ஞாயிறு, ஜனவரி 11, 2009

ஒரே பதில் ..ஆனால் ஒரு கோடிக் கேளவிகள்

என்றோ எங்கோ படித்த ஒரு வரிக்கு எவ்வளவு பெரிய அர்த்தம் என்று இன்றளவும் எனக்குப் புரிந்து கொண்டே இருக்கிறது .
மூன்று என்பது விடையாக வர வேண்டுமென்றால் எத்தனை கோடிக் கணக்குகள் வேண்டுமானாலும் போடலாம்.
3x1=3..3-0=3..3+0=3..5-2=3..2+1=3.. இப்படி எண்ணற்ற கணக்குகள் மூன்று என்ற ஒரே விடைக்கு போட்டுக் கொண்டே போகலாம்.
இந்த சமன்பாட்டில் விடையும் சரி ,கணக்குகளும் சரியே என்பது ஆரம்பக் கணிதம் படிக்கும் குழ்ந்தைக்கும் கூடத் தெரியும்.
சரி,
இதே சமன்பாட்டை நம் வாழ்க்கைக்கு பிரயோகித்தால் அது ஒரு ஆழமான சிக்கலுக்கு நம்மை இட்டுச் செல்கிறது.
உதாரணமாக மகிழ்ச்சியை எடுத்துக் கொள்வோம்.
மகிழ்ச்சி என்ற ஒரு விடைக்கு நாம் ஏராளமான கணக்குகள் போடுகிறோம். மகிழ்ச்சிக்காக எழுதுகிறோம்..பாடுகிறோம் ... குடிக்கிறோம் ..சமூகத்துக்காக உழைக்கிறோம் ...கொலை செய்கிறோம் ....இதெல்லாம் தப்பு என்று வாதாடிக் கொண்டிருக்கிறோம் ....காதலிக்கிறோம் ...குடும்பம் நடத்துகிறோம்.. குழந்தையைக் கொஞ்சுகிறோம் ....அல்லது கடத்திக் கொண்டு போய் வியாபாரம் செய்கிறோம் ..பெண்களைக் கெடுக்கிறோம் ..ஆலயங்களுக்குப் போகிறோம்.. குற்றம் செய்தவர்களைத் தண்டிக்கிறோம் ... சாகவும் செய்கிறோம்..
இப்படி மகிழ்ச்சி என்ற ஒரே விடைக்கு நாம் பல கணக்குகளைப் போடுகிறோம் . ஆனால் முந்தைய சாதாரணக் கணக்குச் சமன்பாட்டில் ஒத்துக் கொண்டதைப் போல இங்கே விடையும் சரி கணக்குகளும் சரி என்று ஒப்ப மாட்டோம் என்பதே நம் முன் இருக்கும் சிக்கலே.
மகிழ்ச்சி என்ற நியாயமான ,சரியான விடைக்கு நாம் போடும் சில கணக்குகள்தான் தப்பு என்கிறது நம் சமூக,அறவியல் சட்டங்கள்.
நான் கணிதவியல் பட்டதாரி.ஆனால் எனக்கே இது வியப்பான உண்மையாக இருக்கிறது.
ஒரே விடைக்குப் பல கணக்குகள் என்பதே முரண்பாடு.அதிலும் விடை மட்டும் சரி ஆனால் சில கணக்குகள் மட்டும் தவறு என்பது எப்படி சாத்யமாகும்?.அப்படி என்றால் சமன்பாட்டில்தான் எங்கோ கோளாறு இருக்க வேண்டும்.
சரி, நம் சமன்பாட்டை எடுத்துக் கொண்டால் மகிழ்ச்சி என்ற விடைதான் சிக்கலையே உருவாக்குகிறது என்பது சற்றே யோசித்தால் புரிகிறது.
எப்படி?மகிழ்ச்சி என்ற விடை சரிதான்,ஆனால் அதை முன்பாகவே தீர்மானித்துக் கொள்ளும் கோட்பாடுதான் நமக்குப் பிரச்னையே .
விடையை முன்னரே தீர்மானித்துக் கொள்வது சாதாரணக் கணக்குக்கு வேண்டுமானால் சரி.ஆனால் நம் வாழ்க்கைக் கணக்குக்கு சரியில்லை என்பதுதான் அது!
நமது பெரும் பாலான கேள்விகளுக்கும் தப்பான விடைகளே வருவது அந்தத் தீர்மானத்தினால்தான். ஏன்?
பொதுவாகவே (நாம் தேடல் என்று கூறிக் கொண்டு ),நம் கேள்விகளுக்குத்தான் விடைகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று தப்பாக எண்ணிக் கொண்டிருக்கிறோம்.ஆனால் உண்மையில் நாம் நம் பதில்களுக்கான கேள்விகளையே தேடிக் கொண்டிருக்கிறோம்.
நான் கேள்வி கேட்பதே பதிலை ஒத்துக் கொள்வதற்காகத்தான்.


எல்லோருக்குள்ளும் இருக்கும் விடைகள்தான் துயரமே.நாம் எல்லோரும் பதில்களை வைத்துக் கொண்டு அதற்கு ஏற்ற கேள்விளைக் கேட்டுக் கொண்டு திரிகிறோம் .


எனில், நமக்கு இந்த விடைகள் எங்கிருந்து கிடைத்தன?


நாம் பிறப்பதற்கு முன்னரே நம் விடைகள் பிறந்து விட்டன.


நமது பரிணாம விதிகள்,உடற்கூற்று விதிகள், நாம் பிறக்கும் குடும்ப ,சமூகச் சூழல்கள்,(நீங்கள் நம்பினால் கிரகச் சேர்க்கைகள்)இதெல்லாம் சேர்ந்து உருவாகிய நமது மன இயக்கங்கள் இவை எல்லாம் ஏற்கனவே தந்த விடைகளுடந்தான் நாம் பிறக்கிறோம் .
நாம் கேட்கும் கேள்விகளுக்கு இந்தக் கணத்தில் கிடைக்கும் பதில்களை ,ஏற்கனவே நம்முடன் பிறந்த பதில்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தே எதனையும் ஒத்துக் கொள்கிறோம் .எனவே நம் பழைய விடைகளை இழந்தால் ஒழிய புதிய பதில்களை நாம் பெற மாட்டோம்.
இதனாலேயே ஏசு 'உனது பெற்றோர்களைக் கொன்ற பின்னரே என் பின்னால் வா'என்றார்.சென் ஞானிகள் மனதைக் காலி ஆக்கிய பின்னரே சிஷ்யனாக வா என்றார்கள். நிகழ காலத்திலேயே இரு என்பதெல்லாமே இதன் அடிப்படையில்தான்.
தொடர்ந்து யோசிப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக