செவ்வாய், அக்டோபர் 13, 2009

காதல மலர்ந்த கணங்கள் 5


அமிர்தவர்ஷிணி

5.
'ஆஜ்மீர்லே நான் அட்டன்ட் பண்ணிட்டிருந்த சூஃபி பெரியவர்தான் என்னை இங்கே அனுப்பிச்சு வெச்சிருக்கார்!' என்றாள் அமிர்தவர்ஷிணி.
எனக்குள் சிலீரென்றது.
'அவருக்கு எப்படி வர்ஷிணி,என்னைப் பற்றி..?' என்றேன் வியந்து.
அமிர்தவர்ஷிணி அமைதியாக என்னைப் பார்த்தாள்.
'நடந்ததையும் ,நடந்திட்டிருக்கிறதையும் மட்டும் தெரிஞ்சுக்குறதுக்குத்தான் நம்ம மனசுனாலே முடியும்.மீதி நடக்கப் போறதை,அதுவாக் கற்பனை பண்ணிப் பார்த்துட்டு நம்ம மேலே சுமத்திட்டே இருக்கும்.நாளைக்கு நீ என்ன பார்க்கப் போறேன்னு உன்னோட கண்ணு என்னிக்காவது உங்கிட்டே காட்டி இருக்கா?' என்று கேட்டாள் அவள்.

நான் பொம்மை போல இல்லையென்று தலையாட்டினேன்.

'கண்ணு,காது,மூக்கு,உடம்பு எல்லாமே எப்பவுமே நிகழ்காலத்துலேதான் இருக்கும்.ஆனா மனசு மட்டும் அதிகப் பிரசங்கித் தனமா எதிர்காலத்தைப் பத்தி ஏதாச்சும் தொணதொணத்துகிட்டே இருக்கும்.நாமும் அந்த அதிகப்பிரசங்கி கிட்டே ஏமாந்து ஆடிட்டிருப்போம் இல்லேன்னா ஆடிப் போய் உட்காந்திருப்போம்!' என்றாள் அவள் ஏதோ பிரசன்னம் வந்தவள் போல.

ஏதோ தெலுங்குப் பக்திப் படத்தில் பார்க்கும் அழகிய, அமானுஷ்யச் சிறுமி போலத் தோன்றினாள் அவள்.
அவளை அதிசயமாகப் பார்த்தேன்.பதினேழோ,பதினெட்டு இருக்கும் அவள் வயதுக்கு, அவள் பேசுவது அதிகமாகத் தோன்றியது எனக்கு.அதற்கு அவளே பதில் சொன்னாள்.

'இது நான் சொல்லலே.நான் பார்த்துட்டிருந்த அந்த வயசான முஸ்லீம் யோகி அடிக்கடி இதைச் சொல்லுவார்.' என்றாள் அவள்.

'அவரைத் தெரிஞ்சவங்க எல்லாம் அவரை ஆஜ்மீர் பாபான்னு கூப்பிடுவாங்க.அவருக்கு இப்போ 98 வயசிருக்கும்ன்னு, கூட இருக்கிறவங்க சொல்றாங்க.ஆனா நான் அவரை, உங்களுக்கு உண்மையா என்ன வயசு பாபான்னு கேக்கும் போதெல்லாம் எனக்கு வயசே ஆகமாட்டேங்குதே,தாயே.எப்போதான் எனக்கு வயசாகித் தொலையுமோ தெரியலேம்பாரு!' என்று சொல்லிச் சிரித்தாள் அமிர்தவர்ஷிணி.

இந்த மூன்று மாதத்தில் நான் மனம் லேசாகிச் சிரித்தது அப்போதுதான்.

'உனக்கு அவரு எப்படிப் பழக்கம்?' என்றேன் நான்.
'அஞ்சு வயசுலே என்னோட அப்பா,அம்மாவை ரிஷிகேஷ் கங்கை அடிச்சுட்டுப் போனப்போ, அழுதிட்டிருந்த என்னை ஆதரவா அணைச்சுகிட்டவர் அவருதான்!' என்றாள் அவள்.

என்னை மாதிரிப் புற்று நோயில் சாகப் போகிறவனுக்குத்தான் பகுத்தறிவை விட இந்த மாதிரி அற்புதங்கள் உணர்வுப் பூர்வமாக எவ்வளவு அவசியம் என்று தெரியும்.

அதற்குப் பிறகு ஆஜ்மீர் பாபாவைப் பற்றி அவள் சொன்னதை சுருக்கமாகச் சொல்கிறேன்.

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆஜ்மீரில் இருக்கும் புகழ் வாய்ந்த தர்கா, ஹஸ்ரத் க்வாஜா மொயினுதீன் சிஷ்டி என்பதாகும்.'ஏழைகளிடம் அனபைப் பொழிபவர்' என்று அழைக்கப் படும் அந்த பன்னிரண்டாம் நூற்றாண்டு மஹானின் பிரசித்தி பெற்ற சமாதி, முஸ்லீமகள்,இந்துக்கள் அனைவருக்குமே புனிதத் தலமாகக் கருதப் படுகிறது.அக்பர் சக்ரவர்த்தியே தனது தலை நகரிலிருந்து வாரக் கணக்காகப் பாத யாத்திரை புரிந்து வழிபட்ட அந்த மஹா ஞானியின் சீடர்களின் வழி வந்தவர் ஆஜ்மீர் பாபா என்றாள் அமிர்தவர்ஷிணி.

திடீர் திடீர் என்று பாபாவிடமிருந்து அழைப்பு வந்தால் அமிர்தவர்ஷிணி அவரது எளிய இருப்பிடத்துக்குச் சென்று விடுவாள்.

அமிர்தவர்ஷிணியை மட்டுமல்ல, பாபா எல்லாப் பெண்களையுமே தாயே என்றுதான் கூப்பிடுவார்.தினமும் ஷரிஃப் தர்கா என்றழைக்கப் படும் தர்காவுக்கு, அவளை அழைத்துச் சென்று அதனுடைய பளிங்குப் படிக்கட்டுக்களில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் பாபா திடீரென மூன்று நாட்களுக்கு முன்னால் 'நீ மெட்ராஸுக்குப் போ!' என்றாராம்.

'ஏன் பாபா திடீர்ன்னு மெட்ராஸ்?' என்று அமிர்தவர்ஷிணி கேட்டதற்கு 'அவன் உன்னைக் கூப்பிடறான்' என்று மட்டும் சொல்லி விட்டுத் தர்காவின் தளத்திலிருந்து பாபா எழுவதற்கும் அமிர்தவர்ஷிணிக்கு சேஷாத்திரி அங்கிளின் ஃஃபோன் வருவதற்கும் சரியாக இருந்தது என்றாள் அவள்.

ஒரு கணம் எனது வாழ்க்கை மௌனத்தால் நிரம்பியது.

'ஆஜ்மீர் பாபாவுடன் நான் ஃபோனில் பேச முடியுமா?' என்று பிறகு அவளிடம் கேட்டேன்.
முடியாது எனத் தலையாட்டினாள் அவள்.
'ஏன்,ஃபோனில் பாபா பேசமாட்டாரா?' என்றேன்.
'அவன் உன்னைக் கூப்பிடறான்னு என்கிட்டே பேசினதுதான் அவரு கடைசியாப் பேசினதே!'என்றாள் அவள் அமைதியாக.

நான் புரியாமல் அவளையே பார்த்தேன்.

'நான் சென்னைக்கு ரயில்லே வந்திட்டிருக்கும்போதே, பாபா அவரோட வீட்டுலே சமாதி ஆகியிருக்காரு.'என்றாள் அவள்.
முகத்தில் எந்த உணர்வுமே இல்லாமல் சாந்தமாக இதனைச் சொன்னாள்,அமிர்தவர்ஷிணி.
'அவர் இறந்ததை இவ்வளவு கேஷுவலா எடுத்துட்டுச் சொல்றே?' என்றேன் நான் வியந்து.
'அவர் இறந்தார்ன்னு நான் சொல்லலியே.சமாதி அடைஞ்சார்ன்னுதானே சொன்னேன்!' என்றாள் அவள் அதே அமைதியுடன்.

பிறகு அவள் ஏற்கனவே கொண்டு வந்திருந்த ஒரு பச்சை நிறச் சணல் பையிலிருந்து ஒரு பழைய நோட்டுப் புத்தகத்தை எடுத்தாள்.நீண்ட வருடங்களாகப் பயன் படுத்தப் பட்டுக் கிட்டத்தட்ட பழுப்பு நிறத்தில் இருந்தன அந்த நோட்டின் தாள்கள்.

'இது பாபா தன் கைப்பட எழுதி, ஓதின திருக்குரான்.நான் இங்கே கிளம்பி வர்ரப்போ, இதை இனி நீ வெச்சுக்கோ தாயேன்னு எனக்குப் பரிசாக் குடுத்தாரு.அதை உன் தலை மாட்டுலே வெக்கிறேன்' என்றவள் அந்த நோட்டுப் புத்தகத்தை எனது கட்டில் தலைமாட்டில் சிரத்தையாக வைத்தாள்.
'தேங்க்ஸ்!' என்றேன் நான் என்ன சொல்வதென்று தெரியாமல்.
அவள்
என்னைப் பார்த்து வெறுமனே புன்னகைத்தாள்.பிறகு அதே சணல் பையிலிருந்து ஒரு சிறிய மூடி போட்ட கிண்ணத்தை எடுத்து மூடியைத் திறந்து என்னருகில் வந்தாள்.
'இதைக் குடி.ஒரு மடங்குதான்' என்றாள் அமிர்தவர்ஷிணி.
'இது என்ன?' என்றேன் நான்.
'பயப்படாதே.வெறும் துளசிச்சாறுதான்.சாமியைக் கும்பிட்டு எடுத்துட்டு வந்திருக்கேன்' என்றாள்,அவள்.
முதலில் அவளது அழகிய,அமைதியான முகத்தைப் பருகி விட்டுப், பின் அவள் கொடுத்த துளசிச் சாற்றை ஒரே மடங்கில் குடித்தேன்.

'துளசி எந்த விஷத்தையும் முறிக்கும்' என்றாள் அவள் தீர்க்கமாக.
'நீ குடுத்தா!' என்றேன் நான்.

அவள் அதற்கும் வெறுமனே முறுவலித்தாள்.அந்த நேரத்தில் அவளது புன்னகையை விடப் பெரிய ப்ரிஸ்க்ரிப்ஷன் எதுவுமில்லை என்று எனக்குத் தோன்றியது.

ஆனால் அந்தத் துளசி சாற்றைக் குடித்த சில நொடிகளில் எனது வயிற்றைப் பிரட்டி அப்படி ஒரு குமட்டல் எடுத்தது எனக்கு.மீண்டும் வாந்தி என்றதும் எனக்குப் பயம்தான் உச்சிக்கேறியது.

'வாந்தி வர்ர மாதிரி இருக்கா?'என்றாள் அவள்.
ஆம் என்று என்னால் தலையைத்தான் அசைக்க முடிந்தது.
'எடு' என்று அவள் நிதானமாகத் தனது கைகளை நீட்டினாள்.நான் அவளைத் தயக்கத்துடன் நிமிர்ந்து பார்த்தேன்.
'எடு,சரவணா' என்றாள் அவள்,தீர்க்கமாக.

நான் அவளது கைகளில் ரத்தமாக வாந்தி எடுத்த போதுதான்,சிவப்பு சிவப்புடன் சேர்வது எவ்வளவு அழகாக இருக்கிறது என யோசித்தேன்.
அவள் அமைதியாக பாத்ரூமுக்குச் சென்று கைகளைக் கழுவி விட்டுச் சொன்னாள்.

'இதுவரைக்கும் நீ சாப்பிட்ட சாப்பாட்டைத்தான் வாந்தி எடுத்திருப்பே.இப்போ எடுத்தது உன் உடம்பிலே தங்கி இருந்த விஷம்.துளசி எல்லாத்தையும் வெளியே கொண்டு வந்துடுச்சு!' என்றாள் அமிர்தவர்ஷிணி அமைதியாக.

எனக்குள் காதல் மலர்ந்த கணம் அதுதான்.

அவளைக் காதலிக்கத் தொடங்கினேன்,எல்லாக் காதலையும் போல இது நிறைவேறுமா என்று தெரியாமலேயே.

( தொடரும்....)

(ஹஸ்ரத் மொயினுதின் சிஷ்டி போன்ற சரித்திர மகா புருஷர்களைத் தவிர இந்தக் கதையில் வரும் அனைத்துக் கதாபாத்திரங்களும் கற்பனையே .நிகழ்வுகளும் புனைவுகளே.யாரையும் எதனையும் குறிப்பிடுவன அல்ல.)

திங்கள், அக்டோபர் 12, 2009

காதல மலர்ந்த கணங்கள் 4

அமிர்தவர்ஷிணி
4.
மூன்று மாதங்கள் ஆகின்றன,நான் இந்தப் புற்று நோய் மருத்துவமனைக்கு வந்து.

கெமோ தெராபி,ரேடியேஷன் தெராபி மற்ற சிகிச்சைகள், மருந்து மாத்திரைகள் என்று என்னுடைய உடலுடன் மருத்துவர்கள் இடைவிடாமல் போராடினார்கள்.இதற்குக் கேன்சர் என்று பெயர் வைக்காமல் நத்தை என்று பெயர் வைத்திருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.ஏனென்றால் மரணம் நத்தை வேகத்தில் வந்து கொண்டிருந்தது.

மனித உடலுக்குள்ளும்,மனதுக்குள்ளும் எத்தனை வலிகளும்,வேதனைகளும் இருக்க முடியுமோ அத்தனையையும் அனுபவித்துக் கொண்டிருந்தேன்.முடிகள் எல்லாம் கொட்டிப் போய்,நிறம் வெளிறிப் போய்....எனது நண்பர்களை எல்லாம் என்னை இந்தக் கோலத்தில் பார்க்க வர வேண்டாமென்று கண்டிப்பாகச் சொல்லி விட்டேன்.
ஆனால் அப்பாவை மட்டும் அப்படிச் சொல்ல முடியவில்லை.லுகேமியா செல்கள் என்னைவிட அவரைத்தான் அதிகம் உருக்கி எடுத்துக் கொண்டிருந்தது.

மகன் தந்தைக்காற்றும் உதவி புற்று நோய் மட்டும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென்பதுதான் என்று தோன்றியது.

என்னுடைய அப்பாவுக்கு ஒரு முடி கூட நரைக்கவில்லை என்று நண்பர்களிடம் அடிக்கடி பெருமை அடித்துக் கொள்வேன்.அதைக் கூடக் கடவுள் (யார் அந்த சேடிஸ்ட்?) விட்டு வைக்காமல் பிடுங்கிக் கொண்டார். நான் மருத்துவ மனைக்கு வந்த ஒரே வாரத்தில் அப்பாவுக்குத் தலை முழுதும் நரைத்து விட்டது.

யாரையும் கடிந்து கூடப் பேசாத அந்த மென்மையான ஆத்மாவை, இப்படி நரகக் குழியில் தள்ளி வேடிக்கை பார்க்கும் முகம் தெரியாத எதிரியே! தயவு செய்து என்னைச் சீக்கிரம் சாக விட்டு எனது அப்பாவைக் காப்பாற்று!

கால வரையரையற்று விடுமுறை எடுத்துக் கொண்டு,அப்பா தானே சமைத்து எனக்குத் தினமும் எடுத்து வந்தார்.
'எப்படியும் வாந்தி எடுக்கப் போறேன்.அதுக்கு ஏம்பா இவ்வளவு கஷ்டப் பட்டுச் சமைச்சு எடுத்துட்டு வர்ரீங்க?' என்பேன் நான்.
'உனக்குத் தேவை இல்லேன்னாலும் உனக்காகப் பண்றோங்கற காரியத்திலே எல்லாம் எனக்கு ஒரு திருப்தி இருக்குப்பா' என்றார் அவர் சாப்பாடு பரிமாறிக் கொண்டே.
அவர் நெற்றியில் இன்னுமே விபூதிக் கீற்றும்,குங்குமமும் இருந்தன.
'நீங்க இன்னும் சாமி எல்லாம் கும்பிடறீங்களாப்பா?'
'சாகும் போது உன்னோட அம்மா விபூதி,குங்குமத்தை வெச்சு உட்டுட்டுக் கடவுள் எப்பவும் உங்களைக் கைவிட மாட்டாருன்னு சொல்லிட்டுக் கண்ணை மூடினா.நான் ஆண்டவனை நம்பறனோ இல்லையோ உங்க அம்மாவை நம்பறேன்' என்றார் அப்பா அமைதியாக.
'பாவம்பா நீங்க' என்றேன் என்னை அறியாமல்.இப்போதெல்லாம் இருவருமே அழுவதில்லை.
துயரம் முற்றி வந்த அமைதி.
சாவுக்கு வைத்த ஆறு மாதக் கெடுவில் ஒரு வழியாக மூன்று மாதங்கள் கழிந்தது என்பது மட்டுமே இப்போது எனக்கு இருக்கும் ஒரே நிம்மதி.

இன்னும் மூன்று மாதங்கள் என்று, ஏதோ விடுமுறைக்குக் காத்திருக்கும் பள்ளிக்கூடச் சிறுவனைப் போல நான் எனது மரணத்துக்காகக் காத்திருந்தேன்.

ஒருநாள் காலை பத்து மணிவாக்கில் மருந்துகளின் அசதியில் நான் என்னை மறந்து உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென எனக்குக் கனவு போல ஒரு விழிப்பு வந்தது.எனது உறக்கத்தைக் கலைத்தது ஒரு வாசனை.

ஆம்.அதே பச்சைக் கற்பூர வாசனை.மருத்துவ மனையின் செயற்கைத் தூய்மையான டெட்டால் வாசத்தையும் மீறி கோவில் நைவேத்தியங்களில் மட்டும் வீசும் அதே வாசனை.
மெல்லக் கண்களைத் திறந்து பார்த்தேன்.படுக்கையின் அருகில் அப்பா,எங்கள் கோவில் மடப்பள்ளி சமையற்காரரான சேஷாத்திரி, சற்றுத் தள்ளிப் பின்னால் அமிர்தவர்ஷிணி மூவரும் நின்றிருந்தார்கள்.

முடிகள் இழந்து மொட்டைத் தலையுடன் இளைத்துக் களைத்துப் போயிருந்த என்னைப் பார்த்துக் கொண்டிருந்த சேஷாத்திரி கண்ணீரை அடக்க முடியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தார்.
'அழ மாட்டேன்,அழமாட்டேன்னு சார் கிட்டே நூறுதடவை சத்தியம் பண்ணிக் குடுத்துட்டுதான் வந்தேன்..ஆனா முடியலேப்பா..'என்ற சேஷாத்திரி மேல் துண்டால் வாயைப் பொத்திக் கொண்டு குலுங்கிக் குலுங்கி அழுதார்.சிறுவயதில் குலதெய்வத்துக்கு மொட்டை போடமாட்டேன் என்று அழுத என்னைச் சிரித்தபடியே ஆறுதலாக நெஞ்சில் அணைத்துக் கொண்டவர் சேஷாத்திரி அங்கிள்.
அப்பா அமைதியாக அமிர்தவர்ஷிணியைப் பர்த்தார்.

குளிர்ந்த வைகறை நதியைப் போல அவளது பார்வை என் மேல் அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது.எந்தச் சலனமுமில்லாத அம்மன் முகம் அவளுக்கு.

'இனி மூணு மாசத்துக்கு அமிர்தவர்ஷிணி நம்ம கூட, நமக்கு உதவியா இருக்கறேன்னு வந்திருக்கா,சரவணா.' என்றார் அப்பா.

சேஷாத்திரி அப்பாவை அழைத்துக் கொண்டு வெளியே சென்று விட, அமிர்தவர்ஷிணி மெல்ல எனது அருகில் வந்து நின்றாள்.
மூன்று மாதங்களுக்கு முன்னால் கோவிலில் பாவாடை தாவணியில் பார்த்த அமிர்தவர்ஷிணி இப்போது வடக்கத்திய பாணி சுடிதாரில் வந்திருந்தாள்.செல்ஃப் டிசைனில் பூக்கள் போட்ட தூய வெள்ளைச் சுடிதாரில் இன்னும் யாருமே வாசிக்க ஆரம்பிக்காத பொன்னிற வயலினைப் போல இருந்தாள் அவள்..

எந்த ஆசையையும் படக்கூடிய சக்தியை அறவே இழந்து விட்ட சக்கையான என் உடலுக்குள்ளிருந்து அவளது அழகைப் பார்ப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.ஆசைகள் அற்றுப் பார்க்கும் போது பெண்ணே வேறு மாதிரி தெரிகிறாள்.பிறந்த குழந்தை அம்மாவைப் பார்க்கும் போது எனது மனோ நிலையில்தான் இருக்கும் போலிருக்கிறது.ஃபில்டர் போட்டுக் காமிராமேன்கள் பனிமூட்டம் போலக் காட்டுவார்களே அது போல அமிர்தவர்ஷிணி இப்போது எனது கண்களுக்குத் தெரிந்தாள்.

மரணம் ஒரு பெரிய புகைப் படக் கலைஞன் என்று நினைத்துக் கொண்டேன்.

சற்று மௌனத்திற்குப் பின் நான்தான் பேசினேன்.

'ஆஜ்மீரிலிருந்து எப்போ வந்தே?'

'இன்னிக்குக் காலையிலேதான்' என்றாள் அவள்.
அவள் குரலை இப்போதுதான் முதல் முறையாகக் கேட்கிறேன்.கோவிலில் அவள் பேசவே இல்லை என்று இப்போதுதான் உணர்கிறேன்.
அந்தரங்கமாகப் பேசுவதுக்கென்றே அமைந்த குரல்,அமிர்தவர்ஷிணியினுடையது.நெருக்கமான சூழ்நிலயிலேயே பெண்கள் பயன்படுத்தும் குரல்.

'எப்படி அதுக்குள்ளே எனக்கு உன்னோடே அப்பாயின்ட்மென்ட் கிடைச்சுது?'

'ஆஜ்மீரிலிரிந்து நான் வந்ததே உன்னைப் பார்த்துக்கறதுக்காகத்தான்!' என்றாள் அவள்.

'சேஷாத்திரி அங்கிள் உன்னை அவ்வள்வு ஃபோர்ஸ் பண்ணியிருக்கார்ன்னு நினைக்கிறேன்'என்றேன் வறண்ட புன்னகையுடன்.

இல்லை என்று உறுதியாகத் தலையாட்டினாள் அவள்.

'பின்னே,யாரு என்னோட அப்பாவா?' என்று கேட்டேன் நான்.

'என்னை உங்கிட்டே வலுக்கட்டாயமா அனுப்பிச்சவரை நீ பார்த்திருக்கவே முடியாது,சரவணா!'என்றாள் அவள்,இப்போதுதான் முதன் முறையாகக் கண்களில் ஈரம் கசிய.

நான் அவள் கண்களில் நீரைப் பார்த்து வியந்து போனேன்.

'பின்னே யாரு,வர்ஷிணி?' அவளது பெயரை மிக இயல்பாகச் சுருக்கிக் கூப்பிட்டது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.

அவள் என்னை ஒரு கணம் ஆழமாகப் பார்த்தாள்.
'ஆஜ்மீர்லே நான் அட்டன்ட் பண்ணிட்டிருந்த சூஃபி பெரியவர்தான் என்னை இங்கே அனுப்பிச்சு வெச்சிருக்கார்!' என்றாள் அமிர்தவர்ஷிணி.

எனக்குள் சிலீரென்றது.

(மீண்டும் சஸ்பென்சுடன் தொடரும் போடுவதற்கு நண்பர் அப்துல்லாவிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.)