இயற்கையின் உண்மையான மொழியையே எண்களின் மூலமாகத்தான் புரிந்து கொள்கிறோம் எனக் கண்டோம்.ஆனால் எண்களின் மொழியையும் தாண்டும் கட்டங்களிலும் இயற்கை இயங்குகிறது.'Infinity' என்று கணித நூல்களில் சொல்லப் படும் இதனை நாம் 'அனந்தம்' என்றும் 'எல்லையற்றது' என்றும் சமய நூல்களில் சொல்லக் காணலாம். மொழிகள் அற்ற இடம் பேரமைதியாகவும்,பேரானந்தமாகவும் சித்தரிக்கப் படும் உயிரின் உச்சகட்ட நிலைகள் அவை.
அனந்த கோடி என்ற சொற்கள் அடிக்கடி புழஅங்கும் உயிரின் நிலைகளை ஆன்மிகம் மட்டுமே பயன் படுத்தும்.அறிவியல் தொட தயங்கும் நிலைகள் அவை.'Infinity' பற்றிக் கணித நூல்களே சொல்ல வார்த்தைகள் போதுமானவை இன்றி ஒதுங்கி நிற்கிறது.இதை ஓரளவேனும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் முதலில் உயிர் என்றால் என்னவென்ற ஒரு கண்ணோட்டம் வேண்டும்.
சிந்தித்துப் பார்த்தால்,உயிர் என்பதே இயற்கை அன்னையின் 'எளிமையின் உச்ச கட்டம்' எனத் தோன்றுகிறது.இந்தப் பேரண்டத்தின் இத்தனாயிரம் கோடி பௌதீக விதிகளையும் தொகுத்து,அனைத்து உய்ரினங்களும் புலன்கள் வழி அவற்றை உணர்ந்து கொள்ளும் அரிதினும் அரிதான கொடையை அவள் அருளி இருக்கிறாள்.
சற்றே சிந்தியுங்கள்.
நாம் பார்ப்பதற்கு ஒளிஇயலின் விதிகள் எதுவும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
வெப்பத்தை உணர்வதற்கு Thermodynamics laws எதுவும் படித்துப் புரிந்திருக்க வேண்டிய தொல்லை இல்லை.
உடலுக்குள் இயங்கும் கோடான கோடி செல்களும் நமது அறிவின் தயவின்றித் தங்களைத் தாங்களே வழி நடத்திச் சென்று கொண்டிருக்கின்றன.
இந்தப் பேரண்டத்தை உயிர்கள் மூலம் அணு அணுவாகக்,கணந்தோறும் அனுபவித்துக் கொண்டிருக்கிறது இயற்கை .
தனது அனைத்து அறிவினையும் உயிர்களுக்குள்ளே ஒப்படைத்து விட்டு,அவற்றின் செயல்பாடுகளுக்கு மட்டும் அந்த அறிவு பயன் படுவதற்கும்,சிந்தித்தால் பெறுவதற்கு அரியதாகவும் இருக்கும் படியான உயிர் விளையாட்டையே இயற்கை அன்னை ஆடிக் கொண்டிருக்கிறாள்.
மருந்துக்கடைகளில் இருக்கும் அத்தனை மருந்துகளும் நமது உடல் தயாரிக்கும் ரசாயனங்களின் செயற்கை வடிவங்களே.
மின்காந்த அலைகளைப் பற்றி நமக்குத்தான் இந்த நூற்றாண்டில் தெர்யும்.ஆனால் நமது உடலுக்குக் கோடான கோடி வருடங்களாகத் தெரியும்.
நுண் அணுத் துரையின் அனைத்து அறிவும் கொண்டிருப்பதனால்தான் நமது செல்கள் செவ்வனே இயங்குகின்றன.
இந்த உட்புறப் பேரறிவினை நாம் நமது முயற்சியால் பெற இயலுமா ?