வெள்ளி, ஆகஸ்ட் 07, 2009

ஒரு தெய்வத்தின் நாட்குறிப்பு

நான் வெளிப்பட்ட போதுதான் இந்த ஒலி பிறந்தது.
ஒலியிலிருந்து இந்தச் சொற்கள் பிறந்தன.
சொற்களில் இருந்து இந்த எழுத்துக்கள் பிறந்து எனது நாட்குறிப்பு ஆனது.
இந்த நாட்குறிப்பின் காலம் உங்கள் வார்த்தைகளில் ஐந்தாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம்.
ஏனெனில் எனக்குக் காலம் இல்லை.
அந்த அடுக்கடுக்கான மலைத் தொடரில் அது ஆறாவது மலை.
பச்சை நிறமே கெட்டி தட்டிப் போனாற் போல அடர்ந்த மலைக் காடு.
அந்தக் காட்டில் அவன் நீண்ட காலமாகத் தனியே திரிந்து கொண்டிருந்தான்.
முடியும்,சடையுமாக.சில காலம் மேல் துணியோடு,சிலகாலம் அதுவும் இன்றி.
அவனைச் சில வேடுவர்கள் மட்டுமே பார்த்திருக்கிறார்கள்.
புலி வேட்டைக்காக ஆறாவது மலையில் இருக்கும் மேல் காட்டுக்கு வரும் அவர்கள் எப்போதாவது அவனைப் பார்க்கும் போதெல்லாம் அவன் விந்தி,விந்தியே நடந்ததினால் அவனை அவர்கள் முடவாண்டிச் சித்தர் என்று அழைக்கத் தொடங்கி அதுவே அவனுக்குப் பெயராயிற்று.காலில் எப்போதோ பட்ட காயம் அவன் மேல் நிரந்தரமாகத் தங்கிப் போனது,அதனாலேயே அவன் விந்தி,விந்தி நடக்கிறான் என்று வேடுவர்கள் அறிந்திருந்தார்கள்.

அவனை வேடுவர்கள் கூட அரிதாகவே பார்க்க முடியும்.

சில நேரங்களில் அந்திச் சூரியனின் பொன்னொளியில் மலை முகட்டை நோக்கி விந்தி,விந்தி நடந்து கொண்டிருப்பான்.
சில வேளைகளில் நாட்கணக்கில்,ஏன் வாரக் கணக்கில் கூட மலைப் பலா மரத்தடியில் கண்கள் மூடிச் சிலையென அமர்ந்திருப்பான்.
சில நாட்களில் வைர மணி அருவியில் சில்லென நனைந்து கொண்டே இருப்பான்.வைர மணி அருவியின் தண்ணீர் அவர்கள் யாராலும் பொறுக்க முடியாத சில்லிப்புடன் இருக்கும்.அந்த அருவியில் குளிப்பதை அவர்கள் ஊசிக் குளியல் என்று கூறுவார்கள்.மலை உச்சியில் இருந்து ஒரு கோடி ஊசிகள் பாய்ந்து வந்து குத்துவதைப் போல் இருக்கும் அந்த அருவியில் அவன் மட்டும் நாள் கணக்கில் குளித்துக் கொண்டிருப்பதை அவர்கள் வியப்புடன் பார்ப்பார்கள்.
நிறையச் சமயங்களில் அவன் பறவைகளோடு பறவையாக நெடிதுயர்ந்த கொன்றை மரத்தின் கிளையில் அதன் செம்பூக்களிடையே அமர்ந்திருப்பான்.பறவைகள் அவனது இருப்பையே பொருட்படுத்தாமல் அமைதியாக அவன் அருகே வீற்றிருப்பது அவர்கள் பார்த்த அதிசயங்களில் ஒன்று.
அதை விட அவர்கள் வியந்து பார்க்கும் காட்சி ஒன்று உண்டு.
ஆறாம் மலைக் காட்டில் தேர்ந்த வேட்டைக் காரர்களான அவர்களுக்கே பல மாதங்களாகப் போக்குக் காட்டி வரும் ஆட்கொல்லிப் புலி ஒன்று இருக்கிறது.அதற்கு அவர்கள் 'மஞ்சள் காற்று' என்று பெயர் வைத்திருக்கிறாகள்.மஞ்சள் காற்று எப்போது அடிக்கும், எப்போது மறையும் என்று யாருக்குமே தெரியாது.
அந்த மஞ்சள் காற்றுக் கூட அவன் கண்மூடி மரத்தடியில் அமர்ந்திருக்கும் போது அவனருகில் அவர்களது வீட்டு நாய் போல் அவனது அருகில் விழித்தபடி படுத்துக் கிடக்கும்.அதற்குப் பிறகுதான் அவனை முடவாண்டிச் சித்தர் என்று அவர்கள் அழைக்கத் தொடங்கினார்கள்.
அவன் அவர்கள் யாருடனும் பேசியதே இல்லை.எப்போதாவது அவர்களைப் பார்ப்பதுண்டு.அப்போதுதான் அவனது கண்களை அவர்கள் பார்த்திருக்கிறார்கள்.
அப்ப்பா! என்ன கண்கள்!

பார்ப்பதற்கு மட்டுமின்றிப், பார்க்கப் படுவதற்குமான கண்கள்!

அவனது ஒரு கண நேரப் பார்வை பட்டாலே வைரமணி அருவியே சட்டென்று அவர்கள் மீது கொட்டித் தீர்த்ததைப் போல உடம்பே சில்லென்று வேர்த்துப் போகும்.
ஆறாம் மலையில் நிறையக் குகைகள் உண்டு.ஒரு குகைக்கு மட்டும் சூரியக் குகை என்று வேடுவர்கள் பெயர் வைத்திருந்தார்கள்.அந்தக் குகையில் மட்டும் மேல் கூரையில் ஒரு அரை அடி விட்டமுள்ள வட்டமாக மலையே வழி விட்டுச் சூரிய ஒளியும்,நிலவின் ஒளியும் உள்ளே பாயுமாறு அமைந்திருந்தது.

அந்த மலைத் தொடரில் மூன்றாம் மலை வரையிலுமே மனிதர்கள் வாழ்ந்தார்கள்.அடிவாரத்திலிருந்து மூன்றாம் மலை வரையிலுமே சிறு,சிறு வேட்டுவக் குடியிருப்புக்கள் இருந்தன.மூன்றாம் மலைக்கு மேல் கொடிய விலங்குகளும்,பனிக்குளிரும் மனிதர்களை மேலே வராவண்ணம் விலக்கி வைத்திருந்தன.
முடவாண்டிச் சித்தரைத் தவிர ஆறாம் மலையில் யாராலும் வாழ முடியாது என வேட்டுவக் கிராமங்களில் பேசிக் கொள்வார்கள்.

ஆறம் மலையில் மட்டும் பனி போர்த்திய வைகறை வேளைகளிலும்,அந்தி வேளைகளிலும் உடுக்கைச் சத்தம் கேட்கும். மேல் மலைக்குச் சென்ற வேடுவர்கள் சித்தர் கையில் என்றும் உடுக்கையைப் பார்த்ததில்லை.அதே போல் சில நேரங்களில் சூரியக் குகையில் மட்டும் நெருப்பெரிவது தெரியும்.அதற்கான சாதனங்களைக் குகைக்கு உள்ளேயோ,சித்தரின் கைகளிலோ அவர்கள் என்றுமே பார்த்ததில்லை.

ஒரு நாள் வைகறையில் அவன் வைரமணி அருவியில் குளித்துக் கொண்டிருக்கும் போது அவனது காலடியில் ஒரு மலைக் கருங்கல் அருவியோடு அருவியாக உருண்டு வந்து விழுந்தது.குனிந்து அதனைத் தொட்டுப் பார்த்தான்.
பல வருட அருவித் தண்ணீர் தேய்த்துத் தேய்த்துக் கல்லைக் கறுப்புப் பளிங்காக்கி இருந்தது. இரண்டடி உயரத்தில் கறுப்பு முட்டை போல் இருந்தது அந்தக் கல்.
அருவி தன் மேலே கொட்டக் கொட்டக் கல்லையே பார்த்துக் கொண்டிருந்த அவன்,பிறகு அதனை அனாயசமாக எடுத்துக் கொண்டு அருவியிலிருந்து சொட்டச் சொட்ட நனைந்தபடியே நடந்தான்.

சூரியக் குகைக்குள் கல்லைக் கொண்டு வந்த அவன் குகையின் நடுவில் அதனை நிறுத்தி வைக்கப் பளீரெனக் காலைக் கதிரவனின் ஒளி கல்லின் மேல் விழுந்தது.வெளியே சென்றவன் திரும்பி வந்த போது அவனது கையில் ஒரு சிற்பியின் உளியும்,சிறு சுத்தியலும் இருந்தன.

அவன் என்னைச் செதுக்கத் தொடங்கினான்.
தான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.

(எனது தரிசனம் தொடரும்)

23 கருத்துகள்:

  1. //அவன் என்னைச் செதுக்கத் தொடங்கினான்.
    தான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.//
    சித்தர் பற்றி படிப்பதும் "யோகம்" தான்
    மகத்தான துவக்கம் தான்
    அடிக்கடி தரிசனத்தை பகிருங்கள்.

    பதிலளிநீக்கு
  2. வெல்கம் பேக் ஷண்முகப்ரியன்...

    படித்துறையில் 'நீர்' இல்லாமல் இருந்தது...
    இப்பொழுது அணைதிறந்த வெள்ளம் போல பாய்கிறது.

    பாய்வது தெய்வீக வெள்ளம். அருமை அருமையே..

    பதிலளிநீக்கு
  3. கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. சொன்னது…
    //அவன் என்னைச் செதுக்கத் தொடங்கினான்.
    தான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.//
    சித்தர் பற்றி படிப்பதும் "யோகம்" தான்
    மகத்தான துவக்கம் தான்
    அடிக்கடி தரிசனத்தை பகிருங்கள்.//

    உங்களைப் போன்ற தேர்ந்த ரசிகர்களை இங்கே சந்திப்பதே எனது யோகந்தானே,கார்த்திகேயன்.நன்றி,நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஸ்வாமி ஓம்கார் சொன்னது…
    வெல்கம் பேக் ஷண்முகப்ரியன்...

    படித்துறையில் 'நீர்' இல்லாமல் இருந்தது...
    இப்பொழுது அணைதிறந்த வெள்ளம் போல பாய்கிறது.

    பாய்வது தெய்வீக வெள்ளம். அருமை அருமையே..//

    உங்கள் முன்னிலையிலேயே நான் தெய்வத்தைப் பற்றி எழுதுவது கண்ணனுக்கே ஒரு பேதை,கீதை சொல்வதைப் போல.
    அறிந்தே நான் செய்யும் இந்தப் பிழையை மன்னித்து விடுங்கள்,ஸ்வாமிஜி.

    பதிலளிநீக்கு
  5. வரும் பகுதிகளுக்காக ஆவலுடன் வெயிட்டிங்!

    பதிலளிநீக்கு
  6. அருமையான செய்தியோடு இயல்பான நடையில் வருகிறது. வாழ்த்துக்கள்

    \\அறிந்தே நான் செய்யும் இந்தப் பிழையை மன்னித்து விடுங்கள்,ஸ்வாமிஜி.\\

    இதையே உங்களிடம் அவர் சொல்லி விடப் போகிறார்:))

    நம்ம ஓம்கார், நீங்க தைரியமா எழுதுங்க:)

    பதிலளிநீக்கு
  7. மங்களூர் சிவா சொன்னது…

    வரும் பகுதிகளுக்காக ஆவலுடன் வெயிட்டிங்!//

    உங்கள் ஊக்கத்திற்கும்,ஆர்வத்திற்கும் நன்றியும், மகிழ்ச்சியும் சிவா.

    பதிலளிநீக்கு
  8. நிகழ்காலத்தில்... சொன்னது…

    அருமையான செய்தியோடு இயல்பான நடையில் வருகிறது. வாழ்த்துக்கள்

    \\அறிந்தே நான் செய்யும் இந்தப் பிழையை மன்னித்து விடுங்கள்,ஸ்வாமிஜி.\\

    இதையே உங்களிடம் அவர் சொல்லி விடப் போகிறார்:))

    நம்ம ஓம்கார், நீங்க தைரியமா எழுதுங்க:)//

    நன்றி சிவா.ஆன்மீகத்தைத் தொட்டவுடன் உங்களிடமிருந்து வாழ்த்துக்கள் வரும் என்று எதிர் பார்த்தேன்.நீங்கள் என்னை ஏமாற்றவில்லை.

    பதிலளிநீக்கு
  9. //
    தான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.
    //
    அருமை. அடுத்த பாகங்களுக்காய்க் காத்திருக்கிறோம்.
    அதுசரி கன்னிகா என்னவானாள்? கைவிட்டு விடாதீர்கள் ஐயா.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் சார் நீண்ட இடைவெளி பின்... வருக!

    பதிலளிநீக்கு
  11. //அவன் என்னைச் செதுக்கத் தொடங்கினான்.
    தான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.//

    அருமையான தொடக்கம்
    காத்திருக்கின்றேன் அடுத்தப் பகுதிக்கு

    பதிலளிநீக்கு
  12. வருக.. வருக...
    பேக் டூ பெவிலியன்..

    அழகான வரிகள்.. என்னை போல் ஆட்களுக்கும் புரியும்படி எழுதுவதுதான் ஐயா உங்கள் வெற்றிக்கான ரகசியம்.. உங்களின் கன்னிகாவுக்காகவும் காத்திருக்கிறோம்!

    பதிலளிநீக்கு
  13. வலசு - வேலணை சொன்னது…

    //
    தான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.
    //
    அருமை. அடுத்த பாகங்களுக்காய்க் காத்திருக்கிறோம்.
    அதுசரி கன்னிகா என்னவானாள்? கைவிட்டு விடாதீர்கள் ஐயா.//

    நன்றி வலசு.பதிவுலக ஊடகத்துக்குச் சிறுகதைகள்தான் தக்க படைப்புக்கள் என்று நான் கருதுகிறேன்.அதனால் சிறுகதைகள்,கட்டுரைகள் மூலமாகவே உங்களைச் சந்திக்கிறேன்.மகிழ்ச்சி வலசு.

    பதிலளிநீக்கு
  14. ஆ.ஞானசேகரன் சொன்னது…

    வணக்கம் சார் நீண்ட இடைவெளி பின்... வருக!
    August 8, 2009 9:21 AM
    ஆ.ஞானசேகரன் சொன்னது…

    //அவன் என்னைச் செதுக்கத் தொடங்கினான்.
    தான் பிறப்பதைத் தானே பார்க்கும் அபூர்வம்தான் தெய்வீகம்.//

    அருமையான தொடக்கம்
    காத்திருக்கின்றேன் அடுத்தப் பகுதிக்கு//

    நன்றி ஞானசேகரன் உங்கள் இடையறாத ஊக்கத்துக்கு.இனித் தொடர்ந்து சந்திப்போம்.

    பதிலளிநீக்கு
  15. கலையரசன் சொன்னது…

    வருக.. வருக...
    பேக் டூ பெவிலியன்..

    அழகான வரிகள்.. என்னை போல் ஆட்களுக்கும் புரியும்படி எழுதுவதுதான் ஐயா உங்கள் வெற்றிக்கான ரகசியம்.. உங்களின் கன்னிகாவுக்காகவும் காத்திருக்கிறோம்//

    நன்றி கலை. எனக்கே புரியும் போது எனது எழுத்துக்கள் உங்களுக்குப் புரியாதா என்ன!

    பதிலளிநீக்கு
  16. இப்பொழுது தான் பதிவை பார்த்து, பின் வந்து இதை படித்தேன் .... என்ன ஒரு வர்ணனை, அர்த்தம் , .... மிகவும் ரசித்தேன்

    பதிலளிநீக்கு
  17. அது ஒரு கனாக் காலம் சொன்னது…
    இப்பொழுது தான் பதிவை பார்த்து, பின் வந்து இதை படித்தேன் .... என்ன ஒரு வர்ணனை, அர்த்தம் , .... மிகவும் ரசித்தேன்//

    நன்றி,சுந்தர்.
    அடுத்த பாகத்துக்கான உங்கள் பின்னூட்டத்தைப் படித்து விட்டு இங்கே வந்தேன்.
    மூன்றாம் பாகத்தையும் படித்துவிட்டு உங்கள் மேலான கருத்தைச் சொல்லுங்கள்.

    உங்கள் அன்பு எனது பேறு.

    பதிலளிநீக்கு
  18. வரைதளத்தில் உள்ளே நுழைந்த போது சுந்தர் எனக்கு குருவாக அமைந்த நாள் முதல் உங்கள் எழுத்துக்ககளை படித்துக்கொண்டே தான் வருகிறேன். படைப்பு என்றாலும் சிவாக்கு நீங்கள் அளிக்கும் விமர்சனம் என்றாலும் எத்தனை ஆழ்ந்த ஞானம். வைத்துக்கொண்ட பெயர் முதல் உதயமாகும் கற்பனை பூக்கள் வரைக்கும் அத்தனையிலும் நான் பார்ப்பது நறுமணங்கள் மட்டுமே. தன்னை வளர்த்துக்கொள்ள வேண்டும், தன்னை உணர்ந்து கொள்ள வேண்டும், தகுதியானவைகள் மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும், சாவதற்குள் கொஞ்சமாவது தகுதியானவனாக உயிருக்கும் ஆத்ம திருப்தி அளிக்க வேண்டும் என்று நிணைக்கும் அத்தனை பேர்களுக்கும் நீங்கள் ஒரு திசைகாட்டி, வழிகாட்டி. திரைஉலகம் உங்களை இழந்ததா? இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்று யோசித்தீர்களா? பாதநமஸ்காரம் முருகா.

    பதிலளிநீக்கு
  19. அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்

    பதிலளிநீக்கு
  20. சாவதற்குள் கொஞ்சமாவது தகுதியானவனாக உயிருக்கும் ஆத்ம திருப்தி அளிக்க வேண்டும் என்று நிணைக்கும் அத்தனை பேர்களுக்கும் நீங்கள் ஒரு திசைகாட்டி, வழிகாட்டி. திரைஉலகம் உங்களை இழந்ததா? இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்று யோசித்தீர்களா? பாதநமஸ்காரம் முருகா.//

    ரசனையின் பரவசத்தில் நீங்கள் எழுதியதைப் புரிந்து கொண்டேன்,ஜோதிஜி.

    நன்றியும்,மகிழ்ச்சியும்.

    பதிலளிநீக்கு
  21. இய‌ற்கை சொன்னது…
    அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்//

    அடுதத இரண்டு பகுதிகளையும் எப்போதோ எழுதி விட்டேன்,இயற்கை.’சிறுகதை’ என்ற லேபிளைச் சொடுக்குங்கள்.
    படித்து விட்டுச் சொல்லுங்கள்,பயனடைகிறேன்.
    நன்றியும்,மகிழ்ச்சியும்.

    பதிலளிநீக்கு
  22. அருமையான நடை,அழகான வர்ணனை.

    தர்சனத்தை எதிர்பார்த்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  23. மாதேவி சொன்னது…
    அருமையான நடை,அழகான வர்ணனை.

    தர்சனத்தை எதிர்பார்த்திருக்கிறோம்.//

    உங்கள் முதல் வருகைக்கு நன்றியும்,மகிழ்ச்சியும் மாதேவி.

    சிறுகதை என்ற லேபிளைச் சொடுக்கினால் இந்தக் கதையின் மீதிப் பாகங்களைப் படிக்கலாம்.
    படித்து விட்டுச் சொல்லுங்கள்,மாதேவி.
    நன்றி.

    பதிலளிநீக்கு