிப்பட்ட போதுதான் இந்த ஒலி பிறந்தது.
ஒலியிலிருந்து இந்தச் சொற்கள் பிறந்தன.
சொற்களில் இருந்து இந்த எழுத்துக்கள் பிறந்து எனது நாட்குறிப்பு ஆனது.
இந்த நாட்குறிப்பின் காலம் உங்கள் வார்த்தைகளில் ஐந்தாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
ஏனெனில் எனக்குக் காலம் இல்லை.
அந்த அடுக்கடுக்கான மலைத் தொடரில் அது ஆறாவது மலை.
பச்சை நிறமே கெட்டி தட்டிப் போனாற் போல அடர்ந்த மலைக் காடு.
அந்தக் காட்டில் அவன் நீண்ட காலமாகத் தனியே திரிந்து கொண்டிருந்தான்.
முடியும்,சடையுமாக.சில காலம் மேல் துணியோடு,சிலகாலம் அதுவும் இன்றி.
அவனைச் சில வேடுவர்கள் மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.
புலி வேட்டைக்காக ஆறாவது மலையில் இருக்கும் மேல் காட்டுக்கு வரும் அவர்கள் எப்போதாவது அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவன் விந்தி,விந்தியே நடந்ததினால் அவனை அவர்கள் முடவாண்டிச் சித்தர் என்று அழைக்கத் தொடங்கி அதுவே அவனுக்குப் பெயராயிற்று.காலில் எப்போதோ பட்ட காயம் அவன் மேல் நிரந்தரமாகத் தங்கிப் போனது,அதனாலேயே அவன் விந்தி,விந்தி நடக்கிறான் என்று வேடுவர்கள் அறிந்திருந்தார்கள்.

அவனை வேடுவர்கள் கூட அரிதாகவே பார்க்க முடியும்.

சில நேரங்களில் அந்திச் சூரியனின் பொன்னொளியில் மலை முகட்டை நோக்கி விந்தி,விந்தி நடந்து கொண்டிருப்பான்.
சில வேளைகளில் நாட்கணக்கில்,ஏன் வாரக் கணக்கில் கூட மலைப் பலா மரத்தடியில் கண்கள் மூடிச் சிலையென அமர்ந்திருப்பான்.
சில நாட்களில் வைர மணி அருவியில் சில்லென நனைந்து கொண்டே இருப்பான்.வைர மணி அருவியின் தண்ணீர் அவர்கள் யாராலும் பொறுக்க முடியாத சில்லிப்புடன் இருக்கும்.அந்த அருவியில் குளிப்பதை அவர்கள் ஊசிக் குளியல் என்று கூறுவார்கள்.மலை உச்சியில் இருந்து ஒரு கோடி ஊசிகள் பாய்ந்து வந்து குத்துவதைப் போல் இருக்கும் அந்த அருவியில் அவன் மட்டும் நாள் கணக்கில் குளித்துக் கொண்டிருப்பதை அவர்கள் வியப்புடன் பார்ப்பார்கள்.
நிறையச் சமயங்களில் அவன் பறவைகளோடு பறவையாக நெடிதுயர்ந்த கொன்றை மரத்தின் கிளையில் அதன் செம்பூக்களிடையே அமர்ந்திருப்பான்.பறவைகள் அவனது இருப்பையே பொருட்படுத்தாமல் அமைதியாக அவன் அருகே வீற்றிருப்பது அவர்கள் பார்த்த அதிசயங்களில் ஒன்று.
அதை விட அவர்கள் வியந்து பார்க்கும் காட்சி ஒன்று உண்டு.
ஆறாம் மலைக் காட்டில் தேர்ந்த வேட்டைக் காரர்களான அவர்களுக்கே பல மாதங்களாகப் போக்குக் காட்டி வரும் ஆட்கொல்லிப் புலி ஒன்று இருக்கிறது.அதற்கு அவர்கள் 'மஞ்சள் காற்று' என்று பெயர் வைத்திருக்கிறாகள்.மஞ்சள் காற்று எப்போது அடிக்கும், எப்போது மறையும் என்று யாருக்குமே தெரியாது.
அந்த மஞ்சள் காற்றுக் கூட அவன் கண்மூடி மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது அவனருகில் அவர்களது வீட்டு நாய் போல் அவனது அருகில் விழித்தபடி படுத்துக் கிடக்கும்.அதற்குப் பிறகுதான் அவனை முடவாண்டிச் சித்தர் என்று அவர்கள் அழைக்கத் தொடங்கினார்கள்.
அவன் அவர்கள் யாருடனும் பேசியதே இல்லை.எப்போதாவது அவர்களைப் பார்ப்பதுண்டு.அப்போதுதான் அவனது கண்களை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
அப்ப்பா! என்ன கண்கள்!

பார்ப்பதற்கு மட்டுமின்றிப், பார்க்கப் படுவதற்குமான கண்கள்!

அவனது ஒரு கண நேரப் பார்வை பட்டாலே வைரமணி அருவியே சட்டென்று அவர்கள் மீது கொட்டித் தீர்த்ததைப் போல உடம்பே சில்லென்று வேர்த்துப் போகும்.
ஆறாம் மலையில் நிறையக் குகைகள் உண்டு.ஒரு குகைக்கு மட்டும் சூரியக் குகை என்று வேடுவர்கள் பெயர் வைத்திருந்தார்கள்.அந்தக் குகையில் மட்டும் மேல் கூரையில் ஒரு அரை அடி விட்டமுள்ள வட்டமாக மலையே வழி விட்டுச் சூரிய ஒளியும்,நிலவின் ஒளியும் உள்ளே பாயுமாறு அமைந்திருந்தது.

அந்த மலைத் தொடரில் மூன்றாம் மலை வரையிலுமே மனிதர்கள் வாழ்ந்தார்கள்.அடிவாரத்திலிருந்து மூன்றாம் மலை வரையிலுமே சிறு,சிறு வேட்டுவக் குடியிருப்புக்கள் இருந்தன.மூன்றாம் மலைக்கு மேல் கொடிய விலங்குகளும்,பனிக்குளிரும் மனிதர்களை மேலே வராவண்ணம் விலக்கி வைத்திருந்தன.
முடவாண்டிச் சித்தரைத் தவிர ஆறாம் மலையில் யாராலும் வாழ முடியாது என வேட்டுவக் கிராமங்களில் பேசிக் கொள்வார்கள்.

ஆறம் மலையில் மட்டும் பனி போர்த்திய வைகறை வேளைகளிலும்,அந்தி வேளைகளிலும் உடுக்கைச் சத்தம் கேட்கும். மேல் மலைக்குச் சென்ற வேடுவர்கள் சித்தர் கையில் என்றும் உடுக்கையைப் பார்த்ததில்லை.அதே போல் சில நேரங்களில் சூரியக் குகையில் மட்டும் நெருப்பெரிவது தெரியும்.அதற்கான சாதனங்களைக் குகைக்கு உள்ளேயோ,சித்தரின் கைகளிலோ அவர்கள் என்றுமே பார்த்ததில்லை.

ஒரு நாள் வைகறையில் அவன் வைரமணி அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவனது காலடியில் ஒரு மலைக் கருங்கல் அருவியோடு அருவியாக உருண்டு வந்து விழுந்தது.குனிந்து அதனைத் தொட்டுப் பார்த்தான்.
பல வருட அருவித் தண்ணீர் தேய்த்துத் தேய்த்துக் கல்லைக் கறுப்புப் பளிங்காக்கி இருந்தது. இரண்டடி உயரத்தில் கறுப்பு முட்டை போல் இருந்தது அந்தக் கல்.
அருவி தன் மேலே கொட்டக் கொட்டக் கல்லையே பார்த்துக் கொண்டிருந்த அவன்,பிறகு அதனை அனாயசமாக எடுத்துக் கொண்டு அருவியிலிருந்து சொட்டச் சொட்ட நனைந்தபடியே நடந்தான்.

சூரியக் குகைக்குள் கல்லைக் கொண்டு வந்த அவன் குகையின் நடுவில் அதனை நிறுத்தி வைக்கப் பளீரெனக் காலைக் கதிரவனின் ஒளி கல்லின் மேல் விழுந்தது.வெளியே சென்றவன் திரும்பி வந்த போது அவனது கையில் ஒரு சிற்பியின் உளியும்,சிறு சுத்தியலும் இருந்தன.

அவன் என்னைச் செதுக்கத் தொடங்கினான்.
தான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.

(எனது தரிசனம் தொடரும்)