கவிதை.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை.. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், ஜனவரி 29, 2009

புத்தர் முகத்தில் ரத்தம்..

அவர்கள் இருவரும் இறக்கும் தறுவாயில் கிடந்தார்கள் ..
இருவர் முகங்களுக்கும்
நடுவில் உடைந்து கிடந்த
புத்தர் சிலையின் முகத்தில் ரத்தம் ..
இன்னும் தூரத்தில் குண்டு வீசும் விமானங்களின் சத்தம்..
அவன் அவளை முத்தமிட முயன்ற போதெல்லாம்
அவள் அவனுடன் சண்டைதான் போட்டிருக்கிறாள்..
பக்கத்து வீட்டுக் குழந்தையாய் அவன் வீட்டு வாசலுக்கு
அவள் தவழ்ந்து வந்த போது அவன் சிறுவன் ..
அப்போதும் அவன் தாவி எடுத்து முத்தமிட முயல்கையில்
அவள் கோபித்துக் கொண்டு அழுதாள்..
பள்ளிக் கூட அறையில்,
ஜன்னல் வழியே மற்ற மாணவர்கள் பார்த்துச் சிரித்துவிட
பாதியிலேயே கோபித்துக் கொண்டு ஓடி விட்டாள்...
கல்லூரி மரத்தடியில், அவளாக வந்த அன்று
அவன் வாழ்வில் முதல் வாய் மது அருந்தி இருந்ததில் வந்த கோபம்..
திருமண நிச்சயத்தன்று
உள்ளறையில் நெருங்கிய போது
அவள் அண்ணனை எதிரிகள் கொன்று விட்டார்கள் என்ற
செய்தி கேட்டு வந்த கோபம்...
குண்டு வீச்சில் அப்பா அம்மாவைப் பறிகொடுத்து விட்டு
அவன் கதறிய போது
அணைத்துக் கொண்ட அவளுக்கு
மேலே பறந்து போன விமானத்தின் மீது கோபம்...
இப்போது போராளியாய் அடிபட்டுச் சாகக் கிடக்கும் அவனும்
அகதியாய்த் தப்பித்தோடும் போது பிடிபட்டு உருக்குலைந்த அவளும் .. இதுவரை இழந்த முத்தங்களை எல்லாம் ஈடுகட்டி
தன் கடைசி மூச்சில் அவள் புன்னகையாக மாற்றித் தர,
அவன் பார்த்து மடிவதற்குள்
குறுக்கே வந்தன இரண்டு ராணுவக் காலணிகள்..