வியாழன், ஜனவரி 22, 2009

எண்கள் என்னும் இயற்கையின் மொழி..2

பெரும்பாலும் எண்கள் பொய்மைக்கு விரோதி .
எண்களை வைத்துப் பொய் சொன்னால் சீக்கிரம் சிக்கிக் கொள்வோம் ('சத்யம்'ராமலிங்க ராஜு மற்றும் எத்தனையோ பேரைப் போல ).அதனாலேயே நிறையப் பேருக்குக் கணிதம் ஒரு கசப்பான துறையாக இருக்கிறது.அரசியல்வாதிகளுக்கும்,இலக்கியகர்த்தாக்களுக்கும் வார்த்தைகளைப் பிடிக்கும் அளவுக்கு எண்களைப் பிடிப்பதில்லை.ஏனென்றால் தங்கள் விருப்பபடி சிந்தனைகளை வளைத்து விளையாட சொற்களைப் போல எண்கள் இடம் தருவதில்லை .
ஆதாரப் பூர்வமான உண்மைகளை எல்லாம் எண் வடிவத்திலேயே ,கணித சமன்பாடுகளாகவே சொல்ல முடியும் என்பதே அறிவியலாளர்களின் கோட்பாடு.அப்படி எந்த உண்மையை வெளிப்படுத்த முடியவில்லையோ அது ஒரு அறிவியல் உண்மையே அல்ல என்பதே அவர்கள் சித்தாந்தம்.
எடுத்துக் காட்டாக, மருத்துவ மனைக் கட்டிலில் படுத்திருக்கும் நோயாளியின் கால் மேட்டில் ஒரு அட்டை தொங்கும்.நோயாளியின் உடல் நிலைகள் முழுதும் அதில் எண்களாகவே எழுதப்பட்டிருக்கும்.ரத்த அழுத்தம்,நாடித் துடிப்பு,சர்க்கரை அளவு,கொழுப்பின் அளவு இது போல அவனது உயிரின் அனைத்துச் செயல்பாடுகளும் எண் வடிவிலேயே எழுதப் பட்டிருக்கும்.மருத்துவர்,நோயாளியிடம் அவனது வார்த்தைகளால் கேட்டறியும் விஷயங்களைவிட அட்டைத் தாளில் எழுதியிருக்கும் எண்களைத்தான் பெரிதும் நம்புவார்.ஏனெனில் வார்த்தைகள் ஏமாற்றும்.எண்கள் அதனைப் புரிந்து கொண்டவர்களை ஏமாற்றாது.
எண்கள் இயற்கையின் உரையாடல்.உண்மையின் நெருங்கிய நண்பன்.
சரி ,இவ்வளவு முக்கியமான, நமது உயிர் தொடர்பான எண்களைக் கூட
நாம் ஏன் தெரிந்து கொள்ள முடியாமல்,தெரிந்தாலும் புரிந்து கொள்ள முடியாமல் இருக்கிறோம்?இயற்கையின் இந்த உரையாடலை நாம் ஏன் கேட்க முடிவதில்லை?நம்மிடமிருந்து நம்மையே மறைத்துக் கொண்டிருக்கும் அறியாமை எது?ஏன்?
உண்மையில் நமது மேற்புற மனதுக்கும் அறிவுக்குந்தான் இந்தக் கணித மொழி புரியாது.தெரியாது.நமது உயிருடன் நேரடித் தொடர்பு கொண்ட உடலுக்கு இந்த மொழி அத்துபடி.அதனால்தான் எந்த அறிவியல் நூலையும் படிக்காத நமது உடல் நாம் உண்ணும் உணவை செரிக்கிறது .பார்க்கிறது.பேசுகிறது.சிந்திக்கிறது.களிக்கிறது .எந்த உடல் வேதியியல் சூத்திரங்களும் தெரியாத பிறந்த குழந்தை கூட ,உலகத்தின் தலை சிறந்த மருத்துவரே இரவும் பகலும் அருகிலேயே இருந்து நிர்வகித்தாலும் அவரால் ஒரு வினாடி கூட ஆற்ற முடியாத பணியை தனது உடலை பராமரிப்பதில் ஆற்றுகிறது.இது மனிதக் குழந்தைக்கு மட்டுமல்ல ,பிறந்த அனைத்து உயிர்களுக்குமே பொருந்தும்.தன்னைத் தானே பேணிப் பாதுகாத்துக் கொள்ளும் திறனும் ,அறிவும் உயிர்களின் இயற்கைச் சொத்து.
எனவே உயிர் என்பதையே சுருக்கமாக் இப்படிச் சொல்லலாம் .
இயற்கையின் மொழியைப் புரிந்து கொள்ளும் ஒரு வெளிப்பாடு.அல்லது இயற்கை தன்னுடன் உரையாடத் தானே படைத்துக் கொண்ட நண்பனே உயிர்.
சிவம் தன்னை புரிந்து கொள்ளத், தானே தன்னை இரண்டாகப் பிரித்துக் கொண்டது.அந்த இன்னொரு வடிவே சக்தி.தன்னிலிருந்து பிரிந்த சக்தியின் மூலமாகத் தன்னையே சிவம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் விளையாட்டே இந்த அகிலம் அனைத்தும்.
எனில்,எல்லாம் அறிந்த ஒன்று உள்ளுக்குள் இருந்து அறியாமை விளையாட்டை ஆடிக் கொண்டிருப்பதுதான் உயிரா ?