செவ்வாய், ஆகஸ்ட் 25, 2009

ஒரு தெய்வத்தின் நாட்குறிப்பு 3

வஞ்சதே பரிவஞ்சதே ஸ்தாயூனாம் நமோ நமஹ
....................................................................
ச்வப்ய ச்வபபதிப்யச்ச நமஹ..
( ஸ்ரீருத்ரம் )

வஞ்சகராகவும்,படுவஞ்சகராகவும்,நயவஞ்சனையால் திருடுபவர்களின் தலைவராகவும் உள்ள பரமேஸ்வரனுக்கு நமஸ்காரம்.
.................நாய்களாகவும்,நாய்களைப் பாதுகாப்பவர்களாகவும் உள்ள பரமேஸ்வரனுக்கு நமஸ்காரம்.....

(இந்தப் பகுதியைப் படிக்கும் அன்பர்கள் உணர்வுத் தொடர்ச்சிக்காக இதற்கும் முன் பகுதிகளைப் படித்து விட்டு இதனைப் படிக்கும் படி கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.)

நான் முழுதும் விக்ரஹமாக உருவாக ஏழு நாட்கள் ஆகின.
கண்கள் மட்டும் இன்னும் திறக்கப் படாத நிலையில் என்னையே சற்றுத் தள்ளி நின்று அமைதியாகப் பார்த்தான் முடவாண்டிச் சித்தன்.

'விச்வமூர்த்திர் மஹாமூர்த்திர் தீப்தமூர்த்திர் அமூர்த்திமான்' என்ற விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் வரிகளைப் போன்ற ஏதோ ஒன்று அவன் மனதில் ஓடின.
சற்றே நிதானித்தவன் பின்னர் விக்ரஹத்தின் வலது பக்கம் வந்து நின்று சில மாற்றங்களைச் செதுக்கினான்.அதே போல் இடது பக்கமும் போய் நின்று சில நுட்பமான மாற்றங்களைச் செதுக்கினான்.
இப்போது மையத்தில் நின்று பார்த்தால் பெண் வடிவமாகத் தெரிந்த விக்ரஹம் சற்றே தள்ளி வலது புறத்தில் இருந்து பார்த்தால்
'வானாகித் தீயாய் மறிகடலாய் மாருதமாய்
தேனாகிப் பாலாம் திருமாலே' என்று பின்னாளில் பெரியாழ்வார் பாடப் போகும் மஹாவிஷ்ணுவின் கோலமாய் ஆண் வடிவமாய்த் தெரிந்தது !

இடது புறமாய் ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வந்து நின்று பார்த்தால்,

'அந்தமும் ஆதியும் அகன்றோன் காண்க
பந்தமும் வீடும் படைப்போன் காண்க
நிற்பதுஞ் செல்வதும் ஆனோன் காண்க
கற்பதும் இறுதியும் கண்டோன் காண்க
யாவரும் பெற உறும் ஈசன் காண்க'
என்று மாணிக்க வாசகர் பாடிய லிங்கேஸ்வர ரூபத்தில் மஹாலிங்கமாய்க் காட்சி அளித்தது !

மையத்தில் ஆதி பராசக்தியாகவும்,வலப்புறத்தில் மூவுலகளந்த பரந்தாமனாகவும்,இடப்புறத்தில் அரூபமான ஆதிசிவனாகவும் காட்சியளிக்கும் பரம்பொருளான எனனை ஒரே விக்ரஹத்தில் செதுக்கிய நிறைவு அவன் முகத்தில் மலர்ந்தது.
விக்ரஹத்தை எடுத்துக் கொண்டு சூரியக் குகையை விட்டு வெள்யே வந்து என்னை நிறுத்தி ஒருகணம் உற்றுப் பார்த்தான்.
என் முன்னர் கண்கள் மூடி கரங்கள் கூப்பி ஏதோ மந்திரங்கள் சொல்லச் சொல்ல அவன் கண்களில் நீராய் வழிந்தது.
அது எட்டாவது நாள் மாலை நேரம்.
உளியை எடுத்து என் கண்களைத் திறக்க அவன் தொடங்கியவுடன் சடேரென முதல் மழைத் துளி விழுந்தது.
நான் கண்களைத் திறந்ததும் ’ஓம் மஹா ஸ்ரீ திரி நேத்ரா’ என்ற ஓங்காரக் குரல் அவனது நாபிக் கமலத்திலிருந்து முட்டி மோதிக் கொண்டு வந்து வெடித்தது.

அவனது அத்தனை வருட மௌனமும் உடைந்து சிதறிப் பிறந்த குரலின் மாபெரும் முழக்கம்.

’ஓம் மஹா ஸ்ரீ திரி நேத்ரா’

அவனது ஓங்கார முழக்கத்தின் பேரலை வான்முகட்டில் முட்டியதும் சடசடவென இடி இடித்தது.வானத்தின் இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை ஓடிய மின்னல் ஒன்று பளீரெனெச் சிலையின் தலைக்குள் இறங்கி எனது பெயரை ஆமோதித்தது.

கொட்டியது பெருமழை.வீசியது சூறாவளிக் காற்று.வைரமணி அருவியில் கட்டறுந்த வெள்ளை யானைகளின் கூட்டத்தைப் போல வெள்ளம் பெருக்கெடுத்தது.

ஆணாகவும்,பெண்ணாகவும்,ஆணும்,பெண்ணுமற்ற அரூபமாகவும் முப்பரிமாணங்களிலும் முழுமையாகத் தரிசிக்கும் மூன்று பார்வைகளைத் தருபவள் ஆதலால் என்னைத் திரிநேத்ரா என்றழைத்தான் சித்தன்.மஹா என்ற நான்காவது பரிமாணத்தை எனது பெயரில் சேர்த்தான் அவன்.

'ஓம் மஹா ஸ்ரீ திரி நேத்ரா’
என்ற சித்தனின் குரல் (பின்னாளில் எர்த் சாங் என்ற பாடலைப் பாடும் போது மைக்கேல் ஜாக்சனிடம் இதே குரலைக் கேட்டேன் நான்) அத்தனை இடியோசைகளையும் தாண்டி மலைத்தொடர் முழுதும் எதிரொலித்தது.

மூன்றாம் மலையிலிருந்து மலைத் தொடரின் அடிவாரம் வரை குடியிருந்த மலை வாழ் மக்களின் வீடுகளில் எல்லாம் அவனது குரல் பொங்கி நிறைந்தது.
ஆறாவது மலையில் உடுக்கைச் சத்தமும்
’ஓம் மஹா ஸ்ரீ திரி நேத்ரா’ என்ற சித்தனின் ஓங்காரக் குரலும் கேட்ட மாத்திரத்தில் அவர்களது ரத்த நாளங்களில் எல்லாம் புயலடித்தது.

ஆண்களும்,பெண்களும்,பெரியவர்களும்,குழந்தைகளும் மலைக் காடுகளின் வழியே கொட்டும் மழையிலும் காற்றிலும் மேலே திரள்திரளாக ஓடி வந்தனர்.

ஆறாவது மலையை அவர்கள் வந்தடைந்த போது சடை முடிகள் காற்றிலும் மழையிலும் அவிழ்ந்து ஆட எனது விக்ரஹத்தின் முன்னர் வெறிபிடித்தாற் போல நின்றிருந்த சித்தனைக் கண்டார்கள் அவர்கள்.

வானம் இடியாகவும்,மின்னலாகவும்,மழையாகவும்,பூமி காற்றாகவும் பேரண்டமே எனது பிறப்பைக் கொண்டாடிக் கொண்டிருந்த நேரம்.

அப்போது எங்கிருந்தோ ஒரு உடுக்கைச் சத்தம் பளீரெனக் கேட்க அந்த ஊழிக் காற்றிலும் மழையிலும் ஆட ஆரம்பித்தான் அவன்.விந்தி விந்தி அவன் ஆடிய தாண்டவத்தில் இயற்கையின் அத்தனை அசைவுகளையுமே அவர்கள் கண்டார்கள்.
குழந்தையின் தளர் நடை,மரங்களின் இலையாட்டல்,பூக்களின் குறும் நடுங்கல்,நதியின் நீரோட்டம்,அருவிகளின் குதியாட்டம்,அலைகளின் நர்த்தனம்,மேகங்களின் ஒய்யாரம்,வேங்கையின் பாய்ச்சல்,யானைகளின் சுகவாசம் இப்படி அனைத்து அசைவுகளையுமேஅவன் ஆடிய போது கண்ட மக்கள் கிறங்கிப் போய் அவனுடன் அவர்களும் சேர்ந்து ஆட ஆரம்பித்தார்கள்.

மலை மேல் காற்றும் மழையும் சுழன்று சுழன்று அடிக்க எனது விக்ரஹத்தின் முன்னர் மனிதர்களின் இந்த ஒருங்கிசைந்த நடனத்தை மரங்களின் பின்னாலிருந்து காட்டு விலங்குகளும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தன!

ஆறுநாட்கள் தொடர்ந்த இந்த நடனம் ஏழாவது நாள் அதிகாலை முடிவுற்றது.
’ஓம் மஹா ஸ்ரீ திரி நேத்ரா’
என்று பெருங்குரலெடுத்துச் சொல்லி சித்தன் ஆட்டத்தை நிறுத்திய போது மழையும் நின்றது.
எனது விக்ரஹத்தைத் தூக்கிக் கொண்டு சூரியக் குகைக்குள் சென்ற சித்தனைக் கூட்டமும் தொடர்ந்தது.
குகையின் மேல் கூரையின் வழியே, மழை நின்றவுடன் வரும் தூய சூரிய ஒளி படும் இடத்தில் விக்ரஹத்தை நிறுத்தினான் சித்தன்.
சொட்டச் சொட்ட நனைந்திருந்த அவன் கடைசியாக எனது பெயரை உரக்கச் சொன்னான்.
’ஓம் மஹா ஸ்ரீ திரி நேத்ரா’

பிறகு எனது காலடியில் வீழ்ந்தவன் எழவே இல்லை..
மூன்றாம் மலைக் கூட்டத்தின் தலைவனான செங்கோட்டு வேலன்தான் குகைக்குள் வந்து சித்தனின் உடம்பைத் தொட்டுப் பார்த்தான்.

அவனது உடல் சில்லென்று இருந்தது.ஆனால் எனது விக்ரஹம் சுட்டது!

எனது சிலையைத் தள்ளி வைத்து விட்டு குகைக்குள்ளேயே குழி தோண்டி சித்தனின் உடலை அடக்கம் பண்ணினார்கள் அவர்கள்.
சித்தனின் சமாதியின் மேலேயே என்னை நட்டார்கள்.
செங்கோட்டு வேலன்தான் எனது முதல் பூசாரியாக ஆனான்.
வைரமணி அருவித் தண்ணீரில் எனக்கு அபிஷேகம் பண்ணியதால் அதுவே எனது கோவில் தீர்த்தமாயிற்று.
சித்தன் அமர்ந்திருந்த கொன்றை மரப் பூக்களாலேயே என்னை அலங்கரித்தார்கள்.அதனால் அந்த மரமே ஸ்தல விருட்சமாயிற்று.
குகைக்கு வெளியே ஒரு பாறையைத் தேய்த்தாலே வெள்ளை மணலாய்க் கொட்டும். அதுவே எனது கோவில் நீறாயிற்று.அந்தப் பாறையைத் திறுநீற்றுப் பாறை என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.
மலைத் தேனையும்,மலைப் பலாவையும் படைத்து என்னை அந்த மலை வாழ்மக்கள் வழிபட்டதால் அவையே எனது கோவில் பிரசாதங்கள் ஆகின.

ஒரு நூற்றாண்டு கழித்து செங்கோட்டு வேலனின் வழிவந்த ஒருவன் அந்த மலை நாட்டுக்கு மன்னனாக முடிசூட்டிக் கொண்டான்.அவன்தான் சூரியக் குகையையே கருவறையாக்கி எனக்கு முதல் கோவிலைக் கட்டினான்.

ஆனால் யாரும் எனது முப்பரிமாணத்தையும்,முழுமையையும் பார்க்கவில்லை.

எனது கோவிலுக்கு வரும் ஒற்றையடி மலைப் பாதையை அவன்தான் அமைத்தான்.
இரண்டு நூற்றாண்டுகள் கழித்து அந்த மலைநாடு,கீழே இருந்த பேரரசன் ஒருவனின் கைக்குப் போய் விட வழிபடுவோர் குறைந்து எனது கோவில் சிதிலமடைய ஆரம்பித்தது.
ஐம்பது வருடங்கள் கழித்து அந்தப் பேரரசனின் வாரிசான மன்னனுக்குத் தீராத வயிற்று வலி வர அவனது படையில் ஊழியம் பார்த்த மலைநாட்டுப் படை வீரன் ஒருவன் கொண்டு போய்க் கொடுத்த திறு நீற்றுப் பாறை விபூதி அந்த நோயை மூன்றே நாட்களில் குணப்படுத்தியது.
அதனால் என் மேல் அசைக்க முடியாத பக்தி பூண்ட அந்த மன்னன் ஒரு பெரும் கோவிலை எனக்காகக் கட்டினான்.கோவிலுக்கு வரும் ஒற்றையடி மலைப்பாதையை அகலப் படுத்தி மன்னனின் வாகனங்கள் வரும் பாதையாக்கினான்.மன்னனின் குலதெய்வமாக நான் உயர்ந்ததால் அவன் எனது கோவில் பராமரிப்புக்கு நிறையக் கிராமங்களை சாசனம் செய்து வைத்தான்.
எனது நிம்மதி கெடும் அளவுக்கு எனக்கு ஐந்து கால பூசைகள் நடக்கத் தொடங்கின.

ஆனால், இன்னும் யாரும் எனது முப்பரிமாணத்தையும்,முழுமையையும் பார்க்கவில்லை.

நிறையப் புலவர்கள் என் மேல் பாடல்கள் இயற்றினார்கள்.எனக்கே தெரியாத எனது கதைகளை அவர்கள் என் மேல் சுமத்திப் பாடினார்கள்.அவர்கள் பாடல்களில்,பழம் பெரும் புராணங்களில் மூச்சிழந்து,முடி கொட்டியிருந்த தெய்வங்கள் எல்லாம் என் மேல் விழுந்து எனக்கு மூச்சு முட்டியது!

இரண்டு நூற்றாண்டுகள் கடக்க, நாடு இப்போது வேற்று மதத்தைச் சார்ந்த மன்னனின் வசம் போயிற்று.எனது கோவில் கிராமங்கள் பறிக்கப் பட்டன.ஐந்து கால பூசைகள் நின்றன.புலவர்கள் வேறு தெய்வங்களைப் பாடப் போய் விட்டார்கள்.கோவிலுக்கு வரும் மலைப் பாதையில் புல்லும் புதரும் முளைக்கத் தொடங்கின.விளக்கேற்றக் கூட ஆளின்றி,நிறைய நாட்கள் எனது கோவில் இருளில் மூழ்கிக் கிடந்தது.

பிறகு ஆங்கிலத் துரைமார்களின் ஆட்சி வந்தது.வெள்ளைக்காரன் ஒருவன்தான் மலையின் தட்ப வெப்பம் டீ எஸ்டேட்களுக்கு ஏற்றது எனக் கண்டு பிடித்தான்.தேயிலை பணம் கொழிக்கும் பயிர் என்றதால் நிறைய வெள்ளைக்காரர்கள் மலை முழுக்கத் தேயிலைத் தோட்டங்களை உருவாக்கினார்கள்.மலைவழிச் சாலைகள் போடப் பட்டன.எஸ்டேட் பங்களாக்கள் நிறைய வந்தன.ஆறாவது மலை வரையிலுமே பணம் புழங்கும் சிறிய நகரங்கள் நிறைய உருவாகின.

தேயிலைப் பணத்தில் செழித்த வெள்ளைக்காரத் துரைமார்கள் எனது கோவிலுக்குப் பக்கத்திலேயே பிரும்மாண்டமான சர்ச் ஒன்றைக் கட்டினார்கள்.அப்போதுதான் எனது கோவில் மீண்டும் இந்துக்களின் கண்களில் பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரரான ஒருவர் தேசிய எழுச்சிக்காக என்னைப் பயன் படுத்திக் கொண்டார்.அவர்தான் பல நாட்கள் பல கூட்டங்கள் நடத்தி எனது கோவிலைப் புதுப்பிக்க நிதி திரட்டினார்.எனக்குப் பல நூற்றாண்டுகள் கழித்துக் கும்பாபிஷேகம் பண்ணியதும் அவரே.

அன்றும் யாரும் எனது முப்பரிமாணத்தையும்,முழுமையையும் பார்க்கவில்லை.

சுதந்திரத்திற்குப் பிறகு என்னை வழிபட்டுப் போய் எம்.எல்.ஏ ஆன ஒருவர் அறநிலையத் துறை அமைச்சரும் ஆகிவிட எனது கோவிலுக்கு அடித்தது அதிர்ஷ்டம்.
என் சாலைகள் தார் ரோடுகள் ஆகின.வைரமணி அருவியில் தண்ணீர்த் தொட்டிகள் கட்டப் பட்டு பக்தர்கள் அனைவருக்கும் குடிநீர் வசதிகள் செய்து தரப் பட்டன.என்னைப் பார்க்க ஸ்பெஷல் தரிசனத்திற்கு டிக்கட்டுக்கள் வழங்கப் பட்டன!செங்கோட்டுவேலன் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் ஒதுக்கப் பட்டு வேறு அர்ச்சகர்கள் நியமிக்கப் பட்டார்கள்.

அப்போதும் யாரும் எனது முப்பரிமாணத்தையும்,முழுமையையும் பார்க்கவில்லை.

இப்போது...
மலைப் பாதைகள் முற்றிலும் அகலப் படுத்தப் பட்டுக் கார்களும்,பஸ்களும்,வேன்களும் பெட்ரோல்,டீசல் புகைகளால் மலை நிரம்பியது.
வானமே தானாக வழங்கிய மின்னலில் சித்தரால் பார்க்கப் பட்ட எனது பெயர், இப்போது நியான் விளக்குகளில் கோவில் முகப்பில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
சித்தரின் ஓங்காரக் குரலுக்குப் பதிலாக ஒலிபெருக்கிகள் அங்காங்கே நாராசமாய் எனது பெயரை முழங்கிக் கொண்டிருந்தன.
வைரமணி அருவி சுருங்கிக் குழாய் நீராய் ஆனது.திருநீற்றுப் பாறை முற்றிலும் கரைந்து போய் இப்போது ஒப்பந்தக் காரர் ஒருவர் வெறும் மண்ணை அரைத்து விபூதி ஆக்கி தேவஸ்தான போர்டின் மூலம் விற்றுக் கொண்டிருக்கிறார்.
மலைத் தேனுக்குப் பதிலாகக் கலப்படத் தேனும்,வெளிஊர்களில் இருந்து லாரிகளில் வந்த பலாச் சுளைகளும் அதிக விலைகளில் பிரசாதமாகப் பக்தர்களுக்கு வழங்கப் பட்டன.
எனது சிலையின் மேல் வெவ்வேறு பணக்காரப் பக்தர்கள் சாற்றிய தங்கக் கிரீடங்களும்,விலை உயர்ந்த மணி மாலைகளும் எனது உடலை நெரித்தன.அவற்றைத் திருடிய வழக்குகளில் நிறையப் பேர் தண்டிக்கப் பட்டார்கள்.சிலர் ஆட்சியே கவிழ்ந்தது.
அன்று கொட்டும் மழையிலும்,காற்றிலும் கரடு முரடான மலைக் காடுகளின் வழியே குழந்தை குட்டிகளுடன் ஓடி வந்து எதுவும் எதிர்பார்க்காமல் என் முன்னர் ஆடிய எளிய மலை வாழ் மக்களுக்குப் பதிலாக இன்று பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் என்ற பெயரில் வந்த ஆசைகளின் மொத்த வடிவமான ஒரு மக்கள் மந்தை எனது கோவிலை மொய்த்தது.

இன்று...
அதே புரட்டாசி மஹாளய அமாவாசை.காலை எட்டு மணி.

எனது கோவில் வாசலில் போடப் பட்டிருந்த பளிங்கு இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்தார்கள் அந்த அமெரிக்கச் சுற்றுலாப் பயணியும்,அவனது காதலியுமான ஒரு ஜப்பானியப் பெண்ணும்.
இருவருமே காவி வேட்டி கட்டி மேலே டீ ஷர்ட் போட்டிருந்தார்கள்.
அவன் மொட்டை அடித்திருந்தான்.இருவருமே ஆங்கிலத்தில்தான் உரையாடினார்கள்.
எனது கோபுரத்தையே நீண்ட நேரம் பார்த்திருந்த அமெரிக்கன் அவனது ஜப்பானியக் காதலியைக் கேட்டான்.
'இந்தக் கோவிலில் சக்தி வாய்ந்த பெண் தெய்வம் இருப்பதாகத்தானே சொன்னார்கள்?'
'ஆமாம்,ஏன் பீட்டர்?' என்று கேட்டாள் அந்தப் பெண்.
'ஆச்சர்யம்!கருவறையில் இருந்த மூல விக்ரஹத்தை நான் எத்தனை முறை பார்த்தாலும் திருப்பதியில் நான் பார்த்த ஆண் தெய்வம்தான் என் கண்ணுக்குத் தெரிந்தது! நான் ஏதாவது பாவம் செய்து இருப்பேனா,சகிடோ? என்று அந்த அமெரிக்கன் தன் ஜப்பானியக் காதலியைக் கேட்டான்.அவன் முகத்தில் அச்சமும்,குழப்பமும் தெளிவாகத் தெரிந்தன.
'நீ பாவம் செய்தவனானால் நானும் செய்திருக்க வேண்டும்,பீட்டர்!' என்றாள் அந்த ஜப்பானியப் பெண்.
'ஏன்?'
'நானும் இங்கு எந்தப் பெண் தெய்வத்தையும் பார்க்கவில்லை.திருவண்ணாமலையில் நாம் இருவருமே பார்த்த லிங்கத்தைத்தான் பார்த்தேன்.எனக்கும் பயமாகவும் குழப்பமாகவும் இருக்கிறது!' என்றாள் அவள்.
பின்னாலிருந்து ஒரு சிரிப்புச் சத்தம் கேட்க அவர்கள் திரும்பிப் பார்த்தனர்.
வயதான ஒரு முதியவர் வெள்ளைத் தாடி மீசையுடன் அவர்களது இருக்கையின் பின் புறம் அமர்ந்திருந்தார்.
'குழந்தைகளே, நீங்கள் இருவரும்தான் இத்தனை நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்தக் கோவில் தெய்வத்தின் வேறு பரிமாணங்களைப் பார்க்கிறீர்கள்!' என்றார் அவர் அவர்களைப் பார்த்துச் சிரித்தபடியே.
'நீங்கள் யார்?' என்றார்கள் அவர்கள் ஒருசேர.

எனது கோபுரத்தை ஒருமுறை நிச்சலனமாகப் பார்த்து விட்டு ஒன்றும் சொல்லாமல் அவர் எழுந்து நடந்தார்.
பக்தர்கள் மூச்சு வாங்க ஏறிக் கொண்டிருந்த மலைக் கோவில் படிக்கட்டுக்களின் வழியே அவர் கோவிலை விட்டு இறங்கலானார்.
பாதிப் படிக்கட்டுக்களை அவர் கடந்த சமயத்தில் ஒரு சிறு குழந்தையின் அழுகுரல் சப்தம் கேட்டுப் பெரியவர் திரும்பிப் பார்த்தார்.
கொழுக் மொழுக்கென்று அழகியதோர் பெண் குழந்தை.
படிக்கட்டில் அமர்ந்து அழுதுகொண்டிருந்தது. பக்தர்கள் யாரும் அதனைச் சட்டை செய்யாமல் விரைந்து கொண்டிருந்தனர்.குழந்தையின் அருகில் சென்று அமர்ந்த பெரியவர் அதனிடம் கேட்டார்.
'ஏம்மா அழுதுட்டிருக்கே?'
'எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க!' என்றது குழந்தை விழிகளை உருட்டியபடி.
பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர் கண் திறந்த அதே விழிகள்!

'உன்னோட பேரென்னம்மா?' என்று கேட்டார் பெரியவர்.

'திரிநேத்ரா' என்றது குழந்தை.
(முற்றும்)

15 கருத்துகள்:

 1. \\'ஏம்மா அழுதுட்டிருக்கே?'
  'எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க!' என்றது குழந்தை விழிகளை உருட்டியபடி.\\

  உங்களது ஆதங்கம் கதையாய், கவிதையாய்...

  வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் நண்பரே

  பதிலளிநீக்கு
 2. ஐயா, ரொம்ப அருமையாக மூன்று பகுதிகளை வழங்கி அற்புதமாக ஒரு விளக்கத்துடன் முடித்துள்ளீர்கள்.கோவில் கொடியவரின் கூடாரம் ஆனது தலையெழுத்தே.
  தெய்வம் ஆடம்பரத்தை விரும்புவதில்லை.
  மனிதன் தான் அவ்வாறு ஒரு தோற்றத்தை உருவாக்குகிறான்.
  இன்றைய சூழலுக்கு அவசியமான பதிவு.
  இன்னும் நான்கு முறை ரசித்து படிக்கணும்.
  வேலையிலிருந்து திரும்பியவுடன்.
  நேற்று எப்படி பார்க்காமல் போனேன்?தெரியவில்லை.

  பதிலளிநீக்கு
 3. நிகழ்காலத்தில்... சொன்னது…
  \\'ஏம்மா அழுதுட்டிருக்கே?'
  'எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க!' என்றது குழந்தை விழிகளை உருட்டியபடி.\\

  உங்களது ஆதங்கம் கதையாய், கவிதையாய்...

  வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள் நண்பரே//

  உங்கள் வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சியும்,நன்றியும் சிவா.

  பதிலளிநீக்கு
 4. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…

  ஐயா, ரொம்ப அருமையாக மூன்று பகுதிகளை வழங்கி அற்புதமாக ஒரு விளக்கத்துடன் முடித்துள்ளீர்கள்.கோவில் கொடியவரின் கூடாரம் ஆனது தலையெழுத்தே.
  தெய்வம் ஆடம்பரத்தை விரும்புவதில்லை.
  மனிதன் தான் அவ்வாறு ஒரு தோற்றத்தை உருவாக்குகிறான்.
  இன்றைய சூழலுக்கு அவசியமான பதிவு.
  இன்னும் நான்கு முறை ரசித்து படிக்கணும்.
  வேலையிலிருந்து திரும்பியவுடன்.
  நேற்று எப்படி பார்க்காமல் போனேன்?தெரியவில்லை.//

  என் வயதில் நான் எழுதுவதை விட உங்கள் வயதில் நீங்கள் ஆன்மீகத்தை ரசிக்கும் முதிர்ச்சியைத்தான் நான் மிகவும் ரசிக்கிறேன்,கார்த்திகேயன்.
  வாழ்க உங்கள் ரசனை.

  பதிலளிநீக்கு
 5. //இன்று பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் என்ற பெயரில் வந்த ஆசைகளின் மொத்த வடிவமான ஒரு மக்கள் மந்தை எனது கோவிலை மொய்த்தது.//

  ஐயா, மேலை குறிப்பிட்டுள்ள வார்தைகளின் வீரியம் என்னை ஆச்சரியப்பட வைத்தது. 20 தடவைகளுக்கு மேல் படித்துவிட்டேன், மேல குறிப்பிட்டுள்ள வரிகளை.

  ஆசையோடுதான் கோவில்களுக்கு போகிறோம்... என்று கடவுளின் பார்வையில் நீங்கள் குறிப்பிட்டது எனக்குள் ஏதோ செய்கிறது. என்னால் அதை குறிப்பிட்டு விளக்க முடியவில்லை அல்லது தெரியவில்லை ஐயா!

  காத்திருந்தாலும்... அருமையாய் படைத்துவிட்டீர்கள் பேரானந்தத்தை அடக்கிய இடுகையை!

  பதிலளிநீக்கு
 6. நீண்ட இடைவெளிக்கு பிறகு,...
  வணக்கம் சார்

  பதிலளிநீக்கு
 7. //ஏம்மா அழுதுட்டிருக்கே?'
  'எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க!' என்றது குழந்தை விழிகளை உருட்டியபடி.
  பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர் கண் திறந்த அதே விழிகள்!//

  நல்ல எழுத்து நடையுடன் நன்றாக இருந்தது சார்..

  பதிலளிநீக்கு
 8. கலையரசன் சொன்னது…/
  காத்திருந்தாலும்... அருமையாய் படைத்துவிட்டீர்கள் பேரானந்தத்தை அடக்கிய இடுகையை!//

  மகிழ்ச்சியும்,நன்றியும் கலை.

  பதிலளிநீக்கு
 9. ஆ.ஞானசேகரன் சொன்னது…
  நீண்ட இடைவெளிக்கு பிறகு,...
  வணக்கம் சார்

  August 26, 2009 7:37 AM
  ஆ.ஞானசேகரன் சொன்னது…
  //ஏம்மா அழுதுட்டிருக்கே?'
  'எல்லாரும் என்னை விட்டுட்டுப் போயிட்டாங்க!' என்றது குழந்தை விழிகளை உருட்டியபடி.
  பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர் கண் திறந்த அதே விழிகள்!//

  நல்ல எழுத்து நடையுடன் நன்றாக இருந்தது சார்..

  உங்கள் தொடர்ந்த ஊக்கத்துக்கும்,இடையறாத அன்புக்கும் நன்றியும்,மகிழ்ச்சியும் ஞானசேகரன்.

  பதிலளிநீக்கு
 10. உங்களின் பதிவு பல் வேறு கேள்விகளை கொண்டு வந்து விட்டது.

  ரொம்ப அருமையா இருக்கு ....

  பதிலளிநீக்கு
 11. அது ஒரு கனாக் காலம் சொன்னது…
  உங்களின் பதிவு பல் வேறு கேள்விகளை கொண்டு வந்து விட்டது.

  ரொம்ப அருமையா இருக்கு ....//

  நன்றி,சுந்தர ராமன்.உங்கள் கேள்விகளைப் பகிர்ந்து கொண்டிருந்தால் நாங்களும் பயன் பெற்றிருப்போமே,நண்பரே.

  பதிலளிநீக்கு
 12. //
  ஆச்சர்யம்!கருவறையில் இருந்த மூல விக்ரஹத்தை நான் எத்தனை முறை பார்த்தாலும் திருப்பதியில் நான் பார்த்த ஆண் தெய்வம்தான் என் கண்ணுக்குத் தெரிந்தது! நான் ஏதாவது பாவம் செய்து இருப்பேனா
  //
  மனிதனைச் சிந்திக்க விடாமல் மதவாதிகள் மனிதனைக் குற்றவுணர்ச்சிக்குள்ளாக்கிப் பிழைப்பு நடத்துவதன் வலியினை உணரமுடிகிறது

  //
  பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர் கண் திறந்த அதே விழிகள்
  //
  மிக இலகுவாக ஆடம்பரமற்ற வார்த்தைகளுக்குள் சித்தனைக் காட்டாமல் காட்டி விட்டீர்கள்
  //

  பதிலளிநீக்கு
 13. வலசு - வேலணை சொன்னது…

  மனிதனைச் சிந்திக்க விடாமல் மதவாதிகள் மனிதனைக் குற்றவுணர்ச்சிக்குள்ளாக்கிப் பிழைப்பு நடத்துவதன் வலியினை உணரமுடிகிறது

  //
  பல நூற்றாண்டுகளுக்கு முன் அவர் கண் திறந்த அதே விழிகள்
  //
  மிக இலகுவாக ஆடம்பரமற்ற வார்த்தைகளுக்குள் சித்தனைக் காட்டாமல் காட்டி விட்டீர்கள்//

  உங்கள் வருகைக்கும்,சிந்தனைக்கும் மனமுவந்த நன்றிகள்,வலசு.
  //

  பதிலளிநீக்கு
 14. அருமை... அருமை.. அருமை...

  முதல் இரண்டு பாகங்களை விட கடைசி பாகம் விறுவிறுப்பு அதிகம்.

  //அவனது உடல் சில்லென்று இருந்தது.ஆனால் எனது விக்ரஹம் சுட்டது!

  எனது நிம்மதி கெடும் அளவுக்கு எனக்கு ஐந்து கால பூசைகள் நடக்கத் தொடங்கின.
  //

  நான் ரசித்த வரிகள்.
  பிறவரிகள் என்னை கரைத்தது.

  பதிலளிநீக்கு
 15. தங்கள் வருகைக்கே ந்ன்றி.பாராட்டுக்கு அதனினும் நன்றி ஸ்வாமிஜி.

  பதிலளிநீக்கு