வெள்ளி, ஜனவரி 16, 2009

வீரம்...

குழந்தை பிறந்தவுடன் ஏன் அழுகிறது என இன்றுதான் புரிந்தது.அது இன்னொருவரை நம்பி இனி வாழ வேண்டுமென்பதை எண்ணியே அழுகிறது.கருவிலேயே நம்முடன் இருந்த வீரம் இழந்து போய்
மனித உயிரின் முதல் கோழைத் தனம் அங்கிருந்தே ஆரம்பித்து விட்டது. நமது முதல் சாபம் நமது பயந்தான்.நமது பிறப்பின் முதல் நோய்.
பிறவிப் பிணி என்பதே நமது அச்சந்தான்.
தனிமையில் உலகை எதிர் கொள்வதில் வந்த மருட்சி .
அதனால்தான் வீரன் யார் என்பதையே நாம் மறந்து விட்டு அவனுக்கு வெவ்வேறு விளக்கங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்.
வீரன் என்பவன் யாரையுமே நம்பி இல்லாமலிருப்பவன்.தன்னை மட்டுமே ஏன், ஒரு கட்டத்தில் தன்னைக் கூடச் சார்ந்தில்லாமல் இருப்பவன்.
கூட்டம், வீரத்துக்கு அன்னியம்.
ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தை எதிர்த்துப் போராடுவது பல கோழைகள் பல கோழைகளுடன் போராடுவது.
ராணுவ அமைப்புக்கள் கூட கோழைத்தனத்தின் புத்திசாலித்தனமே தவிர உண்மையில் வீரமாகாது.வீரம் என்பது கருப்பையில் இருந்ததைப் போல் ஒற்றைக்கு ஒற்றையே.
தனி மனிதன் ஒருவன் எதன் சார்புமின்றி ,எந்த அமைப்பின் பக்க பலமுமின்றி தனக்கு நேரும் அநீதியை எதிர்த்துத் தான் தனியே போராடுவதுதான் வீரம்.
அவனுக்கு யூனிபார்ம் தேவையில்லை.ஒரு புரட்சிக் கொடியின் பின்னணி தேவையில்லை.பாராட்ட அல்லது துணை நிற்க சகாக்கள் யாரும் தேவையில்லை.அவனது அவலமே அவனுக்கு உந்துசக்தி.
அந்த தனி மனித வீரனைப் பல நூற்றாண்டுகளாக இழந்து விட்டோம்.அதனால்தான் இன்றைய துயரங்களே.
இன்று சாதாரண கொடுமைகளை எதிர்த்துப் போராடக் கூட நமக்கு ஒரு கூட்டம தேவைப் படுகிறது.போலிஸ் உதவி இல்லாமல் நம் தங்கையின் மானத்தைக் கூட நம்மால் காப்பாற்ற முடியாது .
ஒவ்வொரு தனி மனிதனும் போர் வீரனாக வேண்டிய கட்டாயம் வந்தே விட்டது.
சமூகமாக கிடைக்க வேண்டிய பாதுகாப்பு முடிந்து போய்,தனி மனிதனாக என்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய கட்டம் வந்தே விட்டது.
அரசாங்கங்கள் தோற்றது கூட நல்லதுதான் .
கருவிலேயே இழந்த வீரத்தை மனிதர்கள் மீண்டும் சம்பாதித்துக் கொள்ள
இதுவே தருணம்.
எனக்கு நானே அரண்.எனக்கு நானே துணை.
(ஆனந்த விகடனில் இலங்கைத் தமிழ்ர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைப் படித்தவுடன் )



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக